என் மலர்
நீங்கள் தேடியது "Sonia Gandhi"
- சுமார் 90,000 அரசுப் பள்ளிகள் மூடப்பட்டிருக்கின்றன. அதேவேளையில், தனியார் பள்ளிகளின் எண்ணிக்கை அதிகரித்திருக்கின்றன.
- பத்தாண்டுகளில் நமது கல்வி முறைகளில் 'பொது சேவை' என்கிற உணர்வு திட்டமிட்டு துடைத்தெறியப்பட்டுள்ளது.
மத்திய பாஜக அரசு கடந்த 2019 இல் கொண்டு வந்த தேசிய கல்விக் கொள்கை (NEP) விவாதப்பொருளாக மாறி வருகிறது. இந்நிலையில் தேசிய கல்விக் கொள்கை குறித்த கடுமையான விமர்சனங்களை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி முன்வைத்துள்ளார்.
கல்வித்துறையில் அதிகாரம், வணிகமயமாக்கல், வகுப்புவாதம் (centralisation of power, commercialisation, and communalisation)' ஆகியவற்றுக்கான கருவியாக, கல்விக் கொள்கையை மத்திய பாஜக அரசு பயன்படுத்தி வருவதாக சோனியா காந்தி குற்றம்சாட்டி உள்ளார்.
செய்தி இதழ் ஒன்றில் அவர் எழுதியுள்ள கட்டுரையில், கடந்த 10 ஆண்டுகளாக மத்திய அரசின் நடவடிக்கைகள் மூலம், கல்வியில் தமது மூன்று முக்கிய கொள்கைகளை அமல்படுத்துவதிலேயே அரசு தீவிரமாக இருப்பதை காண முடிகிறது.
"மத்திய அரசுடன் அதிகாரத்தை மையப்படுத்துதல்; கல்வியில் முதலீடுகளை வணிகமயமாக்குதல் மற்றும் தனியார் துறைக்கு அவுட்சோர்சிங் செய்தல், மற்றும் பாடப்புத்தகங்கள், பாடத்திட்டங்கள் மற்றும் கல்வி நிறுவங்களில் வகுப்புவாதத்தை திணித்தல்" ஆகிய கொள்கைகளை அமல்படுத்துவதில் அரசு கவனம் செலுத்துகிறது.
மத்திய கல்வி ஆலோசனை வாரியம் மத்திய மற்றும் மாநில அரசுகளின் கல்வி அமைச்சர்களைக் கொண்டுள்ளது. ஆனால் செப்டம்பர் 2019க்குப் பிறகு ஒரு கூட்டம் கூட நடத்தப்படவில்லை.
குழந்தைகளின் இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமை (RTE) சட்டத்தை செயல்படுத்த தேவையான நிதி உதவியின் ஒரு பகுதியாக சமக்ர சிக்ஷா அபியான் (SSA) நிதி பல ஆண்டுகளாக மாநிலங்களுக்கு வழங்கப்பட்டு வந்தது.
ஆனால் சமக்ர சிக்ஷா அபியான் (SSA) திட்டத்திற்கான மானியங்களை நிறுத்தி வைத்து , PM-SHRI திட்டத்தை செயல்படுத்த மாநில அரசுகளை மத்திய அரசு மிரட்டி வருகிறது. SSA நிதியை மத்திய அரசு ஒதுக்கிட பாராளுமன்ற நிலைக்குழுவும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறது என்று தெரிவித்தார்.

உயர்கல்வியில் ஏற்படுத்தப்பட்ட மாற்றங்கள் குறித்து குறிப்பிட்ட அவர், 2025 ஆம் ஆண்டில் பல்கலைக்கழக மானியக் குழுவின் (UGC) புதிய வரைவு உருவாக்கப்பட்டது. இது துணைவேந்தர்களை நியமிப்பதில் மாநில அரசுகளின் பங்கைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
பல்கலைக்கழக வேந்தராக நியமிக்கப்படும் ஆளுநர்கள் மூலம் - மாநில பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களைத் தேர்ந்தெடுப்பதில் ஏகபோக அதிகாரத்தை மத்திய அரசு வழங்கியுள்ளது. இது கூட்டாட்சிக்கு கடுமையான அச்சுறுத்தலாக அமைந்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.
மேலும் பள்ளிக்கல்வியை தனியார்மயமாக்கலை நோக்கி மத்திய அரசு நகர்த்தி வருகிறது. கடந்த 2014-ஆம் ஆண்டுமுதல், சுமார் 90,000 அரசுப் பள்ளிகள் மூடப்பட்டிருக்கின்றன. அதேவேளையில், தனியார் பள்ளிகளின் எண்ணிக்கை அதிகரித்திருக்கின்றன என்று தெரிவித்துள்ள சோனியா காந்தி NEP உடைய பின்விளைவுகள் குறித்து எச்சரித்துள்ளார்.
மேலும் பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களைக் கடன் வாங்கும் சூழலுக்கு மத்திய அரசின் செயல்பாடுகள் தள்ளியிருப்பதாகத் தெரிவித்த அவர், இதன்மூலம் மாணவர்களின் கல்விக் கட்டணங்கள் உயர்ந்துள்ளாககுறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து அரசாங்கம் கல்வி முறை மூலம் வகுப்புவாத வெறுப்பைப் போதித்து வளர்ப்பதாக அவர் குற்றம் சாட்டினார். மகாத்மா காந்தியின் படுகொலை மற்றும் முகலாய வரலாறு பற்றிய குறிப்புகளை நீக்கிய NCERT பாடப்புத்தகங்களில் திருத்தங்களை அவர் மேற்கோள் காட்டியா அவர், கல்வித் தகுதியை விட கருத்தியல் பரிசீலனைகளின் அடிப்படையில் ஆசிரியர்களை பணியமர்த்துவதை விமர்சித்தார்.

முக்கிய நிறுவனங்களில் தலைமைப் பதவிகள், தங்கள் சித்தாந்தங்களுக்கு வளைந்து கொடுப்பவர்களுக்கு மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளன என்று தெரிவித்தார். இது பேராசிரியர்கள் மற்றும் துணைவேந்தர்களுக்கான தகுதிகளை நீர்த்துப்போகச் செய்துள்ளதாகச் சாடினார்.
இந்தியாவின் பொது கல்வி அமைப்பை இரக்கமின்றி அழிக்கும் நடவடிக்கைகளை அரசு மேற்கொள்வதாகவும், கடந்த பத்தாண்டுகளில் நமது கல்வி முறைகளில் 'பொது சேவை' என்கிற உணர்வு திட்டமிட்டு துடைத்தெறியப்பட்டுள்ளது.
கல்விக் கொள்கை வகுக்கப்படும்போது கல்வியின் தரத்தை குறித்து கண்டுகொள்வதேயில்லை என்பதும் தெளிவாகிறது என்று சோனியா காந்தி கடுமையான விமர்சனங்களைத் தனது கட்டுரையில் முன்வைத்துள்ளார்.
- கிராமப்புற தொழிலாளர்களுக்கு பொருளாதார பாதுகாப்பை வழங்குவதில் இத்திட்டம் முக்கிய பங்கு வகிக்கிறது.
- வேலை நாட்கள் எண்ணிக்கையை 100-ல் இருந்து 150-ஆக அதிகரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
புதுடெல்லி:
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், மாநிலங்களவை எம்.பி.யுமான சோனியா காந்தி மாநிலங்களவையில் கேள்வி நேரத்தில் பேசியதாவது:
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்துக்கான பட்ஜெட் ஒதுக்கீடு ரூ.86,000 கோடியாக தேக்கமடைந்துள்ளது குறித்து மிகவும் கவலைப்படுகிறேன்
ஒதுக்கப்பட்ட பட்ஜெட்டில் உண்மையில் ரூ.4,000 கோடி குறைந்துள்ளது. ஒதுக்கப்பட்ட நிதியில் கிட்டத்தட்ட 20 சதவீதம் முந்தைய ஆண்டுகளின் நிலுவைத் தொகையை அடைக்கப் பயன்படுத்தப்படும் என மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.
அதிகரித்து வரும் பணவீக்கம் மற்றும் வேலை பற்றாக்குறைக்கு மத்தியில் கிராமப்புற தொழிலாளர்களுக்கு பொருளாதார பாதுகாப்பை வழங்குவதில் இந்தத் திட்டம் முக்கிய பங்கு வகிக்கிறது.
இந்தத் திட்டத்தை மேம்படுத்துவது கிராமப்புற மக்களுக்கு ஆதரவளிப்பது மட்டுமின்றி, கிராமப்புறங்களில் வாங்கும் சக்தியை அதிகரிக்கும். திட்டத்தை நிலைநிறுத்தவும் விரிவுபடுத்தவும் போதுமான நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும்.
குறைந்தபட்ச ஊதியம் ஒரு நாளைக்கு ரூ.400 ஆக அதிகரிக்கப்பட வேண்டும். சரியான நேரத்தில் ஊதியம் வழங்கப்பட வேண்டும். வேலை நாட்களின் எண்ணிக்கையை ஆண்டுக்கு 100-ல் இருந்து 150-ஆக அதிகரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
- 1997-ம் ஆண்டு சோனியா காந்தி, கணவர் ராஜீவின் வழித்தடத்தில் அரசியலில் குதித்தார்.
- 2017-ம் ஆண்டு வரையில் சோனியா தான் காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்தார்.
புதுடெல்லி :
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, 1991-ம் ஆண்டு மே மாதம் 21-ந்தேதி தமிழ்நாட்டில் ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டபோது படுகொலை செய்யப்பட்டார்.
அதைத் தொடர்ந்து 1997-ம் ஆண்டு சோனியா காந்தி, கணவர் ராஜீவின் வழித்தடத்தில் அரசியலில் குதித்தார். மறு ஆண்டிலேயே கட்சியின் தலைவரானார். 2017-ம் ஆண்டு வரையில் அவர்தான் தலைவராக இருந்தார். அதன்பின்னர் அவர் மகன் ராகுல் காந்தி, கட்சிக்கு தலைவரானார். ஆனால் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரசுக்கு ஏற்பட்ட தோல்விக்கு தார்மீகப்பொறுப்பேற்று அவர் பதவி விலகினார். அதன்பின்னர் மீண்டும் சோனியாவே கட்சியின் இடைக்கால தலைவரானார்.
இந்த நிலையில் கடந்த 17-ந் தேதி நடந்த காங்கிரஸ் தலைவர் தேர்தலில் சோனியா, ராகுல், பிரியங்கா என அந்தக் குடும்பத்தினர் யாரும் போட்டியிடவில்லை. முன்னாள் மத்திய மந்திரிகள் மல்லிகார்ஜூன கார்கேயும், சசி தரூரும் நேருக்கு நேர் மோதினர். இதில் மல்லிகார்ஜூன கார்கே வென்றார். நேற்று அவர் முறைப்படி கட்சியின் தலைவர் பதவியை ஏற்றார். அவரிடம் காங்கிரஸ் தலைவர் பொறுப்பை சோனியா ஒப்படைத்தார்.
அப்போது சோனியாவுக்கு நினைவுப்பரிசாக ராஜீவ் காந்தியின் 'பிரேம்' செய்யப்பட்ட புகைப்படத்தை மல்லிகார்ஜூன கார்கே வழங்கினார். அந்தப் படத்தைப் பெற்று சோனியா உயர்த்திப்பிடித்தபோது, கட்சித்தொண்டர்கள் ஆரவாரம் செய்தனர்.
இதையொட்டி இன்ஸ்டாகிராம் சமூக ஊடக பக்கத்தில் பிரியங்கா ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில் அவர், " உங்களை எண்ணி பெருமைப்படுகிறேன் அம்மா. உலகம் என்ன சொன்னாலும் சரி, என்ன நினைத்தாலும் சரி, எனக்குத் தெரியும், நீங்கள் அன்புக்காகத்தான் எல்லாவற்றையும் செய்தீர்கள்" என உருகி உள்ளார்.
அத்துடன் அவர் தனது தாய் சோனியா, தந்தை ராஜீவ் இருவருடைய படத்தையும் வெளியிட்டுள்ளார்.
சோனியா காந்தி தலைவர் பதவியில் இருந்து விடைபெற்றதையொட்டி அந்தக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான அஜய் மக்கான், " இந்த மகத்தான நாட்டின் மீது அவர் (சோனியா) கொண்டிருக்கும் ஆழ்ந்த அன்பில் இருந்து அவர் தனது அரசியல் உத்வேகத்தைப் பெறுகிறார். மக்களும் அதே அன்பையும், நம்பிக்கையையும் அவருக்கு திரும்ப அளித்தனர்" என உருக்கமாகக் கூறியது குறிப்பிடத்தக்கது.
- காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மல்லிகார்ஜூன கார்கே மரியாதை.
- இந்தியாவை வலிமையான நாடாக மாற்றியதில் இந்திரா காந்தியின் பங்களிப்பு ஒப்பற்றது.
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்திற்கு நேரில் சென்ற காங்கிரஸ் கட்சியினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
குறிப்பாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, தற்போதைய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் மூத்த தலைவர்கள் பங்கேற்றனர்.
இதற்கிடையே, இந்திரா காந்தியின் நினைவு தினத்தையொட்டி ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில், "பாட்டி, நான் உங்கள் அன்பு மற்றும் மதிப்பு இரண்டையும் என் இதயத்தில் சுமந்துகொண்டிருக்கிறேன். உங்கள் உயிரை தியாகம் செய்த இந்தியாவை சிதைக்க நான் ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன்" என்று குறிப்பிட்டிருந்தார்.
தொடர்ந்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறுகையில், " இந்தியாவின் முதல் பெண் பிரதமர் இந்திரா காந்தியின் நினைவு தினத்தில் அவருக்கு எனது மரியாதைகள். விவசாயம், பொருளாதாரம் அல்லது ராணுவ பலம் எதுவாக இருந்தாலும், இந்தியாவை வலிமையான நாடாக மாற்றியதில் இந்திரா காந்தியின் பங்களிப்பு ஒப்பற்றது" என்று கூறினார்.
- டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்திற்கு நேரில் சென்ற காங்கிரஸ் கட்சியினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
- காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தனது நடைபயணத்தின்போது மரியாதை.
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 105வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்திற்கு நேரில் சென்ற காங்கிரஸ் கட்சியினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
குறிப்பாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, தற்போதைய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் மூத்த தலைவர்கள் பங்கேற்று மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இதையடுத்து, காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தனது நடைபயணத்தின்போது, முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
- குளிர்கால கூட்டத்தொடரில் 16 புதிய மசோதாக்களை அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
- மூத்த தலைவர்கள் ராகுல் காந்தியுடன் யாத்திரையைத் தொடர முடிவு செய்துள்ளதாக தகவல்
புதுடெல்லி:
பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் புதன்கிழமை தொடங்குகிறது. குஜராத் சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டு கூட்டத்தொடர் ஒரு மாதம் தாமதமாக தொடங்குகிறது. இந்த கூட்டத் தொடரில், பல மாநில கூட்டுறவுச் சங்கங்களில் பொறுப்புணர்வை அதிகரிக்கவும், தேர்தல் செயல்முறையை சீர்திருத்தவும் வகை செய்யும் மசோதா உள்ளிட்ட 16 புதிய மசோதாக்களை அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இதற்கிடையே காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மற்றும் ஜெய்ராம் ரமேஷ், திக்விஜய் சிங் உள்ளிட்ட பல்வேறு மூத்த தலைவர்கள் பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் பங்கேற்கமாட்டார்கள் என தகவல் வெளியாகி உள்ளது. இந்த தலைவர்கள் அனைவரும் தற்போது ராகுல் காந்தியின் ஒற்றுமை யாத்திரையில் தொடர்ந்து பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாத யாத்திரையில் இருந்து வேறு நிகழ்ச்சியில் கவனம் செலுத்துவதை கட்சித் தலைமை விரும்பவில்லை என்றும் அதனால்தான் மூத்த தலைவர்கள் குளிர்கால கூட்டத்தொடரைத் தவிர்த்துவிட்டு ராகுல் காந்தியுடன் யாத்திரையைத் தொடர முடிவு செய்துள்ளதாகவும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கட்சியின் தேசிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மல்லிகார்ஜூன கார்கே, கட்சியில் ஒருவருக்கு ஒரு பதவி என்ற கொள்கையின்படி, மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். சோனியா காந்தி தலைமையில் இன்று மாலையில் நடைபெற உள்ள கூட்டத்தில், மாநிலங்களவையின் புதிய எதிர்க்கட்சித் தலைவர் குறித்து முடிவு எடுக்கப்படும் எனத் தெரிகிறது. பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் காங்கிரசின் செயல்பாடுகள் குறித்தும் இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது.
அதேசமயம் காங்கிரஸ் தலைவர் கார்கேவையே மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவராக தொடர அனுமதிக்கலாமா? என்று கட்சி தலைமை ஆலோசித்து வருகிறது. இது குறித்து சோனியா காந்தி, கட்சியின் மற்ற மூத்த தலைவர்களுடன் கலந்து ஆலோசித்து இன்று இறுதி முடிவு எடுக்கலாம்.
ஒருவருக்கு ஒரு பதவி என்ற கொள்கையை கடைப்பிடிக்க முடிவு செய்தால், ப.சிதம்பரமும், திக்விஜய சிங்கும் எதிர்க்கட்சி தலைவர் பதவிக்கு பரிசீலனை செய்யப்படலாம்.
- சோனியா காந்தி இன்று காலை டெல்லியில் இருந்து ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் சென்றார்.
- ஹெலிகாப்டர் மூலம் ராகுல் காந்தி தங்க உள்ள புந்தா பகுதிக்கு சென்றார்.
ஜெய்ப்பூர்:
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி எம்.பி. கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை நடைபயணம் மேற்கொண்டுள்ளார். இன்று காலை அவர் ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரில் இருந்து 92 -வது நாளாக தனது நடைபயணத்தை தொடங்கினார். இந்த மாநிலத்தில் அவர் 17 நாட்கள் 500 கிலோமீட்டர் தூரம் நடைபயணம் செய்கிறார். இன்று இரவு அவர் தனது பயணத்தை முடித்துக்கொண்டு புந்தாவில் தங்குகிறார்.
இந்தநிலையில் சோனியா காந்தி இன்று காலை டெல்லியில் இருந்து ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் சென்றார். பின்னர் ஹெலிகாப்டர் மூலம் ராகுல் காந்தி தங்க உள்ள புந்தா பகுதிக்கு சென்றார்.
சோனியா காந்திக்கு நாளை பிறந்தநாள் ஆகும். இதற்காக அவர் ராஜஸ்தான் சென்றுள்ளார். இதையொட்டி ராகுல்காந்தி நாளை நடை பயணம் செல்லவில்லை. நாளை மறுநாள் ( 10-ந்தேதி) மீண்டும் தனது பயணத்தை தொடங்குகிறார்.
- ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவரும், இந்திய தேசிய காங்கிரஸ் பேரியக்கத்தின் முன்னாள் தலைவருமான சோனியா காந்திக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
- எதிர்வரும் ஆண்டு அவருக்கு மகிழ்ச்சியான நலமான ஆண்டாக அமைய விழைகிறேன்.
சென்னை:
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு வருமாறு:-
ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவரும், இந்திய தேசிய காங்கிரஸ் பேரியக்கத்தின் முன்னாள் தலைவருமான சோனியா காந்திக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
எதிர்வரும் ஆண்டு அவருக்கு மகிழ்ச்சியான நலமான ஆண்டாக அமைய விழைகிறேன்.
இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.
- யாத்திரையில் முன்னாள் காங்கிரஸ் தலைவர் சோனியாவும், பிரியங்காவும் கலந்து கொண்டனர்.
- சோனியா முக கவசம் அணிந்து இருந்தார். இருவரும் ராகுலுடன் சிறிது தூரம் நடந்து சென்றார்.
புதுடெல்லி:
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாத யாத்திரை சென்று கொண்டிருக்கிறார்.
கடந்த செப்டம்பர் 7-ந்தேதி கன்னியாகுமரியில் யாத்திரையை தொடங்கினார். அங்கிருந்து கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, அரியானா உள்பட 10 மாநிலங்களை கடந்து 108-வது நாளான இன்று காலையில் தலைநகர் டெல்லிக்குள் யாத்திரை நுழைந்தது.
டெல்லி எல்லையான பதர்பூரில் டெல்லி மாநில காங்கிரஸ் தலைவர் அனில் சவுத்ரி தலைமையில் காங்கிரசார் திரண்டு உற்சாகமாக வரவேற்றனர். பாத யாத்திரை புறப்படும் போதே தொண்டர்கள் கூட்டம் அலைமோதியது. ஆயிரக்கணக்கான தொண்டர்கள் ராகுலுடன் அணிவகுத்து பாத யாத்திரையில் கலந்து கொண்டனர்.
யாத்திரையில் முன்னாள் காங்கிரஸ் தலைவர் சோனியாவும், பிரியங்காவும் கலந்து கொண்டனர். சோனியா முக கவசம் அணிந்து இருந்தார். இருவரும் ராகுலுடன் சிறிது தூரம் நடந்து சென்றார்.
ராகுல் நடைபயணத்தில் சோனியா கலந்து கொள்வது இது 2-வது முறையாகும். ஏற்கனவே கர்நாடகாவில் யாத்திரை நடந்த போது கடந்த அக்டோபர் மாதம் கலந்து கொண்டதும் குறிப்பிடத்தக்கது.
அரியானா முன்னாள் முதல்-மந்திரி பூபேந்தர்சிங் ஹுடா, குமாரி செல்ஜா, ரன்தீப் சுர்ஜேவாலா ஆகியோரும் கலந்து கொண்டனர்.
கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை பின்பற்றும் படியும், பின்பற்ற இயலாவிட்டால் பாத யாத்திரையை ஒத்திவைக்கும்படியும் மத்திய சுகாதாரத்துறை கடிதம் எழுதி உள்ளது.
இந்த நிலையில் பல்லாயிரக்கணக்கில் தொண்டர்கள் திரண்டு இருப்பதால் பரபரப்பு ஏற்பட்டது.
வழக்கமாக ராகுல் பாத யாத்திரையில் பாதுகாப்பு அதிகமாக இருக்கும். அவரை சுற்றிலும் கயிறுகளை பிடித்தபடி யாரும் அருகில் நெருங்க முடியாத படி போலீசார் அணிவகுத்து வருவார்கள்.
ஆனால் இன்று பாது காப்பு முறையாக செய்யாததால் காங்கிரசார் அதிருப்தி அடைந்தனர். காங்கிரஸ் தொண்டர்களே அரண் போல் நின்று யாத்திரையில் பாதுகாப்பாக அழைத்து சென்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
ராகுல் சென்ற பாதையின் இரு புறமும் மக்கள் திரண்டு நின்று வரவேற்பு அளித்தார்கள்.
இன்று இரவு செங்கோட்டை அருகே தங்குகிறார்கள். டெல்லியில் 9 நாட்கள் யாத்திரை நடக்கிறது. புத்தாண்டு ஓய்வுக்கு பிறகு ஜனவரி 3-ந்தேதி புறப்படுகிறது.
- காங்கிரஸ் தலைவர் தேர்தல் ஒரு கேலி கூத்தான நாடகம்.
- காங்கிரஸ் கட்சியில் ஜனநாயகம் இல்லை, அதிகாரம் மட்டுமே உள்ளது.
தெக்ரி கர்வால்:
காங்கிரஸ் கட்சியில் பல தலைவர்கள் இருந்தாலும், முக்கிய தலைவர்கள் காந்தி (சோனியாகாந்தி) குடும்பத்தை சேர்ந்தவர்கள்தான் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித் குறிப்பிட்டுள்ளார்.
மல்லிகார்ஜுனா கார்கே கட்சியின் தேசிய தலைவர் என்றும், காங்கிரஸ் அமைப்பை வலுப்படுத்துவதில் அவர் முக்கிய பங்கு வகிக்கிறார் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதை பாஜக விமர்சித்துள்ளது.
இந்நிலையில் உத்தரகாண்ட் மாநிலத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பாஜகவை சேர்ந்த அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, கூறியுள்ளதாவது:
முதல் நாளிலிருந்தே நான் கூறியதை சல்மான் குர்ஷித் உறுதிப்படுத்தி உள்ளார். அதிகாரம் காந்தி (சோனியாகாந்தி) குடும்பத்திடம் மட்டுமே உள்ளது. காங்கிரசில் நடைபெற்ற தலைவர் தேர்தல், கட்சியில் ஜனநாயகம் மற்றும் மாற்றத்தை பிரதிபலிப்பதாக சிலர் தெரிவித்தனர்.
காங்கிரஸ் தலைவர் தேர்தல் ஒரு கேலி கூத்தான நாடகம். கார்கேவை ரிமோட் கண்ட்ரோலாக மட்டுமே காங்கிரஸ் பயன்படுத்துகிறது. அவர் ஒரு ரப்பர் ஸ்டாம்ப் மட்டுமே, காங்கிரஸ் கட்சியில் ஜனநாயகம் இல்லை, அதிகாரம் காந்தி குடும்பத்திடம் மட்டுமே உள்ளது என்பதே உண்மை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- தி.மு.க. எம்.பி. டி.ஆர்.பாலுவும், அ.தி.மு.க. எம்.பி. தம்பிதுரையும் புன்னகையுடன் கட்டித்தழுவிக்கொண்டனர்.
- சோனியா காந்தி தனிமையில் அமர்ந்திருந்தபோதும் அவரிடம் பலரும் வந்து வணக்கம் செலுத்தி நலம் விசாரித்துக்கொண்டனர்.
புதுடெல்லி :
ஜனாதிபதி முர்முவின் உரையுடன் தொடங்கிய இந்த கூட்டுக்கூட்டம், பாராளுமன்ற மையமண்டபத்தில் நடைபெற்றபோது காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, தனியாக வந்து அமர்ந்திருந்தார். வழக்கமாக அவர் தனது கட்சி எம்.பி.க்கள் புடைசூழ அமர்ந்திருப்பார்.
இந்த முறை தனியாக அமர்ந்ததற்கு காரணம் இல்லாமல் இல்லை.
காங்கிரஸ் கட்சியின் பெரும்பாலான தலைவர்களும், எம்.பி.க்களும் காஷ்மீரின் ஸ்ரீநகரில் நேற்று முன்தினம் நடந்த ராகுல் காந்தியின் ஒற்றுமை இந்தியா பாத யாத்திரை நிறைவு விழாவில் கலந்துகொள்ளச்சென்றிருந்தனர். மோசமான வானிலை காரணமாக விமான புறப்பாடு தாமதம் ஆனதால் அவர்கள் ஸ்ரீநகரில் சிக்கிக்கொண்டனர்.
சோனியா காந்தி தனிமையில் அமர்ந்திருந்தபோதும் அவரிடம் பலரும் வந்து வணக்கம் செலுத்தி நலம் விசாரித்துக்கொண்டனர்.
சோனியா காந்தியும், ஜனாதிபதி திரவுபதி முர்மு மற்றும் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கரும் பரஸ்பரம் வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனர்.
சோனியா காந்தியின் அருகில் அமர்ந்திருந்த மத்திய சிவில் விமானப் போக்குவரத்து துறை மந்திரி ஜோதிர் ஆதித்ய சிந்தியா அவரிடம் பேசிக்கொண்டதை காண முடிந்தது.
பின்வரிசையில் அமர்ந்திருந்த திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் டெரிக் ஓ பிரையனிடம் சோனியா நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தார்.
பாராளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் கட்சி வித்தியாசமின்றி உறுப்பினர்கள் ஒரே இருக்கையை பகிர்ந்து கொண்டு அமர்ந்திருந்ததையும் பார்க்க முடிந்தது.
அந்த வகையில் தேசியவாத காங்கிரஸ் எம்.பி. சுப்ரியா சுலே, தி.மு.க. எம்.பி. கனிமொழி, திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. சவுக்கதா ராய், பா.ஜ.க. எம்.பி. நீரஜ் சேகர், சிவகுமார் உடாசி, நிஷிகந்த் துபே ஆகிய 6 பேரும் ஒன்றாக அமர்ந்திருந்ததை காண முடிந்தது.
பிரதமர் மோடியுடன் பேசிக்கொண்டிருந்தபோது, கட்சி வித்தியாசம் பாராமல் தி.மு.க. எம்.பி. டி.ஆர்.பாலுவும், அ.தி.மு.க. எம்.பி. தம்பிதுரையும் புன்னகையுடன் கட்டித்தழுவிக்கொண்டனர்.
பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட்டு, மக்களவை ஒத்திவைக்கப்பட்ட பின்னர் முன்னாள் மத்திய மந்திரி ராம்விலாஸ் பஸ்வான் மகன் சிராக் பஸ்வானிடம் பேசிய பிரதமர் மோடி, அவரது தாயார் உடல்நிலை குறித்து அக்கறையுடன் விசாரித்ததையும் பார்க்க முடிந்தது.
- உங்களுக்கு உழைக்கவே எனது வாழ்க்கையின் இறுதி லட்சியமாக இருக்கும்.
- நல்லவன் என்று சொன்னாலும் சொல்லாவிட்டாலும் கெட்டவன் என்று சொல்கின்ற அளவிற்கு நடக்க மாட்டேன்.
ஈரோடு:
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளரான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் முதன் முதலில் நேற்று மாலை பிரசாரத்தில் ஈடுபட்டார். மாணிக்கம்பாளையம் பகுதியில் முதல் நாள் பிரச்சாரத்தில் ஈடுபட்ட ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பொதுமக்கள் மத்தியில் பேசினார்.
எனது மகன் திருமகன் ஈ.வெ.ரா 1½ ஆண்டுகளாக இந்த பகுதி மக்களுக்காக உழைத்திருக்கிறார். திருமகன் ஈ.வெ.ரா மறைந்தவுடன் என்ன செய்வதென்று தெரியாமல் துக்கத்தில் துடித்துக்கொண்டிருந்த எனக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் கூறியதோடு மட்டுமல்லாமல் ஊக்கமும் கொடுத்தார்.
நான் போட்டியிட முதலமைச்சரும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் விருப்பம் தெரிவித்ததால் நான் இடைத்தேர்தலில் போட்டியிடுகிறேன்.
ஈரோடு நகர் போக்குவரத்து நெரிசலால் ஸ்தம்பித்து இருக்கிறது. அதனை தீர்க்க வேண்டும். தற்போது அமைச்சர் முத்துசாமியுடன் இணைந்து ஈரோட்டு மக்களின் குறைகளை தீர்க்க பாடுபடுவேன் என உறுதி அளிக்கிறேன். ஈரோட்டில் கடந்த ஒரு வாரங்களாக கூட்டணி கட்சியினர் முத்துசாமி தலைமையில் மக்களை சந்தித்து வாக்குகளை சேகரித்து கொண்டிருக்கிறேன்.
முதல் முதலாக முத்துசாமியுடன் உங்களை சந்திப்பது இங்கு தான் என்றும். எனக்கு நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ நீங்கள் நம்புகின்ற விஷயம் என்பதால் சொல்கிறேன் "பிள்ளையார் சுழியை இங்குதான் போட்டிருக்கிறேன்.
மேலும் என்னை உங்களுக்காக உழைக்க வாய்ப்பு ஏற்படுத்தி தந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சோனியா காந்தி மற்றும் அமைச்சர் முத்துசாமி ஆகியோருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். உங்களுக்கு உழைக்கவே எனது வாழ்க்கையின் இறுதி லட்சியமாக இருக்கும். நல்லவன் என்று சொன்னாலும் சொல்லாவிட்டாலும் கெட்டவன் என்று சொல்கின்ற அளவிற்கு நடக்க மாட்டேன் என்று உறுதியளிக்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர் மறைந்த எம்.எல்.ஏ. திருமகன் ஈ.வெ.ரா முதலில் நாம் தமிழர் கட்சியில் இணைவதாக இருந்ததாக சீமான் பொதுக்கூட்டத்தில் பேசியது குறித்த கேள்விக்கு பதிலளித்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், சீமான் உணர்ச்சிவசப்படக்கூடிய நபர் என்றும், அவர் மீது பாசம் உள்ளது. ஆனால் அடிக்கடி சொன்னதையே மாற்றி மாற்றி சொல்லக்கூடியவர்.
சீமான் எனது பாசத்திற்கு உரியவர் என்றார். மேலும் என்னை இகழ்ந்தாலும், எனது மகனை பற்றி சொன்னாலும் தவறாக எடுத்துக் கொள்ள மாட்டேன். அன்பின் மிகுதியால் சொல்கிறார் என எடுத்துக்கொள்வேன் என்றார்.