search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வெள்ளம் மழை"

    • சிவதாபுரம் பகுதியில் 200-க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது.
    • பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக இரவு நேரத்தில் கனமழை கொட்டி வருகிறது. இதன் காரணமாக ஏரி, குளங்களுக்கு நீர்வரத்து அதிகரித்து நிரம்பும் தருவாயில் உள்ளது. இந்த நிலையில் நேற்று இரவு பெய்த மழையின் காரணமாக சேலத்தாம்பட்டி ஏரி நிரம்பியது. தொடர்ந்து ஏரிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்ததன் காரணமாக ஏரி நிரம்பி அருகில் உள்ள சிவதாபுரம் பகுதிக்கு தண்ணீர் சென்றது. இதனால் சாலைகளில் மழைவெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

    மேலும் சிவதாபுரம் பகுதியில் 200-க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் தவித்து வருகிறார்கள். ஒரு சில இடங்களில் வீடுகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்தது. இதனால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.

    தொடர்ந்து சிவதாபுரம் வழியாக சித்தர்கோவில், இளம்பிள்ளை செல்லும் சாலையிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதன் காரணமாக இந்த வழியாக போக்குவரத்து நிறுத்தப்பட்டு மாற்றுப்பாதையில் வாகனங்கள் இயக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து வீடுகளில் புகுந்த தண்ணீரை அகற்றும் பணியில் பொதுமக்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.

    • ராஜபாளையம் தாசில்தார் ராமச்சந்திரன் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று தண்ணீர் வடிய நடவடிக்கை மேற்கொண்டனர்.
    • கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையால் பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டது.

    ராஜபாளையம்:

    தமிழகத்தில் கடந்த மாதம் தென் மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக பெரும்பாலான நீர்நிலைகள் நிரம்பின. தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் வரலாறு காணாத மழையால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

    விருதுநகர் மாவட்டத்திலும் கனமழை பெய்தது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பெய்த மழையால் அங்குள்ள கண் மாய்கள், ஏரிகள் நிரம்பின. சில கிராமங்களில் மழைநீர் புகுந்தது. இந்தநிலையில் கடந்த 2 வாரங்களாக மழை ஓய்ந்திருந்த நிலையில் ராஜபாளையம் பகுதியில் நேற்று மாலை கருமேகங்கள் சூழ்ந்தன. மாலை 5 மணிக்கு தூரலுடன் தொடங்கிய மழை நேரம் ஆக ஆக கனமழையாக பெய்தது.

    இன்று காலை வரை விடிய, விடிய தொடர்ந்து மழை பெய்தது. இதனால் ராஜபாளையத்தில் முக்கிய சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. சில இடங்களில் குளம் போல் தேங்கியிருந்தது. மழையால் மரங்களும் முறிந்து விழுந்தன. இரவு மின் தடையும் ஏற்பட்டது.

    ராஜபாளையம் அருகே உள்ள சத்திரப்பட்டி, வாகைக்குளம்பட்டியிலும் கனமழை பெய்தது. வாகைக் குளம்பட்டியில் உள்ள வாகைக்குளம் கண்மாய் ஏற்கனவே பெய்த மழை காரணமாக நிரம்பியிருந்தது. நேற்று பெய்த மழையால் கண்மாய்க்கு நீர் வரத்து அதிகரித்தது. தண்ணீர் செல்லும் கால்வாய்களில் அடைப்புகள் எடுக்கப்படாததால் மழைநீர் செல்ல வழியில்லாமல் ஊருக்குள் புகுந்தது.

    வாகைக்குளம்பட்டியில் சுமார் 15-க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் கிராம மக்கள் தங்களது உடைமைகளுடன் பாதுகாப்பான இடத்திற்கு சென்றனர். இருப்பினும் வீட்டில் இருந்த பொருட்கள் மழைநீரில் மூழ்கி சேதமாகின. இன்று காலை வரை தண்ணீர் வடியவில்லை.

    இதுகுறித்து தகவல் அறிந்த ராஜபாளையம் தாசில்தார் ராமச்சந்திரன் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று தண்ணீர் வடிய நடவடிக்கை மேற்கொண்டனர்.

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு, மகாராஜபுரம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று இரவு 10.30 மணிக்கு லேசான சாரலுடன் தொடங்கிய மழை நேரம் செல்ல செல்ல பலத்த மழையாக கொட்டியது. இன்று அதிகாலை 4 மணி வரை விடிய, விடிய கொட்டித்தீர்த்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கியது.

    குறிப்பாக மகாராஜபுரம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி வளாகத்தை மழைநீர் சூழ்ந்தது. இதனால் அங்கு படிக்கும் 130-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் மழை நீரை கடந்து பள்ளி வகுப்பறைக்குள் செல்ல பெரிதும் சிரமப்பட்டனர்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையால் பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டது. மேலும் மாணவ, மாணவிகள் சிலர் மழையால் காய்ச்சலுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வரும் நிலையில் மீண்டும் பள்ளி வளாகத்திற்குள் மழைநீர் புகுந்துள்ளதால் உடனடியாக அதனை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×