என் மலர்
நீங்கள் தேடியது "tag 95212"
- திருச்செங்கோட்டில் இருந்து சுமார் 22 கி.மீ. தொலைவில் உள்ளது காளிப்பட்டி முருகன் கோவில்.
- கந்தசாமியைப் பிரார்த்திக்க கல்யாண வரமும் பிள்ளை பாக்கியமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
திருச்செங்கோட்டில் உள்ள அர்த்தநாரீஸ்வரர் ஆலயம் புகழ் பெற்றது. இந்த ஆலயத்தில் இருந்து சுமார் 22 கி.மீ. தொலைவில் சேலம்-திருச்செங்கோடு சாலையில் காளிப்பட்டி முருகன் கோவில் உள்ளது.
முன்னொரு காலத்தில், இங்கு முருக பக்தர் ஒருவர் வசித்தார். ஆண்டு தோறும் தைப்பூசத் திருநாளையொட்டி, கடும் விரதம் இருந்து, பாத யாத்திரையாக பழனிக்கு காவடி எடுத்துச் சென்று வழிபடுவது இவரது வழக்கம். ஒரு நாள் அவரின் கனவில் தோன்றிய முருகக் கடவுள், இனி, என்னைத் தேடி பழனி வர வேண்டாம். உனது இடத்திலேயே குடியிருக்க விரும்புகிறேன். இங்கேயே கோவில் எழுப்பு! என்று அருளி மறைந்தாராம், அதன்படி கட்டப்பட்டதே, காளிப்பட்டி அருள்மிகு கந்தசாமி திருக்கோயில்.
இந்தப் பகுதியில் எவரேனும் பாம்பு கடித்து மயங்கி விட்டால், உடனடியாக அவரை இந்தக் கோயில் மண்டபத்துக்கு கொண்டு வந்து கிடத்துகின்றனர். பூசாரி, முருகக் கடவுளின் அபிஷேகத் தீர்த்தத்தையும் விபூதியையும் தர, சிறிது நேரத்தில் விஷம் இறங்கி விடுமாம்.
இந்த கோவிலில் பாலபிஷேகம் செய்து வழிபடுவது விசேஷம். வைகாசி விசாகம் போன்ற நாட்களில், பாலாபிஷேகம் செய்து கந்தசாமியைப் பிரார்த்திக்க கல்யாண வரமும் பிள்ளை பாக்கியமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
குடும்பத்தில் பிரச்சினை, வியாபாரத்தில் நஷ்டம், வீண் பயம் முதலானவற்றால் அவதிப்படுபவர்கள், இங்கு வந்து கந்தசாமியை மனமுருகிப் பிரார்த்தித்து, இடும்பன் சந்நிதியில் தரப்படும் மை பிரசாதத்தைப் பெற்று மூன்று நாட்கள் தினமும் நெற்றியில் வைத்துக் கொண்டால், தொழிலில் முன்னேற்றம் ஏற்படும், குடும்பத்தில் ஒற்றுமை ஓங்கும், தேவையற்ற பயம் விலகும்.
வைகாசி விசாக நாளில், உற்சவர் வீதியுலா நடைபெறும் போது காளிப்பட்டி கந்த சாமியை வணங்கினால் கவலையெல்லாம் பறந்தோடி விடும் என்பது ஐதீகம்.
- முருகனின் ஆறு படைவீடுகளும், நம் உடலில் உள்ள ஆறு குண்டலிகளாக விளங்குவதாக சொல்லப்படுகிறது.
- முருகப்பெருமானுக்கு மூன்று மயில்கள் வாகனமாக உள்ளன என்பதை பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை.
இந்து சமயத்தில் பல்வேறு தெய்வ வழிபாடுகள் இருந்தாலும், அவை ஒவ்வொன்றும் ஒரு தனித்துவத்தைப் பெற்று விளங்குகின்றன. நாம் வழிபடும் தெய்வங்களில் மகாவிஷ்ணுவுக்கு ஒரு முகம், அக்னி பகவானுக்கு இரண்டு முகம், தத்தாத்ரேயருக்கு மூன்று முகம், பிரம்மனுக்கு நான்கு முகம், சிவபெருமான், அனுமன், காயத்ரிதேவி, ஹேரம்ப கணபதி ஆகியோருக்கு ஐந்து முகங்கள், முருகப்பெருமானுக்கு மட்டுமே ஆறு முகம்.
முருகப்பெருமானை, ஆறுமுகப் பெருமானாக வழிபடுவதற்கான காரணத்தை, தான் இயற்றிய திருமுருகாற்றுப்படை என்ற நூலின் மூலமாக நக்கீரர் விளக்கிக் கூறுகிறார். அதன்படி, உலகைப் பிரகாசிக்கச் செய்ய ஒரு முகம், பக்தர்களுக்கு அருள் செய்ய ஒரு முகம், வேள்விகளைக் காக்க ஒரு முகம், உபதேசம் புரிய ஒரு முகம், தீயோரை அழிக்க ஒரு முகம், பிரபஞ்ச நன்மைக்காக வள்ளியுடன் இணைய ஒரு முகம்.
அதன் காரணமாகத்தான் முருகப்பெருமானுக்கு 'சரவணபவ' என்ற ஆறு எழுத்து மந்திரமும் அமையப்பெற்றுள்ளது. இந்த ஷடாட்சர மகா மந்திரத்தில் உள்ள 'ச' என்பது லட்சுமி கடாட்சத்தைக் குறிப்பதாகும். 'ர'- சரஸ்வதி கடாட்சம், 'வ' - போகம் மற்றும் மோட்சம், 'ண' சத்ருஜயம், 'ப' - மிருத்யுஜயம், 'வ' நோயற்ற வாழ்வு என்று தனித்தனியாக ஒவ்வொன்றைக் குறிக்கின்றன.
முருகனின் ஆறு படைவீடுகளும், நம் உடலில் உள்ள ஆறு குண்டலிகளாக விளங்குவதாக சொல்லப்படுகிறது. அவை, திருப்பரங்குன்றம் - மூலாதாரம், திருச்செந்தூர் - சுவாதிஷ்டானம், பழனி - மணிபூரகம், சுவாமிமலை - அனாஹதம், திருத்தணிகை - விசுக்தி, பழமுதிர்சோலை - ஆக்ஞை. முருகனின் வாகனம் மயில் என்பதை அனைவரும் அறிவர். ஆனால் முருகப்பெருமானுக்கு மூன்று மயில்கள் வாகனமாக உள்ளன என்பதை பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. முருகப்பெருமான் ஞானப் பழத்தைப் பெறுவதற்காக, உலகத்தை மயில் மீது ஏறி வலம் வந்தார்.
அந்த மயில் 'மந்திர மயில்' ஆகும். அதே போல் முருகப்பெருமான், சூரபதுமனுடன் போரிடுவதற்காக அவரது மயில் வாகனமாக தேவேந்திரன் உருமாறினான். இதனை 'தேவ மயில்' என்பார்கள். சூரபதுமன் மரமாக உருமாறி நின்றபோது, அந்த மரத்தை தன்னுடைய வேல் கொண்டு இரண்டாகப் பிளந்தார், முருகப்பெருமான். அதில் ஒரு பகுதி மயிலாகவும், மற்றொரு பகுதி சேவல் கொடியாகவும் மாறியது. இதில் உள்ள மயில் 'அசுர மயில்' எனப்படுகிறது. இப்படி முருகப்பெருமானுக்கு மூன்று மயில்கள் உண்டு.
- ஆறுபடை வீடுடைய அழகிய குமரன், கோடை நகரிலும் கம்பீரமாக கொலுவிருக்கின்றான்.
- இத்தலம், அருணாகிரி நாதரின் திருப்புகழ் பாடல்களை பெற்ற பெருமையுடையது.
ஆறுபடை வீடுடைய அழகிய குமரன், கோடை நகரிலும் கம்பீரமாக கொலுவிருக்கின்றான். எங்கே உள்ளது இந்த கோடை நகர்? என்கிறீர்களா? நமது வல்லக்கோட்டை திருத்தலத்தின் தொன்மையான திருப்பெயர்தான் கோடை நகர். இத்தலம், காலத்தால் மிகத் தொன்மையானது, அருணாகிரி நாதரின் திருப்புகழ் பாடல்களை பெற்ற பெருமையுடையது.
தனது பாக்களில் வல்லக்கோட்டையை கோடை நகர் என்றுதான் குளிர் தமிழில் குறிப்பிடுகின்றார் அருணாகிரியார். குமரன் குடி கொண்டுள்ள கோவில்களுக்கெல்லாம் சென்று திருப்புகழ் பாடி மகிழ்வதைத் திருத்தொண்டாக செய்தவர் அருணகிரி. இவர் எந்த தெய்வத்திடமும் வெறுப்பில்லாத அத்வைதஞானி. என்றாலும் முருகப்பெருமானிடம் மட்டுமே முதிர்ந்த காதல் உடையவர். ஒரு சந்தர்ப்பத்தில் திருப்போரூர் வந்த அருணகிரியார், அங்கேயே தங்கி கந்தக் கடவுளுக்கு மலர்களாலும், மனம் மிகு பாக்களாலும் ஆராதனை நடத்தி வந்தார். சில காலத்துக்குப் பிறகு திருத்தணி சென்று வேலவரை தரிசிக்க வேண்டுமென்ற ஆவல் உந்த, தணிகை நோக்கி பயணிக்க முடிவு செய்தார்.
அன்றிரவு குமரன், அருணகிரிநாதரின் கனவில் தோன்றி, கோடை நகருக்கு வருக என்று அழைப்பு விட்டான். காலையில் எழுந்த அருணகிரி நாதர், தன்னை சொந்தம் கொண்டாடும் கந்தன் கருணையை எண்ணி கண்ணீர் மல்கினார். உடனே வழி விசாரித்துக் கொண்டு கோடை நகர் வந்து சேர்ந்தார்.
வள்ளியும்-தெய்வானையும் இரு புறத்திலும் விளங்க, சுமார் ஏழடி உயரத்துடன் காட்சி தரும் முருகப்பெருமானை கண்டு உள்ளம் உருகினார். திருப்புகழ் பாடிப் பரவினார். எட்டு திருப்புகழ் பாடல்களை, முருகப்பெருமான் மீது பாடி இத்தலத்தில் அர்ப்பணித்தார்.
இன்று வல்லக்கோட்டை எனப்படும் கோடை நகர், பெரும்புகழ் வாய்ந்த தலமாக விளங்குகிறது. இங்கு வைகாசி விசாகப் பெருவிழாயொட்டி புஷ்பப் பல்லக்கில் சுப்பிரமணியசுவாமி சேவை சாதிப்பார்.
திருக்கல்யாண உற்சவம் நிறைவேறியதும் அதிகார மயில் சேவை நடைபெறும். அனைவரும் வைகாசி விஜயனின் விவாகத் திருக்காட்சியையும், அதிகார மயில் புறப்பாட்டையும் கண்டு ஆனந்தத்தையும், அருளையும் பெறலாம்.
- முருகனுக்கு வாகனமாகவும், கொடியாகவும் இருப்பவை மயிலும், சேவலும்.
- விசாக நட்சத்திரத்தில் உதித்த விசாகன் என்ற முருகன் பெயரால் இரு திருத்தலங்கள் உள்ளன.
விசாகன் என்றால் பட்சியின் மேல் சஞ்சரிப்பவன் என்று பொருள். வி-பட்சி, சாகன்-சஞ்சரிப்பவன் மயில் பட்சியை வாகனமாகக் கொண்டவன். முருகனுக்கு வாகனமாகவும், கொடியாகவும் இருப்பவை மயிலும், சேவலும். இவை இறைவனிடம் காட்டும் ஒப்பற்ற கருணையைக் குறிக்கிறது.
விசாக நட்சத்திரத்தில் பிறந்தவன். ஆறு விண்மீன்களைக் கொண்டது விசாகம். முன் மூன்றும் பின் மூன்றும் கொண்டு விளங்குவது. முன் மூன்றில் நடுவில் உள்ளது ஒளிமிக்கது. ஆறுமுகனின் முகங்கள் முன் மூன்றும் பின் மூன்றுமாக இருப்பது விசாகத்தின் வடிவே என்றும் சொல்வார்கள்.
சக்தியிடம் முருகன் விசாகனாக தோன்றிய நாள் தான் வைகாசி விசாகம் ஆகும். அதனால் தான் முருகப்பெருமானுக்கு வைகாசி விசாகத் திருநாள் ஓர் பெருவிழாவாக கொண்டாடப்படுகிறது.
விசாக நட்சத்திரத்தின் பிரதான தேவதை முருகப்பெருமான் ஆவார். விசாக நட்சத்திரத்தின் அதிதேவதைகள் இருவராவர் ஒருவர் இந்திரன் மற்றொருவர் அக்னி.
இவர்கள் சகல மங்களங்க ளையும் அளிப்பவர் களாக தமது இருதிருக்கரங்க ளில் வரதம் மற்றும் அபய முத்திரை ஏந்தி அருள்புரிகிறார்கள். அக்னி சிவப்பு நிற மேனி கொண்டவர். இந்திரனோ தகதகக்கும் தங்கத் திருமேனி உடையவர்.
விசாக நட்சத்திரத்தில் உதித்த விசாகன் என்ற முருகன் பெயரால் இரு திருத்தலங்கள் உள்ளன. ஒன்று வைசாக் மற்றும் விசுவை என்று அழைக்கப்படும் விசாகப்பட்டினம் ஆகும். இது ஆந்திர மாநிலத்தில் உள்ள துறைமுக நகரமாகும்.
இது அருணகிரிநாதர் பாடிய திருப்புகழ் தலங்கள் 237-ல் ஒரு திருத்தலமாகும். மற்றொரு தலம் விசாகபவனம் எனப்படும் தலமாகும். இத்தலம் தணிகை புராணம் எழுதிய நூலாசிரியர் ஸ்ரீ கச்சியப்ப முனிவர் என்பவர் கூறும் 64 திருத்தலங்களில் ஒன்றாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
- முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானைக்கு 16 வகை அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் நடைபெற்றது.
- வீரபாகுவாக ஓதுவார் நாகராஜ் 3 முறை தூது சென்று ஊடல் பாடல்களை பாடினார்.
பழனி முருகன் கோவிலில், வைகாசி விசாக திருவிழா ஆண்டுதோறும் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டு திருவிழா கடந்த 6-ந்தேதி பழனி முருகன் கோவிலின் உபகோவிலான பெரியநாயகி அம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி தினமும் காலை தந்தப்பல்லக்கு, மாலையில் தங்க மயில், தங்கக்குதிரை, வெள்ளிமயில், யானை உள்ளிட்ட வாகனங்களில் முத்துக்குமாரசுவாமி வள்ளி-தெய்வானை புறப்பாடு நடந்தது. முக்கிய நிகழ்ச்சிகளான திருக்கல்யாணம், தேரோட்டம் முறையே கடந்த 11, 12-ந்தேதிகளில் நடந்து முடிந்தது.
இந்தநிலையில் வைகாசி விசாக திருவிழா, கொடியிறக்கத்துடன் நேற்று நிறைவு பெற்றது. முன்னதாக பெரியநாயகி அம்மன் கோவிலில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானைக்கு 16 வகை அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. அதன்பிறகு, சப்பரத்தில் சாமி உலா வரும் நிகழ்ச்சி நடந்தது. அப்போது, தான் இருக்க வள்ளியை திருமணம் செய்தது ஏன்? என்று முருகப்பெருமானிடம் கோபித்த தெய்வானை அம்மன், சப்பரத்தில் இருந்து இறங்கி தனி பல்லக்கில் பெரியநாயகி அம்மன் கோவிலுக்கு சென்று நடையை சாத்தி கொள்ளும் நிகழ்ச்சி நடந்தது. அதைத்தொடர்ந்து நாரத முனிவர் தூது சென்றார். ஆனால் அவரது முயற்சி தோல்வி அடையவே வீரபாகு, தெய்வானை அம்மனிடம் தூது சென்று அவரை சமாதானப்படுத்தினார்.
வீரபாகுவாக ஓதுவார் நாகராஜ் 3 முறை தூது சென்று ஊடல் பாடல்களை பாடினார். அப்போது வள்ளி, தெய்வானையும் ஒருவரே என்று விளக்கி சமரசம் செய்தார். அதன்பின்னர் கோவிலில் நடை திறந்து தெய்வானை அம்மன் முத்துக்குமாரசுவாமியுடன் சேர்ந்து கொள்வதுமான நிகழ்ச்சி நடைபெற்றது. அதன்பிறகு உட்பிரகாரத்தில் வலம் வந்து முத்துக்குமாரசுவாமி வள்ளி-தெய்வானைக்கு தீபாராதனை காட்டப்பட்டது. அப்போது அங்கு திரண்டிருந்த ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். முடிவில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
- சூரபத்மனின் ஆணவத்தை அழிப்பதற்கென்றே அவதரித்தவர் முருகக்கடவுள்.
- முருகப்பெருமானுக்கு சூரபத்மன் தாத்தா முறை.
சூரபத்மன் முருகப் பெருமானிடம் போர் புரிந்து, இறுதியில் மயிலாகவும் சேவலாகவும் மாறி சரணடைந்த கதை அனைவரும் அறிந்ததுதான்.
சூரபத்மனை முருகப்பெருமான் முற்றிலும் வதம் செய்யாமல்மயிலாக வந்தபோது சேவலாக வந்த போது கொடியாகவும் ஏற்றுக் கொண்டார்.
முன்ஜென்மத்தில் சூரபத்மன் தட்சனாக இருந்தான். அவன் மகள் தாட்சாயினி பரமனை மணந்தாள். அந்த வகையில் தட்சனான சூரபத்மன் பரமசிவனுக்கு மாமனாகிறான்.
சிவ - பார்வதி மைந்தனான முருகப் பெருமானுக்கு சூரபத்மன் தாத்தா முறை. எந்தப் பேரனாவது தாத்தாவைக் கொல்வதற்கு முனைவானா? அதனால் தான் சூரபத்மன் மாமரமாகி நின்ற வேளையில், தன் அன்னையிடம் பெற்ற சக்திவேலால் மாமரத்தை இரண்டாகப் பிளந்து, 'நான்' என்னும் அகங்காரம் சேவலாகவும், 'எனது' என்னும் மமகாரம் மயிலாகவும் மாறியது. சேவலைக் கொடியாக்கி, மயிலை வாகனமாக்கிக் கொண்டார் முருகப் பெருமான என்கிறார் சென்னை நங்கநல்லூர் அர்த்தநாரீஸ்வரர் கோயிலின் பாலாஜி வாத்தியார்.
பேரனைச் சுமக்க தாத்தாவிற்கு கஷ்டமா என்ன? அதனால் தான் மயில் வாகனமாக மாறி, பேரனைச் சுமந்தார் தாத்தா சூரபத்மன்.
சூரபத்மனின் ஆணவத்தை அழிப்பதற்கென்றே அவதரித்தவர் முருகக் கடவுள்.
இந்த சிவமைந்தன் முற்பிறவியில் பிரம்மதேவனின் மைந்தனாக பிரம்மஞானி சனக்குமாரர் என்ற பெயர் தாங்கி முக்காலம் அறிந்த ஞானியாகத் திகழ்ந்தார் என்றும் விவரிக்கிறது புராணம்.
ஒரு முறை, சூரர்களைப் போரிட்டு வதம் செய்வது போல் கனவு கண்டார். அதனை தன் தந்தையான பிரம்மாவிடம், 'தந்தையே! நான் சேனாதிபதியாக நின்று அசுரர்களை வதம் செய்வதாகக் கனவு கண்டேன்' என்று சொன்னார். அதற்கு அவர், 'சனத்குமாரா, உன் கனவு பலிக்கும். ஆனால், நீ பிரம்மஞானியாக இருப்பதால் இந்தப் பிறவியில் அது இயலாத காரியம். அடுத்த பிறவியில் உனக்கு அந்தப் பாக்கியம் கிட்டும்' என்றார்.
முருகப் பெருமானின் அவதாரத்தை முன்னிட்டு சிவனாரும் உமையவளும் சனத்குமாரரைக் காண வந்தார்கள். தியானத்தில் இருந்த சனத்குமாரர் தியானம் முடிவடைந்ததும் தன் முன் சிவனும் பார்வதியும் நிற்பதைக் கண்டு வணங்கினார்.
அப்போது பரமேஸ்வரன் 'மகனே. உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்' என்றார். அதற்கு சனத்குமாரர், 'நீங்கள் ஒன்றும் எனக்கு வரம் தர வேண்டாம் உங்களுக்கு வேண்டுமானால் நான் வரம் தருகிறேன், கேளுங்கள்' என்றார். இதைக் கேட்டு கோபம் கொள்ளவில்லை சிவனார். "நீ எனக்கு மகனாகப் பிறக்க வேண்டும்" என்று வரம் கேட்டார்.
சனத்குமாரரும், "உங்கள் விருப்பப்படியே உங்கள் அருளால் உங்களுக்கு மகனாகப் பிறப்பேன்" என்றார். இதைக் கேட்டுக் கொண்டிருந்த பார்வதி, "உம் அருளால் மகனாகப் பிறப்பேன் என்றால், என் பங்கு ஒன்றுமில்லாதது போல் தெரிகிறதே" என்றாள்.
"ஆம். கர்ப்பவாசத்தில் தோன்றப் போவதில்லை. எனவே, அருள் கூர்ந்து தங்கள் கணவரின் அருள் பார்வையால் நான் அவதரிக்கும்படி செய்யுங்கள்" என்றார். பார்வதியும், "சரி, உன் விருப்பம் போல் நடக்கும்" என ஆசீர்வதித்தாள்.
காலங்கள் கடந்தன. பஸ்மாசுரனைக் கொல்ல சிவபெருமான் மகா விஷ்ணுவுடன் சென்றபோது, பார்வதி தனித்திருப்பதை அறிந்த பஸ்மாசுரன் பார்வதியைத் தேடி வந்தான். தன் கணவனைப் பிரிந்த சோகத்தில் உருகிக் கொண்டிருந்த உமையவள், பஸ்மாசுரன் வருவதை அறிந்து அவனிடமிருந்து தப்பிக்க பொய்கையாக மாறினாள்.அது தான் சரவணப் பொய்கை எனப்படுகிறது.
மகாவிஷ்ணுவின் மோகினி அவதாரத்தால் பஸ்மாசுரன் எரிந்து சாம்பல் ஆனதும், பரமசிவன் கயிலாயம் வரும் வழியில் பார்வதி பொய்கையாக மாறி இருப்பதைக் கண்டு, இது தான் தக்க தருணம் என்று தன் நெற்றிக் கண்ணிலிருந்து ஆறு தீப்பொறிகளை அந்தப் பொய்கையில் விழும்படி செய்தார்.
சிவபெருமானின் நெற்றிக் கண்ணிலிருந்து வெளிப்பட்ட ஆறு தீப்பொறிகள், ஆறு குழந் தைகளாக தாமரை மலர்கள் மேல் எழுந்தருளின. அந்த ஆறு குழந்தைகளையும் கார்த்திகைப் பெண்கள் எடுத்துப் போற்றினார்கள். இதனைக் கண்ட பார்வதி, அந்த ஆறு குழந்தைகளையும் அவர்களிடமிருந்து வாங்கி ஒன்றாக்கினாள். அந்தக் குழந்தையே ஆறுமுகம் கொண்ட சரவணன் என்கிற முருகப் பெருமான். இப்படித்தான் சனத்குமாரர் முருகக் கடவுளாக அவதரித்தார். சூரபத்ம வதமும் நிகழ்ந்தது. தேவர்களும் மகிழ்ந்தனர்.
இதன் காரணமாகத்தான் ஐப்பசி மாதம் வளர்பிறையிலிருந்து ஆறு நாட்கள் திருச்செந்தூரில் கந்தசஷ்டி விழா நடைபெறுகிறது. சஷ்டி திதி அன்று சூரசம்ஹார நிகழ்ச்சி திருச்செந்தூர் கடற்கரையில் மிகச் சிறப்பாக நடைபெறும்.
கந்த சஷ்டி வேளையில் விரதம் இருந்து கந்தனை வணங்கி மகிழ்வார்கள் முருக பக்தர்கள்.
- தெய்வானையை திருமணம் செய்த இடம் திருப்பரங்குன்றம்.
- பழத்திற்காக சண்டை போட்ட இடம் பழனி.
புலவர் நக்கீரர் தமிழகத்தில் உள்ள முருகனின் தலை சிறந்த 6 கோவில்களை தேர்வு செய்து அதற்க்கு பெயர் திருமுருகாற்றுப்படை என்று சூட்டினார். பிற்காலத்தில் ஆற்றுப்படை ஆறு படை( அறுபடை வீடு ) என்று அழைக்கப்பட்டது.
திருப்பரங்குன்றம்: சூரபத்மனை போரில் வென்ற பின் இந்திரன் மகளான தெய்வானையை மணந்த திருத்தலமிது.
திருச்செந்தூர்: அசுரன் சூரபத்மனோடு முருகன் போரிட்டு வென்று வெற்றி வாகைச் சூடிய திருத்தலமிது.
பழனி: மாங்கனிக்காக தமையன் விநாயகரோடு போட்டியிட்டு தோற்ற கோபத்தில் தண்டாயுதபாணி நின்ற திருத்தலமிது.
சுவாமிமலை : தன் தந்தை சிவனுக்கே பிரணவ மந்திரத்தை ஓதி தகப்பன் சுவாமியாக காட்சி தரும் திருத்தலமிது.
திருத்தணி: சூரனை வதம் செய்த பின் சினம் தணிந்து, குறவர் மகள் வள்ளியை மணந்த திருத்தலமிது.
பழமுதிர்சோலை: அவ்வைக்கு பழம் உதிர்த்து, வள்ளி தெய்வானையோடு காட்சி தரும் திருத்தலமிது.
- 30-ந்தேதி சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
- வள்ளி-தெய்வானை திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறுகிறது.
முருகப்பெருமானின் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலில், கந்தசஷ்டி விழா ஆண்டுதோறும் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான கந்தசஷ்டி விழா நேற்று காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. இதையொட்டி காலை 11.30 மணிக்கு உச்சிக்கால பூஜையில் மூலவருக்கு அபிஷேகம், சிறப்பு அலங்காரம், கல்பபூஜை நடந்தது. இதைத்தொடர்ந்து விநாயகர், மூலவர், சண்முகர், வள்ளி-தெய்வானை, துவார பாலகர்கள், மயில், வேல் மற்றும் நவவீரர்களுக்கு காப்புக்கட்டு நடைபெற்றது.
7 நாட்கள் நடைபெறும் திருவிழாவின் 6-ம் நாளான 30-ந்தேதி சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் சூரர்களை வதம் செய்வதற்காக மலைக்கோவிலில் சின்னக்குமாரர், மலைக்கொழுந்து அம்மனிடம் வேல் வாங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து மலைக்கோவில் நடை சாத்தப்படுகிறது.
பின்னர் சூரசம்ஹார நிகழ்ச்சிக்காக சின்னக்குமாரர் வில், அம்பு, கேடயம், குத்தீட்டி உள்ளிட்ட ஆயுதங்கள் மற்றும் நவவீரர்களுடன் மலைக்கோவிலில் இருந்து புறப்பட்டு அடிவாரம் பாதவிநாயகர் கோவிலுக்கு வருகிறார்.
பின்னர் திருஆவினன்குடி கோவிலுக்கு சென்று குழந்தை வேலாயுதசுவாமியிடம் பராசக்தி வேல் வைத்து சிறப்பு பூஜை நடைபெறும். தொடர்ந்து 6 மணிக்கு மேல் கிரிவீதிகளில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. பின்னர் இரவு 9 மணிக்கு மேல் மலைக்கோவிலுக்கு செல்லும் படிப்பாதையில் உள்ள ஆரியர் மண்டபத்தில் வெற்றிவிழா நடக்கிறது.
தொடர்ந்து பராசக்தி வேல் மலைக்கோவிலுக்கு சென்று சம்ரோட்சன பூஜை, ராக்கால பூஜை நடைபெறுகிறது. விழாவின் 7-ம் நாளில் மலைக்கோவிலில் சண்முகர் வள்ளி-தெய்வானை திருக்கல்யாண நிகழ்ச்சி காலை 9.30 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் நடைபெறுகிறது. மேலும் அன்று இரவு 7 மணிக்கு மேல் பெரியநாயகி அம்மன் கோவிலில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறுகிறது.
- 31-ந்தேதி இரவு தெய்வானை திருக்கல்யாண வைபவம் நடக்கின்றன.
- 3 நாட்கள் ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது.
அறுபடை வீடுகளில் நான்காம் படை வீடான சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் கந்த சஷ்டி விழா விமரிசையாக நடக்கும். அதன்படி இந்த ஆண்டு கந்த சஷ்டி விழா கடந்த 24-ந் தேதி இரவு 7 மணிக்கு மேல் விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. இந்த விழா அடுத்த மாதம் 4 -ந் தேதி வரை நடக்கிறது.
விழாவையொட்டி நேற்று சந்திரசேகரர், அம்பாள், வள்ளி-தெய்வானை சமேத சண்முகர் வீரகேசரி, வீரபாகுவுடன் மலைக்கோவிலில் இருந்து படியிறங்கி உற்சவ மண்டபத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடந்தது.
தொடர்ந்து தினமும் இருவேளையும் சந்திரசேகரர், வீரபாகு மற்றும் வீரகேசரி ஆகியோர் சூரபத்மனுடன் எதிர்கொண்டு யாகசாலை பூஜை நடைபெற்ற பின் திருவீதி உலா நடைபெற உள்ளது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான வருகிற 30-ந் தேதி(ஞாயிற்றுக்கிழமை) வள்ளி- தெய்வானை சமேத சண்முகருக்கு காலை 11 மணிக்கு 108 சங்காபிஷேகமும் சிறப்பு அபிஷேகமும் நடைபெறுகிறது. மாலை 6 மணிக்கு தாயார் மீனாட்சி அம்மனுடன் சண்முகர் ஆட்டுக்கிடா வாகனத்தில் வந்து சக்திவேல் வாங்குதல் நிகழ்ச்சியும் மற்றும் கிழக்கு சன்னதியில் கஜமுக சூரன் மற்றும் சிங்கமுக சூரன் ஆகியோரை வதம் செய்யும் நிகழ்ச்சியும், தெற்கு வீதியில் சூரபத்மனை வதம் செய்யும் நிகழ்ச்சியும் நடக்கிறது. பின்னர் சண்முகர் வீதிஉலா வந்து கோவிலை வந்தடைகிறார்.
31-ந் தேதி காலை சண்முகர் காவிரி ஆற்றில் குருதி கழுவுதல் நிகழ்ச்சியும், அன்று இரவு தெய்வானை திருக்கல்யாண வைபவமும் நடக்கின்றன. அதனைத்தொடர்ந்து 3 நாட்களுக்கு ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது.
விழாவையொட்டி பக்தர்களுக்கு பஸ் வசதி, கழிவறை வசதி, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் எளிதில் கீழ்ப்பிரகாரத்தில் சாமி தரிசனம் செய்யும் வகையில் தெற்கு ராஜகோபுரத்தில் இருந்து சாய்வு தளம் மற்றும் சச்கர நாற்காலி வசதி, மருத்துவ வசதி ஆகியவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விரதம் இருக்கும் பக்தர்களுக்கு தினமும் மதியம் கல்கண்டு பால் வழங்கப்படுகிறது.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் துணை ஆணையர் உமாதேவி மற்றும் கண்காணிப்பாளர், ஊழியர்கள் ஆகியோர் செய்து வருகின்றனர்.
- வேலுக்கும் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடைபெற்றது.
- முருகப்பெருமானுக்கு திருக்காப்பு அணிவிக்கப்பட்டது.
அலகுமலையில் உள்ள முத்துக்குமார பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில் பிரசித்திபெற்றது. இங்கு ஆண்டுதோறும் ஸ்ரீகந்த சஷ்டி திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். கந்த சஷ்டி விழாவின் முதல் நாளான நேற்று கணபதி ஹோமத்துடன் பூஜைகள் தொடங்கியது. பின்னர் கோவில் திருப்பணிக்குழுத் தலைவர் சின்னுக்கவுண்டர் முன்னிலையில் கோபூஜை நடைபெற்றது.
வள்ளி, தெய்வானை சமேத உற்சவருக்கும், வேலுக்கும் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான முருகப்பெருமானுக்கு திருக்காப்பு அணிவிக்கப்பட்டது. தொடர்ந்து கந்த சஷ்டி விரதம் மேற்கொள்ளும் பக்தர்களுக்கு சிவாச்சாரியார்கள் கங்கணம் அணிவித்து விரதத்தை தொடங்கி வைத்தனர். சுமார் 1,500-க்கும் மேற்பட்ட பக்தர்கள், குழந்தைகள் உள்பட பலர் சஷ்டி விரதத்தை தொடங்கினர்.
பின்னர் அலகுமலை மூலவரான முத்துக்குமார பாலதண்டாயுதபாணி சுவாமிக்கு மரிக்கொழுந்து பச்சை மாலை அணிவிக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. சஷ்டி விழாவுக்கான ஏற்பாடுகளை கந்தசஷ்டி விழாக்குழு மற்றும் திருக்கோவில் ஆன்மிகப் பேரவையினர் செய்திருந்தனர்.
- சிவபாலனுக்கு ஐப்பசி மாத வளர்பிறையில் வரும் சஷ்டி திதி உகந்த நாள்.
- மெளன விரதம் அனுஷ்டிப்பது சிறப்பு.
நமக்கு இஷ்டமான வாழ்க்கையைத் தருவார் கந்தபெருமான். எத்தனை கஷ்டங்கள் வந்தாலும் சஷ்டியில் விரதம் இருந்தால், சங்கடங்களும் கவலைகளும் காணாமல் போகச் செய்வார் பார்வதிபாலன். ஏனென்றால்... சிவ-பார்வதியின் மைந்தனாக இவ்வுலகுக்கு இஷ்டப்பட்டு வந்தவராயிற்றே பாலமுருகன்!
சரவணப்பொய்கையில் முருகனாய் அவதரித்த சிவபாலனுக்கு ஐப்பசி மாத வளர்பிறையில் வரும் சஷ்டி திதி உகந்த நாள்.
இந்த நாளில் சூரசம்ஹாரம் நடந்ததால் சஷ்டி திதி இன்னும் இன்னும் சிறப்பு பெறுகிறது.
தீபாவளி அமாவாசைக்கு மறுநாள் பிரதமை முதல் கந்தசஷ்டி விரதம் மேற்கொள்ள வேண்டும். இந்த ஆறு நாட்களில் பகல் பொழுது மட்டும் உண்டு, காலையும் இரவும் பட்டினியாக இருத்தல் வேண்டும். இந்த நாட்களில் துவைத்து உலர்த்திய தூய்மையான ஆடைகளையே அணிய வேண்டும். மெளன விரதம் அனுஷ்டிப்பது சிறப்பு. மாலையில் தம்பம், பிம்பம், கும்பம் ஆகியவற்றில் முருகப் பெருமானை ஆவாஹனம் செய்து வழிபடவேண்டும். வெல்லத்தாலான மோதகத்தை நிவேதனம் செய்வது விசேஷம்.
இந்த ஆறு நாட்களிலும் கந்தபுராணம், கந்தர் கலிவெண்பா, கந்தர் அனுபூதி, கந்தர் அலங்காரம் ஆகிய நூல்களைப் படித்தல், கேட்டல் மிகவும் நல்லது. இதனால் வீட்டில் உள்ள தீயசக்திகள் அகலும். சுபிட்சம் குடிகொள்ளும்.
ஆறாம் நாள் கந்தசஷ்டியன்று முழு உபவாசமிருந்து, பூஜைகள் செய்து, ஏழாம் நாள் காலை அன்னதானம் செய்து, விரதத்தை முடிக்க வேண்டும்.
ஆறு ஆண்டுகள் முறைப்படி இந்த விரதத்தைக் கடைப்பிடித்தால் அருளும் பொருளும் கிடைத்து ஞானத்துடனும் யோகத்துடனும் வாழலாம்.
கந்த சஷ்டி வேளையில் விரதம் இருந்து கந்தனை வணங்கி மகிழ்வார்கள் முருக பக்தர்கள்.
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!
- 29-ந்தேதி வேல்வாங்குதல் நிகழ்ச்சி நடைபெறும்.
- 30-ந்தேதி "சூரசம்ஹார லீலை "நடைபெறும்.
தமிழ் கடவுள் முருகப்பெருமான் குடிகொண்டு அருள் ஆட்சி புரியும் அறுபடைவீடுகளில் முதற்படை வீ்டான திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோவிலில் .நடப்பு ஆண்டிற்கான கந்தசஷ்டி திருவிழா வருகின்ற 25-ந்தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்குகிறது. திருவிழாவின் தொடக்கமாக 25-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 8 மணியளவில் மேளதாளங்கள் முழங்க உற்சவர் சன்னதியில் சுப்பிரமணியசுவாமி தெய்வானைக்கும், 8.10 மணியளவில் சண்முகர் சன்னதியில் தெய்வானை, வள்ளி சமேத சண்முகருக்கும் காப்பு கட்டுதல் நடக்கிறது. இதனையடுத்து முருகப்பெருமானின் பிரதிநிதி (நம்பி பட்டருக்கு) காப்பு கட்டப்படுகிறது. இதனை தொடர்ந்து 8.45 மணியளவில் கம்பத்தடி மண்டப வளாகத்தில் பக்தர்களுக்கு காப்பு கட்டுதல் நடக்கிறது.
வருகின்ற 29-ந்தேதி மாலை 6.30 மணியில் இருந்து இரவு 7.30 மணிக்குள் கோவிலுக்குள் ஆலயப்பணியாளர்கள் திருக்கண்ணில் முருகப்பெருமான் சூரனை சம்ஹாரம் செய்வதற்காக தன் தாயார் கோவர்த்தனாம்பிகையிடம் "சக்திவேல்" பெறக்கூடிய வேல்வாங்குதல் நிகழ்ச்சி நடைபெறும்.
திருவிழாவின் சிகரமாக 30-ந்தேதி மாலை 6.30 மணியளவில் சன்னதி தெருவில் உள்ள சொக்கநாதர் கோவில் முன்பு பக்தர்கள் புடைசூழ முருகப்பெருமான் சக்திவேல் கொண்டு சூரபத்மனை வதம் செய்யக்கூடிய"சூரசம்ஹார லீலை "நடைபெறும். திருவிழாவின் உச்ச நிகழ்ச்சியாக 31-ந்தேதி காலை 7-15 மணியளவில் மலையை சுற்றி சட்டதேர்வலம் வருதல் நிகழ்ச்சி நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் துணை கமிஷனர் சுரேஷ் தலைமையில் சிவாச்சாரியர்கள், மற்றும் கோவில் ஊழியர்கள் செய்துவருகின்றனர்.