என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "TN Police"
- செல்போன் பேசி கொண்டே டி.டி.எப். வாசன் கார் ஓட்டிய வீடியோ வைரலானது.
- வாசனுக்கு முதுகுவலி உள்ளது, கண்ணாடி அணிந்து தான் வெளியே செல்ல முடியும்.
செல்போன் பேசிக்கொண்டே கார் ஓட்டிய வழக்கில் டிடிஎப் வாசனை காவல்துறையினர் கைது செய்தனர்.செல்போன் பேசி கொண்டே டிடிஎப் வாசன் கார் ஓட்டிய வீடியோ வைரலாக நிலையில் காவல்துறை நடவடிக்கையை எடுத்துள்ளது.
இவர் மீது ஏற்கனவே வேகமாக வாகனம் ஓட்டுதல், விபத்து ஏற்படுத்தும் வகையில் செயல்படுதல், போக்குவரத்து விதிகளை மீறியது உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், தற்போது பிறருக்கு மரணம் ஏற்படுத்தும் வகையில் ஒரு காரியத்தை செய்தல் என மற்றொரு பிரிவிலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு மதுரை குற்றவியல் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. நீதிமன்ற வளாகத்திற்கு டிடிஎப் வாசன் போலீஸ் பாதுகாப்போடு அழைத்து வரப்பட்டார். அப்போது, "வீதிக்கு ஒரு டாஸ்மாக் கடை இருக்கிறது, அதனால் யாரும் கெட்டுப் போகவில்லையா? என்னை பார்த்து தான் இளைஞர்கள் கெட்டுப் போகிறார்களா? என் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது எனக்கு நீதி வேண்டும்" என்று டிடிஎப் வாசன் கூச்சலிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த வழக்கின் விசாரணையில் டிடிஎப் வாசன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "டிடிஎப் வாசனால் எந்தவொரு தனிமனிதனும் பாதிக்கவில்லை, புகாரும் அளிக்கவில்லை எனவும் சென்னையில் இருந்து சென்ற போது எந்த காவலரும் விதிமீறல் குறித்து பார்க்கவில்லையா? காவலர் கொடுத்த புகாரில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வாசனுக்கு முதுகுவலி உள்ளது, கண்ணாடி அணிந்து தான் வெளியே செல்ல முடியும். வரும் 4ஆம் தேதி சினிமா பட சூட்டிங் உள்ளது, எனவே நிபந்தனை ஜாமின் வழங்க வேண்டும்" என்று தனது வாதத்தை முன்வைத்தார்.
கார் ஓட்டுநர் உரிமம் பெற LLR மட்டுமே வைத்துள்ள டிடிஎப் வாசன், தேசிய நெடுஞ்சாலையில் வாகனத்தை இயக்கியுள்ளார் என்று அரசுத்தரப்பு வாதம் முன்வைத்தது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, டிடிஎப் வாசனுக்கு ஜாமின் வழங்கி உத்தரவு பிறப்பித்தார். மேலும், இனி இதுபோன்ற செயலில் ஈடுபட மாட்டேன் என மன்னிப்பு கோரி டிடிஎப் வாசன் வீடியோ வெளியிட வேண்டும் எனவும் அதனை கடிதம் வாயிலாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.
- டிடிஎப் வாசன் தனது கார் மூலமாக ஊர் ஊராக சுற்றி வருகிறார்.
- அதனை கார் ஓட்டியபடி வீடியோவாக பதிவுசெய்து வருகிறார்.
மதுரை:
பிரபல யூடியூபர் டி.டி.எப். வாசன் கடந்தாண்டு காஞ்சிபுரத்தில் பைக் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். பொதுமக்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் விதமாக பைக் ஓட்டியதாக வழக்குப்பதிவு செய்து, மருத்துவமனையில் படுத்துக்கிடந்தவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
அதன்பின், டிடிஎப் வாசன் புழல் சிறையில் இருந்து கடந்த நவம்பரில் ஜாமினில் வெளியே வந்தார். நீதிமன்ற உத்தரவுப்படி வாசனின் ஓட்டுநர் உரிமம் 10 ஆண்டு ரத்துசெய்து உத்தரவிடப்பட்டிருந்தது.
இதற்கிடையே, சமீபத்தில் ஹைவேயில் கார் ஓட்டிச்சென்ற டிடிஎப் வாசன், தான் கம்பேக் கொடுத்துவிட்டேன் என ரசிகர்களுக்காக வீடியோ வெளியிட்டிருந்தார். தொடர்ந்து வாசன் தனது கார் மூலமாக ஊர் ஊராகச் சுற்றி வருகிறார். அதனை கார் ஓட்டியபடி வீடியோவாக பதிவு செய்தும் வருகிறார்.
இந்நிலையில், பிரபல யூடியூபர் டி.டி.எப். வாசன் மதுரை அண்ணாநகர் போலீசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். சென்னையில் இருந்து மதுரை வழியாக தூத்துக்குடி செல்லும்போது செல்போன் பேசியபடி கார் ஓட்டியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக, கடந்த 15-ம் தேதி இரவு 7.50 மணிக்கு மதுரை வண்டியூர் டோல்கேட் பகுதியில் காரை அஜாக்கிரதையாகவும், கவனக் குறைவாகவும் பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் விதமாக செல்போனில் பேசிக்கொண்டே ஓட்டுவதும், அச்செயலை காரின் டேஸ்போர்டு கேமராவில் பதிவுசெய்து யூடியூப் சேனலில் பதிவிட்டுள்ளார்.
இதுகுறித்து மதுரை மாநகர ஆயுதப்படை சப்-இன்ஸ்பெக்டரும், சமூக ஊடகப்பிரிவு கண்காணிப்பு அலுவலருமான மணிபாரதி அண்ணாநகர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் டி.டி.எப். வாசன் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். கைது செய்யப்பட்ட அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
- மது விலக்கு குறித்து பேரணி நடத்த பா.ம.க. மனு அளித்தது
- மராத்தான் ஓட்டத்திற்கு அனுமதி வழங்குவதை நீதிபதி குறிப்பிட்டார்
பாட்டாளி மக்கள் கட்சி, தமிழகம் முழுவதும் பூரண மதுவிலக்கு கோரி பல வருடங்களாக தமிழ்நாட்டின் ஆளும் கட்சிகளுக்கு கோரிக்கை வைத்து வருகிறது. அக்கட்சியின் முக்கிய கொள்கைகளில் ஒன்றாக பூரண மதுவிலக்கை நீண்ட காலமாக பிரச்சாரம் செய்து வருகிறது.
தங்களின் கோரிக்கையை மக்களிடம் பிரச்சாரம் செய்ய அக்டோபர் 5-ஆம் தேதி ஒரு மோட்டார் சைக்கிள் பேரணியை நடத்த ராணிப்பேட்டை காவல்துறை துணை கண்காணிப்பாளரிடம் பா.ம.க. சார்பில் மனு அளிக்கப்பட்டது. ஆனால் காவல்துறை அனுமதி வழங்கவில்லை.
அனுமதி மறுக்கப்பட்டதால் பா.ம.க. சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதி ஜி. ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது.
பேரணி செல்லும் பாதையில் பிற மதத்தினர் உள்ளனர் என கூறி அனுமதி மறுக்கப்பட்டதாகவும், பா.ம.க. மதம் சார்ந்த கட்சி அல்ல என்றும் பா.ம.க. வழக்கறிஞர் தெரிவித்தார்.
இதை கேட்ட நீதிபதி ஜெயச்சந்திரன் அரசு தரப்பு வக்கீலிடம் சரமாரியாக கேள்விகள் எழுப்பினார்.
அவர் விசாரணையின் போது கேட்டதாவது:
ஆளும் கட்சியினர் மராத்தான் ஓடவும், நடப்பதற்கும் அனுமதி வழங்குகிறீர்கள்; மதுவுக்கு எதிரான பிரச்சாரத்திற்கு அனுமதி வழங்கினால் என்ன? யாருக்காக காவல்துறை உள்ளது? தமிழ்நாட்டில் வருமான வரித்துறையும், அமலாக்கத்துறையும் சோதனைகளை நடத்தினால் அவை மத்திய அரசின் ஏஜென்சிகள் என குற்றம் சாட்டுகிறீர்கள். அப்படி என்றால் தமிழ்நாடு காவல்துறை யாருடைய ஏஜென்சியாக செயல்படுகிறது? ஆளும் கட்சிக்கு ஆதரவாகத்தான் காவல்துறை செயல்படுமா?
இவ்வாறு நீதிபதி கேள்வி எழுப்பினார்.
விவாதங்களுக்கு பிறகு வழக்கை வரும் 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
- உயர் அதிகாரியாக இருக்கும் ஒருவருக்கே இவ்வளவு மன அழுத்தம் என்றால் சாதாரண காவலர்களின் நிலை என்ன என்கிற கேள்வியையும் பலரும் எழுப்புகிறார்கள்.
- சிறப்பாக பணியாற்றும் போலீசாரை நேரில் அழைத்தும் காவல் துறை உயர் அதிகாரிகள் பாராட்டி வருகிறார்கள்.
காவல்துறை பணி என்பது நேரம் காலம் பார்க்காமல் செயல்படும் பணியாகும். இதன் காரணமாக காவல்துறையில் பணியில் இருப்பவர்கள் குடும்பத்தினரோடு நேரத்தை செலவழிப்பது என்பது இயலாத காரியமாகவே மாறி இருக்கிறது.
கடைநிலை காவலர்கள் முதல் உயர் போலீஸ் அதிகாரிகள் வரையில் இதற்கு விதிவிலக்கு அல்ல. காலையில் 10 மணிக்கு பணிக்கு சென்று விட்டு மாலை 5 மணிக்கு வீடு திரும்பும் மற்ற பணிகளைப் போல் அல்லாமல், கூப்பிடும் நேரங்களில் எல்லாம் வேலைக்கு செல்ல வேண்டிய கட்டாயம் காவலர்களுக்கு மட்டுமே இருந்து வருகிறது.
இதனால் காவல்துறையில் பணியில் இருப்போர் தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் கூட தங்களது குடும்பத்தினரோடு நேரத்தை செலவழிக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள். இப்படி ஓய்வில்லாமல் பணிபுரிவதன் காரணமாகவே அவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படுவதாக கூறப்படுகிறது.
குடும்பத்தினரோடு நேரத்தை செலவிட முடியாததால்தான் மனைவி மற்றும் குடும்பத்தினரின் கோபம், பணியின் போது உயர் அதிகாரிகளின் கோபம் என காவலர்கள் அலுவலகத்திலும் வீட்டிலும் தினம் தினம் சங்கடங்களை சந்திக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். இது நாளடைவில் பெரிய மனச்சோர்வை ஏற்படுத்தி மன அழுத்தமாக மாறிவிடுகிறது என்றால் அது மிகையாகாது.
இப்படி தமிழக காவல்துறையில் பணிபுரியும் காவலர்களில் பலர் பணி சுமையுடனேயே காலத்தைத் தள்ளிக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் ஒரு கட்டத்துக்கு மேல் இனி வாழ்ந்தது போதும் என்கிற முடிவுக்கு வந்து தற்கொலை செய்து கொள்கிறார்கள்.
காவலர்கள் முதல் ஆய்வாளர்கள் வரையிலான அதிகாரிகளே இது போன்ற தற்கொலை எண்ணத்திற்கு தொடர்ந்து தள்ளப்பட்டிருக்கும் நிலையில், ஐ.பி.எஸ். அதிகாரியான விஜயகுமாரின் தற்கொலை தமிழக காவல் துறையையே உலுக்கி எடுத்துள்ளது. கடுமையான போராட்டங்களுக்கு பிறகு இவ்வளவு பெரிய அந்தஸ்தை எட்டிப் பிடித்த ஒரு ஐ.பி.எஸ். அதிகாரியே மன அழுத்தத்துக்கு ஆளாகி தனது உயிரையே துறந்திருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பி இருக்கிறது.
உயர் அதிகாரியாக இருக்கும் ஒருவருக்கே இவ்வளவு மன அழுத்தம் என்றால் சாதாரண காவலர்களின் நிலை என்ன என்கிற கேள்வியையும் பலரும் எழுப்புகிறார்கள். இதுபோன்ற மன அழுத்தத்தை போக்க தமிழகம் முழுவதுமே அனைத்து மாவட்டங்களிலும் பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
இருப்பினும் காவல்துறை மரணங்கள் என்பது தவிர்க்க முடியாததாகவே இருந்து வருகிறது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் காவல் ஆணையாளர்கள் உள்ளிட்டோர் தங்களது பகுதியில் உள்ள காவலர்களுக்கு மனச்சோர்வை போக்கும் வகையில் அவ்வப்போது அவர்களுக்கு தேவையான கவுன்சிலிங் உள்ளிட்டவற்றை வழங்கி வருகிறார்கள்.
அந்த வகையில் சென்னை மாநகர காவல்துறையில் காவல் துறையினரின் மனச்சோர்வை போக்குவதற்காக மகிழ்ச்சி-ஆனந்தம் என்கிற இரண்டு திட்டங்கள் முழுமையாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
போலீஸ் கமிஷனராக இருந்த சங்கர் ஜிவால் இந்த இரண்டு திட்டங்களையும் அறிமுகப்படுத்தி காவலர்களின் மன அழுத்தத்தை போக்க பல்வேறு பயிற்சிகளுக்கு வித்திட்டார். இதன் ஒருங்கிணைப்பாளராக கூடுதல் கமிஷனர் லோகநாதன் உள்ளார். மகிழ்ச்சி திட்டத்தின் கீழ் இதுவரையில் 2500-க்கும் மேற்பட்ட காவலர்களுக்கு முழு அளவிலான மன பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை குருநானக் கல்லூரியில் இதற்கென தனி பயிற்சி மையமே செயல்பட்டு வருகிறது. இங்கு மன அழுத்தத்தோடு செல்லும் காவலர்களுக்கு மட்டுமின்றி, போதைக்கு அடிமையாகி இருக்கும் காவலர்களுக்கும் முழுமையான பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் சுமார் 600 காவலர்கள் போதை பழக்கத்தில் இருந்து விடுபட்டு இயல்பு நிலைக்கு திரும்பி இருக்கிறார்கள். காவலர்களை ஒருங்கிணைத்து செயல்படுத்துவதற்காக தனித்தனி பணியாளர்களும் அங்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.
காவலர்களின் எண்ண ஓட்டத்தை புரிந்து கொண்டு அவர்களுக்கு தேவையான கவுன்சிலிங் அளிப்பதற்கும் டாக்டர்கள் தயார் நிலையில் இருக்கிறார்கள்.
இந்த மையம் தொடங்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதற்கு காவலர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் உள்ளது. இதேபோன்று பெண்களுக்காக பிரத்யேகமாக தொடங்கப்பட்ட திட்டம் தான் ஆனந்தம். இந்த ஆனந்தம் திட்டத்தின் கீழ் பெண் காவலர்களுக்கு தேவையான மனநல ஆலோசனைகள் வாரத்தில் மூன்று நாட்கள் வழங்கப்பட்டு வருகிறது. வெள்ளி சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்களும் எழும்பூரில் ராஜரத்தினம் மைதானத்தில் பெண் காவலர்களுக்கு யோகா உள்ளிட்ட பயிற்சிகளும் அளிக்கப்பட்டு வருகிறது.
ஆண் காவலர்களைவிட பெண் காவலர்களுக்கு மன ரீதியான பயிற்சி அதிகமாக தேவைப்படுகிறது. சென்னையில் 5500 பெண் காவலர்கள் பணியாற்றி வருகிறார்கள். இவர்களில் 3000-க்கும் மேற்பட்டோருக்கு உரிய பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது. பெண் காவலர்களை பொறுத்தவரையில் போலீசார் முதல் இன்ஸ்பெக்டர் வரையிலானவர்களுக்கு இந்த பயிற்சி அளிக்கப்படுகிறது.
இவர்கள் காவல்துறை பணியையும் பார்த்துக் கொண்டு தங்களது குடும்பத்தினரையும் கவனிக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால் அதிக மன அழுத்தத்திற்கு ஆளாவதற்கு வாய்ப்பு இருப்பதாக காவல் துறை உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாக அவர்களுக்கென்று பிரத்தியேகமாக 'ஆனந்தம்' என்கிற திட்டமும் சென்னை மாநகர காவல் துறையில் அறிமுகப்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதனை கமிஷனர் சாமுண்டீஸ்வரி மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் மேரிராஜூ ஒருங்கிணைக்கும் பணியை செய்து வருகிறார். சென்னை காவல் துறையில் போலீசாரின் பிறந்த நாள் அன்று காவலர்களை அழைத்து அவர்களுக்கு வாழ்த்து தெரிவிப்பதை முன்னாள் போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் வழக்கமாக வைத்திருந்தார்.
தற்போதைய கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோரும் அதனை கடைபிடித்து வருகிறார். இதுபோன்ற மன அழுத்த பயிற்சி மற்றும் வாழ்த்துக்கள் ஆகியவை காரணமாக சென்னை மாநகர போலீசார் ஓரளவுக்கு மன அழுத்தமின்றி பணிபுரிந்து வருவதாக உயர் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
அதே நேரத்தில் சிறப்பாக பணியாற்றும் போலீசாரை நேரில் அழைத்தும் காவல் துறை உயர் அதிகாரிகள் பாராட்டி வருகிறார்கள். அவர்கள் தொடர்பான வீடியோக்களும் மாநகர கமிஷனர் அலுவலகத்தில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இது காவலர்கள் மேலும் உத்வேகத்தோடு பணியாற்ற ஒரு வாய்ப்பை ஏற்படுத்தி வருகிறது என்பதும் உயர் அதிகாரிகளின் கருத்தாக உள்ளது. இப்படி பல்வேறு மன அழுத்த பயிற்சிகள் காவல் துறையினருக்கு வழங்கப்பட்ட போதிலும் போதிய அளவிலான விடுமுறை அவர்களுக்கு கிடைத்தால் மட்டுமே மன அழுத்தத்தில் இருந்து அவர்கள் முழுமையாக வெளிவர முடியும் என்பதே அனைவரின் கருத்தாக உள்ளது.
இதற்கு தேவையான அளவு காவலர்களை காவல் துறையில் அமர்த்தி விடுமுறை தேவைப்படும் காவலர்களுக்கு உரிய முறையில் விடுமுறை அளிக்க வேண்டும் என்பதுதான் அனைத்து காவலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
தமிழக காவல் துறையில் உயர் பொறுப்பில் உள்ள அதிகாரிகள் இதுபற்றி கூடுதல் கவனம் செலுத்தி தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அப்போது தான் காவல் துறையில் மன அழுத்தம் மறைந்து புத்துணர்ச்சி பிறக்கும் என்பதே அனைத்து காவலர்களின் கருத்தாக உள்ளது.
- பொதுமக்களிடம் பரிவுடன் நடந்துகொள்ள வேண்டும். அதற்காக அதிகாரிகளுக்கு நான் நேரில் பயிற்சி அளித்தேன்.
- நம்மைப்பற்றிய விமர்சனம் பலவரும். இங்கு குறைகள் பூதாகரமாக பார்க்கப்படும்.
சென்னை:
தமிழக போலீஸ் டி.ஜி.பி.யாக இருந்த சைலேந்திரபாபு காவல் அதிகாரிகள், மற்றும் போலீசாருக்கு கடிதம் ஒன்றை எழுதி உள்ளார்.
அதில் தனது பணிக்காலத் தில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு பணிகளை சுட்டிக் காட்டி இருப்பதுடன் காவலர்கள் எப்படி செயல்பட வேண்டும் என்பதையும் அறிவுறுத்தியுள்ளார். கடிதத்தில் சைலேந்திரபாபு கூறி இருப்பதாவது:-
தமிழ்நாடு காவல்துறையின் தலைமைப் பொறுப்பில் இருந்து பணி நிறைவு பெற்று உங்களிடம் இருந்து விடைபெறுகிறேன்.
இரண்டாண்டு காலம் சட்டம்-ஒழுங்கை சிறப்பாக பராமரித்தோம், குற்ற நிகழ்வுகளை தடுத்தோம், நடந்த குற்றங்களைக் கண்டுபிடித்தோம். கண்டுபிடிக்க முடியாத சில வழக்குகளில் இன்னும் தீவிர விசாரணை செய்கிறோம்.
ஆனால், தவறாக ஒருவரை குற்றவாளியாக்கவில்லை. அதுபோல குற்றம் செய்தவர்கள் யாராக இருந் தாலும் அவர்களை விட்டு விடவில்லை.
ரவுடிகள் தொல்லை இல்லை, கூலிப்படைகள் நடமாட்டம் இல்லை என்ற நிலைமையை உருவாக்கினோம். இவை அனைத்தும் உங்கள் முயற்சியால் ஏற்பட்டது. எனவே உங்களுக்கு பாராட்டுகள். உங்களுக்கு தலைமை தாங்கியதை பெருமையாக நினைக்கிறேன்.
கடந்த 2 ஆண்டுகளில் 3 லட்சம் இந்திய தண்டனை சட்ட வழக்குகள், 6 லட்சம் சிறு வழக்குகள், 18 லட்சம் இதர மனுக்கள் விசாரிக்கப்பட்டன. மோட்டார் வாகன சட்டத்தில் 5 கோடியே 30 ஆயிரம் வாகன வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 536 கோடி ரூபாய் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. இவை பெரும் பணியாகும்.
பொதுமக்களிடம் பரிவுடன் நடந்துகொள்ள வேண்டும். அதற்காக அதிகாரிகளுக்கு நான் நேரில் பயிற்சி அளித்தேன். தலைமைப் பண்பு வளர்க்க உடல்நலம், மனநலம் காக்க வேண்டும். தொடர்கல்வி கற்க வேண்டும். ஒருமணி நேரம் உடற்பயிற்சி செய்ய வேண்டும். அளவோடு உணவு உண்ண வேண்டும். காவல்துறையின் 1,34,000 பேரும் ஓர் ஆளுமை என்ற நிலை வரவேண்டும். அப்போது நம் செயல் சிறப்படையும். காவல்துறையின் செயல்பாட்டில் விரும்பத்தக்க மாற்றம் ஏற்படும்.
வதந்திகளைக் கையாண்டது, ரவுடிகளின் கொட்டத்தை அடக்கியது, கூலிப்படையினரை காணாமல் போகச் செய்தது, போதைப் பொருள் நட மாட்டத்தை குறைத்தது, தொழில்நுட்பத்தில் ஏற்படுத்திய புரட்சி போன்ற உங்கள் சாதனைகளைப் பார்த்து நான் வியப்படைகிறேன்.
பொதுமக்கள் நம்மிடம் நிறைய எதிர்ப்பார்கிறார்கள். அவர்களின் எதிர்பார்ப்புகளை நிவர்த்தி செய்து, அவர்களின் மனதில் இடம் பிடிப்பது நமது லட்சியமாக இருக்க வேண்டும்.
நம்மைப்பற்றிய விமர்சனம் பலவரும். இங்கு குறைகள் பூதாகரமாக பார்க்கப்படும். ஆனால், நிறைகள் கண்டுகொள்ளப்படுவதில்லை. இருப்பினும் குற்றச் சாட்டுகளை ஆராய்ந்து பார்த்து, அவற்றின் உண்மைத் தன்மையை கண்டறிந்து நம்மை நாம் திருத்திக் கொள்ள ஒரு சந்தர்ப்பமாக அதை எடுத்துக்கொண்டு, நாம் சரியான பாதையில் தொடர்ந்து பயணிப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- சென்னை மாநகர காவல் துறை சார்பில் ரூ.1 லட்சத்து 39 ஆயிரம் பணம் வழங்கப்பட்டது.
- மொத்த பணத்தையும் ரமேசின் மகன் திவ்யேசிடம் வழங்கும் நிகழ்ச்சி கமிஷனர் அலுவலகத்தில் நடைபெற்றது.
சென்னை:
சென்னை மாநகர காவல் துறையில் தெற்கு மண்டலம் சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்து வந்தவர் ஏட்டு ரமேஷ். உடல்நலக்குறைவு காரணமாக இவர் கடந்த பிப்ரவரி மாதம் உயிரிழந்தார்.
அவரது மனைவி 2 ஆண்டுகளுக்கு முன்பே உயரிழந்து விட்ட நிலையில் அவர்களது மகன் திவ்யேஷ், ரமேசின் சகோதரி கஸ்தூரி குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். அரும்பாக்கத்தில் உள்ள பள்ளியில் 8-ம் வகுப்பு படிக்கிறார்.
உயிரிழந்த ஏட்டு ரமேசுடன் 1999-ம் ஆண்டு பணியில் சேர்ந்த சக காவலர்கள் அவரது குடும்பத்துக்கு உதவும் வகையில் நிதி திரட்டினர். "உதவும் உறவுகள் 99" என்ற வாட்ஸ்அப் குழு மூலம் ரூ.14 லட்சம் வரையில் (ரூ.13 லட்சத்து 93 ஆயிரம்) நிதி திரட்டினர். இந்த மொத்த பணத்தையும் ரமேசின் மகன் திவ்யேசிடம் வழங்கும் நிகழ்ச்சி கமிஷனர் அலுவலகத்தில் நடைபெற்றது.
கமிஷனர் சங்கர் ஜிவால் இந்த பணத்தை வழங்கினார். மேலும் சென்னை மாநகர காவல் துறை சார்பில் ரூ.1 லட்சத்து 39 ஆயிரம் பணம் வழங்கப்பட்டது. இதன் மூலம் ரூ.15 லட்சத்து 32,300-க்கான காசோலை திவ்யேசிடம் வழங்கப்பட்டது.
ஏட்டு ரமேசின் குடும்பத்துக்கு தேவையான உதவிகளை வழங்கவும் கமிஷனர் உத்தரவிட்டார். கூடுதல் கமிஷனர் லோகநாதன், துணை கமிஷனர் ராதா கிருஷ்ணன் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர். 1999-ம் ஆண்டு பணியில் சேர்ந்த காவலர்களின் இந்த உதவும் குணத்தை அனைவரும் பாராட்டினார்கள். 2,727 காவலர்கள் சேர்ந்து இந்த பணத்தை திரட்டி இருப்பது குறிப்பிடத்தக்கது.
- பாதுகாப்பில்லாத இடங்களில் பூட்டி கிடக்கும் வீடுகள் பற்றி போலீசார் விசாரித்து போன் நம்பர் வாங்கி எப்போது திரும்பி வருவீர்கள் என்று விசாரிக்கிறார்கள்.
- பொதுமக்கள் ஜாலியாக சொந்த ஊர்களில் இருக்கும் நிலையில் அவர்களது வீடுகளை கொள்ளையர்களிடம் இருந்து பாதுகாக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகிறார்கள்.
சென்னை:
கோடை விடுமுறையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வசிப்பவர்களில் பெரும்பாலானவர்கள் சொந்த ஊர்களுக்கு சென்று விடுவார்கள்.
சிலர் கோடை விடுமுறை முழுவதையும் சொந்த ஊரில் கழிப்பார்கள். சிலர் சுற்றுலா தலங்களுக்கு சென்று வருவார்கள்.
இதனால் ஆயிரக்கணக்கான வீடுகள் பூட்டி கிடக்கின்றன. அவ்வாறு பூட்டி கிடக்கும் வீடுகளை பகல் நேரங்களில் வியாபாரிகள் போல் சென்று நோட்டம் போட்டு இரவில் பூட்டை உடைத்து கொள்ளையடித்து செல்வதுண்டு. கடந்த ஆண்டு அந்த மாதிரியான சம்பவங்கள் சில இடங்களில் நடந்தன.
இந்த ஆண்டும் அதே போல் நடக்கும் கொள்ளை சம்பவங்களை தடுக்க போலீசார் புதிய திட்டம் ஒன்றை வகுத்துள்ளார்கள். சென்னை, தாம்பரம் மாநகர பகுதியிலும், ஆவடி பகுதியிலும் பூட்டி கிடக்கும் வீடுகளை தினமும் கண்காணிக்க சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால், தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ், ஆவடி போலீஸ் கமிஷனர் அருண் ஆகியோர் காவல் துணை ஆணையர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்கள்.
தினமும் பகல், மாலை, நள்ளிரவு ஆகிய 3 நேரமும் பூட்டிய வீடுகளை போலீசார் கண்காணிப்பார்கள். அடுக்குமாடி குடியிருப்புகளில் பூட்டி கிடக்கும் வீடுகள் பற்றி குடியிருப்போர் நலச்சங்கங்களிடம் தகவல் கேட்டு அவற்றையும் கண்காணிப்பார்கள்.
வீடுகளை பூட்டி செல்வது பற்றி அருகில் இருக்கும் போலீஸ் நிலையங்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று ஏற்கனவே போலீசார் அறிவுறுத்தி இருக்கிறார்கள். ஆனால் பலர் அதை கடைபிடிப்பதில்லை.
பாதுகாப்பில்லாத இடங்களில் பூட்டி கிடக்கும் வீடுகள் பற்றி போலீசார் விசாரித்து போன் நம்பர் வாங்கி எப்போது திரும்பி வருவீர்கள் என்றும் விசாரிக்கிறார்கள்.
பொதுமக்கள் ஜாலியாக சொந்த ஊர்களில் இருக்கும் நிலையில் அவர்களது வீடுகளை கொள்ளையர்களிடம் இருந்து பாதுகாக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகிறார்கள்.
- தமிழ்நாட்டில் கடந்த 2 ஆண்டுகளில் 47 ஆயிரத்து 248 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டது.
- ஏப்ரல் 3-ந்தேதி இரவு முதல் “கஞ்சா வேட்டை 4.0” அதிரடி நடவடிக்கை தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது.
தமிழக காவல்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-
தமிழகத்தில் கஞ்சா, குட்கா மற்றும் போதைப் பொருட்களை முற்றிலும் ஒழிக்கும் பொருட்டு, 2021-ம் ஆண்டு முதல் 'கஞ்சா வேட்டை' நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழ்நாட்டில் கடந்த 2 ஆண்டுகளில் 47 ஆயிரத்து 248 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டது. இது தொடர்பாக 20 ஆயிரத்து 14 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 25,721 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதற்கிடையே கடந்த ஏப்ரல் 3-ந்தேதி இரவு முதல் "கஞ்சா வேட்டை 4.0" அதிரடி நடவடிக்கை தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. அதன்படி குன்றத்தூரில் நடைபெற்ற வாகன சோதனையின் போது ரூ.1 கோடி மதிப்புள்ள 22 டன் குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
கடத்தலுக்கு பயன்படுத்தப் பட்ட 7 சரக்கு வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இதற்கிடையே கஞ்சா பதுக்கி வைப்பவர்கள், விற்பர்கள் குறித்து 044-28447701 என்ற தொலைபேசி எண்ணிலும் tndgpcontrolroom@mail.com என்ற மின்னஞ்சல் வழியாகவும் தகவல் தெரிவிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ஊர்வலத்தில் செல்பவர்கள் மதம், மொழி, கலாச்சாரம் மற்றும் பிற குழுக்களின் உணர்வுகளை எந்த வகையிலும் புண்படுத்தும் வகையில் நடந்து கொள்ளக்கூடாது.
- பொதுச்சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டால் அதனை ஏற்கும் வகையில் ஊர்வல ஏற்பாட்டாளர்கள் உறுதி மொழி அளிக்க வேண்டும்.
சென்னை:
தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்துக்கு ஐகோர்ட்டு அளித்திருந்த அனுமதிக்கு எதிராக தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனு நேற்று முன்தினம் தள்ளுபடி செய்யப்பட்டது.
இதையடுத்து ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்துக்கு அனுமதி அளித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் சென்னை உள்பட 45 இடங்களில் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் நடத்த அந்த அமைப்பினர் முடிவு செய்தனர். இதற்கு போலீசார் அனுமதி அளித்துள்ளனர். இதையடுத்து திட்டமிட்டபடி ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் நடைபெற உள்ளது.
சென்னையில் 2 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் நடைபெறுகிறது. கொரட்டூர் விவேகானந்தா பள்ளி மற்றும் ஊரப்பாக்கம் சங்கராபள்ளி ஆகிய இடங்களில் இருந்து ஊர்வலமாக செல்கிறார்கள். முடிவில் பொதுக்கூட்டமும் நடைபெறுகிறது.
இதையொட்டி தமிழகம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு 12 நிபந்தனைகளை போலீசார் விதித்துள்ளனர். இது தொடர்பாக டி.ஜி.பி. சைலேந்திரபாபு அனைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள், கமிஷனர் அலுவலகங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில் கடுமையான நிபந்தனைகள் இடம்பெற்றுள்ளன அதன் விவரம் வருமாறு:-
* ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்தின் போது தனி நபர்களை குறிப்பிட்டோ சாதி, மதம் பற்றியோ எக்காரணம் கொண்டும் யாரும் தவறாக பேசக் கூடாது.
* இந்திய அரசால் தடை செய்யப்பட்ட அமைப்புகளுக்கு ஆதரவாக எந்தவித கருத்துக்களையும் வெளிப்படுத்தி பேசக்கூடாது. நமது நாட்டின் இறையாண்மைக்கும், ஒருமைப்பாட்டுக்கும் ஊறுவிளைவிக்கும் எந்த செயலையும் யாரும் செய்யக்கூடாது.
* பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தாத வகையில் ஊர்வலம் மற்றும் நிகழ்ச்சியை நடத்த வேண்டும்.
* ஊர்வலத்தில் கலந்து கொள்பவர்கள் யாருக்கும் காயம் ஏற்படுத்தக்கூடிய வகையில் கம்பு மற்றும் ஆயுதங்கள் எதையும் கைகளில் ஏந்திச் செல்லக்கூடாது.
* ஊர்வலத்துக்கு ஏற்பாடு செய்திருப்பவர்கள் குடிநீர் வசதி, முதல் உதவி, நடமாடும் கழிவறைகள், கேமராக்கள், தீயணைப்பு கருவிகள் போன்றவற்றை ஏற்படுத்திக்கொள்ள போலீசார் மற்றும் உள்ளாட்சி அமைப்பினருடன் கலந்து ஆலோசித்திருக்க வேண்டும்.
* அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் இடதுபுறமாக மட்டுமே ஊர்வலமாக செல்ல வேண்டும். அனுமதிக்கப்பட்ட சாலையில் நான்கில் ஒரு பகுதியை மட்டுமே ஊர்வலத்துக்காக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
* ஊர்வலத்தை நடத்தும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தவும், ஊர்வலத்தில் செல்பவர்களை ஒழுங்குப்படுத்தவும் போலீசுக்கு உதவும் வகையில் போதுமான தன்னார்வலர்களை நியமித்திருக்க வேண்டும்.
* போலீஸ் அனுமதி அளித்துள்ள வழித்தடத்தில் மட்டுமே ஊர்வலமாக செல்வதை ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
* பெட்டி வடிவிலான ஒலி பெருக்கிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஒலி சத்தம் 15 வாட்சுகளுக்கு மிகாமல் இருப்பது அவசியம். கூம்பு வடிவ ஒலிபெருக்கிகளை எக்காரணம் கொண்டும் பயன்படுத்தக்கூடாது.
* ஊர்வலத்தில் செல்பவர்கள் மதம், மொழி, கலாச்சாரம் மற்றும் பிற குழுக்களின் உணர்வுகளை எந்த வகையிலும் புண்படுத்தும் வகையில் நடந்து கொள்ளக்கூடாது.
* பொதுச்சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டால் அதனை ஏற்கும் வகையில் ஊர்வல ஏற்பாட்டாளர்கள் உறுதி மொழி அளிக்க வேண்டும்.
* இந்த நிபந்தனைகள் எதையும் ஊர்வலத்தில் செல்பவர்கள் எக்காரணம் கொண்டும் மீறக்கூடாது. அப்படி மீறும் வகையில் செயல்பட்டால் தேவையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
இவ்வாறு போலீசார் கடுமையான கட்டுப்பாடுகளை ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்துக்கு விதித்துள்ளனர்.
காவல் துறை அலுவலகம் சார்பில் அனுப்பப்பட்டுள்ள இந்த சுற்றிக்கையில் சென்னை ஐகோர்ட்டு விதித்துள்ள உத்தரவின் படியே மேற்கண்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
- சென்னையில் ரவுடிகளை கண்காணிக்கும் வகையில் ‘பருந்து’ என்ற பெயரில் போலீசார் செயலியை உருவாக்க உள்ளனர்.
- கடல் அலைகளில் சிக்கியவர்களை இரவில் அடையாளம் காணும் பணியையும் டிரோன் மேற்கொள்ளும்.
சென்னை:
சென்னை மாநகரின் வளர்ச்சிக்கு ஏற்ப போலீஸ் துறையும் நவீனமயமாகி வருகிறது. குற்றங்களை குறைப்பதற்கும், சாலை விபத்துகளை தடுப்பதற்கும், குழந்தைகள், பெண்கள் பாதுகாப்புக்காகவும் போலீசார் நவீன தொழில்நுட்பங்கள் அடிப்படையில் திட்டங்களை உருவாக்கி செயல்படுத்தி வருகின்றனர்.
அந்த வகையில் சென்னை போலீஸ்துறை சார்பில் 5 புதிய திட்டங்கள் தொடங்கப்பட உள்ளன. இந்த திட்டங்கள் குறித்து சென்னையில் போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் முன்னிலையில் கூடுதல் கமிஷனர் லோகநாதன் நிருபர்களிடம் விளக்கி கூறியதாவது:-
* இந்தியாவிலே முதன்முறையாக சென்னை அடையார் பெசன்ட் அவென்யூவில் டிரோன் போலீஸ் அலகு தொடங்கப்பட உள்ளது. விரைவு நடவடிக்கை கண்காணிப்பு டிரோன்கள்-6, 'ஹெவி லிப்ட் மல்டிரோட்டர்' டிரோன்-1, 'நீண்ட தூர ஆய்வு பிரிவு' டிரோன்-2 என மொத்தம் 9 டிரோன்கள் செயற்கை நுண்ணறிவு திறன்களுடன் பயன்படுத்தப்பட உள்ளன. இதன் மூலம் திருவிழாக்கள், பொதுக்கூட்டங்கள் கண்காணிக்கப்படும்.
இந்த டிரோன்களில் ஏ.என்.பி.ஆர். கேமராக்கள் பொருத்தப்படும். இதில் பழைய குற்றவாளிகள் படம் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கும். எனவே அவர்கள் கூட்டத்தில் புகுந்தால் இந்த கேமரா காட்டி கொடுத்து விடும்.
கடல் அலைகளில் சிக்கியவர்களை இரவில் அடையாளம் காணும் பணியையும் இந்த டிரோன் மேற்கொள்ளும்.
* சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஆண்டுக்கு சராசரியாக 12 ஆயிரத்து 835 இணைய வழி குற்ற சம்பவங்கள் தொடர்பாக புகார்கள் பெறப்படுகின்றன. அனைத்து புகார்களும் முறையாக பதிவு செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டாலும் மோசடி செய்பவர்களின் தரவுகளை ஒப்பிடுவது மிகவும் கடினமானதாக இருக்கிறது.
எனவே இணையவழி குற்ற எச்சரிக்கை செயலி உருவாக்கப்பட உள்ளது. இதற்கு தமிழக அரசு ரூ.29 லட்சத்து 97 ஆயிரத்து 200 ஒப்புதல் அளித்துள்ளது. தொலைபேசி எண்கள், வங்கி கணக்குகள், யு.பி.ஐ. ஐ.டி.கள், சமூக ஊடக கணக்குகள், மின்னஞ்சல் ஐ.டி.கள், வாலட் ஐ.டி.கள் மற்றும் இணைதள யு.ஆர்.எல்.கள் போன்ற மோசடி செய்பவர்களின் விவரங்கள் தரவுத்தளத்தில் உள்ளிடப்பட்டு குற்ற சாட்டப்பட்டவர்களின் செயல் முறை பதிவு அடிப்படையில் பட்டியலிட்டு தக்க நடவடிக்கை எடுப்பதற்கு இந்த செயலி உதவும்.
* போலீஸ் அதிகாரிகள், போலீசார் எதிர்கொள்ளும் சிரமங்களை சமாளிக்க சரித்திர பதிவேடு குற்றவாளிகள், ரவுடிகளின் பதிவை புதுப்பிப்பதில் 'பருந்து' என்ற பெயரில் செயலியை உருவாக்கி அதை டிஜிட்டல் மயமாக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.
இந்த செயலில் குற்றவாளிகள் மீது உள்ள வழக்குகள், சிறை தண்டனை போன்ற அனைத்து விவரங்களும் பதிவேற்றம் செய்யப்படும். இதன் மூலம் குற்றவாளிகளின் பின்னணி வரலாறு தரவுகள் போலீசாருக்கு உடனடியாக கிடைக்கும். இந்த செயலி போலீஸ் அதிகாரிகளுக்கு பெரிதும் உதவியாக இருக்கும். இந்த செயலியை உருவாக்குவதற்கு ரூ.32 லட்சத்து 60 ஆயிரம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
* திருட்டு வாகனங்கள் மூலமாக சங்கிலி பறிப்பு, வழிபறி சம்பவங்கள், சமூக விரோத செயல்கள் அரங்கேறுகின்றன. எனவே திருட்டு வாகனங்களை எளிதில் அடையாளம் காணும் வகையில் ஒருங்கிணைந்த வாகன கண்காணிப்பு அமைப்பு செயலி ரூ.1 கோடியே 81 லட்சம் செலவில் உருவாக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் திருட்டு வாகன எண் விவரங்கள் ஏ.என்.பி.ஆர். கேமராக்களில் இணைக்கப்பட்டு சிக்னலில் பொருத்தப்படும். திருட்டு வாகனங்கள் சிக்னலை கடந்து சென்றால் இந்த செயலிக்கு உடனடியாக தகவல் வரும். அதனடிப்படையில் திருட்டு வாகனங்கள் மீட்கப்படும்.
* சென்னையில் ஆண்டுக்கு 6.51 சதவீதம் வாகனங்கள் எண்ணிக்கை அதிகரிப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதனால் பல பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. 312 போக்குவரத்து சிக்னல்களை சுற்றி போக்குவரத்து நெரிசலை நிகழ் நேரத்தில் கண்காணிப்பது கடினமான வேலையாகிவிட்டது. எனவே போக்குவரத்து நெரிசலை கண்காணித்து அடையாளம் கண்டு சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு செல்போன் மூலம் தெரிவிப்பதற்காக ரூ.1 கோடியே 2 லட்சத்து 50 ஆயிரம் செலவில் நேரடி போக்குவரத்து கண்காணிப்பு அமைப்பு தொடங்கப்பட உள்ளது.
இதன் மூலம் போக்குவரத்து நெரிசலை முன்கூட்டியே கணித்து தக்க நடவடிக்கை எடுக்க உதவியாக இருக்கும்.
மேற்கண்ட புதிய திட்டங்கள் அமலுக்கு வர உள்ளது.
சாலையிலும், கடற்கரையிலும் ரோந்து பணியை மேற்கொள்வதற்காக ரூ.78 லட்சத்து 63 ஆயிரத்து 448 செலவில் 4 'பீச் பகி' வாகனங்கள் வாங்கப்பட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டங்கள் அறிவிப்பு நிகழ்ச்சியில் கூடுதல் போலீஸ் கமிஷனர்கள் அன்பு, பிரேம் ஆனந்த் சின்ஹா, கபில்குமார் சி.ஷரத்கர், மகேஸ்வரி, இணை கமிஷனர்கள் சிபி சக்ரவர்த்தி, தீஷா மிட்டல், ரம்யா பாரதி, மனோகரன், மயில்வாகணன் உள்பட போலீஸ் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சென்னை உளவுப்பிரிவு துணை கமிஷனர் சக்திவேல், உதவி கமிஷனர்கள் விஜயராமுலு, ஜார்ஜ் ஆகியோர் செய்திருந்தனர்.
- புத்தாண்டு கொண்டாட்டங்கள் தொடர்பான கட்டுப்பாடுகளை தமிழக காவல்துறை வெளியிட்டுள்ளது.
- வீடுகளில் குடும்பத்துடன் இருந்து புத்தாண்டை கொண்டாடி மகிழ்வது சிறந்தது என தெரிவித்தது.
சென்னை:
புத்தாண்டு கொண்டாட்டங்கள் தொடர்பான கட்டுப்பாடுகளை தமிழக காவல்துறை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக காவல்துறை சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
31.12.2022 அன்று இரவு பொது இடங்களிலும் சாலைகளிலும் கூட்டம் கூடுவதைத் தவிர்க்க வேண்டும்.
வீடுகளில் குடும்பத்துடன் இருந்து புத்தாண்டை கொண்டாடி மகிழ்வது சிறந்தது.
31.12.2022 அன்று மாலை முதல் சுமார் 90,000 காவல்துறையினர், 10,000 ஊர்க்காவல் படையினர் என பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். வாகன சோதனை தமிழ்நாடு முழுவதும் நடைபெறும். எனவே, நள்ளிரவு, மோட்டார் வாகனங்களில் தேவையின்றி சுற்றுவதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.
நள்ளிரவு 1 மணிக்கு மேல் பொது இடங்களில் புத்தாண்டு குதூகல கொண்டாட்டங்களுக்கு அனுமதியில்லை.
முதல் நாள் இரவும், புத்தாண்டின் போதும் கடற்கரைகளில் பொதுமக்கள் கடல் நீரில் இறங்கி கொண்டாட்டங்களில் ஈடுபடக் கூடாது.
மது அருந்தியவர்கள், வாகனம் ஓட்டக் கூடாது. மீறினால் கைது செய்யப்படுவர், அவர்களின் வாகனமும் பறிமுதல் செய்யப்படும்.
வழிபாட்டுத் தலங்களுக்கு காவல்துறையால் உரிய பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அங்கு குழப்பம் விளைவிக்க முனைவோர் கைது செய்யப்படுவார்கள்.
கேளிக்கை விடுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டங்களின்போது காவல்துறையின் அனைத்து நிபந்தனைகளையும் கட்டாயம் கடைப்பிடிக்கப்பட வேண்டும்.
அசம்பாவிதம் இல்லாத, விபத்தில்லாத புத்தாண்டு கொண்டாட தமிழக காவல்துறைக்கு ஒத்துழைப்பு வழங்கக் கேட்டுக் கொள்கிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- சின்னு முஸ்தாக் மத்திய பிரதேசத்தின் கஞ்சர்சேர்வா பகுதியில் பதுங்கியிருப்பது போலீசாருக்கு தெரியவந்தது.
- தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் வரும் காட்சியைப் போல் குற்றவாளியை அங்கு சென்று போலீசார் பிடித்துள்ளனர்.
சென்னை:
கோவை மாவட்டத்தில் நகை தயாரிப்பு பட்டறைகளில் தயாரிக்கப்படும் நகைகள் அங்கிருந்து பல்வேறு மாநிலங்களுக்கு வாகனங்கள் மூலம் கொண்டு செல்லப்படுகின்றன.
அந்த வகையில் கடந்த அக்டோபர் மாதம் கோவையில் இருந்து ஐதராபாத்திற்கு நகைகளைக் கொண்டு சென்ற ஒரு வாகனத்தில் இருந்து சுமார் 3 கோடி ரூபாய் மதிப்புடைய 6.5 கிலோ தங்கம் திருடுபோனது. இதுதொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், நகைகளை ஏற்றிச் சென்ற வாகனத்தை சுங்கச்சாவடிகளில் இருக்கும் சி.சி.டி.வி. கேமரா உதவியுடன் போலீசார் கண்காணித்தனர். அப்போது அந்த வாகனத்தை கார் ஒன்று பின்தொடர்ந்து சென்றதை போலீசார் கண்டுபிடித்தனர்.
அந்த காரின் நம்பரை வைத்து போலீசார் நடத்திய விசாரணையில், நகைகளை கொள்ளையடித்துச் சென்ற நபரின் பெயர் சின்னு முஸ்தாக் என்பதும், அந்த நபர் மத்திய பிரதேச மாநிலம் கஞ்சர்சேர்வா என்ற பகுதியில் பதுங்கி இருப்பதும் போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து கோவை மாநகர காவல்துறை சார்பில் 4 பேர் கொண்ட தனிப்படை போலீசார் மத்திய பிரதேசத்திற்குச் சென்றனர்.
அங்கு சென்று கஞ்சர்சேர்வா பகுதி குறித்து தனிப்படை போலீசார் விசாரித்த போது, அங்கு குற்றப்பின்னணி கொண்ட நபர்கள் பலர் வசித்து வருவதாகவும், அவர்களிடம் நாட்டுத் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் இருப்பதும் தெரியவந்தது. மேலும் அங்கு செல்வதற்கு உள்ளூர் டிராவல்ஸ் ஏஜெண்டுகள் பலர் மறுப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
இதனையடுத்து உள்ளூர் போலீஸ் உதவியுடன் தமிழகத்தைச் சேர்ந்த தனிப்படை போலீசார் கஞ்சர்சேர்வா கிராமத்திற்குச் சென்றனர். அங்கு பதுங்கியிருந்த குற்றவாளி சின்னு முஸ்தாக்கை அடையாளம் கண்டு போலீசார் அவரை பிடிக்க முயன்றபோது, அங்குள்ள கிராம மக்கள் அனைவரும் சேர்ந்து போலீசை தாக்கத் தொடங்கியுள்ளனர். இதனிடையே போலீசார் ஒருபுறம் துப்பாக்கியைக் காட்டி கிராம மக்களை கட்டுப்படுத்த முயன்றபோது, மறுபுறம் தமிழக போலீசார் சின்னு முஸ்தாக்கை வண்டியில் ஏற்றி அங்கிருந்து விரைந்தனர். தமிழில் வெளியான 'தீரன் அதிகாரம் ஒன்று' படத்தில் வரும் காட்சியைப் போல் சுமார் 10 நிமிட இடைவெளியில் இந்த சம்பவம் நடந்து முடிந்துள்ளது. இதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட நபரை தனிப்படை போலீசார் தமிழகத்திற்கு கொண்டு வந்தனர்.
இரு மாநில போலீசாரின் உதவியுடன் திருடப்பட்ட 6.5 கிலோ தங்கம் மீட்கப்பட்டு அதன் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதில் துணிச்சலாக செயல்பட்டு குற்றவாளியைப் பிடித்த தனிப்படை போலீசாரை பாராட்டி தமிழக டி.ஜி.பி. சைலேந்திர பாபு அவர்களுக்கு நற்சான்றிதழ் வழங்கினார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. கிராமத்திற்குள் புகுந்த போலீசார் மீது அங்குள்ள மக்கள் தாக்குதல் நடத்த முயன்ற சம்பவங்கள் அதில் பதிவாகியுள்ளன.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்