search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tamilisai"

    • அண்ணாமலை சர்வதேச அரசியல் படிப்பதற்காக லண்டன் செல்ல உள்ளார்.
    • படிப்பு முடிந்து திரும்புவதற்கு 6 மாதங்களுக்கு மேல் ஆகும்.

    சென்னை:

    தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை சர்வதேச அரசியல் தொடர்பாக படிப்பதற்காக லண்டன் செல்ல உள்ளார். அடுத்த மாதம் (ஆகஸ்டு) 28-ந் தேதி அவர் லண்டன் செல்கிறார்.

    அவர் படிப்பு முடிந்து திரும்புவதற்கு 6 மாதங்களுக்கு மேல் ஆகும். இந்த கால கட்டத்தில் கட்சி பணியை பார்ப்பது யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது.

    இது தொடர்பாக விவாதிப்பதற்காக தமிழக பா.ஜ.க. அமைப்பு செயலாளர் கேசவ விநாயகம் டெல்லி செல்கிறார். அங்கு தேசிய அமைப்பு செயலாளர் சந்தோஷ் உள்ளிட்ட முக்கிய தலைவர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

    இந்த ஆலோசனையின் போது அண்ணாமலைக்கு பதிலாக புதிய தலைவராக யாரையாவது நியமிக்கலாமா? அல்லது தற்காலிகமாக செயல் தலைவராக யாரையாவது நியமிக்கலாமா என்றும் விவாதித்ததாக கூறப்படுகிறது.

    புதிய தலைவருக்கான பரிசீலனையில் நயினார் நாகேந்திரன் பெயர் அடிபடுவதாக கூறப்படுகிறது. இது பற்றி அந்த கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவரிடம் கேட்ட போது, தற்காலிகமாக தலைவரை நியமிப்பது சாத்தியமில்லை.

    ஏற்கனவே மத்திய மந்திரி எல். முருகன் மாநில தலைவர் பதவியில் இருந்து விலகி மத்திய மந்திரி ஆனபோது 8 மாதம் தலைவர் இல்லாமல் தான் இருந்தது. அதேபோல் இப்போதும் அப்படியே விட்டு விட அதிக வாய்ப்பு இருக்கிறது.

    ஒரு வேளை புதிய தலைவரை நியமிக்க முடிவு செய்தால் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன் ஆகிய மூவரில் ஒருவரை நியமிக்கலாம் என்றார்.

    • செங்கோலை எதிர்ப்பதன் மூலம் தமிழ் கலாச்சாரத்தையே திராவிட முன்னேற்ற கழகம் எதிர்க்கிறது.
    • அரசியலுக்காக எந்த கீழ்த்தரமான கருத்துக்களையும் திராவிட முன்னேற்றக் கழகம் வெளிப்படுத்துவார்கள்.

    பாராளுமன்றத்தில் செங்கோலை அகற்றும்படி எதிர்க்கட்சிகள் வலியுறுத்தினர்.செங்கோல் குறித்த சமாஜ்வாதி எம்.பி. ஆர்.கே.சவுத்ரியின் கருத்துக்கு தமிழிசை சவுந்தரராஜன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது:-

    'செங்கோல் என்பது கொடுங்கோலின் சின்னம் கிடையாது' 'செங்கோல் என்பது மக்களாட்சியின் சின்னம்' எந்த தமிழ் அரசரும் மக்கள் ஆட்சி மீறி ஆட்சி நடத்தவில்லை.

    இது தமிழ் மண்ணின் நீதி தவறாமல் ஆட்சி நடப்பது என்பதற்கு ஆன குறியீடு தான் செங்கோல். ஆக பாராளுமன்றமும் அப்படி இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் பாரத பிரதமர் அதை நிறுவினார்.

    கொடுங்கோல் ஆட்சி செய்து கொண்டிருக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு இந்த செங்கோலின் தன்மையும் புனிதத்துவமும் தெரியாது என்பதை அவர்கள் இன்று வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.

    செங்கோலை எதிர்ப்பதன் மூலம் தமிழ் கலாச்சாரத்தையே திராவிட முன்னேற்ற கழகம் எதிர்க்கிறது. அரசியலுக்காக எந்த கீழ்த்தரமான கருத்துக்களையும் திராவிட முன்னேற்றக் கழகம் வெளிப்படுத்துவார்கள் என்பதற்கு இது ஒரு சான்று.

    சமாஜ்வாதி காட்சியை சார்ந்தவர்கள் எதிர்க்கலாம். ஆனால் நம் தமிழகத்தைச் சார்தவர்கள் எதிர்க்கலாமா? திராவிட முன்னேற்றக் கழகத்தின் உண்மையான பொய் முகம் இன்று கிழித்தெரியப்பட்டிருக்கிறது.

    தமிழும் தமிழ் கலாச்சாரமும் அவர்களின் அரசியலுக்காக தான் அவர்களின் உணர்வுகளுக்காக அல்ல!.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
    • பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் குறித்து தமிழிசை- அண்ணாமலை விவாதம் என தகவல்.

    நாட்டில் சமீபத்தில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில், பாஜக மத்தியில் ஆட்சியை பிடித்தது. ஆனால், தமிழகத்தில் பாஜக ஒரு தொகுதியில் கூட வெற்றிப் பெறவில்லை.

    தோல்வி குறித்து அப்போது பேசிய அண்ணாமலை மற்றும் தமிழிசை கூட்டணி குறித்து எதிர்மறையான கருத்துகளை தெரிவித்தனர். இதனால், முன்னாள் ஆளுநர் தமிழிசைக்கும், பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கும் இடையே கருத்து வேறுபாடு நீடிப்பதாக கூறப்பட்டு வந்தது.

    இதைதொடர்ந்து, விழா மேடைக்கு வந்த முன்னாள் தெலுங்கானா கவர்னரும், தென்சென்னை பாராளுமன்ற தொகுதியில் பா.ஜ.க. சார்பில் போட்டியிட்ட தமிழிசை சவுந்தரராஜனை அழைத்து மத்திய அமைச்சர் அமித்ஷா கண்டிக்கும் வகையில் பேசினார். தமிழிசைக்கும் அண்ணாமலைக்கும் இடையேயான வார்த்தை போர்ரை தவிர்க்கவே கண்டித்ததாகவும் தகவல் பரவியது.

    இந்நிலையில், இன்று தமிழிசையை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

    சந்திப்பின்போது, பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் குறித்து தமிழிசை- அண்ணாமலை விவாதித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

    ஏற்கனவே, தமிழிசை- அண்ணாமலை இடையே கருத்து வேறுபாடு என தகவல்கள் பரவி வந்தன. வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தமிழிசையை அண்ணாமலை சந்தித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில், தனது சந்திப்பு தொடர்பாக அண்ணாமலை எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அந்த பதிவில்," இன்றைய தினம், மூத்த பாஜக தலைவர்களில் ஒருவரும், தமிழக பாஜக மாநிலத் தலைவராகத் திறம்படச் செயல்பட்டவருமான, அக்கா தமிழிசை சவுந்தரராஜன் அவர்களின் இல்லத்திற்குச் சென்று நேரில் சந்தித்ததில் பெருமகிழ்ச்சி.

    தமிழகத்தில் தாமரை நிச்சயம் மலரும் என்பதை உறுதியுடன் கூறி, அதற்காகக் கடினமாக உழைத்த அக்கா தமிழிசை அவர்கள் அரசியல் அனுபவமும், ஆலோசனைகளும், கட்சியின் வளர்ச்சிக்கான உத்வேகத்தைத் தொடர்ந்து அளித்துக் கொண்டிருக்கிறது" என்றார்.

    • அமித்ஷா கண்டித்ததாக கூறப்பட்டு வந்த நிலையில் விளக்கம்.
    • தேர்தலுக்கு பிந்தைய பணிகள், சவால்கள் குறித்து அமித்ஷா விவாதம்.

    ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு பதவியேற்பு விழாவின்போது, மத்திய அமைச்சர் அமித்ஷா தன்னிடம் பேசியது குறித்து தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம் அளித்துள்ளார்.

    மேடையில் அமித்ஷா கண்டித்ததாக கூறப்பட்டு வந்த நிலையில், தமிழிசை சவுந்தரராஜன் புதிய விளக்கம் அளித்துள்ளார்.

    இதுகுறித்து தமிழிசை தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

    அந்த பதிவில், " தேர்தலுக்கு பிந்தைய பணிகள், சவால்கள் குறித்து அமித்ஷா விவாதித்ததாக அவர் தெரிவித்தார்.

    நேரப் பற்றாக்குறை காரணமாக அரசியல் பணிகளை தீவிரமாக மேற்கொள்ளவும் அவர் அறிவுறுத்தினார்.

    விரிவாக பேச முற்பட்டதால், நேரப் பற்றாக்குறை காரணமாக பணிகளை மேற்கொள்ள அறிவுரை வழங்கினார்" என்றார்.

    • அனைத்து செய்தியாளர் சந்திப்பும் இனி பாஜக கட்சி அலுவலகத்தில் மட்டும்தான் நடைபெறும்
    • செய்தியாளர் சந்திப்பை முறைப்படுத்தப் போகிறோம்.

    2024 பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பா.ம.க, த.மா.க உடன் கூட்டணி அமைத்து களம் கண்ட பாஜக படுதோல்வி அடைந்தது.

    இதையடுத்து, அதிமுகவுடன் பாஜக கூட்டணி வைத்திருந்தால் 35 இடங்களில் வென்றிருப்போம் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

    பின்னர் கோவை விமான நிலையத்தில் பேட்டியளித்த அண்ணாமலை அதிமுக கட்சியில் எடப்பாடி- வேலுமணி இடையே உட்கட்சி பூசல் இருப்பது போல் தெரிகிறது" என்று தெரிவித்தார்.

    இதையடுத்து, எஸ்.பி.வேலுமணி கூறிய கூட்டணி தொடர்பான கருத்துக்கு தமிழிசை சவுந்தரராஜன் ஆதரவு தெரிவித்தார்.

    "அதிமுக- பாஜக கூட்டணி அமைத்து இருந்தால் 35 இடங்கள் கிடைத்திருக்கும் என்ற வேலுமணியின் கருத்து உண்மையே.அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைத்து இருந்தால் திமுக இத்தனை இடங்களை பெற்றிருக்க முடியாது" என்று அவர் கூறினார்.

    இப்படி அண்ணாமலையின் கருத்துக்கு மாறாக தமிழிசை பேசியது பாஜக வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தியது.

    இந்நிலையில், கோவை விமான நிலையத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, இனி விமான நிலையத்தில் பிரஸ் மீட் கிடையாது. அனைத்து செய்தியாளர் சந்திப்பும் இனி பாஜக கட்சி அலுவலகத்தில் மட்டும்தான் நடைபெறும். செய்தியாளர் சந்திப்பை முறைப்படுத்தப் போகிறோம். பிரஸ்மீட் எப்போது என பாஜக தரப்பில் இருந்து முறைப்படி தெரிவிக்கப்படும். பாஜகவினர் இனி இஷ்டத்திற்கு செய்தியாளர்களை சந்திக்கமாட்டார்கள்" என்று தெரிவித்தார்.

    டெல்லியில் இருந்து கோவை திரும்பிய அண்ணாமலை இவ்வாறு தெரிவித்திருப்பது பாஜக மேலிடத்தின் முடிவாக இருக்கும் என்று சொல்லப்படுகின்றது.

    • அதிமுக கட்சியில் எடப்பாடி- வேலுமணி இடையே உட்கட்சி பூசல் இருப்பது போல் தெரிகிறது.
    • அண்ணாமலையின் பேட்டிக்கு அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்பப் பிரிவு பதிலடி.

    தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று டெல்லி புறப்பட்டார். அதற்கு முன் செய்தியாளர்களுக்கு பதில் அளித்தார்.

    அப்போது அண்ணாமலை," பாஜகவுடன் அதிமுக இணைந்து போட்டியிருந்தால் 35 தொகுதிகளை பிடித்திருப்போம் என எஸ்.பி. வேலுமணி சொல்கிறார். ஆனால், அதிமுக-வின் மற்ற தலைவர்கள் பாஜக உடன் நாங்கள் இல்லை என்றனர். இதனால் எஸ்.பி. வேலுமணி கூறியதை பார்க்கும்போது, அதிமுக கட்சியில் எடப்பாடி- வேலுமணி இடையே உட்கட்சி பூசல் இருப்பது போல் தெரிகிறது" என்றார்.

    தொடர்ந்து, அண்ணாமலையின் பேட்டிக்கு அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்பப் பிரிவு பதிலடி கொடுத்துள்ளது. அதில், அ.தி.மு.க. குறித்தோ, எடப்பாடி பழனிசாமி மற்றும் எஸ்.பி.வேலுமணி குறித்தோ பேச அண்ணாமலைக்கு எந்த அருகதையும் இல்லை என குறிப்பிட்டுள்ளது.

    இந்நிலையில், எஸ்.பி.வேலுமணி கூறிய கூட்டணி தொடர்பான கருத்துக்கு தமிழிசை சவுந்தரராஜன் ஆதரவு தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து தமிழிசை கூறுகையில், "அதிமுக- பாஜக கூட்டணி அமைத்து இருந்தால் 35 இடங்கள் கிடைத்திருக்கும் என்ற வேலுமணியின் கருத்து உண்மையே.

    அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைத்து இருந்தால் திமுக இத்தனை இடங்களை பெற்றிருக்க முடியாது. அதிமுக குறித்த அண்ணாமலையின் கருத்துக்கு அவரிடமே விளக்கம் பெறுங்கள்.

    அதிமுக உட்கட்சி விவகாரத்தில் நான் எந்த கருத்தும் தெரிவிக்க விரும்பவில்லை. கூட்டணி என்பது அரசியல் வியூகம். 2026 தேர்தல் குறித்து முடிவு செய்ய நிறைய கால அவகாசம் உள்ளது.

    பாஜக ஐடி விங், அண்ணாமலை வார் ரூம் நிர்வாகிகளை எச்சரிக்கிறேன். கட்சியின் பிற தலைவர்கள் மீது தவறாக எழுதினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என முன்னாள் மாநில தலைவராக எச்சரிக்கிறேன்.

    ஆளுநர் பணியை விட்டு விட்டு வந்ததற்கு நானே கவலைப்படவில்லை. உங்களுக்கு என்ன கவலை?

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • சென்னை சிங்கப்பூராக மாறும் என்றார்கள். மாறியதா? சிங்கப்பூர் நிறுவனத்துக்கு காண்டிராக்ட் மாறியது.
    • வெள்ளத்துக்கு தீர்வு கண்டார்களா? குப்பைக்கு தீர்வு கண்டார்களா? தொகுதிக்கு என்ன மாற்றத்தை தந்தார்கள்.

    சென்னை:

    வேளச்சேரியில் பிரசாரம் செய்த தென்சென்னை பா.ஜனதா வேட்பாளர் டாக்டர் தமிழிசையிடம் பெருங்குடி குப்பை கிடங்கை பொதுமக்கள் காட்டி தீர்வு காண வலியுறுத்தினார்கள்

    இது தொடர்பாக அவர் பேசியதாவது:-

    திராவிடமாடலின் பெருமையும், அடையாளமும் பெருங்குடி மற்றும் கொடுங்கையூர் குப்பை கிடங்குகள்தான். ஒவ்வொரு தேர்தலிலும் தீர்வு காண்பதாக சொல்லி ஏமாற்றினார்கள். தீர்வு காண முடியாத பிரச்சினையா? அவர்கள் செய்யமாட்டார்கள். சென்னை சிங்கப்பூராக மாறும் என்றார்கள். மாறியதா? சிங்கப்பூர் நிறுவனத்துக்கு காண்டிராக்ட் மாறியது. அவர்களுக்கு பணம் கைமாறியது. அவ்வளவு தான். நான் புதுவை கவர்னராக இருந்தபோது அங்கும் இதே போல் 20 ஆண்டுகளாக தீர்க்க முடியாத குப்பை கிடங்கு பிரச்சினை இருந்தது.

    அதற்கான நிபுணர்களை வரவழைத்து ஆய்வு செய்து மத்திய அரசு துறைகளும் பரிசீலித்து 9 மாதங்களில் பிரச்சினை தீர்ந்தது. இப்போது மேலாண்மை தொழிற்சாலை போல் செயல்படுகிறது. மக்கள் நிம்மதியாக வாழ்கிறார்கள்.

    60 ஆண்டுகள் தமிழகத்தை ஆட்சி செய்தும் குப்பையை கூட கையாள தெரியாத கையாலாகாத அரசுகளாகத்தான் இரு கழக அரசுகளும் இருந்து உள்ளன. இதே தென் சென்னையில் ஏழெட்டு தடவை தி.மு.க. எம்.பி.க்கள் வெற்றி பெற்றுள்ளார்கள்.

    ஆனால் வெள்ளத்துக்கு தீர்வு கண்டார்களா? குப்பைக்கு தீர்வு கண்டார்களா? தொகுதிக்கு என்ன மாற்றத்தை தந்தார்கள். நீங்கள் மாற்றி யோசியுங்கள். மாற்றமா? ஏமாற்றமா? முடிவு செய்யுங்கள்.

    குப்பையை கூட சீராக்காத திராவிட கட்சிகளுக்கு குட்பை சொல்லுங்கள். நாடே முன்னேறும் போது சென்னையும் முன்னேற வேண்டாமா? எனக்கு ஒரு வாய்ப்பு தந்தால் ஒரே வருடத்தில் குப்பை பிரச்சினைக்கு தீர்வு காண்பேன். தாமரைக்கு வாக்களியுங்கள். வளர்ச்சிக்கு வித்திடுங்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • கட்சிகளுக்கு சின்னம் ஒதுக்கும் விவகாரத்தில் பிரதமர் சொல்வதைத்தான் தேர்தல் ஆணையம் அறிவிக்கிறது
    • முதற்கட்ட தேர்தல் தமிழ்நாட்டில் வரும் என்பது தெரிந்து தான் பிரதமர் அத்தனை முறை தமிழ்நாட்டிற்கு வந்து சென்றுள்ளார்

    சென்னை சத்தியமூர்த்தி பவனில், தீரர் சத்தியமூர்த்தியின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது புகைப்படத்துக்கு மரியாதை செலுத்தும் நிகழ்வு இன்று நடைபெற்றது.

    அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, "தேர்தலில் போட்டியிட பணமில்லை என நிர்மலா சீதாராமன் சொல்கிறார். நிதியமைச்சர் நிர்மலா சீதாரமனை விட, தமிழிசை மற்றும் எல்.முருகனிடம் அதிக பணம் உள்ளதா? வெயிலில் சுத்தாமல் எந்தவித சிரமமும் இல்லாமல் ஆட்சி அதிகாரத்தை அனுபவிப்பதற்கு நிர்மலா சீதாராமன் மற்றும் ஜெய்சங்கர் ஆகியோர் ஆசைப்படுகிறார்கள்.

    கட்சிகளுக்கு சின்னம் ஒதுக்கும் விவகாரத்தில் பிரதமர் சொல்வதைத்தான் தேர்தல் ஆணையம் அறிவிக்கிறது. முதற்கட்ட தேர்தல் தமிழ்நாட்டில் வரும் என்பது தெரிந்து தான் பிரதமர் பல முறை தமிழ்நாட்டிற்கு வந்து சென்றுள்ளார். மோடி தேர்தல் ஆணையம், அமலாக்கத்துறை, சிபிஐ, வருமான வரித்துறை உள்ளிட்ட மத்திய அரசின் அமைப்புகளை நம்பியே உள்ளார். ஆனால் நாங்கள் மக்களை நம்பி உள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.

    • ஆளுங்கட்சியாக பா.ஜனதா இருப்பதால் வெற்றி பெறுவது எளிது என தமிழிசை கணக்கிட்டார்.
    • அண்ணன் என அழைத்த தங்கையை வேட்பாளராக்க முதல்-அமைச்சர் ரங்கசாமியும் முன்வரவில்லை.

    புதுச்சேரி:

    தமிழ்நாடு பா.ஜனதா மாநில தலைவராக திறம்பட செயலாற்றிய தால் தமிழிசைக்கு தெலுங்கானா கவர்னர் பதவி அளிக்கப்பட்டது.

    தெலுங்கானா கவர்னராக இருந்த தமிழிசை, 2021 பிப்ரவரியில் புதுச்சேரியின் பொறுப்பு கவர்னராக நியமிக்கப்பட்டார். வாரத்துக்கு 3 நாள் தெலுங்கானா, 3 நாள் புதுவை என பம்பரமாக சுழன்று தமிழிசை பணியாற்றி வந்தார்.

    புதுச்சேரியின் மீது அதீத கவனம் செலுத்தி வந்த அவர் அரசு பள்ளிகளில் புத்தக பை இல்லாத தினம், வாட்டர் பெல் நேரம், அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ கல்வியில் 10 சதவீத இடஒதுக்கீடு, பெண் அரசு ஊழியர்களுக்கு வெள்ளிக்கிழமை நேர சலுகை என பல்வேறு வகையிலும் அரசுக்கு உறுதுணையாக செயல்பட்டார்.

    புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமியை, அரசு விழாக்களில் அண்ணன் என அழைத்தார். அமைச்சர்கள் தமிழிசையை அக்கா என்றே அழைத்து வந்தனர். பாராளுமன்ற தேர்தலில் புதுச்சேரி தொகுதியில் போட்டியிட வேண்டும் என்ற எண்ணத்தின் வெளிப்பாடாகவே தமிழிசையின் செயல்பாடுகள் அமைந்தது.

    பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதை, ஆண்டவனும், ஆண்டு கொண்டிருப்பவரும் முடிவு செய்வார்கள் என தெரிவித்து வந்தார். புதுச்சேரியில் ஆளுங்கட்சியாக பா.ஜனதா இருப்பதால் வெற்றி பெறுவது எளிது என தமிழிசை கணக்கிட்டார்.

    முதல்- அமைச்சர் ரங்கசாமியும் தமிழிசையின் எண்ணத்துக்கு தடை போடவில்லை.

    பாராளுமன்ற தேர்தல் நெருங்க, நெருங்க புதுச்சேரி அரசியல் கட்சியினர் தமிழிசையை வெளிமாநிலத்தை சேர்ந்தவர் என முத்திரை குத்தினர். தமிழிசை புதுவையில் போட்டியிட பா.ஜனதா மேலிடம் முதல்-அமைச்சர் ரங்கசாமியை அணுகிய போது கிரீன் சிக்னல் அளிக்கவில்லை.

    இருப்பினும் கட்சி தலைமை மீது மிகுந்த நம்பிக்கையோடு தமிழிசை காத்திருந்தார். புதுச்சேரியில் 3 ஆண்டாக செயல்படுத்தியுள்ள திட்டங்களை புத்தகமாக மத்திய மந்திரி அமித்ஷாவை சந்தித்து வழங்கினார். பாராளுமன்ற தேர்தலில் புதுச்சேரியில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என காத்திருந்தார்.

    ஆனால், புதுச்சேரியில் பா.ஜனதாவினர் கவர்னர் தமிழிசையை வேட்பாளராக்க கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். புதுச்சேரியை சேராதவரை வேட்பாளராக நிறுத்தினால் எதிர்கட்சிகள் இதனை பிரசாரமாக செய்யும் என பா.ஜனதாவினர் எதிர்த்தனர்.

    மேலும், புதுச்சேரியை சேர்ந்த பெரும்பான்மை சமூகத்தினர், சிறுபான்மையினர், பட்டியலினத் தவர் ஓட்டுகள் பா.ஜனதாவுக்கு கிடைக்காது என புள்ளி விபரங்களை தெரிவித்தனர்.

    இதற்கு பதில் அளித்த தமிழிசை, தமிழ்நாடு வேறு, புதுவை வேறு அல்ல, மக்களிடையே வேறு மாநிலத்தை சேர்ந்தவர் என்ற பிரிவினை வாதத்தை ஏற்படுத்தாதீர்கள் என வேண்டுகோள் விடுத்தார்.

    இருப்பி னும் வெளிமாநிலத்தை சேர்ந்தவர் வேட்பாளராகக் கூடாது என உள்ளூர் பா.ஜனதாவினர் உறுதியாக இருந்தனர்.

    அண்ணன் என அழைத்த தங்கையை வேட்பாளராக்க முதல்-அமைச்சர் ரங்கசாமியும் முன்வரவில்லை. இதனால் தமிழிசையை வேட்பாளராக்க கட்சித்தலைமை தயங்கியது.

    இதனிடையே புதிய் சட்டமன்ற கட்டிடம் கட்ட கவர்னர் தமிழிசை முட்டுக்கட்டையிடுவதாக சபாநாயகர் ஏம்பலம் செல்வம் பகிரங்கமாக தெரிவித்தார்.

    இது ஆளுங்கட்சியின் ஒட்டு மொத்த எதிர்ப்பாக பார்க்கப்பட்டது.

    இதனால் தமிழ்நாட்டில் போட்டியிடும்படி தமிழிசையை பா.ஜனதா தலைமை கேட்டுக் கொண்டது. இதையேற்று புதுச்சேரியை கைகழுவி தமிழிசை, தனது கவர்னர் பதவியை ராஜினாமா செய்து தமிழ்நாட்டில் போட்டியிட போவதாக அறிவித்துள்ளார்.

    • திட்டத்தை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தொடங்கி வைக்கிறார்.
    • வாரத்தில் ஏதேனும் 2 நாட்கள் மாலையில் சிறுதானியங்களால் செய்யப்பட்ட பிஸ்கெட் அல்லது கேக் வழங்கப்படும்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு மாலையில் சிற்றுண்டி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

    வருகிற 14-ந் தேதி இந்த திட்டத்தை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தொடங்கி வைக்கிறார்.

    இது சம்பந்தமாக கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் நிருபர்களிடம் கூறியதாவது:-

    புதுச்சேரியில் அரசு சார்பில் பள்ளி மாணவர்களுக்கு புத்தகம், சீருடை ஆகியவற்றை வழங்குகிறோம். நின்றுபோன இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்தையும் தற்போது தொடங்கியுள்ளோம்.

    பிரதமர் இந்த ஆண்டை சிறுதானிய ஆண்டாக அறிவித்துள்ளார்.

    அதன்படி பள்ளி மாணவர்களுக்கு சிறுதானிய உணவினை வழங்க உள்ளோம். மாலையில் சிறுதானிய சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை வருகிற 14-ந் தேதி தொடங்க உள்ளோம்.

    இந்த திட்டத்தை காட்டேரிக் குப்பம் அரசுப்பள்ளியில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், முதல்-அமைச்சர் ரங்கசாமி ஆகியோர் தொடங்கி வைக்க உள்ளனர்.

    இந்த திட்டத்தின்படி வாரத்தில் ஏதேனும் 2 நாட்கள் மாலையில் சிறுதானியங்களால் செய்யப்பட்ட பிஸ்கெட் அல்லது கேக் வழங்கப்படும்.

    சுமார் 20 கிராம் எடையில் இருக்கும். பள்ளிக்கூடம் முடிந்து மாணவ-மாணவிகள் வீடுகளுக்கு செல்லும்போது சிறுதானிய சிற்றுண்டி வழங்கப்பட உள்ளது.

    இதன் மூலம் புதுச்சேரி மாநிலத்தில் எல்.கே.ஜி. முதல் 12-ம் வகுப்பு வரை அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் சுமார் 84 ஆயிரம் மாணவ-மாணவிகள் பயன்பெறுவர். இதன்மூலம் 4 மாதத்துக்கு அரசுக்கு ரூ.90 லட்சம் கூடுதல் செலவாகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பாராளுமன்ற தொகுதியில் தான் போட்டியிட வாய்ப்பு தரும்படி கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.
    • முதலமைச்சர் ரங்கசாமி, தேர்தல் தொடர்பாக நேரில் பேசலாம், காலையில் கவர்னர் மாளிகைக்கு வருவதாக தெரிவித்தார்.

    புதுச்சேரி:

    தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் புதுவையில் பா.ஜனதா போட்டியிட உள்ளது.

    தேசிய ஜனநாயக கூட்டணி தலைவரும், முதலமைச்சருமான ரங்கசாமியை சமீபத்தில் பா.ஜனதா மேலிட பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா ரேநில் சந்தித்து பேசினார்.

    அப்போது, பாராளுமன்ற தேர்தலில் புதுவையில் பா.ஜனதா போட்டியிடுவதற்கான விருப்பத்தை தெரிவித்தார். முதலமைச்சர் ரங்கசாமியும், அதற்கு ஒப்புதல் அளித்தார்.

    மேலும் வெற்றி பெறக்கூடிய பிரபலமான, பலமான வேட்பாளரை நிறுத்தும்படி முதலமைச்சர் ரங்கசாமி கேட்டுக்கொண்டார்.

    இதனிடையே புதுவை பாராளுமன்ற தொகுதியில் பா.ஜனதா சார்பில் போட்டியிட கவர்னர் தமிழிசை, காரைக்காலை சேர்ந்த தொழிலதிபர், சுயேட்சை எம்.எல்.ஏ., நியமன எம்.எல்.ஏ., வனத்துறை அதிகாரி ஆகியோர் சீட் கேட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் நேற்று முன்தினம் கவர்னர் தமிழிசை உள்துறை மந்திரி அமித்ஷாவை டெல்லியில் சந்தித்தார். அப்போது, புதுவை பாராளுமன்ற தொகுதியில் தான் போட்டியிட வாய்ப்பு தரும்படி கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    அதற்கு மத்திய மந்திரி அமித்ஷா, புதுவை தேசிய ஜனநாயக கூட்டணி தலை வரும், முதலமைச்சருமான ரங்கசாமியின் ஒப்புதலை பெறுங்கள் எனக் கூறியதாக தெரிகிறது.

    இந்த சந்திப்புக்கு பிறகு நேற்று இரவு கவர்னர் தமிழிசை புதுவைக்கு வந்தார். அவர் முதலமைச்சர் ரங்கசாமியை தொடர்புகொண்டு மத்திய மந்திரியுடனான சந்திப்பு குறித்து தெரிவித்தார். தனக்கு ஆதரவளிக்கும்படி கேட்டுக்கொண்டார்.

    இதற்கு முதலமைச்சர் ரங்கசாமி, தேர்தல் தொடர்பாக நேரில் பேசலாம், காலையில் கவர்னர் மாளிகைக்கு வருவதாக தெரிவித்தார்.

    இதனால் இன்று காலை கவர்னர் தமிழிசை நீண்ட நேரம் கவர்னர் மாளிகையில் காத்திருந்தார். ஆனால் காலை 10.30 மணி வரை முதல்-அமைச்சர் ரங்கசாமி வரவில்லை.

    இதனால் காரைக்காலில் நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்பதற்காக கவர்னர் தமிழிசை புறப்பட்டு சென்றார். காரைக்காலிலிருந்து அவர் திரும்பிய பின் முதலமைச்சரை சந்திக்க கவர்னர் தமிழிசை திட்டமிட்டுள்ளார்.

    • தமிழிசை கூறும்போது சந்திர பிரியங்கா ராஜினாமா செய்வதற்கு முன்பே ரங்கசாமியின் பரிந்துரையின் பேரில் நீக்கப்பட்டுவிட்டார் என்றார்.
    • கடற்கரை சாலையில் உள்ள வீட்டுக்கு பாதுகாப்பு இன்னும் தொடர்கிறது.

    புதுச்சேரி:

    காரைக்கால் நெடுங்காடு தொகுதியைச் சேர்ந்த என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ. சந்திரபிரியங்கா, தனது அமைச்சர் பதவியை திடீரென ராஜினாமா செய்தார். தனது ராஜினாமா கடிதத்தை கவர்னர் மாளிகைக்கும், முதலமைச்சர் அலுவலகத்துக்கும் தனித் தனியாக அனுப்பியிருந்தார்.

    கவர்னரும் கடிதத்தை ஏற்று மத்திய அரசுக்கு அனுப்பியதாக தகவல்கள் வெளியானது. ஆண் ஆதிக்கம், பாலின தாக்குதல் என கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்து, தொகுதி மக்களுக்கு கடிதம் எழுதி இருந்தார்.

    இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சபாநாயகர் ஏம்பலம் செல்வம் கூறும்போது அமைச்சர் சந்திரபிரியங்கா நீக்கம் செய்யப்பட்டது முதல்வரின் தனிப்பட்ட முடிவு. நிர்வாக காரணங்களுக்காக எடுத்துள்ளார். அமைச்சராக இருந்தபோது, சந்திர பிரியங்கா சிறப்பாக செயல்படவில்லை என கருதி முதலமைச்சர் நீக்கியுள்ளார்.

    இதையடுத்து சந்திரா பிரியங்கா, ராஜினாமா செய்வதற்கு முன் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்ற தகவல் பொதுமக்களுக்கு தெரியவந்தது.

    இதற்கிடையில் சென்னையில் கவர்னர் தமிழிசை கூறும்போது சந்திர பிரியங்கா ராஜினாமா செய்வதற்கு முன்பே ரங்கசாமியின் பரிந்துரையின் பேரில் நீக்கப்பட்டுவிட்டார், என்றார். இது குறித்து முன்னாள் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி கூறுகையில்:-

    சந்திரபிரியங்காவின் பதவியை டிஸ்மிஸ் செய்ய கடிதத்தை முதலமைச்சர் ரங்கசாமி பரிந்துரையின் பேரில் கவர்னர் தமிழிசை உள்துறைக்கு அனுப்பி வைத்தார். அங்கிருந்து அவரது பதவியை பறித்து கடிதமும் வந்துவிட்டது.

    ஆனால் அதற்கான அரசாணை இன்னும் வெளியிடாமல் நாடகம் ஆடுகின்றனர். தலித் பெண் அமைச்சர் பதவியை பறித்ததால் வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் வெளியிடாமல் உள்ளனர்.

    விரைவில் அவரது பதவி பறிக்கப்பட்டதாக அரசாணை வெளியிடுவார்கள், என்றார்.

    தற்போது தெலுங்கானாவில் கவர்னர் தமிழிசை உள்ளதால் அவர் புதுச்சேரி வரும்போது, சந்திரா பிரியங்கா ராஜினாமா கடிதம் ஏற்கப்பட்டதா? அல்லது முதலமைச்சர் ரங்கசாமி பரிந்துரையின் பேரில் அவரது பதவி பறிக்கப்பட்டதா என்ற முழு விவரம் தெரியவரும்.

    சட்டசபையில் உள்ள அமைச்சர் அலுவலகத்தில் அவரது பெயர் பலகை மாற்றப்படவில்லை. புதுவை கடற்கரை சாலையை ஒட்டியுள்ள அரசு வீடும், கார்களும் ஒப்படைக்கப்படவில்லை. அந்த வீட்டுக்கு போலீசாரின் பாதுகாப்பும் தொடர்கிறது.

    அரசின் முறையான நடவடிக்கை எதுவும் தெரியவில்லை. சந்திரபிரியங்கா ராஜினாமா செய்தாரா? அல்லது பதவி நீக்கம் செய்யப்பட்டாரா? என்ற குழப்பம் பொதுமக்களிடையே எழும்பியுள்ளது.

    மக்களை குழப்பம் செய்யாமல் முறையான அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.

    ×