என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Thai new moon"
- தர்ப்பணம் கொடுக்க ஏராளமானோர் திரண்டதால் முதலைப்பண்ணை பகுதியில் கூட்டம் அலை மோதியது.
- சுற்றுலா பயணிகள் காவிரி ஆற்றில் ஆழமான பகுதிக்கு சென்றுவிடமால் இருக்க போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
ஒகேனக்கல்:
தை அமாவாசை நாளில் காவிரியில் புனித நீராடி முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்தால் குடும்பத்தில் வளம் செழிக்கும் என்பது ஐதீகம். வருடத்தின் ஆடி, புரட்டாசி, தை மாதங்களில் வரும் முக்கிய அமாவாசை நாட்களில் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் ஏராளமானோர் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது வழக்கம்.
இதைத்தொடர்ந்து தை அமாவாசையான இன்று ஒகேனக்கல்லில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். முதலைப் பண்ணை பகுதியில் காவிரி கரையில் ஏராளமான பொதுமக்கள் வாழை இலை, பச்சரிசி, தேங்காய், பழம், காய்கறி, மளிகை பொருட்கள் உள்ளிட்ட வற்றை வைத்து பூஜைகள் செய்து முன்னோர்களை நினைத்து வழிபட்டனர்.
பூஜை செய்த பொருட்களை காவிரி ஆற்றில் விட்டனர். பின்னர் அவர்கள் காவிரி ஆற்றில் புனித நீராடி அங்குள்ள காவிரி அம்மனை வழிபட்டனர்.
இதில் தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், வேலூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்தவர்கள், ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களை சேர்ந்தவர்கள் என ஏராளமானவர்கள் ஒகேனக்கல்லுக்கு வந்து தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். ஒகேனக்கல்லில் இன்று தர்ப்பணம் கொடுக்க ஏராளமானோர் திரண்டதால் முதலைப்பண்ணை பகுதியில் கூட்டம் அலை மோதியது.
இதனால் அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் இருக்க போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். மேலும், சுற்றுலா பயணிகள் காவிரி ஆற்றில் ஆழமான பகுதிக்கு சென்றுவிடமால் இருக்க போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் கர்நாடகா அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டதால் காவிரி ஆற்றில் நீர்வரத்து தொடர்ந்து இன்றும் வினாடிக்கு 300 கனஅடியாக நீடித்து வருகிறது. இதன் காரணமாக மெயினருவி, சினிபால்ஸ் ஆகிய அருவிகளில் தண்ணீர் குறைந்த அளவே கொட்டுகிறது.
இருந்தபோதிலும் சுற்றுலா பயணிகள் அருவியிலும், காவிரி ஆற்றில் தேங்கிய உள்ள நீரிலும் குளித்து மகிழ்ந்தனர்.
ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் குவிந்ததால், பஸ் நிலையம், கடைவீதி ஆகிய பகுதிகளில் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டன.
- அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது.
- விஸ்வரூப தீபாராதனையும், உதய மார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றது.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் தை மாத அமாவாசையை முன்னிட்டு இன்று அதிகாலை 4 மணிக்கு கோவில் நடைதிறக்கப்பட்டது. தொடர்ந்து 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றது. இதனையடுத்து 8.30 மணிக்கு தீர்த்தவாரி நடைபெற்றது.
தை, ஆடி அமாவாசை தினங்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டால் வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும் என்று ஆண்டு முழுவதும் தங்கள் முன்னோர்களின் ஆசி கிடைக்கும் என்பது நம்பிக்கையாக இருந்து வருகிறது.
அந்த வகையில் தை அமாவாசையான இன்று சென்னை, கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஏராளமான பொதுமக்கள் அதிகாலை முதலே கடலில் புனித நீராடி கடற்கரையில் அமர்ந்து தங்கள் முன்னோர்களுக்கு எள், அன்னம், தர்ப்பபுள், பிண்டம் வைத்து வேத மந்திரங்கள் ஓதி தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்தனர். அதனைத்தொடர்ந்து கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர்.
- பவானி கூடுதுறை தென்னகத்தின் காசி என்று அழைக்கப்படுகிறது.
- பவானி கூடு துறையில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடினர்.
பவானி:
தை அமாவாசையை முன்னிட்டு பவானி கூடு துறையில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடி குடும்பத்தில் இறந்த முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம், எள்ளும் தண்ணியும் விடுதல், பிண்டம் விடுதல் போன்ற பரிகாரங்கள் செய்து வழிபாடு மேற்கொண்டனர்.
பவானி நகரில் பிரசித்தி பெற்ற கோவிலாக சங்கமேஸ்வரர் கோவில் விளங்கிவருகிறது. இந்த கோவில் பின்பகுதியில் இரட்டை விநாயகர் சன்னதி படித்துறை பகுதியில் காவிரி, பவானி, கண்ணுக்கு புலப்படாத அமுதநதி என 3 நதிகள் சங்கமிக்கிறது.
இதனால் கூடுதுறை தென்னகத்தின் காசி என்றும் சிறந்த பரிகார தலமாகவும் இருந்து வருகிறது. மேலும் சுற்றுலா தலமாகவும் உள்ளது. இதனால் கூடுதுறைக்கு தினமும் பொதுமக்கள் வந்து செல்கிறார்கள். மேலும் பவுர்ணமி, அமாவாசை மற்றும் விசேஷ நாட்களில் வழக்கத்தை விட பக்தர்கள் அதிகளவில் வருவார்கள்.
இதே போல் ஈரோடு மாவட்ட பக்தர்கள் மட்டுமின்றி வெளியூர் மற்றும் வெளி மாநில பக்தர்கள் ஏராளமானோர் வந்து தங்கள் முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் எள்ளும் தண்ணியும் விடுவார்கள். மேலும் திருமண தடை தோஷம், செவ்வாய் தோஷம் உள்பட பல்வேறு பரிகார பூஜைகள் செய்து வழிபாடு மேற்கொண்டு செல்வது வழக்கம்.
இந்த நிலையில் தை அமாவாசையை யொட்டி இன்று ஈரோடு, திருப்பூர், நாமக்கல், கோவை மற்றும் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் அதிகாலையிலேயே கூடுதுறையில் குவிந்தனர். தொடர்ந்து அவர்கள் கூடுதுறையில் புனித நீராடி தங்கள் முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்தனர்.
இதையொ ட்டி கூடுதுறையில் உள்ள 2 பரிகார மண்டபங்கள் மற்றும் தற்காலிக பரிகார மண்டபம் என பல்வேறு இடங்களில் பொதுமக்கள் முன்னோர்களுக்கு பல வகையான தர்ப்பணங்கள் கொடுத்தனர். மேலும் பக்தர்கள் பலர் ஆற்றில் புனித நீராடி சாமி தரிசனம் செய்தனர்.
இதையொட்டி பவானி போலீஸ் துணை சூப்பிரண்டு அமிர்தவர்ஷ்னி தலைமையில் பவானி, சித்தோடு, அந்தியர், அம்மாபேட்டை, பவானி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் என 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் நகரின் முக்கிய 50 இடங்களில் கேமராக்கள் பொருத்தப்பட்டு போலீசார் கண்காணித்து வருகின்றனர்.
ஈரோடு கருங்கல்பாளையம் காவிரிகரை பகுதியில் அதிகாலை முதலே பொது மக்கள் குவிந்து புனித நீராடி முன்னோர்களுக்கு தர்பணம் மற்றும் திதி கொடுத்தனர். இதனால் இப்பகுதியில் மக்கள் கூட்டம் அலைமோதியது. மேலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இதேபோல் கொடுமுடி காவிரி ஆற்றில் இன்று காலை முதலே ஏராளமான பக்தர்கள் வந்து புனித நீராடினர். தொடர்ந்து பொதுமக்கள் பலர் திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்தனர். அதேபோல் திருமணமாகாத பெண்கள் மற்றும் ஆண்களும் ஏராளமானோர் வந்து புனித நீராடி பரிகாரம் செய்தனர்.
தொடர்ந்து பக்தர்கள் பலர் மகுடேஸ்வரர் மற்றும் வீர நாராயண பெருமாளை வழிபட்டு சென்றனர். இதேபோல் மாவட்டத்தில் உள்ள கோவில்களிலும் பக்தர்கள் காலை முதலே பலர் வந்து சாமி தரிசனம் செய்தனர்.
சத்தியமங்கலம் அருகே உள்ள பண்ணாரியம்மன் கோவிலில் இன்று அதிகாலை அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
இதையொட்டி ஈரோடு மாவட்ட பக்தர்கள் மட்டுமின்றி மாநிலத்தின் பல பகுதி களில் இருந்தும் பக்தர்கள் பலர் வந்து சாமி தரிசனம் செய்தனர். மேலும் கர்நாடகா மற்றும் கேரளா மாநில பக்தர்கள் பலரும் கோவிலுக்கு வந்து அம்மனை வழிபட்டனர். இதனால் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது.
மேலும் கோபி சாரதா மாரியம்மன், பாரியூர் கொண்டத்து காளியம்மன், அந்தியூர் பத்திரகாளியம்மன், சென்னிமலை முருகன் கோவில் உள்பட மாவட்ட த்தின் அனைத்து பகுதிகளில் உள்ள கோவில்களில் இன்று காலை முதல் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்தனர்.
- முன்னோர்களை நினைத்து பலிகர்ம பூஜை செய்து தர்ப்பணம்.
- திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடலில் புனித நீராடினார்கள்.
கன்னியாகுமரி:
இந்துக்களின்முக்கிய விசேஷ நாட்களில் தை அமாவாசையும் ஒன்று. இந்தநாளில் இந்துக்கள் அதிகாலையிலேயேஎழுந்து கடல், நதி, ஆறு போன்ற புண்ணிய தீர்த்தங்களில் புனித நீராடி தங்களது முன்னோர்களை நினைத்து பலிகர்ம பூஜை செய்து தர்ப்பணம் கொடுப்பது வழக்கம்.
புண்ணிய ஸ்தலமான கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் ஆண்டுதோறும் தை அமாவாசை அன்று ஏராளமான பக்தர்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பார்கள். அதே போல இந்த ஆண்டும் தை அமாவாசை நாளான இன்று அதிகாலை 4 மணியில் இருந்தே ஏராளமான பக்தர்கள் கன்னியா குமரியில் குவியத் தொடங்கினார்கள். அவர்கள் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடலில் புனித நீராடினார்கள்.
அதன் பிறகு ஈரத்துணியுடன் கரைக்கு வந்து கடற்கரையில் அமர்ந்து இருந்த புரோகிதர்கள் மற்றும் வேத மந்திரம் ஓதுவார்களிடம் தங்களது முன்னோர்களை நினைத்து பலி கர்ம பூஜை செய்தார்கள். அவ்வாறு பூஜை செய்த பச்சரிசி, எள்ளு, பூக்கள் மற்றும் தர்ப்பை புல் போன்றவற்றை ஒரு வாழை இலையில் வைத்து தலையில் சுமந்துகொண்டு சென்று கடலில் போட்டுவிட்டு மீண்டும் நீராடி தங்களது முன்னோர்களை நினைத்து தர்ப்பணம் செய்தார்கள்.
பின்னர் கடற்கரையில் உள்ள பரசுராமர் விநாயகர் கோவில், பகவதி அம்மன் கோவில் உள்ளிட்ட கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்கள்.
தை அமாவாசையை யொட்டி பகவதி அம்மன் கோவிலில் இன்று அதிகாலை 3.30 மணிக்கு கோவில் மூலஸ்தான நடை மட்டும் திறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனமும் நிர்மால்ய பூஜையும் நடந்தது. அதன்பிறகு அம்மனுக்கு பல வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது.
அதைத்தொடர்ந்து தீபாராதனையும் உஷ பூஜை, ஸ்ரீ பலி பூஜை, நிவேத்ய பூஜை உச்சிகால பூஜை உச்சிக்கால தீபாராதனை போன்ற அனைத்து பூஜைகளும் நடத்தி முடிக்கப்பட்டது.
அதன்பிறகு 4.30 மணிக்கு வடக்கு பிரதான நுழைவு வாசல் திறக்கப்பட்டு பக்தர்கள் கோவிலுக்குள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டார்கள். தை அமாவாசையை யொட்டி பக்தர்களின் தரிசனத்துக்காக கோவிலில் சிறப்பு வசதிகள் செய்யப்பட்டு இருந்தன. பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.
- ராமேஸ்வரம் இந்துக்களின் தீர்த்த மூர்த்தி ஸ்தலமாக விளங்கி வருகிறது.
- கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு திதி கொடுப்பது வழக்கம்.
ராமேசுவரம்:
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் ராமநாத சுவாமி கோவில் உள்ளது. இக்கோயில் இந்துக்களின் தீர்த்த மூர்த்தி ஸ்தலமாக விளங்கி வருகிறது. ஆடி அமாவாசை, தை அமாவாசை, மஹாளாய அமாவாசை நாட்களில் பல்லாயிரக்கான பக்தர்கள் வருகை தந்து அக்னி தீர்த்தக் கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு திதி கொடுப்பது வழக்கம்.
இந்நிலையில், இன்று தை அமாவாசையை முன்னிட்டு ராமநாதசுவாமி கோவில் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு காலை 5 மணி முதல் 5.30 வரை ஸ்படிகலிங்க பூஜையும், அதனை தொடர்ந்து சாயரட்சை பூஜை வரையிலான காலபூஜைகள் நடைபெற்றது.
காலை 10.25 மணிக்கு மேல் சுவாமி, அம்பாள் பஞ்சமூர்த்திகள் சகிதம் புறப்பாடாகி பகல் 12.10 மணிக்கு அக்னி தீர்த்த கடற்கரைக்கு எழுந்தருளினர். அங்கு தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து பகல் முழுவதிலும் கோவில் நடை திறந்திருந்தது.
மாலை 5.30 மணிக்கு மண்டகப்படியில் தீபாராதனை நடைபெற்று இரவு 7 மணிக்கு சுவாமி, அம்பாள் பஞ்சமூர்த்திகள் மற்றும் ஸ்ரீ ராமர் வெள்ளி ரத புறப்பாடு வீதி உலா நடைபெறுகிறது.
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் ராமேசுவரத்திற்கு நள்ளிரவில் இருந்து ஆயிரக்கனக்கான வாகனங்கள் மற்றும் அரசு பேருந்துக்களில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை தந்தனர். அதிகாலையில் அவர்கள் அக்னி தீர்த்தக் கடலில் புனித நீராடினர். தொடர்ந்து கடற்கரை உள்ளிட்ட பகுதிகளில் அமர்ந்து தம்மோடு வாழ்ந்து மறைந்த முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.
இதனைதொடர்ந்து, மீண்டும் அக்னி தீர்த்தக் கடலில் நீராடிவிட்டு, ராமநாதசுவாமி கோவிலில் உள்ள 22 தீர்த்த கிணறுகளில் நீண்ட வரிசையில் பல மணிநேரம் காத்திருந்து புனித நீராடி ராமநாத சுவாமி-பர்வதவர்த்தினி அம்பாளை தரிசனம் செய்தனர்.
தை அமாவாசையை முன்னிட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்திஷ் உத்தரவின் பேரில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் பொதுமக்கள் அதிகளவில் கானப்படும் அக்னி தீர்த்த கடல், கோவில் பகுதிகளை சுற்றிலும் சீருடை மற்றும் சீருடை இல்லாத போலீசார் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
மேலும் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக ஒலிப்பெருக்கி மூலம் அறிவுறுத்தினர். அதிகளவில் வாகனங்கள் வந்ததால் 100-க்கும் மேற்பட்ட போக்குவரத்து போலீசார் வாகனங்களை முறைப்படுத்தி அனுப்பும் பணியில் ஈடுபட்டனர்.
கோவில் நிர்வாகம் சார் பில் பக்தர்கள் சிரமமின்றி நீராடவும், நெரிசல் இன்றி தரிசனம் செய்திடவும் தடுப்புகள் மூலம் வழித்தடம் அமைத்து ஏற்பாடுகள் செய்திருந்தனர். நகராட்சி நிர்வாகம் சார்பில் 200-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் சுகாதார பணிகளை மேற்கொண்ட னர்.
கன்னியாகுமரியில் தை அமாவாசையையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். அவர்கள் முக்கடல் சங்கமிக்கும் சங்கிலித்துறை பகுதியில் கடலில் இறங்கி புனித நீராடினர். தொடர்ந்து முன்னோர்க ளுக்காக தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.
இதேபோல் தூத்துக்குடி மாவட்டம் ஏரல் தொடங்கி, நெல்லை மாவட்டம் பாபநாசம் வரையிலான 64 தீர்த்த கட்டிங்கள், தாமிரபரணி பாயும் கரையோர பகுதிள், காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவில் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமானோர் தை அமாவாசை தினத்தை யொட்டி புனித நீராடி, தங்களது முன்னோர் கள் நினைவாக தர்ப்பணம் கொடுத்து வழிபாடு நடத்தினர்.
திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம், அய்யாளம்மன் படித்துறை, கருட மண்டபத்தில் இன்று காலை திரண்ட பக்தர்கள் காவிரி ஆற்றில் புனித நீராடினர். பின்னர் அங்கு தனித்தனியாகவும், 100-க்கும் மேற்பட்டோர் ஒரே இடத்தில் அமர்ந்தும் முன்னோர்களுக்காக தர்ப்பணம் கொடுத்தனர். பின்னர் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர், சமயபுரம் மாரியம்மன் கோவில்களுக்கு சென்று வழிபட்டனர்.
மேலும் கரூர் மாவட்டத் தில் காவிரி கரையோர பகுதிகள், புதுக்கோட்டை சாந்தநாத சுவாமி கோவில், அறந்தாங்கியை அடுத்த கடற்கரை பகுதிகளில் திரளானோர் குவிந்து புனித நீராடினர்.
தஞ்சை மாவட்டம் திருவையாறு, நாகை மாவட்டம் வேதாரண்யம் கடற்கரை, சீர்காழியை அடுத்த பூம்புகார் கடற்கரை, மயிலாடு துறை மாவட்டம் காவிரி துலாக்கட்டம் ஆகிய இடங்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி, தங்களது முன்னோர்கள் நினைவாக தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.
ஈரோடு மாவட்டம் பவானி சங்கமேஸ்வரர் கோவில், கொடுமுடி மகுடேஸ்வரர் கோவில், கருங்கல்பாளையம் காவிரி கரையோர பகுதிகளில் அதிகாலை முதலே திரண்ட பொதுமக்கள் புனித நீராடி, முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.
மதுரையில் வைகை கரையோர பகுதிகள், சோழ வந்தான் அருகேயுள்ள திருவேடகத்தில் வைகை ஆற்றில் புனித நீராடிய பக்தர்கள் தங்களது முன்னோர்கள் நினைவாக தர்ப்பணம் கொடுத்து வழிபாடு நடத்தி, ஏடகநாதர் கோவிலில் மோட்ச தீபம் ஏற்றி சுவாமி தரிசனம் செய்தனர்.
இதேபோல் மதுரை இம் மையிலும் நன்மை தருவார் கோவில், விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மடவார் வளாகம் வைத்தியாத சுவாமி கோவில், திருமுக்குளம் உள்ளிட்ட பகுதிகளிலும் தை அமாவாசையை முன்னிட்டு திரளானோர் குவிந்து தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் நேற்று முன்தினம் முதல் 4 நாட்களுக்கு மலையேற பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
இன்று தை அமாவாசையை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதலே வனத்துறை யினரின் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு மலையேறி சென்று சுந்தரமகாலிங்கம் சுவாமியை வழிபட்டனர்.
- உலக பிரசித்தி பெற்ற புண்ணிய ஸ்தலம் ராமேசுவரம்.
- தீர்த்த கடற்கரையில் வைத்து திதி, தர்ப்பணம் கொடுப்பது ஜதீகமாக உள்ளது.
ராமேசுவரம்:
தென்னகத்து காசியாகவும், உலக பிரசித்தி பெற்ற புண்ணிய ஸ்தலமாகவும் விளங்கும் ராமேசுவரத்தில் அமைந்துள்ள ராமநாத சுவாமி கோவிலில் முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுத்து, கோவிலில் இருக்கும் 22 தீர்த்தங்களில் நீராடி சுவாமி தரிசனம் செய்ய தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தினந்தோறும் உள்ளூர், வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வருகின்றனர்.
இதில் ஆண்டுதோறும் வரக்கூடிய முக்கிய அமாவாசை நாட்களான தை, ஆடி, புரட்டாசி ஆகிய அமாவாசை நாட்களில் தங்களுடைய முன்னோர்களுக்கு ராமேசுவரம் அக்னி தீர்த்த கடற்கரையில் வைத்து திதி, தர்ப்பணம் கொடுப்பது ஜதீகமாக உள்ளது. அந்த வகையில் நாளை மறுநாள் (9-ந்தேதி, வெள்ளிக்கிழமை) தை அமாவாசை வருவதால் அந்நாளில் தங்களுடைய முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுத்து சுவாமி வழிபாடு செய்ய லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள்.
இதையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பணியானது கோவில் நிர்வாகம் சார்பில் முழுவீச்சில் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக கிழக்கு கோபுர வாசல் பகுதியில் பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி தவிக்காமல் இருக்க மூங்கில் கம்புகள் வைத்து வரிசைகள் அமைக்கப்பட்டு வருகிறது.
மேலும், கூட்டம் இருக்கும் என்பதால் நீண்டநேரம் வரிசையில் நின்று செல்வதற்கு வசதியாக தற்காலிக நிழற்குடை அமைக்கும் பணியானது தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த பணியானது கோவில் நான்கு ரத வீதிகளிலும் தை அமாவாசை வரையிலும் தற்காலிகமாக அமைக்கப்பட்டு வருகிறது..
தை அமாவாசையை முன்னிட்டு நாளை மறுநாள் அதிகாலையிலேயே கோவில் நடைதிறக்கப்படு கிறது. இதுகுறித்து கோவில் இணை ஆணையர் சிவராம் குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தை அமாவாசையை முன்னிட்டு ராமநாதசுவாமி கோவில் வெள்ளிக்கிழமை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டு காலை 5 மணி முதல் 5.30 வரை ஸ்படிக லிங்க பூஜையும், அதனை தொடர்ந்து சாயரட்சை பூஜை வரையிலான கால பூஜைகள் நடைபெறும். காலை 10.25 மணிக்கு மேல் சுவாமி, அம்பாள் பஞ்ச மூர்த்திகள் சகிதம் புறப்பாடாகி பகல் 12.10 மணிக்கு அக்னி தீர்த்த கரைக்கு எழுந் தருளி தீர்த்த வாரி உற்சவம் நடைபெறும்.
அதனைதொடர்ந்து பகல் முழுவதிலும் கோவில் நடை திறந்திருக்கும். மாலை 5.30 மணிக்கு மண்டகப்படியில் தீபாரதணை நடைபெற்று இரவு 7 மணிக்கு சுவாமி, அம்பாள் பஞ்சமூர்த்திகள் மற்றும் ஸ்ரீ ராமர் வெள்ளி ரத புறப்பாடு வீதி உலா நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோவில் குளக்கரையில் நடந்தது
- போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்
சோளிங்கர்:
பித்ரு தர்ப்பணம் செய்வதால் முன்னோர்கள் ஆத்மா சாந்தியடைந்து குடும்பத்திற்கு ஆசி வழங்குவதாகவும் குடும்பம் தழைக்கும், செல்வம் பெருகும், கடன் பிரச்சினை தீரும், திருமணத் தடை நீங்கும், குழந்தை பேறு கிடைக்கும், வம்சம் விருத்தியாகும் என்பது நம்பிக்கை.
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் கோவில் பிரம்ம தீர்த்தம் என்கின்ற தக்கான் குளக்கரையில் சோளிங்கர் மற்றும் சுற்றுப்பகுதியை சேர்ந்த 50 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தங்கள் முன்னோர்களுக்கு பித்ரு தர்ப்பணம் செய்தனர்.
இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டதால் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்