search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Talavadi"

    • கரும்பு தோட்டம் அமைந்துள்ள பகுதியில் இருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் கர்நாடக மாநில வனப்பகுதி அமைந்துள்ளது.
    • யானை கூட்டம் கரும்பு தோட்டத்தில் புகுந்து 2 ஏக்கர் பரப்பளவில் உள்ள கரும்புகளை சேதப்படுத்தி உள்ளது.

    தாளவாடி:

    ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் வசித்து வருகின்றன. யானைகள் அவ்வப்போது வனப்பகுதியை விட்டு வெளியேறி ஊருக்குள் புகுந்து விளை நிலையங்களை சேதப்படுத்தி வருவது தொடர்கதை ஆகி வருகிறது.

    இந்நிலையில் தாளவாடி மலைப்பகுதியில் உள்ள ராமாபுரம் பிரிவு பகுதியைச் சேர்ந்த விவசாயி மல்லு (50) என்பவர் தனது தோட்டத்தில் 3 ஏக்கர் பரப்பளவில் கரும்பு பயிரிட்டு இருந்தார். நேற்று காலை வழக்கம் போல் மல்லு தண்ணீர் பாய்ச்சுவதற்காக தோட்டத்திற்கு சென்ற போது கரும்பு பயிர்களுக்கு இடையே 4 காட்டு யானைகள் முகாமிட்டபடி கரும்பு பயிர்களை தின்றும், மிதித்தும் சேதப்படுத்துவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இது குறித்து உடனடியாக தாளவாடி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்த தாளவாடி வனச்சரக அலுவலர் சதீஷ் நிர்மல் மற்றும் வனத்துறை ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காட்டு யானைகள் கரும்பு தோட்டத்திற்குள் நடமாடுவதை கண்டு உடனடியாக யானைகளை விரட்ட முயற்சித்தனர். பகல் நேரம் என்பதால் காட்டு யானைகள் கரும்பு தோட்டத்தை விட்டு வெளியேறாமல் போக்கு காட்டி வந்தது.

    இதையடுத்து யானைகள் நடமாட்டத்தை துல்லியமாக கண்காணிக்க வனத்துறையின் டிரோன் கேமரா குழுவினர் வர வழைக்கப்பட்டனர். டிரோன் கேமரா மூலம் யானைகள் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டதில் கரும்புத் தோட்டத்தில் முகாமிட்ட 4 யானைகளும் ஆண் யானைகள் என தெரிய வந்தது.

    யானைகள் அப்பகுதியில் முகாமிட்டதை அறிந்த பொதுமக்கள் யானைகளை வேடிக்கை பார்ப்பதற்காக கூட்டமாக திரண்டதால் சம்பவ இடத்திற்கு வந்த தாளவாடி போலீசார் பொதுமக்களை அங்கிருந்து செல்லுமாறு அறிவுறுத்தினர்.

    கரும்பு தோட்டம் அமைந்துள்ள பகுதியில் இருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் கர்நாடக மாநில வனப்பகுதி அமைந்துள்ளது. அந்த வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 4 காட்டு யானைகள் தான் கரும்பு தோட்டத்தில் முகாமிட்டது தெரியவந்தது.

    தொடர்ந்து இரவு வரை டிரோன் கேமரா மூலம் யானைகளின் நடமாட்டத்தை வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்தனர். சுமார் 12 மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு ஒரு வழியாக இரவில் அந்த 4 யானைகளும் கர்நாடக வனப்பகுதிக்குள் சென்றது.

    இதன் பிறகு வனத்துறையினர் நிம்மதி பெருமூச்சு விட்டனர். யானை கூட்டம் கரும்பு தோட்டத்தில் புகுந்து 2 ஏக்கர் பரப்பளவில் உள்ள கரும்புகளை சேதப்படுத்தி உள்ளது. இதனால் நஷ்டஈடு வழங்க வேண்டும் என விவசாயி மல்லு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    • மாவநத்தம், இட்டரை, தடசலட்டி ஆகிய 3 கிராமங்களும் அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ளது.
    • ஆம்புலன்ஸ் அந்த கிராமத்தில் நிறுத்தி வைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    தாளவாடி:

    ஈரோடு மாவட்டம் தாளவாடி தலமலை ஊராட்சிக்கு உட்பட்ட தடசலட்டி, இட்டரை மற்றும் மாவநத்தம் ஆகிய மலைகிராமத்தில் பழங்குடியின மக்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனர். இவர்களின் தொழில் ஆடு, மாடு மேய்ப்பது, கூலி தொழில் செய்து வருகின்றனர். கடந்த சில வாரங்களாக இங்கு மழை பெய்து வருகிறது.

    இந்நிலையில் கடந்த மாதம் 24-ந் தேதி மாவநத்தம் கிராமத்தில் மாரம்மா (40) , தடசலட்டி கிராமத்தில் கடந்த கவுரியம்மாள் (65), ரங்கன் (75), மாதி (85) என 4 பேர் வாந்தி பேதியால் திடீரென உயிரிழந்தனர். அதேபோல் கடந்த 5-ந் தேதி மாரே (67) என்பவரும், இட்டரை கிராமத்தில் கேலன் (60) என்பவர் உட்பட மொத்தம் 6 நபர்கள் கடந்த வாரங்களில் உயிரிழந்துள்ளனர்.

    தொடர்ந்து வயதானவர் உயிரிழந்தது மலைகிராம மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து நேற்று கிராமங்களில் மருத்துவக் குழுவினர், உணவு பாதுகாப்புத் துறை, வருவாய்த் துறை மற்றும் போலீசார் ஆகியோர் வீடு வீடாக சென்று அங்குள்ள மக்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்தனர்.

    மேலும் பஞ்சாயத்து மூலம் குளோரின் பவுடர்கள் போடப்பட்டுள்ளது. மேல்நிலைத் தண்ணீர் தொட்டிகளில் உள்ள குடிநீரை பயன்படுத்துவதன் மூலமும், குட்டை நீரை குடிநீராக குடித்ததாலும், மேலும் தொடர்ந்து பெய்து வந்த மழையின் காரணமாக மழைநீர் தேங்கியுள்ளதாலும் இங்குள்ள வயதானவர்களுக்கு தொற்று ஏற்பட்டு வாந்தி பேதி ஏற்பட்டு மேற்கண்ட நபர்கள் இறந்திருக்கலாம் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

    தடசலட்டி கிராமத்தை சேர்ந்த நீலி மற்றும் அவரது கணவர் பாலன் ஆகியோர் உடல்நிலை சரியில்லாததால் 108 ஆம்புலன்ஸ் மூலம் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேபோல் இட்டரை கிராமத்தை சேர்ந்த காமாட்சி என்பவர் சத்தியமங்கலம் தனியார் மருத்துவ மனையிலும், லட்சுமி என்பவர் கர்நாடகா மாநிலம் சாம்ராஜ் நகர் அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு தொடர் சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்த மாவநத்தம், இட்டரை, தடசலட்டி ஆகிய 3 கிராமங்களும் அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ளது. இங்கு செல்போன் தொடர் சேவை கூட இல்லை. உடல் நலம் பாதிக்கப்பட்டால் மற்றவர்களை தொடர்பு கொள்ளாமல் அவதிபட்டு வருகின்றனர். இந்த மலைகிராமத்தில் மருத்துவ குழு கிராமத்தில் தொடர்ந்து முகாமிட்டு பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் எனவும், 108 ஆம்புலன்ஸ் அந்த கிராமத்தில் நிறுத்தி வைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    ×