என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Train Driver"

    • அதிகாலை 3.30 மணியளவில் 2 சரக்கு ரெயில்கள் ஒன்றுடன் ஒன்று நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது.
    • அவரது மனைவி, மகன் மற்றும் மகள் விருந்து ஏற்பாடு செய்துவிட்டு அவருக்காக காத்திருந்துள்ளனர்.

    ஜார்கண்டில் சாகேப்கஞ்ச் மாவட்டத்தில் பராக்கா-லால்மதியா எம்.ஜி.ஆர். ரெயில்வே லைனில் நேற்று அதிகாலை 3.30 மணியளவில் 2 சரக்கு ரெயில்கள் ஒன்றுடன் ஒன்று நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது.

    இந்த விபத்தில், ரெயில்களின் ஓட்டுநர்கள் 2 பேர் உள்பட 3 பேர் பலியாகினர். மேலும் 5 ரெயில்வே பணியாளர்கள், 4 CISF வீரர்கள் காயமடைந்தனர்.

    தகவலின்படி, ஆலைகளுக்காக தனியாரால் இயக்கப்படும் ரெயில்வே தடத்தில் நிலக்கரி ஏற்றி வந்த சரக்கு ரெயிலானது, பார்ஹத் எம்.டி. ரெயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த காலியான மற்றொரு சரக்கு ரெயில் மீது அதிவேகத்தில் மோதி விபத்து ஏற்பட்டது.

    இரண்டு ரெயில்களுக்கு இடையேயான சிக்னல் தொடர்பு சரிவர பராமரிக்கப்படாததே விபத்திற்கான காரணம் என்று தெரியவந்துள்ளது.

    இந்த விபத்தில் உயிரிழந்த நிலக்கரி ஏற்றிவந்த ரெயிலின் லோகோ பைலட் கங்கேஸ்வர் மால் நேற்றைய தினத்துடன் ஓய்வு பெற இருந்தார். மேற்கு வங்காள மாநிலம் முர்ஷிதாபாத்தை சேர்ந்தவர் கங்கேஸ்வர் மால்.

    நேற்று ஓய்வு பெறுவதற்கு முன் தனது கடைசி பயணத்தின்போதுதான் இந்த துயர சம்பவம் அவருக்கு நேர்ந்திருக்கிறது. நேற்று அந்த பயணம் முடிந்த பின் இரவில் தனது வீட்டில் ஓய்வு பெறுவதை கொண்டாடும் விதமாக விருந்தில் கலந்து கொள்ள இருந்தார்.

    அவரது மனைவி, மகன் மற்றும் மகள் விருந்து ஏற்பாடு செய்துவிட்டு அவருக்காக காத்திருந்துள்ளனர். கடைசியாக தான் சீக்கிரம் வந்து விருந்தில் கலந்துகொள்வேன் என அவர் போனில் கூறியிருக்கிறார்.

    ஆனால் அவர் விபத்தில் இறந்துவிட்டார் என்ற செய்திதான் அவரது குடும்பத்துக்கு சென்று சேர்ந்திருக்கிறது. இறந்த கங்கேஸ்வர் மால் உடல் அவரது குடும்பத்திடம் ஒப்படைக்கப்பட்டது. தங்களின் மொத்த உலகமும் நொறுங்கிவிட்டது என கங்கேஸ்வர் மாலின் மகள் துயரத்துடன் தெரிவிக்கிறார். 

    • தனது 53வது வயதில் ரயில் ஓட்டுநராக தனது பணியைத் தொடங்கினார் ஹெலன்
    • ஹெலனுக்கு விரைவில் 82 வது பிறந்தநாள் வர உள்ளது குறிப்பிடத்தக்கது.

     வயது என்பது வெறும் நம்பர் தான் என்பதை நிரூபித்த பலரின் உதாரணங்களை நாம் கேள்விப்பட்டிருப்போம். அந்த வகையில் உலகின் வயதான ரயில் ஓட்டுநர் என்ற பெருமையை அமெரிக்காவைச் சேர்ந்த 81 வயது மூதாட்டி ஒருவர் பெற்று அனைவரையும் வாயடைக்கச் செய்துள்ளார்.

     

    அமெரிக்காவின் பாஸ்டன் நகரத்தில் உள்ள மாசௌசெட்சில் வாழும் ஹெலன் ஆண்டெனுச்சி என்ற 81 வயது மூதாட்டி அந்நகரின் மாசௌசெட்ஸ் போக்குவரத்து நிறுவனத்தின் சார்பில் இயக்கப்படும் ரயிலில் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். கடந்த 1995 ஆம் ஆண்டு தனது 53வது வயதில் ரயில் ஓட்டுநராக தனது பணியைத் தொடங்கிய ஹெலன் தற்போதுவரை ஓய்வு ஒழிச்சலின்றி சுறுசுறுப்பான தேனியைப் போல் தனது பணியை தொடர்ந்து செய்து வருகிறார்.

    இவரின் சக ஊழியர் கின்னஸ் சாதனைக்கு இவரது பெயரை விண்ணபித்ததை அடுத்து உலகின் மிக வயதான ரயில் ஓட்டுநர் என்று கின்னஸ் சாதனை அங்கீகாரம் பெற்றுள்ளார் ஹெலன். தனக்கு கிடைத்த அங்கீகாரம் குறித்து ஹெலன் பேசுகையில், இந்த ஆரவாரம் எல்லாம் எதற்கு என்று தெரியவில்லை. எனக்கு 5 குழந்தைகள் உள்ளன. எனவே கொஞ்சம் நிம்மதிக்காகவும், அமைதிக்காகவும் வீட்டை விட்டு வெளியே வர இந்த வேலையை செய்யத் தொடங்கினேன். இப்போதைக்கு பணி ஓய்வு பெறும் திட்டம் எதுவும் என்னிடம் இல்லை என்று தெரிவித்துள்ளார். ஹெலனுக்கு விரைவில் 82 வது பிறந்தநாள் வர உள்ளது குறிப்பிடத்தக்கது. 

     

    • பிரஷர் லீக்கை சரி செய்தால்தான் ரெயில் முன்னோக்கி நகர முடியும்.
    • டிரைவர் (லோக் பைலட்) தண்டவாளத்தில் இறங்கி பிரச்சனையை சரி செய்ய முடிவு செய்தார்.

    பீகார்:

    பீகார் மாநிலம் சமஸ்திபூரில் ரெயில் ஒன்று பாலத்தில் சென்று கொண்டிருந்தது. அப்போது ரெயிலில் திடீரென பிரஷர் கசிவு காரணமாக பாலத்தின் நடுவில் ரெயில் நின்றது. பிரஷர் லீக்கை சரி செய்தால்தான் ரெயில் முன்னோக்கி நகர முடியும். இதனால் டிரைவர் (லோக் பைலட்) தண்டவாளத்தில் இறங்கி பிரச்சனையை சரி செய்ய முடிவு செய்தார்.

    இதையடுத்து, லோகோ பைலட் தனது உயிரை பணயம் வைத்து பிரச்சனையை தீர்த்து வைப்பதற்காக ரெயிலுக்கும் தண்டவாளத்திற்கும் இடையில் புகுந்து ஊர்ந்து சென்று என்ஜினின் பிரஷர் கசிவை சரி செய்தார். சரி செய்த பின்னர் ரெயிலுக்கும் தண்டவாளத்திற்கும் இடையே ஊர்ந்து வந்து வெளியேறினார்.

    இச்சம்பவம் சமூக வலைதளங்களில் பார்ப்போரை மெய்சிலிர்க்க செய்கிறது.



    • இளநீர் மற்றும் ஹோமியோபதி மருந்துகளை உட்கொள்வதை ரெயில்வே தடை செய்துள்ளது.
    • லோகோ பைலட் சங்கங்கள் இந்த உத்தரவை கடுமையாக கண்டித்துள்ளது.

    ரெயில் இன்ஜின் ஓட்டுனர்கள் பணிக்கு முன் அல்லது பணியின் போது இளநீர் மற்றும் ஹோமியோபதி மருந்துகளை உட்கொள்வதை ரெயில்வே தடை செய்துள்ளது.

    திருவனந்தபுரம் மண்டல சீனியர் எலக்ட்ரிக்கல் இன்ஜினியர் வெளியிட்ட சுற்றறிக்கையில், 'பணிக்கு வரும் போதும், பணி முடிந்து போகும் போதும், லோகோ பைலட்டுகள், இளநீர், இருமல் மருந்துகள், குளிர் பானங்கள் மற்றும் வாய் புத்துணர்ச்சியூட்டிகள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்' என்று குறிப்பிட்டிருந்தார்.

    ரெயில் இன்ஜின் டிரைவர்களிடம் ஆல்கஹால் பரிசோதனை செய்யும் கருவியின் மூலம் சோதனை செய்யும் போது, அவர்களின் உடலில் ஆல்கஹாலின் அளவு அதிகரித்து காணப்பட்டுள்ளது

    ஆனால் இரத்தப் பரிசோதனைகளில் ஆல்கஹால் தடயங்கள் எதுவும் இல்லை.

    இதுபற்றி கேட்டால் தாங்கள் இளநீர், பழங்கள், இருமல் மருந்து, குளிர் பானங்கள் சாப்பிட்டதாக ரெயில் இன்ஜின் டிரைவர்கள் வெவ்வேறு காரணங்களை கூறுகின்றனர். எனவே இப்பிரச்னைக்கு தீர்வு காண முடியாமல் இவை அனைத்தையும் உட்கொள்ள தெற்கு ரெயில்வே தடை விதித்துள்ளது.

    ஒரு லோகோ பைலட் தடைசெய்யப்பட்ட பொருட்களில் ஏதேனும் ஒன்றை உட்கொள்ள விரும்பினால், டிப்போவில் உள்ள க்ரூ கன்ட்ரோலருக்கு (CRC) எழுத்துப்பூர்வமாகத் தெரிவிக்க வேண்டும். கூடுதலாக, எந்தவொரு ஆல்கஹால் கொண்ட மருந்தையும் ரெயில்வே மருத்துவ அதிகாரியின் முன் எழுத்துப்பூர்வ ஒப்புதலுடன் மட்டுமே பயன்படுத்த முடியும் என்று உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    லோகோ பைலட் சங்கங்கள் இந்த உத்தரவை கடுமையாக கண்டித்துள்ளது. "பழுதடைந்த ஆல்கஹால் பரிசோதனை உபகரணங்களை மாற்றுவதற்குப் பதிலாக, ஊழியர்களை தேவையற்ற கட்டுப்பாடுகளுக்கு உள்ளாக்குகிறார்கள். இந்த உத்தரவு திரும்பப் பெறப்பட வேண்டும்" என்று அகில இந்திய லோகோ ரன்னிங் ஸ்டாஃப் அசோசியேஷனின் மத்திய குழு உறுப்பினர் பி.என். சோமன் வலியுறுத்தியுள்ளார்.

    “கூடுதலாக 15 நிமிடம் வேலை பார்த்து விட்டேன்” எனக்கூறி சரக்கு ரெயிலை பாதியில் நிறுத்திய என்ஜின் டிரைவரால் சீர்காழி அருகே 2 மணி நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. #VaitheeswaranKoilRailwayStation
    சீர்காழி:

    நாகை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவிலில் ரெயில் நிலையம் அமைந்துள்ளது. நவக்கிரகங்களில் செவ்வாய் பரிகார தலமாக வைத்தீஸ்வரன் கோவில் உள்ளது. இங்கு தினமும் ஏராளமான பக்தர்கள் ரெயில்களில் வந்து செல்வர். பயணிகள் ரெயில் மட்டும் வைத்தீஸ்வரன்கோவில் ரெயில் நிலையத்தில் தினமும் 2 நிமிடம் நின்று பயணிகளை ஏற்றி, இறக்கி செல்வது வழக்கம். எக்ஸ்பிரஸ் ரெயில்களில் 2 மட்டும் தினமும் 2 தடவை நின்று செல்லும்.

    இதேபோல் நெய்வேலியில் இருந்து காரைக்கால் துறைமுகத்துக்கு தினமும் சரக்கு ரெயில்கள் நிலக்கரி ஏற்றி இவ்வழியே அதிகளவில் செல்லும். ஆனால் இந்த ரெயில்கள் எந்த ரெயில் நிலையத்திலும் நின்று செல்லாது.

    இந்நிலையில் நேற்று இரவு 7.30 மணியளவில் நிலக்கரி ஏற்றிக் கொண்டு ஒரு சரக்கு ரெயில் வந்து கொண்டிருந்தது. இதனால் வைத்தீஸ்வரன் கோவில் ரெயில் நிலைய மாஸ்டர் அந்த ரெயில் தடையின்றி செல்ல சிக்னலை மாற்றி விட்டு ரெயில் நிலையத்தை கடந்து செல்ல காத்திருந்தார்.

    ஆனால் அந்த ரெயில் எந்த முன்னறிவிப்புமின்றி வைத்தீஸ்வரன் கோவில் ரெயில் நிலையத்தில் திடீரென நிறுத்தப்பட்டது. இதனால் ஸ்டேசன் மாஸ்டர் உடனடியாக சரக்கு ரெயிலை இயக்கி வந்த என்ஜின் டிரைவர் முத்துராஜாவிடம் சென்று ‘எதனால் ரெயிலை நிறுத்தினீர்கள்’ என்று கேட்டார்.

    அப்போது அவர் “எனக்கு 12 மணிநேரம் மட்டுமே பணி. ஆனால் கூடுதலாக 15 நிமிடம் ரெயிலை இயக்கி வந்துள்ளேன். இதனால் மேற்கொண்டு என்னால் ரெயிலை இயக்க முடியாது” என்று கூறியதால் ஸ்டேசன் மாஸ்டர் அதிர்ச்சியடைந்தார்.

    இந்த சரக்கு ரெயில் திடீரென நிறுத்தப்பட்டதால் அங்கு புறப்பட தயாராக இருந்த திருப்பதி-காரைக்கால் ரெயிலும் இயக்க தாமதமானது. மேலும் அதிக பெட்டிகள் கொண்ட சரக்கு ரெயில் சுமார் 100 மீட்டர் வரை பெட்டிகளுடன் நின்றதால் வைத்தீஸ்வரன்கோவில்-புங்கனூர் ரெயில்வே கேட்டை கடந்தும் பெட்டிகள் நின்றிருந்தது. இதனால் அந்த வழியே கடந்து செல்ல முடியாமல் மினிபஸ்கள், ஆட்டோக்கள், மோட்டார் சைக்கிள்களில் வந்தவர்கள் பெரும் அவதிக்கு ஆளாகினர்.

    இதனால் ஸ்டடேசன் மாஸ்டர் மற்றும் திருப்பதி எக்ஸ்பிரஸ் ரெயில் பயணிகள் சென்று என்ஜின் டிரைவர் முத்துராஜாவிடம் ரெயிலை இயக்கி செல்லுமாறு கேட்டனர். ஆனால் அவர் மறுத்து விட்டார்.

    இதையடுத்து சுமார் 2 மணிநேரம் வரை ரெயில் வைத்தீஸ்வரன் கோவிலில் நிறுத்தப்பட்டது. பின்னர் ‘அருகிலுள்ள மாயவரம் ரெயில் நிலையத்திலாவது தற்சமயம் சரக்கு ரெயிலை கொண்டு சென்று நிறுத்துங்கள்’ என்று ஸ்டேசன் மாஸ்டர் கேட்டுக் கொண்டார்.

    இதையடுத்து சற்று இறங்கி வந்த டிரைவர் 2 மணி நேர தாமதத்துக்குப்பிறகு சரக்கு ரெயிலை அங்கிருந்து இயக்கி சென்றார். இதன் காரணமாக இவ்வழியே செல்ல வேண்டிய மற்ற ரெயில்கள் அருகில் உள்ள மற்ற ரெயில் நிலையங்களில் 2 மணி நேரம் நிறுத்தப்பட்டது. இதனால் ரெயில் பயணிகள் கடும் அவதிக்கு ஆளாகினர்.

    அப்போது ரெயில் பயணிகள் ஆவேசத்துடன், ‘இதுபோன்ற ரெயில்வே ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். சமூக அக்கறை கூட இல்லாத இவரை போன்ற சிலரால் பல்வேறு பொதுப்பணிகள் பாதிக்கப்படுகிறது’ என்று குற்றம் சாட்டி சென்றனர்.

    இந்த சம்பவத்தால் வைத்தீஸ்வரன் கோவில் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. #VaitheeswaranKoilRailwayStation

    பரங்கிமலை ரெயில் விபத்து விசாரணையில் புதிய திருப்பம் ஏற்பட்டு இருக்கிறது. விபத்தில் தொடர்புடைய மின்சார ரெயில் டிரைவர், ‘கார்டு’ மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. #Parangimalai #TrainAccident #StThomas
    சென்னை:

    சென்னை பரங்கிமலை ரெயில் விபத்து தொடர்பான விசாரணையை ரெயில்வே போலீசார் மேற்கொண்டு வருகின்றனர். ரெயில் விபத்தில் பயணிகள் உயிரிழந்தது தொடர்பாக வழக்கு எண் 174(மர்ம சாவு, சந்தேக மரணம்) பதிவு செய்யப்பட்டு இருந்தது.

    இதுதொடர்பாக கடந்த 8-ந் தேதி (சனிக்கிழமை) முதற்கட்ட விசாரணை சென்டிரல் ரெயில்வே போலீஸ் டி.எஸ்.பி. இரா.ரவி தலைமையில் நடந்தது. இதில் ரெயில் விபத்து நடந்தபோது அந்த மின்சார ரெயிலை இயக்கிய டிரைவர், ‘கார்டு’ மற்றும் கடற்கரை, மாம்பலம், பரங்கிமலை ரெயில் நிலைய அதிகாரிகள் என 5 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

    அன்றைய தினம் ரெயில் விபத்து எப்படி ஏற்பட்டது? இதில் யாரெல்லாம் சம்பந்தப்பட்டு இருக்கிறார்கள்? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்றது.

    இந்த நிலையில் கடந்த 8-ந் தேதி நடந்து முடிந்த முதற்கட்ட விசாரணையில் புதிய திருப்பம் ஏற்பட்டு இருக்கிறது. அன்றைய தினம் நடத்தப்பட்ட விசாரணையில் ரெயில் டிரைவர், ‘ரெயிலை இயக்குவது மட்டும் தான் என்னுடைய வேலை. கூட்டம் அதிகமாக இருப்பது குறித்தும், பயணிகள் படிக்கட்டில் தொங்கி வருவது குறித்தும் ‘கார்டு’ தனக்கு தகவல் அளிக்கவில்லை என்றும், அவர் தகவல் அளித்து இருந்தால் பக்கவாட்டு சுவர் இருந்த இடத்தில் வேகத்தை குறைத்து இருப்பேன்’ என்றும் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

    இந்த வாக்குமூலத்தை அடிப்படையாக வைத்து ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட இந்திய குற்றவியல் நடை முறைச் சட்டம் பிரிவு 174-ன் கீழான வழக்கை இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 304(ஏ)-க்கு (உள்நோக்கம் இல்லாமல் மரணத்தை விளைவித்தல்) மாற்றப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் மின்சார ரெயில் டிரைவர், கார்டு மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

    இதையடுத்து வருகிற 15-ந் தேதி (சனிக்கிழமை) அடுத்தகட்ட விசாரணை நடைபெற இருக்கிறது. இதில் முதற்கட்ட விசாரணையில் ஆஜரான 5 பேரும் மீண்டும் ஆஜராகிறார்கள். அதுமட்டுமில்லாமல் அன்றைய தினம் சாதாரண பாதையில் இருந்து விரைவு பாதையில் செல்வதற்கு அதிகாரம் அளித்த அதிகாரியையும், மேலும் சிலரையும் விசாரணைக்கு அழைத்து இருக்கின்றனர்.

    இந்த விசாரணையில் ரெயில் விபத்து குறித்து முழு தகவல்களும், என்னென்ன மாதிரியான வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருக்கின்றன என்ற தகவல்களும் வெளியாகும் என்று போலீஸ் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. 
    ×