search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Thiruvallur"

    • குடும்ப தலைவிகளுக்கு நேரடியாக ரூ.1000 மாதா மாதம் செலுத்தப்பட்டு வருகிறது.
    • ஜூலை 15-ந்தேதி முதல் ரூ.1000 பணம் செலுத்தப்படும்

    சென்னை:

    குடும்ப தலைவிகளுக்கு மாதா மாதம் ரூ.1000 வழங்கப்படும் என்று தி.மு.க. கடந்த சட்டமன்ற தேர்தலின் போது வாக்குறுதி கொடுத்திருந்தது.

    இதையடுத்து தி.மு.க. வெற்றி பெற்று முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவிக்கு வந்த பிறகு கடந்த ஆண்டு அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15-ந்தேதி முதல் குடும்பத் தலைவிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக ரூ.1000 மாதா மாதம் செலுத்தப்பட்டு வருகிறது.

    ஆரம்பத்தில் மகளிர் உரிமைத்தொகை கேட்டு மொத்தம் 1.63 கோடி பேர் விண்ணப்பித்து இருந்தனர். இதில் 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் குடும்பத் தலைவிகளின் வங்கி கணக்கில் மட்டுமே உரிமைத்தொகை செலுத்தப்பட்டது. மற்ற விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன.

    இதனையடுத்து 2-ம் கட்டமாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மேலும் 7.35 லட்சம் பெண்களுக்கு ரூ.1000 அவரவர் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது.

    ஆக மொத்தம் 1 கோடி யே 13 லட்சத்து 84 ஆயிரத்து 300 பெண்களுக்கு மாதா மாதம் ரூ.1000 சென்றடைகிறது. இதுதவிர மேலும் 11.85 லட்சம் பெண்கள் ரூ.1000 கேட்டு மேல் முறையீடு செய்திருந்தனர்.

    இந்த மனுக்கள் மீது அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். மனு செய்திருந்த ஒவ்வொருவர் வீட்டுக்கும் பணியாளர்கள் சென்று கள ஆய்வு செய்தனர். அவர்கள் பார்க்கும் வேலை, வருமானம், வசதி எந்த அளவுக்கு என்பது பற்றியும் விசாரித்தனர்.

    இதன் அடிப்படையில் புதிய பயனாளிகள் பட்டியல் தயாரிக்கப்பட்டு வந்தது.

    இந்த பட்டியல்படி மேல் முறையீடு செய்தவர்களில் தகுதியானவர்களாக 1.48 லட்சம் பேர் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர்.

    இவர்களுக்கு உரிமைத் தொகை எப்போது வழங்கப் படும் என்று கேள்விகள் எழுந்தன. இதனையடுத்து இது தொடர்பான முக்கிய அறிவிப்பை விருதுநகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டு உள்ளார்.

    அவர் கூறுகையில் மகளிர் உரிமைத் தொகை கேட்டு மேல் முறையீடு செய்தவர்களில் தகுதியான வர்களாக 1.48 லட்சம் பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இவர்களில் வங்கிக் கணக்கில் இந்த மாதம் (ஜூலை) 15-ந்தேதி முதல் ரூ.1000 பணம் செலுத்தப்படும் என்று கூறினார்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 15-ந்தேதி திருவள்ளூர் மாவட்டம் சென்று அரசு உதவிபெறும் பள்ளி களிலும் மாணவ-மாணவிகளுக்கான காலை உணவு விரிவாக்கத் திட்டத்தை தொடங்கி வைக்க உள்ளார்.

    இந்த விழாவில் மேலும் 1.48 லட்சம் பெண்களுக்கு ரூ.1000 வழங்கும் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தையும் தொடங்கி வைக்க வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதுகுறித்து சமூக நலத்துறை அதிகாரிகள் இன்று திருவள்ளூர் சென்று விரிவான ஆலோசனையும் நடத்தினார்கள்.

    • அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது.
    • வாகன ஓட்டிகள் திணறி வருகிறார்கள்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் நகரம் வேக மாக வளர்ந்து வருகிறது. இங்குள்ள வைத்திய வீரராகவ பெருமாள் கோவில் பிரசித்தி பெற்றது.

    தினந்தோறும் ஏராளமானோர் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வந்து செல்கிறார்கள். ஆடி, தை அமாவாசை நாட்கள் மற்றும் மற்ற நாட்களில் வரும் அமாவாசை நாட்களிலும் கூட்டம் அதிகமாக இருக்கும்.

    இந்த நிலையில் திருவள்ளூர் நகர் பகுதியில் மாடுகள் அதிக அளவில் கூட்டம், கூட்டமாக சாலையில் ஹாயாக சுற்றி வருகின்றன. சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலை உட்பட முக்கிய சாலைகளில் போக்குவரத்திற்கு இடையூறாக மாடுகள் நிற்பதால் வாகன ஓட்டிகள் திணறி வருகிறார்கள்.

    கடந்த சில மாதங்களுக்கு முன் மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் போக்குவரத்துக்கு இடையூறாக சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளை பறிமுதல் செய்து அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார். இதன் பின்னர் சில நாட்கள் சாலையில் சுற்றிய மாடுகள் பிடிக்கப்பட்டு அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

    தற்போது அதிகாரிகள் கண்டு கொள்ளாததால் திருவள்ளூர் நகர் பகுதியில் மாடுகள் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கி உள்ளது. எந்த சாலையில் திரும்பினாலும் மாடுகள் ஹாயாக சுற்றி வருகின்றன.

    குறிப்பாக திருவள்ளூரின் முக்கிய பகுதியான ரெயில் நிலையத்தில் இருந்து கலெக்டர் அலுவலகம் வரை செல்லும் சாலையில் பஸ், லாரி, ஆட்டோ, ஆம்னி வேன், இருசக்கர வாகனங்கள் உள்ளிட்டவைகளை வழிமறித்து மாடுகள் கூட்டமாக செல்வதால் அந்த சாலையில் போக்கு வரத்து நெரிசல் மற்றும் விபத்துக்கள் ஏற்பட்டு வருகின்றன. போக்குவரத்து போலீசாரும், வாகன ஓட்டிகளும் சாலையில் நிற்கும் மாடுகளை விரட்ட கடும்பாடுபட்டு வருகிறார்கள்.

    கலெக்டர் அலுவலகத்தில் இருந்து காமராஜர் சிலை வரை தினந்தோறும் 100-க்கும் மேற்பட்ட மாடுகள் வாகனங்க ளுக்கு இடையே புகுந்து சாலையில் படுத்து கொள்கின்றன. இதனால் அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் உயிரை கையில் பிடித்தபடி பயணம்செய்து வருகிறார்கள்.

    மேலும் முக்கிய சாலையின் சிக்னல் கம்பம் அருகேயும் மாடுகள் படுத்து கொள்வதால் போக்குவரத்து போலீசார் அதனை விரட்ட தினந்தோறும் தவித்து வருகிறார்கள்.

    எனவே திருவள்ளூர் நகர் பகுதியில் போக்குவரத்திற்கு இடையூறாக விபத்து ஏற்படும் வகையில் சுற்றும் மாடுகளை அப்புறப்படுத்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    இதுகுறித்து ஈக்காடு பகுதியைச் சேர்ந்த சுனில் என்பவர் கூறும்போது, `நான் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறேன். தினமும் திருவள்ளூரில் உள்ள ரெயில் நிலையத்திற்கு மோட்டார் சைக்கிளில் செல்வேன்.

    காலையில் வீட்டில் இருந்து செல்லும்போதும், இரவு நேரத்தில் திரும்பி வரும் போதும் தேரடி முதல் ரெயிலடி வரை ஜெ.என் சாலையில் மாடுகள் படுத்து கிடந்து போக்குவரத்துக்கு இடைஞ்சல் ஏற்படுத்துகின்றன. மேலும் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது.

    எனவே சாலையில் சுற்றும் மாடுகளை அப்புறப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.

    பெரியகுப்பத்தை சேர்ந்த சம்பத் கூறும்போது, திருவள்ளூரில் உள்ள பள்ளியில் படித்து வரும் எனது மகனை தினமும் மோட்டார் சைக்கிளில் அழைத்து செல்வேன். சாலையில் சுற்றும் மாடுகளால் விபத்து அபாயத்தில்தான் தினந்தோறும் செல்ல வேண்டி உள்ளது.

    பலர் மாடுகள் மீது மோதி விழுந்து செல்கிறார்கள். அசம்பாவிதம் ஏற்படும் முன்பு இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றார்.

    • மரங்களை வெட்டி அங்கேயே போட்டு விட்டு தப்பி சென்று இருக்கிறார்கள்.
    • போலீசார் பனைமரங்கள் வெட்டப்பட்ட இடத்தை பார்வையிட்டு விசாரணை

    பொன்னேரி:

    சோழவரம், செங்குன்றம்,பொன்னேரி, காரனோடை, பழைய எருமை வெட்டிபாளையம் புதிய எருமை வெட்டி பாளையம், பூதூர் உள்ளிட்ட பகுதியில் ஆயிரக்கணக்கான பனை மரங்கள் உள்ளன.

    அழிந்து வரும் பனைமரங்களை பாதுகாக்க அதனை வெட்டுவதற்கு அரசு கட்டுப்பாடு விதித்து உள்ளது. மாவட்ட கலெக்டரின் அனுமதி பெற்ற பின்னரே தனியார் நிலத்தில் உள்ள மரத்தினை அகற்ற வேண்டும் எனவும் அரசு நிலத்தில் உள்ள பனை மரங்களை அகற்ற உரிமை கிடையாது எனவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    இந்தநிலையில் சோழவரம் அடுத்த பூதூர் கிராமத்தில் அரசு நிலத்தில் இருந்த 50-க்கும் மேற்பட்ட பனை மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டுள்ளன. இரவில் வந்த மர்மகும்பல் எந்திரத்தால் மனைமரங்களை வெட்டி அங்கேயே போட்டு விட்டு தப்பி சென்று இருக்கிறார்கள்.

    இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் வருவாய்த்துறையினருக்கும், சோழவரம் போலீசுக்கும் தகவல் தெரிவித்தனர். போலீசார் பனைமரங்கள் வெட்டப்பட்ட இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறும்போது, இந்த பகுதியில் ஏராளமான பனை மரங்கள் உள்ளன. அரசு நிலத்தில் இருந்த பனை மரங்களை நள்ளிரவில் வந்த மர்ம கும்பல் எந்திரத்தால் வெட்டி சாய்த்து உள்ளனர். அதனை வெட்டிய நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    • திருப்போரூரில் உள்ள Godrej உற்பத்தி ஆலை வருகிற டிசம்பர் திறக்கப்பட உள்ளது.
    • ஓசூரில் கண்டிப்பாக விமான நிலையம் அமையும்.

    தமிழக சட்டப்பேரவையில் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பல்வேறு திட்டங்கள் குறித்த அறிவித்தார்.

    இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-

    திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் 1,500 ஏக்கர் பரப்பளவில் புதிய SIPCOT தொழிற்பூங்கா உருவாக்கப்படும்.

    தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரத்தில் 1,000 ஏக்கர் பரப்பளவில் புதிய SIPCOT தொழிற்பூங்கா உருவாக்கப்படும்.

    கரூர் மாவட்டத்தில் தகவல் தொழில்நுட்ப துறையில் 500 நபர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் விதம் புதிய மினி Tidel Park அமைக்கப்படும்.

    அரியலூர் மாவட்டம் உடையார் பாளையம் வட்டத்தில் சுமார் 175 ஏக்கர் நிலப்பரப்பில் சிப்காட் தொழிற்பூங்கா உருவாக்கப்படும்.

    திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் வட்டத்தில் சுமார் 150 ஏக்கர் நிலப்பரப்பில் சிப்காட் தொழிற்பூங்கா அமைக்கப்படும்.

    திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் மற்றும் மன்னார்குடி வட்டங்களில் சுமார் 150 ஏக்கர் நிலப்பரப்பில் சிப்காட் தொழிற்பூங்கா அமைக்கப்படும்.

    காஞ்சிபுரம் மாவட்டம், திருப்பெரும்புதூர் வட்டத்தில் சுமார் 750 ஏக்கர் நிலப்பரப்பில் ஒரு சிப்காட் தொழிற்பூங்கா அமைக்கப்படும்.

    சென்னை வெளிவட்டச் சாலையை ஒட்டி சுமார் 200 ஏக்கர் நிலப்பரப்பில் சிப்காட் தொழிற்பூங்கா உருவாக்கப்படும்.

    தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் மூலம் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு இந்த ஆண்டு 2,100 கோடி ரூபாய் கடன் வழங்கப்படும்.

    திருப்போரூரில் உள்ள Godrej உற்பத்தி ஆலை வருகிற டிசம்பர் திறக்கப்பட உள்ளது.

    தமிழ்நாட்டை விண்வெளி தொழிலில் முன்னணி மாநிலமாக மேம்படுத்த விண்வெளி தொழில் கொள்கை வெளியிடப்படும்.

    சுழற்பொருளாதார துறைகளில் முதலீடுகளை அதிகரிக்கும் பொருட்டு, தமிழ்நாடு சுழற்பொருளாதார முதலீட்டு ஊக்குவிப்பு கொள்கை வெளியிடப்படும்

    முதலீடுகளை ஊக்குவிக்க உதவியாக 'Guidance TamilNadu' நோடல் ஏஜென்ஸியின் கிளை அலுவலகம் கோயம்புத்தூரில் அமைக்கப்படும்.

    ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 'Guidance TamilNadu' நோடல் ஏஜென்ஸியின் ஊக்குவிப்பு அமைவு(Japan Desk) உருவாக்கப்படும்.

    ஓசூரில் புதிய விமான நிலையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். வெளியே இருக்கும் சிலர், இதில் கேள்விகளை எழுப்பியுள்ளனர்.

    தீவிர ஆய்வுக்கு பிறகே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கண்டிப்பாக விமான நிலையம் அமையும். கோவை விமான நிலைய விரிவாக்கப் பணிகள் வெகுவிரைவில் தொடங்கும். சேலம் விமான நிலைய விரிவாக்கப் பணிக்கு நிலம் எடுப்பு தொடங்கிவிட்டது.

    தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் மூலம் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு இந்த ஆண்டு 2100 கோடி ரூபாய் கடன் வழங்கப்படும்.

    ஆலங்குளம் சிமெண்ட் ஆலையில் எம்-சாண்ட் உற்பத்தி ஆலை சுமார் 25 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் அமைக்கப்படும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • கோஷங்களை எழுப்பியவாறு பேரணியாக வந்து கலெக்டரிடம் மனு.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட தாராட்சி, தாமரைக்குப்பம், பேரண்டூர், செஞ்சியகரம் ஆகிய நான்கு ஊராட்சிகளை பேரூராட்சியோடு இணைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இதற்கு இந்த ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். தங்கள் ஊராட்சியை பேரூராட்சியுடன் இணைக்க வேண்டாம் என்று கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இந்த நிலையில் தாராட்சி உள்பட 4 ஊராட்சியை சேர்ந்த ஊராட்சிமன்றத் தலைவர்கள் மற்றும் 20-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தங்கள் ஊராட்சியை, பேரூராட்சியோடு இணைக்க எதிர்ப்பு தெரிவித்து திருவள்ளூர் டோல்கேட் பகுதியில் இருந்து மாவட்ட கலெக்டர் அலுவலகம் வரை கோஷங்களை எழுப்பியவாறு பேரணியாக வந்து கலெக்டரிடம் மனு அளிக்க வந்தனர்.

    அப்போது கலெக்டர் வெளியே சென்று இருந்ததால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் திடீரென மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரே சென்னை-திருப்பதி நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போகச்செய்தனர்.

    இதையடுத்து திருவள்ளூர் டவுன் போலீசார் எவ்வித அனுமதியும் இன்றி நெடுஞ்சாலையில் ஊர்வலமாக வந்து பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையுறு ஏற்படுத்தும் வகையில் சாலை மறியலில் ஈடுபட்டதாக 100 பெண்கள் உள்பட 131 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதுபற்றி மேலும் விசாரணை நடந்து வருகிறது.

    • ஊழியர் சங்கம் சார்பில் இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
    • போக்குவரத்து ஊழியர்கள் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூரில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு காஞ்சிபுரம் மண்டல தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சங்கம் சார்பில் இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

    சி.ஐ.டி.யூ காஞ்சிபுரம் மண்டல துணைத் தலைவர் மாயக்கண்ணன் தலைமை தாங்கினார். திருவள்ளூர் முன்னாள் நகர மன்ற தலைவர் சுந்தர்ராஜன், சி.ஐ.டி.யூ மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஊதிய பேச்சு வார்த்தையை உடனடியாக தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், ஓய்வு பெற்ற தொழிலாளர்களின் பண பலன், போக்குவரத்து படி, மருத்துவ காப்பீடு உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வுக்கான வேண்டும்.

    வாரிசு வேலை, காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். ஒப்பந்த முறையை கைவிட வேண்டும் என்பது உட்பட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

    இதில் கோயம்பேடு, திருவள்ளூர், திருத்தணி, பொன்னேரி, ஊத்துக்கோட்டை பணிமனையில் பணியாற்றும் போக்குவரத்து ஊழியர்கள் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    • பல்வேறு இடங்களில் விதிமுறைகள் மீறி பிரமாண்ட பேனர்களை வைத்து உள்ளனர்.
    • விளம்பர பேனர்கள் நெடுஞ்சாலை ஓரம் ஆபத்தான நிலையில் காட்சி அளிக்கிறது.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் மாவட்டத்தில் பொது இடங்களில் விதிமுறைகள் மீறி விளம்பர பேனர்கள் வைக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. விளம்பர பேனர் வைக்க வேண்டும் என்றால் அந்தந்த நகராட்சி, உள்ளாட்சி அமைப்புகளிடம் அனுமதி கோரி குறிப்பிட்ட தொகை செலுத்தி போலீசாரிடம் அனுமதி பெற்று வைக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    எனினும் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் விதிமுறைகள் மீறி பிரமாண்ட பேனர்களை வைத்து உள்ளனர்.

    இவ்வாறு வைக்கப்படும் விளம்பர பேனர்கள் நெடுஞ்சாலை ஓரம் ஆபத்தான நிலையில் காட்சி அளிக்கிறது. கடந்த சிலநாட்களாக பெய்து வரும் மழையின் காரணமாக திருவள்ளூர் - செங்குன்றம் நெடுஞ்சாலையில் வைக்கப்பட்டுள்ள விளம்பர பேனர் ஒன்று காற்றில் சரிந்தது. அந்த பேனர் எப்போது வேண்டுமானாலும் சாலையில் நடந்து செல்பவர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மீது விழும் அபாய நிலையில் காட்சி அளித்தது. இதனால் அவ்வழியே செல்பவர்கள் அச்சத்துடன் செல்லும் நிலை ஏற்பட்டது.

    எனவே ஆபத்தான நிலையில் இருக்கும் இந்த விளம்பர பேனர்களை அகற்றி, விதிமுறைகள் மீறி விளம்பர பேனர்கள் வைப்பதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • தமிழகத்தில் தென் மேற்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது.
    • பலத்த காற்றுடன் மிதமான மழை இன்று பெய்யக் கூடும்.

    சென்னை:

    தமிழகத்தில் தென் மேற்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. தென் னிந்திய பகுதிகளில் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழகத்தில் ஒரு சில இடங் களில் லேசான மழை பெய்யும்.

    புதுவை, காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னல், பலத்த காற்றுடன் மிதமான மழை இன்று பெய்யக் கூடும்.

    கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் மலை பகுதிகளில், நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று மிதமான மழை செய்யக்கூடும். இடி, மின்னலுடன் மழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னை மற்றும் புறநகர் பகுதியில் நேற்று பெய்த மழையால் வெப்பம் தணிந்தது. குளிர்ந்த காற்று வீசி வருகிறது. 5 மாதத்திற்கு பிறகு சென்னையில் 2 நாட்களாக மாலையில் மழை பெய்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • 15 ரெயில் நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
    • ரெயில் நிலையங்களின் உள்கட்டமைப்பு நவீன படுத்தப்பட்டு வருகிறது.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் முக்கிய ரெயில் நிலையமாக உள்ளது.

    சென்னையில் இருந்து அரக்கோணம், திருத்தணிக்கு செல்லும் புறநகர் மின்சார ரெயில்கள் மற்றும் காட்பாடி, திருப்பதி, மும்பை, பெங்களூர் விரைவு ரெயில்கள் என தினந்தோறும் சுமார் 200-க்கும் மேற்பட்ட ரெயில்கள் திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் நின்று செல்கின்றன.

    திருவள்ளூர் மாவட்டத்தில் முக்கிய நகரமாக உள்ள திருவள்ளூரில் சிறப்பு பெற்ற வீரராகவப் பெருமாள் கோவில், விஸ்வரூப பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில், கலெக்டர் அலுவலகம், போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் மற்றும் அனைத்து அரசு அலுவலகங்களும் உள்ளன. இதனால் பள்ளி, கல்லூரிக்குச் செல்லும் மாணவ மாணவிகள், அரசு அலுவலர்கள், வியாபாரிகள், வேலைக்குச் செல்லும் பெண்கள், ஆண்கள் என ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பயணிகள் திருவள்ளூர் ரெயில் நிலையத்திற்கு வந்து செல்கின்றனர்.

    இந்தநிலையில் அம்ரித் பாரத் ஸ்டேஷன் திட்டத்தின் கீழ் தெற்கு ரெயில்வேயின் சென்னை கோட்டத்தில் உள்ள ரெயில் நிலையங்களை மறுவடிவமைப்பு செய்து அதிநவீன ரெயில் நிலையங்களாக மாற்ற தெற்கு ரெயில்வே திட்டமிட்டு உள்ளது.

    இதில்முதல் கட்டமாக 15 ரெயில் நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்த திட்டத்தில் ரெயில் நிலையங்களின் உள்கட்டமைப்பு நவீன படுத்தப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் சென்னை சென்ட்ரல்–அரக்கோணம் கோட்டத்தில் திருவள்ளூர் ரெயில் நிலையம் ரூ.28.82 கோடியில் மறு சீரமைப்பு பணி கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது.

    இதில் புதிய ரெயில் நிலையக் கட்டிடம், நடை மேடைகளின் தரை மற்றும் கூரை சீரமைப்பு, ரெயில் நிலையம் அருகே இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் இடங்கள் சீரமைக்கப்படும் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. பணிகள் அனைத்தையும் இந்த நிதியாண்டின் இறுதிக்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. ரெயில் நிலையத்தில் நகரும் படிக்கட்டு மற்றும் லிப்ட் வசதி, 12 மீட்டர் அகலம்கொண்ட பயணிகள் நடைமேம்பாலம் வருகிறது. மேலும் நடைமேடைகளிலும் பயணிகள் நடமாடும் இடங்களிலும் பயனுள்ள தகவல் அளிக்க திரைகள், கண்காணிப்பு கேமரா அமைப்பது என பல்வேறு நடவடிக்கைகளை ரெயில்வே நிர்வாகம் மேற்கொள்ள உள்ளது.

    இதற்கிடையே சீரமைப்பு பணிகாரணமாக ரெயில் நிலைய முகப்பு வழியாக பயணிகளை அனுமதிக்க வில்லை. சுரங்கப்பாதை வழியாக சென்று வருகிறார்கள். மேலும் பயணச் சீட்டு வழங்கும் இடம் நடை மேடை 1-ல் உள்ளது. அங்கும் பணிகள் நடை பெற்று வருவதால் பயண சீட்டை வாங்க பயணிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே ரெயில்நிலைய சீரமைப்பு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • ஊரைச் சுற்றி சித்தர்களும் மா முனிவர்களும் வாழ்ந்ததாக கூறப்படுகிறது.
    • சிவலிங்கத்தை பாதுகாக்க வேண்டியது ஊர் மக்களின் பொறுப்பு.

    திருவள்ளூர் அடுத்த கொப்பூர் (திருகாபூர்) கிராமத்தில் இருக்கும் இடமெல்லாம் சிவலிங்கம். இந்த கிராமத்தைச் சுற்றி களத்துமேட்டில், வரப்பு, மாந்தோப்பில், குளக்கரை, முட்புதரில் மற்றும் பல்வேறு பகுதிகளில் சில காலங்களுக்கு முன் 108 சிவ லிங்கங்களும், நந்தியும், குட்டையும் கிராமத்தைச் சுற்றி இருந்ததாகக் கூறுகிறார்கள்.

    இந்த கொப்பூர் கிராமத்தின் மூத்தவரான திருவேங்கட நாயகர், தன் பதினைந்தாவது வயதில் மாடு மேய்க்கும்போது 65 சிவலிங்கங்கள் வரை பார்த்திருப்பதாகக் கூறுகிறார்.

    மேலும் முனிவர்களும் சித்தர்களும் 108 சிவலிங்கம் நந்தி குட்டைகளை அமைத்து பூஜைகள் நடத்தியதாக கூறப்படுகிறது. இந்த சிவலிங்கம் எல்லாம் கவனிப்பாரற்றுப் பூமிக்குள் புதையுண்டு போய் கொண்டிருக்கின்றன. சிவமயமான கிராமத்தில் தற்போது மக்கள் வழிபடுவது வைணவக் கடவுள்.

    தற்போது இந்த கிராமத்தில் 8 சிவலிங்கங்கள் பூமிக்குள் இருந்து எடுத்து பிரதிஷ்டை செய்யப்பட்டு பொதுமக்கள் வழிபட்டு வருகின்றனர்.

    ஆனால் கடந்த சில ஆண்டில் வெளியே இருந்த சிலலிங்கங்கள், மண்ணில் புதைந்தும் முட்புதர்களால் மூடியும் காணாமல் போனதாக பார்க்க முடிந்தது.

     

    ஆனால் இந்த கொப்பூர் கிராமத்தில் தோண்டுகின்ற இடமெல்லாம் விநாயகர், சிவலிங்கமும், நந்தியும். அம்பாள், சூரிய பகவான் பல்வேறு கடவுள் சிலைகளும் கிடைக்கும் கிராமமாக விளங்குகிறது.

    இந்த கிராமம் சென்னையில் இருந்து 38 கி.மீ. தூரத்தில் சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலை அரண்வாயில் குப்பம் பகுதியில் இருந்து ஸ்ரீபெருமந்தூர் செல்லும் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது.

    இந்த கிராமத்தைச் சேர்ந்த முன்னோர்கள் வழிவழியாக பெரியோர்கள் "தங்களது தாத்தா காலத்தில் 108 சிவலிங்கமும், நந்தியும், குட்டையும் இருந்ததாகக் கூறியிருக்கிறார்.

    என் அப்பா காலத்தில் இது இன்னமும் குறைந்து தற்போது 8 லிங்கங்கள் தான் பார்வைக்குத் தெரிகின்றன. எங்கள் ஊருக்கு மேற்கே 'சிவலிங்கமேடு' என்ற பகுதி உண்டு. இப்பகுதியில்தான் ஏராளமான சிவலிங்கங்கள் இருந்தன.

    இந்த கிராமம் ஆரம்பத்துல சிவ மதம்தான் இருந்தது. இந்த ஊரைச் சுற்றி சித்தர்களும் மா முனிவர்களும் வாழ்ந்ததாக கூறப்படுகிறது.

    பின்னர் இந்த கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ஸ்ரீபெரும்புதூரில் பிறந்த ராமானுஜர் காலத்தில வைணவத்துக்கு மாறியிருக்கணும். (ராமானுஜர் காலம் கி.பி. 10-ம் நூற்றாண்டு). அதுக்கு முன்னாடி இங்க சைவ மதம் தழைத்திருந்திருக்க வேண்டும்.

    அப்போது இந்த மண்ணில் மாமன்னரும், சிற்றரசரும் வாழ்ந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது நடைபெறும் திருவிழாநாளில் அரசர் இந்த 108 சிவலிங்கத்தையும் வழிபடுவார்கள்.

    3- ம் நூற்றாண்டில் இருந்து 5- ம் நூற்றாண்டுவரை தமிழகச்சரித்திரத்தின் இருண்டகாலமாகக் கருதப்படுகிறது. ஏறத்தாழ அந்த காலகட்டத்துக்குப் பின்புதான் இக்கிராமம் சைவ மதத்தை தழுவி இருந்திருக்க வேண்டும்.

    ராமானுஜரின் காலத்துக்குப் பிறகு வைணவ மதத்துக்கு மாறிய இந்த ஊர் மக்களுக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஸ்ரீனிவாசப் பெருமாளின் ஐம்பொன் சிலை பூமிக்குள் இருந்து கண்டெடுக்கப்பட்டது.

    நவாபுகள் வருகையால் ஐம்பொன் சிலைக்கு ஆபத்து வருமோ என்று அஞ்சி, சிலைகளைப் பூமியில் புதைத்து வைத்தார்கள். அதில் ஒரு சிலை, 1983-ம் ஆண்டு வீடுகட்டுவதற்கு அஸ்திவாரம் தோண்டும் போது கிடைத்தது.

    லட்சுமி நரசிம்ம பெருமாள் சிலை. 600-700 ஆண்டுகளுக்கு முந்தைய சிலையென்றும் 83-ம் ஆண்டு அரசுத்தரப்பில் கூறினார்கள்.

    கொப்பூர் கிராமம் அருகே முகலாயர்கள் தண்டல் வசூலித்த இடம் தற்போது தண்டலம் என்று அழைக்கப்படுகிறது. மேலும் இந்த கொப்பூர் கிராமத்தில் ஒரு கட்டத்தில் ஊரே பாழாகி (வீடு, மாடு, கன்றெல்லாம் பறிபோனதை அப்படிச் சொல்கிறார்கள்) எல்லாரும் ஊரை விட்டு வேறிடங்களுக்குப் போய் விட்டார்கள். பிறகு மூன்று குடும்பத்தார் மீண்டும் குடியேறி இப்போது 500-க்கும் மேற்பட்ட குடும்பங்களாகப் பெருகியிருக்கிறது.

    இந்த கிராமத்தில் பூமியில் தோண்டியெடுக்கப்பட்ட ஐம்பொன்சிலைகளைத் தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று அரசாங்கம் வழக்கு தொடர்ந்தது. 'இது எங்கள் புராதனச் சொத்து தரமுடியாது' என்று கொப்பூர் ஊரில் இருக்கும் ஸ்ரீனிவாசப் பெருமாள் கோவிலேயே அவற்றை வைத்திருக்கிறார்கள்.

    மேலும் இந்த ஊரில் உள்ள சிவலிங்கத்தை பாதுகாக்க வேண்டியது ஊர் மக்களின் பொறுப்பு. அதற்காக கோவில் கட்டிச் செழுமைப்படுத்துவதிலும் ஆண்டுதோறும் விழா நடத்துவதும் ஊர் மக்களின் கடமை.

    இந்த ஊர் எல்லையில் பூமிக்கு அடியில் கிடைத்த சிவலிங்கம், நந்தீஸ்வரர், விநாயகர், அம்பாள் உள்ளிட்ட கடவுள் சிலைகள் சாய்ந்த நிலையில் உள்ளதால் பக்தர்கள் வேண்டுதலை செவி கொடுத்து கேட்டு அருள் அளிப்பதாக ஊர் மக்களின் நம்பிக்கையாக இருந்து வருகின்றனர்.

    காஞ்சீபுரம், திருவள்ளூர் பகுதியில் உள்ள பெரும்பாலான இடங்களில் ஆசிரியர்கள் பணிக்கு வராததால் பள்ளிகள் திறக்கப்படாமல் உள்ளன. இதனால் மாணவ-மாணவிகள் அவதி அடைந்து உள்ளனர்.
    திருவள்ளூர்:

    பழைய ஓய்வு ஊதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பினர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளி ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் அனைவரும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இன்று 3-ம் நாளாக அவர்களது போராட்டம் நீடித்தது.

    இதனால் திருவள்ளூர் பகுதியில் உள்ள பெரும்பாலான இடங்களில் ஆசிரியர்கள் பணிக்கு வராததால் பள்ளிகள் திறக்கப்படாமல் உள்ளன. இதனால் மாணவ-மாணவிகள் அவதி அடைந்து வருகிறார்கள்.

    பெரும்பாலான சத்துணவுப் பணியாளர்கள், அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டத்தில் கலந்து கொள்வதால் மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடி, தொடக்கப்பள்ளி மூடப்பட்டு உள்ளது. இதனால் மாணவர்கள் பள்ளிக்கு விடுமுறை என்று திரும்பி சென்றனர்.

    திருவள்ளூர் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் ஜாக்டோ-ஜியோ சங்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கதிரவன், சவுத்ரி, இளங்கோவன், ஞானசேகரன், பாஸ்கர், ராமகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. பின்னர் அவர்கள் வட்டாட்சியர் அலுவலகம் அருகே சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

    காஞ்சீபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம், உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதூர், செங்கல்பட்டு உள்ளிட்ட அனைத்து வட்ட தலைநகரங்களிலும் ஆர்பாட்டம் மற்றும் மறியல் 3-வது நாளாக நடைபெற்றது. காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள காவலான் கேட் பகுதியில் மறியல் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு ஜாக்டோ ஒருங்கிணைப்பாளர் ஜெபநேசன், ஜியோ ஒருங்கிணைப்பாளர் விக்டர் சுரேஷ்குமார் தலைமை தாங்கினர். தமிழ்நாடு அரசு வருவாய்துறை ஊழியர்கள் சங்க மாவட்ட பொருளாளர் ரமேஷ் முன்னிலை வகித்தார்.

    போராட்டத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் வருவாய்துறை அலுவலர் சங்கம், ஊரக வளர்ச்சி துறை அலுவலகர்கள் சங்கம், சத்துணவு ஊழியர்கள் சங்கம், கிராம உதவியாளர் சங்கம் உள்ளிட்ட 60க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் சங்கத்தினரும், 30-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் சங்கங்களும் கலந்து கொண்டனர்.

    இதேபோல் மாவட்டத்தில் மதுராந்தகம், திருக்கழுக்குன்றம், திருப்போரூர், உத்திரமேரூர், வாலாஜாபாத் உள்ளிட்ட பகுதிகளிலும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். நாளை (25-ந் தேதி) மாவட்ட தலைநகரங்களில் சாலை மறியல் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்படும் என ஜாக்டோ ஜியோ சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #tamilnews
    காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்ட பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு நடந்தது.
    காஞ்சீபுரம்:

    108 திவ்ய தேசங்களில் புகழ் பெற்ற காஞ்சீபுரம் வைகுண்ட பெருமாள்கோவில், அஷ்டபுஜம் பெருமாள் கோவில்களில் நேற்று அதிகாலை வைகுண்ட ஏகாதசியையொட்டி சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் காஞ்சீபுரம் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் வாலாஜாபாத் கணேசன், காஞ்சீபுரம் உதவி ஆணையர் ரமணி, கோவில் செயல் அலுவலர்கள் குமரன், கவிதா உள்பட நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    காஞ்சீபுரம் மாவட்டம் செங்கல்பட்டு அடுத்த சிங்கபெருமாள் கோவிலில் உள்ள புகழ் பெற்ற பாடலாத்ரி நரசிம்மபெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி நேற்று அதிகாலை சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.

    இதேபோல் 108 திவ்யதேசங்களில் ஒன்றான மாமல்லபுரம் தலசயன பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி நேற்று அதிகாலை சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். சொர்க்க வாசல் திறப்பையொட்டி குலசேகரஆழ்வார் ராமானுஜா அறக்கட்டளை சார்பில் வைணவ பக்தர் கிருஷ்ணராமானுஜர் தாசர் விழாவில் கலந்து கொண்ட 500 பேருக்கு அன்னதானம் வழங்கினார். விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் சங்கர் செய்திருந்தார்.

    திருவள்ளூர் மாவட்டம் ஆரணி ஆதிலட்சுமி சமேத ஆதிகேசவபெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. நிகழ்ச்சியில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    பள்ளிப்பட்டு ஸ்ரீதேவி, பூதேவி உடனுறை வரதநாராயண சாமி கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா நேற்று நடைபெற்றது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    108 திவ்யதேசங்களில் ஒன்றாக திகழும் திருவள்ளூர் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வீரராகபெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. வீரராகவ பெருமாள் ஸ்ரீதேவி பூதேவியுடன் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

    அதே போல திருவள்ளூர் பூங்காநகரில் உள்ள ஜலநாராயண சாமி கோவில் மற்றும் பேரம்பாக்கம் கமலவள்ளி சமேத வைகுண்ட பெருமாள் கோவில்களிலும் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

    ×