என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மீனவர்கள் அஞ்சலி"

    • சுனாமி தாக்கி 20-வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது.
    • மீனவர்கள் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினார்கள்.

    தூத்துக்குடி:

    கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் 26-ந்தேதி ஏற்பட்ட சுனாமியால் பெரும் உயிர்ச் சேதமும், பொருட்சேதமும் ஏற்பட்டது. சுனாமி தாக்கிய 20-வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது.

    இதையொட்டி தூத்துக்குடி திரேஸ்புரம் கடற்கரையில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் அப்பகுதியை சேர்ந்த அண்ணா சங்குகுளி மீனவர் சங்கம் சார்பில் அதன் தலைவர் இசக்கிமுத்து தலைமையில் மீனவர்கள் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினார்கள்.

    அப்போது, இனிமேல் இப்படி ஒரு பேரழிவை இயற்கை தந்து விடக்கூடாது என்று வேண்டி கடல் தாய்க்கு மலர் தூவியும், பால் ஊற்றியும் அஞ்சலி செலுத்தினார்கள். இதில் திரளான மீனவர்கள் கலந்து கொண்டனர்.

    சுனாமியால் உயிரிழந்த மீனவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக தூத்துக்குடி திரேஸ்புரம் மீன்பிடி துறைமுகத்தில் மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் படகுகளை கரையில் நிறுத்தி வைத்துள்ளனர்.

    இதில், அண்ணா சங்கு குளி சங்க துணைத்தலைவர் மாரி லிங்கம், பொருளாளர் விமல்சன் ஆலோசகர் பாத்திமா பாபு, செயலாளர் முருகையா, பரதவர் முன்னேற்ற பேரவை தூத்துக்குடி மாவட்ட இளைஞர் அணி தலைவர் பாலன் உள்ளிட்ட அப்பகுதி மீனவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • மலர் தூவி மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.
    • மீனவர்கள் இன்று கடலுக்கு செல்லவில்லை.

    நாகப்பட்டினம்:

    தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோர பகுதிகளில் கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் 26-ந்தேதி சுனாமி பேரலை தாக்கியது.

    இதனால் கடலோர கிராமங்கள் முற்றிலும் பாதிக்கபட்டது. இதில் பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். இதனால் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 26-ந்தேதி சுனாமி நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது.

    இந்நிலையில் நாகை மாவட்டத்தில் சுனாமி நினைவு தினத்தை முன்னிட்டு வேளாங்கண்ணி கடற்கரையில் வேளாங்கண்ணி பேராலய அதிபர் இருதயராஜ் தலைமையில் மீனவர்கள், வணிகர்கள், பொதுமக்கள், பாதிரியார்கள், கன்னியாஸ்திரிர்கள் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்டோர் கருப்பு பட்டைய அணிந்து அமைதி பேரணியாக 3 கிலோமீட்டர் தூரம் நடந்து சென்றனர்.

    பின்னர் சுனாமியால் உயிர் இழந்தவர்களை அடக்கம் செய்த நினைவு ஸ்தூபியில் மலர் வளையம் வைத்து மலர் தூவி மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.

    மும்மதத்தினரும் உயிரிழந்ததின் நினைவாக அங்கு பகவத் கீதை, குரான், விவிலியம் உள்ளிட்டவைகளில் இருந்து வாசகங்களை அந்தந்த மதத்தினர் வாசித்து ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்தனர்.

    உயிரிழந்தவர்களின் உறவினர்கள் அவர்களுக்கு பிடித்த காரம், இனிப்பு, குளிர்பானங்கள் உள்ளிட்ட உணவு வகைகளை வைத்து மாலை அணிவித்து மலர் தூவி அங்கு கண்ணீர் அஞ்சலி செய்து வருகின்றனர்.

    நாகை மாவட்டத்தில் உள்ள 25 மீனவர் கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் இன்று கடலுக்குச் செல்லாமல் அந்தந்த மீனவர் கிராமங்களில் உள்ள நினைவு ஸ்தூபியில் பேரணியாக சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மேலும் அப்பகுதியில் உள்ள அனைத்து கடைகளுக்கும் அடைக்கப்பட்டுள்ளது.

    ×