என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட்"

    • 2025-ம் ஆண்டுக்கான ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி போட்டியை நடத்தும் வாய்ப்பு பாகிஸ்தானுக்கு அளிக்கப்பட்டுள்ளது.
    • 2024 முதல் 2031-ம் ஆண்டுவரையிலான கால கட்டத்தில் நடைபெறவுள்ள ஐ.சி.சி. போட்டி விவரங்களை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்தது.

    துபாய்:

    சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) ஒருநாள் போட்டி உலகக் கோப்பை, 20 ஓவர் உலக கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராபி ஆகிய 3 போட்டிகளை நடத்துகிறது.

    2024 முதல் 2031-ம் ஆண்டுவரையிலான கால கட்டத்தில் நடைபெறவுள்ள ஐ.சி.சி. போட்டி விவரங்களை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்தது. அந்த வகையில் 2025-ம் ஆண்டுக்கான ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி போட்டியை நடத்தும் வாய்ப்பு பாகிஸ்தானுக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 30 ஆண்டுகளுக்கு பிறகு ஐ.சி.சி.யின் பெரிய போட்டியை அந்த நாடு நடத்துகிறது.

    கடைசியாக 1996-ம் ஆண்டு ஒருநாள் போட்டி உலகக் கோப்பையை இந்தியா, இலங்கையுடன் இணைந்து பாகிஸ்தான் நடத்தி இருந்தது.

    இந்த நிலையில் சாம்பியன்ஸ் டிராபி போட்டி பாகிஸ்தானில் நடப்பதால் இந்திய அணி அங்கு சென்று விளையாட வாய்ப்பு இல்லை என தகவல் வெளியாகி உள்ளது. பாகிஸ்தானுக்கு சென்று விளையாட இந்தியா மறுத்து வருகிறது. சமீபத்தில் நடந்த ஆசிய கோப்பையில் இந்தியா மோதிய ஆட்டங்கள் இலங்கையில் நடத்தப்பட்டன.

    மேலும் இந்திய அணி மோதும் போட்டி மட்டும் வேறு ஒரு இடங்களில் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா அணி விளையாடும் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

    இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இருதரப்பு தொடரில் விளையாட வேண்டும் என இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா விருப்பம் தெரிவித்திருந்தார். பாகிஸ்தானுடன் இரு தரப்பு தொடரை மறந்து விடுங்கள் எனவும் பிசிசிஐ தரப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.

    • கடைசியாக இந்திய கிரிக்கெட் அணி கடந்த 2008-ல் பாகிஸ்தானில் விளையாடி இருந்தது.
    • இங்குள்ள கிரிக்கெட் ரசிகர்கள் இந்திய கிரிக்கெட் வீரர்களை நேசிக்கிறார்கள்.

    ராவல்பிண்டி:

    பாகிஸ்தானில் அடுத்த ஆண்டு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது. பாகிஸ்தான், இந்தியா உட்பட எட்டு அணிகள் இந்த தொடரில் பங்கேற்கின்றன. இந்த தொடருக்காக இந்தியா அணி பாகிஸ்தான் செல்லுமா என்பது இன்னும் வரை கேள்வி குறியாகவே உள்ளது.

    கடைசியாக இந்திய கிரிக்கெட் அணி கடந்த 2008-ல் பாகிஸ்தானில் விளையாடி இருந்தது. அதன் பிறகு அங்கு சென்று விளையாடவில்லை. பாகிஸ்தான் அணி நேரடி தொடரில் விளையாட இந்தியாவுக்கு கடந்த 2012-ல் வந்திருந்தது. அதன் பின்னர் இரு அணிகளுக்கு இடையிலான நேரடி தொடர் அரசியல் மற்றும் பாதுகாப்பு ரீதியான காரணங்களால் நடைபெறுவதில்லை. ஐசிசி நடத்தும் தொடர்களில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் விளையாடி வருகிறது.

    பாகிஸ்தான் வந்து விளையாடுமாறு பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் ஆகியோர் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

    அந்த வகையில் சாம்பியன்ஸ் டிராபியில் விளையாட பாகிஸ்தானுக்கு இந்தியா வந்தால் சிறப்பான, அன்பான வரவேற்பு கிடைக்கும் என பாகிஸ்தான் அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்ட ரிஸ்வான் கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    இங்குள்ள கிரிக்கெட் ரசிகர்கள் இந்திய கிரிக்கெட் வீரர்களை நேசிக்கிறார்கள். மேலும், இந்திய அணி பாகிஸ்தான் நாட்டில் விளையாடுவதை பார்த்து அவர்கள் மகிழ்ச்சி அடைவார்கள். அந்த வகையில் சாம்பியன்ஸ் டிராபியில் விளையாட பாகிஸ்தானுக்கு இந்தியா வந்தால் சிறப்பான, அன்பான வரவேற்பு கிடைக்கும்.

    முகமது ரிஸ்வான் கூறினார்.

    • சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் 19-ந் தேதி தொடங்கி மார்ச் 9-ந் தேதி வரை நடக்கிறது.
    • ஒவ்வொரு பிரிவிலும் உள்ள அணிகள் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும்.

    புதுடெல்லி:

    8 அணிகள் கலந்து கொள்ளும் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் 19-ந் தேதி தொடங்கி மார்ச் 9-ந் தேதி வரை நடக்கிறது. இந்த தொடருக்கான அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. அதன்படி குரூப் ஏ-வில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்காளதேசம் அணிகளும், குரூப் பி-யில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம் பிடித்துள்ளன.

    ஒவ்வொரு பிரிவிலும் உள்ள அணிகள் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். இந்த தொடருக்கான அணிகளை வரும் 12-ந் தேதிக்குள் அறிவிக்க வேண்டும் என ஐ.சி.சி தெரிவித்துள்ளது.

    இதையடுத்து இந்த தொடருக்கான இந்திய அணியில் யார்? யார்? இடம் பெறுவார்கள் என எதிர்பார்ப்பு அதிகமாகி உள்ளது. இந்நிலையில் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியில், முன்னணி வேகப்பந்து வீச்சாளரான முகமது சமி இடம் பிடிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதேபோல் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவும் அணியில் இடம் பிடிப்பார் என கூறப்படுகிறது.

    இந்த அணிக்கு ரோகித் சர்மா கேப்டனாகவும், ஜஸ்ப்ரீத் பும்ரா துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பான அறிவிப்பு வரும் 12-ம் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • துபாயில் உள்ள மைதானம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும்.
    • அவர் ஆடுகளத்தின் சூழ்நிலை புரிந்துகொண்டு நிச்சயம் இந்தியாவுக்கு முக்கிய பங்காற்றுவார்.

    9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தான் மற்றும் துபாயில் பிப்ரவரி 19-ந் தேதி முதல் மார்ச் 9-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இதில் பங்கேற்கும் 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்காளதேசம் அணிகளும், 'பி' பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம் பெற்றுள்ளன. இந்திய அணியின் ஆட்டங்கள் துபாயில் நடைபெறுகிறது.

    இந்த நிலையில் சாம்பியன்ஸ் டிராபியில் இந்திய அணியில் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் முக்கிய பங்கு வகிப்பார் என்று தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரர் டிவில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியின் இந்திய அணியில் குல்தீப் யாதவ் இருக்கிறார். அவர் இந்திய அணியின் ஒரு முக்கிய வீரராக இருப்பார். இந்திய அணி, துபாயில் உள்ள மைதானங்களில் மட்டும்தான் விளையாட இருக்கிறது. அந்த மைதானம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும். எனவே இதில் குல்தீப் யாதவ் சிறப்பாக செயல்படுவார் என்று நம்புகிறேன். அவர் ஆடுகளத்தின் சூழ்நிலை புரிந்துகொண்டு நிச்சயம் இந்தியாவுக்கு முக்கிய பங்காற்றுவார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சமீப காலமாக காயத்தால் இந்திய அணியில் இடம்பெறாமல் இருந்து வந்த குல்தீப் யாதவ், இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் மீண்டும் விளையாட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • 8 அணிகள் கலந்து கொள்ள உள்ள சாம்பியன்ஸ் டிராபி தொடர் வரும் 19-ம் தேதி பாகிஸ்தானில் தொடங்குகிறது.
    • சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு முன்னதாக முத்தரப்பு ஒருநாள் தொடரில் தென் ஆப்பிரிக்கா விளையாடுகிறது.

    8 அணிகள் கலந்து கொள்ள உள்ள சாம்பியன்ஸ் டிராபி தொடர் வரும் 19-ம் தேதி பாகிஸ்தானில் தொடங்குகிறது. இந்த தொடருக்கு முன்னதாக தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, பாகிஸ்தான் இடையிலான முத்தரப்பு ஒருநாள் தொடர் நடைபெற உள்ளது.

    இந்த தொடர் வரும் 8-ம் தேதி லாகூரில் தொடங்குகிறது. இந்த தொடரில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோத வேண்டும். லீக் முடிவில் புள்ளிப்பட்டியலில் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.

    இந்த தொடரில் நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்திற்கான தென் ஆப்பிரிக்கா அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் வேகப்பந்து வீச்சாளர் ஜெரால்ட் கோட்ஸி இடம்பெறவில்லை.

    இந்நிலையில் தொடை எலும்பு காயம் காரணமாக கோட்ஸி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்து விலகி உள்ளார். இது தென் ஆப்பிரிக்கா அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

    • சாம்பியன்ஸ் டிராபியில் முதல் 8 சிறந்த அணிகள் விளையாடுகின்றன.
    • சமீப காலமாக 20 ஓவர் கிரிக்கெட்டில் 200 ரன்கள் அளவுகோலாக மாறி விட்டது.

    8 அணிகள் பங்கேற்கும் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டி வருகிற 19-ந்தேதி தொடங்குகிறது.

    இதில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி 23-ந்தேதி துபாயில் நடக்கிறது. இப்போட்டி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    இந்த நிலையில் பாகிஸ்தான் அணி தலைமை பயிற்சியாளர் ஆகிப் ஜாவேத் கூறியதாவது:-

    சாம்பியன்ஸ் டிராபியில் முதல் 8 சிறந்த அணிகள் விளையாடுகின்றன. இதில் எந்த அணியையும் நீங்கள் எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது. எந்த அணியிலும் பும்ரா போன்ற ஒரு பந்து வீச்சாளர் இருந்தால், அது அந்த அணிக்கு பலமாக இருக்கும். ஆனால் நாங்கள் அவரைச் சுற்றி எல்லாவற்றையும் திட்டமிடமாட்டோம். பும்ராவின் உடற்தகுதி குறித்து அவர்கள் (இந்தியா) கவலைப்பட வேண்டும். பும்ரா பற்றி நாங்கள் கவலைப்படவில்லை.

    சமீப காலமாக 20 ஓவர் கிரிக்கெட்டில் 200 ரன்கள் அளவுகோலாக மாறி விட்டது. எனவே ஒருநாள் போட்டிகளில் 325 அல்லது 350 ரன்கள் கூட சாத்தியமாகும்.

    குறிப்பாக பீல்டிங் கட்டுப்பாடுகளில் மாற்றம் கொண்டு வரப்பட்டதால் அதிக ரன்கள் குவிக்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 3 நாடுகள் கலந்து கொள்ளும் ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஏற்பாடு செய்துள்ளது.
    • இவ்விரு அணிகளும் இதுவரை 116 ஒருநாள் போட்டியில் நேருக்கு நேர் மோதி இருக்கின்றன.

    8 அணிகள் இடையிலான 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தானில் வருகிற 19-ந் தேதி தொடங்கி மார்ச் 9-ந்தேதி வரை நடக்கிறது. இதில் இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாயில் அரங்கேறுகிறது. சாம்பியன்ஸ் கோப்பைக்கு தயாராகும் பொருட்டு பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்து ஆகிய 3 நாடுகள் கலந்து கொள்ளும் ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஏற்பாடு செய்துள்ளது.

    இந்த போட்டி இன்று தொடங்கி 14-ந்தேதி வரை நடைபெறுகிறது. இதில் ஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும். பவுமா தலைமையிலான தென்ஆப்பிரிக்க அணியில் 6 புதுமுக வீரர்கள் இடம் பிடித்துள்ளனர். எஸ்.ஏ.லீக் 20 ஓவர் போட்டி இன்றுடன் நிறைவடைகிறது. அது முடிந்ததும் முன்னணி வீரர்கள் தென்ஆப்பிரிக்க அணியுடன் இணைவார்கள்.

    முத்தரப்பு தொடரில், லாகூரில் உள்ள கடாபி ஸ்டேடியத்தில் இன்று நடக்கும் முதலாவது லீக்கில் பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகள் மல்லுக்கட்டுகின்றன. உள்ளூர் அணியான பாகிஸ்தானில் கேப்டன் முகமது ரிஸ்வான், பாபர் அசாம், பஹர் ஜமான், சல்மான் ஆஹா, கம்ரான் குலாம், ஷகீன் ஷா அப்ரிடி, ஹாரிஸ் ரவுப் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். நியூசிலாந்து அணியில் கேப்டன் மிட்செல் சான்ட்னெர், டிவான் கான்வே, லோக்கி பெர்குசன், மேட் ஹென்றி, ரச்சின் ரவீந்திரா, வில்லியம்சன், வில் யங், டேரில் மிட்செல் என திறமைசாலிகளுக்கு பஞ்சமில்லை. பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் வலுவாக இருக்கும் அணிகள் மோதுவதால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவிருக்காது.

    இவ்விரு அணிகளும் இதுவரை 116 ஒருநாள் போட்டியில் நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 61-ல் பாகிஸ்தானும், 51-ல் நியூசிலாந்தும் வென்றுள்ளன. ஒரு ஆட்டம் 'டை' யில் முடிந்தது. 3 ஆட்டங்கள் முடிவு இல்லாமல் போனது. இந்திய நேரப்படி பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை சோனி ஸ்போர்ட்ஸ் 5 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

    • பாகிஸ்தானுக்கு எதிரான இந்த முக்கியமான ஆட்டத்தில் இந்திய வீரர்கள் அனைவரும் முழு திறமையை வெளிப்படுத்த வேண்டும்.
    • முகமது ரிஸ்வான் தலைமையிலான பாகிஸ்தான் அணிக்கு இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டிய நெருக்கடி உள்ளது.

    9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடைபெற்று வருகிறது.

    இந்த போட்டியில் விளையாடும் 8 அணிகளும் 2 பிரிவாக பிரிக்கப்பட்டு உள்ளன. ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்காளதேசமும், பி பிரிவில் ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து , ஆப்கானிஸ்தானும் இடம் பெற்றுள்ளன.

    ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் இரண்டு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் நாடுகள் அரை இறுதிக்கு தகுதி பெறும்.

    இந்த போட்டி தொடரின் 5-வது லீக் ஆட்டம் துபாயில் நாளை நடக்கிறது. இதில் இந்தியா பாகிஸ்தான்- அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் வங்காளதேசத்தை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. அதே உத்வேகத்துடன் பாகிஸ்தானை தோற்கடித்து அரை இறுதிக்கு நுழையும் ஆர்வத்தில் உள்ளது.

    இரு அணிகளும் ஒருநாள் போட்டியில் கடைசியாக 2023-ம் ஆண்டு அக்டோபரில் மோதின. அகமதாபாத்தில் நடந்த உலக கோப்பை போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி இருந்தது. கடைசியாக கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமெரிக்காவில் நடந்த 20 ஓவர் உலக கோப்பையில் இரு அணிகளும் மோதின. இதில் 6 ரன் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.

    வங்காளதேசத்துக்கு எதிராக சுப்மன் கில் சதம் அடித்து முத்திரை பதித்தார். இதேபோல முகமது ஷமி 5 விக்கெட் வீழ்த்தினார். கேப்டன் ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல், ஹர்ஷித் ராணா, அக்ஷர் படேல் ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர். விராட் கோலி திறமை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.

    நாளைய போட்டிக்கான அணியில் மாற்றம் இருக்காது என்றே கருதப்படுகிறது. ராகுல் வங்காளதேசத்துக்கு எதிராக சிறப்பாக ஆடினார். இதனால் ரிஷப் பண்ட் இடம் பெறுவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவே. தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி இடம்பெற்றால் குல்தீப் யாதவ் கழற்றி விடப்படுவார்.

    பாகிஸ்தானுக்கு எதிரான இந்த முக்கியமான ஆட்டத்தில் இந்திய வீரர்கள் அனைவரும் முழு திறமையை வெளிப்படுத்த வேண்டும்.

    முகமது ரிஸ்வான் தலைமையிலான பாகிஸ்தான் அணிக்கு இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டிய நெருக்கடி உள்ளது. தோற்றால் அந்த அணி அரை இறுதிக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழக்கும் நிலை ஏற்படும். ஏனென்றால் பாகிஸ்தான் தொடக்க ஆட்டத்தில் நியூசிலாந்திடம் 60 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவி இருந்தது.

    அந்த அணியில் கேப்டன் ரிஸ்வான், பாபர் ஆசம், சல்மான் அகா, குஷ்தில் ஷா போன்ற சிறந்த பேட்ஸ்மேன்களும், ஷகீன் ஷா அப்ரிடி, நசீம் ஷா, ஹாரிஸ் ரவூப் போன்ற சிறந்த பவுலர்களும் உள்ளனர். பாகிஸ்தான் அணி இந்தியாவை தோற்கடிக்க கடுமையாக போராடும்.

    இந்தியா-பாகிஸ்தான் மோதும் போட்டிக்கு எப்போதுமே அதிக எதிர்பார்ப்பு இருக்கும். அது மாதிரியே சாம்பியன்ஸ் டிராபி போட்டியையும் ரசிகர்கள் எதிர் நோக்கியுள்ளனர்.

    பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டம் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்களில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

    இந்தியா: ரோகித்சர்மா (கேப்டன்), சுப்மன்கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் அய்யர், அக்ஷர் படேல், கே.எல்.ராகுல், ஹர்திக் பாண்ட்யா, ஜடேஜா, குல் தீப் யாதவ், ஹர்சித் ராணா, முகமது ஷமி, ரிஷப்பண்ட், வாஷிங்டன் சுந்தர், அர்ஷ் தீப் சிங், வருண் சக்கர வர்த்தி

    பாகிஸ்தான்: முகமது ரிஸ்வான் (கேப்டன்), பாபர் ஆசம், சவுத் ஷகீல், பகர் ஜாமன், சல்மான் அகா, தையூப் தாகீர், குஷ்தில் ஷா, ஷகீன் ஷா அப்ரிடி, நசீம் ஷா, ஹாரிஸ் ரவூப், அப்ரார் அகமது, இமாம், உல்-ஹக், உஸ்மான் கான், பஹீம் அஸ்ரப் முகமது ஹஸ்னைன்.

    ×