என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாலை மறியல்"

    • பரமத்தி வேலூர் -மோகனூர் சாலையில் உள்ள காமாட்சி நகரில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
    • ஆக்கிரமிப்பை அகற்றி ரேஷன் கடை கட்டுவதற்கான உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் -மோகனூர் சாலையில் உள்ள காமாட்சி நகரில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், ரேஷன் கடைக்கு 2 கிலோ மீட்டர் வரை செல்ல வேண்டியுள்ளது. வயதானவர்கள் ரேஷன் கடைக்கு செல்ல மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

    நிலம் ஒதுக்கீடு

    இதனால் காமாட்சி நகர் பகுதியிலேயே ரேஷன் கடை கட்டுவதற்காக அரசு புறம்போக்கு நிலம் ஒதுக்கப்பட்டது. இதையடுத்து, இந்த இடத்தில் ரேஷன் கடை கட்டித்தரக் கோரி இப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், தொடர்ந்து சம்பந்தப்பட்ட வருவாய் துறையினரிடம் மனு அளித்தும், இதுவரை அப்பகுதியில் ரேஷன் கடை கட்டுவதற்க எந்தவிதமான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.

    ஆக்கிரமிப்பு

    இந்த நிலையில் ரேஷன் கடைக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில், அதே பகுதியில் வசிக்கும் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்து வீடு கட்டுவதற்கான முயற்சி மேற்கொண்டு வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து. அப்பகுதி மக்கள், வருவாய் துறையினரிடம் ஆக்கிரமிப்பு செய்துள்ள இடத்தை மீட்டு, உடனடியாக ரேஷன் கடை கட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். ஆனால் இதையும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை.

    சாலை மறியல்

    இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதிறயை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள், நேற்று பரமத்திவேலூரில் இருந்து மோகனூர் செல்லும் சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து அங்கு வந்த பரமத்தி வேலூர் போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

    மேலும் ஆக்கிரமிப்பை அகற்றி ரேஷன் கடை கட்டுவதற்கான உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டத்தால், சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    • செவ்வாய்ப்பேட்டை மூலபிள்ளையார் கோவில் பகுதியில் உள்ள குடியிருப்புகளையும் திருமணி முத்தாறு வெள்ளம் சூழந்தது
    • தொடர்மழை காரணமாக சேலம் அல்லிக்குட்டை ஏரி இரவு நிரம்பியது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் புயல் காரணமாக கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. அதே போல் நேற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டியது. சேலம் மாநகரில் நேற்று மாலை 6.30 மணிக்கு பெய்ய தொடங்கிய மழை இரவு 10.30 மணிவரை கொட்டி தீர்த்தது. இதன் காரணமாக மாநகரின் பல்வேறு பகுதிகளிலும் தண்ணீர் தேங்கியது.

    புதிய பஸ் நிலையத்தில் குளம் போல் தண்ணீர் தேங்கியது. மேலும் மாநகரின் பல்வேறு பகுதிகளிலும் சாலைகளில் மழை வெள்ளம் ஆறாக ஓடியது. சூரமங்கலம், அஸ்தம்பட்டி, கோரிமேடு, தாதகாப்பட்டி, கொண்டலாம்பட்டி, அம்மாப்பேட்டை மற்றும் மாநகரின் பல்வேறு இடங்களிலும் குடியிருப்புகளை சூழ்ந்து தண்ணீர் தேங்கி நின்றது. சேலம் மாநகராட்சியின் பல்வேறு இடங்களிலும் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் பொதுமக்கள் வீடுகளில் புகுந்த தண்ணீரை விடிய, விடிய அகற்றினர்.

    சேலம் மாநகராட்சி 26-வது வார்டு குப்தா நகர் 6 முதல் 9 குறுக்கு தெரு முழுவதும், சினிமா நகர், சின்னேரிவயக்காடு ஓடைஓரம் உள்ள வீடுகளுக்குள் மழை வெள்ளம் புகுந்தது. இதுப்பற்றி தெரியவந்ததும் மாநகராட்சி கமிஷனர் ரஞ்சித் சிங், தி.மு.க. வார்டு செயலாளர் முருகன் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் அங்கு விரைந்து சென்று பொதுமக்களை மீட்டு அங்குள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

    இதே போல் சேலம் மாநகராட்சி 30-வது வார்டு பகுதியில் திருமணி முத்தாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக தண்ணீர் கபிலர் தெரு, பாரதிதாசன் தெரு, போலீஸ் நிலையம் அருகில் உள்ள கந்தசாமி பிள்ளை தெரு, சோமபுரி தெரு, பங்களா தெரு, நந்தவனம் தெரு ஆகிய பகுதிகளிலும் தண்ணீர் புகுந்தது. இதையடுத்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்களை போலீசார் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் மீட்டு நகரவை மேல்நிலைப்பள்ளியில் தங்க வைத்தனர்.

    செவ்வாய்ப்பேட்டை மூலபிள்ளையார் கோவில் பகுதியில் உள்ள குடியிருப்புகளையும் திருமணி முத்தாறு வெள்ளம் சூழந்தது. இதையடுத்து அந்த வீடுகளில் வசித்த பொதுமக்களை தீயணைப்பு துறையினர் மீட்டு கொண்டு வந்தனர்.

    தொடர்மழை காரணமாக சேலம் அல்லிக்குட்டை ஏரி இரவு நிரம்பியது. இதையடுத்து அல்லிக்குட்டை மெயின் ரோடு பகுதியில் உள்ள வீடுகள், மன்னார்பாளையம் போயர் தெருவில் உள்ள வீடுகளுக்குள் ஏரி தண்ணீர் புகுந்தது. இதனால் அந்த பகுதியில் வசித்த பொதுமக்கள் விடிய, விடிய தூங்காமல் கடும் குளிரில் அவதிப்பட்டனர். இதையடுத்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஏரியில் இருந்து வரும் தண்ணீரை வேறு வழியில் திருப்பிவிட வேண்டும் என வலியுறுத்தி அல்லிக்குட்டை பகுதியில் இன்று காலை சாலை மறியல் செய்தனர். இதில் அந்த பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதுபற்றி தெரியவந்ததும் வீராணம் போலீசார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் அங்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இதையடுத்து உடனடியாக வீடுகளில் புகுந்த மழை நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுப்பதாக கூறினர். இதனால் பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டனர். இதேபோல் மன்னார்பாளையம் பிரிவு ரோட்டிலும் பொதுமக்கள் சாலை மறியல் செய்தனர்.

    இதே போல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பலத்த மழை கொட்டியது. இதன் காரணமாக கிராமப்புறங்களில் உள்ள வயல்வெளிகளில் தண்ணீர் இடுப்பளவுக்கு தேங்கி நின்றது. வயல் வெளிகளில் தேங்கிய தண்ணீரை அகற்றும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். நேற்று இரவு பெய்த மழையின் காரணமாக சேலம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.

    ×