என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tag 97185"

    காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவில் வைகாசி மாத பிரம்மோற்சவ நாட்களில் ஸ்ரீதேவி பூதேவியுடன் எழுந்தருளி நகரின் முக்கிய வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
    காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவில் வைகாசி மாத பிரம்மோற்சவம் கடந்த 13-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல் நாள் தோறும் பல்வேறு வாகனங்களில் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு ஸ்ரீதேவி பூதேவியுடன் எழுந்தருளி நகரின் முக்கிய வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

    பிரம்மோற்சவம் முக்கிய விழாக்களான கருட சேவை மற்றும் தேரோட்டம் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புடை சூழ நடைபெற்றது. இதனையடுத்து நேற்று வரதராஜ பெருமாள் மேல் பல்லக்கில் காஞ்சீபுரம் நகரின் முக்கிய வீதிகளில் வலம் வந்து அருள்பாலித்து மீண்டும் கோவிலை அடைந்தார்.

    பின்னர் கோவில் வளாகத்தில் அமைந்துள்ள ஆனந்த சரஸ் குளத்தில் பெருமாள் தீர்த்தவாரி கண்டார். அப்போது குளத்தில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடி பெருமாளை வழிபட்டனர்
    3 குளங்களில் நீராடி சுவேதாரண்யேஸ்வரரை வழிபட்டால் குழந்தைபேறு கிடைக்கும் என்பது ஐதீகம். அஸ்திர தேவருக்கு மங்கல பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது.
    திருவெண்காட்டில் பிரசித்தி பெற்ற சுவேதாரண்யேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சிவபெருமானின் 3 கண்களில் இருந்து மூன்று பொறிகள் தோன்றி விழுந்த இடத்தில் சந்திரன், சூரியன் மற்றும் அக்னி ஆகிய பெயர்களால் மூன்று குளங்கள் உருவானதாக புராண வரலாறுகள் கூறுகின்றன.

    3 குளங்களில் நீராடி சுவேதாரண்யேஸ்வரரை வழிபட்டால் குழந்தைபேறு கிடைக்கும் என்பது ஐதீகம். சிறப்பு பெற்ற இந்த கோவிலில் அமாவாசையையொட்டி 3 குளங்களில் அஸ்திரதேவர் தீர்த்தவாரி நடந்தது.

    இதையொட்டி அஸ்திர தேவருக்கு மங்கல பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. தீர்த்தவாரி ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி முருகன், மேலாளர் சிவக்குமார் ஆகியோர் செய்திருந்தனர்.
    • ஆனிமாத பிறப்பையொட்டி 3 குளங்களில் அஸ்திர தேவருக்கு தீர்த்தவாரி நடந்தது.
    • இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு புனித நீராடினார்கள்.

    மயிலாடுதுறை மாவட்டம், திருவெண்காட்டில் பிரசித்தி பெற்ற சுவேதாரண்யேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சிவபெருமானின் 3 கண்களில் இருந்து 3 பொறிகள் தோன்றி விழுந்த இடத்தில் சந்திரன், அக்னி மற்றும் சூரியன் என்ற பெயர்களில் குழந்தை உருவானதாக புராண வரலாறுகள் கூறுகின்றன.

    இந்த குளங்களில் நீராடி சிவனை வழிபட்டால் குழந்தை பேறு இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது பக்தர்கள் நம்பிக்கை. இத்தகைய சிறப்பு பெற்ற இந்த கோவிலில் நேற்று ஆனிமாத பிறப்பையொட்டி 3 குளங்களில் அஸ்திர தேவருக்கு தீர்த்தவாரி நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு புனித நீராடினார்கள்.

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி முருகன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

    பௌர்ணமி விசாக நாளில் இடும்பன் சன்னதி அருகே அமிர்த புஷ்கரணியில் முருகன் எழுந்தருளி தீர்த்தவாரி நடைபெற்றது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுக்கா கோடியக்காடு குழகர் கோயிலில் வைகாசி பெருவிழாவில்நேற்று தீர்த்தவாரி நடைபெற்றது

    வேதாரண்யம் தாலுகா கோடியக்காடு கிராமத்தில் அமைந்துள்ளது குழகர் கோவில் என்னும் அமிர்தகடேஸ்வரர் கோயிலில் வைகாசி பெருவிழா ஜூன்-5ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    முக்கிய திருவிழாவான தேர் திருவிழா கடந்த 13ம் தேதி நடைபெற்றதுநேற்று பௌர்ணமி விசாக நாளில்இடும்பன் சன்னதி அருகே அமிர்த புஷ்கரணியில் நடைபெற்ற தீர்த்தவாரிக்கு முருகன் எழுந்தருளி சென்று தீர்த்தவாரி நடைபெற்றது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    • ஆண்டுதோறும் கடைமுக தீர்த்தவாரி உற்சவம் நடந்து வருகிறது.
    • தருமபுரம் ஆதீனம் உள்பட திரளான பக்தர்கள் துலாக்கட்ட காவிரியில் புனிதநீராடினர்.

    கங்கையை துலா மாதமான ஐப்பசி மாதத்தில் மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் புனித நீராடி பாவங்களை போக்கிக் கொள்ள சிவபெருமான் வரம் அளித்ததாகவும், அதன்படி கங்கை மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் 30 நாட்களும் புனித நீராடி தனது பாவங்களை போக்கிக் கொண்டதாக பக்தர்களின் நம்பிக்கை ஆகும்.

    இதனை நினைவுக்கூரும் வகையில் ஆண்டுதோறும் கடைமுக தீர்த்தவாரி உற்சவம் நடந்து வருகிறது. அதேபோல் ஐப்பசி மாத அமாவாசையையொட்டி நேற்று தீர்த்தவாரி விழா நடந்தது.

    இதை முன்னிட்டு ஐயாறப்பர் சாமி, காசிவிஸ்வநாதசாமி, தெப்பக்குள காசி விஸ்வநாதசாமி, வதானேஸ்வரர் கோவில் மேதா தட்சிணாமூர்த்தி சாமி ஆகிய சாமிகள் சிறப்பு அலங்காரத்தில் காவிரிக்கரைக்கு எழுந்தருளினர்.

    அங்கு தருமபுரம் ஆதீனம் 27-வது மாசிலாமணிதேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சாமிகள் குருபகவானுக்கு பட்டு அணிவித்து சிறப்பு வழிபாடு நடத்தினார்.

    தொடர்ந்து காவிரியின் இருகரையிலும் அஸ்திரதேவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்று சுவாமிதீர்த்தம் கொடுக்கப்பட்டது. பின்னர் தருமபுரம் ஆதீனம் உள்பட திரளான பக்தர்கள் துலாக்கட்ட காவிரியில் புனிதநீராடினர்.

    • ஐயாறப்பர் கோவில் மூலவர் சுயம்பாக இருப்பதனால் அவை கைலாயத்திற்கு நிகரானவையாக கருதப்படுகிறது.
    • கதவு சாத்தப்படாமல் சூரிய கிரகணம் நடைபெறும்போது சூலப்பாணிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.

    சூரிய கிரகணத்தையொட்டி கோவில் நடைகள் சாத்தப்பட்டன. கிரகணம் முடிந்தபிறகு கோவில் திறக்கப்பட்டதும் சாமிகளுக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

    அந்தவகையில் திருவையாறு அறம் வளர்த்த நாயகி உடனாகிய ஐயாறப்பர் கோவில் மூலவர் சுயம்பாக இருப்பதனால் அவை கைலாயத்திற்கு நிகரானவையாக கருதப்படுகிறது. கதவு சாத்தப்படாமல் சூரிய கிரகணம் நடைபெறும்போது புஷ்பமண்டப படித்துறை காவிரி ஆற்றில் சூலப்பாணிக்கு பால், தயிர், சந்தனம், மஞ்சள், தேன், பஞ்சாமிர்தம் போன்ற திரவிய பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.

    பின்னர், சூலப்பாணியை மேளதாளம் முழங்க சன்னதிக்கு கொண்டு சென்று ஐயாறப்பர் மூலவருக்கு அபிஷேகம் நடைபெற்றது.

    • நம்பெருமாளுக்கு பதிலாக தீர்த்தபேரரை புனித நீராட வைத்தனர்.
    • நம்பெருமாள் கரையில் நின்றவாறு தீர்த்தபேரர் நீராடுவதை கண்டருளினார்.

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் கடந்த 13-ந்தேதி தொடங்கியது. இதையொட்டி உற்சவர் நம்பெருமாள் தினமும் மாலை மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு தங்ககொடிமரம் அருகில் உள்ள ஊஞ்சல் மண்டபத்தில் ஊஞ்சல் உற்சவம் கண்டருளினார்.

    ஊஞ்சல் உற்சவத்தின் 7-ம் நாள் அன்று நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் கோவில் கொட்டாரத்தில் நெல்லளவு கண்டருளினார். பின்னர் தாயார் சன்னதியில் திருவந்திகாப்பு கண்டருளி இரவு 10.15 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார்.

    விழாவின் நிறைவு நாளான நேற்று நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து காலை 9.15 மணிக்கு புறப்பட்டு சந்திரபுஷ்கரணி குளத்திற்கு தீர்த்தபேரருடன் வந்து சேர்ந்தார். அங்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.பின்னர் சந்திரபுஷ்கரணியில் காலை 9.45 மணிக்கு நம்பெருமாளுக்கு பதிலாக தீர்த்தபேரரை புனித நீராட வைத்தனர். நம்பெருமாள் கரையில் நின்றவாறு தீர்த்தபேரர் நீராடுவதை கண்டருளினார். இந்த தீர்த்தவாரி நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

    • 7 சுவாமிகளின் தீர்த்தவாரி உற்சவம் நடந்தது.
    • ஏராளமான பொதுமக்கள் பாதயாத்திரை வந்து தீர்த்தவாரியில் கலந்து கொண்டனர்.

    தேவகோட்டை

    தேவகோட்டை விருசுழி ஆற்றில் ஐப்பசி முதல் நாள் மற்றும் மாத கடைசி நாளில் 7 சுவாமிகள் கலந்து கொள்ளும் தீர்த்தவாரி உற்சவம் நடைபெறும். அதன்படி நேற்று ஐப்பசி முதல் நாளில் ரங்கநாத பெருமாள், மீனாட்சி சுந்தரேசுவரர், சிதம்பர விநாயகர், கைலாசநாதர், கோதண்ட ராமர், கிருஷ்ணர், கோட்டூர் நயினார்வயல் அகத்தீஸ்வரர் ஆகிய சுவாமிகள் மேள தாளத்துடன் நகரில் முக்கிய வீதிகளின் வலம் வந்து மதியம் தேவகோட்டை விருசுழி ஆற்றை வந்தடைந்தது.

    ஆற்றில் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை காட்டப்பட்டு தீர்த்தவாரி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு தீர்த்தம் தெளிக்கப்பட்டது. பின்னர் அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப் பட்டன.

    முடிவில் அனைத்து சுவாமிகளும் பிரியாவிடை பெற்று முக்கிய வீதி வழியாக அந்தந்த கோவில்களுக்கு சென்றடைந்தன. இந்த விழாவில் தேவகோட்டை காரை சேர்க்கை கோட்டூர் நைனார் வயல் அடசி வயல் கள்ளிக்குடி சேன்டல் பெரியாண், திருமண வயல் பாவனக்கோட்டை பூங்குடி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் பாதயாத்திரை வந்து தீர்த்தவாரியில் கலந்து கொண்டனர்.

    • தீர்த்தவாரியின் போது புனித நீராடினால் துன்பம் நீங்கி இன்பம் பெருகும் என்பது ஐதீகம்.
    • காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் பக்தர்கள் புனித நீராட அனுமதிக்கப்படவில்லை.

    திருச்சியை அடுத்த முக்கொம்பு அருகே திருப்பராய்த்துறையில் பிரசித்தி பெற்ற பசும்பொன் மயிலாம்பிகை உடனுறை தாருகாவனேசுவரர் கோவில் உள்ளது. அப்பர், திருநாவுக்கரசர், மாணிக்கவாசகர், திருஞானசம்பந்தர் ஆகியோரால் பாடல்பெற்ற இக்கோவிலில் தீர்த்தவாரி என்னும் துலாஸ்தானம் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

    இதையொட்டி காலையில் வெள்ளி ரிஷப வாகனத்தில் சோமாஸ்கந்தர், பிரியாவிடையுடன் சமேதராகவும், மற்றொரு வெள்ளி வாகனத்தில் தனி அம்மன் புறப்பாடாகி எழுந்தருளினர். பின்னர் முக்கிய வீதிகளில் வலம் வந்தனர்.

    கிராம முக்கியஸ்தர்கள் காவிரி ஆற்றில் இருந்து குடத்தில் புனித நீர் எடுத்து வந்து கோவில் வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த அஸ்திரதேவருக்கு அபிஷேகம், ஆராதனை செய்தனர். தீர்த்தவாரியின் போது புனித நீராடினால் துன்பம் நீங்கி இன்பம் பெருகும் என்பது ஐதீகம். ஆனால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் பக்தர்கள் புனித நீராட அனுமதிக்கப்படவில்லை. இதனால் பக்தர்கள் அருகே விநாயகர் கோவில் பகுதியில் உள்ள வாய்க்கால் படித்துறையில் நீராடினர்.

    அஸ்திர தேவருக்கு அபிஷேகம் செய்யப்பட்ட தீர்த்தத்தை மீண்டும் குடத்தில் எடுத்துக் கொண்டு காவிரி ஆற்றுக்கு வந்து காவிரி ஆற்றில் செல்லக்கூடிய தண்ணீரில் கலந்து விட்டனர். பின்னர் குடத்தில் கொண்டுவரப்பட்ட தண்ணீரை பக்தர்கள் மீது தெளித்தனர். இதனால் அங்கு நின்ற பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். முன்னதாக அம்மன் சப்பரத்தில் பவனி வந்தார். இதற்கான ஏற்பாடுகளை மண்டல இணை ஆணையர் செல்வராஜ் மேற்பார்வையில் உதவி ஆணையர் ரவிச்சந்திரன், திருப்பராய்த்துறை கோவில் செயல் அலுவலர் ராகினி, ஊராட்சி மன்ற தலைவர் பிரகாசமூர்த்தி ஆகியோர் செய்து இருந்தனர்.

    • சுவாமி அஸ்திரதேவர் கடலில் புனித நீராடும் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது.
    • மூலவருக்கு உச்சிகால அபிஷேகமும், சுவாமி சண்முகருக்கு அன்னாபிஷேகமும் நடந்தது.

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தமிழ் மாதம் ஐப்பசி மாத பிறப்பை முன்னிட்டு நேற்று அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 5 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது. காலை 7.30 மணியளவில் சுவாமி அஸ்திரதேவர் சண்முவிலாச மண்டபத்திற்கு எழுந்தருளினர். அங்கு சுவாமிக்கு அபிஷேகம் அலங்காரமாகி தீபாராதனை நடந்தது.

    பின்னர் சுவாமி அஸ்திரதேவர் கடலில் புனித நீராடும் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது. பின்னர் மூலவருக்கு உச்சிகால அபிஷேகமும், சுவாமி சண்முகருக்கு அன்னாபிஷேகமும் நடந்தது. தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடந்தது. தமிழ் மாதப்பிறப்பை முன்னிட்டு ஏராளமானபக்தர்கள் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தனர்.

    • மயிலாடுதுறை காவிரி துலா கட்டத்தில் தீர்த்தவாரி நடந்தது.
    • ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு புனித நீராடி சாமி தரிசனம் செய்தனர்.

    தங்களது பாவம் நீங்க பக்தர்கள் புனித நீராடியதால் கருமை நிறம் அடைந்த கங்கை நதி, சிவபெருமானிடம் பிரார்த்தித்ததாகவும், அப்போது சிவபெருமான் துலா மாதமான ஐப்பசி மாதத்தில் மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் புனித நீராடி பாவங்களை போக்கிக் கொள்ள கங்கைக்கு வரம் அளித்ததாகவும், அதன்படி கங்கை மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் 30 நாட்களும் புனித நீராடி தனது பாவங்களை போக்கிக் கொண்டதாகவும் பக்தர்களின் நம்பிக்கை.

    ஐப்பசி மாதத்தில் மயிலாடுதுறையில் உள்ள அனைத்துக் கோவில்களில் இருந்தும் சாமி புறப்பட்டு, துலா கட்டத்தில் தீர்த்தவாரி நடைபெறும். இந்த ஒரு மாதமும் மயிலாடுதுறை காவிரி துலா கட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வந்து புனித நீராடுவது வழக்கம்.

    அதன்படி நேற்று அதிகாலை முதலே காவிரி துலா கட்டத்தில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடினர். அதனைத்தொடர்ந்து மதியம் 1.30 மணி அளவில் துலா கட்ட காவிரியில் தீர்த்தவாரி நடைபெற்றது.

    இதில் அறம்வளர்த்த நாயகி உடனான ஐயாறப்பர் சாமி, ஞானாம்பிகை உடனான வதானேஸ்வரர், காசி விசாலாட்சி உடனான காசி விஸ்வநாதர், தெப்பக்குளம் விஸ்வநாதர், துலாக்கட்ட விஸ்வநாதர் ஆகிய சாமிகள் பஞ்சமூர்த்திகளுடன் காவிரியின் இருகரைகளிலும் எழுந்தருள அஸ்திரதேவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டு தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது.

    இதில், தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சன்னிதானம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சாமிகள், சூரியனார்கோவில் ஆதீனம் 28-வது குருமகா சன்னிதானம் மகாலிங்க தேசிக பரமாச்சாரிய சாமிகள் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு புனித நீராடி சாமி தரிசனம் செய்தனர்.

    • தீர்த்தவாரி முடிந்தவுடன் ஏராளமான பக்தர்கள் புஷ்கரணியில் புனித நீராடினர்.
    • பிரம்மோற்சவ விழா இன்று மாலை கொடி இறக்கத்துடன் நிறைவு பெறுகிறது.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த மாதம் 27-ந்தேதி கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவ விழா தொடங்கியது. காலை மாலை என இரு வேளைகளிலும் ஏழுமலையான் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வெவ்வேறு வாகனங்களில் மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வான கருட சேவை கடந்த 1-ந் தேதி இரவு நடந்தது. கருட சேவையை 3 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பிரம்மோற்சவ விழாவின் 8-வது நாளான நேற்று காலை ஏழுமலையான் ஸ்ரீதேவி பூதேவி சமேதராய் பிரம்மாண்ட தேரில் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று மாலை தங்க குதிரை வாகனத்தில் ஏழுமலையான் வீதி உலா வந்தார்.

    பிரம்மோற்சவ விழாவின் 9-வது நாளான இன்று காலை திருமலையில் உள்ள புஷ்கரணியில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடந்தது.

    தீர்த்தவாரியை ஒட்டி சக்கரத்தாழ்வார் கோவிலில் இருந்து மேளதாளம் முழங்க புஷ்கரணிக்கு கொண்டு வரப்பட்டார். அங்கு வேத பண்டிதர்கள் வேதங்களை முழங்க தீர்த்தவாரி நடந்தது. அங்கு கூடியிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என விண்ணதிர பக்தி பரவசத்துடன் கோஷமிட்டனர்.

    தீர்த்தவாரி முடிந்தவுடன் ஏராளமான பக்தர்கள் புஷ்கரணியில் புனித நீராடினர்.

    கடந்த 8 நாட்களாக கோலாகலமாக நடைபெற்ற பிரம்மோற்சவ விழா இன்று மாலை கொடி இறக்கத்துடன் நிறைவு பெறுகிறது.

    திருப்பதியில் நேற்று 68,539 பேர் தரிசனம் செய்தனர். 21,077 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.2.90 கோடி உண்டியல் காணிக்கையாக வசூலானது.

    ×