என் மலர்
நீங்கள் தேடியது "Smart meter"
- பகிர்மானக் கழகத்தின் இழப்பு 2021-22-ம் ஆண்டில் ரூ.11,955 கோடியில் இருந்து நடப்பாண்டில் ரூ.7,825 கோடியாக குறைய வாய்ப்புள்ளது.
- தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திற்கு அரசால் வழங்கப்படும் மானியங்களுக்காக ரூ.14,063 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது.
சென்னை:
2023-24-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இ-பட்ஜெட்டாக தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ள முக்கிய அறிவிப்பு விவரம் வருமாறு:-
மின் பயன்பாட்டுத் தரவுகளை தானியங்கி முறையில் பெறுவதற்கு, முழு சீரமைக்கப்பட்ட மின் பகிர்மானத் திட்டத்தின் கீழ் கட்டணம் செலுத்தும் அனைத்து நுகர்வோர் இணைப்புகளுக்கும் முன் கூட்டியே கட்டணம் செலுத்தும் வசதியுடன் திறன்மிகு மின் அளவிகள் (ஸ்மார்ட் மீட்டர்) நிறுவப்படும்.
அரசால் மேற்கொள்ளப்பட்ட அடிப்படைச் சீர்திருத்தங்களின் விளைவாக, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் நிதிநிலை சற்று மேம்பட்டுள்ளது. இதனால் இக்கழகத்தின் இழப்பு 2021-22-ம் ஆண்டில் ரூ.11,955 கோடியில் இருந்து நடப்பாண்டில் ரூ.7,825 கோடியாக குறைய வாய்ப்புள்ளது.
இந்த வரவு-செலவு திட்டத்தில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திற்கு அரசால் வழங்கப்படும் மானியங்களுக்காக ரூ.14,063 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.
- 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின் கீழ் தி.நகரில் சுமார் 1 லட்சத்து 10 ஆயிரம் வீடுகளில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்டுள்ளது.
- முதல்கட்டமாக தமிழகத்தின் 12 வட மாவட்டங்களில் நடைமுறைக்கு வரும்.
சென்னை:
தமிழகத்தில் தற்போது ஒவ்வொரு வீட்டிலும் எப்படி மின்சாரம் பயன்படுத்தப்படுகிறது என்பதை மின்வாரிய ஊழியர்கள் வீட்டுக்கு நேரில் வந்து மீட்டர் அளவீட்டை கணக்கிட்டு முடிவு செய்கிறார்கள்.
அவர்கள் கணக்கிட்டு எழுதும் யூனிட் அடிப்படையில் பொதுமக்கள் மின்சார கட்டணம் செலுத்தி வருகிறார்கள்.
இந்த நடைமுறைக்கு பதில் மின்சார பயன்பாடு அளவை மிக எளிதாக, துல்லியமாக கணக்கிட 'ஸ்மார்ட் மீட்டர்' இணைப்பு திட்டத்தை அமல்படுத்த தமிழக மின்வாரியம் முடிவு செய்துள்ளது. இதற்கு மறு சீரமைக்கப்பட்ட மின் வினியோக திட்டத்தின் கீழ் மானியம் வழங்குகிறது.
தமிழகத்தில் முதலில் பரீட்சார்த்த அடிப்படையில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டம் சென்னை தி.நகரில் செயல்படுத்தப்பட்டது. 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின் கீழ் தி.நகரில் சுமார் 1 லட்சத்து 10 ஆயிரம் வீடுகளில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்டுள்ளது. இது வெற்றிகரமாக அமைந்துள்ளது.
இதையடுத்து தமிழகத்தின் மற்ற பகுதிகளிலும் ஸ்மார்ட் மீட்டர் மின் இணைப்பை நடைமுறைக்கு கொண்டுவர தமிழ்நாடு மின்வாரியம் முடிவு செய்துள்ளது. அதன்படி இன்று (திங்கட் கிழமை) ஸ்மார்ட் மீட்டர் கொள்முதலுக்கான டெண்டர் வெளியிடப்படுகிறது. ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டத்தை 3 கட்டமாக செயல்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
முதல்கட்டமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், வேலூர், தருமபுரி உள்பட தமிழகத்தின் 12 வட மாவட்டங்களில் நடைமுறைக்கு வரும். அதன் பிறகு 2-வது, 3-வது கட்டமாக ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும்.
தமிழகத்தில் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்துக்காக 3 கோடி ஸ்மார்ட் மீட்டர்கள் வாங்கப்பட உள்ளன. இதில் முதல்கட்டமாக 13 மாவட்டங்களில் 1 கோடியே 17 லட்சம் ஸ்மார்ட் மீட்டர்கள் பயன்படுத்தப்படும்.
2-வது கட்டமாக 1 கோடியே 2 லட்சம் ஸ்மார்ட் மீட்டர்களும், 3-வது கட்டமாக சுமார் 80 லட்சம் ஸ்மார்ட் மீட்டர்களும் பயன்படுத்தப்படும்.
இதற்கான டெண்டர் இன்று வெளியிடப்படும் நிலையில் அடுத்த 45 நாட் களில் இறுதி முடிவுகள் மேற்கொள்ளப்படும். குறிப்பிட்ட காலத்துக்குள் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை செயல்படுத்தினால் தான் மத்திய அரசின் மறுசீரமைக்கப்பட்ட மின் வினியோகத் திட்டத்தின் கீழ் மானியத்தை பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
- விருப்ப மாறுதல் வழங்க வேண்டும்.
- ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவதை ரத்து செய்ய வேண்டும்.
தஞ்சாவூர்:
தஞ்சை மின்வாரிய தலைமை பொறியாளர் அலுவலகம் முன்பு இன்று தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு (சி.ஐ.டி.யூ) சார்பில் முழுநேர தர்ணா போராட்டம் நடைபெற்றது.
இதற்கு மண்டல செயலாளர் ராஜராமன் தலைமை தாங்கினார்.
தர்ணா போராட்டத்தை கவுரவ தலைவர் கோவிந்தராஜூ தொடங்கி வைத்தார்.
இந்த போராட்டத்தில், ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவதை ரத்து செய்ய வேண்டும்.
ஈ டெண்டர் முறையில் அவுட்சோர்சிங் விடுவதை ரத்து செய்ய வேண்டும். காலிபணியிடங்களை நிரப்ப வேண்டும்.
கேங்மேன் ஊழியர்களுக்கான சலுகைகள், விருப்ப மாறுதல் வழங்க வேண்டும். ஒப்பந்த ஊழியர், பகுதி நேர ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி நிர்வாகிகள் பேசினர்.
சி.ஐ.டி.யூ மாநில செயலாளர் ஜெயபால், மாவட்ட தலைவர் கண்ணன், ஒய்வு பெற்றோர் நல அமைப்பு முனியாண்டி, பொறியாளர் மஞ்சுளா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
இதில் செயலாளர்கள் காணிக்கைராஜ் (தஞ்சை), கலைசெல்வன் (நாகை), ராஜேந்திரன் (திருவாரூர்), தலைவர்கள் அதிதூதமைக்கேல்ராஜ் (தஞ்சை), வெற்றிவேல் (நாகை), சகாயராஜ் (திருவாரூர்), பொருளாளர்கள் சங்கர், கண்ணன்,முகேஷ், மின்வாரிய விஜயலட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- ஸ்மார்ட் மீட்டரில் காலை 6 மணி முதல் காலை 10 மணி வரை எவ்வளவு மின்சாரம் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை அறிய முடியும்.
- மின்வாரியத்துக்கு அரசு வழங்கி வரும் 10 சதவீத மானியம் நிறுத்தப்படும்போது அரசுக்கு நிதிச்சுமை குறையும்.
சென்னை:
தமிழ்நாட்டில் குறு-சிறு தொழில் நிறுவனங்கள் 2 லட்சத்துக்கும் அதிகமாக இயங்கி வருகிறது. சென்னை கிண்டி, அம்பத்தூர் தொழிற்பேட்டை, திருப்பூர், கோவை, ஈரோடு, ராணிப்பேட்டை, திருச்சி, நெல்லை பேட்டை உள்பட பல்வேறு இடங்களில் அதிகமாக இந்த தொழில் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.
'எம்.எஸ்.எம்.இ' என்று அழைக்கப்படும் இந்நிறுவனங்களில் பயன்படுத்தப்படும் மின்சார பயன்பாட்டுக்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொழிற் கூட்டமைப்பினர் போராட்டம் நடத்தி வந்தனர். 25 சதவீத கூடுதல் மின்கட்டணத்தை குறைக்க கோரி வலியுறுத்தினார்கள்.
இதனால் தமிழக அரசு அவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியது. 25 சதவீத கூடுதல் கட்டணத்தை 15 சதவீதமாக அரசு குறைத்தது. மீதி 10 சதவீதத்தை மின் வாரியத்துக்கு அரசு மானியமாக வழங்கியது. இதனால் அரசுக்கு கூடுதல் நிதிச்சுமை உருவானது.
இந்த பேச்சுவார்த்தையின் போது, எலக்ட்ரானிக் மின் மீட்டரை ஜூன் மாதத்திற்கு பிறகு ஸ்மார்ட் மீட்டராக மாற்ற உள்ளதாகவும் அரசு தெரிவித்திருந்தது. அப்போது மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை பயன்படுத்தப்படும் மின் பயன்பாட்டை தனியாக கணக்கிட்டு அதன்படி 25 சதவீதம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என்று தெரிவித்திருந்தனர்.
இதன்படி இப்போது சென்னையில் உள்ள எம்.எஸ்.எம்.இ. நிறுவன தொழிற்பேட்டைகளில், எலக்ட்ரானிக் மீட்டரை ஸ்மார்ட் மீட்டராக மாற்றுவதற்கு ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.
இதற்காக மார்ச் முதல் வாரம் டெண்டர் முடிவு செய்யப்படுகிறது. அதன் பிறகு சென்னையில் உள்ள குறு-சிறு தொழிற்சாலைகளில் 'ஸ்மார்ட் மீட்டர்' பொருத்தும் பணி ஜூன் மாதம் தொடங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த ஸ்மார்ட் மீட்டரில் காலை 6 மணி முதல் காலை 10 மணி வரை எவ்வளவு மின்சாரம் பயன்படுத்தப் பட்டுள்ளது என்பதை அறிய முடியும்.
அதேபோல் மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை எவ்வளவு மின்சாரம் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை கண்டறிய முடியும்.
அதன் அடிப்படையில் 25 சதவீதம் கட்டணம் கூடுதலாக கணக்கிட்டு வசூலிக்கப்படும். இதற்காக சென்னை புறநகரில் உள்ள தொழிற்பேட்டைகளில் 10 ஆயிரம் ஸ்மார்ட் மீட்டர்கள் வழங்க திட்டமிடப்பட்டு உள்ளது.
இதன்மூலம் மின்வாரியத்துக்கு அரசு வழங்கி வரும் 10 சதவீத மானியம் நிறுத்தப்படும்போது அரசுக்கு நிதிச்சுமை குறையும்.
- ஸ்மார்ட் மீட்டர்களைப் பொருத்தும் திட்டத்தை மின்சார வாரியமே செயல்படுத்துவதில் என்ன சிக்கல்? என்பதை அறிந்து கொள்ள முடியவில்லை.
- ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டம் ஒரு வகையான சீர்திருத்தம் என்பதை எவரும் மறுக்க முடியாது.
சென்னை:
பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கான மின்சார இணைப்புகளுக்கு ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டத்தின் முதல் தொகுப்பிற்கான ஒப்பந்தத்தை அதானி குழும நிறுவனத்திற்கு தமிழ்நாடு மின்வாரியம் வழங்கக் கூடும் என்று வெளியாகி உள்ள செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன.
ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்ட காலத்திற்கும் இன்றைக்கும் இடையிலான சூழல்கள் மிகப்பெரிய அளவில் மாறியிருக்கும் நிலையில், ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் குறிப்பிடப்பட்ட விலையில் ஸ்மார்ட் மீட்டர்களை வாங்கக்கூடாது.
அதானி குழும நிறுவனம் குறைந்த விலையை குறிப்பிட்டிருப்பதால், அதற்கு ஒப்பந்தம் வழங்கப்படலாம் என்பதை மேலோட்டமாகப் பார்க்கும் போது, சரியான முடிவு தானே என்று தோன்றலாம். ஆனால், ஸ்மார்ட் மீட்டர் குறித்த முழுமையான விவரங்களை நன்றாக அறிந்தவர்களுக்குத் தான் இதன் பின்னணியில் உள்ள குறைகள் தெரியும். ஸ்மார்ட் மீட்டர்கள் என்பது இந்தியாவைப் பொறுத்தவரை புதிய தத்துவமாகும்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அதானி குழுமம் ஒரு ஸ்மார்ட் மீட்டருக்கு எவ்வளவு விலை குறிப்பிட்டிருக்கிறது என்பது தொடர்பான விவரங்கள் துல்லியமாக வெளியாகவில்லை.
ஸ்மார்ட் மீட்டர்களை பராமரிப்பதற்கான காலம் 7 ஆண்டுகளா அல்லது 10 ஆண்டுகளா? என்பதை தமிழ்நாடு மின்சார வாரியம் இன்னும் வெளிப்படையாக அறிவிக்கவில்லை. ஒருவேளை ஒப்பந்தக்காலம் 7 ஆண்டுகளாக இருந்து, ஒரு மீட்டருக்கு வசூலிக்கப்படவிருக்கும் தொகை ரூ.125 என்று வைத்துக் கொண்டால், தமிழ்நாடு மின்சார வாரியத்தால் முன்பணமாக வழங்கப்பட்ட தொகை இல்லாமல், ஒவ்வொரு மீட்டருக்கும் கூடுதலாக ரூ.10,500 வசூலிக்கப்படும். அதுவே ஒப்பந்தக்காலம் 10 ஆண்டுகளாக இருந்தால், ரூ.15,000 ஆகும். மாதாந்திர தொகையை குறைப்பது குறித்து அதானி குழுமத்துடன் பேச்சு நடத்தப்படுவதாக மின்வாரிய அதிகாரிகள் கூறியுள்ளனர். அதன்படி 10 சதவீதம் குறைக்கப்பட்டாலும் கூட, அதானி குழுமத்திற்கு செலுத்தப்படும் தொகை மிகவும் அதிகமாகவே இருக்கும். இதை நேரடியாக நுகர்வோரிடமிருந்து மின் வாரியம் வசூலிக்காவிட்டாலும், கட்டண உயர்வு உள்ளிட்ட மறைமுக வழிகளில் வசூலித்து விடும்.
ஸ்மார்ட் மீட்டர்களைப் பொருத்தும் திட்டத்தை மின்சார வாரியமே செயல்படுத்துவதில் என்ன சிக்கல்? என்பதை அறிந்து கொள்ள முடியவில்லை. ஒரு ஸ்மார்ட் மீட்டருக்கு மத்திய அரசின் சார்பில் சராசரியாக ரூ.900 மானியம் வழங்கப்படும் நிலையில், அத்துடன், ஒவ்வொரு மின் இணைப்புக்கும் ஏற்கனவே பொருத்தப்பட்டுள்ள மீட்டருக்கான கட்டணத்தையும் சேர்த்து கழித்து விட்டால், ஒவ்வொரு ஸ்மார்ட் மீட்டருக்கும் நுகர்வோர் செலுத்த வேண்டிய தொகை ரூ.2000 முதல் ரூ.2500 என்ற அளவில் தான் இருக்கும்.
ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டம் ஒரு வகையான சீர்திருத்தம் என்பதை எவரும் மறுக்க முடியாது. ஆனால், அதையே காரணம் காட்டி, ஸ்மார்ட் மீட்டர்களைப் பொருத்தி, பராமரிப்பதில் அதானி போன்ற பெரு நிறுவனங்கள் கொள்ளையடிப்பதையும், அதற்கு தமிழக அரசு துணை போவதையும் அனுமதிக்க முடியாது.
எனவே, ஸ்மார்ட் மீட்டர்களைப் பொருத்துவதற்காக ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் கோரப்பட்ட அனைத்து ஒப்பந்தப்புள்ளிகளையும் மின்வாரியம் ரத்து செய்ய வேண்டும். மின்வாரியமே வெளிப்படையான போட்டி ஏல முறையில் ஸ்மார்ட் மீட்டர்களை கொள்முதல் செய்து மின் இணைப்புகளுக்கு பொருத்த வேண்டும்.
அதற்கு மாறாக, தனியார் பெரு நிறுவனங்களுக்கு ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் ஒப்பந்தம் வழங்கப்பட்டால், அதை எதிர்த்து தமிழக மக்களைத் திரட்டி மாபெரும் போராட்டத்தை பா.ம.க. நடத்தும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- ஸ்மார்ட் மீட்டர் கொள்முதல் தொடர்பாக மீண்டும் டெண்டர் விடப்படும்.
- டெண்டரில் அதானி நிறுவனம் குறிப்பிட்டிருந்த தொகை மின்வாரிய பட்ஜெட்டுக்கு அதிகமாக இருப்பதால் டெண்டர் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள மின் நுகர்வோர்களுக்கு ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்துவதற்காக மீட்டர்களை கொள்முதல் செய்வதற்கான சர்வதேச டெண்டரை ரத்து செய்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஸ்மார்ட் மீட்டர் கொள்முதல் தொடர்பாக மீண்டும் டெண்டர் விடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்மார்ட் மீட்டர் கொள்முதல் டெண்டரில் அதானி நிறுவனம் குறிப்பிட்டிருந்த தொகை மின்வாரிய பட்ஜெட்டுக்கு அதிகமாக இருப்பதால் டெண்டர் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, தமிழ்நாட்டில் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கான மின்சார இணைப்புகளுக்கு ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டத்தின் முதல் தொகுப்பிற்கான ஒப்பந்தத்தை அதானி குழும நிறுவனத்துக்கு தமிழ்நாடு மின்வாரியம் வழங்கக் கூடும் என்று வெளியான செய்திகளுக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து இருந்தது.
ஸ்மார்ட் மீட்டர்களைப் பொருத்தி, பராமரிப்பதில் அதானி போன்ற பெரு நிறுவனங்கள் கொள்ளையடிப்பதையும், அதற்கு தமிழக அரசு துணை போவதையும் அனுமதிக்க முடியாது என்று எதிர்க்கட்சிகள் கூறிவந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவதற்காக மறு ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்படுவதும் தேவையற்றது.
- ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டத்தை தமிழ்நாடு மின்சார வாரியமே நேரடியாக செயல்படுத்த வேண்டும்.
சென்னை:
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழ்நாட்டில் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கான மின்சார இணைப்புகளுக்கு ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டத்தின் முதல் தொகுப்பிற்கான ஒப்பந்தம் அதானி குழும நிறுவனத்திற்கு வழங்கப்படவிருந்த நிலையில், அதற்கான ஒப்பந்தப் புள்ளிகள் ரத்து செய்யப்பட்டிருப்பதாகவும், ஸ்மார்ட் மீட்டர் பொருத்த புதிய ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட இருப்பதாகவும் தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்திருப்பது. மக்களின் ரத்தத்தை உறிஞ்சி வசூலிக்கப்படும் மின் கட்டணத்தின் பெரும் பகுதி அதானி குழுமத்திற்கு தாரைவார்க்கப்படவிருந்தது தடுக்கப்பட்டிருப்பதும், அதற்காக பங்காற்றியதும் மகிழ்ச்சியளிக்கிறது.
ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவதற்கான ஒப்பந்தம் வழங்குவதற்கான நடைமுறையில் தொடக்கத்திலிருந்தே ஏராளமான குளறுபடிகள் நிகழ்ந்து வந்தன. ஸ்மார்ட் மீட்டர்களைப் பொருத்துவதற்கான ஒப்பந்தப்புள்ளிகள் கடந்த 2023-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கோரப்பட்டன. அதன்பின்னர் கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகள் ஆன நிலையில், இடைப்பட்ட காலத்தில் ஸ்மார்ட் மீட்டர்களின் விலைகள் எவ்வளவு குறைந்திருக்கின்றன என்பதைக் கருத்தில் கொள்ளாமல் ஒப்பந்தப் புள்ளிகளை இறுதி செய்வது எந்த வகையில் நியாயம்? இதனால் அரசுக்கு ஏற்படும் நிதி இழப்பை யார் ஏற்பார்கள்? என்று கடந்த 6-ஆம் தேதி வினா எழுப்பியிருந்தேன்.
அண்டை மாநிலமான புதுச்சேரியில் ஒரு மீட்டருக்கான மொத்த செலவு ரூ.6169 எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்தத் தொகை நிர்ணயிக்கப்பட்டு இரு ஆண்டுகள் நிறைவடையவிருக்கும் நிலையில், ஸ்மார்ட் மீட்டர்களின் விலை ரூ.4,000 என்ற அளவுக்கு குறைந்து விட்டதாக கூறப்படுகிறது. அவ்வாறு இருக்கும் நிலையில், தமிழக அரசால் வழங்கப்படும் முன்பணம் தவிர, அதானி குழுமத்திற்கு அதிகபட்சமாக ரூ.15,000 வீதம் 80 லட்சம் மீட்டர்களுக்கு வழங்கப்பட்டால் தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணம் எத்தனை ஆயிரம் கோடி தாரை வார்க்கப்படுகிறது என்பதை எளிதாக கணக்கிட்டுக் கொள்ள முடியும் என்று வினா எழுப்பிய நான், அரசுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தக்கூடிய இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தேன். அது இப்போது நடந்திருக்கிறது. இது பாட்டாளி மக்கள் கட்சிக்கு கிடைத்த வெற்றி ஆகும்.
ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவதற்காக மறு ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்படுவதும் தேவையற்றது. அவ்வாறு மறு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டால், மக்களின் பணம் அதானி குழுமத்திற்கு பதிலாக இன்னொரு நிறுவனத்திற்கு தாரை வார்க்கப்படுவதற்குத் தான் வழிவகுக்கும். எனவே, அந்த முடிவை கைவிட்டு ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டத்தை தமிழ்நாடு மின்சார வாரியமே நேரடியாக செயல்படுத்த வேண்டும்.
அதேபோல், அதானி குழும நிறுவனம் தயாரிக்கும் சூரிய ஒளி மின்சாரத்தை இந்திய சூரிய ஒளி மின்னுற்பத்திக் கழகத்தின் வாயிலாக வாங்குவதற்காக வழங்கப்படும் கட்டணமான யூனிட்டுக்கு ரூ.2.61 என்பது மிகவும் அதிகம் என்பதாலும், இந்த ஒப்பந்தத்தின் பின்னணியில் தமிழ்நாடு மின்சார வாரிய அதிகாரிகளுக்கு கையூட்டு கொடுக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்து அது தொடர்பாக அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டிருப்பதாலும் அதற்கான ஒப்பந்தத்தையும் தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.
- மின் இணைப்புகளுக்கு ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தப்பட வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தல்.
- தமிழ்நாட்டில் மொத்தம் 3 கோடி இணைப்புகளுக்கு ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தப்படவுள்ளன.
மின்சார வாரியங்களின் தொழில்நுட்ப மற்றும் வணிக இழப்புகளைக் குறைக்கும் வகையிலும், வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களின் மின்சாரப் பயன்பாட்டைத் துல்லியமாகக் கணக்கிடும் வகையிலும் அனைத்து மின் இணைப்புகளுக்கும் ஸ்மார்ட் மீட்டர்களைப் பொருத்துவதை கட்டாயமாக்கும் திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது.
அதன்படி, 2025-ஆம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் கணிசமான எண்ணிக்கையிலான மின் இணைப்புகளுக்கு ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தப்பட வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியது.
அதன்படி, தமிழ்நாட்டில் மொத்தம் 3 கோடி இணைப்புகளுக்கு ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தப்படவுள்ளன.
இந்நிலையில், மாதாந்திர மின் கணக்கீடு தொடர்பாக , சட்டப்பேரவையில் கேட்ட கேள்விக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்தார்.
அப்போது அவர், ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்டதும் மாதாந்திர மின் கட்டணம் நடைமுறைக்கு வரும் என்றார்.
- தி.மு.க. தேர்தல் அறிக்கையில் மாதந்தோறும் மின் கட்டணம் கணக்கிடப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டு இருந்தது.
- ஸ்மார்ட் மீட்டர் கொள்முதலுக்கு விரைவில் புதிய டெண்டர் விடப்படும்.
சென்னை:
அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
தி.மு.க. தேர்தல் அறிக்கையில் மாதந்தோறும் மின் கட்டணம் கணக்கிடப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டு இருந்தது. அது நிச்சயம் நிறைவேற்றப்படும்.
ஸ்மார்ட் மீட்டர் கொள்முதலுக்கு விரைவில் புதிய டெண்டர் விடப்படும்.
தமிழகம் முழுவதும் பயனீட்டாளர்களுக்கு ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தும் பணிகள் நிறைவடைந்ததும் மாதந்தோறும் மின் கட்டணம் வசூலிக்கும் நடைமுறை அமலுக்கு வரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தூத்துக்குடி மாநகர தெற்கு பகுதி மின் நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வடக்கு முத்தையாபுரம் பிரிவு அலுவலகத்தில் நடைபெற்றது.
- மின்சாரம் தொடர்பான குறைகளை கேட்டறிந்த அதிகாரிகள் குறைகளை நிவர்த்தி செய்வதாக உறுதி அளித்தனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாநகர தெற்கு பகுதி மின் நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வடக்கு முத்தையாபுரம் பிரிவு அலுவலகத்தில் நடைபெற்றது.
தூத்துக்குடி மின் பகிர்மான வட்டத்தின் மேற்பார்வை பொறியாளர் குருவம்மாள் தலைமை தாங்கினார். தூத்துக்குடி நகர தெற்கு உதவி செயற்பொறியாளர் உமையொருபாகம்,உதவி செயற்பொறியாளர் ஆறுமுகம், உதவிபொறியாளர்கள் பெருமாள், சகாயமங்களராணி சுப்புலட்சுமி, இளமின் பொறியாளர்கள் ரமேஷ், சோமலிங்கம், கவிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் தூத்துக்குடி மின் பகிர்மான வட்டத்தில் நடைபெற்ற மின் நுகர்வோர் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்துகொண்ட முத்தையாபுரம், முள்ளக்காடு, அத்திமரப்பட்டி, சுந்தர் நகர், கிருஷ்ணா நகர், தங்கம்மாள்புரம், பாரதிநகர், சேசுநகர், குமாரசாமி நகர், பொன்னான்டி நகர் ஆகிய பகுதிகளின் மின் நுகர்வோர்கள் தங்கள் குறைகளை கூறினார்.
அவர்களின் மின்சாரம் தொடர்பான குறைகளை கேட்டறிந்த அதிகாரிகள் குறைகளை நிவர்த்தி செய்வதாக உறுதி அளித்தனர். மேலும் சென்னையில் நடைமுறைப்படுத்துவது போல் தூத்துக்குடியிலும் விரைவில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் பணி நடைபெறும் என்றும் தெரிவித்தார்.
மேலும் அலுவலகர்கள், களப்பணியாளர்கள் அவர்களுக்கு மின்பாதுகாப்பு, மின் நுகர்வோர் சேவை, தடையற்ற மின்சாரம் வழங்குவது குறித்தும் கூட்டத்தில் விளக்கிக் கூறப்பட்டது.
நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாநகர கவுன்சிலர்கள் வெற்றிச்செல்வன், ராஜதுரை, சுயம்பு, விஜயகுமார் மற்றும் சிவணைந்த பெருமாள், ஜேசுதாஸ், சுப்பிரமணியன் சேகர், ரகுபதி முத்துகிருஷ்ணன் நலச்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தூத்துக்குடி நகர் செயற்பொறியாளர் ராம்குமார் நன்றிகூறினார்.