search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நீலகிரி தொகுதி"

    • கோபாலகிருஷ்ணன் ஓட்டுபட்டறை முத்தாலம்மன் பேட்டை பகுதியில் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்தார்.
    • அ.தி.மு.க.வில் ஒன்றிய செயலாளர் உள்பட பல்வேறு பதவிகளையும் வகித்துள்ளார்.

    குன்னூர்:

    நீலகிரி பாராளுமன்ற தொகுதியின் முன்னாள் எம்.பியாக இருந்தவர் அ.தி.மு.க.வை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் (வயது 63). இவர் குன்னூர் அருகே உள்ள ஓட்டுபட்டறை முத்தாலம்மன் பேட்டை பகுதியில் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்தார்.

    கடந்த சில மாதங்களாக இவர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். இதற்காக தொடர்ந்து மருத்துவ சிகிச்சையும் பெற்று வந்தார்.

    இந்த நிலையில் இன்று காலை வீட்டில் இருந்தபோது, முன்னாள் எம்.பி. கோபாலகிருஷ்ணனுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு சிறிது நேரத்தில் உயிரிழந்து விட்டார்.

    அவர் இறந்த தகவல் அறிந்ததும் நீலகிரி மாவட்ட அ.தி.மு.க நிர்வாகிகள், தொண்டர்கள், உறவினர்கள், அப்பகுதி பொதுமக்கள் அவரது வீட்டில் குவிந்தனர். அவர்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். பொதுமக்கள் அஞ்சலிக்கு பின்னர் அவரது உடல் இன்று மாலை வெலிங்டன் பகுதியில் உள்ள மின்மயானத்தில் எரியூட்டப்பட உள்ளது.

    உயிரிழந்த கோபாலகிருஷ்ணன் கடந்த 2014-ம் நடந்த பாராளுமன்ற தேர்தலில் நீலகிரி பாராளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க சார்பில் போட்டியிட்டார். அப்போது அவர் தன்னை எதிர்த்து, தி.மு.க சார்பில் போட்டியிட்ட ஆ.ராசாவை தோற்கடித்து எம்.பி.யானார்.

    இவர் அ.தி.மு.க.வில் ஒன்றிய செயலாளர் உள்பட பல்வேறு பதவிகளையும் வகித்துள்ளார். 2014-க்கு முன்பு வரை குன்னூர் நகராட்சி தலைவராக பதவி வகித்த அவர், அப்போது நடந்த எம்.பி. தேர்தலுக்காக தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு போட்டியிட்டார் குறிப்பிடத்தக்கது.

    இறந்த முன்னாள் எம்.பி. கோபாலகிருஷ்ணனுக்கு சுசிலா என்ற மனைவியும், அப்சரா என்ற மகளும் உள்ளனர்.

    • பில்லூர் அணை தூர்வாரப்பட்டு, அங்குள்ள வண்டல் மண் விவசாயிகளுக்கு தரப்படும்.
    • கேரளா-தமிழகம் இணைப்புச்சாலை அமைக்கப்படும்.

    மேட்டுப்பாளையம்:

    நீலகிரி பாராளுமன்ற தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் எல்.முருகன் மேட்டுப்பாளையம் அருகே உள்ள வெள்ளியங்காடு பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது:-

    பிரதமர் மோடி ஏழை-எளிய மக்களுக்காக பல்வேறு நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். நம்மை 70 ஆண்டுகள் ஆட்சி செய்த தி.மு.க-அ.தி.மு.க கட்சிகள் இன்னும் அடிமையாக வைத்திருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக பட்டியலின மக்கள் அடிப்படை வசதிகளுக்குகூட கையேந்தும் நிலையில்தான் உள்ளனர்.

    ஆனால் பிரதமர் மோடி அனைவருக்கும் வீடு கட்டும் திட்டம், இலவச கியாஸ் இணைப்பு மற்றும் பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி உள்ளார்.

    மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டத்தின்கீழ் அனைத்து பொதுமக்களுக்கும் தண்ணீர் இணைப்பு வழங்கப்பட்டு உள்ளது. ஆனால் தமிழகத்தில் தி.மு.க மற்றும் அ.தி.மு.க.வை சேர்ந்த ஒருசிலர் ஜல்ஜீவன் திட்டத்தில் குடிநீர் இணைப்பு கொடுக்க லஞ்சம் கேட்டு மிரட்டுவதாக சொல்கிறார்கள். ஏழை மக்களுக்கு தரப்படும் தண்ணீரில் யாராவது கைவைத்தால், அவர்கள் ஜூன் மாதத்திற்கு பிறகு சிறைக்கு செல்வது உறுதி.

    இந்த பகுதியின் வனவிலங்கு பிரச்சனை நிரந்தர தீர்வு காணப்படும். மேலும் பில்லூர் அணை தூர்வாரப்பட்டு, அங்குள்ள வண்டல் மண் விவசாயிகளுக்கு தரப்படும். கேரளா-தமிழகம் இணைப்புச்சாலை அமைக்கப்படும். ஏழை, எளிய மக்கள் வசிக்கும் குறிப்பாக அருந்ததியர்கள் வசிக்கும் பகுதிகளில் மயான வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் போர்க்கால அடிப்படையில் செய்து தரப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 10 ஆண்டுகளாக எம்.பியாக இருந்த ஆ.ராசா, நீலகிரிக்கு என எந்த திட்டங்களையுமே செயல்படுத்தவில்லை.
    • தேர்தல் நடத்தும் அதிகாரிகள் நியாயமாக நடந்து கொள்ள வேண்டும்.

    ஊட்டி:

    நீலகிரி பாராளுமன்ற தொகுதியில் தேசிய ஜன நாயக கூட்டணி சார்பில் மத்திய மந்திரி எல்.முருகன் போட்டியிடுகிறார். அவர் இன்று காலை ஊட்டியில் உள்ள பாஜனதா அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    நீலகிரி தொகுதியில் பா.ஜனதாவின் வெற்றி என்பது உறுதியாகி விட்டது. அதுவும் பிரதமர் பிரசாரத்திற்கு வந்து சென்ற பின்னர் இங்கு பா.ஜ.க மிகப்பெரிய வித்தியாசத்தில் வெற்றி பெறும் என்று உறுதியாகி விட்டது. 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும் தொகுதியாக இது இருக்கும்.

    10 ஆண்டுகளாக எம்.பியாக இருந்த ஆ.ராசா, நீலகிரிக்கு என எந்த திட்டங்களையுமே செயல்படுத்தவில்லை. நீலகிரியில் உள்ள மக்கள் மீது அவருக்கு எந்தவித அக்கறையும் இல்லை. அவர்களை பற்றியும் அவர் கவலைப்படுவதோ அல்லது இங்குள்ளவர்களை சிந்திப்பதோ கிடையாது.

    ஆ.ராசா நீலகிரி தொகுதியில் எந்த பகுதிக்கு பிரசாரத்திற்கு சென்றாலும் அவருக்கு மக்கள் மத்தியில் எதிர்ப்பு எழுகிறது. சில தினங்களுக்கு முன்பு கூட குன்னூர் பகுதியில் பிரசாரத்திற்கு சென்றுள்ளார். அப்போது, அங்கிருந்தவர்கள் இங்கு நீங்கள் பிரசாரத்திற்கு வர வேண்டாம் என கூறி அங்கிருந்து போக சொல்லி விட்டனர். அந்தளவுக்கு ஆ.ராசா மீது மக்கள் கோபத்தில் இருக்கிறார்கள். இவர் பெண்கள், கடவுள்கள் பற்றி அவதூறு பேசி வருகிறார்.

    2009-ம் ஆண்டு முதல் இங்கு போட்டியிட்டுள்ள ஆ.ராசா இதுவரை தனது வாக்காளர் அடையாள அட்டையை கூட நீலகிரி தொகுதிக்கு மாற்றவில்லை. சமூகநீதி பற்றி பேசுவதற்கு தி.மு.கவுக்கோ, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கோ எந்த தகுதியும் இல்லை.

    அருந்ததியர் மக்களுக்கு என்று உள்ள தனி தொகுதி நீலகிரி. அந்த தொகுதியில் கூட, அருந்ததியர் வேட்பாளருக்கு தி.மு.க.வினர் இடம் அளிக்கவில்லை. அப்படி இருக்கையில் சமூக நீதி பற்றி பேச இவர்களுக்கு என்ன அருகதை இருக்கிறது.

    நீலகிரி தொகுதி தேர்தல் நடத்தும் அலுவர் ஒரு சார்பாக நடந்து கொள்கிறார். இதுபற்றி பா.ஜனதா சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுக்கப்படும். 24 மணி நேரமும் பறக்கும் படையினர், தேர்தல் அதிகாரிகள் என்னையே கண்காணிப்பு கேமராவுடன் சுற்றி சுற்றி வருகிறார்கள். ஆனால் ஆ.ராசாவை அவர்கள் கண்டு கொள்வதே கிடையாது. அவரின் வாகனத்தை கூட பறக்கும் படையினர் முறையாக சோதிப்பது கிடையாது.

    தேர்தல் நடத்தும் அதிகாரிகள் நியாயமாக நடந்து கொள்ள வேண்டும். அது யாராக இருந்தாலும் சரி. தங்கள் மீது குறை சொல்லா அளவுக்கு நடந்து கொள்ள வேண்டும். ஆனால் இங்கு நடக்கும் சம்பவங்களை பார்க்கும் போது அப்படி தெரியவில்லை.

    இங்குள்ள தேர்தல் அதிகாரிகள் பலர் தி.மு.க.வின் மாவட்ட செயலாளர்கள் போல செயல்படுகிறார்கள். இன்னும் சிலர் மேட்டுப்பாளையத்தில் உள்ள ஆ.ராசாவின் வீட்டில் வேலை பார்க்கும் ஆளாகவே செயல்படுகின்றனர். ஆ.ராசா என்ன சொன்னாலும் கேட்பவர்களாக தேர்தல் நடத்தும் அதிகாரிகள் இருக்கின்றனர். இப்படி இருக்கும் பட்சத்தில் எப்படி தேர்தல் நியாமாக நடக்கும் என்று சொல்ல முடியும். பிரதமரின் நிகழ்ச்சிக்கு அனுமதி கேட்டபோது கூட சான்றிதழ்கள் கேட்டு அலைக்கழித்தனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • டீக்கடை முன்பு கூடியிருந்த பொதுமக்களிடம் தாமரை சின்னத்துக்கு அவர் வாக்கு சேகரித்தார்.
    • பால் உற்பத்தியாளர்களுக்கு கிசான் கடன் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது.

    மேட்டுப்பாளையம்:

    நீலகிரி தொகுதியில் போட்டியிடும் பாரதிய ஜனதா வேட்பாளர் எல்.முருகன், அன்னூர் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

    கரியாக்கவுண்டனூர் கிராமத்தில் தி.மு.க.வைச் சேர்ந்த தொண்டர் பழனிசாமி என்பவர் டீக்கடை நடத்தி வருகிறார். அவர் தனது கடைக்கு தேநீர் அருந்த வருமாறு எல்.முருகனுக்கு அழைப்பு விடுத்தார். அவரது அழைப்பை ஏற்று எல்.முருகன் அந்த கடைக்கு சென்று டீ குடித்தார். சிறிது நேரம் டீக்கடைக்காரருடன் உரையாடி விட்டு தேநீருக்கு உரிய காசை கொடுத்து விட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். பின்னர் டீக்கடை முன்பு கூடியிருந்த பொதுமக்களிடம் தாமரை சின்னத்துக்கு அவர் வாக்கு சேகரித்தார்.

    தொடர்ந்து மத்திய மந்திரி எல். முருகன் அன்னூர் வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட குன்னத்தூ ராம்பாளையம், கஞ்சப் பள்ளி, அல்லப்பாளையம், அ.மேட்டுப்பாளையம், பசூர், பட்டக்காரன்புதூர், மூக்கனூர், குப்பனூர், அக்கரை செங்கப்பள்ளி, கணுவக்கரை, ஆம்போதி உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது:-

    மத்திய அரசு சார்பில் கிராமப்புற மக்களுக்கு உஜ்வாலா திட்டத்தில் ரூ.400 மானியத்தில் விலையில்லா எரிவாயு இணைப்புகள் அதிக அளவில் வழங்கப்பட்டுள்ளது. பால் உற்பத்தியாளர்களுக்கு கிசான் கடன் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் தி.மு.க.அரசு விவசாயிகளை ஒழிக்க வேண்டும், அவர்களது வாழ்வாதாரத்தை கெடுக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு ஆண்டு தோறும் முப்பொழுதும் விளையும் நிலங்களை தாரை வார்க்க முயற்சி செய்கிறது. இதனை எதிர்த்து பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் போராட்டம் நடத்தப்பட்டு தடுக்கப்பட்டது. அன்னூரில் சிப்காட் அமைக்க தி.மு.க. மீண்டும் முயற்சித்தால் பா.ஜ.க. சார்பில் ஒவ்வொரு தொண்டரும் தனது உயிரை கொடுத்தாவது தடுத்து நிறுத்துவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பாரதிய ஜனதா சார்பில் மத்திய மந்திரி எல்.முருகன் போட்டியிடுகிறார்.
    • எல்.முருகன் நடனம் ஆடியது படுகர் இன மக்களை பெரிதும் கவர்ந்தது.

    நீலகிரி தொகுதியில் பாரதிய ஜனதா சார்பில் மத்திய மந்திரி எல்.முருகன் போட்டியிடுகிறார். நேற்று அவர் குன்னூர் அருவங்காடு, சேலாஸ், காந்திபுரம் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

    அப்போது அந்த பகுதியில் வசிக்கும் படுகர் இன மக்கள் நடனமாடி அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அவர்களுடன் மத்திய மந்திரி எல்.முருகனும், படுகர் மக்களின் பாரம்பரிய உடை அணிந்து அவர்களுடன் சேர்ந்து நடனம் ஆடினார். தொடர்ந்து பொதுமக்கள் மத்தியில் பேசினார். எல்.முருகன் நடனம் ஆடியது படுகர் இன மக்களை பெரிதும் கவர்ந்தது.

    • தள்ளுமுள்ளுவில் காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து அண்ணாமலை, எல்.முருகன் ஆகியோர் ஆறுதல் கூறினர்.
    • பாஜக தொண்டர்கள் மீது தடியடி நடத்திய உதகை எஸ்.பி.சுந்தரவடிவேல் மீது அண்ணாமலை புகார் தெரிவித்துள்ளார்.

    நீலகிரி:

    பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் நல்ல நாள் பார்த்து வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும் என்பதற்காக இன்றைய நாளை தேர்ந்தெடுத்து வேட்பு மனுதாக்கல் செய்து வருகின்றனர். பல இடங்களில் திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்து வருகின்றனர்.

    இந்நிலையில், நீலகிரி தொகுதியில் போட்டியிடும் அதிமுக, பாஜகவை சேர்ந்த வேட்பாளர்கள் ஒரே நேரத்தில் மனுத்தாக்கலுக்கு பேரணியாக செல்ல முயன்றபோது வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு உருவானது. இதனால் போலீசார் நடத்திய தடியடியில் சிலருக்கு காயம் ஏற்பட்டது.

    இதனையடுத்து சம்பவம் தொடர்பாக காவல்துறையை கண்டித்து நீலகிரி ஆட்சியர் அலுவலகம் முன்பு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பாஜகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    இதனிடையே, தள்ளுமுள்ளுவில் காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து அண்ணாமலை, எல்.முருகன் ஆகியோர் ஆறுதல் கூறினர்.

    பாஜக தொண்டர்கள் மீது தடியடி நடத்திய உதகை எஸ்.பி.சுந்தரவடிவேல் மீது அண்ணாமலை புகார் தெரிவித்துள்ளார். மேலும் அண்ணாமலை கூறியதாவது:- எல்.முருகன் வேட்புமனு தாக்கலுக்கு பாஜக தொண்டர்கள் ஏராளமானோர் திரண்டனர். எல்.முருகனுடன் ஊர்வலமாக வந்த பாஜகவினரை உதகை போலீசார் தடியடி நடத்தி விரட்டினர். காரணம் இன்றி பாஜக தொண்டர்கள் மீது உதகை போலீசார் தடியடி நடத்தியுள்ளனர். தடியடிக்கு காரணமாக உதகை எஸ்பி சுந்தரவடிவேலை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

    • பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • பொது மக்கள் கூறும் போது, பறக்கும் படை சோதனையில் பொதுமக்கள் தான் பாதிக்கப்படுகின்றனர்.

    அருவங்காடு:

    நீலகிரி மாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தலையொட்டி பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    குன்னூர்-மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வாடகை கார் வந்தது.

    அந்த வாகனத்தில் பஞ்சாப்பை சேர்ந்த சுற்றுலா பயணிகள் இருந்தனர். அவர்களிடம் விசாரித்த போது, பஞ்சாப்பில் இருந்து ஊட்டிக்கு சுற்றுலா வந்ததாகவும், இதற்காக கோவை விமான நிலையம் வந்து, அங்கிருந்து வாடகை காரில் இங்கு வந்ததாகவும் தெரிவித்தனர்.

    இதையடுத்து அதிகாரிகள் காரில் சோதனை நடத்தினர். அப்போது அவர்களிடம் ரூ.69 ஆயிரத்து 400 இருந்தது. பணத்திற்கான உரிய ஆவணங்கள் இல்லாததால் போலீசார் அந்த பணத்தை பறிமுதல் செய்தனர்.

    பணத்தை பறிமுதல் செய்ததும், வாகனத்தில் இருந்த பஞ்சாப்பை சேர்ந்த பெண் ஒருவர், நாங்கள் இங்கு சுற்றுலாவுக்கே வந்தோம். எங்களுக்கு இவ்வளவு பணம் கொண்டு வரக்கூடாது என்று தெரியாது.

    இதை வைத்து தான் நாங்கள் ஊருக்கு செல்ல வேண்டும். எங்களது பணத்தை திருப்பி தந்து விடுங்கள் என்று கூறி கதறி அழுதார்.

    இருப்பினும் அதிகாரிகள் உரிய ஆவணங்களை காண்பித்து பணத்தை பெற்று செல்லுமாறு தெரிவித்து பணத்தை பறிமுதல் செய்து கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

    சுற்றுலா பயணிகள் வேறு வழியின்றி, தங்களுடைய நண்பர் ஒருவருக்கு போன் செய்து, அவரிடம் பணம் வாங்கி கொண்டு சொந்த ஊருக்கு திரும்பி சென்றனர்.

    இதுகுறித்து பொது மக்கள் கூறும் போது, பறக்கும் படை சோதனையில் பொதுமக்கள் தான் பாதிக்கப்படுகின்றனர்.

    எனவே சிறு, குறு வியாபாரிகள், சுற்றுலா பயணிகள் மற்றும் மருத்துவ செலவுக்காக பணம் எடுத்து செல்பவர்களிடம் இருந்து பணத்தை பறிமுதல் செய்யாமல் இருக்க தேர்தல் அதிகாரிகள் அறிவுறுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பறக்கும்படை அதிகாரிகள், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வாகன தணிக்கை சோதனை நடத்தி வருகின்றனர்.
    • பணம் பறிமுதல் செய்யப்பட்டு அங்குள்ள கருவூலங்களில் ஒப்படைக்கப்பட்டு வருகிறது.

    ஊட்டி:

    நீலகிரி பாராளுமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு பறக்கும்படை அதிகாரிகள், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அதிரடியாக வாகன தணிக்கை சோதனை நடத்தி வருகின்றனர். அப்போது ரூ.50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரொக்கப்பணத்தை உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுவருவோரிடம் சம்பந்தப்பட்ட பணம் பறிமுதல் செய்யப்பட்டு அங்குள்ள கருவூலங்களில் ஒப்படைக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து நீலகிரி பறக்கும்படை அதிகாரிகள் கூறுகையில், நாங்கள் கடந்த ஒரு வாரமாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அதிரடியாக வாகனத்தணிக்கை சோதனை நடத்தி வாகனங்களில் செல்வோர் உரிய ஆவணங்கள் இன்றி வைத்திருக்கும் ரூ.50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணக்கட்டுகளை பறிமுதல் செய்து வருகிறோம்.

    இதன் ஒருபகுதியாக ஊட்டி சட்டசபை தொகுதியில் ரூ.4,84,500, கூடலூர் தொகுதியில் ரூ.51,18,400, குன்னூர் தொகுதியில் ரூ.17,98,870 என நீலகிரி மாவட்டத்தில் ஒட்டுமொத்தமாக ரூ.74,1770 பணம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. மேலும் பவானி சாகர் தொகுதியில் ரூ.49,6238, மேட்டுப்பாளையம் தொகுதியில் ரூ.8,40,800, அவிநாசி தொகுதியில் ரூ.16,36 லட்சம் என மொத்தம் ரூ.1 கோடியே 47 லட்சத்து 84 ஆயிரத்து 808 ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டு கருவூலங்களில் ஒப்படைக்கப்பட்டு இருப்பதாக பறக்கும்படை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    ×