என் மலர்
நீங்கள் தேடியது "slug 96201"
- நம்மவரின் லாஸ் ஏஞ்சல் பயணத்தை பற்றி இவர் கலிபோர்னியாவிலிருந்து பேசுகிறார்.
- கலிபோர்னியா எங்கே இருக்கிறது. நாமக்கல்லுக்கும் கரூருக்கும் இடையிலா இருக்கிறது.
சென்னை:
மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநில செயலாளர் முரளி அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழக பாரதிய ஜனதா கட்சித் தலைவர் அண்ணாமலை அமெரிக்காவில் பேசிய காணொலி ஒன்றை காண நேர்ந்தது.
நம்மவர் தன் தொழில் சார்ந்த சில விஷயங்களை படிக்க லாஸ் ஏஞ்சல் வந்திருந்ததை, ஓய்வெடுக்க வந்ததாக புறம் கூறியும், வந்த இடத்தில் கட்சிக்காரர்களை சந்தித்ததை கேலி செய்தும் பேசியுள்ளார்.
நம்மவரின் லாஸ் ஏஞ்சல் பயணத்தை பற்றி இவர் கலிபோர்னியாவிலிருந்து பேசுகிறார். கலிபோர்னியா எங்கே இருக்கிறது. நாமக்கல்லுக்கும் கரூருக்கும் இடையிலா இருக்கிறது. அதே அமெரிக்காவில் போய் அரசியல் பேசும் இவர் நம்மவரை கேலி செய்கிறார்.
ஒரு நேர்மையான அரசியலை கொண்டு வர முயலும் நம்மவரை குற்றம் சொல்லும் தகுதி தனக்கில்லை என்பதை உணர்ந்து இனியாவது முன்னாள் காவலதிகாரி என்ற கவுரவத்திற்கு பங்கம் வராமல் பேசும்படி கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
- சிறு மழைக்கே பெரும்பாலான மாவட்டங்கள் தத்தளிக்கின்றன.
- ‘ஸ்மார்ட் சிட்டி’ என்ற பெயரில் பல்லாயிரம் கோடி செலவழித்தும், பாதிப்பைத் தடுக்க முடியவில்லை.
சென்னை:
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
அக்டோபர் இறுதியில் தொடங்கும் வடகிழக்குப் பருவமழை, வழக்கத்தைக் காட்டிலும் அதிகம் இருக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
2015-ல் ஏற்பட்ட மழை வெள்ளப் பேரிடருக்குப் பிறகு, வடகிழக்கு பருவமழை மக்களின் மனதில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. வெள்ளத்தில் சிக்கித் தவித்த நாட்களும், உணவுக்கும், தண்ணீருக்கும்கூட பரிதவித்த சூழலும் இன்னும் நெஞ்சத்தில் இருந்து அகலவில்லை.
தற்போது ஒரு மணி நேர மழைக்கே சென்னை நிலை குலைந்துபோகிறது. பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது.
சிறு மழைக்கே பெரும்பாலான மாவட்டங்கள் தத்தளிக்கின்றன. 'ஸ்மார்ட் சிட்டி' என்ற பெயரில் பல்லாயிரம் கோடி செலவழித்தும், பாதிப்பைத் தடுக்க முடியவில்லை. தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மழைநீர் வடிகால்கள் சேதமடைந்தும், தூர்ந்தும் போயுள்ளன.
அடையாறு, கூவம் உள்ளிட்ட ஆறு, நதிகள் மற்றும் கழிவுநீர்க் கால்வாய்களில் தேங்கியுள்ள குப்பை, பிளாஸ்டிக் கழிவுகள் நீரோட்டத்தைத் தடுக்கின்றன.
பெரும்பாலான நீர்நிலைகள் நிரம்பியுள்ள சூழலில், வடகிழக்குப் பருவமழை வலுத்துப் பெய்யும்போது நேரிடும் பேரிடர்களை தமிழக அரசு எப்படி சமாளிக்கப் போகிறது? சென்னையில் வெள்ள நிவாரணத் திட்டங்கள் மற்றும் நீண்டகால நீர் மேலாண்மைத் திட்டங்கள் வகுப்பதற்காக நியமிக்கப்பட்ட, ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி திருப்புகழ் தலைமையிலான குழு, தங்களது இடைக்கால அறிக்கையை தமிழக முதல்-அமைச்சரிடம் சமர்ப்பித்துள்ளது. அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்பது தெளிவில்லை.
வெள்ளம் சூழ்ந்த பிறகு உணவும், நிவாரணப் பொருட்களும் தருவது தீர்வாகாது. மாநிலம் முழுவதும் உள்ள மழைநீர் வடிகால்களைப் போர்க்கால அடிப்படையில் சீரமைத்து, மழை வெள்ளம் தங்கு தடையின்றிப் பயணிக்க நடவடிக்கை எடுப்பதே நிரந்தரத் தீர்வாகும். கடந்தகால அவதிகளையும், துயரங்களையும் மக்கள் மீண்டும் அனுபவிக்காத வகையில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- நடிகர் கமல் ராஜராஜசோழன் காலத்தில் இந்து மதம் என்ற பெயர் கிடையாது என்று கூறியுள்ளார்.
- இதற்கு நடிகை கஸ்தூரி கேள்வி எழுப்பி சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.
சென்னையில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனின் 60வது பிறந்த நாளையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இயக்குனர் வெற்றிமாறன் "கலையை இன்று நாம் சரியாக கையாள வேண்டும். இதனை கையாள தவறினால் வெகு சீக்கிரம் நிறைய அடையாளங்கள் பறிக்கப்படும். தொடர்ந்து நம்மிடம் இருந்து அடையாளங்கள் பறித்துக் கொண்டு இருக்கிறார்கள்.
வள்ளுவருக்கு காவி உடை கொடுப்பது, ராஜராஜ சோழனை இந்து அரசனாக்குவது இப்படி தொடர்ந்து நடந்துகொண்டு இருக்கிறது. இது சினிமாவிலும் நடக்கும்" என்று பேசினார். இவரின் கருத்துக்கு எதிர்ப்புகளும் ஆதரவுகளும் கிளம்பியுள்ளது.

கமல்ஹாசன்
இது தொடர்பாக கமல் கூறியதாவது, ""ராஜராஜசோழன் காலத்தில் இந்து மதம் என்ற பெயர் கிடையாது. சைவம், வைணவம், சமணம் போன்ற சமயங்கள் இருந்தன. இந்து என்பது ஆங்கிலேயர்கள் வைத்த பெயர்" என்று கூறினார். இந்த கருத்துக்கு நடிகை கஸ்தூரி கேள்வி எழுப்பி தனது சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.

கஸ்தூரி
அதில், "கமல் ஒரு என்சைக்ளோபீடியா. அவர் தன் அறத்தையும், அறிவாற்றலையும் அரசியல் கதைக்காக சமரசம் செய்து கொள்வது வருத்தம். ஆதிமனிதன் தன்னை ஒருபோதும் மனிதன் என்று கூறி கொண்ட வரலாறு எதுவும் இல்லை. அந்த காலத்தில் ஹோமோ சேபியன்ஸ் என்ற பெயரே இல்லை. அதனால் அவன் மனிதனே இல்லை என்பது என்ன வாதம்?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
கமல் ஒரு encyclopedia . அவர் தன் அறத்தையும் அறிவாற்றலையும் அரசியல் narrative காக சமரசம் செய்து கொள்வது வருத்தம் .
— Kasturi Shankar (@KasthuriShankar) October 6, 2022
ஆதி மனிதன் தன்னை ஒரு போதும் மனிதன் என்று கூறி கொண்ட வரலாறு எதுவும் இல்லை.அந்த காலத்தில் homo sapiens என்ற பேரே இல்லை.
so அவன் மனிதனே இல்லை என்பது என்ன வாதம்?
- மணிரத்னம் இயக்கத்தில் வெளியான படம் பொன்னியின் செல்வன்.
- பொன்னியின் செல்வன் படத்தை பாராட்டிய ரஜினி, கமலுக்கு நடிகர் கார்த்தி நன்றி தெரிவித்துள்ளார்.
கல்கி எழுதிய நாவலை தழுவி இயக்குனர் மணிரத்னம் இயக்கியுள்ள 'பொன்னியின் செல்வன்-1' திரைப்படம், உலகம் முழுவதும் கடந்த செப்டம்பர் 30-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாராகியிருந்த இந்த படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்ட பல முன்னணி திரைப்பிரபலங்கள் நடித்துள்ளனர்.
இப்படம் வெளியான முதல் நாளில் இருந்தே மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. தமிழகம் மட்டுமல்லாது ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு நல்ல வசூல் கிடைத்துள்ளது.

பொன்னியின் செல்வன்
இதையடுத்து நடிகர் கமல்ஹாசன் சென்னையில் நேற்று பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் சிறப்பு காட்சியை நடிகர் கார்த்தி, நடிகர் விக்ரம் ஆகியோருடன் இணைந்து பார்த்துள்ளார். மேலும் நடிகர் ரஜினிகாந்த் 'பொன்னியின் செல்வன்' படத்தை பார்த்து விட்டு கார்த்திக்கு செல்போனில் அழைத்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

விக்ரம் - கமல்ஹாசன் - கார்த்தி
இது குறித்து கார்த்தி தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "சினிமாவில் பெரிய இலக்குகளை நிர்ணயிக்க எங்களை எப்போதும் ஊக்குவித்து வருகிறீர்கள் கமல் சார். அன்பையும் மரியாதையையும் எப்படி பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதையும் கற்றுக் கொடுத்திருக்கிறீர்கள்" என்று நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.

ரஜினி
மேலும், "ரஜினி சார் உங்கள் அழைப்பு எனக்கு ரொம்ப ஸ்பெஷல். பிறர் உழைப்பை அங்கீகரித்து அவர்களை மனதார பாராட்டும் உங்கள் அன்பு என்னை நெகிழச் செய்கிறது" என்று கூறியுள்ளார்.
Thank you @ikamalhaasan sir, @rajinikanth sir 🙏 pic.twitter.com/moHVnXdQQn
— His Highness Vanthiyathevan (@Karthi_Offl) October 6, 2022
- போர்க்கள காட்சிகளை படம் பிடிப்பது என்பது சாதாரணமான விஷயம் அல்ல. அதில் இருக்கும் கஷ்டம் என்ன என்பது எனக்கு தெரியும்.
- மக்கள் இது நம் படம் என்கிற மனநிலையில் படத்திற்கு ஆதரவு கொடுத்து வருகிறார்கள்.
சென்னை:
கல்கி எழுதி, மணிரத்னம் இயக்கிய 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் வெளியாகி வசூல் ரீதியாக பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது.
இந்த நேரத்தில் படம் குறித்து பல்வேறு கருத்துக்கள் பொது வெளியில் பேசப்பட்டு வருகின்றன.
முதலில் இயக்குனர் வெற்றி மாறன் ஒரு நிகழ்ச்சியில் கலந்து பேசியபோது, தமிழ் மன்னரான ராஜராஜ சோழனை இந்து மன்னர் என்று மாற்றி விட்டார்கள் என்று பேசவே சர்ச்சை வர ஆரம்பித்தது. இது பற்றிய எதிர் கருத்துக்களும், ஆதரவு கருத்துக்களும் இணையத்தில் தொடர்ந்து பகிரப்பட்டு வந்தன.
இந்த நிலையில் நடிகர் கமல்ஹாசன் 'பொன்னியின் செல்வன்' படத்தை நேற்று சென்னையில் பார்த்து ரசித்தார். அவருடன் நடிகர்கள் விக்ரம், கார்த்தி ஆகியோரும் பார்த்தனர். படம் பார்த்து விட்டு நடிகர் கமல்ஹாசன் செய்தியாளர்களிடம் பேசியதாவது:-
தமிழ் சினிமாவின் பொற்காலம் தொடங்கி விட்டது என நினைக்க தோன்றுகிறது. தமிழ் சினிமா கலைஞனாக இது எனக்கு பெருமிதம்கொள்ளும் நேரம். இந்த புத்துணர்ச்சி நீடிக்க வேண்டும். விக்ரம் பட சாதனையை இந்தப் படம் முறியடித்துள்ளது என்பது சந்தோஷம் தான். அதைக் கொண்டாட தான் நான் இங்கு வந்துள்ளேன்.
ஆரோக்கியமான போட்டி இருப்பதில் தவறில்லை. பிற மொழிகளிலும் இந்தப்படம் கொண்டாடப்பட வேண்டும். சங்கரா பரணம், மரோ சரித்திரா போன்ற தெலுங்கு படங்கள் இங்கு ஓடி வெற்றி அடைந்துள்ளன. இதனால் இதுபோன்ற படங்களை ஒரு சிறிய வட்டத்திற்குள் அடைத்து விடக்கூடாது.
போர்க்கள காட்சிகளை படம் பிடிப்பது என்பது சாதாரணமான விஷயம் அல்ல. அதில் இருக்கும் கஷ்டம் என்ன என்பது எனக்கு தெரியும். மக்கள் இது நம் படம் என்கிற மனநிலையில் படத்திற்கு ஆதரவு கொடுத்து வருகிறார்கள்.
இந்து மதம் என்கிற பெயர் ராஜராஜ சோழன் காலத்தில் கிடையாது. சைவம், வைணவம், சமணம் என்றே இருந்தது. அப்போது மதங்கள் வெவ்வேறு இருந்தது. பிரிட்டிஷ்காரர்கள் வந்த பிறகுதான் தூத்துக்குடியை டூட்டுகுரின் என்று சொல்வது போல நம்மை இந்து என்று அழைத்தார்கள்.
இவ்வாறு நடிகர் கமல்ஹாசன் பேசினார்.
ராஜராஜ சோழன் காலத்தில் இந்து மதம் இல்லை என்றும், ராஜராஜ சோழன் இந்து அல்ல என்றும் பொருள்பட அவர் பேசி இருப்பது சர்ச்சை ஆகி உள்ளது.
- இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகும் படம் இந்தியன் -2.
- இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்திருந்த இந்தியன் திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து 25 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது.

கமல்ஹாசன் - ஷங்கர்
இந்த படத்தில் கமலுடன் இணைந்து சமுத்திரக்கனி, பாபி சிம்கா, காஜல் அகர்வால், சித்தார்த், ராகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

கமல்ஹாசன்
'இந்தியன் 2' படத்தின் படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன்பு தொடங்கியதாக புகைப்படங்களையும் வீடியோ ஒன்றையும் கமல் வெளியிட்டார். இந்நிலையில் இந்தியன்-2 படப்பிடிப்பு தளத்தில் கமல்ஹாசன் துணை நடிகையின் குழந்தையை கையில் ஏந்தி கொஞ்சியுள்ளார். இது தொடர்பான வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளத்தில் ட்ரெண்டாகி வருகிறது.
- இயக்குனர் பாரதிராஜா சமீபத்தில் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.
- பாரதிராஜா மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியதை நடிகர் கமல்ஹாசனுடன் தொலைபேசியில் பகிர்ந்துள்ளார்.
தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனராக அறியப்பட்டவர் பாரதிராஜா. இவர் 16 வயதினிலே படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். அதன்பின்னர் கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள், புதிய வார்ப்புகள், நிழல்கள், அலைகள் ஓய்வதில்லை, காதல் ஓவியம், முதல் மரியாதை உள்ளிட்ட பல படங்களை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குனராக உருவெடுத்தார்.

பாரதிராஜா
சில தினங்களுக்கு முன்பு இயக்குனர் பாரதிராஜா திடீர் உடல்நலக் குறைவு காரணமாக சென்னை தி.நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து சிகிச்சை பெற்று வந்த இயக்குனர் பாரதிராஜா அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

பாரதி ராஜா
சமீபத்தில் இயக்குனர் பாரதிராஜா மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். இவரை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் திரைப்பிரபலங்கள் பலர் நேரில் சென்று சந்தித்தனர். இதையடுத்து பாரதிராஜா தான் வீடு திரும்பிய செய்தியை நடிகர் கமல்ஹாசனுக்கு தொலைபேசி மூலம் தெரிவித்துள்ளார்.

கமல்ஹாசன் - பாரதிராஜா
இது தொடர்பாக கமல்ஹாசன் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "நலம் பெற்று வீடு திரும்பிய திரு. பாரதிராஜா, அம்மகிழ்ச்சியான செய்தியை இன்று என்னுடன் தொலைபேசியில் பகிர்ந்து கொண்டார். மருத்துவமனையில் நலம் விசாரிக்கச் சென்றபோது, ஆஸ்பத்திரியில் உங்களைப் பார்க்க எனக்குப் பிடிக்கவில்லை.. சீக்கிரம் வீடு திரும்புங்கள், நான் புறப்படுகிறேன் என்று சொன்னேன்.
ஓகே சீயூ லேட்டர் ஃபார் சூவேர், பாய் என்று ஆங்கிலத்தில் சொல்லி வழியனுப்பினார். சொன்ன வாக்கைக் காப்பாற்றிய என் தேனிக்கார நண்பருக்கு இந்தப் பரமக்குடியானின் வாழ்த்துக்கள்" என்று பதிவிட்டுள்ளார்.
நலம் பெற்று வீடு திரும்பிய திரு. பாரதிராஜா, அம்மகிழ்ச்சியான செய்தியை இன்று என்னுடன் தொலைபேசியில் பகிர்ந்து கொண்டார். (1/3)
— Kamal Haasan (@ikamalhaasan) September 26, 2022
- இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகும் படம் இந்தியன் -2.
- இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்திருந்த இந்தியன் திரைப்படம் ரசிகர்களிடன் பெரும் வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து 25 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது.

காஜல் அகர்வால்
இந்த படத்தில் நடிகை காஜல் அகர்வால் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில், படப்பிடிப்புக்கு தன்னை தயார் செய்துகொண்டிருக்கும் இவர் குதிரையேற்றப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். குதிரையுடன் பயிற்சி எடுக்கும் வீடியோவை தனது சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிட்டுள்ள இவர் அதனுடன் பதிவை ஒன்றையும் பகிர்ந்துள்ளார்.
அதில், ``நான் மிகவும் மகிழ்ச்சியாகவும் ஆர்வமாகவும் உள்ளேன். குழந்தைப் பிறப்புக்கு பிறகு கிட்டத்தட்ட நான்கு மாதங்கள் கழித்து நான் வேலைக்கு திரும்பி உள்ளேன். குழந்தைப் பிறப்புக்கு முன்பு என்னால் அதிகமான வேலைகளை செய்ய முடியும். ஜிம்மில் வொர்க்அவுட் செய்வது உள்ளிட்ட பல விஷயங்களை என்னால் செய்ய முடிந்தது. ஆனால், குழந்தைப் பிறப்புக்கு பின்பு முன்பிருந்த அதே எனர்ஜி லெவலை கொண்டு வருவது என்பது கடினமாக உள்ளது.

காஜல் அகர்வால்
குதிரை மேல் சவாரி செய்வது எனக்கு பெரும் சவாலாக உள்ளது. நம்முடைய உடல் மாறலாம், மாற நேரம் எடுக்கலாம். ஆனால், நம்முடைய எல்லையில்லாத ஆர்வமும், ஆசையும் என்றும் மாறாதது. எதற்கு முக்கியத்துவம் தரவேண்டும். எதில் கவனம் செலுத்த வேண்டும் என்பதை நாம்தான் முடிவு செய்ய வேண்டும். நம்முடைய தேர்வு குறித்து என்றும் நாம் கவலைப்படக் கூடாது.
'இந்தியன்2' படத்தில் மீண்டும் நான் இணைந்திருப்பதில் மகிழ்ச்சி. வேலையின் பொருட்டு புதிய திறமைகளை வெறும் பொழுதுபோக்காகக் கருதாமல் கற்றுக் கொள்வதில் மகிழ்ச்சி. என்னை மேலும் மேம்படுத்திக் கொள்வதற்காக எனக்கு கிடைத்த இந்த வாய்ப்பிற்கு நான் எப்போதும் நன்றி உடையவளாக இருப்பேன்' என நெகிழ்ச்சியாக பகிர்ந்துள்ளார்.
- சட்ட விரோதச் செயல்களில் ஈடுபடுத்தி, கொடுமைப் படுத்துவதாக வரும் தகவல் அதிர்ச்சி அளிக்கிறது.
- தமிழர்கள் மியான்மர் நாட்டுச் சிறையில் சிக்கித் தவிக்கும் காணொலி அதிர்ச்சியளிக்கிறது.
மியான்மர் நாட்டில் தவிக்கும் தமிழர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கமல்ஹாசன், சீமான் ஆகியோர் வலியுறுத்தி உள்ளனர்.
இது குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தாய்லாந்து நாட்டிற்கு வேலை தேடிச் சென்ற தமிழக இளைஞர்கள் உள்ளிட்ட இந்தியர்களை மியான்மர் நாட்டுக்கு கடத்திச் சென்று, சட்ட விரோதச் செயல்களில் ஈடுபடுத்தி, கொடுமைப் படுத்துவதாக வரும் தகவல் அதிர்ச்சி அளிக்கிறது. அவர்களை உடனடியாக மீட்க மத்திய அரசு துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மேலும் இதுகுறித்து நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
வெளிநாடு வேலை என்று கூறி அழைத்துச் செல்லப்பட்டு ஏமாற்றப்பட்ட தமிழர்கள் மியான்மர் நாட்டுச் சிறையில் சிக்கித் தவிக்கும் காணொலி அதிர்ச்சியளிக்கிறது.
தற்போது மியான்மர் நாட்டுச் சிறையில் சிக்கித் தவிக்கும் தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த இளைஞர்களை மீட்க தூதரகம் மூலம் இந்திய ஒன்றிய அரசு விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், தமிழர்கள் மீட்கப்பட்டு அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படுவதை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநில அரசுகள் தொடர்ந்து கண்காணித்து உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆ.ராசா பேசிய பேச்சுகளை ஆதரிக்கிறாரா? திமுக அதை ஒப்புக்கொள்கிறதா என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.
- கட்சியின் மூத்த நிர்வாகியும், எம்.பி.,யு மான ஆ.ராசா சட்டத்துக்கு எதிரான வகையில் பேசியுள்ளார்.
கோவை:
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், கடந்த 2 நாட்களாக கோவையில் முகாமிட்டு பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
விக்ரம் பட 100 நாள் வெற்றி விழா, பெண்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி, மாநகராட்சி பெண்கள் பள்ளி நிகழ்ச்சி என பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.
கமல்ஹாசன் சட்டசபை தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டு பா.ஜ.க. வேட்பாளர் வானதி சீனிவாசனிடம் தோல்வியை தழுவினார். தற்போது கோவை தெற்கு தொகுதியில் கமல்ஹாசன் முகாமிட்டது குறித்து வானதி சீனிவாசனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-
ஓராண்டுக்கு பிறகு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனுக்கு கோவை தெற்கு தொகுதி குறித்து நினைவு வந்துள்ளது. அவர், மக்களிடம் மனுக்களை வாங்கிக் கொள்ளலாம். ஆனால், அதை வாங்கியபிறகு பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சென்று பிரச்சினையை தீர்க்கலாம் என நினைக்கக்கூடாது.
மக்களுக்கு சேவையாற்ற வேண்டுமெனில், நேரடியாக களத்துக்கு வந்து, தான் செய்யும் பணிகளை மக்களிடம் சொல்லட்டும். மக்களுக்கு சேவையாற்ற அனைவருக்கும் உரிமை உள்ளது. இப்போதாவது கோவை தெற்கு குறித்து அவருக்கு ஞாபகம் வந்ததை நல்ல விஷயமாகத்தான் பார்க்கிறேன்.
முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆ.ராசா பேசிய பேச்சுகளை ஆதரிக்கிறாரா? திமுக அதை ஒப்புக்கொள்கிறதா என்பதை தெளிவுபடுத்த வேண்டும். கட்சியின் மூத்த நிர்வாகியும், எம்.பி.,யு மான ஆ.ராசா சட்டத்துக்கு எதிரான வகையில் பேசியுள்ளார். அவர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டுமென அனைத்து இடங்களிலும் பா.ஜ.க. சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
காவல்துறை அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறான பேச்சுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வேடிக்கை பார்த்து ரசிப்பதை கண்டிக்கிறேன். இதற்கென உரிய விளக்கத்தை அவர் அளிப்பார் என எதிர்பார்க்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- பள்ளியில் கட்டி கொடுக்க இருந்த கழிவறையை கெம்பட்டி காலனி பகுதியில் கட்டி கொடுக்க உள்ளோம்.
- எனக்கு இங்கு அனுமதி கொடுத்த அரசு அலுவலர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
கோவை:
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் பல்வேறு கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக 15-ந்தேதி இரவு கோவை வந்தார்.
நேற்று கமல்ஹாசன் தனியார் திரையரங்கில் நடந்த விக்ரம் படத்தின் 100 நாள் வெற்றி விழாவில் பங்கேற்று பேசினார். அதனை தொடர்ந்து இரவு ஓட்டலில் தங்கி ஓய்வெடுத்தார்.
இன்று காலை கோவை ராஜவீதி பகுதியில் உள்ள துணி வணிகர் சங்க மேல்நிலைப் பள்ளிக்கு கமல்ஹாசன் வந்தார்.
அங்கு படிக்கும் மாணவிகளுடன் நடிகர் கமல்ஹாசன் கலந்துரையாடினார். பின்னர் அவர்களுடன் குழு புகைப்படமும் எடுத்து கொண்டார்.
அப்போது அவர் மாணவர்கள் மத்தியில் பேசியதாவது:-
நான் படித்த பள்ளியில் நிறைய வசதி இருந்தும் என்னால் பள்ளி படிப்பை தொடர முடியவில்லை. ஆனால் நீங்கள் வசதிகளின்றி பயில்வது மகிழ்ச்சியளிக்கிறது.
இப்பள்ளியில் கழிவறை கட்டுவதற்கு நாங்கள் முயற்சி மேற்கொண்டு வந்தோம். ஆனால் அதற்குள்ளாக அரசே முன்வந்து கழிவறை கட்ட உள்ளது. அரசு செயல்படுவதற்கு நான் ஊக்கியாக இருந்ததை நினைத்து பெருமையாக எண்ணுகிறேன்.
இந்த பள்ளியில் கட்டி கொடுக்க இருந்த கழிவறையை கெம்பட்டி காலனி பகுதியில் கட்டி கொடுக்க உள்ளோம். எனக்கு இங்கு அனுமதி கொடுத்த அரசு அலுவலர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இதனை நான் தமிழனின் கடமையாய் நினைத்து செய்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதுகுறித்து மாணவ, மாணவிகள் கூறுகையில், நடிகர் கமல்ஹாசனை நாங்கள் பார்த்ததில் பெரும் பேரும் மகிழ்ச்சி அடைகிறோம். எங்களுக்கு இது போன்ற வாய்ப்பு கிடைத்தது ஆனந்தமாக உள்ளது என்றனர்.
தொடர்ந்து கமல்ஹாசன் கோவை கெம்பட்டி காலனி பகுதிக்கு சென்றார். அங்கு அவர் மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.
இந்த பகுதியில் 800-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது. ஆனால் அவர்களுக்கு ஒரே ஒரு கழிவறை மட்டுமே இருந்து வருகிறது.
அவர்களுக்கு நாங்கள் எங்கள் சொந்த செலவில் ஒரு கழிவறையை கட்டி தர உள்ளோம். நான் இதை எனது தேர்தல் வாக்குறுதியில் கூறவில்லை.
ஆனாலும் இதனை நாங்கள் செய்து தருகிறோம். அதனை நீங்கள் சுத்தமாகவும் தூய்மையாகவும் வைத்து கொள்ள வேண்டும்.
அதை பார்வையிடுவதற்காக நான் மீண்டும் வருவேன். அப்போது கழிவறை சுத்தம் இல்லை என்றால் நானே இறங்கி சுத்தம் செய்வேன். இந்த பகுதியில் போதைப் பொருள் நடமாட்டம் அதிக அளவில் இருப்பதாக தெரிகிறது. எனவே இளைஞர்கள் அதனை கைவிட்டு நேர்வழியில் செல்ல வேண்டும். இதனை தாய்மார்கள், குடும்பத்தினர் கண்காணிக்க வேண்டும்.
மேலும் இந்த பகுதியில் குடிநீர் பிரச்சினை உள்ளதாக மக்கள் தெரிவித்தனர். அது குறித்து நடவடிக்கை எடுக்க அரசிலும் நாங்கள் கோரிக்கை வைப்போம்.