என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tag 121142"

    ஹெலி டூரிசம் தொடங்கிய முதல் 2 நாட்கள் விவசாயிகள் மற்றும் ஆடு மேய்க்கும் தொழிலாளிகளுக்கு இலவசமாக ஹெலிகாப்டரில் பறக்க அனுமதி அளிக்கப்பட்டது.
    சிக்கமகளூரு :

    கர்நாடகத்தில் சுற்றுலாத்துறை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ஹம்பி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஹெலி டூரிசம் அமைக்கப்பட்டுள்ளது. சித்ரதுர்கா மாவட்டம் ஒசதுர்காவில் ஹெலி டூரிசம் கொண்டுவரப்பட்டுள்ளது. ஹெலி டூரிசம் தொடங்கிய முதல் 2 நாட்கள் விவசாயிகள் மற்றும் ஆடு மேய்க்கும் தொழிலாளிகளுக்கு இலவசமாக ஹெலிகாப்டரில் பறக்க அனுமதி அளிக்கப்பட்டது.

    அதன்படி அப்பகுதி விவசாயிகள், ஆடு மேய்க்கும் தொழிலாளிகள் ஹெலிகாப்டரில் இலவசமாக பயணித்து சுற்றுவட்டார பகுதிகளை கண்டு களித்தனர். 2-வது நாளான நேற்றும் ஏராளமானோர் ஹெலிகாப்டரில் பயணம் செய்தனர். இந்த 2 நாட்களிலும் காலை 8 மணி முதல் மாலை 2.30 மணி வரை ஹெலிரைடு நடத்தப்பட்டது. சுமார் 200 விவசாயிகள் ஹெலிகாப்டரில் இலவசமாக பறந்து சென்றனர்.

    அதேபோல் வாணிவிலாஸ் அணைக்கட்டில் இலவச படகு சவாரியும் நடத்தப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை ஒசநகர் தொகுதி எம்.எல்.ஏ. கூலிகட்டி சேகர் செய்திருந்தார். இதைதொடர்ந்து வரும் நாட்களில் சுற்றுலா பயணிகளுக்கு கட்டணத்துடன் ஹெலிரைடு நடத்தப்பட உள்ளது.
    கச்சத்தீவு அந்தோணியார் ஆலய திருவிழா இன்று தொடங்குகிறது. விழாவில் பங்கேற்பதற்காக விசைப்படகுகளில் ராமேசுவரம் மீனவர்கள் இன்று காலை புறப்பட்டுச் சென்றனர். #KatchatheevuFestival #TNFishermen
    ராமேசுவரம்:

    இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே நடுக்கடலில் அமைந்துள்ளது கச்சத்தீவு. இங்குள்ள புனித அந்தோணியார் ஆலய திருவிழா ஆண்டுதோறும் கொண்டாடப்படும்.

    இந்த ஆண்டுக்கான விழா இன்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. நெடுந்தீவு பங்குத்தந்தை தேவாலயம் முன்புள்ள கொடிமரத்தில் அந்தோணியாரின் உருவம் பதித்த கொடியை இருநாட்டு மக்கள் முன்னிலையில் ஏற்றுகிறார்.

    அதைத்தொடர்ந்து மரத்தாலான பெரிய சிலுவையை இருநாட்டு மக்களும் சுமந்து வர ஆலயத்தை சுற்றி 11 இடங்களில் சிலுவைப்பாதை திருப்பலி பூஜை மற்றும் பிரார்த்தனை நடைபெறுகிறது.



    விழாவில் பங்கேற்பதற்காக 65 விசைப்படகுகள் மற்றும் 15 நாட்டுப் படகுகளில் மீனவர்கள் இன்று காலை புறப்பட்டுச் சென்றனர்.

    மொத்தம் 2 ஆயிரத்து 250 பேர் பங்கேற்கிறார்கள். விழா நாளையும் (சனிக்கிழமை) தொடர்ந்து நடைபெறுகிறது.

    கச்சத்தீவு அந்தோணியார் ஆலய திருவிழாவையொட்டி 350-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். #KatchatheevuFestival #TNFishermen
    மின்சார ரெயிலில் தொங்கியபடி பயணம் செய்தபோது மின்கம்பத்தில் மோதி என்ஜினீயரிங் மாணவர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    சென்னை:

    கிண்டியில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து வந்தவர் ஜெயச்சந்திரன் (வயது 18). இவர் தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரை செல்லும் மின்சார ரெயிலில் பயணம் செய்தார்.

    ரெயிலில் கூட்டம் அதிகமாக இருந்ததால் ஜெயச்சந்திரன் படிக்கட்டில் தொங்கியபடி சென்றார்.

    கிண்டி அருகே வளைவில் திரும்பி ரெயில் வந்த போது தண்டவாளம் அருகே இருந்த மின் கம்பத்தில் ஜெயச்சந்திரனின் தலை மோதியது.

    இதில் நிலை தடுமாறிய அவர் ரெயிலில் இருந்து கீழே விழுந்தார். இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பயணிகள் மின்சார ரெயிலை நிறுத்தினர்.

    இது குறித்து ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து படுகாயம் அடைந்த ஜெயச்சந்திரனை மீட்டு குரோம்பேட்டையில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டுசென்றனர். ஆனால் போகும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

    கேரள மாநிலம் முன்னம்பம் துறைமுகத்தில் இருந்து படகு வழியாக நியூசிலாந்துக்கு சென்ற தமிழர்கள் பலர் மாயமாகி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #Fishermanboat

    கொச்சி:

    கேரள மாநிலம் முன்னம்பம் துறைமுகத்தில் இருந்து மிகப்பெரிய நாட்டு படகு ஒன்று கடந்த 12-ந்தேதி புறப்பட்டு சென்றது.

    மீன்பிடி படகான இந்த படகில் 100-க்கும் மேற்பட்டவர்கள் கள்ளத்தனமாக பயணம் செய்வது சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.

    உளவுத்துறை கொடுத்த தகவலின் பேரில் கேரள போலீசாரும், அதிகாரிகளும் தீவிர விசாரணை நடத்தினார்கள். அப்போது அந்த பிரமாண்ட மீன்பிடி படகு புறப்பட்டு சென்ற பகுதியில் இருந்து 70 பைகள் மீட்கப்பட்டன. அந்த பைகளில் நீண்ட தூரத்துக்கு பயணம் செய்வதற்கான அத்தியாவசிய பொருட்கள் இருந்தன.

    மேலும் 20 அடையாள ஆவணங்களும் அந்த பகுதியில் கண்டு எடுக்கப்பட்டன. அதை வைத்து விசாரணை நடத்திய அதிகாரிகள் பிரபு தண்டபாணி என்பவரை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தியபோது திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்தன.

    மீன்பிடி படகில் கள்ளத்தனமாக செல்பவர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது. டெல்லியைச் சேர்ந்தவர்களும் அந்த படகில் செல்வதாக கூறப்படுகிறது. 100 முதல் 200 பேர் வரை அந்த படகில் இருப்பதாக தெரிய வந்துள்ளது.

    பெண்கள், குழந்தைகளும் அந்த படகில் இருக்கிறார்கள். 12-ந்தேதி இரவு புறப்பட்ட அந்த படகு நடுக்கடலுக்கு சென்றது. அதன் பிறகு அந்த படகு மாயமாகி விட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    அந்த படகில் கள்ளத்தனமாக செல்பவர்கள் நியூசிலாந்து நாட்டை நோக்கி செல்வதாக முதல் கட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது. கேரளாவில் இருந்து நியூசிலாந்துக்கு 7 ஆயிரம் மைல்கள் கடல் பயணம் செய்ய வேண்டும். அந்த பயணப்பாதை ஆபத்தானது என்று கூறப்படுகிறது.

    தற்போதைய சூழ்நிலையில் அந்த கடல் மார்க்கத்தில் கடுமையான சூறாவளிகளும், கடல் கொந்தளிப்பும் இருக்கும் என்று தெரிய வந்துள்ளது. குறிப்பாக இந்தோனேசியா, ஆஸ்திரேலியா இடையே அந்த படகு கடும் கடல் கொந்தளிப்பை சமாளிக்க வேண்டியது இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    அந்த படகில் செல்லும் தமிழர்களில் பெரும்பாலானவர்கள் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.  #Fishermanboat

    வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் திடீர் பயணமாக சீனாவுக்கு சென்றார். #NorthKorea #KimJongUn #China
    பீஜிங்:

    வடகொரியாவுக்கு நெருங்கிய மற்றும் முக்கிய கூட்டாளியாக சீனா மட்டுமே விளங்கி வருகிறது. தூதரக ரீதியிலும், வர்த்தக ரீதியிலும் சிறப்பான பங்களிப்பை வடகொரியாவுக்கு, சீனா வழங்கி வருகிறது.

    கடந்த ஆண்டு மார்ச் மாதம் தனது முதல் வெளிநாட்டு பயணமாக வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன் சீனாவுக்கு சென்றார். ரெயில் மார்க்கமாக ரகசிய பயணம் மேற்கொண்ட கிம் ஜாங் அன், சீன அதிபர் ஜின்பிங்கை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

    இந்த பயணத்துக்கு பின்னர் தான் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மற்றும் கிம் ஜாங் அன் சிங்கப்பூர் உச்சி மாநாட்டில் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த பேச்சுவார்த்தைக்கு பின்னரும் கிம் ஜாங் அன் 2 முறை சீனாவுக்கு சென்று அதிபர் ஜின்பிங்கை சந்தித்தார்.

    இந்த நிலையில் புத்தாண்டையொட்டி நாட்டு மக்களிடையே உரையாற்றிய கிம் ஜாங் அன், அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை எந்த நேரத்திலும் சந்திக்க தான் தயாராக இருப்பதாக தெரிவித்தார்.

    அதே போல் டிரம்பும், கிம் ஜாங் அன்னை சந்திக்க விரும்புவதாக தெரிவித்தார். அதன்படி 2-வது உச்சி மாநாட்டுக்கான தேதி மற்றும் இடம் குறித்து இருநாட்டு அதிகாரிகளிடையே தீவிர ஆலோசனை நடந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இந்த நிலையில் கிம் ஜாங் அன் திடீர் பயணமாக நேற்று சீனா சென்றார். சீன அதிபர் ஜின்பிங் விடுத்த அழைப்பின் பேரில் 3 நாள் பயணமாக அவர் சீனா சென்றிருப்பதாக வடகொரிய அரசு ஊடகமான கே.என்.சி.ஏ. தெரிவித்துள்ளது.

    கிம் ஜாங் அன் தனது மனைவி ரீ சோல்-ஜூ, அவரது வலதுகரமாக விளங்கும் யோங்-ஜோல் மற்றும் மூத்த அதிகாரிகளுடன் நேற்று முன்தினம் ரெயிலில் சீனாவுக்கு புறப்பட்டார். அந்த ரெயில் நேற்று சீன தலைநகர் பீஜிங் சென்றடைந்தது.

    இதையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்ததாகவும், ரெயில் நிலையத்தில் கிம் ஜாங் அன்னுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    3 நாட்கள் சீனாவில் தங்கி இருக்கும் கிம் ஜாங் அன், அந்நாட்டின் அதிபர் ஜின்பிங்கை சந்தித்து பல்வேறு விவகாரங்கள் குறித்து தீவிர ஆலோசனை நடத்துவார் என தெரிகிறது.

    கிம் ஜாங் அன்னின் திடீர் சீன பயணம் டிரம்ப் - கிம் ஜாங் அன் இடையேயான 2-வது சந்திப்பில் தாக்கத்தை ஏற்படுத்தும் என சர்வதேச நோக்கர்கள் கருதுகின்றனர்.

    வர்த்தக பேச்சுவார்த்தைக்காக அமெரிக்க பிரதிநிதிகள் சீனாவில் முகாமிட்டு இருக்கும் நிலையில், கிம் ஜாங் அன் அங்கு பயணம் மேற்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.  #NorthKorea #KimJongUn #China 
    மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் இன்று மாலை கோவிலில் இருமுடி கட்டி சபரிமலை புறப்படுகிறார். #PonRadhakrishnan #Sabarimala
    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி எம்.பி.யும், மத்திய மந்திரியுமான பொன். ராதாகிருஷ்ணன் சபரிமலை ஐயப்பனின் தீவிர பக்தர்.

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடைபெறும் மண்டல மற்றும் மகர விளக்கு திருவிழா நாட்களில் பொன். ராதாகிருஷ்ணன் மாலை அணிந்து விரதம் இருந்து சபரிமலைக்கு சென்று வருவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

    அதன்படி இந்த ஆண்டும் மண்டல பூஜையையொட்டி அவர் சபரிமலை ஐயப்பன் கோவில் செல்ல திட்டமிட்டார். இதற்காக வெளியூரில் இருந்த அவர் இன்று காலையே நாகர்கோவில் வந்தார்.

    இன்று அதிகாலை முதல் சபரிமலை செல்வதற்கான பயண ஏற்பாடுகளை பொன். ராதாகிருஷ்ணன் மேற்கொண்டார். இன்று மாலை அவர் கோவிலில் இருமுடி கட்டி சபரிமலை புறப்படுகிறார்.

    சபரிமலைக்கு நாளை காலை சென்றடையும் பொன். ராதாகிருஷ்ணன், அங்கு சன்னிதானம் சென்று ஐயப்பனை தரிசனம் செய்கிறார். அதன்பிறகு அவர் மலை இறங்கி மீண்டும் நாகர்கோவில் வருகிறார். #PonRadhakrishnan #Sabarimala

    வெள்ளம் பாதித்த பகுதிகளில் வங்கிகள், இன்சூரன்ஸ் நிறுவனங்கள் செயல்படுவது குறித்து ஆய்வு செய்வதற்காக மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன் தலைமையிலான குழு இன்று கேரளாவுக்கு பயணம் செய்யவுள்ளது. #KeralaFloods #KeralaRain #PonRadhakrishnan
    சென்னை:

    கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை கொட்டி தீர்த்துள்ளது. இந்த மழையால் பல்வேறு மாவட்டங்கள் நீரில் மூழ்கி சூனியமாக காட்சியளிக்கிறது.

    மழை மற்றும் நிலச்சரிவு போன்ற சம்பவங்களால் கேரளாவில் இதுவரை 370க்கு மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர்.
    கடந்த நூறாண்டுகளில் இல்லாத மிகப்பெரும் இயற்கை பேரழிவை கேரளா சந்தித்துள்ளது.

    இயற்கை சீற்றத்தால் ஏற்பட்டுள்ள பெரும் பேரழிவில் இருந்து மீட்டெடுக்க பல்வேறு மாநிலங்களும் கேரளாவுக்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றன.

    இந்நிலையில், நிதித்துறை இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தலைமையிலான குழு இன்று கேரளா சென்று ஆய்வு நடத்த உள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதுகுறித்து அவர்கள் கூறுகையில், கேரளாவில் கடந்த சில வாரங்களாக கனமழை பெய்தது. அனைத்து மாவட்டங்களும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது. இதையடுத்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வங்கிகள் மற்றும் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் மேற்கொண்டு வரும் பணிகளை மத்திய இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தலைமையிலான குழு ஆய்வு மேற்கொள்ள உள்ளது என தெரிவித்துள்ளனர். #KeralaFloods #KeralaRain #PonRadhakrishnan
    கம்போடியா, வியட்நாம் ஆகிய நாடுகளில் வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் வரும் 27 முதல் 30-ம் தேதிவரை சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். #Sushma #Vietnamvisit #Cambodiavisit
    புதுடெல்லி:

    ஆசியான் அமைப்பில் உள்ள நேசநாடான வியட்நாம் வெளியுறவுத்துறை மந்திரி பாம் பின் மின் தலைமையிலான இந்தியா - வியட்நாம் வெளியுறவுத்துறை சார்ந்த 16-வது கூட்டத்தில் பங்கேற்பதற்காக சுஷ்மா சுவராஜ் வரும் 27-ம் தேதி வியட்நாம் நாட்டுக்கு பயணமாகிறார்.

    இந்த பயணத்தின்போது,  இருநாட்கள்  வியட்நாமில் தங்கியிருக்கும் சுஷ்மா, இந்திய பெருங்கடல்சார்ந்த மாநாட்டின் மூன்றாவது அமர்வை தொடங்கி வைக்கிறார். வியட்நாம் பிரதமர்  நுகுயென் க்சுவான் ஃபுக்-ஐயும் சந்தித்து ஆலோசனை நடத்துகிறார்.

    அங்கிருந்து 29-ம் தேதி கம்போடியா நாட்டுக்கு செல்லும் அவர், அந்நாட்டின் வெளியுறவுத்துறை மந்திரி பிராக் சோக்ஹான், கம்போடியா பிரதமர் ஹூன் சென் மற்றும் பாராளுமன்ற சபாநாயகர் சேய் சும் ஆகியோரை சந்தித்து இந்தியா - கம்போடியா இடையிலான நல்லுறவுகளை பலப்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்துகிறார். #Sushma #Vietnamvisit  #Cambodiavisit
    அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோ அடுத்த மாதம் (செப்டம்பர்) பாகிஸ்தான் வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. #USForeignMinister #Pakistan
    இஸ்லாமாபாத்:

    அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்டு டிரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்டதை தொடர்ந்து பாகிஸ்தான்-அமெரிக்கா உறவில் லேசான விரிசல் நிலவி வருகிறது. பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் தருவதாக பாகிஸ்தானை தொடர்ந்து குற்றம் சாட்டி வரும் டிரம்ப், அந்த நாட்டு மீது கடுமையான விமர்சனங்களை வைத்தார்.



    பயங்கரவாதிகள் விவகாரத்தில் அமெரிக்காவுக்கு ஆதரவாக பாகிஸ்தான் நடந்து கொள்ளவில்லை என கடந்த ஜனவரி மாதம் குற்றம் சாட்டிய டிரம்ப், வெறும் பொய்யும், ஏமாற்று நடவடிக்கைகளிலேயே அந்த நாடு தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக சாடினார். அத்துடன் பாகிஸ்தானுக்கு வழங்கப்படும் ராணுவ நிதியுதவியை குறைக்க வகை செய்யும் மசோதா ஒன்றும் அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

    இரு நாடுகளுக்கு இடையிலான உறவில் இவ்வாறு விரிசல் ஏற்பட்டு இருந்த நிலையில், பாகிஸ்தானின் புதிய பிரதமராக இம்ரான்கான் நேற்று முன்தினம் பதவியேற்று உள்ளார். அவர் அமெரிக்காவுடனான உறவை மேம்படுத்துவதற்கு முன்வந்துள்ளார். கடந்த மாதம் தனது வெற்றி உரையில்கூட இதை குறிப்பிட்டு இருந்தார்.

    இதற்கு பச்சைக்கொடி காட்டும் வகையில் அமெரிக்காவும், பாகிஸ்தானுக்கு ஆதரவான கருத்துகளை வெளியிட்டு உள்ளது. குறிப்பாக இம்ரான்கானின் பதவியேற்பை வரவேற்றுள்ள அமெரிக்கா, பாகிஸ்தானின் வளம் மற்றும் அமைதி மேம்பாட்டுக்காக புதிய ஜனநாயக அரசுடன் இணைந்து பணியாற்ற விரும்புவதாக செய்தி வெளியிட்டு உள்ளது.

    இந்த நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோ அடுத்த மாதம் (செப்டம்பர்) தொடக்கத்தில் பாகிஸ்தான் வருவதாக பாகிஸ்தானின் ‘டான்’ பத்திரிகை செய்தி வெளியிட்டு உள்ளது. அதன்படி செப்டம்பர் 5-ந்தேதி பாம்பியோவின் இஸ்லாமாபாத் பயணம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    பாகிஸ்தான் வரும் மைக் பாம்பியோ புதிய பிரதமர் இம்ரான்கானை சந்தித்து இரு தரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். மேலும் அமெரிக்காவின் ஆப்கானிஸ்தான் அமைதி நடவடிக்கைகளில் பாகிஸ்தானின் ஆதரவு குறித்தும் மைக் பாம்பியோ பேசுவார் என கூறப்படுகிறது.

    இதன் மூலம் இம்ரான்கானை சந்திக்கும் முதல் வெளிநாட்டு தலைவர் என்ற சிறப்பை மைக் பாம்பியோ பெறுகிறார். அவருடன் அமெரிக்காவின், தெற்கு ஆசியா விவகார துறைக்கான தலைவர் ஆலிஸ் வெல்ஸ் அடங்கிய உயர்மட்டக்குழுவினரும் பாகிஸ்தான் வருகின்றனர்.

    இதற்கிடையே பாகிஸ்தானின் புகழ்பெற்ற பஞ்சாப் மாகாண சட்டமன்றத்துக்கு நடந்த தேர்தலில் இம்ரான்கானின் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சி வெற்றி பெற்றது. இதைத்தொடர்ந்து அந்த மாகாண முதல்-மந்திரியாக உஸ்மான் பஸ்தர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.  #USForeignMinister #Pakistan

    தீபாவளி பண்டிகைக்கு வெளியூர் செல்பவர்கள் நாளை முதல் ரெயில்களில் முன்பதிவு செய்யலாம் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. #DiwaliTrains #DiwaliTrainBookings
    சென்னை:

    தென் மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் தீபாவளி பண்டிகை அன்று சொந்த ஊர்களுக்கு சென்று பண்டிகையை கொண்டாடுவது வழக்கம். எனவே, தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலங்களில் ரெயில்களில் கூட்டம் அலைமோதும். எனவே, வெளியூர் செல்லும் பயணிகள், தங்கள் பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டு டிக்கெட் முன்பதிவு செய்கின்றனர். பொதுமக்களின் வசதி கருதி 120 நாட்களுக்கு முன்பே டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் வசதி உள்ளது.

    இந்த ஆண்டு நவம்பர் 6-ம் தேதி (செவ்வாய்க்கிழமை ) தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ரெயில்களில் வெளியூர் செல்வதற்கான டிக்கெட் முன்பதிவு நாளை முதல் (ஜூலை 5) தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 2-ம் தேதி பயணம் செய்யும் பயணிகள் நாளை முன்பதிவு செய்யலாம். 

    தீபாவளிக்கு முந்தைய வாரம் வெள்ளிக்கிழமையில் (நவம்பர் 2) இருந்தே பலர் சொந்த ஊர்களுக்கு புறப்படுவார்கள். எனவே, நாளை காலை முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களில் அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்துவிடும்.

    நவம்பர் 3-ம் தேதி சனிக்கிழமை பயணம் செய்வோர் ஜூலை 6-ம் தேதி, நவம்பர் 4-ம்தேதி ஞாயிற்றுக்கிழமை புறப்பட்டுச் செல்பவர்கள் ஜூன் 7-ம் தேதியும் முன்பதிவு செய்யலாம். #DiwaliTrains #DiwaliTrainBookings
    சத்தீஸ்கர் மாநிலத்தில் நாளை சுற்றுப்பயணம் செய்யும் பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு நலத்திட்டங்களுடன் ஜகதல்பூர் - ராய்ப்பூர் விமானச் சேவையை தொடங்கி வைக்கிறார். #PMModi #Chhattisgarh
    ராய்ப்பூர்:

    பிரதமர் நரேந்திர மோடி புதுடெல்லியில் இருந்து நாளை காலை தனி விமானம் மூலம் சத்தீஸ்கர் மாநில தலைநகர் ராய்ப்பூர் வருகிறார். நயா ராய்ப்பூர் ஸ்மார்ட் சிட்டியை தொடங்கி வைக்கும் அவர், தலைநகருக்கான புதிய கட்டுப்பாட்டு அறையை திறந்து வைக்கிறார்.

    பின்னர், ஜகதல்பூர் - ராய்ப்பூர் விமானச் சேவையை தொடங்கி வைப்பதுடன் பல்வேறு நலத்திட்டங்களின் பயனாளிகளுக்கு இலவச லேப்டாப்கள், கல்வி உதவித்தொகை மற்றும் சான்றிதழ்களையும் வழங்குகிறார்.

    அங்கிருந்து பிலாய் நகருக்கு செல்லும் மோடி, விரிவாக்கத்துடன் மேம்படுத்தப்பட்ட பிலாய் இரும்பு ஆலையை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். ஆப்டிக்கல் பைபர் கேபிள் மூலம் கிராம பஞ்சாயத்துகளை இணையத்தின் வழியாக ஒன்றிணைக்கும் பாரத் நெட் சேவையின் இரண்டாவது கட்டப்பணிகளை துவக்கி வைப்பதுடன், இதற்கு அடையாளமாக கல்வெட்டையும் திறந்து வைக்கிறார்.

    பிலாய் ஐ.ஐ.டி.க்கான புதிய கட்டிடத்தை திறந்து வைப்பதுடன், பொதுக்கூட்டத்தில் உரையாற்றும் அவர் பின்னிரவு டெல்லி திரும்புகிறார். #PMModi #Chhattisgarh

    துப்பாக்கிச்சூடு நடந்த தூத்துக்குடிக்கு நாளை மறுநாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி செல்ல உள்ளார். அங்கு, பாதிக்கப்பட்ட மக்களை சந்திப்பார் என தெரிகிறது. #ThoothukudiFiring #CMVisitsThoothukudi
    சென்னை:

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தின்போது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை பல்வேறு தலைவர்கள் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி வருகின்றனர். மேலும், நிவாரண உதவிகளையும் வழங்கி வருகின்றனர்.

    அந்த வரிசையில், முதல்வர் எடபப்டி பழனிசாமி நாளை மறுநாள் தூத்துக்குடி செல்ல உள்ளார். அங்கு, ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தின்போது துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் காயமடைந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவிப்பார் என்று தெரிகிறது.



    துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடந்த 28-ம் தேதி தூத்துக்குடி சென்று பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரையும் சந்தித்தார். அவர் சென்னை திரும்பியதும், ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடுவது தொடர்பான அரசாணை வெளியிடப்பட்டு, ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. #ThoothukudiFiring #CMVisitsThoothukudi

    ×