என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கச்சத்தீவு விவகாரம்"

    • முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் அறிக்கையில் சொன்னதில் 80 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டார்.
    • போதைப்பொருள்கள் குஜராத்தில் உள்ள 2 துறைமுகங்களில் இருந்து தான் வருகிறது.

    கோவை:

    கோவை பாராளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணியில் தி.மு.க சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கணபதி ராஜ்குமாருக்கு ஆதரவாக கோவை கணபதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வ ப்பெருந்தகை எம்.எல்.ஏ கலந்து கொண்டு பேசியதாவது:-

    இந்தியா கூட்டணிக்கு தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் எழுச்சியோடு வாக்களிக்க மக்கள் தயாராகி ட்டனர். பிரதமர் மோடி தேர்தல் அறிக்கையில் சொன்ன எந்த வாக்குறுதியையுமே நிறைவேற்றவில்லை. ஆனால் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் அறிக்கையில் சொன்னதில் 80 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டார்.

    தற்போது நாட்டில் எங்கு பார்த்தாலும் போதைப்பொருள் நடமாட்டம் உள்ளது. அந்த போதைப்பொருள்கள் குஜராத்தில் உள்ள 2 துறைமுகங்களில் இருந்து தான் வருகிறது. அந்த துறை முகத்தை நடத்துவது யாரென பிரதமர் மோடிக்கு தெரியாதா? இந்த நாட்டை குட்டிச்சுவராக்க பா.ஜனதா துடித்துக்கொண்டு இருக்கிறது.

    இந்த தொகுதியில் போட்டியிடும் அண்ணாமலை எது சொன்னாலும் பொய் தான். தற்போது பிரதமர் மோடியும், அண்ணாமலையும் கச்சத்தீவு விவகாரம் குறித்து பேசி வருகின்றனர். இந்திராகாந்தி தேசநலனுக்காகவும், நாட்டின் முன்னேற்றத்துக்காகவும் வாழ்ந்தவர். அவரை பிரதமர் மோடியும், அண்ணாமலையும் கிண்டல் செய்கின்றனர்.

    வெஜ் பேங் என்ற ஒப்பந்தத்தில் என்ன இருக்கிறது என அண்ணாமலை படித்து தெரிந்து கொள்ளட்டும். 1976-ம்ஆண்டு மார்ச் 23-ந்தேதி கச்சத்தீவுக்கு ஒரு ஒப்பந்தம்.

    வெஜ் பேங்குக்கு ஒரு ஒப்பந்தம் என்று 2 ஒப்பந்தங்கள் போடப்பட்டு உள்ளது. அந்த ஒப்பந்தம் பற்றி தெரிந்து கொண்டு அண்ணாமலை பேச வேண்டும்.

    அதுதொடர்பாக என்னுடன் நேருக்கு நேர் விவாதிக்க தயாரா? இந்திராகாந்தி போட்ட அந்த ஒப்பந்தத்தின்படி தான் கன்னியாகுமரியில் இருந்து 50 நாட்டிக்கல் மைல் தூரத்திலும், கொழும்புவில் இருந்து 150 நாட்டிக்கல் மைல் தூரத்திலும் உள்ள இந்திய எல்லையில், உலகத்தில் இல்லாத அளவுக்கு கனிம வளங்கள், கடல் வளங்கள் கடலுக்கு அடியில் இருக்கிறது என்று கண்டுபிடித்து சொல்லி இருக்கிறார்கள். எனவே அண்ணாமலை கச்சத்தீவு-வெஜ்பேங் ஒப்பந்தம் குறித்து தெரியாமல் எதுவும் பேசக்கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.

    • தி.மு.க. அரசு தமிழ்நாட்டு மக்களையே தனது குடும்பமாக மதித்து, திட்டங்களை நிறைவேற்றி வருகிறது.
    • மாநில அரசிடம் இருந்த வரி வருவாய் உள்ளிட்ட பல சொந்த வருவாய்களை மத்திய பா.ஜனதா அரசு பறித்துக்கொண்டுவிட்டது.

    சென்னை:

    தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில், தி.மு.க. 21, காங்கிரஸ் 10, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலா 2, ம.தி.மு.க., இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலா 1 என போட்டியிடுகின்றன.

    மேலும், இந்த கூட்டணியில் அங்கம் வகிக்கும் மக்கள் நீதிமய்யத்துக்கு ஒரு மாநிலங்களவை எம்.பி. பதவி வழங்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கடந்த மாதம் (மார்ச்) 23-ந் தேதி முதல் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இதுவரை 11 இடங்களில் நடைபெற்ற பொதுக்கூட்டங்களில் அவர் பங்கேற்று ஆதரவு திரட்டி வருகிறார். இந்த பரபரப்புக்கு இடையே 'தினத்தந்தி' சார்பில் அவரிடம் கேட்கப்பட்ட விறுவிறுப்பான கேள்விகளுக்கு சுறுசுறுப்பாக பதில் அளித்தார். அதன் விவரம் வருமாறு:-

    கேள்வி:- பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்துக்காக நீங்கள் எல்லா தொகுதிகளுக்கும் சென்று வருகிறீர்கள். பொதுக்கூட்டங்களில் பங்கேற்று பேசுவது மட்டுமல்லாமல், நடைப்பயிற்சியின்போதும் பொதுமக்களை சந்தித்து வருகிறீர்கள். மக்களின் எண்ண ஓட்டம் எப்படி இருக்கிறது? வெற்றி வாய்ப்பு எந்த வகையில் உள்ளது?

    பதில்:- 2024 பாராளுமன்ற தேர்தலுக்கான அடிப்படை பணிகளை தி.மு.க. 2022-ம் ஆண்டு செப்டம்பர் 15 அண்ணா பிறந்தநாளில் விருதுநகரில் நடைபெற்ற முப்பெரும் விழாவிலேயே தொடங்கிவிட்டது. 'நாற்பதும் நமதே! நாடும் நமதே!' என்ற இலக்கு அந்த நிகழ்வில்தான் முன்னெடுக்கப்பட்டது. அதற்கேற்ப பாக முகவர்கள், வாக்குச்சாவடி குழுக்கள், ஒருங்கிணைப்பாளர்கள், தொகுதி பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டு, அவர்களுக்கான பயிற்சி பாசறைக் கூட்டங்களும் நடத்தி முடிக்கப்பட்டு விட்டன. எப்போதும் மக்களுடன் இருக்கும் இயக்கமான தி.மு.க., கடந்த 3 ஆண்டு கால திராவிட மாடல் ஆட்சியில் தமிழ்நாட்டு மக்களுக்கு, குறிப்பாக பெண்களுக்கு, மாணவர்களுக்கு செய்த திட்டங்களால் பயன்பெற்றவர்களை நேரில் சந்தித்து வாக்குகளைச் சேகரித்து வருகிறது.

    களப்பணியில் தி.மு.க. தொண்டர்கள் தங்கள் அடிப்படையான பணியை முழுமையாக மேற்கொண்ட நிலையில்தான், தேர்தல் களப் பிரசார பணிகளில் தி.மு.க. தலைவரான நானும், கட்சியின் மூத்த நிர்வாகிகளும் ஈடுபடுகிறோம். ஒவ்வொரு வீட்டுக்கும் பயன் தந்து வரும் திராவிட மாடல் ஆட்சி என்பதால் தி.மு.க.வுக்கு மக்களிடம் பெரும் ஆதரவு உள்ளது.

    10 ஆண்டுகால பா.ஜனதா அரசு தமிழ்நாட்டை வஞ்சித்திருப்பதையும், அதற்கு அ.தி.மு.க. முழுமையாக துணை போயிருப்பதையும் தமிழ்நாட்டு மக்கள் அறிந்திருக்கிறார்கள். காலையில் அடுப்பை பற்ற வைக்கும்போது கியாஸ் விலை அவர்கள் மனதில் அனலாக கொதிக்கிறது. தி.மு.க. ஆட்சியின் சாதனைகளும், பா.ஜனதா அரசின் துரோகங்களும் தமிழ்நாட்டில் 'இந்தியா' கூட்டணிக்கு முழுமையான வெற்றியைத் தரும்.

    கேள்வி:- கச்சத்தீவு பிரச்சனை தற்போது பா.ஜனதா மூலம் விசுவரூபம் எடுத்துள்ளதே. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெறப்பட்டதாக கூறி, கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்ததற்கு முன்னாள் பிரதமர்கள் நேரு, இந்திரா காந்தி, முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ஆகியோர்தான் காரணம் என்று குற்றம் சாட்டுகிறார்கள். கச்சத்தீவு தொடர்பான இந்த புதிய தகவல்கள் தி.மு.க.வின் இரட்டை நிலைப்பாடு முகத்திரையை கிழித்துவிட்டது என்று பிரதமர் நரேந்திரமோடி கூறியிருக்கிறார். இதற்கு உங்களின் பதில் என்ன?.

    பதில்:- கடந்த 2015-ம் ஆண்டு ஜனவரி 27-ம் நாள் பிரதமர் மோடி தலைமையிலான இதே பா.ஜனதா ஆட்சியில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு, கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமானது என தெரிவிக்கப்பட்டது. அப்போது, ஜெய்சங்கர் வெளியுறவுத்துறை செயலாளராக இருந்தார். இப்போது அவர் மத்திய வெளியுறவுத்துறை மந்திரியாக உள்ள நிலையில், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு, கச்சத்தீவை நேரு, இந்திராகாந்தி போன்ற முன்னாள் பிரதமர்கள் தாரை வார்த்துக் கொடுத்து விட்டதாகவும், அன்றைய முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி அதனை எதிர்க்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதில் இருந்து கச்சத்தீவு விவகாரத்தில் இரட்டை வேடம் போடுவது பா.ஜனதாதான் என்பதும், திட்டமிட்டே தேர்தல் நேரத்தில் வதந்திகளை பரப்பி, தமிழ்நாட்டில் அரசியல் லாபம் பெற முயற்சிக்கிறார்கள் என்பதும் மக்களுக்கு நன்றாக தெரியும். இந்த விவகாரம் விசுவரூபமும் எடுக்கவில்லை. வேறு எந்த ரூபமும் எடுக்கவில்லை.

    10 ஆண்டுகால சாதனைகள் என்று தமிழ்நாட்டு மக்களிடம் சொல்வதற்கு ஒற்றைச் செங்கல்லை தாண்டி வேறு எதுவும் இல்லாத பா.ஜனதாவில் பிரதமர், நிதி மந்திரி, வெளியுறவுத்துறை மந்திரி தொடங்கி கத்துக்குட்டிகள் வரை கச்சத்தீவு பற்றிய வதந்திகளை பரப்பிக் கதறுகிறார்கள். இந்த விவகாரத்தில் தி.மு.க.வின் உறுதியான நிலைப்பாடு என்ன என்பது பாராளுமன்ற விவாதங்களிலும், சட்டமன்றத் தீர்மானத்திலும், மத்திய மந்திரிகளுடன் கருணாநிதி நடத்திய ஆலோசனைகள் பற்றிய குறிப்புகளிலும் தெளிவாக உள்ளது.

    கடந்த 2022-ம் ஆண்டு நேரு ஸ்டேடியத்தில் நடந்த விழாவிலும் பிரதமர் முன்னிலையில் கச்சத்தீவை மீட்டுத்தர வேண்டும் என முதலமைச்சர் என்ற முறையில் கோரிக்கை வைத்தேன். 10 ஆண்டு கால பா.ஜனதா ஆட்சியில் இம்மியளவில்கூட செயல்படவில்லை. இலங்கைத் தலைநகர் கொழும்புவில் கடந்த 2-ந் தேதி நடைபெற்ற அந்நாட்டு அரசின் மந்திரி சபை கூட்டத்திற்கு பிறகு நிருபர்களிடம் பேசிய அந்நாட்டு மந்திரி பந்துல குணவர்த்தனே, "கச்சத்தீவு விவகாரம் குறித்து மந்திரிசபையில் விவாதிக்கப்படவில்லை. ஏனெனில் அந்த பிரச்சனை ஒருபோதும் எழுப்பப்படவில்லை" என்று தெரிவித்திருந்ததை 'தினத்தந்தி' முதல் பக்கத்தில் செய்தியாக வெளியிட்டிருந்தது.

    இதில் இருந்தே கடந்த 10 ஆண்டுகளில் மோடி தலைமையிலான பா.ஜனதா அரசு கச்சத்தீவை இந்தியாவிடம் ஒப்படைக்கக் கோரி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது அம்பலமாகியுள்ளது. 'கெட்டிக்காரன் புளுகு 8 நாளைக்கு' என்பார்கள். அந்த கெட்டிக்காரத்தனம் கூட இல்லாமல் புளுகிய சில மணி நேரங்களிலேயே அம்பலப்பட்டுப் போய்விடுகிறது பா.ஜனதா.

    கேள்வி:- நீங்கள் குடும்ப அரசியல் செய்வதாக தமிழ்நாட்டுக்கு வரும்போதெல்லாம் பிரதமர் மோடி குற்றம் சாட்டுகிறாரே. அதுபற்றி உங்கள் கருத்து என்ன?

    பதில்:- நான் கருணாநிதியின் மகன் என்பதும் - உதயநிதி என்னுடைய மகன் என்பதும் ஊரறிந்த உண்மை. ஒரு கலைஞர் குடும்பம் மட்டுமல்ல, ஒவ்வொரு தொண்டரின் குடும்பமும் தி.மு.க.வைத்தான் முதல் குடும்பமாக நினைக்கிறது. தி.மு.க. அரசு தமிழ்நாட்டு மக்களையே தனது குடும்பமாக மதித்து, திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. குமரி அனந்தனின் மகள் தமிழிசை, கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பாவின் மகன் ராகவேந்திரா உள்ளிட்ட பலருக்கும் இந்த தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுத்துள்ள மோடி, தமிழ்நாடு வந்ததும் ஞாபகமறதி ஏற்பட்டு, குடும்ப அரசியல் என்று குற்றம்சாட்டுகிறார். கதையை (ஸ்க்ரிப்ட்) மாற்றட்டும்.

    கேள்வி:- புதிய திட்டங்களை அரசு செயல்படுத்தும்போது, கடன் வாங்குகிறோம். தற்போதைய நிலையில் ரூ.7.26 லட்சம் கோடி கடன் இருப்பதாக சொல்லப்படுகிறது. சொந்த வருவாயும் ரூ.3 லட்சத்து 3 ஆயிரத்து 814 கோடி என்ற அளவில்தான் இருக்கிறது. உயர்ந்து கொண்டிருக்கும் கடன் அளவைக் குறைக்க சொந்த வருவாயைப் பெருக்கும் வகையில் திட்டம் எதுவும் வகுக்கப்பட்டுள்ளதா?.

    பதில்:- மாநில அரசிடம் இருந்த வரி வருவாய் உள்ளிட்ட பல சொந்த வருவாய்களை மத்திய பா.ஜனதா அரசு பறித்துக்கொண்டுவிட்டது. தமிழ்நாட்டுக்கு திருப்பி அளிக்கக்கூடிய வரிப்பங்கீடும் மிகக் குறைவாக உள்ளது. அதனால்தான் புதிய திட்டங்களுக்காக கடன் வாங்க வேண்டியுள்ளது. அதுவும், நிர்ணயிக்கப்பட்ட அளவுக்குள்தான் இருக்கிறது.

    கேள்வி:- 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக தி.மு.க. அறிவித்தது. ஆனால், இந்த தேர்தலில் யாரையும் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கவில்லை. 'இந்தியா' கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார்? தேர்தலுக்கு முன்பே பிரதமர் வேட்பாளரை தேர்வு செய்து அறிவிக்க வாய்ப்பு இருக்கிறதா?

    பதில்:- 'இந்தியா' என்ற பெயர்தான் எங்கள் வேட்பாளர். ஜூன் 4-ந் தேதிக்கு பிறகு இந்தியாவுக்கு புதிய திறமையான மக்கள் மேல் அக்கறைக் கொண்ட நல்ல பிரதமர் கிடைப்பார்.

    இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

    • எங்கு பெண்களுக்கு சமகல்வி, சம உரிமை அளிக்கிறதோ அங்கு பொருளாதார முன்னேற்றத்தை காணலாம்.
    • தற்போதைய மத்திய அரசு இருக்கும்வரை இந்த விஷயங்களில் முற்போக்கான நிலைமை ஏற்படுமா என்ற நம்பிக்கை எனக்கு இல்லை.

    கொழும்பு:

    கொழும்பில் நடைபெற்ற ரோட்டரி கழகத்தின் மாநாட்டில் கலந்து கொள்ள தமிழக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இலங்கை சென்றார். அங்கு அவர் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கேவையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

    பின்னர் 'வீரகேசரி' பத்திரிகைக்கு அவர் சிறப்பு பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு:-

    கேள்வி: 2022-ம் ஆண்டு இலங்கை நிதி நெருக்கடியை சந்தித்து கொண்டிருந்தபோது, தமிழகத்தில் நீங்கள் நிதி நிர்வாகத்தில் மிகப்பெரிய சாதனையை நிகழ்த்தி கொண்டிருந்தீர்கள். அது தொடர்பாக விளக்க முடியுமா?

    பதில்: இந்த விஷயத்தில் நான் உலகத்தில் பெற்ற அனுபவத்தையோ, கல்வியையோ தாண்டி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கிய ஆதரவும், பொறுப்பும்தான் இதற்கு காரணமாகும். 2016-ம் ஆண்டில் இருந்து 2021-ம் ஆண்டுவரை எதிர்க்கட்சியாக இருந்தபோது அரசாங்க கணக்கு குழுவில் நான் அங்கம் வகித்தேன். அப்போது கிடைத்த அனுபவம்தான் எனக்கு கை கொடுத்தது. அதேபோல் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் நோக்கம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் இருந்தது. அதனால் அவர் எனக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கினார். இதன் காரணமாகவே 20 ஆண்டுகளில் ஏற்படுத்த முடியாத ஒரு மாற்றத்தை என்னால் 2 ஆண்டுகளில் மாற்றி அமைக்க முடிந்தது.

    கேள்வி: நீங்கள் சமூக நீதி குறித்து பேசுகிறீர்கள். பெண்கள் கல்வி கற்றால் மட்டுமே ஒரு சமூகம் விரைவாக வளர்ச்சி அடைய முடியும் என்று கூறுகிறீர்கள். இதனை எவ்வாறு நீங்கள் மேற்கொள்கிறீர்கள்?

    பதில்: எங்கு பெண்களுக்கு சமகல்வி, சம உரிமை அளிக்கிறதோ அங்கு பொருளாதார முன்னேற்றத்தை காணலாம். தமிழகத்தில் நீதி கட்சி ஆட்சியில் இருந்தபோதே அனைவருக்கும் கல்வி என்ற சட்ட திருத்தம் 1921-ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது.. அன்று முதல் இன்று வரை பெண்களுக்கு சம உரிமை வழங்கப்பட வேண்டும் என்ற விஷயத்தில் எந்த கட்சியும் பின்வாங்கியதில்லை.

    கேள்வி: பெங்களூரு, ஐதராபாத் போல் தகவல் தொழில்நுட்ப துறையில் தமிழகம் எப்போது முதன்மை இடம் பெறும்?

    பதில்: கருணாநிதி ஆட்சி காலத்திலேயே தமிழகத்தில் தகவல் தொழில் நுட்ப பூங்கா உருவாக்கப்பட்டது. கடந்த 25 ஆண்டுகளில் தமிழகத்தின் தொழில்நுட்ப வளர்ச்சியானது இயற்கையான வளர்ச்சியாக அமைந்துவிட்டது. தகவல் தொழில்நுட்ப துறையில் தமிழகம் பின்தங்கி இல்லை. அதில் தமிழகம் வளர்ச்சி அடைந்து இருக்கிறது. மாதந்தோறும் குறைந்தபட்சம் 10 ஆயிரம் தொழில் வாய்ப்புகள் இந்த துறையில் உருவாக்கப்படுகின்றன.

    கேள்வி: 2030-ம் ஆண்டில் தமிழகத்தின் பொருளாதாரத்தை ஒரு டிரில்லியன் டாலர் அளவுக்கு கொண்டு வர முயற்சிக்கிறீர்கள். இது சாத்தியமா?

    பதில்: இது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிர்ணயித்த இலக்கு. அதை அடைவதற்காக நாங்கள் பணியாற்றி கொண்டிருக்கிறோம்.

    கேள்வி: தமிழகத்துக்கும், இலங்கைக்கும் இடையில் பொருளாதார உறவை மேம்படுத்த முடியுமா?

    பதில்: இது விஷயத்தில் இந்திய அரசாங்கத்தின் ஒப்புதல் மூலமே முன்னெடுக்கப்பட முடியும். தற்போதைய மத்திய அரசு இருக்கும்வரை இந்த விஷயங்களில் முற்போக்கான நிலைமை ஏற்படுமா என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. இலங்கையும், தமிழகமும் சுற்றுலாத்துறையில் இணைந்து செயல்பட்டால் சிறந்த முன்னேற்றத்தை எட்ட முடியும். தமிழகத்துக்கும், இலங்கைக்கும் இடையே உள்ள கலாசார தொடர்புகளின் அடிப்படையில் இதனை முன்னெடுக்கலாம்.

    கேள்வி: கச்சத்தீவு விவகாரம் மீண்டும் களத்துக்கு வந்திருக்கிறது. இது மத்திய அரசின் விஷயம் என்றாலும், மாநில அரசின் மீது விமர்சனம் முன்வைக்கப்படுகிறது. எனவே இந்த விவகாரத்தை தமிழக அமைச்சர் என்ற முறையில் நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?

    பதில்: 50 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு விஷயம் குறித்து கடந்த 10 ஆண்டுகளாக டெல்லியில் ஆட்சியில் இருந்தவர்கள் எதையும் செய்யவில்லை. தற்போது இதை அரசியலுக்காக பேசுகிறார்கள். கவனச்சிதறல் முயற்சியாகவே இது தெரிகிறது.

    கேள்வி: இலங்கைக்கும், இந்தியாவுக்கும் இடையில் பாலம் அமைப்பது சாத்தியமா?

    பதில்: சாத்தியம் இல்லை என்று கூற முடியாது. உலகளவில் இதை விட நீளமான பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் இதில் பொருளாதார விளைவுகள் என்ன? செலவு என்ன என்பது முக்கியமாகும். பாதுகாப்பு விஷயங்கள் குறித்து ஆராயப்பட வேண்டும். பொறியியல் மற்றும் கட்டிடக்கலை அடிப்படையில் சாத்தியமானதுதான்.

    இவ்வாறு பழனிவேல் தியாகராஜன் பதில் அளித்தார்.

    • தமிழ்நாடு மக்கள் தெளிவாக பாஜகவுக்கு பதிலடி கொடுத்திருக்கிறார்கள்.
    • தேர்தலுக்காக நடத்தப்பட்ட கச்சத்தீவு நாடகத்துக்காக மோடியும் அவரின் கட்சியினரும் மன்னிப்பு கேட்பார்களா?

    காங்கிரஸ் ஆட்சியின்போது இலங்கைக்கு கச்சதீவை தாரைவார்த்ததாக தேர்தலுக்கு முன்பாக பிரதமர் மோடி குற்றம் சாட்டியிருந்தார். அப்போது, கச்சத்தீவு விவகாரம் பூதாகரமாக வெடித்தது..

    கச்சத்தீவு விவகாரம் தமிழ்நாட்டில் பாஜகவிற்கு கைகொடுக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தமிழ்நாட்டில் போட்டியிட்ட அணைத்து இடங்களிலும் பாஜக கூட்டணி படுதோல்வி அடைந்தது. 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற்றது.

    இந்நிலையில், பாஜகவின் கட்சத்தீவு சர்ச்சை தொடர்பாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,

    "பிரசாரத்துக்காக கச்சத்தீவு பிரச்சினையை மோடியும் அவரது கூட்டாளிகளும் உருவாக்கி தமிழ்நாட்டில் பாஜகவுக்கு ஆதரவு திரட்ட முயன்றது நினைவில் இருக்கிறதா? நேற்று மோடியின் பதவியேற்பு நிகழ்வில் இலங்கையின் ஜனாதிபதியும் பங்கேற்றிருக்கிறார். தமிழ்நாடு மக்கள் தெளிவாக பாஜகவுக்கு பதிலடி கொடுத்திருக்கிறார்கள். தேர்தலுக்காக நடத்தப்பட்ட கச்சத்தீவு நாடகத்துக்காக மோடியும் அவரின் கட்சியினரும் மன்னிப்பு கேட்பார்களா?" என்று அவர் பதிவிட்டுள்ளார்.

    ×