என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tag 100003"

    மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணியாமல் செல்பவர்களை மடக்கி பிடித்து அபராதம் விதிக்கப்பட உள்ளது.
    சென்னை:

    சென்னையில் இன்று முதல் இருசக்கர வாகனங்களில் பின்னால் அமர்ந்து செல்வோரும் ஹெல்மெட் அணிய வேண்டியது கட்டாயம் என மாநகர போக்குவரத்து காவல்துறை உத்தரவிட்டுள்ளது.

    சென்னையில் சாலை விபத்துகளில் உயிரிழப்பவர்களின் மரணம் தொடர்பாக மாநகர போக்குவரத்து போலீசார் ஆய்வு நடத்தினர்.

     இதில் மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் விபத்தில் சிக்கும் போது ஹெல்மெட் அணியாத காரணத்தால் தலை நசுங்கி உயிரிழப்பது தெரிய வந்தது.

    இந்த ஆண்டு ஜனவரி 1-ந்தேதி முதல் கடந்த 15-ந்தேதி வரையில் ஹெல்மெட் அணியாமல் உயிரிழந்தவர்கள் எத்தனை பேர் என்று கணக்கு எடுக்கப்பட்டது. இதில் மோட்டார் சைக்கிள் விபத்துகளில் ஹெல்மெட் அணியாமல் சென்று 98 பேர் உயிரிழந்திருப்பதும். 841 பேர் காயம் அடைந்ததும் கண்டுப்பிடிக்கப்பட்டது. 

    இவர்களில் 80 பேர் மோட்டார் சைக்கிளை ஓட்டிச்சென்றவர்கள் என்பதும், மீதம் உள்ள 19 பேரும் மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணியாமல் பின்னால் அமர்ந்து சென்றவர்கள் என்பதும் தெரியவந்தது. ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிளை ஓட்டிச்சென்ற 714 பேரும், பின்னால் அமர்ந்து சென்ற 127 பேரும் காயம் அடைந்து இருக்கிறார்கள்.

    இதனை தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

    இதற்காக இன்று முதல் சென்னையில் ஹெல்மெட் அணியாதவர்களை பிடிக்க சிறப்பு தணிக்கை மேற்கொள்ளப்படும் என்று போலீஸ் தரப்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளை ஒட்டிச்செல்பவர்களும், பின்னால் அமர்ந்து செல்பவர்களும் ஹெல்மெட் அணியாமல் சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

    வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடித்து விபத்தில்லா சென்னையை உருவாக்க முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் மாநகர போலீஸ் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக போக்குவரத்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும் போது, சென்னையில் உள்ள 312 போக்குவரத்து சந்திப்புகளிலும் இன்று மறுநாள் முதல் அதிரடி சோதனை நடத்தப்படும். அப்போது மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணியாமல் செல்பவர்களை மடக்கி பிடித்து அபராதம் விதிக்கப்பட உள்ளது. எனவே மோட்டார் சைக்கிளில் செல்லும் இருவருமே கட்டாயம் ஹெல்மெட் அணிந்து வர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
    அனைத்து வாகன ஓட்டிகளும் ஹெல்மெட் விதியை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை எச்சரித்துள்ளது.
    சென்னை:

    சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு வருமாறு:-

    சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையினர், சென்னை மாநகரில் விபத்துகள் மற்றும் உயிரிழப்புகளை குறைக்கவும், போக்குவரத்து விதிகளை அனைவரும் கடைப்பிடிக்கவும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இது தொடர்பாக  சென்னை பெருநகர காவல்துறை அதிகாரிகள் மற்றும் ஆளினர்கள் பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மற்றும் சிறப்பு வாகன தணிக்கைகளை நடத்தி வாகன விதி மீறுபவர்களை கண்காணித்தும், போக்குவரத்து விதிகளை கடைப்பிடிப்பதை மேம்படுத்துவதற்காகவும், ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டும் வாகன ஓட்டிகள் மற்றும் பின்னிருக்கை நபரின் மீது வழக்கு பதிவு செய்து வருகின்றனர்.

    வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இன்று (23.05.2022) சிறப்பு வாகன தணிக்கை நடத்தப்பட்டது. ஹெல்மெட் அணியாததற்காக 1,903 மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் மீதும், 2,023 வழக்குகள் பின்னிருக்கை பயணிகள் மீதும் பதியப்பட்டுள்ளது. 

    எனவே, அனைத்து வாகன ஓட்டிகளும் ஹெல்மெட் விதியை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என எச்சரிக்கப்படுகிறது.  ஹெல்மெட் அணியாத வாகன ஓட்டிகள் மற்றும் பின்னிருக்கை நபர் மீதும் மோட்டார் வாகன சட்டத்தின்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த சிறப்பு தணிக்கை மேலும் தொடரும்.

    அனைத்து வாகன ஓட்டிகளும் போக்குவரத்து விதிகளை கடைபிடித்து, விலைமதிப்பற்ற மனித உயிர்களை காக்கவும், விபத்தில்லா நகரை அடையவும் சென்னை காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    இந்தியாவில் சாலை விபத்து, உயிரிழப்புகளை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கை எடுத்துவருகின்றன.
    மும்பை:

    சாலை விபத்துகளில் உயிரிழப்பவர்களின் மரணம் தொடர்பாக போக்குவரத்து போலீசார் ஆய்வு நடத்தியதில், மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் விபத்தில் சிக்கும்போது ஹெல்மெட் அணியாத காரணத்தால் தலை நசுங்கி உயிரிழப்பது தெரியவந்தது.

    இந்நிலையில், மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் பைக்கின் பின் இருக்கையில் அமர்ந்து பயணிப்பவர்களும் ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும் என மும்பை போக்குவரத்து போலீசார் உத்தரவிட்டனர். அடுத்த 15 நாட்களில் இது அமலுக்கு வரும் என போக்குவரத்து போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஹெல்மெட் கட்டாயம் விதியை மீறும் வாகன ஓட்டிகளுக்கு ரூ.500 அபராதம் மற்றும் 3 மாதத்திற்கு லைசன்ஸ் ரத்து செய்யப்படும் என மும்பை போலீசார் தெரிவித்துள்ளனர்.

    சென்னையிலும் பைக்கின் பின் இருக்கையில் அமர்ந்து பயணிப்பவர்களுக்கு ஹெல்மெட் கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
    மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து செல்பவர்களும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்றும் இல்லையென்றால் நடவடிக்கை பாயும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

    சென்னை:

    சென்னையில் ஹெல்மெட் அணியாதவர்களிடம் இருந்து கடந்த மாதம் 23-ந் தேதி முதல் போக்குவரத்து போலீசார் மீண்டும் அபராதம் வசூலிக்கும் நடவடிக்கையை தீவிரப்படுத்தனர்.

    இதன்படி தினமும் அபராதம் விதிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து செல்பவர்களும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்றும் இல்லையென்றால் நடவடிக்கை பாயும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

    இதன்படி கடந்த 12 நாட்களில் ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற 21 ஆயிரத்து 984 பேர் மீது வழக்கு போடப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து கொண்டு ஹெல்மெட் அணியாமல் பயணித்த 18 ஆயிரத்து 35 பேர் மீதும் வழக்கு பாய்ந்துள்ளது.

    கடந்த 12 நாட்களில் ஹெல்மெட் அணியாமல் வாகனங்களை ஓட்டிச் சென்றவர்களிடம் இருந்து ரூ.21 லட்சத்து 98 ஆயிரத்து 400 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. பின்னால் அமர்ந்து சென்றவர்களிடம் ரூ.18 லட்சத்து 3 அயிரத்து 500 அபராதம் வசூலிக்கப் பட்டுள்ளது.

    இதன் மூலம் ஹெல்மெட் அணியாதவர்களிடம் இருந்து ரூ.40 லட்சம் வரையில் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே வாகன விதிமீறல் வழக்குகளில் தொடர்புடையவர்களிடம் இருந்து தொடர்ந்து அபராதம் வசூலிக்க நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக 10 அழைப்பு மையங்கள் அமைத்து போலீசார், போனில் தொடர்பு கொண்டு பேசி அபராதம் வசூலிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இதன்படி கடந்த 50 நாட்களில் 1 லட்சத்து 27 ஆயிரத்து 66 பேர் பழைய வழக்குகளுக்கான (மார்ச் 2019 முதல் பதியப்பட்ட பழைய வழக்குகள்) அபராதத் தொகையாக 1 கோடியே 93 லட்சத்து 75 ஆயிரத்து 970 ரூபாய் விதி மீறிய வாகன ஓட்டிகளிடம் இருந்து வசூலிக்கப்பட்டது.

    இதில் 67 வாகன ஓட்டிகள் 100க்கும் அதிகமான விதி மீறல்களில் ஈடுபட்டு அபராதம் செலுத்தி உள்ளனர். ஒரே வாகன ஓட்டி அவருடைய ஒரே வாகனத்திற்காக 274 விதிமீறல்களில் ஈடுபட்ட அபராதம் செலுத்தி உள்ளார்.

    குடிபோதையில் வாகனம் ஓட்டி சிக்கிய 1181 வாகன ஓட்டிகளிடம் இருந்து ரூ. 1 கோடியே 19 லட்சத்து 12 ஆயிரம் அபராதமாக வசூலிக்கப்பட்டது. இதில் பெரும்பாலனோர் சராசரியாக ரூ.10000 அபராதம் செலுத்தி இருக்கிறார்கள்.

    மொத்தம் 1 லட்சத்து 28 ஆயிரத்து 247 பழைய வழக்குகளில் ரூ.3 கோடியே 12 லட்சத்து 87 ஆயிரத்து 920 அபராதமாக வசூலிக்கப்பட்டது. இது மட்டுமில்லாமல் புதிய வழக்குகளுக்காக ரூ. 3 கோடியே 37 லட்சத்து 34 ஆயிரத்து 800 அபராதமாக வசூலித்துள்ளனர்.

    சென்னை போலீசார் கடந்த 50 நாட்களில் 2 லட்சத்து 73 ஆயிரத்து 284 வழக்குகளில் ரூ.6 கோடியே 50 லட்சத்து 22 ஆயிரத்து 770 அபராத தொகையாக வசூலித்து உள்ளனர்.

    ‘ஹெல்மெட்’ அணிந்து வந்த வாகன ஓட்டிகளுக்கு திருச்செந்தூர் பகுதியில் உள்ள 13 பெட்ரோல் பங்குகளில் இன்று 1 லிட்டர் பெட்ரோல் இலவசமாக வழங்கப்பட்டது.
    திருச்செந்தூர்:

    விபத்துகளை குறைக்கும் வகையிலும், இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தியும் திருச்செந்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சரகத்திற்கு உட்பட்ட போலீசார் மற்றும் பெட்ரோல் பங்க் அசோசியே‌ஷன் இணைந்து ஹெல்மெட் அணியாமல் பெட்ரோல் பங்கிற்கு வரும் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு பெட்ரோல் வழங்குவது இல்லை என்ற புதிய முயற்சியை நாளை (1-ந் தேதி) தொடங்க உள்ளனர்.

    திருச்செந்தூர், குலசேகரன் பட்டினம், ஆறுமுகநேரி, ஆத்தூர் பகுதிகளில் உள்ள பெட்ரோல் பங்குகளில் இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. இதன் முன்னோட்டமாக திருச்செந்தூர் பகுதியில் உள்ள 13 பெட்ரோல் பங்குகளில் “மகிழ்ச்சி நேரம்” என்ற தலைப்பில் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.



    அதன்படி இன்று காலை 9 மணி முதல் 12 மணி வரை ஹெல்மெட் அணிந்து வந்த முதல் 30 இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு 1 லிட்டர் பெட்ரோல் இலவசமாக வழங்கப்பட்டது. இதேபோல் மாதத்தில் ஒரு நாள் காலை 9 மணி முதல் 12 மணி வரை ‘மகிழ்ச்சி நேரம்’ என்ற தலைப்பில் இலவசமாக பெட்ரோல் வழங்கப்பட இருக்கிறது.

    இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு இலவச பெட்ரோல் வழங்கும் நிகழ்ச்சியை திருச்செந்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பாரத் தொடங்கி வைத்தார்.

    புதுச்சேரியில் ஹெல்மெட் கட்டாய சட்டத்தை கண்டிப்பாக அமல்படுத்த வேண்டும் என கவர்னர் கிரண்பேடி மீண்டும் வலியுறுத்தி உள்ளார். #Kiranbedi
    புதுச்சேரி:

    புதுவையில் இருசக்கர வாகனங்களில் செல்வோர் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என சட்டம் உள்ளது.

    கட்டாய ஹெல்மெட் சட்டம் புதுவையில் தீவிரமாக அமல்படுத்தப்படவில்லை. ஹெல்மெட் அணியாததால் ஆண்டுதோறும் இரு சக்கர வாகனங்களில் செல்வோருக்கு விபத்து ஏற்பட்டு அதிக உயிரிழப்பு ஏற்படுகிறது.

    இதனால் கட்டாய ஹெல்மெட் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என கவர்னர் கிரண்பேடி வலியுறுத்தினார். இதையடுத்து கடந்த 11-ந்தேதி முதல் புதுவையில் கட்டாயமாக ஹெல்மெட் அணிய வேண்டும் என காவல்துறை உத்தரவிட்டது.

    ஹெல்மெட் அணியாத வர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. காவல்துறை பொறுப்பு வகிக்கும் முதல்-அமைச்சர் நாராயணசாமி, வழக்கு பதிவில் காட்டும் ஆர்வத்தை ஹெல்மெட் விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் காட்ட வேண்டும். அதன்பிறகு ஹெல்மெட் கட்டாய சட்டத்தை அமல்படுத்தலாம் என கூறினார்.

    இருப்பினும் காவல்துறை தொடர்ந்து ஹெல்மெட் அணியாமல் சென்றவர்களின் வாகன எண்களை குறித்துக்கொண்டனர். இவர்கள் மீது வழக்குபதிவு செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது.

    இதற்கிடையில் முதல்- அமைச்சர் நாராயணசாமி கவர்னருக்கு எதிராக கவர்னர் மாளிகை முன்பு தர்ணா போராட்டம் நடத்தினர். இதனால் கட்டாய ஹெல்மெட் சட்டத்தை அமல்படுத்துவதில் தளர்வு ஏற்பட்டது. தற்போது கவர்னர் மீண்டும் சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி கட்டாய ஹெல்மெட் சட்டத்தை புதுவையில் தீவிரமாக அமல்படுத்த வேண்டும் என வாட்ஸ்அப்பதிவில் வலியுறுத்தியுள்ளார். மேலும் சுப்ரீம்கோர்ட் சாலை பாதுகாப்பு கண்காணிப்புக்குழு மூலம் புதுவை தலைமை செயலாளர் அஸ்வனி குமாருக்கு ஒரு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அந்த நோட்டீசில், இருசக்கர ஓட்டுநர், பின் இருக்கையில் அமர்ந்திருப்பவர் இருவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிந்திருக்க வேண்டும் என்றும் கடந்த ஆகஸ்ட் மாதம் கட்டாய ஹெல்மெட் சட்டம் தொடர்பாக கேட்கப்பட்ட அறிக்கையை இதுவரை ஏன் அனுப்பவில்லை? என விளக்கமும் கேட்டுள்ளது. இதனால் புதுவையில் மீண்டும் கட்டாயமாக ஹெல்மெட் அணிய வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது. #Kiranbedi
    புதுவையில் இரு சக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிந்து செல்வதின் அவசியம் குறித்து கவர்னர் கிரண்பேடி பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினார். #KiranBedi #Helmet
    புதுச்சேரி:

    புதுவையில் கட்டாய ஹெல்மெட் சட்டம் இன்று முதல் அமுலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதையடுத்து இரு சக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிந்து செல்வது அவசியம் குறித்து கவர்னர் கிரண்பேடி பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

    அவர் நேற்று மாலை ரெட்டியார்பாளையம் பகுதிக்கு சென்றார். மூலக்குளம் அருகே சென்ற போது அவர் தனது காரில் இருந்து இறங்கினார். பின்னர் அந்த வழியாக இருசக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணியாமல் வந்த பொதுமக்களை நிறுத்தி, ‘ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும். அது உங்கள் உயிரை பாதுகாக்கும். போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்’ என்றார். அதன் பிறகு அவர் அங்கிருந்து புறப்பட்டு தட்டாஞ்சாவடி, கருவடிக்குப்பம் வழியாக கவர்னர் மாளிகைக்கு திரும்பினார்.

    புதுவை அமைதியான, தூய்மையான மாநிலம் என்பதால் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்து செல்கின்றனர். ஆனால் இங்கு போக்குவரத்து குறித்து போதிய விழிப்புணர்வு இல்லை. இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவதில்லை. இரு சக்கர வாகனத்தில் செல்வோர் ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியும் மதிப்பதில்லை.

    மதுபானம் குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவது. இருசக்கர வாகனத்தில் 2 பேருக்கு மேல் செல்வது, வாகனங்களை நிறுத்த தடை செய்யப்பட்ட இடத்தில் வாகனங்களை நிறுத்துவது போன்றவை குற்றமாக கருதப்படுகிறது. அதுபோல் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டுவதும் குற்றம்தான். ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டி செல்வதால் விலை மதிப்பில்லாத உயிர் இழப்பு ஏற்படுகிறது. ஒருவர் உயிரிழக்கும் போது அவரது குடும்பமும் பாதிக்கப்படுகிறது.

    குழந்தைகள் பெற்றோரின்றி தவிக்கின்றனர். விபத்து வழக்கிற்கான கோர்ட்டுக்கு செல்லும்போது நேரம், பணம் வீணாகிறது. விபத்தால் உயிரிழக்கும் குடும்பங்களுக்கு விதவை பென்‌ஷன் வழங்குவது மூலம் அரசுக்கும் இழப்பு ஏற்படுகிறது. சுகாதாரத்துறைக்கு மருத்துவ செலவும் ஏற்படுகிறது. முதல்-அமைச்சர் நாராயணசாமியின் மனைவி கூட வாகன விபத்தில் உயிரிழந்தார். அதுகூட ஹெல்மெட் அணியாதது தான் காரணம். எனவே கட்டாய ஹெல்மெட் சட்டத்துக்கு சமரசம் கிடையாது. அனைவரும் ஹெல்மெட் அணிய வேண்டும்.

    அவ்வாறு அணியாமல் செல்வோர் மீது போக்குவரத்து போலீசார், பல்கலைக்கழக மாணவர்கள், தன்னார்வலர்கள் வாகன எண்ணை குறித்து வைத்து நீதிமன்றத்தில் புகார் அளிக்கலாம். நீதிமன்றம் இதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கும். சட்டம்-ஒழுங்கை சீர்குலைப்பது, திருடுவது உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபடுவோரை எச்சரிக்கை செய்து விடமுடியுமா? அதுபோல் தான் ஹெல்மெட் அணியாமல் செல்வோரை வெறுமனே விடமுடியாது.

    இவ்வாறு அவர் கூறினார். #KiranBedi #Helmet
    புதுச்சேரியில் நாளை முதல் ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்படுவதாக போலீஸ் டி.ஜி.பி. சுந்தரி நந்தா கூறினார். #Helmet #TwoWheeler
    புதுச்சேரி:

    புதுவையில் ஹெல்மெட் அணிய வேண்டியது கட்டாயம் என கடந்த 2017-ம் ஆண்டு மே மாதம் அறிவிக்கப்பட்டது. ஆனால் இதற்கு பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. குறிப்பாக பெண்கள் அதிருப்தி தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து கட்டாய ஹெல்மெட் திட்டம் வாபஸ் பெறப்பட்டது. இந்த நிலையில் ஹெல்மெட் அணிவது தொடர்பாக போலீஸ் டி.ஜி.பி. சுந்தரி நந்தா நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    புதுவையில் ஹெல்மெட் அணிவது குறித்து பள்ளி, கல்லூரி மாணவர்கள் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். கடந்த 3 ஆண்டுகளில் நடந்த விபத்துகளில் 648 பேர் இறந்துள்ளனர். இதில் 322 பேர் ஹெல்மெட் அணியாததாலேயே உயிரிழந்துள்ளனர். எனவே நாளை (திங்கட்கிழமை) முதல் ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்படுகிறது. ஹெல்மெட் அணியாவிட்டால் வழக்கை சந்திக்க வேண்டியது இருக்கும்.

    ஹெல்மெட் அணியாதவர்களுக்கு முதலில் ரூ.100 அபராதம் விதிப்போம் அல்லது அதற்கான ரசீது கொடுப்போம். 3-வது முறை ஹெல்மெட் அணியாமல் பிடிபட்டால் டிரைவிங் லைசென்சு ரத்து செய்யப்படும். காரில் செல்லும்போது சீட் பெல்ட் அணிவதும் அவசியம். இதை மீறுவோருக்கும் அபராதம் விதிக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். 
    கேரளாவில் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் எம்.எல்.ஏ.வுக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்பட்டது.
    கேரளாவில் நடைபெற்ற பெண்கள் மனித சுவர் போராட்டத்தில் பங்கேற்பதற்காக காயங்குளம் தொகுதி எம்.எல்.ஏ. பிரதீபா இருசக்கர வாகனத்தில் வந்தார். அவர் தலையில் வெள்ளை நிற ரிப்பன் மட்டும் கட்டியிருந்தார். ஹெல்மெட் அணியாமல் பெண் எம்.எல்.ஏ. இருசக்கர வாகனம் ஓட்டிய காட்சி அடங்கிய வீடியோ இணையதளங்களில் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக காயங்குளம் போலீசாரும் பிரதீபா எம்.எல்.ஏ. மீது வழக்கு பதிவு செய்தனர்.

    இதைத்தொடர்ந்து அவர் போலீஸ் நிலையத்திற்கு சென்று ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டியதற்காக ரூ.100 அபராதம் செலுத்தினார். #tamilnews
    ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக 500 போலீசார் ‘ஹெல்மெட்’ அணிந்து மோட்டார் சைக்கிளில் பேரணியாக சென்றனர். #Helmet
    சென்னை:

    சாலை விபத்துகளில் உயிரிழப்புகளை தடுக்க மோட்டார் சைக்கிளை ஓட்டி செல்பவரும், பின்னால் அமர்ந்து செல்பவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்பது ஐகோர்ட்டு உத்தரவு ஆகும்.

    எனவே ‘ஹெல்மெட்’ அணியாமல் மோட்டார் சைக்கிளில் செல்வோர்களுக்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்து வருகின்றனர். எனினும் சில போலீசார் சட்டத்தை மதிக்காமல் ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிளை ஓட்டி செல்வதாக புகார்கள் எழுந்தது. இதையடுத்து ‘ஹெல்மெட்’ அணியாத போலீசார் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உயர் போலீஸ் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

    இந்தநிலையில் சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவின்பேரில் எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் போலீசார் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் ஆயுதப்படை துணை கமிஷனர்கள் கே.சவுந்தரராஜன், ஆர்.ரவிச்சந்திரன் ஆகியோர் தலைமையில் 1,300 போலீசார் பங்கேற்றனர். அப்போது அவர்கள், இனி மோட்டார் சைக்கிளை ஓட்டி செல்லும்போதும், பின்னால் அமர்ந்து செல்லும்போதும் கட்டாயம் ‘ஹெல்மெட்’ அணிந்து செல்வோம்’ என்று உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

    இதைத் தொடர்ந்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக 500 போலீசார் ‘ஹெல்மெட்’ அணிந்து மோட்டார் சைக்கிளில் பேரணியாக சென்றனர்.

    எழும்பூர் ருக்மணி சாலை, எத்திராஜ் கல்லூரி சாலை வழியாக சென்ற பேரணி பின்னர் ராஜரத்தினம் மைதானத்தை வந்தடைந்தது. ‘ஹெல்மெட்’ பிரசாரத்துடன் கார்களில் செல்லும் போது ‘சீட் பெல்ட்’ கட்டாயம் அணிய வேண்டும் என்றும் போலீசார் எடுத்துரைத்தனர்.
    சமயபுரம் போலீசாரும், புறத்தாக்குடி வீரமாமுனிவர் மக்கள் நல்வாழ்வு அமைப்பினரும் இணைந்து, ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இருசக்கர வாகன ஊர்வலம் நடத்தினர்.
    சமயபுரம்:

    சமயபுரம் சுங்கச் சாவடியில் இருந்து தொடங்கிய ஊர்வலத்திற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் மதன் தலைமை தாங்கினார். சப்- இன்ஸ்பெக்டர் கள் அகிலன், செல்வராஜ், போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் வனராஜு ஆகியோர் பேசினர். ஊர்வலம் இனாம்சமயபுரம், சமயபுரம் பஸ் நிலையம், கடைவீதி, நாலுரோடு, பழைய பெட்ரோல் பங்க் வழியாக சென்று மீண்டும் கடைவீதியை வந்தடைந்தது.

    இதில் வீரமாமுனிவர் மக்கள் நல்வாழ்வு அமைப்பின் தலைவர் ஆரோக்கியதாஸ், செயலாளர் கபிரியேல், தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்கள் மற்றும் போலீசார் ஏராளமானோர் கலந்து கொண்டு, இருசக்கர வாகனங்களில் சென்றனர். முடிவில் சமயபுரம் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பையா நன்றி கூறினார்.
    கேரளாவில் சைக்கிளில் வேகமாக சென்றதாகவும், ஹெல்மெட் அணியாததாலும் இளைஞர் ஒருவரிடம் போலீசார் 2 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #KeralaPolice #CycleOverspeedFine
    திருவனந்தபுரம்:

    உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்த காசிம் என்ற இறைஞர் கேரளாவின் கும்பாலாவில் தங்கி வேலை செய்து வருகிறார். இவர் கடந்த வாரம் நெடுஞ்சாலையில் சைக்கிள் ஓட்டி சென்றுள்ளார். அப்போது அவரை மறித்த நெடுஞ்சாலை காவல்துறையினர், வேகமாக சைக்கிள் ஓட்டியதாகவும், ஹெல்மெட் போடவில்லை என்றும் கூறி 2000 ரூபாய் அபராதம் வசூலித்துள்ளனர்.



    2000 ரூபாய் அபராதம் வாங்கிவிட்டு 500 ரூபாய்க்கு மட்டும் ரசீது கொடுத்து அந்த இளைஞரை அனுப்பியுள்ளனர். பாதிக்கப்பட்ட அந்த இளைஞர் தனக்கு நேர்ந்த அவலம் குறித்து சமூக வலைத்தளத்தில் வீடியோவாக பதிவிட்டுள்ளார்.

    இந்த வீடியோ வைரலாகப் பரவிய நிலையில், இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #KeralaPolice #CycleOverspeedFine


    ×