என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "gk vasan"

    • விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு ஏற்ப நிவாரணம் வழங்க முன்வர வேண்டும்.
    • அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளது.

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழக அரசு, கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு ஏற்ப நிவாரணம் வழங்க முன்வர வேண்டும். கடந்த 2 தினங்களாக மாநிலத்தில் டெல்டா உள்ளிட்ட பல மாவட்டப் பகுதிகளில் பெய்த கனமழையால் விவசாய நிலங்களில் பயிரிடப்பட்ட நெல் உட்பட பலவகையான பயிர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.

    குறிப்பாக ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டு, அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளது. இதனால் விவசாயிகள் பெருத்த நஷ்டத்துக்கு உட்படுகிறார்கள். எனவே தமிழக அரசு, மழையால் பாதிக்கப்பட்டுள்ள விவசாய விளைப்பொருகளுக்கு நிவாரணமாக ஏக்கர் ஒன்றுக்கு குறைந்த பட்சம் ரூ. 20,000 கொடுக்க முன்வர வேண்டும். மேலும் தொடர்ந்து மழை பெய்யும் என்ற செய்தியால் முன்னெச்சரிக்கை, முன்னேற்பாடு நடவடிக்கைகளில் தமிழக அரசு ஆக்கப்பூர்வமாக செயல்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • மதுவில்லா தமிழகம் என்று ஒரு கோடி கையெழுத்து வாங்கி ஆளுநரிடம் கொடுத்து இருக்கின்றோம்.
    • மது ஒழிப்பை பொறுத்த வரையில் தமிழகத்தில் பெரும்பாலான கட்சிகள் உறுதியாக இருக்கிறார்கள்.

    தூத்துக்குடி:

    நெல்லையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வந்தார்.

    தொடர்ந்து அவர் விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் சேர்க்கை 1-ந்தேதி தொடங்கி தமிழக முழுவதும் நடந்து கொண்டிருக்கிறது. இந்த பணி வருகிற 15-ந்தேதி முடிவடையும். திருமாவளவன் ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்று கூறுகிறார்.

    1999-ம் ஆண்டு முதலே தமிழ் மாநில காங்கிரஸ் நிறுவனத் தலைவர் மூப்பனார் தலைமையில் ஒரு அணி பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் அமைந்த போது இந்த கருத்து வலுவாக அப்போது கூறப்பட்டது.

    தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளிலும் உள்ள தொண்டர்கள் ஆட்சியிலும், அதிகாரத்திலும் உரிமை உள்ளது என்று கூறுவதே தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் எண்ணம்.

    அதே நேரத்தில் ஒரு இலக்கு இருக்க வேண்டும். என்னவென்றால் கூட்டணியோடு தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற இலக்கோடு பணியாற்ற வேண்டும். இலக்கை நாம் சரியாக முறையாக பயன்படுத்திக் கொண்டால் நிச்சயமாக வருங்காலத்தில் தொண்டர்கள், தலைவர்கள் நினைப்பது போல எண்ணிக்கைக்கு ஏற்றவாறு ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு பெறுவதற்கான வாய்ப்பு நிறைய இருக்கிறது.

    முழு பூசணிக்காயை எந்த கட்சி வேண்டுமானாலும் சோற்றில் மறைக்க பார்க்கலாம். ஆனால் உண்மை நிலை இதுவாக தான் இருக்க முடியும். ஆட்சியில், அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்று நினைப்பது இந்த கால அரசியலில் எந்த கட்சி தொண்டர்கள் நினைத்தாலும் அது தவறு கிடையாது.

    மது ஒழிப்பை பொறுத்த வரையில் தமிழகத்தில் பெரும்பாலான கட்சிகள் உறுதியாக இருக்கிறார்கள். தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் காலத்தில் இருந்து மதுவில்லா தமிழகம் என்ற கொள்கையை உறுதிப்பட எல்லா கூட்டங்களிலும் பேசிக்கொண்டு இருக்கின்றோம். படிப்படியாக தமிழகத்தில் மது ஒழிப்பு தேவை என்பதை வலியுறுத்திக் கொண்டு இருக்கின்றோம்.

    மதுவில்லா தமிழகம் என்று ஒரு கோடி கையெழுத்து வாங்கி ஆளுநரிடம் கொடுத்து இருக்கின்றோம் என்றால் அது தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி மட்டும் தான். எனவே பல வழிகளில் போராட்டம், ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் போன்றவை நடத்தி இருக்கின்றோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது தூத்துக்குடி மத்திய மாவட்ட தலைவர் எஸ்.டி.ஆர். விஜய சீலன், தெற்கு மாவட்ட தலைவர் சுந்தரலிங்கம், மாநகர தலைவர் ரவிக் குமார் உட்பட நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

    • மகளிர் பிரிவில் அசர்பைஜான் அணியை 3.5 க்கு 0.5 என்ற கணக்கில் இந்தியா வெற்றியை பெற்றது.
    • வரலாற்று சாதனைப் படைத்த தமிழக செஸ் விளையாட்டு வீரர்களுக்கு தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன.

    சென்னை:

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த குகேஷ், பிரக்ஞானந்தா மற்றும் அர்ஜுன் ஆகியோர் வெற்றி பெற்றனர். அதேபோன்று மற்றொரு இந்திய வீரரான விதித் போட்டியில் டிரா செய்தார். இதன் மூலம் 11-வது பிரிவில் 3.5-05 என்ற கணக்கில் இந்திய அணி வெற்றி பெற்று தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றது.

    இதே போன்று, மகளிர் பிரிவில் அசர்பைஜான் அணியை 3.5 க்கு 0.5 என்ற கணக்கில் இந்தியா வெற்றியை பெற்றது. இதன் மூலம் மகளிர் பிரிவில் 19/ 22 போட்டி புள்ளிகளை கைப்பற்றி இந்திய மகளிர் அணியும் தங்க பதக்கத்தை வென்றது. இதே போன்று இந்திய வீரர்கள் முகேஷ், அர்ஜுன் திவ்யா மற்றும் வந்திகா ஆகியோர் தனி நபர் பிரிவில் தங்கத்தை கைப்பற்றினர். வரலாற்று சாதனைப் படைத்த தமிழக செஸ் விளையாட்டு வீரர்களுக்கு தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • வீடு, நிலம் வாங்குவோர்களுக்கு சுமை அதிகமாகும்.
    • மக்களின் மீது பொருளாதார சுமையை ஏற்கனவே உயர்த்தியதை கவனத்தில் கொண்டு முத்திரைத்தாள் கட்டண உயர்வை உடனடியாக திரும்ப பெற வேண்டும்.

    சென்னை:

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழகத்தில் தி.மு.க ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு வழிகளில் மக்கள் மீது பொருளாதார சுமையை ஏற்றி வருவது ஏற்புடையதல்ல. ஏற்கனவே தமிழக அரசு நிலத்தின் வழிகாட்டி மதிப்பை மாற்றியமைத்த நிலையில், தற்போது முத்திரைத்தாள் கட்டணத்தையும் பத்து மடங்கு உயர்த்தியுள்ளது. இதனால் வீடு, நிலம் வாங்குவோர்களுக்கு சுமை அதிகமாகும்.

    தமிழக அரசு பதிவுத் துறையின் மூலம் மக்களுக்கு அளிக்கப்படும் சேவைகளுக்கான கட்டணங்களை உயர்த்தியதால் தற்போதைய பொருளாதார சிரமத்தில் இருக்கும் மக்களுக்கு கூடுதல் பொருளாதார சுமை ஏற்படும். முத்திரைத்தாள் கட்ட ணம் மூலமாக அரசாங்கம் வருவாயைப் பெருக்க நினைப்பதை விட மக்களின் மீது பொருளாதார சுமையை ஏற்கனவே உயர்த்தியதை கவனத்தில் கொண்டு முத்திரைத்தாள் கட்டண உயர்வை உடனடியாக திரும்ப பெற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • கடந்த காலத்தில் மழை, கனமழை, அதி கனமழை, புயல், வெள்ளம் ஆகியவற்றால் மக்கள் அனுபவித்த சிரமங்கள், துன்பங்கள் ஏராளம்.
    • பொதுமக்களும் பாதுகாப்பின் அவசியத்தை உணர்ந்து செயல்பட வேண்டும்.

    சென்னை:

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    கடலோரப் பகுதியை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மைய அறிவிப்பு தெரிவிக்கிறது. இதனால் பல்வேறு மாவட்டப் பகுதிகளில் இரண்டு நாட்களுக்கு மழையோ கனமழையோ பெய்ய வாய்ப்புண்டு.

    கடந்த காலத்தில் மழை, கனமழை, அதி கனமழை, புயல், வெள்ளம் ஆகியவற்றால் மக்கள் அனுபவித்த சிரமங்கள், துன்பங்கள் ஏராளம்.

    குறிப்பாக விவசாய நிலங்கள் மழையால், புயல், வெள்ள நீரால் சேதமடைந்து, பயிர்கள் பாழாகி, விவசாயிகள் பெரும் நஷ்டம் அடைந்தார்கள். மேலும் மக்களும் மழைக்கால நோயினால் பாதிக்கப்பட்டார்கள்.

    இப்படி மழைக்காலங்களில் ஏற்படும் பாதிப்புகளை கவனத்தில் கொண்டு முன்னெச்சரிக்கையாக செயல்பட்டால் பெரும் பாதிப்பில் இருந்து பாதுகாத்துக்கொள்ள முடியும். பொதுமக்களும் பாதுகாப்பின் அவசியத்தை உணர்ந்து செயல்பட வேண்டும்.

    தமிழக அரசு, மழைக்காலத்தில் சென்னை உள்ளிட்ட தென் மாவட்டப் பகுதிகள் என மாநிலத்தில் எங்கு மழை பெய்தாலும் மக்களை, விவசாயத்தை, கால்நடைகளை பாதுகாக்க தொடர் கண்காணிப்பு நடவடிக்கைகளில் கவனம் செலுத்தி, மக்களுக்கு துணை நிற்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உப்பளத் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.
    • மழை, கன மழை, அதி கனமழை, புயல் ஆகியவற்றிற்கு ஏற்ப விவசாயப் பயிர்கள் பாதிக்கப்படலாம்.

    சென்னை:

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    கடந்த 3 நாட்களாக மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் உட்பட மாநிலத்தில் பல்வேறு மாவட்டப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. சில மாவட்டப் பகுதிகளில் அதி கனமழையும் பெய்து வருகிறது. பெய்த கனமழையால் விளை நிலங்களில் தண்ணீர் குளம் போல் தேங்கியுள்ளது.

    தஞ்சாவூர் மாவட்டத்தில் 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலும், புதுக்கோட்டை மாவட்டத்தில் 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலும் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் முழுவதும் மழைநீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன. அந்த வகையில் டெல்டா மாவட்டங்களில் சுமார் 55 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கியுள்ளன. குறிப்பாக தமிழகம் முழுவதும் 13 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன.

    தஞ்சையில் 947 ஹெக்டேர் அளவில் பயிர் சேதம், கடலூரில் 500 ஹெக்டேர் அளவில் பயிர் சேதம், மயிலாடுதுறையில் 3300 ஹெக்டேர் அளவில் பயிர் சேதம், நாகையில் 7600 ஹெக்டேர் அளவில் பயிர் சேதம், ராமநாதபுரத்தில் 800 ஹெக்டேர் அளவில் பயிர்சேதம், திருவாரூரில் 958 ஹெக்டேர் அளவில் பயிர்சேதம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கெல்லாம் காரணம் போதிய வடிகால் வசதி இல்லாததும், முறையாக தூர் வாராததும் தான். இந்நிலையில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் ஒரு ஏக்கருக்கு குறைந்த பட்சம் 30 ஆயிரம் ரூபாய் நிவாரணமாக வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

    கனமழையால் நாகை மாவட்டப் பகுதிகளில் 9 ஆயிரம் உப்பளங்கள் நீரில் மூழ்கி, உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டு, சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உப்பளத் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். மேலும் இன்று (29-ந்தேதி) முதல் டிசம்பர் 1-ந்தேதி வரை கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதில் சில மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும், சில மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும், சில மாவட்டங்களுக்கு சிகப்பு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் மழை, கன மழை, அதி கனமழை, புயல் ஆகியவற்றிற்கு ஏற்ப விவசாயப் பயிர்கள் பாதிக்கப்படலாம்.

    எனவே தமிழக அரசு விவசாயிகளின் கோரிக்கைக்கு ஏற்ப மழை வெள்ள புயல் பாதிப்பில் இருந்து பயிர்களை பாதுகாக்கவும், சேதமடைந்துள்ள பயிர்களுக்கும், உப்பளங்களுக்கும் முழு நிவாரணம் வழங்கவும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • விவசாயிகளுக்கு முதலீட்டை கணக்கிட்டால் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள நிவாரணம் சரியல்ல.
    • வருங்கால விவசாயம், தொழில் ஆகியவற்றை கவனத்தில் கொண்டு நிவாரணத்தை உயர்த்தி முறையாக, முழுமையாக காலத்தே வழங்க வேண்டும்.

    சென்னை:

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    அதி கனமழையால் கடுமையாக பாதிக்கப்பட்ட மாவட்ட மக்களுக்கு ரூ. 2,000, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.5,00,000, சேதம் அடைந்த மானாவாரி பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.8,500, சேதம் அடைந்த குடிசைகளுக்கு ரூ. 10,000, 33 சதவீதம் அல்லது அதற்கு மேல் சேதமடைந்த நெற்பயிர் உள்ளிட்ட இறவை பாசனப் பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ. 17,000, சேதம் அடைந்த குடிசைகளுக்கு ரூ. 10,000, எருது, பசு உள்ளிட்ட கால்நடைகளின் உயிரிழப்புக்கு ரூ. 37,500 என நிவாரணத் தொகையை அறிவித்திருப்பது போதுமானதல்ல. காரணம் கடன் வாங்கி விவசாயம் செய்த, கால்நடைகளை வளர்த்த விவசாயிகளுக்கு முதலீட்டை கணக்கிட்டால் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள நிவாரணம் சரியல்ல.

    எனவே தமிழக அரசு மழை வெள்ள புயல் பாதிப்பால் மிகவும் சிரமத்தில் இருக்கும் விவசாயிகள், கால்நடை வளர்ப்பவர்கள் என பாதிப்புக்குள்ளான அனைத்து தரப்பு மக்களின் வருங்கால விவசாயம், தொழில் ஆகியவற்றை கவனத்தில் கொண்டு நிவாரணத்தை உயர்த்தி முறையாக, முழுமையாக காலத்தே வழங்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • தீவிர ஆய்வுக்கு பிறகு இரண்டையும் இணைக்கும் பணி வெற்றி பெற்றது.
    • ரஷியா, அமெரிக்கா, சீனாவை தொடர்ந்து இதனை மேற்கொள்ளும் 4-வது நாடு என்கிற பெருமையை இந்தியா பெற்றுள்ளது.

    சென்னை:

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பி.எஸ்.எல்.வி. சி-60 ராக்கெட் ஸ்பேடெக்ஸ்-பி, ஸ்பேடெக்ஸ்-ஏ ஆகிய 2 செயற்கைக் கோள்களை சுமந்தபடி விண்ணில் பாய்ந்தது. ராக்கெட்டின் இரு பாகங்கள் வெவ்வேறு சுற்றுப்பாதைகளில் திட்டமிட்ட இலக்கில் நிலை நிலைநிறுத்தப்பட்டிருந்தன. இந்நிலையில் ஸ்பேடெக்ஸ் ஏ, ஸ்பேடெக்ஸ் பி செயற்கைகோள்களை ஒருங்கிணைக்கும் பணியை இஸ்ரோ மேற்கொண்டது. தீவிர ஆய்வுக்கு பிறகு இரண்டையும் இணைக்கும் பணி வெற்றி பெற்றது.

    ரஷியா, அமெரிக்கா, சீனாவை தொடர்ந்து இதனை மேற்கொள்ளும் 4-வது நாடு என்கிற பெருமையை இந்தியா பெற்றுள்ளது.

    ஸ்பேடெக்ஸ் திட்ட வெற்றியால் உலக அளவில் இந்திய விஞ்ஞானிகளுக்கும், இந்திய நாட்டிற்கும் புகழ் சேர்கிறது. விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியாவிற்கு இது ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்திருக்கிறது.

    ஸ்பேடெக்ஸ் திட்டத்தை வெற்றி பெறச் செய்ய பாடுபட்ட இஸ்ரோ விஞ்ஞானிகளை த.மா.கா. சார்பில் பாராட்டி, வாழ்த்துகிறேன். தமிழ்நாட்டின் நாராயணன் இஸ்ரோ தலைவராக பொறுப்பேற்ற பிறகு இது முதல் வெற்றி என்பது தமிழர்களுக்கும் தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்திருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • நந்தன் கால்வாயினால் திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் மாவட்ட 36 ஏரிகளும், 6654.38 ஏக்கர் விவசாய நிலங்களும் பாசன வசதி பெறும்.
    • நீர்வளத்துறை பட்டியலில் இல்லாத 100-க்கும் மேற்பட்ட ஏரிகளும், 10,000 ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலங்களும் பாசன வசதி பெறும்.

    சென்னை:

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தென்பெண்னை பாலாறு செய்யாறு வழியே இணைக்கும் திட்டத்தினாலும், சாத்தனூர் அணையிலிருந்து நந்தன் கால்வாயில் இணைக்கும் திட்டத்தினாலும் விவசாயிகளும், பொதுமக்களும் பெரும் பயன் பெறுவார்கள். இத்திட்டத்தினால் சாத்தனூர் அணையிலிருந்து இதுவரையில் பயன் பெறாத திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் ஒன்றியத்தில் 22 ஏரிகளும், 6,800 ஏக்கர் விவசாய நிலங்களும் பாசன வசதி பெறும்.

    நந்தன் கால்வாயினால் திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் மாவட்ட 36 ஏரிகளும், 6654.38 ஏக்கர் விவசாய நிலங்களும் பாசன வசதி பெறும். மேலும் நீர்வளத்துறை பட்டியலில் இல்லாத 100-க்கும் மேற்பட்ட ஏரிகளும், 10,000 ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலங்களும் பாசன வசதி பெறும். இப்படி இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால் திருவண்ணாமலை, விழுப்புரம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் சென்னை ஆகிய பகுதிகளில் உள்ள மக்களுக்கு குடிநீர் கிடைக்கும், விவசாய பெருமக்களின் விளைநிலங்களுக்கும் தண்ணீர் கிடைக்கும்.

    எனவே தமிழக அரசானது நீர்வளத்துறையால் அறிவித்தபடி இத்திட்டத்தினை துவக்கி நந்தன் கால்வாய் பாதுகாப்பு இயக்கம் விடுத்துள்ள கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • மீனவக்குடும்பங்கள் மிகுந்த கவலை அடைந்துள்ளனர்.
    • 5 விசைப்படகுகளை ஒப்படைக்க வலியுறுத்த வேண்டும்.

    சென்னை:

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தைச் சேர்ந்த மீனவர்கள், மீன்பிடி துறைமுகத்தில் இருந்து சென்று வழக்கம்போல் நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 32 பேரையும் கைது செய்துள்ளனர்.

    மேலும் அவர்கள் பயன்படுத்திய 5 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர். இதனால் ராமேஸ்வரம் பகுதி மீனவக்குடும்பங்கள் மிகுந்த கவலை அடைந்துள்ளனர். காரணம் வருமானம் ஈட்ட முடியாமல், வாழ்வாதாரத்தை இழக்கக்கூடிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

    எனவே மத்திய அரசு, இலங்கை அரசுடன் தொடர்பு கொண்டு கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 32 பேரை விடுவிக்கவும், அவர்களின் 5 விசைப்படகுகளை ஒப்படைக்கவும் வலியுறுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ×