என் மலர்
நீங்கள் தேடியது "tag 169964"
- நெல்லையில் இன்று 8 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.
- ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நெல்லை:
தமிழகம் உள்பட கொரோனா பாதிப்பு சில மாநிலங்களில் மீண்டும் அதிகரித்து வருகிறது.
கடந்த 20 நாட்களுக்கும் மேலாக நெல்லையில் தினசரி பாதிப்பு சராசரியாக ஒரு நபருக்கு கண்டறியப்பட்டு வந்த நிலையில் இன்று 8 ஆக உயர்ந்துள்ளது.
மாநகர பகுதியில் மட்டும் தினமும் ஒருவருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டு வந்தது.
இந்நிலையில் இன்று காலை வெளியான பரிசோதனை முடிவில் மாவட்டம் முழுவதும் 8 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதில் மாநகர பகுதியில் 3 பேரும், பாளை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 4 பேரும், ராதாபுரத்தில் ஒருவரும் அடங்குவர்.
இந்நிலையில் அரசின் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை தீவிரமாக கடைபிடிக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இன்றுவரை பாதிக்கப்பட்டவர்கள் அனை–வரும் ஏற்கனவே நெல்லை அரசு ஆஸ்பத்திரி–யில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள கொரோனா வார்டில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
- நெல்லை ஷிபா ஆஸ்பத்திரியில் ரத்ததான முகாம்.
- 30-க்கும் மேற்பட்டோர் ரத்ததானம் செய்தனர்.
நெல்லை:
உலகம் முழுவதும் ஜூன் 14-ந் தேதி உலக ரத்ததான தினம் கடைபிடிக்கப்படுகிறது.
இதை முன்னிட்டு நெல்லை ஷிபா மருத்துவமனையில் ரத்ததான கொடையாளர் சங்கம் சார்பில் 30-க்கும் மேற்பட்டோர் ரத்ததானம் செய்தனர்.
ஷிபா ரத்ததான கொடையாளர் சங்கத்தின் நிறுவனர் ஹாஜி எம்.கே.எம்.முகம்மது ஷாபி முகாமை தொடங்கி வைத்து கூறியதாவது:-
பொதுமக்களுக்கு ரத்ததானம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இன்று இந்த முகாம் நடைபெறுகிறது.
மேலும் ஷிபா மருத்துவமனை சார்பில் ரத்த வகைகளை கண்டறியும் முகாம்கள் தொடர்ந்து நடத்தி ரத்த கொடையாளர்களை அதிகப்படுத்தும் பணியும் நடைபெறும்.
18 வயது முதல் 60 வயது வரை உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் 6 மாதத்திற்கு ஒருமுறை ரத்ததானம் செய்யலாம்.
முகாமில் மருத்துவமனையின் மருத்துவ இயக்குநர் டாக்டர் முகம்மது அரபாத் உட்பட பலர் ரத்ததானம் செய்தனர்.
- தீபாவளி நிறைவடைந்ததையொட்டி பயணிகள் வசதிக்காக நெல்லையில் இருந்து கூடுதல் பஸ்கள் இன்று இயக்கப்படுகிறது.
- பயணிகள் சிரமமின்றி செல்வதற்காக போக்குவரத்துக்கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
நெல்லை:
நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதனையொட்டி கடந்த 2 நாட்களுக்கு முன்பு இருந்தே சென்னை, பெங்களுரு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமானோர் சொந்த ஊரான நெல்லைக்கு வந்தனர்.
ரெயில், பஸ்கள் மூலமாக நெல்லைக்கு வந்த அவர்கள் அனைவரும் இன்று மாலை முதல் மீண்டும் தங்கள் பணிபுரியும் ஊர்களுக்கு திரும்புவார்கள். இதனையொட்டி நெல்லையில் இருந்து கூடுதலாக பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
பயணிகள் எவ்வித சிரமும் இன்றி செல்வதற்காக வழக்கமாக இயக்கப்படும் பஸ்கள் தவிர கூடுதலாக பஸ்களை இயக்க தேவையான நடவடிக்கைகளை போக்குவரத்து கழகத்தின் நெல்லை கோட்ட அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
அதன்படி நெல்லை புதிய பஸ் நிலையத்தில் இருந்து இன்று மதியத்திற்கு பிறகு சென்னை, கோவை, திருச்சி, மதுரை, திருப்பூர், திண்டுக்கல், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு கூடுதல் பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதேபோல் பெங்களுரு, புதுச்சேரி உள்ளிட்ட இடங்களுக்கும் இரவில் கூடுதல் பஸ்கள் இயக்கப்பட உள்ளது.
இதற்காக அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் 80 முதல் 100 பஸ்கள் இயக்கப்பட உள்ளது. ஆனாலும் தொடர்ந்து பயணிகள் கூட்டம் அதிகரிக்கும் பட்சத்தில் தேவைக்கேற்ப பஸ்களின் எண்ணிக்கையை அதிகரித்து இயக்கவும் பணிமனையில் பஸ்கள் தயாராக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் சார்பிலும் சென்னை, பெங்களுரு உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் பயணிகளின் வசதிக்காக 27 முதல் 35 பஸ்கள் வரை இயக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று மதியத்திற்கு பிறகு பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்படும் என்பதால் திருட்டு, செயின்பறிப்பு உள்ளிட்டவற்றை தடுக்கும் விதமாக போலீசார் கூடுதலாக பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
+2
- புத்தாடை வாங்குவதற்காக நெல்லை நகர கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
- கடைகளுக்கு சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை பொருட்கள் வாங்க வந்திருந்தனர்.
நெல்லை:
தீபாவளி பண்டிகை நாளை(திங்கட்கி ழமை) கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டத்தில் இறுதி கட்ட விற்பனை இன்று விறுவிறுப்பாக நடைபெற்றது.
நெல்லை
நெல்லை மாவட்டத்தில் நாளை தீபாவளியை யொட்டி பொதுமக்கள் அதிகாலையில் புத்தாடைகள் அணிந்து பட்டாசு வெடித்து மகிழ்வார்கள். இதற்காக கடந்த 2 நாட்களாக இனிப்புகள், பட்டாசுகள் வாங்குவதற்காக நெல்லை நகர கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
கடைசி நாளான இன்றும் ஜவுளிக்கடைகள், பட்டாசு கடைகள், வீட்டு உபயோக பொருட்கள் கடைகளில் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததை காண முடிந்தது.
மாவட்டத்தில் அம்பை, சேரன்மகாதேவி, நாங்குநேரி, வள்ளியூர் உள்ளிட்ட இடங்களில் பஜார் பகுதிகளில் மக்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகரித்து காணப்பட்டது. இதனால் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்புக்காக போடப்பட்டு இருந்தனர்.
கூட்டம் அதிகரிப்பு
மாநகர பகுதியில் நேற்று நள்ளிரவு வரையிலும் தீபாவளி விற்பனை சூடுபிடித்து காணப்பட்டது. பாளை சமாதானபுரம் மார்க்கெட் முதல் வண்ணார்பேட்டை, முருகன்குறிச்சி, சந்திப்பு, டவுன் ரதவீதிகள் வரை கடைகளில் பொதுமக்கள் அதிக அளவில் காணப்பட்டனர்.
ஜவுளிக்கடை மற்றும் பட்டாசு கடைகளில் சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை பொருட்கள் வாங்குவதற்காக வந்திருந்தனர். இதேபோல் பலகார கடைகள், பேக்கரிகள், பேன்சி கடைகள் மற்றும் மளிகை கடைகள் என எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டம் அலைமோதியது.
போலீஸ் பாதுகாப்பு
இதனால் பிரதான சாலைகளில் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனையொட்டி மாநகர பகுதியில் சுமார் 1800-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர். குறிப்பாக டவுன் ரதவீதிகள் மற்றும் வண்ணார்பேட்டையில் உயர்கோபுரங்கள் அமைத்து போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
இதுதவிர அசம்பாவிதங்கள் நடக்காமல் இருக்க போலீசார் தீவிர ரோந்து பணியிலும் ஈடுபட்டனர். சில இடங்களில் போலீசார் மோட்டார் சைக்கிள்களில் சென்றும் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
பயணிகள் கூட்டம்
சென்னை, பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பெரும்பாலானோர் ரெயில் மூலமாக இன்று காலை சந்திப்பு ரெயில் நிலையத்திற்கு வந்தடைந்தனர். இதனால் அதிகாலை முதலே அங்கும் பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
இதனையொட்டி பட்டாசு ஏதேனும் கொண்டு வருகிறார்களா? என்பதை ரெயில்வே போலீசார் கண்காணித்தனர். வெளியூர்களில் இருந்து வந்தவர்களுக்காக சிறப்பு ரெயில்களும், கூடுதல் பஸ்களும் விடப்பட்டு இருந்தது.
நெல்லை புதிய பஸ் நிலையத்தில் நேற்று நள்ளிரவு தொடங்கி இன்று அதிகாலை வரையிலும் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பொதுமக்கள் வந்த வண்ணம் இருந்தனர். அங்கும் திருட்டு உள்ளிட்ட சம்பவங்கள் நடக்காமல் இருக்க போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.
தென்காசி
தென்காசி மாவட்டத்தில் சங்கரன்கோவில், ஆலங்குளம், தென்காசி, செங்கோட்டை, கடையம் உள்ளிட்ட பகுதிகளில் கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. ஆலங்குளத்தில் தென்காசி பிரதான சாலை, அம்பை சாலையில் உள்ள ஜவுளிக்கடைகளில் வாகனங்கள் கடும் போக்குவரத்து நெருக்கடியில் சிக்கி தவித்தன.
சங்கரன்கோவில் டவுன் ரதவீதிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் இருந்தனர். ராஜபாளையம் சாலை, கழுகுமலை சாலைகளில் உள்ள கடைகளில் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் உத்தரவின்பேரில் மாவட்டம் முழுவதும் 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடியில் காய்கறி மார்க்கெட் சாலையில் இன்று காலை முதலே பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. பிரையண்ட் நகர், அண்ணா நகர் மற்றும் புதிய பஸ் நிலையங்களில் பொதுமக்கள் அலைமோதியதால் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
மேலும் டபுள்யூஜிசி ரோடு, சிவன் கோவில் பகுதி உள்ளிட்ட முக்கிய வீதிகளில் கடும் போக்குவரத்து நெருக்கடியில் வாகனங்கள் சிக்கி தவித்தன. இதேபோல் திருச்செந்தூர், கோவில்பட்டி, கயத்தாறு, கழுகுமலை, விளாத்திகுளம், எட்டயபுரம், சாத்தான்குளம், உடன்குடி, ஸ்ரீவைகுண்டம் உள்பட புறநகர் பகுதிகளிலும் பொருட்கள் வாங்குவதற்காக பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. மாவட்டத்தில் சுமார் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.
- தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றது
- நிகழ்ச்சியில் பசுமை தீபாவளியைக் கொண்டாடுவோம் என உறுதிமொழி எடுக்கப்பட்டது.
நெல்லை:
பாளை புஷ்பலதா வித்யா மந்திர் பள்ளியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றது. இப்பள்ளி மாணவ, மாணவிகள் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுவதன் நோக்கம் குறித்துப் பேசியும், அழகாக நடனமாடியும், பல்வேறு மாநிலங்களிலும் இப்பண்டிகை கொண்டாடும் விதத்தை அந்தந்த மாநிலத்தின் உடை அணிந்து அழகாக விளக்கம் அளித்தனர்.
மேலும் விபத்தில்லாத, மாசற்ற, பசுமை தீபாவளியைக் கொண்டாடுவோம் என உறுதிமொழி எடுத்துக்கொண்டு ஒருவருக்கொருவர் தீபாவளி வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டனர். விழா ஏற்பாடுகளை பள்ளி தாளாளர் புஷ்பலதா பூரணன் செய்திருந்தார்.
- பாளை வ.உ.சி. மைதானம் அருகே உள்ள மண்டபத்தில் வள்ளலாரின் முப்பெரும் விழா இன்று நடைபெற்றது.
- வெற்றி பெற்றவர்களுக்கு சபாநாயகர் அப்பாவு சான்றிதழ்கள், பரிசுகள் வழங்கினார்.
நெல்லை:
வள்ளலாரின் தர்மசாலை தொடங்கி 156-வது ஆண்டு தொடக்க விழா உள்பட முப்பெரும் விழாவை கொண்டாட தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது.
இந்த விழாவை வள்ளலாரின் 200-வது அவதார ஆண்டான இந்த ஆண்டு அக்டோபர் முதல் அடுத்த ஆண்டு வரை 52 வாரங்களுக்கு முக்கிய நகரங்களில் அரசு விழாவாக நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி பாளை வ.உ.சி. மைதானம் அருகே உள்ள மண்டபத்தில் வள்ளலாரின் முப்பெரும் விழா இன்று நடைபெற்றது.
இந்த விழாவுக்கு சபாநாயகர் அப்பாவு தலைமை தாங்கினார். இதில் அப்துல் வஹாப் எம்.எல்.ஏ., நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ஆவுடையப்பன், மேயர் சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜு, மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயஸ்ரீ, இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் கவிதா, தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் பரமசிவ அய்யப்பன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் வள்ளலார் புகழ் பற்றி பாடும் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சபாநாயகர் அப்பாவு சான்றிதழ்கள், பரிசுகள் வழங்கினார். இதற்கான ஏற்பாடுகளை நெல்லை மண்டல இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் செய்திருந்தனர்.
+2
- குடிநீர் வினியோகம் பாதிப்பால் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வந்தனர்.
- சங்கர பாண்டியன் ஆகியோர் தலைமையில் சாலை மறியல் செய்ய முயன்றனர்.
நெல்லை:
நெல்லை மாநகராட்சி யில் 55 வார்டுகள் உள்ளன.இதில் பாளை மண்டலத்துக்குட்பட்ட 32-வது வார்டில் கடந்த 6 மாதங்களாக முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று கூறி அந்த வார்டு கவுன்சிலர் அனுராதா சங்கர பாண்டியன், மாநகராட்சி மேயர் மற்றும் அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்துள்ளார்.
ஆனாலும் இதுவரை சீராக குடிநீர் வினியோகம் செய்யப்படாததால் அந்த பகுதி மக்கள் அவதி அடைந்து வந்தனர். அந்த வார்டு பகுதியில் சுமார் 5,000 வீடுகள் இருக்கும் நிலையில் குடிநீர் வினியோகம் பாதிப்பால் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வந்தனர். தீபாவளி பண்டிகையை ஒட்டி பெரும்பாலான வீடுகளில் உறவினர்கள் வந்திருக்கும் நிலையில் தற்போது குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருவதாக பொதுமக்கள் புகார் கூறுகின்றனர்.
இந்த நிலையில் இன்று காலை அந்த வார்டை சேர்ந்த ஏராளமான பெண்கள், கவுன்சிலர் அனுராதா சங்கர பாண்டியன் மற்றும் நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கர பாண்டியன் ஆகியோர் தலைமையில் பாளை பஸ் நிலையம் அருகே திடீரென சாலை மறியல் செய்ய முயன்றனர்.
இதனை அறிந்து அங்கு மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து வந்தனர். அப்போது போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்களிடம் மாநகராட்சி உதவி செயற்பொறியாளர்கள் தன்ராஜ், ராமசாமி உள்ளிட் டோர் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். ஆனாலும் அவர்கள் சமாதானம் அடையவில்லை.
இதையடுத்து பாளை இன்ஸ்பெக்டர் வாசிவம் மற்றும் போலீசாரும் வந்து முறையாக குடிநீர் வினியோகம் செய்வதற்கு தேவையான நடவடிக்கை களை மேற்கொள்ள அறிவுறுத்தினார். தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்களிடம் அதிகாரிகள் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதில் உடன்பாடு ஏற்பட்டதால் அவர்கள் கலைந்து சென்றனர். இதற்கிடையே குடிநீர் குழாயில் அடைப்பு காரணமாக குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டு இருப்பதாக கூறி பஸ் நிலையம் அருகே பள்ளம் தோண்டப்பட்டு குழாய் அடைப்புகள் சரி செய்யும் பணி நடைபெற்றது. மேலும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்கு வதற்காக மாநகராட்சி லாரிகள் மூலமாக தண்ணீர் வினியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
- மலையையொட்டிய பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்வதால் அணைகளுக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது
- 118 அடி கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணையில் 70.85 அடி நீர் இருப்பு உள்ளது.
நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வந்த நிலையில் 2 நாட்களாக சற்று குறைந்துள்ளது. ஆனாலும் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்வதால் அணைகளுக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. நேற்று மணிமுத்தாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியில் 53 மில்லிமீட்டர் மழை கொட்டித்தீர்த்தது.
அணைக்கு வினாடிக்கு 134 கனஅடி தண்ணீர் வந்துக்கொண்டிருக்கிறது. 118 அடி கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணையில் 70.85 அடி நீர் இருப்பு உள்ளது.
இதேபோல் பாபநாசம் அணை பகுதியில் 11 மில்லிமீடடரும், சேர்வலாறில் 6 மில்லிமீட்டரும் மழை பெய்தது.
143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையில் 84.05 அடி நீர்இருப்பு உள்ளது. அணைக்கு வினாடிக்கு 463.89 கனஅடி தண்ணீர் வந்துக்கொண்டிருக்கிறது. அணையில் இருந்து பாசனத்திற்காக 404.75 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
- ரூபி மனோகரன் சாரிடபிள் டிரஸ்ட், நெல்லை அகர்வால் கண் மருத்துவமனை இணைந்து இலவச கண் சிகிச்சை பரிசோதனை மருத்துவ முகாம் நடத்தினர்.
- கிராம மக்களை ஊக்குவிக்கும் விதமாக பல்வேறு நலத்திட்டங்களை வழங்கினார்.
நெல்லை:
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில பொருளாளரும், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினருமான ரூபி மனோகரன் எம்.எல்.ஏ., தொகுதியின் வளர்ச்சிக்காக பல்வேறு நலத்திட்டங்களையும், உதவிகளையும் செய்து வருகின்றார்.
அதனடிப்படையில் எம்.எல்.ஏ. ஏற்பாட்டின் பேரில் பாளையங்கோட்டை ஒன்றியம், பாளையங்கோட்டை வடக்கு வட்டாரத்திற்கு உட்பட்ட கீழநத்தம் பஞ்சாயத்தில் உள்ள கீழநத்தம் தெற்கூர், கீழநத்தம் மேலூர், வடக்கூர், ஆர்.சி.சர்ச் கிராம மக்கள் பயன்பெறும் வகையில் கிராமங்கள் தோறும் மக்களை தேடி சட்டமன்ற உறுப்பினர் என்ற வகையில் டாக்டர் ரூபி மனோகரன் சாரிடபிள் டிரஸ்ட், நெல்லை அகர்வால் கண் மருத்துவமனை இணைந்து இலவச கண் சிகிச்சை பரிசோதனை மருத்துவ முகாம் நடத்தினர். இதில் ஏராளமான கிராம மக்கள் கலந்து கொண்டு சிகிச்சை பெற்றனர்.
மேலும் எம்.எல்.ஏ.விடம் கிராம மக்கள் பல்வேறு கோரிக்கைகளை வைத்தனர். அனைத்து கோரிக்கைகளை ஏற்று உரிய நடவடிக்கையும் எடுப்பதாக ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. கூறினார். கிராம மக்களை ஊக்குவிக்கும் விதமாக பல்வேறு நலத்திட்டங்களையும், நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.
பின்னர் கிராம மக்கள் அனைவருக்கும் கூட்டாஞ்சோறு வழங்கி அவர்களோடு ஒன்றாக அமர்ந்து உணவு உண்டார்.நிகழ்ச்சியில் நாங்குநேரி தொகுதி பொறுப்பாளர் அழகியநம்பி, கீழநத்தம் பஞ்சாயத்து தலைவர் அனுராதா ரவிமுருகன், மாநில மகிளா காங்கிரஸ் பொதுச்செயலாளர் குளோரிந்தால், மாவட்ட துணை தலைவர் செல்லப்பாண்டி, பாளை வடக்கு,மேற்கு கிழக்கு,தெற்கு மற்றும் நாங்குநேரி வடக்கு வட்டார காங்கிரஸ் கமிட்டியின் தலைவர்கள் கனகராஜ், கணேசன், சங்கரப் பாண்டியன், நளன், அம்புரோஸ் மற்றும் ஒன்றிய கவுன்சிலர் தெய்வாணை கனகராஜ், காங்கிரஸ் நிர்வாகிகள் ஜேம்ஸ்போர்டு, பெருமாள் தேவராஜ், நடராஜன், முத்துராமலிங்கம் முனிஸ்வரன், சாமுவேல் மற்றும் நெல்லை அகர்வால் கண் மருத்துவமனை டாக்டர்கள், செவிலியர்கள், கீழநத்தம் கிராம பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டனர்.
- சமீபத்தில் டவுன் புட்டாரத்தி அம்மன் கோவில் அருகே உள்ள மாரியம்மன் கோவிலில் கொடைவிழா நடைபெற்றது.
- தர்மர், மாதவன் மற்றும் ஆனந்த் ஆகியோர் சேர்ந்து வெங்கடேஷ் தரப்பினர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தியது தெரியவந்தது.
நெல்லை:
நெல்லையை அடுத்த பழைய பேட்டை சண்முகரெங்கையன் கட்டளை பகுதியில் வசித்து வருபவர் வெங்கடேஷ். இவருக்கு கவிதா என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர்.
சரமாரி தாக்குதல்
இவர் டவுன் வடக்கு ரதவீதியில் தள்ளுவண்டியில் வளையல் கடை நடத்தி வருகிறார். சமீபத்தில் டவுன் புட்டாரத்தி அம்மன் கோவில் அருகே உள்ள மாரியம்மன் கோவிலில் கொடைவிழா நடைபெற்றது. இதில் வெங்கடேசின் சகோதரர் நெல்லையப்பன், அவரது மகன் இசக்கிராஜா ஆகியோரும் கலந்து கொண்டனர்.
அப்போது அதே பகுதியை சேர்ந்த பெருமாள் என்ற பெட்டி பெருமாள் மற்றும் அவரது நண்பர்களுக்கும், இசக்கிராஜாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனை தட்டிக்கேட்க வெங்கடேஷ் சென்றபோது பெட்டி பெருமாள், தர்மராஜ் என்ற தர்மர் உள்பட 4 பேர் சேர்ந்து அவரை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் வெங்கடேசின் மண்டை உடைந்தது. இதையடுத்து அவர் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இது தொடர்பாக அவர் டவுன் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில் பெட்டி பெருமாள், தர்மராஜ் என்ற தர்மர், மாதவன் மற்றும் ஆனந்த் என்ற ஆனந்தகுமார் ஆகியோர் சேர்ந்து வெங்கடேஷ் தரப்பினர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தியது தெரியவந்தது.
இதையடுத்து 4 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதில் தர்மராஜ் என்ற தர்மர் வள்ளியூர் சார்பதிவாளராக பணியாற்றி வருகிறார்.
- கலெக்டர் விஷ்ணு கலந்து கொண்டு மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார்.
- நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரை எலிக்காய்ச்சல் பாதிப்பு இல்லை.
நெல்லை:
நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களுக்கும் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் கலெக்டர் அலுவலக வளாகத்தில் சிறப்பு மருத்துவ முகாம் இன்று நடைபெற்றது. இந்த முகாமில் மாவட்ட கலெக்டர் விஷ்ணு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார்.
முகாமில் சர்க்கரை அளவு, ரத்த அழுத்தம், ஹீமோகுளோபின் சோதனை, காய்ச்சல் உள்ளிட்ட நோய்கள் பரிசோதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டதுடன் மருந்துகளும் வழங்கப்பட்டது. அப்போது கலெக்டர் விஷ்ணு நிருபர்களிடம் கூறியதாவது:-
நெல்லை மாவட்டத்தில் அரசு அலுவலர்கள், ஊழியர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் மக்களை தேடி மருத்துவ திட்டத்தின் கீழ் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இதில் அனைத்து துறை அலுவலர்களும் கலந்து கொண்டு பரிசோதித்துக் கொள்ளலாம். நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரை எலிக்காய்ச்சல் பாதிப்பு இல்லை. ஆனாலும் நெல்லை மாநகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி என மாவட்ட முழுவதும் சுகாதாரத்துறை மூலம் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
நமது மாவட்டத்திற்கு மழை எச்சரிக்கை ஏதும் இதுவரை இல்லை. ஆனாலும் அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதுடன் மாவட்டத்தில் உள்ள கால்வாய்கள் அனைத்தும் தொடர்ந்து தூர்வாரப்பட்டு வருகிறது.
பருவமழை பேரிடரை எதிர்கொள்ளும் வகையில் கடலோரப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள 7 சிறப்பு முகாம்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் அனைத்து நிலைகளிலும் தயாராக உள்ளது. நதிநீர் இணைப்பு திட்டத்திற்காக சோதனை அடிப்படையில் தண்ணீர் திறக்கப் போவதாக கூறி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- சுவாமி நெல்லையப்பர் கோவிலில் திருக்கல்யாணத் திருவிழா வருகிற 22-ந் தேதி நடைபெற உள்ளது.
- தற்போது சேரன்மகாதேவி ரோடு குண்டும் குழியுமாக உள்ளது.
நெல்லை:
நெல்லை மாநகராட்சி மேயர் சரவணனிடம் திருவனந்தல் வழிபாட்டு குழு சார்பாக ஒரு மனு கொடுக்கபட்டுள்ளது.
அதில் கூறியிருப்பதாவது:-
நெல்லை டவுன் காந்திமதி அம்மன் உடனுறை சுவாமி நெல்லையப்பர் கோவிலில் திருக்கல்யாணத் திருவிழா வருகிற 22-ந் தேதி (சனிக்கிழமை ) நடைபெற உள்ளது.
காந்திமதி அம்மனுக்கு, சுவாமி காட்சி தரும் நிகழ்ச்சிக்காக 21-ந்தேதி அன்று காந்திமதி அம்பாள் தங்கச்சப்பரத்தில் எழுந்தருளி பேட்டை ரோடு வழியாக கம்பை நதிக்கரை காமாட்சி அம்மன் கோவிலுக்கு செல்வார்.
அதேபோல் 22-ந் தேதி காலை அம்பாளுக்கு காட்சி கொடுப்பதற்காக சுவாமி நெல்லையப்பரும் எழுந்தருளி பேட்டை ரோடு வழியாக காட்சி மண்டபத்திற்கு செல்ல வேண்டும். தற்போது சேரன்மகாதேவி ரோடு (பேட்டைரோடு) குண்டும் குழியுமாக உள்ளதால் சுவாமி சப்பரங்கள் செல்வதற்கும், பக்தர்கள் செல்வதற்கும் இடையூறாக உள்ளது. எனவே மாநகராட்சி சார்பில் போர்கால நடவடிக்கை எடுத்து சாலையை சீர்படுத்தி தார் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.