என் மலர்
நீங்கள் தேடியது "Periyar University"
- துணைவேந்தர் ஆர்.ஜெகநாதன் உள்ளிட்டோருக்கு எதிராக பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் சார்பில் இளங்கோவன் என்பவர் போலீசில் புகார் அளித்திருந்தார்.
- இந்த வழக்கை ரத்து செய்யக்கூடாது என்று போலீஸ் தரப்பில் வாதிடப்பட்டது.
சென்னை:
சேலம் பெரியார் பல்கலைக்கழக விதிகளை மீறி, அரசு அனுமதி பெறாமல், பெரியார் பல்கலைக்கழக தொழில்நுட்ப தொழில் முனைவோர் மற்றும் ஆராய்ச்சி பவுண்டேசன் என்ற அமைப்பை அரசு நிதியில் தொடங்கியுள்ளதாகக் கூறி, துணைவேந்தர் ஆர்.ஜெகநாதன் உள்ளிட்டோருக்கு எதிராக பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் சார்பில் இளங்கோவன் என்பவர் போலீசில் புகார் அளித்திருந்தார்.
இந்த அமைப்பு குறித்து கேள்வி எழுப்பிய தன்னை சாதி பெயரை குறிப்பிட்டு பேசியதாகவும் அந்த புகாரில் கூறியிருந்தார்.
இந்த புகார்களின் அடிப்படையில், துணைவேந்தர் ஜெகநாதன், பதிவாளர் தங்கவேல் உள்ளிட்டோருக்கு எதிராக இந்திய தண்டனைச் சட்டம், வன்கொடுமை தடுப்புச் சட்டப் பிரிவுகளின் கீழ் கருப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி துணைவேந்தர் ஜெகநாதன், பதிவாளர் தங்கவேல் உள்ளிட்டோர் சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
அந்த மனுவில், பண பரிவர்த்தனையோ, முறைகேடோ நடைபெறவில்லை என்று கூறியிருந்தனர்.
இந்த மனுக்களை நீதிபதி இளந்திரையன் விசாரித்தார். இந்த வழக்கை ரத்து செய்யக்கூடாது என்று போலீஸ் தரப்பில் வாதிடப்பட்டது. இதையடுத்து, துணைவேந்தர் ஜெகநாதன், பதிவாளர் தங்கவேல் உள்ளிட்டோர் மீதான வழக்கை ரத்து செய்ய முடியாது என்றும் அவர்களது மனுக்களை தள்ளுபடி செய்தும் நீதிபதி ஜி.கே.இளந்திரையன் உத்தரவிட்டுள்ளார்.
- விசாரணை செம்மையாக நடைபெறுவதை உறுதி செய்ய சம்பந்தப்பட்ட அனைவரையும் பணி நீக்க வேண்டும்.
- கடந்த காலத்தில் நடந்த பல்வேறு முறைகேடுகள் குறித்த வழக்கு விசாரணைகளை விரைவு படுத்தி, தவறு செய்த அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்தி, உரிய தண்டனை பெற்றுத் தர வேண்டும்.
சென்னை:
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழக அரசையும், உயர்கல்வித்துறையையும் எள் முனையளவுக்குக் கூட மதிக்காமல் தன்னிச்சையாக செயல்பட்டு வரும் சேலம் பெரியார் பல்கலைக்கழக துணை வேந்தர், அவரது கூட்டாளிகள் சிலருடன் இணைந்து பெரியார் பல்கலைக்கழகத்தின் சார்பில் கல்வி வழங்குவதற்காக தனி நிறுவனம் ஒன்றைத் தொடங்கியுள்ளார். பெரியார் பல்கலைக்கழகத்தை கூறுபோட்டு விற்பனை செய்வதற்கு சமமான இந்த நடவடிக்கை குறித்து தமிழக அரசுக்கு தெரியும் என்ற போதிலும், அதற்கு காரணமானவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் பல வாரங்களாக வேடிக்கை பார்த்து வருவது கண்டிக்கத்தக்கதாகும்.
சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் போன்ற மிகவும் பின்தங்கிய பகுதி மக்களுக்கு உயர்கல்வி வழங்குவதற்காக சேலத்தில் பெரியார் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது. ஆனால், கல்வி வளர்ச்சிக்காக ஆக்கப்பூர்வமாக எதையும் செய்யாத பெரியார் பல்கலைக்கழகத்தில் ஊழல்கள் தான் தலைவிரித்தாடிக் கொண்டிருக்கின்றன. அதன் அடுத்தக்கட்டமாக பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஜெகநாதன், பொறுப்பு பதிவாளர் தங்கவேல், கணினி அறிவியல் துறை இணைப் பேராசிரியர் சதீஸ், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக பேராசிரியர் ராம் கணேஷ் ஆகிய நால்வரும் இணைந்து பூட்டர் அறக்கட்டளை என்ற கல்வி நிறுவனத்தை தொடங்கியுள்ளனர்.
இது தவிர தங்கவேல் உள்ளிட்ட மூவர் இணைந்து அப்டெக்கான் ஃபோரம் என்ற இன்னொரு அமைப்பை உருவாக்கியுள்ளனர். இவர்கள் பெரியார் பல்கலைக்கழகத்தின் பிரதிநிதிகளாக இருந்து, பல்கலைக்கழகத்தின் துணை அமைப்புகளாக அவற்றை தொடங்கவில்லை. மாறாக, தங்களை இயக்குனர்களாகக் கொண்டு, பல்கலைக்கழகத்தை விட அதிக வருவாய் ஈட்டும் நிறுவனங்களாகவே தொடங்கியுள்ளனர். அதுமட்டுமின்றி, இந்த நிறுவனங்களால் பெரியார் பல்கலைகழகம் பாதிக்கப்படும்.
இனியும் நிலைமை மோசமடையாமல் தடுக்க, பெரியார் பல்கலைக்கழகத்தின் அதன் துணைவேந்தரும், அவரது கூட்டாளிகளும் தனி நிறுவனம் தொடங்கியிருப்பது குறித்து அரசு விசாரணை நடத்த வேண்டும். விசாரணை செம்மையாக நடைபெறுவதை உறுதி செய்ய சம்பந்தப்பட்ட அனைவரையும் பணி நீக்க வேண்டும். கடந்த காலத்தில் நடந்த பல்வேறு முறைகேடுகள் குறித்த வழக்கு விசாரணைகளை விரைவு படுத்தி, தவறு செய்த அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்தி, உரிய தண்டனை பெற்றுத் தர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- அங்குலம், அங்குலமாக நடத்தப்பட்ட இந்த சோதனையில் கம்ப்யூட்டர்கள் உள்பட முக்கிய ஆவணங்கள் சிக்கி உள்ளன.
- 100-க்கும் மேற்பட்ட போலீசார் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சேலம்:
சேலம் கருப்பூரில் உள்ள பெரியார் பல்கலைக் கழகத்தில் கடந்த 2021-ம் ஆண்டு ஜுலை மாதம் ஜெகநாதன் (66 ) துணை வேந்தராக பதவி ஏற்றார். அவரது பதவி காலம் ஜுன் 2024 வரை உள்ளது.
இந்நிலையில் பெரியார் பல்கலைக்கழக தொழிலாளர் சங்க சட்ட ஆலோசகர் இளங்கோ கருப்பூர் போலீசில் ஒரு புகார் கொடுத்தார், அதில், துணை வேந்தர் ஜெகநாதன், பதிவாளர் (பொறுப்பு) தங்கவேல், கணினி அறிவியல் இணை பேராசிரியர் சதீஷ் , திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக பேராசிரியர் ராம்கணேஷ் ஆகியோர் இணைந்து பூட்டர் அறக்கட்டளை என்ற பெயரில் கல்வி நிறுவனமும், அப்டெக்கான் போரம் என மற்றொரு அமைப்பையும் ெதாடங்கி உள்ளனர்.
இவர்கள் பெரியார் பல்கலைக்கழக பிரதி நிதிகளாக இருந்து கொண்டு அரசு அனுமதியின்றி துணை அமைப்புகளை தொடங்கி இயக்குனர்களாக உள்ளனர். அதனால் ஜெகநாதன், தங்கவேல், சதீஷ், பல்கலைக்கழக சட்டப்பிரிவு 19-ன் படி பொது ஊழியர்களாக கருதப்படு கின்றனர். புதிதாக தொழில் தொடங்க கூடாது அதற்கு பல்கலை மற்றும் தமிழக அரசு அனுமதி பெற வேண்டும், விதி மீறிய இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தார்.
இது குறித்து சூரமங்கலம் உதவி கமிஷனர் நிலவழகன் தலைமையில் போலீசார் விசாரித்து நேற்று முன்தினம் பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியில் வந்த துணை வேந்தர் ஜெகநாதனை கைது செய்தனர். அவரை சேலத்திற்கு அழைத்து வந்து 6 மணி நேரம் விசாரணை நடத்தினர்.
பின்னர் கருப்பூர் போலீசார் ஜெகநாதன் உள்பட 4 பேர் மீதும் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியது, சொந்த நிறுவனம் தொடங்கி லாப நோக்கில் செயல்பட்டது, போலி ஆவணங்களை தயாரித்து தனி நிறுவனங்களை தொடங்கி யது உள்பட 8 பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
பின்னர் இரவு 10 மணியளவில் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் பரிசோதனை செய்யப் பட்டது. அப்போது அவர் நெஞ்சு வலிப்பதாக கூறியதால் இ.சி.ஜி. உள்பட சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து ஜே.எம்.2 மாஜிஸ்திரேட் தினேஷ்குமார் வீட்டில் ஆஜர்படுத்தினர்.
அப்போது ஒரு வாரத்திற்கு சூரமங்கலம் போலீசில் தினமும் கையெழுத்திட வேண்டும், 8-வது நாளில் நேரில் ஆஜராக வேண்டும் என கூறி மாஜிஸ்திரேட் நிபந்தனை ஜாமீன் வழங்கினார். தொடர்ந்து நேற்று சூரமங்கலம் உதவி கமிஷனர் அலுவலகத்தில் ஜெகநாதன் கையெழுத்திட்டு சென்றார்.
இதற்கிடையே பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள துணை வேந்தர் அலுவலகம், இல்லம், ஆய்வு மாளிகை விடுதி, பதிவாளர் தங்கவேலு வீடு, அலுவலகம், அவரது கணினி அறிவியல் அலுவலகம், கணினி அறிவியல் உதவி பேராசிரியர் சதீஷின் அலுவலகம் , சூரமங்கலத்தில் உள்ள துணை வேந்தர் வீடு ஆகிய 7 இடங்களில் உதவி கமிஷனர்கள் தலைமையில் 40 பேர் அடங்கிய போலீசார் சோதனையை தொடங்கினர். அங்குலம், அங்குலமாக நடத்தப்பட்ட இந்த சோதனையில் கம்ப்யூட்டர்கள் உள்பட முக்கிய ஆவணங்கள் சிக்கி உள்ளன.
இதில் துணை வேந்தர் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையின் போது வீட்டில் யாரும் இல்லை. அங்கிருந்த அலுவலக நிர்வாகிகள் மற்றும் பணியாளர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. ஆனால் வீட்டில் இருந்து கட்டு கட்டாக முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது.
தொடர்ந்து துணை வேந்தர் ஜெகநாதனின் வீட்டிற்கு ஜெராக்ஸ் மற்றும் ஸ்கேன் மிஷின்களை எடுத்து சென்றனர். அங்கு கைப்பற்றிய ஆவணங்களை அந்த எந்திரங்கள் மூலம் நகல் எடுத்து அதனை அட்டை பெட்டிகளில் அடைத்து எடுத்து சென்றனர்.
துணை வேந்தர் வீடு உள்பட 7 இடங்களிலும் போலீசாரின் சோதனை விடிய, விடிய நடந்தது. 2-வது நாளாக இன்றும் சோதனை நடைபெற்று வருகிறது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவி வருவதால் 100-க்கும் மேற்பட்ட போலீசார் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கிடையே தலைமறைவாக உள்ள பதிவாளர் உள்பட 3 பேரையும் பிடிக்க போலீசார் நடிவடிக்கை எடுத்துள்ளனர். மேலும் துணை வேந்தர் ஜாமீனுக்கு எதிராக புகார்தாரர் இளங்கோ தரப்பிலும், அரசு தரப்பிலும் மேல் முறையீடு செய்யப்படும் என்றும் புகார்தாரர் இளங்கோ கூறி உள்ளார்.
- பூட்டர் நிறுவனம் பல்வேறு நிறுவனங்களை இணைத்து பெரிய அளவில் லாபம் சம்பாதிக்கும் நோக்கில் செயல்பட்டதும் தெரியவந்தது.
- வங்கி லாக்கரில் 93 பவுன் நகைகள் மற்றும் பல கோடி ரூபாய் மதிப்பிலான ஆவணங்களும் இருந்ததாக கூறப்படுகிறது.
சேலம்:
சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தராக இருப்பவர் ஜெகநாதன் (66). இவர் வணிக நோக்கில் பூட்டர் பவுண்டேஷன் என்ற அறக்கட்டளையை தொடங்கி அந்த அலுவலகத்தையும் பல்கலைக்கழக வளாகத்திலேயே நடத்தி வந்தார்.
இது தொடர்பாக பல்கலைக்கழக சட்ட ஆலோசகர் இளங்கோ என்பவர் கருப்பூர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் ஜெகநாதன், பல்கலைக்கழக பதிவாளர் பொறுப்பு தங்கவேல், பேராசிரியர்கள் சதீஷ்குமார், ராம் கணேஷ் ஆகிய 4 பேர் மீதும் 8 பிரிவுகளில் வழக்குபதிவு செய்தனர்.
இதில் ஜெகநாதன் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்ட நிலையில் நெஞ்சுவலி ஏற்பட்டதால் தனியார் ஆஸ்பத்திரியில் ஆஞ்சியோ சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதற்கிடையே பூட்டர் நிறுவனம் செயல்பாடு குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். விசாரணையில் பூட்டர் நிறுவனம் பல்வேறு நிறுவனங்களை இணைத்து பெரிய அளவில் லாபம் சம்பாதிக்கும் நோக்கில் செயல்பட்டதும் தெரியவந்தது.
இதை ஒட்டி பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள இதழியல் துறை அலுவலகத்தில் உள்ள பூட்டர் நிறுவன அலுவலகத்தில் நேற்று 3 மணி நேரம் சோதனை நடத்தினர். மேலும் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள கனரா வங்கியில் பதிவாளர் தங்கவேல் வங்கி கணக்குகளை ஆய்வு செய்தனர்.
குற்றப்பிரிவு உதவி கமிஷனர் சூர்யா தலைமையிலான 20-க்கும் மேற்பட்ட போலீசார் தங்கவேலுவின் மனைவி வெண்ணிலா முன்னிலையில் அவரது வங்கி கணக்கையும் ஆய்வு செய்தனர். அப்போது வங்கி லாக்கரில் 93 பவுன் நகைகள் மற்றும் பல கோடி ரூபாய் மதிப்பிலான ஆவணங்களும் இருந்ததாக கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறார்கள்.
மேலும் தலைமறைவாக உள்ள பதிவாளர் தங்கவேல், பேராசிரியர்கள் ராம் கணேஷ், சதீஷ்குமார் ஆகிய 3 பேரையும் பிடிக்க உதவி கமிஷனர் நிலவழகன் தலைமையிலான தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள். அவர்கள் சென்னையில் கோர்ட்டில் ஆஜராக உள்ளதாக தகவல் கிடைத்துள்ளதால் அவர்களை பிடிக்க சென்னையில் முகாமிட்டு தனிப்படை போலீசார் தேர்தல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் துணைவேந்தர் ஜெகநாதனின் ஜாமீனை ரத்து செய்யக்கோரி சென்னை ஐகோர்ட்டில் அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு விசாரணைக்கு வந்த நிலையில் அவரது ஜாமீனை ரத்து செய்ய வேண்டுமென கோரி அரசு தரப்பில் வாதாடப்பட்டு வருகிறது. ஆனாலும் இதுவரை ஐகோர்ட்டில் அது தொடர்பாக எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை. இதனால் அவரது ஜாமீனை ரத்து செய்யும் முயற்சியில் போலீசார் தீவிரமாக இறங்கி உள்ளனர்.
- ஒரு வாரம் சூரமங்கலம் உதவி கமிஷனர் அலுவலகத்தில் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனை ஜாமீனில் ஜெகநாதன் விடுவிக்கப்பட்டார்.
- துணைவேந்தருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த 7 பேரிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்தனர்.
சேலம்:
சேலம் கருப்பூரில் உள்ள பெரியார் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக இருப்பவர் ஜெகநாதன் (66), பதிவாளர் (பொறுப்பு) தங்கவேல் (60), கணினி துறை இணை பேராசிரியர் சதீஷ்குமார் (45), திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக பேராசிரியர் ராம்கணேஷ் (54) ஆகியோர் இணைந்து அரசு அனுமதியின்றி பூட்டர் அறக்கட்டளை என்ற பெயரில் கல்வி நிறுவனம், அப்டெக்கான் போரம் என்ற பெயரில் மற்றொரு அமைப்பையும் தொடங்கியதாக புகார் கூறப்பட்டது.
இதுகுறித்து விசாரணை நடத்திய கருப்பூர் போலீசார் 4 பேர் மீதும் 8 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். தொடர்ந்து ஜெகநாதனை கடந்த 26-ந் தேதி கைது செய்தனர்.
பின்னர் ஒரு வாரம் சூரமங்கலம் உதவி கமிஷனர் அலுவலகத்தில் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். மேலும் மற்ற 3 பேரும் தலைமறைவாக உள்ளனர்.
இதற்கிடையே பெரியார் பல்கலைக்கழக வளாகத்திற்குள் உள்ள துணைவேந்தர் அலுவலகம், அவரது வீடு, பயணியர் மாளிகை, பதிவாளர் அலுவலகம் உள்பட 7 இடங்களில் 22 மணி நேரம் சோதனை நடந்தது.
இதில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்பட்டது. மேலும் துணைவேந்தருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த 7 பேரிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்தனர்.
அதன்படி பெரியார் பல்கலைக்கழக பொருளாதாரத்துறை தலைவர் பேராசிரியர் ஜெயராமன், மேலாண்மை கல்வி நிறுவன பேராசிரியர் சுப்பிரமணிய பாரதி, விலங்கியல் துறை உதவி பேராசிரியர் நரேஷ் குமார், உளவியல் துறை உதவி பேராசிரியர் ஜெயக்குமார் மற்றும் விருந்தினர் மாளிகை ஊழியர் நந்தீஸ்வரன் ஆகிய 5 பேருக்கு சம்மன் அனுப்பினர். இதையடுத்து இவர்கள் 5 பேரும் இன்று கருப்பூர் போலீஸ் நிலையத்தில் ஆஜரானார்கள். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஆவணங்களை சரிபார்த்ததில் ஜெகநாதனின் நடவடிக்கைகளில் குற்ற நோக்கம் இருப்பதாக தெரியவில்லை.
- ஜெகநாதன் மனு மீதான விசாரணையை 4 வாரங்களுக்கு தள்ளி வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
சென்னை:
சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் மீதான வழக்கு விசாரணை இன்று சென்னை ஐகோர்ட்டில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஆவணங்களை சரிபார்த்ததில் ஜெகநாதனின் நடவடிக்கைகளில் குற்ற நோக்கம் இருப்பதாக தெரியவில்லை என்று கூறி, அவர் மீதான வழக்கு விசாரணைக்கு தடை விதித்தனர்.
அரசு தலைமை வழக்கறிஞர் ஆஜராக உள்ளதால், விசாரணையை தள்ளி வைக்க அரசு தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
கோரிக்கையை ஏற்று வழக்கை ரத்து செய்ய கோரிய ஜெகநாதன் மனு மீதான விசாரணையை 4 வாரங்களுக்கு தள்ளி வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
தடையை நீக்க வேண்டும் என்றால் தனி மனு தாக்கல் செய்ய காவல்துறைக்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர்.
- பல்கலைக்கழக ஆசிரியர் மற்றும் பணியாளர்கள் சங்கம், பதிவாளரை உடனடியாக பணியிடை நீக்கம் செய்யாக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
- உயர்கல்வித் துறை செயலாளரின் பரிந்துரையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பெரியார் பல்கலைக்கழக பதிவாளராக இருந்த தங்கவேல் வழக்கு தொடர்ந்து உள்ளார்
நிதி முறைகேடு புகார் தொடர்பாக சேலம் பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் தங்கவேல் மீது நடவடிக்கை எடுக்கலாம் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் பதிவாளராக இருந்த தங்கவேல் மீதான ஊழல் மற்றும் முறைகேடு குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால், அவரை உடனடியாக பணியிடை நீக்கம் செய்ய பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதனுக்கு தமிழ்நாடு அரசின் உயர் கல்வித்துறை பரிந்துரை செய்திருந்தது.
எனினும், பரிந்துரையை செயல்படுத்தாமல் துணைவேந்தர் ஜெகநாதன் காலம் தாழ்த்தி வந்த நிலையில், பல்கலைக்கழக ஆசிரியர் மற்றும் பணியாளர்கள் சங்கம், பதிவாளரை உடனடியாக பணியிடை நீக்கம் செய்யாக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் உயர்கல்வித் துறை செயலாளரின் பரிந்துரையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பெரியார் பல்கலைக்கழக பதிவாளராக இருந்த தங்கவேல் வழக்கு தொடர்ந்து உள்ளார்.
இந்த வழக்கு நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஐசக் மோகன்லால், பல்கலைக்கழகம் என்பது தனிச் சட்டத்தின் கீழ் ஏற்படுத்தப்பட்ட அமைப்பு , மனுதாரர் 34 வருட அனுபவம் கொண்டவர் என்றும் தெரிவித்தார். நாளை ஓய்வு பெற உள்ள நிலையில் இடைநீக்கம் செய்ய பரிந்துரைத்துள்ளது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
எனவே பணியிடை நீக்கம் தொடர்பான பரிந்துரைக்கு தடை விதிக்க வேண்டும் என்று வாதிட்டார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி உயர் கல்வித் துறை செயலாளரின் பரிந்துரை குறித்து பல்கலைக்கழக நிர்வாகம் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்று கேள்வி எழுப்பினார். அப்போது தற்போதைய பதிவாளர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சந்திரகுமார், இது குறித்து பல்கலைக்கழக சிண்டிகேட் குழு தான் முடிவெடுக்க வேண்டும் என இந்த பரிந்துரைகள் சிண்டிகேட் குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார்.
அப்போது நீதிபதி குறுக்கிட்டு முந்தைய பதிவாளர் தங்கவேலை பணியிட நீக்கம் செய்யும் பரிந்துரை மீது முடிவெடுக்காமல் ஏன் மீண்டும் அரசுக்கு விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பினீர்கள் என கேள்வி எழுப்பினார்.
பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், பல்கலைக்கழக துணைவேந்தர் மற்றும் பதிவாளராக இருந்த தங்கவேல் ஆகியோர் கூட்டாக இணைந்து முறைகேட்டில் ஈடுபட்டது தொடர்பாக குற்ற வழக்கு உள்ளதையும் சுட்டிக்காட்டினார்.
வழக்கை விசாரித்த நீதிபதி இளந்திரையன் இந்த வழக்கில் எந்த ஒரு இடைக்கால உத்தரவும் பிறப்பிக்க முடியாது என மறுத்து விட்டார். முன்னாள் பதிவாளர் தங்கவேலுக்கு எதிரான நடவடிக்கை எடுப்பதற்கு தடை இல்லை எனவும் அவருக்கு எதிராக நடைபெற்ற விசாரணை அறிக்கையினை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை மார்ச் 14-ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளார்.
- பல்கலைக்கழக பதிவாளரின் பதவிக்காலம் 3 ஆண்டுகள் தான்.
- பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் பதவி கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக காலியாக கிடக்கிறது.
சென்னை:
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் காலியாக இருக்கும் பதிவாளர் பணிக்கு மார்ச் ஒன்றாம் தேதி நேர்காணல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு, அதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் மீது ஏராளமான ஊழல் குற்றச்சாட்டுகள் நிலுவையில் இருக்கும் நிலையில், அவரது நீட்டிக்கப்பட்ட பதவிக்காலம் முடிவடைவதற்கு சில வாரங்கள் முன்பாக பதிவாளர் பணிக்கு நேர்காணல் நடத்துவது சட்ட விரோதமானது.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கும் 2027-ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசு அனுப்பிய சுற்றறிக்கையில், துணைவேந்தர்கள் அவர்களின் பதவிக்காலத்தின் கடைசி 3 மாதங்களில் எந்த நியமனங்களையும் மேற்கொள்ளக் கூடாது; எந்தக் கொள்கை முடிவையும் எடுக்கக் கூடாது என்று தெளிவாக அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், பெரியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஜெகநாதன் கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஓய்வு பெற்று விட்டார். புதிய துணைவேந்தரை நியமிக்க முடியாத சூழல் நிலவுவதால் அவரது பதவிக்காலம் வரும் மே 19-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அந்தப் பதவிக்காலம் முடிவடைவதற்கு 2 மாதங்கள் 18 நாட்களுக்கு முன்பாக பதிவாளர் பணிக்கு நேர்காணல் நடத்துவது அரசின் விதிகளை மீறியது ஆகும்.
பல்கலைக்கழக நிர்வாகத்தில் துணைவேந்தருக்கு அடுத்தபடியாக அதிக பொறுப்பும், முக்கியத்துவமும் நிறைந்த பதவி பதிவாளர் பதவி ஆகும். பல்கலைக்கழகங்களில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து விசாரிக்க ஆணையிடவும், அதனடிப்படையில் நடவடிக்கை எடுக்கவும் பதிவாளருக்குத் தான் அதிகாரங்கள் உள்ளன. தற்போதைய துணைவேந்தர் மீது இப்போது ஏராளமான குற்றச்சாட்டுகள் உள்ளன. அவற்றில் சில குற்றச்சாட்டுகள் குறித்து தமிழக காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் மீதமுள்ள புகார்கள் மீது தமது செல்வாக்கைப் பயன்படுத்தி எந்த நடவடிக்கையும் எடுக்காமல் துணைவேந்தர் தடுத்து வருகிறார்.
துணைவேந்தர் பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு பதிவாளர் பதவியில் நேர்மையான அதிகாரி நியமிக்கப்பட்டால், அவர் தம் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்த ஆணையிடக்கூடும் என்பதால், தமது பதவிக் காலத்திலேயே தமக்கு விசுவாசமான ஒருவரை பதிவாளராக நியமிக்க துணைவேந்தர் நினைப்பதாகவும், அதனால் தான் அவசர, அவசரமாக நேர்காணலை ஏற்பாடு செய்திருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. துணைவேந்தரின் கடந்த கால வரலாற்றை வைத்துப் பார்க்கும் போது அந்தக் குற்றச்சாட்டை புறக்கணிக்க முடியாது.
பல்கலைக்கழக பதிவாளரின் பதவிக்காலம் 3 ஆண்டுகள் தான். ஆனால், பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் பதவி கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக காலியாக கிடக்கிறது. தமது மூன்றரை ஆண்டு பதவிக்காலத்தில் பதிவாளர் பணியிடத்தை நிரப்ப எந்த நடவடிக்கையும் எடுக்காத துணைவேந்தர், ஓய்வு பெறப்போகும் போது பதிவாளரை நியமிக்க துடிப்பது ஏன்?
பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் மீதான பல முறைகேடு புகார்களுக்கு ஆதாரம் இருப்பதாக கூறிய தமிழக அரசு. அதன் அறிவுறுத்தலை மீறி பதிவாளரை நியமிக்க துணைவேந்தர் நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், அதைத் தடுக்காமல் வேடிக்கைப் பார்ப்பது ஏன்? பெரியார் பல்கலைக்கழகத்தில் முறைகேடுகள் தொடர்வதை தமிழக அரசு அனுமதிக்கக் கூடாது. எனவே, பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் பதவிக்கு வரும் மார்ச் 1-ஆம் தேதி நடைபெறவிருக்கும் நேர்முகத்தேர்வுக்கு தமிழக அரசு தடை விதிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.