என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Temples"

    • சிக்கல் சிங்காரவேலரைத் தரிசித்தால் சிக்கல்கள் யாவும் நீங்கிவிடும் என்பது நம்பிக்கை.
    • இந்த கோவில் நாகபட்டிணம் அருகே சிக்கல் என்கிற கிராமத்தில் அமைந்துள்ளது.

    சிக்கல் சிங்கார வேலன் ஆலயம் முருக பெருமான் திருக்கோவில்களில் மிக முக்கியமானது. காரணம் ஆறுபடை வீடிற்கு அடுத்தபடியாக, ஏழாவது படை வீடாய் இருக்கும் அளவு முக்கியத்துவம் பெற்றது என பக்தர்கள் நம்புகின்றனர். இந்த கோவில் ஆச்சர்யமான அமைப்பாக முருக பெருமான் ஆலயத்தில் சிவன் மற்றும் விஷ்ணு பெருமான் இருவரும் இங்கே அமைந்து அருள் பாலிக்கின்றனர்.

    இந்த கோவில் தமிழகத்தில் நாகபட்டிணம் அருகே சிக்கல் என்கிற கிராமத்தில் அமைந்துள்ளது. திருவாரூரிலிருந்து 18 கி.மீ தொலைவிலும், நாகபட்டிணத்திலிருந்து மேற்கே 5 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. சிக்கல் நவனீதஸ்வரர் கோவில் என்பது இதன் மூல பெயர். அதில் சிங்காரவேலன் ஆலயம் அமைந்துள்ளது. இந்த கோவிலின் தல வரலாறு மிகவும் சுவாரஸ்யமானது. விண்ணுலகத்தில் இருக்க கூடிய காமதேனு பசு ஒருமுறை பஞ்சம் காரணமாக மாமிசம் உண்டுவிட்டது.

    இதனால் ஆத்திரம் அடைந்த சிவபெருமான் அந்த பசுவிற்கு சாபம் வழங்கினார். சாபத்தினால் மிகவும் கவலையுற்ற காமதேனு, இறைவனிடம் இறைஞ்சி சாப விமோசனம் கோரினார். மனம் இறங்கிய சிவபெருமான் பூலோகத்தில் மல்லிகை வனம் உண்டு அங்குள்ள தலத்தில் நீராடி அங்குள்ள இறைவனை வணங்கினால் சாபம் நீங்கும் என அருளினார்.

    அதன்படியே இன்றைய கோவில் அமையப்பெற்றுள்ள இடத்தில் உள்ள குளத்தில் நீராடி சாப விமோசனம் பெற்றார் காமதேனு. அதன் பொருட்டு காமதேனு பசுவின் மடியில் பெருகிய பால் பாற்குளத்தை உருவாக்கியது. அதுவே இன்றும் புனிதகுளமாக கருதப்படுகிறது. வசிஸ்ட மாமுனி, அந்த பாலில் இருந்து கிடைத்த வெண்ணையை கொண்டு அங்கேயே சிவலிங்கம் வடித்து வழிபட்டார். தன்னுடைய பூஜை முடிந்த பின்பாக அந்த சிவலிங்கத்தை அவர் எடுக்க முற்பட்ட போது அது சிக்கி கொண்டு வர மறுத்தது அதன் பொருட்டே இந்த ஊருக்கு சிக்கல் என பெயர் வந்தது என்பது நம்பிக்கை.

    சமயக் குரவர்களால் பாடல்பெற்ற பழைமைவாய்ந்த இக்கோயிலில் சிங்காரவேலவர் வீற்றிருக்கும் சந்நிதி தனிச்சிறப்பு வாய்ந்ததாகும். இந்தத் தலத்தில் எழுந்தருளும் சிங்காரவேலவர், அன்னை வேல்நெடுங்கன்னியிடம் வேல் வாங்கிக்கொண்டு திருச்செந்தூரில் சூரனை சம்ஹாரம் செய்ததாகக் கந்தபுராணம் கூறுகிறது.

    இந்த நிகழ்ச்சியை நினைவுபடுத்தும் வகையில் ஆண்டுதோறும் கந்தசஷ்டி விழாவின்போது அன்னையிடமிருந்து வேல்வாங்கும் வைபவம் நடைபெறுகிறது. இங்கிருக்கும் முருக பெருமானிடம் ஒரு அதிசயம் நிகழ்வதுண்டு. அதாவது சுரபத்மனை வதைக்க இந்த இடத்தில் தான் முருக பெருமான் சக்தி தேவியிடம் வேல் வாங்கினார் என்கிறது புராணம். எனவே இங்கிருக்கும் அம்பால் வேல் நெடுங்கண்ணி என்று அழைக்கப்படுகின்றனர். சூர சம்ஹார நடைபெறும் நாளில் இங்கே அம்பாளிடம் இருந்து முருகன் வேல் வாங்கும் நிகழ்வு நடைபெறுகிறது. அவ்வாறு அவர் வேல் பெறும் ஒவ்வொரு முறை முருகனுக்கு வியர்ப்பதை கண்கூடாக கண்ட பக்தர்கள் பலர் உள்ளனர்.

    இந்த கிராமத்தில் வசிஷ்டர் தங்கியிருந்து காமதேனுவின் வெண்ணெயால் சிவலிங்க உருவம் அமைத்து பூஜித்தார். பூஜை முடிவில் சிவலிங்கம் எடுக்க முடியாமல் சிக்கிய காரணத்தால் இந்த ஊர் சிக்கல் என்று பெயர் பெற்றது.

    இந்தக் கோயிலில் முருகப் பெருமான் அம்மை அப்பருக்கு நடுவில் வீற்றிருந்து அருள்புரிகிறார். அதனால், சிங்காரவேலர் குழந்தைவரம் அருள்பவராக வீற்றிருக்கிறார். சிக்கல் சிங்காரவேலரைத் தரிசித்தால் சிக்கல்கள் யாவும் நீங்கிவிடும் என்பது நம்பிக்கை.

    • இக்கோவில், 2000-3000 ஆண்டுகள் வரை பழமை கொண்டதாகக் கருதப்படுகின்றது.
    • முருகப்பெருமானுக்குக் கடற்கரை ஓரத்தில் அமைந்துள்ள ஒரு கோவில் இதுவாகும்.

    பழமையான கோவில்

    தூத்துக்குடி மாவட்டத்தில், மன்னார் வளைகுடாவை ஒட்டி அமைந்துள்ள இக்கோவில் சென்னையில் இருந்து 600 கி.மீ தொலைவில் உள்ளது. சங்க இலக்கியங்களிலும், சிலப்பதிகாரத்திலும் குறிப்பிடப்பட்டுள்ள இக்கோவில், 2000-3000 ஆண்டுகள் வரை பழமை கொண்டதாகக் கருதப்படுகின்றது. முருகப்பெருமானுக்குக் கடற்கரை ஓரத்தில் அமைந்துள்ள ஒரு கோவில் இதுவாகும். இக்கோவில் அமைந்துள்ள இடம் "திருச்சீரலைவாய்" என முன்னர் அழைக்கப்பட்டது.

    கோவில் அமைப்பு

    முருகனுக்குரிய ஆறுபடைவீடுகளில் திருச்செந்தூர் மட்டும் கடற்கரையிலும், பிற ஐந்தும் மலைக்கோயிலாக அமைந்துள்ளது. 157 அடி உயரம் கொண்ட இக்கோயிலின் கோபுரம், ஒன்பது தளங்களைக் கொண்டதாக அமைந்துள்ளது. முருகப்பெருமான் சூரனை ஆட்கொண்ட பின்பு, தனது வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகக் சிவபூஜை செய்தார். இந்த கோலத்திலேயே முருகன் வலக்கையில் தாமரை மலருடன் அருளுகிறார். தலையில் சிவயோகி போல ஜடாமகுடமும் தரித்திருக்கிறார். இவருக்கு இடது பின்புற சுவரில் ஓர் லிங்கம் இருக்கிறது. இவருக்கு முதல் தீபாராதனை காட்டிய பின்பே, முருகனுக்குத் தீபராதனை நடக்கும். சண்முகர் சன்னதியிலும் சுவாமிக்குப் பின்புறம் லிங்கம் இருக்கிறது. இவ்விரு லிங்கங்களும் இருளில் உள்ளதால், தீபாராதனை ஒளியில் மட்டுமே காண முடியும்.

    ராஜகோபுரம்

    திருச்செந்தூரில் முருகன் சன்னதியின் மேற்கு திசையில் ராஜகோபுரம் இருக்கிறது. முருகப்பெருமான் இத்தலத்தில் கடலைப் பார்த்தபடி, கிழக்கு நோக்கி காட்சியளிக்கிறார். பிரதான கோபுரம் சுவாமிக்கு எதிரே, அதாவது கிழக்கு திசையில்தான் அமைத்திருக்க வேண்டும். ஆனால், அப்பகுதியில் கடல் இருப்பதால் மேற்கில் கோபுரம் கட்டப்பட்டுள்ளது. முருகன் மூலஸ்தானத்தின் பீடத்தைவிட, இக்கோபுர வாசல் உயரமாக இருப்பதால், எப்போதும் அடைக்கப்பட்டே இருக்கிறது. கந்தசஷ்டி விழாவில் முருகன் திருக்கல்யாணத்தின்போது நள்ளிரவில் ஒரு நாள் மட்டும் இந்த வாசல் திறக்கப்படும். அவ்வேளையில் பக்தர்கள் உள்ளே செல்ல அனுமதி கிடையாது.

    தல வரலாறு

    தேவர்கள், தங்களைத் தொந்தரவு செய்த, சூரபத்மனை அழிக்கும்படி சிவபெருமானிடம் முறையிட்டனர். அவர்களது வேண்டுதலை ஏற்ற சிவன், தன் நெற்றிக்கண்ணில் இருந்து ஆறு பொறிகளை உண்டாக்கினார். அதிலிருந்து முருகப்பெருமான் தோன்றினார். பின், சிவபெருமானின் கட்டளையை ஏற்று, சூரபத்மனை அழிக்க இங்கு வந்தார். இவ்வேளையில் முருகப்பெருமானின் தரிசனம் வேண்டி, தேவர்களின் குருவான வியாழபகவான் இத்தலத்தில் தவமிருந்தார். அவருக்குக் காட்சி தந்த முருகப்பெருமான், இவ்விடத்தில் தங்கினார்.

    அவர் மூலமாக அசுரர்களின் வரலாறையும் தெரிந்து கொண்டார். அப்போது தனது படைத்தளபதியான வீரபாகுவை, சூரபத்மனிடம் தூது அனுப்பினார். அவன் கேட்கவில்லை. பின்பு, முருகன் தன் படைகளுடன் சென்று, அவனை வதம் செய்தார். வியாழ பகவான், முருகனிடம் தனக்குக் காட்சி தந்த இவ்விடத்தில் எழுந்தருளும்படி வேண்டிக்கொண்டார். அதன்படியே முருகனும் இங்கே தங்கினார். பின்பு, வியாழபகவான் விஸ்வகர்மாவை அழைத்து, இங்குக் கோவில் எழுப்பினார். முருகன், சூரனை வெற்றி பெற்று ஆட்கொண்டதால் இவர், "செயந்திநாதர்' என அழைக்கப்பெற்றார். பிற்காலத்தில் இப்பெயரே "செந்தில்நாதர்' என மருவியது. தலமும் "திருஜெயந்திபுரம்' (ஜெயந்தி - வெற்றி) என அழைக்கப்பெற்று, "திருச்செந்தூர்' என மருவியதாக வரலாறு கூறுகிறது.

    திருச்செந்தூர் சிறப்பு

    சிவபெருமானின் நெற்றிக்கண் தீப்பொறியில் இருந்து அவதரித்த சிவக்குமரன், சக்தி பார்வதிதேவி சேர்த்தெடுத்து ஞானப்பாலூட்டி வளர்த்த சக்திமைந்தன் தான் முருகன். இவர் விநாயகப் பெருமானின் இளைய சகோதரன், ஐயப்ப சுவாமியின் அண்ணன்.

    திருமாலின் மருமகன், இந்திரனின் மாப்பிள்ளை, தேவயானை எனும் தேவியின் கணவன். வள்ளிக்குற மகளின் காதலன், வீரபாகு முதலான நவ வீரவாகுத்தேவர்கள் 9 பேரின் தோழன், தேவர்களுக்கு இன்னல்கள் விளைவித்த தாரகாசூரன், சிங்கமுகன், சூரபதுமன் முதலான அசுரர்களை அழித்தவன்.

    அகத்திய முனிவருக்கே தமிழ் இலக்கணம் போதித்த முதல் ஆசிரியன், அவ்வைப்பிராட்டிக்கு தத்துவ ஞானத்தை நாவல்பழம் மூலம் போதித்தவன். நக்கீரர், அருணகிரியார், குமரகுருபரர், கச்சியப்பசிவாச்சாரியார் போன்ற ஞானிகளுக்கே தமிழ் நூல்கள் எழுத போதித்த சற்குரு.

    அப்பனுக்கே ஞானம் சொன்ன சுப்பன். தமிழகத்திற்கும் தமிழ்மொழிக்கும் தமிழ் மக்களுக்கும் உண்மையான தமிழ்த்தலைவன்,சித்தர்கள் பரம்பரையை துவக்கி வைத்த பெருமை முருகனுக்கு உண்டு.முருகப் பெருமான் குன்றுகள் இருக்குமிடம் தோறும் வீற்றிருக்கிறான்.

    முருகனை மந்திரவடிவிலும், யந்திர வடிவிலும், யாக நெருப்பிலும், பற்பல சிற்ப வடிவிலும், ஓவிய வடிவிலும், தமிழ் மக்கள் வழிபாடு செய்து வருகிறார்கள். முருகப் பெருமானைப்பற்றி நாம் மேலும் அறிய வேண்டுமானால் கச்சியப்பரின் கந்தபுராணம், நக்கீரரின் திருமுருகாற்றுப் படை, அருணகிரியாரின் திருப்புகழ், குமரகுருபரரின் கந்தர்கலிவெண்பா முதலான படைப்புகளை சலிப்பே இல்லாமல் படித்து, அதை நுணுக்கமாக ஆராய வேண்டும். அப்போது தான் முருகன் என்பவன் யார் என்பது மிகத்தெளிவாக தெரியவரும்.

    தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள புனிதபூமி திருச்செந்தூர். இது திருநெல்வேலியிருந்து சுமார் 54 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. நக்கீரர் வாக்குப்படி இது முருகனின் ஆறுபடை வீடுகளுள் 2-வது படைவீடாகும். இத்தலத்தில் ஓயாமல் கடல் அலைகள் சுழன்று அடிப்பதால் அலைவாய், திருச்சீரலைவாய் என்று பெயர் பெற்றுள்ளது. மேலும் முருகன் சூரனை அழித்து வெற்றி பெற்ற காரணத்தால் ஜெயந்திபுரம் என்றும் செந்திலாண்டவன் கொலுவிருந்து ஆட்சி செய்வதால் செந்திலம்பதி என்றும் இத்தலம் பல்வேறு பெயர்களைப் பெற்றுள்ளது.

    இத்தலத்தில் சூரசம்ஹார விழாவினைக் காணக்கண்கோடி வேண்டும். மேலும் முருகன் அவதரித்த வைகாசி விசாக நாளும் இங்கு சிறப்பாகக் கொண்டாடப் படும் பெருவிழாவாகும். முருகப் பெருமான் சூரபத்மன் மீது படையெடுத்து வரும் போது தமது படைகளுடன் இந்த திருச்செந்தூர் தலத்தில் வந்து தங்கினார். இங்கு தேவ சிற்பி விஸ்வகர்மாவினால் அமைக்கப்பட்ட ஆலயத்தில் தங்கிய செந்திலாண்டவனை தேவகுருவாகிய வியாழபகவான் வந்து பூஜித்தார்.

    அந்த குருபகவானிடமே அசுரர்களின் வரலாறுகளை முருகன் விரிவாகக் கேட்டறிந்தான். அதனால்தான் திருச்செந்தூர் புகழ்பெற்ற குரு தலமாக விளங்குகிறது.

    முருகன் வீரபாகுவைத் தூதனுப்பி சூரபத்மனுக்குப் பல அறிவுரைகள் கூறினார். அவன் அவற்றைக் கேட்கவில்லை.

    இதனால் சூரபத்மன் மீது முருகன் போர் தொடுத்தார். கடைசியில் பல மாயங்கள் புரிந்து கடலில் பெரிய மாமரமாய் நின்ற சூரனை தம் வேலால் பிளந்து, ஒரு பகுதியை மயிலாகவும், மற்றொரு பகுதியை சேவல் கொடியாகவும் கொண்டு பகைவனுக்கும் அருள் புரிந்தான் செந்தில் வேலவன்.

    மும்மூர்த்தி முருகன்

    திருச்செந்தூரில் முருகப்பெருமான், மும்மூர்த்திகளின் அம்சமாக காட்சி தருகிறார். ஆவணி மற்றும் மாசி மாத திருவிழாவின்போது சிவன், விஷ்ணு, பிரம்மா என மும்மூர்த்திகளின் அம்சமாக காட்சி தருகிறார். விழாவின் 7-ம் நாளன்று மாலையில் இவர் சிவப்பு நிற வஸ்திரம் சாத்தி சிவபெருமானாக காட்சி தருகிறார். மறுநாள் (8-ம்நாள்) அதிகாலையில் இவர் வெண்ணிற ஆடையில் பிரம்மாவின் அம்சமாக அருளுவார். மதிய வேளையில் பச்சை வஸ்திரம் சாத்தி பெருமாள் அம்சத்தில் காட்சியளிப்பார்.

    நான்கு உற்சவர்கள்

    பொதுவாக கோவில்களில் ஒரு தெய்வத்துக்கு, ஒரு உற்சவர் சிலை மட்டுமே இருக்கும். ஆனால், திருச்செந்தூர் கோவிலில் சண்முகர், ஜெயந்திநாதர், குமரவிடங்கர், அலைவாய் பெருமாள் என நான்கு உற்சவர்கள் இருக்கின்றனர். இவர்கள் அனைவருக்குமே தனித்தனி சன்னதிகள் இருப்பது சிறப்பு. இவர்களில் குமரவிடங்கரை, "மாப்பிள்ளை சுவாமி' என்றழைக்கின்றனர்.

    சந்தனமலை

    முருகனுக்குரிய ஆறுபடைவீடுகளில் திருச்செந்தூர் மட்டும் கடற்கரையிலும், பிற ஐந்தும் மலைக்கோவிலாக அமைந்தது போலவும் தோற்றம் தெரியும். உண்மையில், திருச்செந்தூரும் மலைக்கோவிலே ஆகும். இக்கோவில் கடற்கரையில் இருக்கும் "சந்தனமலை'யில் இருக்கிறது. எனவே இத்தலத்தை, "கந்தமாதன பர்வதம்' என்று சொல்வர். காலப்போக்கில் இக்குன்று மறைந்து விட்டது. தற்போதும் இக்கோவிலின் இரண்டாம் பிரகாரத்தில் பெருமாள் சன்னதி அருகிலும், வள்ளி குகைக்கு அருகிலும் சந்தன மலை சிறு குன்று போல புடைப்பாக இருப்பதைக் காணலாம்.

    தீபாவளிக்கு புத்தாடை ஊர்வலம்

    மகாவிஷ்ணு, நரகாசுரனை அழித்து மக்கள் இன்புற்ற தீபாவளி நாளில் அனைவரும் புத்தாடை உடுத்தி மகிழ்கிறோம். திருச்செந்தூர் கோவிலிலும் அனைத்து சுவாமிகளுக்கும் தீபாவளியன்று புத்தாடை அணிவிக்கப்படுகிறது. அன்று அதிகாலையில் இக்கோவிலில் உள்ள அனைத்து பரிவார தெய்வங்களுக்கும் சந்தன காப்பு செய்யப்படுகிறது. பின் புத்தாடைகளை வெள்ளி பல்லக்கில் வைத்து ஊர்வலமாக கொண்டு சென்று, அணிவிக்கின்றனர். தெய்வானையை, முருகன் மணம் முடிக்க காரணமாக இருந்த தலம் என்பதால், இந்திரன் இத்தலத்தில் மருமகனுக்கும், அவரைச் சார்ந்தவர்களுக்கும் தீபாவளிக்கு புத்தாடை எடுத்து தருவதாக ஒரு நம்பிக்கை உள்ளது.

    சக்கரம் கொடுத்த பெருமாள்

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்பிரகாரத்தில் வெங்கடேச பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இங்கு பெருமாள் கையில் சக்கராயுதம் இல்லை. அதனை முருகனுக்கு சூரசம்காரம் செய்ய வழங்கி விட்டதாக கூறுகிறார்கள்.

    முருகனின் திரு உருவங்கள்

    1. சக்திதரர், 2. கந்தசுவாமி, 3. தேவசேனாதிபதி, 4.சுப்பிரமணியர், 5.கஜவாகனர், 6.சரவணபவர், 7.கார்த்திகேயர், 8.குமாரசுவாமி, 9.சண்முகர், 10. தாரகாரி, 11. சேனாபதி, 12. பிரமசாத்தர், 13. வள்ளிகல்யாண சுந்தரர், 14. பாலசுவாமி, 15. கிரவுஞ்ச பதனர், 16. சிகிவாகனர்.

    பஞ்சலிங்க தரிசனம்

    முருகன் சன்னதிக்கு வலப்புறத்தில் "பஞ்சலிங்க' சன்னதியும் இருக்கிறது. இவர்களை மார்கழி மாதத்தில் தேவர்கள் தரிசிக்க வருவதாக ஐதீகம். சிவனுக்குரிய வாகனமான நந்தியும், முருகனுக்கு எதிரே இந்திர, தேவ மயில்களும் மூலஸ்தானம் எதிரே உள்ளன. வெளியிலிருந்தபடி முருகரைத் தரிசனம் செய்யும்போதே பஞ்சலிங்க தரிசனம் செய்ய இயலாது. மூலவர் முருகரின் இடப்புறம் உள்ள சிறு வாயில் வழியே உள்ளே நுழைந்து சுற்றி வலப்புறம் வந்து பாதாள பஞ்சலிங்க தரிசனம் செய்ய வாரநாட்களில் இயலும்.

    • ‘மதானந்தேஸ்வரர்’ என்பதற்கு, ‘காமம், ஆசையைக் கொன்ற கடவுள்’ என்று பொருள்.
    • இந்த ஆலயத்தின் பிரதான பிரசாதமாக ‘அப்பம்’ இருக்கிறது.

    கேரளா மாநிலம் காசர்கோடு மாவட்டம் மதுர் என்ற இடத்தில் அமைந்துள்ளது, மதானந்தேஸ்வரர் ஆலயம். மதுவாகினி ஆற்றின் கரையில் இருக்கும் இந்த ஆலயத்தின் முதன்மை தெய்வம் மதானந்தேஸ்வரர் என்ற பெயரில் அழைக்கப்படும் சிவபெருமான்தான். 'மதானந்தேஸ்வரர்' என்பதற்கு, 'காமம், ஆசையைக் கொன்ற கடவுள்' என்று பொருள். சிவபெருமானின் கருவறைக்குள், பார்வதி தேவியும் வீற்றிருக்கிறார். கோவிலின் முதன்மை தெய்வமாக சிவபெருமான் இருந்தாலும், இந்த ஆலயத்தின் முக்கியத்துவம் உள்ள தெய்வமாக சித்தி விநாயகர் உள்ளார். சிவபெருமான் கருவறையின் தெற்கே இந்த விநாயகர் சன்னிதி இருக்கிறது.

    இங்கு ஆரம்ப காலத்தில் மதானந்தேஸ்வரர் கோவில் மட்டுமே இருந்தது. துளு மொகர் சமூகத்தைச் சேர்ந்த மதரு என்ற மூதாட்சி, சுயம்பு லிங்கம் ஒன்றை கண்டெடுத்ததன் பேரில் இந்த ஆலயம் அமைக்கப்பட்டதாக தல வரலாறு சொல்கிறது. இந்த ஆலயத்தின் கருவறை தெற்கு சுவரில், ஒரு சிறுவன் விளையாட்டாக பிள்ளையார் உருவம் ஒன்றை வரைந்தான். அந்த ஓவியமானது நாளுக்கு நாள் பெரியதாகவும், புடைப்பாகவும் மாறியது.

    இந்த ஆலயம் யானையின் பின்புறத்தை போன்ற அமைப்புடன் (கஜபிருஷ்ட வடிவம்) கட்டப்பட்டுள்ளது. மூன்று அடுக்கு நிலைகளைக் கொண்டதாக ஆலயம் அமைந்திருக்கிறது. ஆலயத்தைச் சுற்றிலும் ராமாயணக் காட்சிகளை சித்தரிக்கும் வகையில் அழகிய மர வேலைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்தக்கோவில் துளு நாட்டின் பாரம்பரிய ஆறு பிள்ளையார் கோவில்களில் ஒன்று என்று சொல்லப்படுகிறது. மங்களூர் (ஷரவு மகாகணபதி), அனேகுடே, ஹத்தியங்கடி, இடகுஞ்சி, கோகர்ணா ஆகிய இடங்களில் உள்ளவை மற்ற ஐந்து கோவில்களாகும்.

    இந்த ஆலயத்தின் பிரதான பிரசாதமாக 'அப்பம்' இருக்கிறது. இந்த அப்பம் ஒவ்வொரு நாளும் இறை வழிபாட்டிற்காக தயாரிக்கப்படுகிறது. ஆலயத்தில் நடைபெறும் சிறப்பு பூஜைகளின் போது, 'சகஸ்ரப்பா' (ஆயிரம் அப்பங்கள்) இறைவனுக்கு படைக்கப்பட்டு வழிபாடு செய்யப்படும். இந்த அப்பம் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும். ஆலயத்தின் மற்றொரு சிறப்பு பூஜை 'மூடப்ப சேவை.' இந்த வழிபாட்டில், விநாயகரின் சிலை முழுவதையும் அப்பங்களால் மூடுகின்றனர்.

    காசர்கோடு நகரில் இருந்து 7 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது, மதுர் திருத்தலம்.

    • காஞ்சிபுரம் கூரம் கிராமத்தில் இந்த கோவில் உள்ளது.
    • விருப்பங்களை நிறைவேற்றும் பரிகார தலமாக உள்ளது.

    காஞ்சிபுரத்தில் இருந்து பத்து கிலோ மீட்டர் தொலைவில் கூரம் கிராமத்தில், வித்யவினீத பல்லவ பரமேஸ்வர சிவன் கோவில் உள்ளது. இக்கோயில் , ஏழாம் நூற்றாண்டில், முதலாம் பரமேஸ்வர வர்ம பல்லவ மன்னர் காலத்தில் வித்ய வினீத பல்லவரசன் என்னும் குறு நில மன்னன் இந்த ஊரில் நிலத்தை விலைக்கு வாங்கி, கோயிலை கட்டியுள்ளான். இதற்கு வித்ய வினீத பல்லவ பரமேச்வரகிருஹம் என பெயரிடப்பட்டுள்ளது.

    தமிழகத்தின் கற்கோயில் , கட்டுமானக் கலைக்கும் முன் உதாரணமாக, திகழ்கிறது எனலாம். பரமேச்வரவர்மன், ராஜசிம்மன், நத்திவர்மன், நிருபதுங்கன் என நான்கு பல்லவ அரசர்கள் இவ்வூரின் மீது அதிக அளவில், ஈடுபாடு கொண்டுள்ளனர். முதலாம் ராஜராஜசோழன் காலத்தில் பெருந்திருக்கோயில் என சிறப்பு வாய்ந்ததாகும். இங்கு, ஆதிகேசவப்பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயில், பல்லவர்கள் கால கோவிலாகும். வைணவத்திற்கு பெரும் தொண்டாற்றிய கூரத்தாழ்வான் அவதரித்தார். கூரத்தாழ்வானுக்கு பெருமாள் கோவிலில் ஒரு தனி சன்னிதி உள்ளது.

    தினமும் மாலை வேளையில், சூரியன் மறையும் நேரத்தில், சூரிய கதிர்கள் லிங்கத்தின் மீது விழும் வகையில், கோயில் வடிவமைக்கப்பட்டுள்ளது, ராமர் வழிபட்ட தலம்.

    விருப்பங்களை நிறைவேற்றும் பரிகார தலமாக உள்ளது. சுவாமிக்கு அபிஷேகம் செய்து புது வஸ்திரம் சார்த்தி தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள்.

    கோவில் நடை திறந்திருக்கும் நேரம்

    காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்திருக்கும்.

    • சென்னகேசவப் பெருமாள், பெண் உருவில் இத்தலத்தில் காட்சியளிக்கிறார்.
    • இந்த ஆலயத்தில் 42 அடி உயரம் கொண்ட தூண் நிறுவப்பட்டுள்ளது.

    கர்நாடகா மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் உள்ளது, பேளூர் என்ற இடம். இது ஹோய்சாலப் பேரரசின் ஆட்சி காலத்தில் தலைநகராக இருந்த ஊர் ஆகும். இங்கு சென்னகேசவர் கோவில் இருக்கிறது. இந்த ஆலயம் முன் காலத்தில் 'விஜயநாராயணர் கோவில்' என்று அழைக்கப்பட்டு வந்துள்ளது. திருமாலை முக்கிய கடவுளாகக் கொண்டிருக்கும் இந்த ஆலயம், வைணவர்களின் வழிபாட்டு யாத்திரையில் சிறப்பிடம் பெறுகிறது.

    இந்த ஆலயம் ஹோய்சால அரசர்களில் ஒருவரான விஷ்ணுவர்த்தனன் என்பவரால், கி.பி. 1117-ம் ஆண்டு கட்டப்பட்டது. இந்தக் கோவிலின் மூலவரான கேசவநாராயணர், கல்லால் ஆன பீடத்தையும் சேர்த்து 15 அடி உயரம் கொண்டவர். சென்னகேசவப் பெருமாள், பெண் உருவில் இத்தலத்தில் காட்சியளிக்கிறார்.

    இந்த ஆலயம் மூன்று வாசல்களைக் கொண்டுள்ளது. இந்த ஆலயம் அதன் சிற்ப வேலைப்பாடுகளினால் முக்கியத்துவம் பெற்று விளங்குகிறது. இந்த ஆலயம் இரண்டு கர்பக்கிரகத்துடன் விளங்குகிறது. இரண்டாவது கர்பக்கிரகம் பின்னாளில் இணைக்கப்பட்டுள்ளது. இதிலும் கேசவநாராயணரே மூலவராக இருக்கிறார். இதனை, விஷ்ணுவர்த்தனனின் அரசியாகிய சாந்தலாதேவி கட்டியிருக்கிறார்.

    இந்த ஆலயத்தில் 42 அடி உயரம் கொண்ட தூண் நிறுவப்பட்டுள்ளது. இதனை 'மகாஸ்தம்பம்' என்றும், 'கார்த்திகை தீபோற்சவ ஸ்தம்பம்' என்றும் அழைக்கிறார்கள். சென்னகேசவப் பெருமாள் கோவிலில் பக்தர்களை கவர்ந்திருக்கும் சிறப்பம்சம் கொண்டதாக இந்த தூண் விளங்குகிறது. ஏனெனில் இந்த தூணுக்கு அடித்தளம் இல்லை. ஒரே கல்லால் செய்யப்பட்ட மேடையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இந்தத் துண், அதன் அடிப்பாக மேடையை தொடாமல் உள்ளது. இதனை இடையில் ஒரு தாளையோ, துணியையோ விட்டால், மறு மூலையில் அதனை எடுக்க முடியும். இந்த ஸ்தம்பம், பீடத்தோடு ஒட்டாமல் நிற்பது புரியாத புதிராகவே இருக்கிறது.

    • இந்த கோவிலில் மும்மூர்த்திகளும் ஒருசேர அருள்பாலிக்கிறார்கள்.
    • இந்த கோவில் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது.

    குமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலும் ஒன்று. 2 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவிலில் சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய மும்மூர்த்திகளும் ஒருசேர அருள்பாலிக்கிறார்கள். அதனால்தான் தாணுமாலயன் கோவில் (தாணு என்றால் சிவன், மால் என்றால் திருமால், அயன் என்றால் பிரம்மா) என்ற பெயருடன் இந்த கோவில் அழைக்கப்படுகிறது.

    இந்திரன் சாபம் நீங்கியது

    இந்திரன் தனது சாபம் நீங்க மும்மூர்த்திகளையும் ஒருசேர பூஜித்து வணங்கிய இடமே (அறிவுக்கானகம் என்று போற்றப்பட்ட ஞானாரண்யம் என்ற பகுதிதான்) சுசீந்திரம் என்பது புராண வரலாறு. அதனால் இந்திரன் இந்த கோவிலுக்கு அர்த்தசாமத்தில் வந்து பூஜை செய்வதாக ஐதீகம். அத்திரி மகரிஷி முனிவருக்கும், அவரது மனைவி அனுசூயாவிற்கும் மும்மூர்த்திகளும் ஒரே லிங்க உருவில் இங்கு காட்சி அளித்ததாக தல வரலாறு கூறுகிறது.

    இறைவன் மீது அளவற்ற பற்றுக்கொண்ட அறம்வளர்த்தாள் என்ற பெண்ணை இறைவன் உயிரோடு ஆட்கொண்ட இடம் சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவில் என்றும் தலப்புராணம் கூறுகிறது. அதன்காரணமாக அறம்வளர்த்த நாயகி அம்மன் சன்னதி அமைந்துள்ளது என்றும், இந்த சம்பவத்தின் நினைவாக ஆண்டுதோறும் மாசி மாதம் திருக்கல்யாண விழா நடைபெறுகிறது என்றும் கூறுகிறார்கள்.

    சன்னதிகள்

    இந்த கோவிலின் பிரதான சன்னதியாக சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய மும்மூர்த்திகள் இணைந்த தாணுமாலய சாமி சன்னதி அமைந்துள்ளது. இதுதவிர கொன்றையடி சன்னதி, ஆஞ்சநேயர் சன்னதி, அறம் வளர்த்த நாயகி சன்னதி, கால பைரவர் சன்னதி, கங்காளநாதர் சன்னதி, கைலாசநாதர் சன்னதி, சேரவாதல் சாஸ்தா சன்னதி, ராமர் சன்னதி, முருகன் சன்னதி, பஞ்சபாண்டவர் சன்னதி, நீலகண்ட விநாயகர் சன்னதி, நவக்கிரக சன்னதி அமைந்துள்ளது), இந்திர விநாயகர் சன்னதி, உதயமார்த்தாண்ட விநாயகர் சன்னதி, சண்டிகேஸ்வரர் சன்னதி, ஸ்ரீகிருஷ்ணர் சன்னதி, துர்க்கை அம்மன் சன்னதி, ஸ்ரீசக்கரம் சன்னதி, விக்னேஸ்வரி (பெண் கணபதி- முகம் விநாயகர் உருவிலும், உடல் பெண் தோற்றத்திலும் காட்சி தரும்) சன்னதி, மன்னருக்கு தலைவலியை போக்கிய ஜூர தேவமூர்த்தி சன்னதி (3 தலை, 3 கால், 4 கைகளைக் கொண்ட சாமி சிலையுடன் கூடியது), நந்தீஸ்வர் சன்னதி போன்ற சன்னதிகள் இக்கோவிலில் அமைந்துள்ளன. இத்தகைய சிறப்புகள் மிகுந்த இந்த கோவிலுக்கு தினமும் குமரி மாவட்ட பக்தர்கள் மட்டுமின்றி வெளிமாவட்ட, வெளிமாநில, வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளும், பக்தர்கள் வந்து செல்கிறார்கள்.

    பழம்பெருமை மிக்க இந்த கோவிலில் அமைந்துள்ள விஷ்ணு சிலை கடுசர்க்கரை மருந்தால் ஆனது. இதனால் விஷ்ணுவின் திருமேனி எப்போதும் வெள்ளி கவசம் தாங்கி இருக்கும். எனவே விஷ்ணுவுக்கு அபிஷேகம் கிடையாது. இதனால் அவர் அலங்காரப்பிரியராகவும், சிவன் அபிஷேகப் பிரியராகவும் இங்கு காட்சி தருகின்றனர். இங்குள்ள உற்சவ மூர்த்திகளுக்கு விசேஷ நாட்களில் மட்டுமே அபிஷேகங்கள் நடைபெறுகிறது.

    ராஜகோபுரம்

    சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலின் முகப்பில் உள்ள ராஜ கோபுரம் 135 அடி உயரத்துடன் கம்பீரமாக காட்சி தருகிறது. கோபுரம் 10 அடி உயர கருங்கல் பீடத்தில் 7 நிலைகளைக் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது. கோபுரத்தின் உள்புறத்தில் மர வேலைப்பாடுகள் நிறைந்துள்ளது. உட்புற சுவர்களில் மூலிகைச் சாற்றில் இருந்து எடுக்கப்பட்ட வண்ணங்களில் ஆன ராமாயணம், மகாபாரத இதிகாச ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன. வெளிப்புறத்தில் ராமாயணம், மகாபாரதம், சிவபுராண கதாபாத்திரங்களின் சுதை சிற்பங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த சிற்பங்கள் கடுசர்க்கரை, நவபாஷாண மூலிகைகளால் தயாரிக்கப்பட்டதாகும். கோவிலில் உள்ள நந்தி சிலை முழுக்க, முழுக்க கடற்சங்கை மாவாக்கி அதில் உருவாக்கப்பட்டுள்ளது. அதனால் இதனை மாக்காளை என்றும், பிரமாண்டமாக காட்சி தருவதால் மகாக்காளை என்றும் அழைக்கப்படுகிறது.

    ஒரே கல்லில் செதுக்கப்பட்ட 22 அடி உயரம் ஆஞ்சநேயரின் சிலையுடன் கூடிய சன்னதி இந்த கோவிலின் சிறப்பம்சங்களில் ஒன்றாகும். சிலை பாதத்தின் கீழே உள்ள 4 அடி பூமிக்குள் பதித்து வைக்கப்பட்டுள்ளது. வெளியில் தெரிவது 18 அடி உயரங்கொண்ட ஆஞ்சநேயர் மட்டும்தான். பாதத்தில் இருந்து உச்சிவரை எந்தவித பிடிப்பும் இல்லாமல் இந்த சிலை நிற்கிறது. சுசீந்திரம் கோவிலில் மண்ணிலிருந்து கிடைத்த மாணிக்கமாக திகழ்கிறார் மாருதி. கோவிலின் தின வழிபாடுகளிலும், காணிக்கை வசூலிலும் இந்த கோவிலில் முதலிடம் வகிப்பவர் இவரே என கோவில் பணியாளர்கள் பெருமையோடு கூறுகிறார்கள். கோவிலின் அலங்கார மண்டபத்தில் 36 இசைத்தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன. கல்லும் கவிபாடும் என்பதற்கேற்ப இந்த தூண்களை தட்டினால் இசை ஒலி எழும்பும். கை தாளத்துக்கு ஏற்ப நாதஓசை எழும்பும் வகையில் இசைத்தூண்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது. புகழ்பெற்ற வியக்க வைக்கும் சுற்றுப்பிரகார மண்டபத்தைக் கொண்டது இக்கோவில். 2 பெரிய கொடிமரங்கள் இந்த கோவிலில் அமைந்துள்ளன.

    மார்கழி திருவிழா தேரோட்டம், சித்திரை திருவிழா தெப்போற்சவம், ஆவணி மாத தேர்திருவிழா, மாசித்திருக்கல்யாண திருவிழா, மார்கழி மாதம் மூலம் நட்சத்திரம் அமாவாசை திதியில் வரும் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா ஆகியவை இந்த கோவிலின் முக்கிய விழாக்களாகும். இந்த விழாக்காலங்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வருவார்கள். கோவிலில் தினமும் காலை 4.30 மணிக்கு நடைதிறக்கப்பட்டு மதியம் 12 மணிக்கு மற்ற சன்னதிகளும், 1 மணிக்கு ஆஞ்சநேயர் சன்னதியும் நடை அடைக்கப்படும். மாலை 4 மணிக்கு ஆஞ்சநேயர் சன்னதி நடைதிறக்கப்படும். மற்ற சன்னதிகள் மாலை 5 மணிக்கு திறக்கப்படும். இரவு 8 மணிக்கு அனைத்து சன்னதிகளும் நடை அடைக்கப்படும்.காலை, மாலை 6.30 மணிக்கு பூஜை மற்றும் தீபாராதனை நடைபெறும்.

    • இத்தலம் காங்கேயன்பாளையம் என முருகனின் பெயரால் அமைந்துள்ளது.
    • கார்த்திகை கடைசி திங்களன்று சுவாமிக்கு 108 சங்காபிஷேகம் நடக்கும்.

    ஈரோடு மாவட்டத்தில், காங்கேயன்பாளையத்தில் அமைந்துள்ள 600 ஆண்டுகளுக்கு மேல் பழமையான நல்லநாயகி உடனருள் நட்டாற்றீஸ்வரர் திருக்கோயில் சிவனின் அரங்கமாகவே திகழ்கிறது. மூர்த்தி மற்றும் காவிரி தீர்த்தத்தால் சிறப்புப் பெற்றுள்ள இத்தலம் காங்கேயன்பாளையம் என முருகனின் பெயரால் அமைந்துள்ளது. இத்தலத்தில் காவிரி ஆறு இரு புறமும் சுழித்துக் கொண்டு ஓட, நடுவில் உயர்ந்து, அகத்தியர் வியாக்ரபாதர், பதஞ்சலி முதலிய முனிவர்கள் திருவடி பதிந்த பாறைமீது அமைந்துள்ள திருக்கோயிலாகும்.

    காவிரியின் நடுவிலுள்ள குன்றின் மீது, ஓம்கார வடிவில் விளங்கும் கோயில் இது. கொங்கு நாட்டு பஞ்சபூதத் தலங்களில் அகத்தியரால் மணலில் வடிக்கப்பட்ட லிங்கமாக இத்தல இறைவன் இருப்பதால், இத்தலம் கொங்குநாட்டு பிருத்வி (மண்) தலமாகக் கருதி வழிபடப்படுகிறது. இதுவரை இத்திருக்கோயிலுக்குச் செல்பவர்கள் வருடத்தில் சுமார் ஒன்பது மாதங்கள் காவிரி ஆற்றில் பரிசலில் பயணித்துச் சென்றுதான் தரிசனம் செய்து வரவேண்டும்.

    குடகிலிருந்து கடலின் முகத்துவாரம் வரையில் உள்ள நீளத்தின் மையப்புள்ளி அமைந்துள்ள இடமே தற்போது நட்டாற்றீஸ்வரர் கோயில்கொண்டிருக்கும் பகுதியாகும். மேலும் இரு கரைகளுக்கு இடையிலும் நடு ஆற்றில் அமைந்துள்ள பகுதியாக இருப்பதால் நடு ஆற்று ஈஸ்வரர் என்ற காரணப் பெயர் ஏற்பட்டு, தற்போது நட்டாற்று ஈஸ்வரர் என வழங்கி வருகிறது. இந்த நட்டாற்றீஸ்வரர், அகத்தியரால் அவர்தம் பூஜைக்கென உருவாக்கப்பட்டு வணங்கப்பட்ட லிங்கமாகும்.

    அகத்தியரால் வணங்கப்பட்ட சிவலிங்கம் நடு ஆற்றில் குடி கொண்டதால், 'நட்டாற்றீஸ்வரர்' எனவும், அகத்தியரால் மணலால் பிடித்து வைத்து வணங்கப்பட்டதால் அகத்தீஸ்வரர் எனவும் வழங்கப்பட்டார். பின்னர் சிவலிங்கத்திற்கு மேல் விமானம் கட்டப்பட்டது சிவகுடும்பத்தின் அங்கமாக அருகில் உமையம்மை, 'நல்லநாயகி' என்ற பெயரோடு, சிவன் சந்நதிக்கு வலப்புறம் தனி சந்நதியில் எழுந்தருளினாள். தன்னை வேண்டும் பக்தர்களுக்கு நற்பலன்களைத் தருபவள் என்பதால் இவளுக்கு இப்பெயர் வழங்குகிறது. அன்னபூரணி என்றும் பெயருண்டு.

    சின்னமைந்தன் முருகன், வலது காலை முன்வைத்தும், இடக்காலை பின் வைத்தும் நடப்பது போன்ற பாவனையில் காட்சி தருகிறார். அகத்தியர் இங்கு சிவனைத் தரிசிக்க வந்தபோது, முருகன் அவரை முன்னின்று வரவேற்று அழைத்து வந்து ஆற்றின் நடுவில் அமைந்திருந்த குன்றைக் காட்டியதால் இக்கோலத்தில், அதாவது நடக்கும் பாவனையில், காட்சி தருகின்றார். இவர் இடது கையில் கிளி ஒன்றை வைத்திருப்பது வித்தியாசமான தரிசனம். இது 'தகப்பன் சாமி' எனப் பெயர்பெற்ற ஞானஸ்கந்தன் என்னும் முருகப் பெருமானின் ஞானக்கோலம் ஆகும். கோயில் வளாகத்திலுள்ள பாறை மீது தலவிருட்சமான ஆத்திமரத்தைக் காணலாம். மிகவும் பழமையான இம்மரத்தில் புதிய கிளைகள் தோன்றுவதில்லை என்பது அதிசயம்.

    இம்மரத்தின் கீழ் தல விநாயகராக காவிரி கண்ட விநாயகர் எழுந்தருளியுள்ளார். இத்தலத்தின் பிராகாரத்தில் காவிரி கண்ட விநாயகரோடு, துர்க்கை, தட்சிணாமூர்த்தி, நவக்கிரகங்கள், சண்டிகேஸ்வரர், நால்வர், பைரவர். ஆகியோர் எழுந்தருளி அருளுகின்றார்கள். ஸ்ரீதேவி-பூதேவியுடனான ஸ்ரீவீரநாராயணப் பெருமாள் தனி சந்நதியில் சேவை சாதிக்கிறார்.தினமும் காலை 6.30 முதல் இரவு 7.00 மணிவரை திருக்கோயில் தரிசனத்திற்காக திறந்திருக்கும் அமாவாசை, கிருத்திகை, பிரதோஷம், தேய்பிறை அஷ்டமி நாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. அகத்தியர் பிருத்வி லிங்கம் செய்து சிவபூஜை செய்தபோது, சுவாமிக்கு கம்பு தானியத்தை படைத்து வழிபட்டார்.

    இதன் அடிப்படையில் அச்சம்பவம் நிகழ்ந்த சித்திரை முதல்நாள் மட்டும் சிவனுக்கு தயிர் கலந்த கம்பங்கூழ் நைவேத்யமாகப் படைக்கப்படுகிறது. அன்று பக்தர்களுக்கு இதுவே பிரசாதமாகவும் வழங்கப்படுகிறது. சித்திரை முதல்நாள், ஆடிப்பெருக்கு மற்றும் கார்த்திகை கடைசி திங்களன்று சுவாமிக்கு 108 சங்காபிஷேகம் நடக்கும். ஆடிப்பூரத்தன்று மதியவேளை பூஜையில் நல்லநாயகி அம்பாளுக்கு 108 சங்காபிஷேகம் நடக்கும். காவிரியாற்றின் நடுவில் அமைந்த தலம் என்பதால், ஆடிப்பெருக்கன்று சிவனுக்கு காவிரி நீர் அபிஷேகத்துடன் பூஜை நடக்கும். அன்று கமண்டலத்தின் மூலம் காவிரி நதியைக் கொண்டு வந்த அகத்தியருக்கு தலைப்பாகை மற்றும் வஸ்திரம் அணிவித்து மரியாதை செய்யப்படுகிறது.

    இத்திருக்கோயில் சிறிய பாறைமீது அமைந்திருந்தாலும், அந்தப் பாறையிலேயே ஆத்திமரம் தலவிருட்சமாகத் துலங்குகிறது. அனைத்து நட்சத்திரங்களும், ராசிகளும் இறைவனின் இயக்கத்துக்குக் கட்டுப்பட்டவை என்பதால் அந்தந்த நட்சத்திரத்துக்கும் ராசிக்கும் உரிய தாவரங்கள் வைக்கப்பட்டுள்ளன. அவரவர் தமக்குரிய விருட்சத்தை வணங்கி பின்னர் வந்து இறைவனை வணங்கிச் செல்லும் வழக்கமும் நடைமுறையில் உள்ளது.

    செவ்வாய், வெள்ளி ஞாயிற்றுக்கிழமைகளில் நல்லம்மை, துர்க்கை வழிபாடும், சோமவாரத்தில் சிவனுக்கு அபிஷேகமும், சனிக்கிழமைகளில் பெருமாள் வழிபாடும், சஷ்டி, கிருத்திகை, செவ்வாய் நாட்களில் ஞானவடிவாக உள்ள சுப்ரமணியருக்கு கல்வியில் தேர்ச்சிபெற மாணவர்கள் வந்து வணங்கிவிட்டுச் செல்கிறார்கள். தீயதை அழித்து நல்லது நடைபெற அகத்தியர் மூலமாக எழுந்தருளி அருள்பாலித்துவரும் அகத்தீஸ்வரர் என்னும் நல்லம்மை உடனாய நட்டாற்றீஸ்வரரைத் தொழ நம்மைச் சுற்றி இருக்கும் தீமைகள் அழிந்து, நமக்கு நன்மையே விளையும்.

    • இந்த ஆலயம் சுமார் 6½ கோடி திர்ஹாம் செலவில் கட்டப்பட்டிருக்கிறது.
    • ஒரே நேரத்தில் ஆயிரம் பேர் வரை உள்ளே நின்று வழிபாடு செய்ய முடியும்.
    • ஆலயத்தில் சிவன் - பார்வதி சிலைகளுடன் சிவலிங்கம் பிரதானமாக அமைந்துள்ளது.

    அரபு நாடு என்றாலே கடுமையான சட்ட திட்டங்களும், குற்றங்களுக்கு கடுமையான தண்டனைகளும் நிறைந்தது என்ற மாயத் தோற்றம் பலரிடம் இருக்கிறது. ஆனால் பலாப்பழத்தின் உள்ளே இருக்கும் தித்திப்பைப் போல, மதம், இனம், மொழிக்கு அப்பாற்பட்டு அனைத்து நாட்டினரையும் அரவணைத்துச் செல்லும் பண்பும் அங்கே உள்ளது என்பதை பறைசாற்றி இருக்கிறது, சமீபத்தில் துபாயில் திறக்கப்பட்டுள்ள இந்து கோவில். அதிலும் அந்த ஆலயத்தை, அமீரக சகிப்புத்தன்மை மற்றும் சகவாழ்வுத்துறை மந்திரி ஷேக் நஸ்யான் பின் முபாரக் அல் நஹ்யான் திறந்துவைத்திருப்பது கூடுதல் சிறப்பு.

    ஐக்கிய அரபு அமீரகம் இஸ்லாமிய நாடாக இருந்தாலும், மதநல்லிணக்கம் மற்றும் சகிப்புத்தன்மையை வலியுறுத்தும் விதமாக பல்வேறு மதங்களை சேர்ந்த சமூகத்தினர் அவரவர் பின்பற்றும் முறைப்படி வழிபடுவதற்கு ஏற்ற வகையில் வழிபாட்டு தலங்களை அமைத்துக்கொள்ள அனுமதி அளித்து வருகிறது. ஏற்கனவே தேவாலயங்கள், சீக்கிய குரு தர்பார், புத்தர் கோவில், இந்து கோவில் என அனைத்தும் இங்கு உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்து சமயத்தை பின்பற்றும் மக்கள் அதிகமாக உள்ளதால் அதற்கு மதிப்பளிக்கும் வகையில், துபாயில் ஜெபல் அலி பகுதியில் ஷேக் ஜாயித் சாலை அருகில் 70 ஆயிரம் சதுர அடி நிலப்பரப்பில், வழிபாட்டு பகுதியுடன் பிரமாண்டமான கோவில் வளாகம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக துபாய் அரசு கடந்த 2019-ம் ஆண்டில் நிலம் கொடுத்தது. அதேபோல இந்தக் கோவிலுக்கு சமூக மேம்பாட்டு ஆணையம் முறையான உரிமமும் வழங்கி உள்ளது.

    இந்த ஆலயம்தான் சமீபத்தில் திறந்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது. இந்தக் கோவில், ஏற்கனவே பர்துபாய் பகுதியில் அமைந்துள்ள சிந்தி குரு தர்பார் கோவில் அமைப்பின் சார்பில், சுமார் 6½ கோடி திர்ஹாம் செலவில் கட்டப்பட்டிருக்கிறது. இங்கு ஒரே நேரத்தில் ஆயிரம் பேர் வரை உள்ளே நின்று வழிபாடு செய்ய முடியும். இந்த ஆலயத்தின் கட்டிடக் கலையானது, அரபு- இந்திய கலாசாரத்தை பிரபதிபலிக்கும் அம்சமாக அமைந்திருக்கிறது. ஆலயத்தில் சிவன் - பார்வதி சிலைகளுடன் சிவலிங்கம் பிரதானமாக அமைந்துள்ளது. கோவில் வளாகத்தின் பிற பகுதிகளில் விநாயகர், மகாலட்சுமி, கிருஷ்ணர், ஐயப்பன், பாலாஜி, லட்சுமி நாராயணர், துர்க்கை, சாய்பாபா, மூகாம்பிகை, சீதை மற்றும் லட்சுமணனுடன் கூடிய ராமபிரான், அனுமன் உள்பட 16 தெய்வங்களின் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு பூஜை செய்வதற்காக 12 குருக்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

    இங்குள்ள சிலைகள் அனைத்தும் வெள்ளை மற்றும் கருப்பு மார்பிள் கற்களால் உருவானவை. அனைத்து சிலைகளும், இந்தியாவின் ஜெய்ப்பூர் நகரில் உருவாக்கப்பட்டிருக்கிறது. ஆலயத்திற்குள் ஒரு பகுதியின் மேற்பரப்பில் பிரமாண்டமான விரிந்த தாமரை போன்ற அமைப்பு கண்கொள்ளாக் காட்சியாக இருக்கிறது. அதேபோல மற்றொரு பகுதியின் மேற்பரப்பில் ஏராளமான மணிகள் தொங்கவிடப்பட்டுள்ளது. இவை பார்ப்பதற்கு சிறப்பான அலங்காரத் தோற்றத்தை வெளிப்படுத்துகிறது.

    தலைநகர் அபுதாபி நெடுஞ்சாலை அருகே ஜெபல் அலி பகுதியில் இந்த கோவில் அமைக்கப்பட்டுள்ளதால், அங்கு இருந்தும் பொதுமக்கள் எளிதாக வாகனங்களில் வந்து செல்ல முடியும். தற்போது பொதுமக்களின் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக இணையத்தளத்தில் முன்பதிவு செய்து வழிபடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த இந்து கோவிலில் திருமணங்கள் மற்றும் சுப காரியங்களை நடத்திக்கொள்ள வசதி செய்து தரப்பட்டுள்ளது. மதநல்லிணக்கம் மற்றும் சகிப்புத்தன்மைக்கு உதாரணமாக திறக்கப்பட்டுள்ள இந்த கோவிலுக்கு, உலகம் முழுவதும் இருந்து வாழ்த்துகளும், பாராட்டுகளும் குவிந்த வண்ணம் உள்ளது. உலக அளவில் எதிர்காலத்தில் சகோதரத்துவம், சமத்துவம், சகிப்புத்தன்மை ஆகிய பண்புகளை பறைசாற்றுவதாக துபாயில் உள்ள இந்து கோவில் விளங்கும் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை.

    அபுதாபியில் பாப்ஸ் அமைப்பு மூலம் மற்றுமொரு பிரமாண்டமான இந்து கோவிலும் கட்டப்பட்டு வருகிறது. இந்த கோவிலானது அடுத்த ஆண்டு (2023) திறக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    ஆலயத்தின் கோபுர உச்சியில் பித்தளையால் உருவாக்கப்பட்ட கலசங்கள் நிறுவப்பட்டுள்ளன. இதில் மைய கோபுரத்தின் மீதுள்ள பெரிய கலசம் 120 கிலோ எடையும், 6 அடி உயரமும் கொண்டது. இது தவிர சிறிய அளவிலான 8 கலசங்களும் உள்ளது. இவை ஒவ்வொன்றும் தலா 90 கிலோ எடையும், 4 அடி உயரமும் கொண்டதாகும்.

    - மர்யம்.சா

    • பள்ளி கொண்ட பெருமாள் அனந்த சயனத்தில், 30 அடி நீளத்தில் திருமேனியுடன் சேவை அளிக்கிறார்.
    • புதுக்கோட்டையிலிருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் இந்த கோவில் அமைந்துள்ளது.

    புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் உள்ள சத்தியமூர்த்தி பெருமாள் கோவில், 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும். பெருமாள் கோவில்கள் பலவற்றில் மூலவர் நின்ற கோலத்திலோ அல்லது சயன கோலத்திலோ காணப்படுவது உண்டு. ஆனால் இந்த ஆலயத்தில் நின்ற கோலத்திலும், அனந்த சயனத்திலும் பெருமாள் எழுந்தருளி காட்சி அளிப்பது தனிச்சிறப்பாகும்.

    தல வரலாறு

    முற்காலத்தில் திருமயம் மூங்கில் காடாக இருந்துள்ளது. பூலோகத்தை அசுரர்கள் ஆக்கிரமித்த போது, ரிஷிகள் எல்லாம் பயந்து மலைகள், குகைகளில் மறைந்து கொண்டனர். இதனால் உலகத்தில் யாகம் முதலான நல்ல காரியங்கள் நடைபெறவில்லை. தேவர்கள் கலக்கம் அடைந்தனர். சத்திய தேவதையும், தர்ம தேவதையும் வறுமையால் மிகுந்த துன்பமுற்றன. அந்த நேரத்தில் தர்ம தேவதை, காளையின் உருவம் கொண்டு அழகர் கோவிலை அடைந்து சித்திபெற்றது.

    சத்திய தேவதையோ மானாக மாறி, மூங்கில் காடான திருமயத்தை அடைந்தது. இங்குள்ள அழகிய மெய்யனை, சத்தியமூர்த்தியை வணங்கி வழிபட்டது. மேலும் உலகில் சத்தியம் நிலைக்க வேண்டும். வாய்மை வெல்ல வேண்டும் என்ற உயர்ந்த குறிக்கோளுடன், இங்குள்ள சத்திய தீர்த்தக்கரையில் தவம் செய்து சித்தி அடைந்தது.

    ஆலய அமைப்பு

    இந்தக் கோவிலின் உள்ளே நுழைந்து, கொடிமரத்தை தாண்டி செல்லும் போது, பள்ளி கொண்ட திருமெய்யன் சன்னிதியை காணலாம். அதற்கு அடுத்ததாக சத்தியமூர்த்தி பெருமாள் நின்ற கோலத்தில் காணப்படும் சன்னிதி உள்ளது. இதில் பள்ளி கொண்ட பெருமாள் சன்னிதி கருவறை, மலையை குடைந்து அமைக்கப்பட்டுள்ளது. பள்ளி கொண்ட நிலையில் பெருமாள் சேவை அளிக்கும் கருவறையில், வைகுண்டத்தை காட்சிப்படுத்தும் வகையில் சிலைகள் செதுக்கப்பட்டுள்ளன. 5 தலைகளை உடைய ஆதிசேஷன் மீது அனந்த சயனத்தில் இருக்கிறார் பெருமாள். அவரது காலடியில் பூதேவி, இதய கமலத்தில் ஸ்ரீதேவி, இடமிருந்து வலமாக கருடன், எம தர்மராஜன், சித்திரகுப்தன், சந்திரன், சூரியன், ராகு, பிரம்மா, தேவர்கள், ரிஷிகள், வலது கடைக்கோடியில் அசுரர்கள் உள்ளனர். பள்ளி கொண்ட பெருமாள் அனந்த சயனத்தில், 30 அடி நீளத்தில் திருமேனியுடன் சேவை அளிக்கிறார்.

    கோவிலின் சத்திய புஷ்கரணி தீர்த்த குளம், தாமரை மலர் தோற்றத்தில் எண் கோண வடிவில் 8 படித்துறைகளுடன் அமைந்துள்ளது. இங்கு இந்திரன், அக்னி, எமன், நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானன் முதலான அஷ்டதிக்கு பாலகர்கள் வீற்றிருந்து அருள்பாலித்து வருகின்றனர். இந்த தீர்த்த குளத்தில் தண்ணீரை தொட்டாலோ அல்லது சத்திய தீர்த்தம் என வாயினால் சொன்னாலோ போதும் பாவங்கள் விலகிவிடும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. இந்த தீர்த்தகுளத்தில் தண்ணீர் எப்போதும் வற்றாத நிலையில் காணப்படும்.

    இந்தக் கோவிலில் வைகாசி விசாக திருவிழா, வைகுண்ட ஏகாதசி திருவிழா, ஆடிப்பூர திருவிழா, ஆவணி மாதத்தில் பவித்ர உற்சவம், சித்ரா பவுர்ணமி விழா ஆகியவை விமரிசையாக நடை பெறும்.

    திருமணம் மற்றும் குழந்தைப்பேறு வேண்டி வரும் பக்தர்கள் சத்தியமூா்த்தி பெருமாள் மற்றும் தாயாரை மனதால் வேண்டினால், அவர்கள் கேட்ட வரம் கிடைக்கும்.

    புதுக்கோட்டையிலிருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் இந்த கோவில் அமைந்துள்ளது.

    • நாகதோஷ பரிகாரத் தலங்களில் ஒன்றாக இந்த கோவில் விளங்குகிறது.
    • நாகராஜா கோவிலில் 2 கருவறைகள் உள்ளன.

    நாட்டின் தெற்கு எல்லையாக இருப்பது குமரி மாவட்டம். இந்த மாவட்டத்தின் தலைநகராக நாகர்கோவில் நகரம் அமைந்துள்ளது. இந்த நகருக்கு நாகர்கோவில் என்று பெயர் வரக்காரணம், நகரின் நடுவே அமைந்துள்ள நாகராஜா கோவில் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கோவிலின் நுழைவு வாயில்களில் ஒன்றான மகாமேரு மாளிகை தான் நாகர்கோவில் மாநகராட்சி சின்னமாக இருப்பது சிறப்புக்குரியது.

    பரிகாரத்தலம்

    நாகதோஷ பரிகாரத் தலங்களில் ஒன்றாக நாகராஜா கோவில் விளங்குகிறது. இக்கோவில் கிழக்கு திசையை நோக்கி அமைந்து இருந்தாலும், தெற்கு முகமாக உள்ள கோபுர வாசல் (மகாமேரு மாளிகை) வழியாகவே அதிகமான மக்கள் கோவிலுக்கு வந்து செல்கின்றனர். கிழக்கு வாசல் வழியாகவும் கோவிலுக்கு செல்லலாம். நாகராஜா கோவிலில் 2 கருவறைகள் உள்ளன. ஒரு கருவறையில் நாகராஜரும், மற்றொரு கருவறையில் அனந்த கிருஷ்ணரும் எழுந்தருளியுள்ளனர். நாகராஜர் கருவறையின் மேற்கூரை ஓலையால் வேயப்பட்டு உள்ளது. மூலவராக உள்ள நாகராஜா சுயம்புவாக உருவானதாக ஐதீகம். சுயம்பு வடிவில் உள்ள சுவாமிக்கு 5 தலைகளை கொண்ட ஐம்பொன் நாகர் கவசம் அணிவிக்கப்பட்டுள்ளது.

    அடுத்ததாக அனந்த கிருஷ்ணர் நின்ற கோலத்தில் தலைக்கு மேல் 5 தலை நாகத்துடன் காட்சி தருகிறார். அதில் நாகம், இடுப்பில் இருந்து தலைக்கு மேல் படமெடுத்தபடி நிற்கும். அனந்த கிருஷ்ணரின் இடது மற்றும் வலது புறங்களில் பத்மாவதி, அம்பிகாவதி நின்ற கோலத்தில் உள்ளனர். இவர்களின் தலைமேல் 3 தலை நாகம் உள்ளது. நாகராஜா கருவறைக்கும், அனந்த கிருஷ்ணர் கருவறைக்கும் இடையே சிறிய சன்னிதானத்தில் லிங்க வடிவில் சிவன் இருக்கிறார். எதிரே நந்தி சிலையும் உண்டு.

    குழந்தை பாக்கியம்

    கோவில் வளாகத்தில் அரச மரம் பரந்து விரிந்தபடி காணப்படுகிறது. இந்த மரத்தின் அடியில் விநாயகர் சன்னதி உள்ளது. மரத்தை சுற்றிலும் நாகர் சிலைகள் வரிசையாக அமைக்கப்பட்டு உள்ளன. நாகர் சிலைகளுக்கு பால் ஊற்றியும், மஞ்சள் வைத்தும் வழிபாடு செய்தால் தோஷங்கள் நீங்கும் என்பதும், குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பதும், திருமணத்தடை உள்ளவர்களுக்கு திருமணம் நடைபெறும் என்பதும் பக்தர்களின் நம்பிக்கை.நாகதோஷ பரிகாரத்துக்காக உப்பு, நல்லமிளகு, வெளியில் உள்ள நாகர் சிலைக்கும், மூலவரான நாகராஜருக்கு வெள்ளியால் ஆன முட்டைகள், நாகம், மனித உருவபொம்மை ஆகியவற்றை தோஷ பரிகாரமாக பக்தர்கள் செலுத்துகிறார்கள்.

    மன்னர் நோய் நீங்கியது

    இந்த கோவில் கட்டுமானம் தொடர்பாக சில தகவல்கள் கூறப்படுகின்றன. அதாவது இந்த கோவிலை முதலில் வைணவ கோவிலாக கட்ட தொடங்கியவர் பூதலவீர வீர உதயமார்த்தாண்டன் என்ற அரசர் ஆவார். இவர் 1516 முதல் 1585-ம் ஆண்டு வரை உள்ள காலகட்டத்தில் சோழகுல வல்லிபுரம் என்ற களக்காட்டை (திருநெல்வேலி மாவட்டம்) தலைநகராக கொண்டு வேணாட்டை ஆட்சி செய்து வந்தவர்.

    அவருக்கு தீர்க்க முடியாத சரும நோய் இருந்ததாம். இந்த நோயானது நாகதோஷத்தால் வந்தது என்று ஜோதிடர்கள் கூறியுள்ளனர். நாகர்கோவிலில் உள்ள நாகராஜா கோவிலில் வழிபாடு செய்தால் சரும நோய் தீரும் என்றும் ஜோதிடர்கள் கூறியுள்ளனர். இதையடுத்து அரசரும் நாகராஜா கோவிலுக்கு வந்து வழிபாடு செய்தார். அப்போது கோவிலின் தலவிருட்சமான ஓடவள்ளி செடியை தனது உடலில் தேய்த்து கொண்டு 41 மண்டலங்கள் கோவிலில் இருந்தார். அங்கு தங்கி இருந்த காலக்கட்டத்தில் கோவிலில் சில பகுதிகளை கட்டினார் என்று கூறப்படுகிறது. இந்த கோவிலின் புற்றுமண் முக்கிய பிரசாதமாகும். புற்று மண் எவ்வளவோ எடுத்தும் இன்னமும் குறையாமல் இருப்பது அதிசயமாகும். இந்த கோவிலில் உள்ள நாகலிங்கப்பூவை நாகராஜரின் உருவகமாக பக்தர்கள் கருதுகிறார்கள்.

    சன்னதிகள்

    இந்த கோவிலில் 8-க்கும் மேற்பட்ட பரிவார தெய்வங்கள் உள்ளன. தெற்கு வெளிப்பிரகாரத்தில் நாகமணி பூதத்தான் காவல் தெய்வமாக இருக்கிறார். வடக்கு வெளிபிரகாரத்தில் சாஸ்தா சன்னதி உள்ளது. இங்கு சாஸ்தா அமர்ந்த கோலத்தில் தலையில் கிரீடத்துடன் காட்சி தருகிறார். உள் பிரகாரத்தில் கன்னி மூல கணபதி உள்ளார். இதுதவிர கோவிலுக்கு வடபுறத்தில் சிறு, சிறு சன்னதிகளும் உள்ளன. இங்கு துர்க்கை அம்மன் சங்கு சக்கரத்தை கையில் ஏந்தியபடி நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். இந்த சன்னதி 1965-ம் ஆண்டு கட்டப்பட்டது. துர்க்கை அம்மன் அருகே உள்ள பாலமுருகன் சன்னதி 1979-ம் ஆண்டு நிறுவப்பட்டது. இதன் தெற்கு பகுதியில் குழல் ஊதியபடி கிருஷ்ணர் சிலை உள்ளது. இதுதவிர கோவிலின் மகா மண்டபம், உள் பிரகார மண்டபங்களில் சிற்ப வேலைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பொதுவாக கிருஷ்ணன் கோவில் கொடிமரத்தின் உச்சியில் கருடன் தான் காணப்படும். ஆனால் இந்த ஆலயத்தின் கொடி மர உச்சியில் பெருமாளின் அவதாரங்களில் ஒன்றான கூர்ம (ஆமை) அவதாரத்தை நினைவு கூறும் வகையில் ஆமை உருவம் வைக்கப்பட்டுள்ளது.

    நாகராஜா கோவிலில் தினமும் அதிகாலை 4 மணிக்கு நடை திறந்து நிர்மால்ய தரிசனம், 4.30 மணிக்கு அபிஷேகம், 5.30 மணிக்கு உஷபூஜை, காலை 10 மணிக்கு பால் அபிஷேகம், 11 மணிக்கு கலசாபிஷேகம், 11.30 மணிக்கு உச்ச பூஜை, அதைத்தொடர்ந்து ஸ்ரீபலி, 12 மணிக்கு நடை சாத்தப்படும். மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படும். 6 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, இரவு 7.30 மணிக்கு அர்த்தசாம பூஜை, 8 மணிக்கு ஸ்ரீபலி முடிந்து நடை அடைக்கப்படும்.

    பொதுவாக ஞாயிற்றுக்கிழமை இங்கு பக்தர்கள் அதிகமாக வருவார்கள். அதிலும் ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமை திருவிழா கூட்டமாக இருக்கும். குமரி மாவட்ட பக்தர்கள் மட்டுமின்றி, பிற மாவட்ட பக்தர்கள், கேரளா உள்ளிட்ட வெளிமாநில பக்தர்கள் அதிகமாக வருவார்கள். இதனால் பகலிலும், இரவிலும் நடை அடைக்க சில மணி நேரங்கள் தாமதமாகும். தினமும் நாகராஜருக்கு பூஜை செய்த பிறகு தான் அனந்தகிருஷ்ணருக்கும், சிவனுக்கும் பூஜைகள் நடக்கின்றன. அர்த்த சாம பூஜை மட்டும் அனந்த கிருஷ்ணருக்கு முதலில் நடக்கிறது. பூஜையானது கேரள பாரம்பரியப்படி தாந்திரீக ஆகமப்படி நடக்கிறது. சைவ, வைஷ்ணவ ஆராதனை நடைபெறும் கோவில் என்ற பெருமையும் இதற்கு உண்டு.

    நாகராஜா கோவிலில் தை மாதம் நடைபெறும் 10 நாள் திருவிழா, ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமை விழாக்கள், கார்த்திகை விழா, ஐப்பசி மாத ஆயில்ய நாட்களில் விசேஷ பூஜைகள், கந்தசஷ்டி விழா ஆகியவை முக்கிய விழாக்களாகும்.

    • மானாமதுரை பகுதியில் சிவாலயங்களில் சனிபிரதோஷவிழா நடந்தது.
    • 16 வகை அபிஷேகம் செய்யப்பட்டு நந்தி வாகனத்தில் எழுந்தருளி கோவிலில் வலம்வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வைகை ஆற்று கரையில் உள்ள ஆனந்தவல்லி சோமநாதர் கோவிலில் சனிபிரதோஷத்தை முன்னிட்டு 16 வகை அபிஷேகம் செய்யப்பட்டு நந்தி வாகனத்தில் எழுந்த ருளி கோவிலில் உள்ள பிரகாரத்தில் வலம்வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இரவு பள்ளியறை பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    மானாமதுரை-பரமக்குடி சாலையில் உள்ள குறிச்சி வழிவிடு பெரிய நாச்சி அம்மன் கோவிலில் உள்ள காசிவிஸ்வநாதர் திருலிங்க திருமேனிக்கு ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று கங்கை தீர்த்தத்தால் அபிஷேகம் செய்து வழிபட்டனர்.

    நாளை (திங்கட்கிழமை) காலை வருஷாபிஷேக மும் ஐப்பசி மாத அன்னாபிஷேகம் மற்றும் பவுர்ணமி பூஜையும் இங்கு நடைபெறுகிறது.

    இதேபோல் நாகலிங்கம் நகர் அருணாச்சலேஸ்வரர், இடைக்காட்டூர் மணிகண்டேஸ்வரர், வேம்பத்தூர் கைலாசநாதர், மேலெநெட்டூர் சொர்ண வாரிஸ்வர் கோவில்களிலும் சனிபிரதோஷம் பூஜைகள் நடைபெற்றது.

    • இந்த ஆலயத்திற்கு சாலை வழியாக செல்ல முடியாது.
    • சுமார் 500 மீட்டர் உயரத்தில் இருக்கிறது இந்த கோவில்.

    உத்தரகாண்ட் மாநிலம், கேதார்நாத் என்ற இடத்தில் அமைந்துள்ளது, 'கேதாரீஸ்வரர் திருக்கோவில்.' இந்த ஆலயத்திற்கு சாலை வழியாக செல்ல முடியாது. கவுரிகுண்ட் என்ற இடத்தில் இருந்து 14 கிலோமீட்டர் தூரத்திற்கு மலை மீது ஏறித்தான் செல்ல வேண்டும். இங்கிருந்தும் சுமார் 500 மீட்டர் உயரத்தில் இருக்கிறது, புகுர்ந்த் பைரவர் கோவில்.

    இந்த இடத்தில் சிவபெருமானின் 64 வடிவங்களில் முக்கியமானவராக கருதப்படும், பைரவர் வழிபடப்படுகிறார். மலை உச்சியில் உள்ள ஒரு பாறையில், பைரவர் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இந்த பைரவருக்கு மேற்கூரை கிடையாது. திறந்தவெளியில்தான் இவர் வீற்றிருக்கிறார்.

    கேதார்நாத் கோவிலுக்கு தெற்கே மலை உச்சியில் அமைந்துள்ள இந்தக் கோவிலை, கேதார்நாத் கோவிலில் இருந்து பார்க்க முடியும். அதே போல் மலை உச்சியில் இருந்து கேதார்நாத் ஆலயமும் அழகாகத் தெரியும். கேதார்நாத் கேதாரீஸ்வரர் கோவிலில் காலையில் நடை திறந்து வழிபாடு செய்யப்படுவதற்கு முன்பாகவே, மலை உச்சியில் உள்ள இந்த பைரவர் கோவிலுக்கு பூஜைகள் செய்யப்படுகின்றன. ஒருவர் கேதார்நாத் ஆலயத்திற்கு பயணம் சென்றால், அவர் புகுர்ந்த் மலை மீதுள்ள பைரவரை வழிபாடு செய்யாமல், அந்த பயணமும், தரிசனமும் முழுமை பெறாது என்கிறார்கள்.

    ×