என் மலர்
நீங்கள் தேடியது "Tenkasi"
- கருவந்தா ஊராட்சி சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் டி.டி.டி.ஏ. பள்ளியில் நடைபெற்றது.
- கண் சிகிச்சை முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
தென்காசி:
வீரகேரளம் புதூர் அருகே உள்ள கருவந்தா ஊராட்சியில் நெல்லை தனியார் மருத்துவமனையுடன் இணைந்து கருவந்தா ஊராட்சி சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் டி.டி.டி.ஏ. பள்ளியில் நடைபெற்றது. முகாமிற்கு கருவந்தா ஊராட்சி மன்ற தலைவர் தானியேல் தலைமை தாங்கினார். ஊத்துமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்தார்.
100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு இலவச கண் சிகிச்சை முகாம் மூலம் பயனடைந்தனர். முகாம் ஏற்பாடுகளை யேசுராஜா, யேசுதாசன் மற்றும் சவுந்தர் , முகாம் ஒருங்கினப்பாளர் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் கருவந்தா ஊராட்சி உடன் இணைந்து செய்து இருந்தனர்.
- முன்னாள் போலீஸ் உயர் அதிகாரி வால்டர் தேவாரம் கலந்து விருதினை வழங்கினார்.
- பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்க தலைவர் இளங்கோவிற்கு விருது வழங்கப்பட்டது.
தென்காசி:
கடையம் அருகே உள்ள வெங்கடாம்பட்டி கிராமத்தில் இயங்கி வரும் "டிரஸ்ட்" குழந்தைகள் இல்ல நிறுவனர் திருமாறன் நடத்திய விழாவில் முன்னாள் போலீஸ் உயர் அதிகாரி வால்டர் தேவாரம் கலந்து கொண்டு சிறந்த கண் தான சேவைக்கான விருதினை பாவூர்சத்திரம் கண் தான விழிப்புணர்வு குழு நிறுவனரும், பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்கத்தின் தலைவரும், அரிமா 324-எ மாவட்டத்தினுடைய கண்தான ஒருங்கிணைப்பாளர் இளங்கோவிற்கு வழங்கினார்.
விழாவில் பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்க பொருளாளர் பரமசிவம், உறுப்பினர் லட்சுமி சேகர், ரத்ததான மாவட்ட தலைவர் ஆசிரியர் திருமலை கொழுந்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் .
- 3 நபர்களுக்கு மாற்றுத் திறனாளிகள் நலத்துறையின் மூலம் ரூ. 8 ஆயிரம் மதிப்பிலான காதொலி கருவிகளை கலெக்டர் ஆகாஷ் வழங்கினார்.
- அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தர கோருதல், பட்டா மாறுதல் மற்றும் இதர மனுக்கள் என மொத்தம் 365 மனுக்கள் பெறப்பட்டது.
தென்காசி:
தென்காசி மாவட்ட கலெக்டர் கூட்டரங்கில் நடை பெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் ஆகாஷ் கலந்துகொண்டு பொது மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.
கூட்டத்தில் தென்காசி வட்டம் சிவசைலம் கிராமத்தில் இயங்கி வரும் காது கேளாதோருக்கான சிறப்பு பள்ளியில் பயின்று வரும் காது கேளாத மாற்றுத்திறனாளிகள் 3 நபர்களுக்கு மாற்றுத் திறனாளிகள் நலத்துறையின் மூலம் உதவி உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் தலா ரூ. 8 ஆயிரம் மதிப்பிலான காதொலி கருவிகளை கலெக்டர் ஆகாஷ் வழங்கினார்.
மேலும் கூட்டத்தில் இலவச வீட்டு மனை பட்டா, முதியோர் உதவித்தொகை, அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தர கோருதல், பட்டா மாறுதல், மாற்றுத் திறனாளிகள் உதவித் தொகை மற்றும் இதர மனுக்கள் என மொத்தம் 365 மனுக்கள் பெறப்பட்டது.
இந்த கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் தகுதி வாய்ந்த மனுக்களாக உள்ளதா என்பதை விசாரணை செய்து விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு மனுதாரர்களுக்கு உரிய பதில் அளிக்குமாறு சம்பந்தப்பட்ட துறை அலு வலர்களுக்கும் கலெக்டர் அறிவுறுத்தினார்.
கூட்டத்தில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது ) முத்து மாதவன், மாவட்ட வழங்கல் அலுவலர் சுதா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜெயபிரகாஷ், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் கந்தசாமி, உதவி ஆணையர் (கலால்) ராஜ மனோகரன் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- ராபி பருவத்தில் பயிரிடப்படும் தோட்டக்கலைப்பயிர்களான வாழை, வெங்காயம், மிளகாய் சாகுபடி விவசாயிகள் பயிர் காப்பீடு செய்து பயன் பெறலாம்.
- ஒரு ஏக்கருக்கு செலுத்த வேண்டிய பிரிமியம் ரூ.1,185 மற்றும் காப்பீட்டுத் தொகை ரூ.23,700 வழங்கப்படும்.
தென்காசி:
தென்காசி மாவட்டத்தில் ராபி பருவத்தில் பயிரிடப்படும் தோட்டக்கலைப்பயிர் களான வாழை, வெங்காயம், மிளகாய் சாகுபடி விவசாயிகள் பயிர் காப்பீடு செய்து பயன் பெறலாம்.
மாவட்டத்தில் அரசால் அறிவிக்கப்பட்டுள்ள குறு வட்டங்களில் தோட்டக்கலை பயிர் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் எதிர்பாராத இயற்கைப் பேரிடரிலிருந்து பயிர்களைக் காக்க புதுப்பிக்கப்பட்ட பிரதமரின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், தொடக்க வேளாண் கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் பொது சேவை மையங்களில் காப்பீட்டு கட்டணத்தை செலுத்தி உரிய விண்ணப்பித்தல் ஆவணங்களுடன் பதிவு செய்து கொள்ளலாம் .
மிளகாய் பயிருக்கு காப்பீடு செய்ய 31-1-2023 கடைசி நாளாகும்.
ஒரு ஏக்கருக்கு செலுத்த வேண்டிய பிரிமியம் ரூ.1,185 மற்றும் காப்பீட்டுத் தொகை ரூ.23,700 வழங்கப்படும். வாழை ஏக்கருக்கு ரூ.3,582 பிரிமியம் செலுத்த வேண்டும் மற்றும் காப்பீட்டுத் தொகை ரூ.71,650. காப்பீடு செய்ய கடைசி நாள் 31.1.2023. வெங்காயம் ஏக்கருக்கு ரூ.1,125. பிரிமியம் செலுத்த வேண்டும். காப்பீட்டுத் தொகை ரூ.22,500. காப்பீடு செய்ய கடைசி நாள் 31.1.2023.
மேலும் விபரங்களுக்கு தோட்டக்கலை துணை இயக்குநர் அலுவலகம் அல்லது உரிய வட்டாரங்களில் உள்ள வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகங்களை அணுகலாம் என கலெக்டர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
- முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் ஸாருகலா தலைமை தாங்கினார்.
- மாணவர்கள் தூய்மை பணி உள்பட பல்வேறு பணிகளை மேற்கொண்டனர்.
கடையம்:
வெங்கடாம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட மாதாபட்டணம் ச.ச.வி. மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மாணவர்களின் நாட்டு நலப்பணித்திட்ட முகாம் நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் ஸாருகலா ரவி தலைமை தாங்கினார்.
ஊராட்சி மன்ற துணைத்தலைவர் சித்ரா பாபு, பள்ளி நிர்வாக அதிகாரி அருள் அந்தோணி மிக்கேல், தலைமையாசிரியை அமிர்த சிபியா ஆகியோர் முன்னிலை வகித்தனர். திட்ட அலுவலர் பீட்டர் ராஜ் வரவேற்று பேசினார். தொழிலதிபர் ரவி, ஒன்றிய கவுன்சிலர் சங்கர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். முகாமில் மாணவர்கள் தூய்மை பணி உள்பட பல்வேறு பணிகளை மேற்கொண்டனர். முகாமானது தொடர்ந்து 7 நாட்கள் நடைபெற இருக்கின்றது. முடிவில் உதவி திட்ட அலுவலர் செபஸ்டியன் நன்றி கூறினார். இதில் ஊராட்சி செயலர் பாரத், பள்ளி மாணவ- மாணவிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
- எர்ணாகுளத்தில் இருந்து தென்காசிக்கு இரவு 8.15 மணிக்கு வந்து மறுநாள் அதிகாலை 5.45 மணிக்கு வேளாங்கண்ணி சென்று சேரும்.
- வேளாங்கண்ணியில் இருந்து புறப்பட்டு தென்காசிக்கு திங்கள் கிழமை அதிகாலை வந்து சேரும்
தென்காசி:
தென்காசி வழியாக எர்ணாகுளம் - வேளாங்கண்ணி ரெயில் நிலையங்களுக்கிடையே இயக்கப்பட்டு வரும் வாராந்திர சிறப்பு ரெயிலின் சேவை நவம்பர் மாதம் வரை இயங்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது இந்த ரெயிலின் சேவை டிசம்பர் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
அதன்படி எர்ணாகுளம் - வேளாங்கண்ணி வாராந்திர சிறப்பு கட்டண ரெயில் (06035) எர்ணாகுளத்தில் இருந்து நவம்பர் 19-ந்தேதி முதல் டிசம்பர் 31-ந்தேதி வரை சனிக்கிழமைகளில் மதியம் 12.35 மணிக்கு புறப்பட்டு தென்காசிக்கு இரவு 8.15 மணிக்கு வந்து மறுநாள் அதிகாலை 5.45 மணிக்கு வேளாங்கண்ணி சென்று சேரும்.
மறு மார்க்கத்தில் வேளாங்கண்ணி - எர்ணாகுளம் வாராந்திர சிறப்பு ரெயில் (06036) வேளாங்கண்ணியில் இருந்து நவம்பர் 20-ந்தேதி முதல் ஜனவரி 1-ந்தேதி வரை ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 6.35 மணிக்கு புறப்பட்டு தென்காசிக்கு திங்கள் கிழமை அதிகாலை 3.50 மணிக்கு வந்து மதியம் 12.00 மணிக்கு எர்ணாகுளம் சென்றடையும் .
இந்த ரெயில்கள் கோட்டயம், செங்கனாச்சேரி, திருவல்லா, செங்கனூர், மாவேலிக்கரா, காயங்குளம், கருநாகப்பள்ளி, சாஸ்தான்கோட்டா, கொல்லம், குண்டரா, கொட்டாரக்கரா, அவனீஸ்வரம், புனலூர், தென்மலை, செங்கோட்டை, தென்காசி, கடையநல்லூர், சங்கரன்கோவில், ராஜபாளையம், சிவகாசி, விருதுநகர், அருப்புக்கோட்டை, மானாமதுரை, காரைக்குடி, அறந்தாங்கி, பேராவூரணி, பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், திருத்துறைப்பூண்டி, திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த நீட்டிக்கப்பட்ட சிறப்பு ரெயிலுக்கான முன்பதிவு தொடங்கிவிட்டது.
ஜூன் 4-ந்தேதி முதல் ஆகஸ்ட் 6-ந்தேதி வரை இந்த எர்ணாகுளம் வேளாங்கண்ணி வாராந்திர சிறப்பு ரெயில் அறிவிக்கப்பட்டு பின் ஆகஸ்ட் 13-ந்தேதி முதல் நவம்பர் 12-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டு இயக்கப்பட்டது. தற்போது ஜனவரி 01 வரை இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது பயணிகள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து பயணிகள் கூறுகையில், தென்காசி யிலிருந்து கிழக்கு டெல்டா மாவட்ட பகுதிகளான திருவாரூர், நாகை, வேளாங்கண்ணி உள்ளிட்ட ஆன்மீக தலங்களுக்கு செல்வதற்கு இந்த சிறப்பு ரெயில் மிகவும் உதவிகரமாக உள்ளது.
அதேபோல் திங்கள் கிழமை அதிகாலை கொல்லம், கோட்டயம், எர்ணாகுளம் போன்ற பகுதிகளுக்கும் செல்வதற்கு இந்த ரெயில் திங்கள் கிழமை மதியம் 12 மணிக்கு எர்ணாகுளத்தை சென்றடைந்த பின் சனிக்கிழமை மதியம் 12.35 வரை காலியாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எனவே காலியாக நிறுத்தி வைக்கப்படும் இந்த ரெயில் பெட்டிகளை கொண்டு எர்ணாகுளம் - வேளாங்கண்ணி வாரம் இருமுறை ரெயிலாக இயக்க வேண்டும் என அவர்கள் கூறினர்.
கடந்த 2 ஆண்டுகளாக ரெயில்வே கால அட்டவணை சந்திப்பின்போது இந்த எர்ணாகுளம் வேளாங்கண்ணி வாரம் இரு முறை இயங்கும் வகையில் முன்மொழியப்பட்டு ரெயில்வே வாரிய ஒப்புதலுக்காக காத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
- தென்காசியில் 30 அம்ச வாழ்வாதாரக் கோரிக்கையை வலியுறுத்தி மாலை நேர தர்ணா போராட்டம் நடைபெற்றது.
- மாவட்டச்செயலாளர் மாரிமுத்து கோரிக்கைகள் குறித்து விளக்கிப் பேசினார்.
தென்காசி:
தென்காசி மாவட்ட தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் 30 அம்ச வாழ்வாதாரக் கோரிக்கையை வலியுறுத்தி மாநிலம் தழுவிய மாலை நேர தர்ணா போராட்டம் தென்காசி மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பு நடைபெற்றது. தர்ணாவிற்கு மாவட்டத் தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார்.
மாவட்டச்செயலாளர் மாரிமுத்து வரவேற்புரை யாற்றி கோரிக்கைகள் குறித்தும் விளக்கிப் பேசினார். அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் துரைசிங், தமிழ்நாடு மேல் நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநில துணைத்தலைவர் சதீஷ்குமார்,தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின் சட்ட செயலாளர் பிச்சைக்கனி மற்றும் கல்வி மாவட்ட பொறுப்பாளர்கள் சிவகுமார், ராஜ்குமார் ,மாணிக்கம் சுதர்சன், மாநில செயற்குழு உறுப்பினர் லட்சுமி,மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் துரை ராஜ், மாடசாமி, மாவட்ட துணைப் பொறுப்பாளர்கள் ராஜன்ஜான் செல்வராஜ், கிருஷ்ணன், ஜேம்ஸ் ஆரோக்கியராஜ். ஜாஹிரா ஆகியோர் சிறப்புரை யாற்றினர். தர்ணா உரையை கன்னியாகுமரி மாவட்ட மாநில செயற்குழு உறுப்பினர் நாகராஜன் விளக்கி பேசினார்.மாவட்ட பொருளாளர் மணிமேகலை நன்றி கூறினார்.இதில் மாநில செயற்குழு, பொதுக்குழு , மாவட்ட துணைப் பொறுப்பாளர்கள் , வட்டார பொறுப்பாளர்கள் உள்பட 350 பேர் கலந்து கொண்டனர்.
- தென்காசி மாவட்டத்தில் பிசானம் பருவ நெல் மற்றும் ராபி பருவ பயிர்கள் சாகுபடி பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.
- பயிர் பருவங்களுக்கு ஏற்ப தொடர்ந்து போதிய உரங்கள் விவசாயிகளுக்கு கிடைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தென்காசி:
தென்காசி கலெக்டர் ஆகாஷ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தென்காசி மாவட்டத்தில் பிசானம் பருவ நெல் மற்றும் ராபி பருவ பயிர்கள் சாகுபடி பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர். மொத்தம் 29 ஆயிரம் ஹெக்டேர் நெல், 16,085 ஹெக்டேர் சிறுதானியங்கள், 34,700 ஹெக்டேர் பயிர் வகை,3400 ஹெக்டர் பருத்தி, 1000 ஹெக்டேர் கரும்பு, 1960 ஹெக்டேர் எண்ணெய் வித்து பயிர்கள் மற்றும் பல்வேறு தோட்டக்கலை பயிர்கள் சாகுபடி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கு தேவையான உரங்கள் அனைத்தும் சரியான நேரத்தில் போதிய அளவில் தொடர்ந்து கிடைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்பொழுது தென்காசி மாவட்டத்தில் மொத்தம் 192 மெட்ரிக் டன் யூரியா, 1234 மெட்ரிக் டன் டி ஏ பி, 478 மெட்ரிக் டன் பொட்டாஷ், 3905 மெட்ரிக் டன் காம்ப்ளக்ஸ், 323 மெட்ரிக் டன் சூப்பர் பாஸ்பேட் உரங்கள் இருப்பு உள்ளன. இதில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் 315 மெட்ரிக் டன் யூரியாவும்,372 மெட்ரிக் டன் டிஏபி யும்,170 மெட்ரிக் டன் பொட்டாஷ் உரமும், 70 மெட்ரிக் டன் சூப்பர் பாஸ்பேட் உரமும், 767 மெட்ரிக் டன் காம்ப்ளக்ஸ் உரங்களும் இருப்பு உள்ளன.பயிர் பருவங்களுக்கு ஏற்ப தொடர்ந்து போதிய உரங்கள் விவசாயிகளுக்கு கிடைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
உர விற்பனையாளர்கள் அனைவரும் விவசாயிகளின் தேவைக்கு போதிய உரங்களை அதிகபட்ச சில்லறை விலைக்கு மிகாமல் விற்பனை செய்ய வேண்டும். உரங்கள் பதுக்கள் செய்யக்கூடாது, விவசாயம் அல்லாத தேவைகளுக்கு உரங்கள் விற்பனை செய்யக்கூடாது.
உரம் வாங்கும் விவசாயிகளின் ஆதார் எண் பெற்று விற்பனை முனைய கருவியில் பில் போட்டு மட்டுமே மானியத்தில் வரும் உரங்களை விற்பனை செய்ய வேண்டும் அனைத்து உர விற்பனையாளர்களும் தினமும் அன்றைய தினத்தின் ஆரம்ப இருப்பு மற்றும் விற்பனை விலை ஆகியவற்றை கடைக்கு வரும் அனைவருக்கும் தெரியும் படியாக தகவல் பலகையில் எழுதி வைத்திருக்க வேண்டும். உரங்கள் வாங்கும் விவசாயிகளிடம் வேறு பொருட்களை கட்டாயப்படுத்தி வாங்க செய்யக்கூடாது. மீறினால் விற்பனையாளர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கப்படுகிறது.
உரங்கள் இருப்பு விற்பனை மற்றும் விதி மீறல்கள் தொடர்பான புகார் ஏதும் இருப்பின் தென்காசி மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் அலுவலக தொலைபேசி எண் 04633-295430ஐ அலுவலக வேலை நேரங்களில் தொடர்பு கொள்ளலாம் எனவும் வேளாண்மை துறை அலுவலர்களை எப்போது வேண்டுமானாலும் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
- ஆழ்வார்குறிச்சி அருகே 3 பேரை கரடி ஒன்று கடித்து குதறியது.
- மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சிவபத்மநாதன் சந்தித்து நலம் விசாரித்தார்.
தென்காசி:
ஆழ்வார்குறிச்சி அருகே உள்ள பெத்தான் பிள்ளை குடியிருப்பு பகுதியில் நேற்று அதிகாலை அதே பகுதியை சேர்ந்த நாகேந்திரன், சைலப்பன் மற்றும் கருத்தலிங்கபுரம் வைகுண்ட மணி ஆகிய 3 பேரை கரடி ஒன்று கடித்து குதறியது. இதில் படுகாயம் அடைந்து நெல்லை அரசு மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன் நேரில் சந்தித்து நலம் விசாரித்து மருத்துவ உதவி தொகை வழங்கினார்.
அவர்களுக்கு தலா ரூ.15 ஆயிரம் என மொத்தம் ரூ.45 ஆயிரம் மருத்துவ உதவி தொகையாக வழங்கினார். காயம் அடைந்தவர்களுக்கு அரசு சார்பில் விரைவில் நிவாரண தொகை பெற்றுத் தரப்படும் எனவும் சிவபத்மநாதன் பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினருக்கு உறுதி அளித்தார். முன்னதாக அவர் துறை சார்ந்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளிடமும் பேசினார். உயர் சிகிச்சை தேவைப்படும் பட்சத்தில் அதற்கான முழு உதவியும் பெற்று தரப்படும் என அவர் கூறினார். அப்போது நாகேந்திரன் மகன் சங்கரநாராயணன், சைலப்பன் மகன்கள் பாஸ்கர் , மணிகண்டன், வைகுண்ட மணி மகள் அம்பலம் , மாரியப்பன், பொன் மோகன், மாயாண்டி மருத்துவர்கள், செவிலியர்கள் உடன் இருந்தனர்.
- 4 சதவீத அகவிலைப்படி முடக்கப்பட்ட சரண்டர் 21 மாத ஊதிய நிலுவையை உடனே வழங்க வேண்டும்
- புதிய மருத்துவ காப்பீடு திட்டத்தில் உள்ள குளறுபடிகளை களைந்து உரிய காப்பீடு தொகையை வழங்கிட வேண்டும்
தென்காசி:
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தென்காசி கலெக்டர் அலு வலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் 4 சதவீத அகவிலைப் படி முடக்கப்பட்ட சரண்டர் 21 மாத ஊதிய நிலுவையை உடனே வழங்க வேண்டும்,சி.பி.எஸ். ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்துதல்,சத்துணவு, அங்கன்வாடி,வருவாய் கிராம உதவியாளர்கள், எம்.ஆர்.பி. செவிலியர்கள், ஊர்ப்புற நூலகர்கள் உள்ளிட்ட தொகுப்பூதியம், சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் ஊழியர்களை நிரந்தரபடுத்தி காலமுறை ஊதியம் வழங்கவேண்டும்.
மற்றும் சாலைப்பணியாளர்களின் 41 மாத பணிநீக்க காலத்தை பணிக்கால மாக மாற்றுவது, தமிழக அரசின் காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு ஊழியர்கள் மூலமாக செயல்படுத்திட வேண்டும், அரசாணை 152-ஐ ரத்து செய்திடவும், புதிய மருத்துவ காப்பீடு திட்டத்தில் உள்ள குளறுபடிகளை களைந்து உரிய காப்பீடு தொகையை வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து கோஷம் எழுப்பப்பட்டது.இதில் அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் துரைசிங் உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
- தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற 11-ந் தேதி காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற உள்ளது.
- முகாமில் 8-ம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு முடித்தவர்கள் கலந்து கொண்டு பயனடையலாம்.
தென்காசி:
தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-
மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் சார்பாக தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற 11-ந் தேதி ( வெள்ளிக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வைத்து நடைபெற உள்ளது.
இதில் பல்வேறு தனியார் துறை முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான பணியாளர்களை தேர்வு செய்ய உள்ளனர். முகாமில் 8-ம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு முடித்தவர்களும், ஐ.டி.ஐ., டிப்ளமோ ஆகிய தொழிற்கல்வித் தகுதியுடைய தென்காசி மாவட்டத்தைச் சார்ந்த வேலை தேடுபவர்கள் கலந்து கொண்டு பயனடையலாம்.
முகாமில் கலந்து கொள்ள விரும்பும் தனியார் துறை நிறுவனங்கள் தென்காசி மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்திற்கு நேரிலோ அல்லது deotksjobfair@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி மூலமாகவோ மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலரை தொடர்பு கொள்ளலாம். மேலும் தனியார் வேலை வாய்ப்பு முகாம் மூலம் பணி நியமனம் பெற்றவர்களது வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு எவ்விதத்திலும் பாதிக்கப்படாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- செங்கோட்டை தெற்கு மேடு கிராமம் ஆர்.சி. சர்ச் தெருவை சேர்ந்த ராஜ்குமார் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வருகிறார்
- மாணவியின் பெற்றோர் தென்காசி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர்.
தென்காசி:
செங்கோட்டை அருகே உள்ள தெற்கு மேடு கிராமம் ஆர்.சி. சர்ச் தெருவை சேர்ந்தவர் பிச்சையா. இவரது மகன் ராஜ்குமார் (வயது 28). இவர் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வருகிறார்.
இவர் 7-ம் வகுப்பு மாணவி ஒருவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதுகுறித்து அந்த மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். அவரது பெற்றோர் தென்காசி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் வேல்கனி(பொறுப்பு) ராஜ்குமார் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.