என் மலர்
நீங்கள் தேடியது "Tenkasi"
- அதிகபட்சமாக தென்காசியில் 42 மில்லி மீட்டர், செங்கோட்டையில் 38 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது.
- தென்காசியில் அதிகாலை 4 மணிக்கு தொடங்கி சுமார் ஒரு மணி நேரம் கனமழை பெய்தது.
நெல்லை:
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நேற்று இரவு தொடங்கி பெரும்பாலான இடங்களில் இன்று அதிகாலை வரையிலும் கனமழை பெய்தது.
தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ள தென்காசி, செங்கோட்டை, ஆய்க்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இரவு முழுவதும் கனமழை பெய்தது. சில இடங்களில் அதிகாலை முதல் கனமழை பெய்தது. நள்ளிரவில் சில இடங்களில் பயங்கர இடி-மின்னலுடன் மழை பெய்தது.
அதிகபட்சமாக தென்காசியில் 42 மில்லி மீட்டர், செங்கோட்டையில் 38 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது. ஆய்குடியில் 23 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது . மழை காரணமாக குற்றாலத்தில் மிதமான அளவில் அனைத்து அருவியிலும் தண்ணீர் கொட்டி வருகிறது.
தென்காசியில் அதிகாலை 4 மணிக்கு தொடங்கி சுமார் ஒரு மணி நேரம் கனமழை பெய்தது. பாவூர்சத்திரம், ஆலங்குளம் சுற்றுவட்டார பகுதிகளில் நள்ளிரவு 2 மணி அளவில் சுமார் 1 மணி நேரம் கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. சுரண்டை சுற்றுவட்டார பகுதிகளில் சாரல் மழை பெய்தது.
அணைகளை பொறுத்தவரை குண்டாறு மற்றும் அடவிநயினார் அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்தது. இன்று காலை நிலவரப்படி அதிகபட்சமாக குண்டாறு அணையில் 26.20 மில்லி மீட்டரும், அடவிநயினார் அணை பகுதியில் 11 மில்லி மீட்டரும் மழை பெய்தது. ராமநதி மற்றும் கடனாநதி அணைகளின் நீர் பிடிப்பு பகுதிகளில் தலா 8 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.
நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரை நேற்று மானூர் சுற்றுவட்டார பகுதிகளில் இரவு முதல் விட்டு விட்டு மழை பெய்தது. நெல்லை மாநகரப பகுதியிலும் இரவில் மழை பெய்த நிலையில் இன்றும் அதிகாலையில் பெரும்பாலான இடங்களில் பரவலாக மழை பெய்தது.
மாநகரில் பாளையங்கோட்டையில் 7.20 மில்லி மீட்டரும், நெல்லையில் 6.40 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது. மாவட்டத்தில் அம்பை, கண்ணடியன் கால்வாய் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் பலத்த மழை பெய்தது. இன்றும் அதிகாலையில் சாரல் மழை பெய்தது. அணைகளை பொறுத்தவரை பாபநாசம் அணையில் லேசான சாரல் மழை பெய்த நிலையில் சேர்வலாறு அணை பகுதியில் கனமழை கொட்டி தீர்த்தது. அங்கு அதிகபட்சமாக 23 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. அணையின் நீர்வரத்து 214 கன அடியாக இருந்து வருகிறது. அணை நீர்மட்டம் உயர்வில் பெரிய அளவில் மாற்றம் எதுவும் இல்லை.
தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி, கயத்தாறு, கடம்பூர், விளாத்திகுளம் அருகே உள்ள சூரங்குடி பகுதிகளில் சிறிது நேரம் மழை பெய்தது.
- சுமார் 1500 ஆண்டுகள் பழமையான கோவில்.
- முருகன் பாதமும், அருகில் சிவலிங்கமும் உள்ளது.
தென்காசி மாவட்டத்தில் சிவகிரி என்னும் ஊரில் உள்ள மலை மீது அமைந்திருக்கிறது, பாலசுப்ரமணிய சுவாமி திருக்கோவில். சுமார் 1500 ஆண்டுகள் பழமையான இந்தக் கோவிலின் மூலவராக 'பால சுப்பிரமணியர்' உள்ளார். உற்சவரின் திருநாமம், முத்துக்குமாரர் என்பதாகும். இவ்வாலய தீர்த்தமாக சரவணப் பொய்கை உள்ளது.
சூரபத்மனை அழித்த பிறகு தெய்வானையை மணப்பதற்காக, முருகப்பெருமான் திருப்பரங்குன்றம் புறப்பட்டார். அப்போது முருகனை தரிசனம் செய்ய வேண்டி அகத்திய முனிவர் இந்த மலையில் தவம் செய்து கொண்டிருந்தார்.
அவருக்கு தரிசனம் அளித்த முருகப்பெருமான், அகத்தியரின் விருப்பப் படியே இந்த மலை மீதும் வாசம் செய்தார். பின்னாளில் இம்மலை மீது ஆலயம் எழுப்பப்பட்டது. இங்கு பாலகராக முருகப்பெருமான் காட்சியளிக்கிறார்.
எனவே இவர் 'பாலசுப்பிரமணியர்' என்று பெயர் பெற்றார். அகத்தியருக்கு முருகன் காட்சி தந்த இடத்தில் பாத மண்டபம் இருக்கிறது. இங்கு முருகன் பாதமும், அருகில் சிவலிங்கமும் உள்ளது.
பாதகமான கிரக அம்சங்களை எதிர்கொள்பவர்கள், பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள் நிவாரணத்திற்காக இங்கு வழிபாடு செய்கிறார்கள். பக்தர்கள் முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம் செய்கின்றனர்.
பிரச்சினைகளை எதிர்கொள்பவர்கள், அந்த பிரச்சினைக்கு காரணமான கிரகத்திற்கு உரிய நாளில் இங்குள்ள முருகனை வழிபட்டு சென்றால், நல்ல பலன் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

இங்கு முருகப்பெருமான் தனது ஜடாமுடியையே, கிரீடம் போல சுருட்டி வைத்த கோலத்தில் காட்சி தருகிறார். இது முருகப்பெருமானின் அரிய வடிவம் ஆகும்.
கிரகப் பிரச்சினை உள்ளவர்கள், ராசி சின்னங்களுடன் ஒரு உலோகத் துண்டை (தகடு), முருகப்பெருமானின் பாதத்தில் வைக்கிறார்கள். இதன்மூலம் பக்தர்களின் கிரக சம்பந்தமான பிரச்சனைகள் அகலும் என்பது ஐதீகம்.
மலைகள் மற்றும் நீர் வளங்களால் சூழப்பட்ட இயற்கை எழில் மிகுந்ததாக, இந்த மலைக் கோவில் திகழ்கிறது. பாலசுப்பிரமணியர் கோவில் அமைந்துள்ள குன்று 'சக்தி மலை' என்று அழைக்கப்படுகிறது. இடதுபுறம் சிவன் மலை உள்ளது.
சிவனுக்கும், சக்திக்கும் இடையில் சோமாஸ்கந்த வடிவத்தில் இங்குள்ள முருகன் காட்சி தருகிறார். முருகன் சன்னிதியின் வலதுபுறம் சுந்தரேஸ்வரரும், இடதுபுறம் அன்னை மீனாட்சியும் உள்ளனர்.
பங்குனி பிரம்மோற்சவத்தில் உற்சவரான முத்துக்குமாரர் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்படுகிறார். திருவிழாக் காலங்களில் மூன்று நாட்கள் மட்டுமே முருகப்பெருமானின் ஊர்வல தரிசனம் கிடைக்கும். மற்ற நாட்களில் கோவிலுக்குள் மட்டுமே தரிசனம் செய்ய முடியும்.
இவ்வாலயத்தில் தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, சண்டிகேஸ்வரி, பைரவர், நவக்கிரகங்கள், சனி பகவான், அஷ்டபுஜ துர்க்கை மற்றும் இடும்பன் ஆகியோருக்கும் சன்னிதிகள் உள்ளன. முருகப்பெருமானின் கருவறை கோஷ்டத்தில் பிரம்மா மற்றும் சண்டிகேஸ்வரரின் எதிரே லிங்கோத்பவருக்கு தனிச் சன்னிதி உள்ளது.
மலையின் நடுவில் காளி அன்னை சன்னிதி உள்ளது. காலையிலும், மாலையிலும் முதல் பூஜை இந்த காளியம்மனுக்குத்தான் செய்யப்படுகிறது. அதன் பிறகுதான் முருகப்பெருமானுக்கு வழிபாடு நடைபெறும்.
பவுர்ணமி தினங்களில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடக்கின்றன. இக்கோவிலில் உள்ள முருகப்பெருமான் நவக்கிரக முருகனாக போற்றப்படுகிறார். இங்கு உள்ள விநாயகருக்கு 'அனுக்ஞை விநாயகர்' என்று பெயர்.

பங்குனி பிரம்மோற்சவம், ஐப்பசியில் கந்த சஷ்டி, வைகாசி விசாகம், மாசி மகம் ஆகியவை இந்த கோவிலில் சிறப்பாகக் கொண்டாடப்படும் திருவிழாக்கள் ஆகும். திருச்செந்தூர் கோவிலில் செய்யப்படும் முறைப்படியே, இங்கு பூஜைகள் நடைபெறுகின்றன.
பொதுவாக கந்தசஷ்டி விழா 6 நாட்கள் நடைபெறும். ஆனால் இந்த ஆலயத்தில் 11 நாட்கள் பெருவிழாவாக கொண்டாடப்படுகிறது. 11-வது நாளில் முருகப்பெருமானுக்கு முடிசூட்டு விழா நடைபெறும்.
அப்போது அரியணையில் முருகனை அமரச் செய்து, தங்க கிரீடம் அணிவித்து, அரச அதிகாரத்தை குறிக்கும் செங்கோல் கொடுக்கப்படும். பின்னர் அரச அங்கியில் முருகன் வீதி உலா வருவார். இதனை 'பட்டினப் பிரவேசம்' என்று சொல்வார்கள்.
இந்த ஆலயம் தினமும் காலை 6.30 மணி முதல் 11.30 மணி வரையும், மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரையும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.
அமைவிடம்
மதுரையில் இருந்து குற்றாலம் செல்லும் வழித்தடத்தில் 108 கி.மீ. தொலைவில் சிவகிரி உள்ளது. ராஜபாளையத்தில் இருந்தும் தென்காசிக்கு பேருந்து வசதி உள்ளது. அந்த பேருந்துகள் சிவகிரி வழியாகத்தான் செல்லும். சிவகிரி பேருந்து நிலையத்தில் இருந்து 1 கி.மீ. தூரத்தில் கோவில் அமைந்துள்ளது.
- தென்காசி மாவட்ட ஊராட்சியின் சாதாரண குழுக் கூட்டம் நடைபெற்றது.
- மாநில நிதிக்குழு மானிய திட்டத்தின்கீழ் ரூ.1,04,07,520-க்கும் திட்டப்பணிகள் தேர்வு செய்யப்பட்டு 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
தென்காசி:
தென்காசி மாவட்ட ஊராட்சியின் சாதாரண குழுக் கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. தென்காசி மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் தமிழ்செல்வி தலைமை தாங்கினார். கூட்டத்திற்கு மாவட்ட ஊராட்சி செயலர் ருக்மணி முன்னிலை வகித்தார். 15-வது மத்திய நிதிக் குழு மானியத் திட்டத்தின்கீழ் ரூ.2,03,37,000-க்கும், மாநில நிதிக்குழு மானிய திட்டத்தின்கீழ் ரூ.1,04,07,520-க்கும் திட்டப்பணிகள் தேர்வு செய்யப்பட்டு 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் உதயகிருஷ்ணன் உட்பட மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் அனைத்து வட்டாரங்களிலிருந்தும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் உதவிப்பொறியாளர்கள் கலந்து கொண்டனர்.
- தென்காசி தெற்கு மாவட்டத்தில் நிறைவேற்றப்பட வேண்டிய திட்டப்பணிகள் குறித்த கோரிக்கை மனுவினை மாவட்ட கலெக்டர் ஆகாஷிடம் வழங்கினர்.
- கருப்பாநதி கால்வாய் தூர்வாறுதல், ஆர். நவநீதகிருஷ்ணபுரம் தீவு அலுவலகம் அமைத்தல் போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்கள் வழங்கப்பட்டது.
தென்காசி:
தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன், தென்காசி பழனி நாடார் எம்.எல்.ஏ. மற்றும் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் கவுன்சிலர்கள், யூனியன் சேர்மன் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளுடன் இணைந்து தென்காசி தெற்கு மாவட்டத்தில் நிறைவேற்றப்பட வேண்டிய திட்டப்பணிகள் குறித்த கோரிக்கை மனுவினை மாவட்ட கலெக்டர் ஆகாஷிடம் வழங்கினர்.
அதில் கருப்பாநதி கால்வாய் தூர்வாறுதல், ஆர். நவநீதகிருஷ்ணபுரம் தீவு அலுவலகம் அமைத்தல், கீழக்கலங்கல் ஊராட்சிக்கு கூடுதல் குடிநீர் வழங்குதல், பொது பயன்பாட்டிற்கு நீர் பிடிப்பு பகுதியை வழங்குதல், ஊத்துமலை ஊராட்சியில் புதிய தண்ணீர் தொட்டி வழங்குதல், ஆலங்குளம் தென்காசி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் 16 ஊர்களுக்கு பகுதி நேர ரேஷன் கடை வழங்குதல், வ.உ.சிதம்பரனார் அவர்களுக்கு திருஉருவச் சிலை எழுப்புதல், குற்றாலம் செண்பகா தேவி அருவிக்கு மேல் அணை கட்டுவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை மாவட்ட கலெக்டரிடம் வழங்கினர்.
அப்போது மாவட்ட பஞ்சாயத்து தலைவி தமிழ்ச்செல்வி, ஆலங்குளம் யூனியன் சேர்மன் திவ்யா, தென்காசி தி.மு.க. ஒன்றிய செயலாளர் அழகு சுந்தரம், ஒன்றிய கவுன்சிலர் வீராணம் ஷேக், அரசு ஒப்பந்ததாரர் சண்முகவேல், தொழிலதிபர் மணிகண்டன் மற்றும் ஆலங்குளம் யூனியனுக்கு உட்பட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் என பலர் உடன் இருந்தனர்.
- மேல் படிப்பு, தொழில்நுட்ப படிப்பு பயிலும் மாணவிகளுக்கு மாதம்தோறும் ரூ.1,000 வழங்கும் புதுமைப்பெண் திட்டம் தொடங்கப்பட்டது.
- அரசு பள்ளிகளில் பயின்ற மாணவிகள் மட்டுமே இத்திட்டத்திற்கு தகுதியானவர்கள்.
தென்காசி:
தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாஷ் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
முதல்- அமைச்சரால் கடந்த மாதம் 5-ந் தேதி அரசு பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படித்து மேல் படிப்பு, தொழில்நுட்ப படிப்பு பயிலும் மாணவிகளுக்கு மாதம்தோறும் ரூ.1,000 வழங்கும் புதுமைப்பெண் திட்டம் தொடங்கப்பட்டது.
இதுவரை 2,3 மற்றும் 4-ம் ஆண்டில் பயிலும் 1.13 லட்சம் மாணவிகள் இத்திட்டத்தில் உதவித்தொகையை பெற்று பயனடைந்துள்ளார்கள். தற்பொழுது கீழே கொடுக்கப்பட்டுள்ள (https://www.pudhumaipenn.tn.gov.in) என்கிற வலைதளத்தில் முதலாம் ஆண்டு பயிலும் மாணவிகளும் விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.
இந்த வலைதளத்தில் மாணவிகள் அனைவரும் சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் வாயிலாக நவம்பர் 1-ந் தேதி முதல் 11-ந் தேதி வரை பதிவு செய்யலாம்,
அரசு பள்ளிகளில் பயின்ற மாணவிகள் மட்டுமே இத்திட்டத்திற்கு தகுதியானவர்கள். மாணவிகள் தங்கள் கல்வி நிறுவனங்கள் மூலமாக மட்டுமே விண்ணப்பம் செய்ய வேண்டும் நேரடியாக விண்ணப்பிக்க கூடாது எனவும்் கூறப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் முறை மற்றும் தகுதி வரம்பு குறித்து அனைத்து மாணவிகளுக்கும் கல்வி பயிலும் நிறுவனங்களில் நவம்பர் 11-ந் தேதி வரை சிறப்பு முகாம்கள் நடைபெறும். மாணவிகள் தவறாமல் அவர்களுடைய ஆதார் அட்டை மற்றும் மாற்றுச் சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும் தற்போது 2,3 மற்றும் 4-ம் ஆண்டுகளில் படிக்கும் மாணவிகள் முதற் கட்டத்தில் விண்ணப்பிக்க தவறியவர்கள் தற்போது விண்ணப்பிக்கலாம்.
மேலும் விண்ணப்பம் பூர்த்தி செய்யும் முறையில் மாணவிகளுக்கு சந்தேகங்கள் ஏதும் இருப்பின் சமூக நல இயக்குனராக அலுவலகத்தில் மாநில அளவில் செயல்படும் உதவி மையத்தினை திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10 மணி முதல் 5 மணி வரை தொடர்பு கொள்ளலாம்.
மேலும் mraheas@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம். மேல்படிப்பு, தொழில்நுட்ப படிப்புகளில் முதலாம் ஆண்டு பயிலும் திட்டத்தின் கீழ் தகுதி வாய்ந்த மாணவிகள் அனைவரும் விண்ணப்ப முறையினை சரியாக தெரிந்து கொண்டு கடைசி தேதிக்கு முன்பாக தவறாமல் விண்ணப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் பிங்க் அக்டோபர் மார்பகப் புற்றுநோய் கருத்தரங்கு நடைபெற்றது
- அறுவை சிகிச்சை மருத்துவர்கள் மார்பகப் புற்றுநோய் பற்றிய சிறப்பு பயிற்சி வகுப்பு நடத்தினர்.
தென்காசி:
தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் பிங்க் அக்டோபர் மார்பகப் புற்றுநோய் கருத்தரங்கு நடைபெற்றது.
கருத்தரங்கு காலை 9 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெற்றது. அரசு மருத்துவமனை மருத்துவர்கள், ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள், இந்திய மருத்துவ சங்கம் மருத்துவர்கள் என சுமார் 103 மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.
தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை அறுவை சிகிச்சை பிரிவின் மூத்த மருத்துவர் சுவர்ணலதா அனைவரையும் வரவேற்றார். மருத்துவர்கள் மார்பகப் புற்றுநோய் பற்றி விளக்கிக் கூறினார்கள். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக தென்காசி மாவட்ட இணை இயக்குனர் நலப்பணிகள் மருத்துவர் பிரேமலதா கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
கருத்தரங்கில் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி புற்றுநோய் அறுவை சிகிச்சை பிரிவின் உதவி பேராசிரியர் அனிதா காந்தி, தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி புற்றுநோய் பொது பிரிவு உதவி பேராசிரியர் காந்திமதி பத்மநாபன், தென்காசி அறுவை சிகிச்சை மருத்துவர்கள் ஜெரின் இவாஞ்சலின், விஜயகுமார், முத்துக்குமாரசாமி, கார்த்திக் ஆகியோர் மார்பகப் புற்றுநோய் பற்றிய சிறப்பு பயிற்சி வகுப்பு நடத்தினர்.
கருத்தரங்கில் மருத்துவமனை கண்காணிப்பாளரும் அரசு டாக்டர்கள் சங்க மாவட்ட தலைவரும், மாநில செயலாளருமான மருத்துவர் ஜெஸ்லின் அனைத்து பேச்சாளர்களையும் கலந்துகொண்ட அரசு டாக்டர்கள் சங்க உறுப்பினர்களையும் வாழ்த்திப் பேசினார்.
கருத்தரங்க நிகழ்ச்சிகளை மருத்துவர் மல்லிகா மற்றும் பயிற்சி மருத்துவர் பிரியதர்ஷினி இருவரும் இணைந்து தொகுத்து வழங்கினர். உறைவிட மருத்துவர், குழந்தைகள் நல சிறப்பு மருத்துவ நிபுணர் மருத்துவர் ராஜேஷ் நன்றி கூறினார்.
கலந்து கொண்ட மருத்துவர்கள் அனைவருக்கும் 2 மணித்துளி மதிப்பெண்களும், பேச்சாளர்களுக்கு 3 மணித்துளி மதிப்பெண்களும் தமிழ்நாடு மருத்துவக் கழகத்தின் மூலம் வழங்கப்பட்டது.
- அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் 11-ன் கீழ் ஊராட்சிகளில் தேர்வு செய்யப்பட்டுள்ள பணிகளின் முன்னேற்ற விவரம் உள்ளிட்ட பல்வேறு அறிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது
- நவம்பர் 1-ந்தேதி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் பல்வேறு துறைகளில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்த கண்காட்சியும் நடைபெற உள்ளது.
தென்காசி:
தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு நவம்பர் 1-ந்தேதி காலை 11 மணியளவில் கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது.
இக்கிராமசபை கூட்டத்தில் முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்தல், கிராம சபை ஊராட்சியில் சிறப்பாக பணிபுரிந்த ஊழியர்களை சிறப்பித்தல், கிராம ஊராட்சியில் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் மகளிர் சுய உதவி குழுக்களை கவுரவித்தல், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் 2022-23-ம் ஆண்டு அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் 11-ன் கீழ் ஊராட்சிகளில் தேர்வு செய்யப்பட்டுள்ள பணிகளின் முன்னேற்ற விவரம்,கலைஞர் வீடு வழங்கும் திட்ட கணக்கெடுப்பு, ஜல் ஜீவன் இயக்கம், மக்கள் திட்டமிடல் இயக்கம், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், இணைய வரி, வீட்டு வரி-சொத்து வரி செலுத்துதல்,
மகளிர் சுய உதவி குழுக்கள் உருவாக்குதல், 2021-22 மற்றும் 2022 -23 ஆகிய ஆண்டுகளில் செயல்படுத்தப்படும் பண்ணை மற்றும் பண்ணை சாரா திட்ட இனங்களில் மேற்கொள்ளப்பட்ட நிதி செலவின் அறிக்கை, பயனாளிகள் விவரம் மற்றும் நிதி பயன்பாடு குறித்த அறிக்கை,மக்கள் நிலை ஆய்வு பட்டியல், விடுபட்ட புதிய இலக்கு, மக்கள் குடும்பங்களை சேர்த்தல் மற்றும் இதர பொருட்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.
மேலும் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு நவம்பர் 1-ந்தேதி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் பல்வேறு துறைகளில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்த கண்காட்சியும் நடைபெற உள்ளது.
கிராம ஊராட்சிகளில் நடைபெறும் கிராம சபை கூட்டங்களிலும், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் கண்காட்சியிலும் அனைத்து பொது மக்களும் கலந்து கொண்டு பயனடையுமாறு மாவட்ட கலெக்டர் ஆகாஷ் கேட்டுக் கொண்டுள்ளார்.
- கருவந்தா ஊராட்சி சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் டி.டி.டி.ஏ. பள்ளியில் நடைபெற்றது.
- கண் சிகிச்சை முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
தென்காசி:
வீரகேரளம் புதூர் அருகே உள்ள கருவந்தா ஊராட்சியில் நெல்லை தனியார் மருத்துவமனையுடன் இணைந்து கருவந்தா ஊராட்சி சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் டி.டி.டி.ஏ. பள்ளியில் நடைபெற்றது. முகாமிற்கு கருவந்தா ஊராட்சி மன்ற தலைவர் தானியேல் தலைமை தாங்கினார். ஊத்துமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்தார்.
100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு இலவச கண் சிகிச்சை முகாம் மூலம் பயனடைந்தனர். முகாம் ஏற்பாடுகளை யேசுராஜா, யேசுதாசன் மற்றும் சவுந்தர் , முகாம் ஒருங்கினப்பாளர் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் கருவந்தா ஊராட்சி உடன் இணைந்து செய்து இருந்தனர்.
- முன்னாள் போலீஸ் உயர் அதிகாரி வால்டர் தேவாரம் கலந்து விருதினை வழங்கினார்.
- பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்க தலைவர் இளங்கோவிற்கு விருது வழங்கப்பட்டது.
தென்காசி:
கடையம் அருகே உள்ள வெங்கடாம்பட்டி கிராமத்தில் இயங்கி வரும் "டிரஸ்ட்" குழந்தைகள் இல்ல நிறுவனர் திருமாறன் நடத்திய விழாவில் முன்னாள் போலீஸ் உயர் அதிகாரி வால்டர் தேவாரம் கலந்து கொண்டு சிறந்த கண் தான சேவைக்கான விருதினை பாவூர்சத்திரம் கண் தான விழிப்புணர்வு குழு நிறுவனரும், பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்கத்தின் தலைவரும், அரிமா 324-எ மாவட்டத்தினுடைய கண்தான ஒருங்கிணைப்பாளர் இளங்கோவிற்கு வழங்கினார்.
விழாவில் பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்க பொருளாளர் பரமசிவம், உறுப்பினர் லட்சுமி சேகர், ரத்ததான மாவட்ட தலைவர் ஆசிரியர் திருமலை கொழுந்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் .
- 3 நபர்களுக்கு மாற்றுத் திறனாளிகள் நலத்துறையின் மூலம் ரூ. 8 ஆயிரம் மதிப்பிலான காதொலி கருவிகளை கலெக்டர் ஆகாஷ் வழங்கினார்.
- அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தர கோருதல், பட்டா மாறுதல் மற்றும் இதர மனுக்கள் என மொத்தம் 365 மனுக்கள் பெறப்பட்டது.
தென்காசி:
தென்காசி மாவட்ட கலெக்டர் கூட்டரங்கில் நடை பெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் ஆகாஷ் கலந்துகொண்டு பொது மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.
கூட்டத்தில் தென்காசி வட்டம் சிவசைலம் கிராமத்தில் இயங்கி வரும் காது கேளாதோருக்கான சிறப்பு பள்ளியில் பயின்று வரும் காது கேளாத மாற்றுத்திறனாளிகள் 3 நபர்களுக்கு மாற்றுத் திறனாளிகள் நலத்துறையின் மூலம் உதவி உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் தலா ரூ. 8 ஆயிரம் மதிப்பிலான காதொலி கருவிகளை கலெக்டர் ஆகாஷ் வழங்கினார்.
மேலும் கூட்டத்தில் இலவச வீட்டு மனை பட்டா, முதியோர் உதவித்தொகை, அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தர கோருதல், பட்டா மாறுதல், மாற்றுத் திறனாளிகள் உதவித் தொகை மற்றும் இதர மனுக்கள் என மொத்தம் 365 மனுக்கள் பெறப்பட்டது.
இந்த கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் தகுதி வாய்ந்த மனுக்களாக உள்ளதா என்பதை விசாரணை செய்து விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு மனுதாரர்களுக்கு உரிய பதில் அளிக்குமாறு சம்பந்தப்பட்ட துறை அலு வலர்களுக்கும் கலெக்டர் அறிவுறுத்தினார்.
கூட்டத்தில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது ) முத்து மாதவன், மாவட்ட வழங்கல் அலுவலர் சுதா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜெயபிரகாஷ், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் கந்தசாமி, உதவி ஆணையர் (கலால்) ராஜ மனோகரன் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- ராபி பருவத்தில் பயிரிடப்படும் தோட்டக்கலைப்பயிர்களான வாழை, வெங்காயம், மிளகாய் சாகுபடி விவசாயிகள் பயிர் காப்பீடு செய்து பயன் பெறலாம்.
- ஒரு ஏக்கருக்கு செலுத்த வேண்டிய பிரிமியம் ரூ.1,185 மற்றும் காப்பீட்டுத் தொகை ரூ.23,700 வழங்கப்படும்.
தென்காசி:
தென்காசி மாவட்டத்தில் ராபி பருவத்தில் பயிரிடப்படும் தோட்டக்கலைப்பயிர் களான வாழை, வெங்காயம், மிளகாய் சாகுபடி விவசாயிகள் பயிர் காப்பீடு செய்து பயன் பெறலாம்.
மாவட்டத்தில் அரசால் அறிவிக்கப்பட்டுள்ள குறு வட்டங்களில் தோட்டக்கலை பயிர் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் எதிர்பாராத இயற்கைப் பேரிடரிலிருந்து பயிர்களைக் காக்க புதுப்பிக்கப்பட்ட பிரதமரின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், தொடக்க வேளாண் கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் பொது சேவை மையங்களில் காப்பீட்டு கட்டணத்தை செலுத்தி உரிய விண்ணப்பித்தல் ஆவணங்களுடன் பதிவு செய்து கொள்ளலாம் .
மிளகாய் பயிருக்கு காப்பீடு செய்ய 31-1-2023 கடைசி நாளாகும்.
ஒரு ஏக்கருக்கு செலுத்த வேண்டிய பிரிமியம் ரூ.1,185 மற்றும் காப்பீட்டுத் தொகை ரூ.23,700 வழங்கப்படும். வாழை ஏக்கருக்கு ரூ.3,582 பிரிமியம் செலுத்த வேண்டும் மற்றும் காப்பீட்டுத் தொகை ரூ.71,650. காப்பீடு செய்ய கடைசி நாள் 31.1.2023. வெங்காயம் ஏக்கருக்கு ரூ.1,125. பிரிமியம் செலுத்த வேண்டும். காப்பீட்டுத் தொகை ரூ.22,500. காப்பீடு செய்ய கடைசி நாள் 31.1.2023.
மேலும் விபரங்களுக்கு தோட்டக்கலை துணை இயக்குநர் அலுவலகம் அல்லது உரிய வட்டாரங்களில் உள்ள வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகங்களை அணுகலாம் என கலெக்டர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
- முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் ஸாருகலா தலைமை தாங்கினார்.
- மாணவர்கள் தூய்மை பணி உள்பட பல்வேறு பணிகளை மேற்கொண்டனர்.
கடையம்:
வெங்கடாம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட மாதாபட்டணம் ச.ச.வி. மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மாணவர்களின் நாட்டு நலப்பணித்திட்ட முகாம் நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் ஸாருகலா ரவி தலைமை தாங்கினார்.
ஊராட்சி மன்ற துணைத்தலைவர் சித்ரா பாபு, பள்ளி நிர்வாக அதிகாரி அருள் அந்தோணி மிக்கேல், தலைமையாசிரியை அமிர்த சிபியா ஆகியோர் முன்னிலை வகித்தனர். திட்ட அலுவலர் பீட்டர் ராஜ் வரவேற்று பேசினார். தொழிலதிபர் ரவி, ஒன்றிய கவுன்சிலர் சங்கர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். முகாமில் மாணவர்கள் தூய்மை பணி உள்பட பல்வேறு பணிகளை மேற்கொண்டனர். முகாமானது தொடர்ந்து 7 நாட்கள் நடைபெற இருக்கின்றது. முடிவில் உதவி திட்ட அலுவலர் செபஸ்டியன் நன்றி கூறினார். இதில் ஊராட்சி செயலர் பாரத், பள்ளி மாணவ- மாணவிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.