என் மலர்
நீங்கள் தேடியது "Thenkasi"
- சித்தரின் விக்கிரகமே பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
- நெல்லையப்பா.. தானா தளம்போய்ச் சேரப்பா.. என்று பாடினார்.
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே சுரண்டைக்குச் செல்லும் வழியில் உள்ளது, கீழப்பாவூர். இங்கு சிவலோக பண்டாரநாதர் என்ற சித்தர் கோவில் இருக்கிறது.
பொதுவாக சித்தர்கள் ஜீவ சமாதியான இடத்தில் சிவலிங்கம்தான் பிரதிஷ்டை செய்யப்படும். ஆனால் இங்கு, அந்த சித்தரின் விக்கிரகமே பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இதனால் இவ்வாலயம் தனித்துவம் பெற்று விளங்குகிறது.

திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் நடை பெறும் விழாக்களில் ஆனித் தேரோட்டம் மிகவும் முக்கியமானது. 500 ஆண்டுகளுக்கு மேலாகத் தொடர்ந்து பிரமாண்டமாக நடைபெற்றுவரும் இந்த தேரோட்டம், சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சன்னியாசியால் தடைபட்டுப் போனது.
அந்த நேரத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் தேரோட்டத்தைக் காண வந்திருந்தனர். அவர்களில் நெல்லை அருகே உள்ள மானூரைச் சேர்ந்த சிவலோக பண்டாரநாதர் என்ற சன்னியாசியும் ஒருவர்.
ஒல்லியான தேகம், நீண்ட தாடி, கையில் தவக்கோல், இடுப்பை மட்டுமே மறைக்கும் வஸ்திரம் என்று, முக்கால்வாசி நிர்வாணத்துடன் வந்திருந்த அவரை, அங்கிருந்த இளைஞர்கள் சிலர் கேலி- கிண்டல் செய்து அங்கிருந்து விரட்டினர். இதனால் வருத்தத்துடன் அவர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.
சிறிது நேரத்திலேயே ஒரு காளை மாட்டின் மீது ஏறி அமர்ந்து மீண்டும் அங்கு வந்தார். தேரின் முன்பாக சென்று நிதானமாக இறைவனை தரிசித்தார். அப்போது இளைஞர்கள் மீண்டும் அவரைப் பார்த்து கேலி- கிண்டல் செய்தனர். இதனால் வருந்திய அவர், அங்கிருந்து உடனடியாக சென்றுவிட்டார்.
அதன்பின்னர் அப்பகுதி மக்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இழுத்தும் தேர் சிறுதும் நகரவில்லை. 'தேரின் சக்கரத்தில் ஏதேனும் மாட்டிக் கொண்டு இருக்கிறதா?' என்று பார்த்தனர். அப்படியும் ஒன்றும் இல்லை.

மீண்டும் சிவ கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். அப்போதும் தேர் நகரவில்லை. இறுதியில் பக்தர்கள் அனைவரும் சோர்ந்து போயினர். இப்படி நகராத தேர், சுமார் 2 மாதங்களாக நடு வீதியில் நின்று கொண்டிருந்தது.
இதனால் வருந்திய கோவில் நிர்வாகத்தினர், தேர் நகராததற்கு தெய்வச் செயல் எதுவும் காரணமா என்று பிரசன்னம் பார்த்தனர். அப்போது கோவில் தேரோட்டம் தொடங்கிய நேரத்தில் ஒரு சன்னியாசியை இளைஞர்கள் கேலி செய்தது பற்றியும், அவர் ஒரு சித்தர் என்பது பற்றியும் தெரிவிக்கப்பட்டது.
அந்த சித்தரின் மனம் குளிர்ந்தால்தான், தேர் அங்கிருந்து நகரும் என்றும் கூறப்பட்டது. இதையடுத்து அந்த சித்தர், திருக்குற்றாலத்தில் இருப்பதை அறிந்து கோவில் நிர்வாகத்தினர் அங்கு சென்றனர். ஆனால் அதற்குள் சித்தர், வான் வழியாக பறந்து குருக்கள் மடம் என்ற பகுதியை அடைந்தார்.
திருக்குற்றாலத்தில் சித்தர் இல்லாததால், மீண்டும் பிரசன்னம் பார்க்கப்பட்டு, அவர் குருக்கள் மடத்தில் இருப்பதை அறிந்தனர். பின்னர் அங்கு சென்ற கோவில் நிர்வாகத்தினர், இளைஞர்கள் செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்டு, மீண்டும் தேர் ஓட அருள் புரிய வேண்டும் என்று வேண்டினர்.
இதையடுத்து திருநெல்வேலி வந்த சிவலோக பண்டாரநாத சித்தர், "தேரோடும் வீதியிலே தெவங்கி நிற்கும் நெல்லையப்பா.. தானா தளம்போய்ச் சேரப்பா.." என்று பாடினார்.
மறுநொடியே மந்திரத்திற்கு கட்டுப்பட்டதுபோல, அந்த தேர் தானாகவே நகர்ந்து, கோவில் வளாகத்தில் போய் நிலை கொண்டது. இதைக்கண்டு அனைவரும் வியப்பில் ஆழ்ந்து போயினர்.
சிவலோக பண்டாரநாத சித்தர், தான் சித்ரா பவுர்ணமி அன்று ஜீவ சமாதி அடையப் போவதாகவும், பவுர்ணமி தோறும் தன் ஜீவசமாதியில் சாம்பார் சாதம், தயிர் சாதம் படைத்து வழிபட்டு, அதை தானமாக வழங்கு பவர்களுக்கு பாவங்களும், சாபங்களும் நீங்கும் என்று கூறினார். அதன்படியே அவர் ஒரு சித்ரா பவுர்ணமியில் ஜீவ சமாதி அடைந்தார். அந்த இடத்தில் கற்கோவில் கட்டப்பட்டுள்ளது.

கருவறையில் மூலவராக சிவலோக பண்டாரநாத சித்தர் திருவுருவம் உள்ளது. பத்மாசனத்தில் தியான நிலையில் வீற்றிருக்கும் இவர், தலையிலும், நெற்றியிலும் ருத்ராட்சம் அணிந்துள்ளார். அதோடு திருமார்பில் கவுரி சங்கரம் என்னும் அரிய ருத்ராட்சம், இரண்டு புஜங்களிலும் ருத்ராட்ச மணிகள், இடுப்பில் மட்டும் வஸ்திரம் என்று அணிந்திருக்கிறார்.
வலது கையில் சின்முத்திரையோடும், இடக்கையில் ஏடு தாங்கியும், புத்தரைப் போல் நீண்ட காதுகளுடன், முகத்தில் புன்னகை தவழ சிவசிந்தனையுடன் பக்தர்களின் துன்பங்களைப் போக்கி வருகிறார்.
சிவலோக பண்டாரநாதர், குருக்கள் மடம் பகுதியில் நோய் குணப்படுத்துவது, ஏடு ஜோதிடப் பலன் சொல்வது ஆகிய செயல்களில் ஈடுபட்டார். இவரை அப்பகுதி மக்கள் 'ஏடு ஜோதிடர்' என்றே அழைத்தனர்.
ஓய்வு நேரங்களில் அங்குள்ள தெப்பக்குளத்தில் நீரின் மேற்பரப்பில் படுத்து தியானம் செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இதனால் சித்தரின் புகழ், அனைத்து திசைகளிலும் பரவியது.
தன்னை நாடி வருபவர்களிடம் தட்சணை எதுவும் பெறாமல், யாசகம் பெற்று கஞ்சி காய்ச்சி பருகி வந்தார். அந்த கஞ்சியை தன்னை நாடி வரும் மக்களுக்கு நோய் தீர்க்கும் மருந்தாகவும் வழங்கினார்.
இப்படி கஞ்சியை பனை ஓலை பட்டையில் வாங்கிப் பருகிய மக்கள், ஓலை பட்டையை அங்கேயே வீசி விட்டுச் சென்றனர். அது காய்ந்து அருகில் இருக்கும் வீடுகளின் முன்பாக போய் விழுந்து கிடந்தது. இதனால் கோபம் கொண்ட அந்த வீட்டு மக்கள், சித்தரை வாய்க்கு வந்தபடி திட்டியதுடன், ஒரு கட்டத்தில் அவர் தங்கியிருந்த குடிலுக்கு தீயும் வைத்தனர்.
ஆனால் அப்படி தீவைத்தவர்களின் உடல் வெப்பத்தால் கொதிக்க ஆரம்பித்தது. உடல் முழுவதும் நெருப்பில் வெந்தது போல எரியத் தொடங்கியது. இதனால் பயந்து போன அவர்கள், சிவலோக பண்டாரநாத சித்தரைத் தேடி ஓடினர்.
நீரின் மீது படுத்து தியானம் செய்து கொண்டிருந்த அவரிடம், தங்களின் செயலுக்கு மன்னிப்பு கோரினர். இதையடுத்து அவர்களின் உடல் சமநிலைக்கு வந்தது.
சிவலோகநாதரை வழிபடுவோருக்கு குரு தோஷம், குரு சாபம் நீங்கி நற்பலன்கள் உண்டாகும். அரசு வேலை, அரசியலில் உயர் பதவி கிடைக்க சிவலோக நாதரை தொடர்ந்து வழிபடுவது அவசியமாகும்.
திருமணம், குழந்தைப்பேறுக்குரிய சிறப்புத்தலமாகவும், இந்த ஆலயம் திகழ்கிறது. நோய் தீரவும், வியாபாரம் மற்றும் தொழில் வெற்றிபெறவும் இங்கு வழிபடுகிறார்கள். இங்கு அர்ச்சனை கிடையாது. அதனால் பூ மாலைகள், நல்லெண்ணெய், ஊதுபத்தி உள்ளிட்ட நறுமணப் பொருட்கள், பஞ்சாமிர்தம், அபிஷேகப் பொருட்கள் வழங்கி வழிபடுவது சிறப்பு.
பவுர்ணமி தோறும் காலையில் சிவலோகநாதருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகிறது. வியாழக்கிழமை பூச நட்சத்திரம் அன்றும், அவரவர் பிறந்த நட்சத்திரம் அன்றும் இங்கு வந்து வழிபடுவது சிறப்பான பலன்களைத் தரும்.
அமைவிடம்
தென்காசியில் இருந்து திருநெல்வேலி செல்லும் சாலையில், தென்காசியில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் பாவூர்சத்திரம் உள்ளது. இங்கிருந்து சுரண்டை செல்லும் வழியில் 2 கிலோமீட்டரில் கீழப்பாவூர் இருக்கிறது. இங்கு வடக்குப் பேருந்து நிலையத்தில் அரசு நூலகத்தின் பின்புறம் 'குருக்கள் மடம்' பகுதியில் சிவலோக பண்டாரநாதர் ஜீவசமாதி அமைந்துள்ளது.
- பிராங்க் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.
- பொது இடங்களில் இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என காவல்துறை எச்சரிக்கை.
தென்காசி அரசு மருத்துவமனையில் பிராங்க் வீடியோ எடுத்த இளைஞர்கள் இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மருத்துவமனையில் இளைஞர் ஒருவர் தனது கையில் அடிப்பட்டது போல கட்டுபோட்டுக் கொண்டு பிராங்க் வீடியோ பதிவு செய்துள்ளார்.
இந்த பிராங்க் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், மருத்துவமனையில் பிராங்க் வீடியோ எடுத்து வெளியிட்ட செங்கோட்டையை சேர்ந்த பீர் முகம்மது, சேக் முகம்மது ஆகியோரை கைது செய்துள்ளனர்.
மேலும், பொது இடங்களில் இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
- குற்றால அருவிகளிலும் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
- அருவி கரையில் அமைந்துள்ள சிறிய பாலம் பலத்த சேதமடைந்தது.
தென்காசி:
தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கொட்டித்தீர்த்து வரும் கனமழை காரணமாக மாவட்டத்திலுள்ள பல்வேறு நீர்நிலைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்பட்டு வருகிறது.
மாவட்டத்தில் உள்ள அடவிநயினார் கோவில் அணை, குண்டாறு அணை, கருப்பாநதி அணை, கடனாநிதி அணை, ராமாநதி அணை உள்ளிட்ட அனைத்து அணைகளிலும் நீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது. இதனால் நீர்நிலைகள் அருகே யாரும் செல்ல வேண்டாம் எனவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், ராமநதி அணை தனது முழு கொள்ளளவை எட்டி நிரம்பும் தருவாயில் உள்ளது. இதனால் பாது காப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 1,550 கன அடிக்கு மேல் நீரானது வெளியேற்றப்படுகிறது.
இதனால் வெள்ள அபாய எச்சரிக்கையானது அந்த பகுதியில் உள்ள மசூதிகளில் ஒலிபெருக்கிகள் மற்றும் ஒலிபெருக்கிகள் வாயிலாக ராமநதி ஆற்றுப்படுகை கரையோரம் வசித்து வரும் மக்களுக்கு தற்போது விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கவும், நீர்நிலைகள் அருகே யாரும் செல்ல வேண்டாம் எனவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தென்காசி மாவட்டத்தில் நேற்று காலை 8.30 மணி முதல் இன்று அதிகாலை 6 மணி வரை சுமார் 188 மில்லி மீட்டருக்கு மேலாக வரலாறு காணாத கனமழை கொட்டி தீர்த்து உள்ளது.
அதன்படி, தென்காசி சுற்றுவட்டார பகுதியில் அதிகபட்சமாக 230 மில்லி மீட்டர் மழைப்பொழிவும், ராமநதி அணைப்பகுதியில் 238 மில்லி மீட்டர் மழைப் பொழிவும், குண்டாறு அணைப்பகுதியில் 208 மில்லி மீட்டர் மழைப் பொழியும், செங்கோட்டை சுற்று வட்டாரப் பகுதியில் 240 மில்லி மீட்டர் மழைப் பொழிவும், ஆய்க்குடி சுற்றுவட்டார பகுதியில் 312 மில்லி மீட்டர் மழைப் பொழிவும், சங்கரன் கோவில் சுற்றுவட்டார பகுதியில் 146 மில்லிமீட்டர் மழை பொழிவும் என ஒட்டுமொத்தமாக அதிகாலை 6 மணி வரை மாவட்டத்தில் 188 மில்லி மீட்டர் மழைப்பொழிவு பதிவாகி உள்ளதாக மாவட்ட கலெக்டர் கமல் கிஷோர் தெரிவித்துள்ளார்.
சுற்றுலா தலமான குற்றால அருவிகளிலும் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மெயின் அருவியில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டதால் அருவி கரையில் அமைந்துள்ள சிறிய பாலம் பலத்த சேதமடைந்தது.
வெள்ள நீர் குற்றாலம் பஜார் பகுதியில் இருந்த கடைகளுக்குள் புகுந்ததால் வியாபாரிகள் பெரும் சிரமத்தை சந்தித்தனர். அதேபோன்று ஐந்தருவியிலும், பழைய குற்றால அருவியிலும் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டதால் பாதுகாப்பு கருதி அங்கு கூடுதல் போலீசார் நிறுத்தப்பட்டனர்.

பழைய குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நடைபாதையில் அமைந்திருக்கும் கடைகளை சூழ்ந்து வெள்ள நீர் சென்றது.
மேலும் கடுமையான மழையின் காரணமாக குளங்கள், கால்வாய்களில் மழைநீர் கரைபுரண்டு ஓடுகிறது. நீர் நிலைகள் வேகமாக நிரம்புவதோடு தென்காசி மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் குடியிருப்புகளையும் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது.
தென்காசி மாவட்டம் முழுவதும் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிப்பதாக மாவட்ட கலெக்டர் நேற்று அறிவிப்பு வெளியிட்டிருந்த நிலையில் இன்று காலையில் அனைத்து கல்லூரிகளுக்கும் விடுமுறை எனவும் அறிவித்துள்ளார்.
கனமழை காரணமாக ஏற்படும் பாதிப்புகள் குறித்த புகார்களை தெரிவிக்க 1077 என்ற கட்டணமில்லா தொலை பேசி எண், 7790019008 என்ற வாட்ஸ்அப் எண் மற்றும் 04633-290548 என்ற பேரிடர் மேலாண்மைத் துறையின் அவசர கால எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட கலெக்டர் கமல் கிஷோர் தெரிவித்துள்ளார்.
- சிறுவன் அங்கு வந்து திடீரென அம்மிக்கல்லை எடுத்து தாயின் தலையில் போட்டுக்கொலை செய்தான்.
- விசாரணைக்கு பின்னர் சிறுவனை நெல்லையில் உள்ள சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் ஒப்படைத்தனர்.
தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வரும் தம்பதியினருக்கு 2 மகன்கள் உள்ளனர். அதில் 17 வயதான மூத்த மகனுக்கு திடீரென மனநலம் சற்று பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவர் எங்கும் செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார்.
இந்நிலையில் நேற்று சிறுவனின் தந்தை வேலைக்கு சென்றுவிட்ட நிலையில், இரவில் சிறுவனின் 45 வயதான தாய் வீட்டில் படுத்து தூங்கி கொண்டிருந்தார். அப்போது சிறுவன் அங்கு வந்து திடீரென அம்மிக்கல்லை எடுத்து தாயின் தலையில் போட்டுக்கொலை செய்தான். பின்னர் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்துப்போன அந்த சிறுவன், தனது தந்தைக்கு போன் செய்து அம்மாவின் தலையில் அம்மிக்கல்லை போட்டுவிட்டேன். தலையில் இருந்து ரத்தம் கொட்டுகிறது என்று கூறியுள்ளான்.
உடனே பதறிப்போன அவர், தனது வீட்டிற்கு அருகில் வசிக்கும் நபர்களிடம் போனில் தகவல் தெரிவித்துள்ளார். அவர்கள் விரைந்து வந்து பார்த்தபோது அந்த பெண் இறந்து கிடந்தார்.
இதுகுறித்து கடையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து சிறுவனை கைது செய்தனர். அவனை போலீஸ் நிலையத்தில் வைத்திருந்தபோது, தனது தாயை நினைத்து தேம்பி தேம்பி அழுது கொண்டே இருந்தான்.
மேலும் அங்கிருந்த போலீசாரிடம், எனது தாயை எங்கே, நான் அவரிடம் போக வேண்டும் என்று அழுதபடியே கேட்ட சம்பவம் அங்கிருந்தவர்களை கண் கலங்க செய்தது. தொடர்ந்து விசாரணைக்கு பின்னர் சிறுவனை நெல்லையில் உள்ள சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் ஒப்படைத்தனர்.
- பல இடங்களில் புதிய குவாரிகள் முளைத்துள்ளதாகவும் கிடைத்துள்ள செய்தி மிகுந்த கவலையை அளிக்கிறது.
- பொதுமக்கள் அனைவரும் பெருந்திரளான அளவில் கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
கனிமவள கொள்ளையை கண்டித்து வரும் 6-ம் தேதி தென்காசியில் அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
தென்காசி மாவட்டத்தில் இருந்து பல்லாயிரம் டன் கணக்கிலான கனிம வளங்கள் வெட்டி எடுக்கப்பட்டு நாள்தோறும் பலநூறு லாரிகள் மூலம் கேரளாவிற்கு கொண்டு செல்லப்படுவதாகவும்; தமிழ் நாட்டில் இருப்பதைப் போல பலமடங்கு கனிம வளங்களை வைத்திருக்கும் கேரள மாநிலம் அவற்றை அழியவிடாமல் பாதுகாப்பதோடு, தமிழ் நாட்டில் உள்ள கனி வளங்களை சுரண்டி எடுத்துச் செல்லும் செயலில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாகவும், இதற்கு ஸ்டாலின் மாடல் அரசு உறுதுணையாக இருந்து, தமிழ் நாட்டு மக்களுக்கு மாபெரும் துரோகத்தை இழைத்து வருவதாகவும், அப்பகுதி வாழ் மக்கள் தங்களது ஆதங்கத்தைத் தெரிவித்த வண்ணம் உள்ளனர்.
அதுமட்டுமல்லாமல், கனிம வளங்களுடன் தினமும் கேரளாவை நோக்கி படையெடுக்கும் நூற்றுக்கணக்கான கனரக வாகனங்களால், அப்பகுதி முழுவதும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், பள்ளி, கல்லூரி மற்றும் வேலைக்கு செல்லும் பொதுமக்கள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகி வருவது தொடர்கதையாக இருந்து வருகின்றது.
கனிம வளங்களை கொண்டுசெல்வதற்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை சிறிதும் மதிக்காமல், அனுமதிக்கப்பட்ட அளவைவிட கூடுதலாக கனிம வளங்களை அள்ளிச் செல்லும் லாரிகள் அசுர வேகத்தில் செல்வதால் பல்வேறு விபத்துகளும், உயிரிழப்புகளும் ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் மிகுந்த வேதனையோடு தெரிவிக்கின்றனர். மேலும், பல இடங்களில் புதிய குவாரிகள் முளைத்துள்ளதாகவும் கிடைத்துள்ள செய்தி மிகுந்த கவலையை அளிக்கிறது.
இந்நிலையில், தென்காசி மாவட்டத்தில் இருந்து பல்லாயிரம் டன் கணக்கிலான கனிம வளங்கள் வெட்டி எடுக்கப்பட்டு நாள்தோறும் பலநூறு லாரிகள் மூலம் கேரளாவிற்கு கொண்டு செல்லப்படுவதை கண்டும் காணாமல் இருந்து வரும் திமுகவின் ஸ்டாலின் மாடல் ஆட்சியைக் கண்டித்தும், மக்கள் நலன் கருதி கனிம வளக் கொள்ளையை உடனடியாகத் தடுத்து நிறுத்த வலியுறுத்தியும், அதிமுக தென்காசி வடக்கு மாவட்டத்தின் சார்பில், வருகிற 6-ம் தேதி (வியாழக்கிழமை) காலை 10 மணியளவில், செங்கோட்டை அம்மா உணவகம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம், கழக அமைப்புச் செயலாளரும், விருதுநகர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமையிலும்; தென்காசி வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர் சி.கிருஷ்ணமுரளி, எம்.எல்.ஏ., முன்னிலையிலும் நடைபெறும். இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், தென்காசி வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்த கழக சார்பு அணிகளின் துணை நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள்; மாவட்டத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் இந்நாள், முன்னாள் பிரதிநிதிகள், முன்னாள் வார்டு உறுப்பினர்கள் உள்ளிட்ட கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் பிரதிநிதிகளும், கழக உடன்பிறப்புகளும் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
திமுக அரசைக் கண்டித்து நடைபெற உள்ள இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், வியாபாரிகள், பல்வேறு தரப்பட்ட தொழிலாளர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அனைவரும் பெருந்திரளான அளவில் கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.