search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tree collapsed"

    ஊட்டி மலைப்பாதையில் மோட்டார் சைக்கிளில் சென்றபோது ராட்சத மரம் சாய்ந்து ராணுவ வீரர் பலியானார்.

    குன்னூர்:

    நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டன் ராணுவ முகாமில் ராணுவ வீரராக இருந்தவர் பிரதீப் (வயது 26). இவர் மராத்தான் போட்டியில் பங்குபெற கோவை ராணுவ மைதானத்தில் பயிற்சி பெற்று வந்தார்.

    இன்று காலை கோவையில் பயிற்சியில் ஈடுபட்டார். ராணுவ வீரர் பிரதீப்பின் சொந்த ஊர் கேரள மாநிலம் முட்டம் பகுதியாகும். இவரது தம்பி பிரதீஷ் (26) வீட்டு கடன் பெறுவது சம்பந்தமாக கோவையில் பயிற்சி பெறும் பிரதீப்பை பார்க்க மோட்டார் சைக்கிளில் வந்தார். இரட்டையார்களான இருவரும் வீட்டு லோன் பெறுவது குறித்து பேசினர்.

    இன்று காலை மோட்டார் சைக்கிளில் குன்னூருக்கு புறப்பட்டனர். ராணுவ வீரர் பிரதீப் மோட்டார் சைக்கிளை ஓட்டினார். பிரதீஷ் பின்னால் அமர்ந்திருந்தார்.

    குன்னூர் மற்றும் அதன் சுற்றுப்புறப்பகுதிகளில் நேற்று சூறாவளியுடன் மழை பெய்தது. இதனால் வாகனங்கள் மெதுவாக சென்றன.

    பிரதீப் ஓட்டிய மோட்டார் சைக்கிள் மேட்டுப் பாளையம்- குன்னூர் இடையே உள்ள மரப்பாலம் அருகே வந்தபோது சாலை ஓரம் இருந்த ராட்சத மரம் சாய்ந்தது. மரம் சாய்வது தெரிந்தும் சுதாரிக்க முடியாமல் பிரதீப் தடுமாறினார். அந்த நேரத்தில் ராட்சத மரம் மோட்டார் சைக்கிள் மீது விழுந்தது. இதில் ராணுவ வீரர் பிரதீப் படுகாயம் அடைந்தார்.

    மரம் சாயந்ததில் 2 கார்கள் சிக்கி நொறுங்கின. அதிர்ஷ்டவசமாக 2 காரில் பயணம் சென்ற யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

    சுற்றுலா பயணிகள் மற்றும் அக்கம் பக்கத்தினர் படுகாயம் அடைந்த பிரதீப் மற்றும் லேசான காயம் அடைந்த அவரது தம்பி பிரதீஷ் ஆகியோரை மீட்டு குன்னூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு ராணுவ வீரர் பிரதீப்பை பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். லேசான காயங்களுடன் பிரதீஸ் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இது குறித்து வெலிங்டன் போலீசார் வழக்குப்பதிவு செய்து முறைப்படி வெலிங்டன் ராணுவ முகாம் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

    குலசேகரம் அருகே நேற்று மாலை இடி, மின்னலுடன் பெய்த மழையில் மரம் விழுந்து வீடு சேதமானது.

    திருவட்டார்:

    குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது. குமரி மாவட்டத்தின் மேற்கு பகுதியிலும், மலையோர கிராமங்களிலும் கோடை மழை பெய்கிறது. நேற்று மாலையிலும் குலசேகரம், திருவட்டார் உள்ளிட்ட பகுதிகளில் இடி, மின்னலுடன் மழை பெய்தது.

    மழை காரணமாக அந்த பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. கால்வாய்கள், சாலைகளிலும் மழை நீர் வெள்ளம்போல் பாய்ந்தோடியது. இதனால் சாலைகளில் வாகனங்கள் செல்ல முடியாத நிலையும் ஏற்பட்டது.

    குலசேகரம் பகுதியில் பெய்த மழையில் மரம் விழுந்து குடிசை வீடு ஒன்று சேதமானது. குலசேகரத்தை அடுத்த வெண்டலிக் கோட்டில் இச்சம்பவம் நடந்தது.

    வீட்டில் கூலித்தொழிலாளி ராஜன் (வயது 53) என்பவர் வசித்து வருகிறார். அவருடன் மனைவி, 2 குழந்தைகள் மற்றும் ராஜனின் தாயார் ஆகியோர் இருந்தனர்.

    குலசேகரம் பகுதியில் நேற்று மாலை மழை பெய்த போது வீட்டில் ராஜனும், அவரது குடும்பத்தினரும் இருந்தனர். அப்போது வீட்டின் அருகே நின்ற மரம் பலத்த மழையால் சரிந்து விழுந்தது.

    மரம் விழும் சத்தம் கேட்டதும், ராஜனும், அவரது குடும்பத்தினரும் அலறியடித்தபடி வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தனர். இதனால் அவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

    ராஜனின் வீடு மழையால் இடிந்த தகவல் வருவாய் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த பொன்மனை கிராம நிர்வாக அதிகாரி ரவி, சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தார்.

    மேலும் அந்த பகுதியில் மழையால் ஏற்பட்ட பாதிப்புகளை கணக்கெடுத்தார். அதனை உயர் அதிகாரிகளுக்கும் தெரிவித்தார்.

    நெல்லை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று பலத்த சூறைக்காற்று வீசியதால் பல இடங்களில் மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன.

    நெல்லை:

    தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள‌தை தொடர்ந்து நெல்லை மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று நெல்லை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த சூறைக்காற்று வீசியது. ஆடி மாதம் தொடங்கவுள்ள நிலையில் காற்று வேகமாக வீசியதால் பல இடங்களில் மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன. இந்த சூறைக்காற்று மாலையிலும் நீடித்தது.

    சாலையோர மணலை காற்று அள்ளி வீசியதால் இருசக்கர வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர். நெல்லை கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருக்கும் மின் மாற்றியில் மரக்கிளைகள் உரசியதால் தீப்பொறிகள் கிளம்பின. அங்குள்ள மரங்களின் கிளைகளும் முறிந்து விழுந்தன. இதனால் யாருக்கும் பாதிப்பு ஏற்பட வில்லை. பல இடங்களில் சாலையோர விளம்பர பலகைகள் விழுந்தன.

    மின் வயர்கள் அறுந்ததால் நெல்லை மாநகரில் அடுத்தடுத்து மின்தடை ஏற்பட்டது. சிவகிரி, வாசுதேவநல்லூர் பகுதியிலும் நேற்று பலத்த காற்று வீசியது. இதனால் தென்னை, வாழை, எலுமிச்சை மரங்கள் சேதமடைந்தன. மகசூல் தரும் நிலையில் இருந்த எலுமிச்சை மரங்களில் இருந்து பழங்கள் உதிர்ந்து சேதமானது. மின்கம்பங்கள் சாய்ந்ததால் மின் வினியோகம் பாதிக்கப்ப‌ட்டது.


    சிவகிரியில் 3 இடங்களில் மின் கம்பங்கள் சாய்ந்தன. இதனால் இரவில் வெகுநேரம் வரை அப்பகுதியில் மின் விநியோகம் பாதிக்கப்பட்ட‌து. வாசுதேவநல்லூர் மெயின் ரோட்டில் சென்று கொண்டிருந்த பஸ்சின் மேற்கூரை பெயர்ந்தது. இதனால் பயணிகள் அலறியடித்து பஸ்சில் இருந்து இறங்கினார்கள். இதில் அதிர்ஷ்டவசமாக பயணிகள் காயமின்றி தப்பினர்.

    வாசுதேவநல்லூர் எம்.எல்.ஏ அலுவலக காம்பவுண்டு சுவரில் மின்கம்பம் சாய்ந்து சுவர் சேதமானது. சுப்பிரமணியபுரம் கல்லூரி அருகே சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதித்தது. இதேபோல கடையம், ஆழ்வார்குறிச்சி, பொட்டல்புதூர், மந்தியூர், மாதாபுரம் உள்ளிட்ட பல இடங்களிலும் சூறைக்காற்றில் மரங்கள் சாய்ந்தன. இப்பகுதியிலும் எலுமிச்சை பழங்கள் உதிர்ந்ததால் விவசாயிகள் கவலை அடைந்த‌னர்.

    கடையம் பத்திரப்பதிவு அலுவலகம் அருகே பழமையான அரச மரம் முறிந்து விழுந்தது. இதனால் அருகில் நின்ற கார் சேதமானது. அப்பகுதி வழியே சென்ற பாண்டியன் என்பவருக்கும் காயம் ஏற்பட்டது. ஜே.சி.பி.எந்திரம் மூலம் அந்த மரம் அப்புறப்படுத்தப்பட்டது. சில இடங்களில் வீடுகளின் மேல் இருந்த குடிநீர் தொட்டிகளும் சேதமாயின.

    குமரி மாவட்டத்தில் நேற்று இரவு பலத்த மழை பெய்தது. இந்த மழைக்கு மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்ததால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

    நாகர்கோவில்:

    தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் தொடங்கிய பின்பு அனைத்து மாவட்டங் களிலும் வெயில் கொளுத்தியது. வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க கோடை மழை பெய்யுமா? என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் ஏற்பட்டது. இந்த நிலையில் தென்மேற்கு அரபிக்கடலில் ஏடன் வளைகுடா பகுதியில் குறைந்த காற்றழுத்தம் உருவாகி இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

    இது புயலாக மாறியது. இதற்கு சாகர் என்று பெயரிட்டு இருப்பதாக தெரிவித்த வானிலை ஆய்வு மையம், இந்த புயல் ஏமன் பகுதிக்கு கிழக்கில் 400 கிலோ மீட்டர் தூரத்தில் மையங்கொண்டிருப்பதாக கூறியது. இது தென்மேற்கு திசையில் நகரும் என்றும் இதனால் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என்றும் எச்சரித்தது. மேலும் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் தெரிவித்தது.

    வானிலை ஆய்வு மையம் தெரிவித்தபடி குமரி மாவட்டத்தில் நேற்று இரவு பலத்த மழை பெய்தது. நாகர்கோவிலில் நள்ளிரவு 1.30 மணிக்கு தொடங்கிய மழை சுமார் 4 மணி நேரம் நீடித்தது. இதனால் செம்மாங்குடி ரோடு, கோட்டார் ரோடு, மகளிர் கிறிஸ்தவ கல்லூரி சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

    குருந்தன்கோடு பகுதியில் இடி-மின்னலுடன் கன மழை கொட்டி தீர்த்தது. அங்க அதிகபட்சமாக 15 செ.மீ. மழை பதிவானது. பூதப்பாண்டி, சுருளோடு, முள்ளங்கினாவிளை, புத்தன் அணை, ஆரல்வாய் மொழி, மயிலாடி, கொட்டாரம், இரணியல், குளச்சல், அடையாமடை, கோழிப் போர்விளை பகுதி களிலும் மழை பெய்தது.

    திற்பரப்பு அருவி பகுதியில் பெய்து வரும் மழையின் காரணமாக அருவியில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் அருவியில் ஆனந்த குளியலிட்டு வருகிறார்கள்.

    இடி-மின்னலுடன் மழை பெய்ததை அடுத்து ராஜாக் கமங்கலம், கொட்டாரம், சாமிதோப்பு, அஞ்சுகிராமம், குலசேகரம், திருவட்டார், நாகர்கோவில் பகுதிகளில் நேற்று இரவு மின்சாரம் தடைபட்டது. இதனால் பல்வேறு கிராமங்கள் இருளில் மூழ்கியது.

    நாகர்கோவில் ஆயுதப்படை மைதானத்திற்கு செல்லும் சாலையில் நின்ற பழமை வாய்ந்த மரம் ஒன்று வேரோடு ரோட்டில் சாய்ந்தது. மரக்கிளைகள் மின் கம்பம் மீது விழுந்ததில் மின் ஒயர்கள் அறுந்தது. மின் கம்பங்களும் உடைந்தன. மரம் ரோட்டில் வேரோடு சாய்ந்ததால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

    இதேபோல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மரக்கிளைகள் முறிந்து மின்கம்பங்கள் மீது விழுந்தன.

    மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும், பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை பகுதியிலும் பெய்து வரும் மழையினால் அணைகளுக்கு வரக்கூடிய நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணையின் நீர் மட்டம் வெகுவாக உயர்ந்து வருகிறது.

    48 அடி அளவு கொள்ளளவு கொண்ட பேச்சிப் பாறை அணையின் நீர்மட்டம் இன்று காலை 4.80 அடியாக இருந்தது. அணைக்கு 534 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 460 கனஅடி தண்ணீர் வெளி யேற்றப்படுகிறது.

    77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 59.10 அடியாக இருந்தது. அணைக்கு 286 கனஅடி தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. நாகர்கோவில் நகருக்கு குடிநீர் சப்ளை செய்யப்படும் முக்கடல் அணையின் நீர்மட்டம் 8.75 அடியாக இருந்தது.

    சானல்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் பாசன குளங்களும் நிரம்பி வருகிறது. மாவட்டம் முழுவதும் உள்ள 2000-க்கு மேற்பட்ட குளங்களில் 250-க்கு மேற்பட்ட குளங்கள் நிரம்பி வழிகின்றன.

    திருவட்டார், குலசேகரம், ஈத்தாமொழி பகுதிகளில் இன்று காலையிலும் தொடர்ந்து சாரல்மழை பெய்தது. மழை பெய்து வருவதையடுத்து விவசாயிகள் சாகுபடி பணியில் தீவிரம் காட்டி வருகிறார்கள். கன்னிப்பூ சாகுபடிக்காக நாற்று பாவும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மி.மீ. வருமாறு:-

    பேச்சிப்பாறை-51.6, பெருஞ்சாணி - 38.8, சிற்றாறு 1-31.6, சிற்றாறு 2-30.4, மாம்பழத்துறையாறு-112, நாகர்கோவில்-96, பூதப்பாண்டி - 54, சுருளோடு- 60, கன்னிமார் - 11, முள்ளங்கினாவிளை - 54, புத்தன் அணை- 41, திற்பரப்பு -72, ஆரல்வாய்மொழி- 13, குருந்தன்கோடு - 154, பாலமோர் - 22, மயிலாடி -63, கொட்டாரம் - 44, இரணியல் -47, ஆணைக்கிடங்கு - 112, குளச்சல் - 64, அடையாமடை - 48, கோழிப்போர்விளை - 52.

    திருப்பூரில் நேற்று இரவு சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. இந்த மழைக்கு பெண் உள்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    பல்லடம்:

    திருப்பூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக இடி மற்றும் சூறாவளி காற்றுடன்பலத்த மழை பெய்து வருகிறது. நேற்று இரவு பல்லடத்தில் சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. அப்போது பல்லடம் பஸ் நிலைய வளாகத்தில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான கட்டண கழிவறை முன் பகுதியில் சிலர் ஒதுங்கி இருந்தனர்.

    அப்போது திடீரென கழிவறையின் மேற்கூரை ஷீட் பெயர்ந்து விழுந்தது. இதில் அங்கு நின்று கொண்டிருந்த பி.என். நகர் அம்மா பாளையத்தை சேர்ந்த கொத்தனார் அசோக்குமார் (38), வெங்கடேஷ் ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர்.

    அவர்களை அக்கம் பக்கத்தினர் மற்றும் தீயணைப்பு படையினர் மீட்டு பல்லடம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். வழியில் அசோக்குமார் பரிதாபமாக இறந்தார்.

    காயம் அடைந்த வெங்கடேஷ் பல்லடம் அரசு ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சைக்கு பின் கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

    பல்லடம் பஸ் நிலைய வளாகத்தில் உள்ள கழிவறை மேல் நிலை தொட்டியில் இருந்து தொடர்ந்து தண்ணீர் கசிந்து கொண்டு இருந்துள்ளது. இதனால் மேற்கூரை நனைந்து பலம் இழந்து காணப்பட்டது. இந்த நிலையில் தான் நேற்று இரவு இடிந்து விழுந்துள்ளது.

    இடிந்து விழுந்த மேற்கூரையை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள். கோவை மாவட்டம் சோமனூரில் கடந்த சில மாதங்களுக்கு முன் பஸ் நிலைய மேற்கூரை இடிந்து 5 பேர் பலியானார்கள்.

    இந்த சம்பவத்திற்கு பின்னர் அரசு கட்டிடங்களை அதிகாரிகள் ஆய்வு செய்து வந்தனர். இந்த நிலையில் பல்லடத்தில் பஸ் நிலைய கழிவறை மேற்கூரை இடிந்து வாலிபர் பலியான சம்பவம் நடைபெற்று உள்ளது.

    பலியான அசோக்குமாருக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர்.

    பல்லடம் அருகே உள்ள வடுகபாளையம் புதூரை சேர்ந்தவர் ஈஸ்வரன் (43). இவர் ஊராட்சி தண்ணீர் டேங்க் ஆபரேட்டராக வேலை பார்த்து வந்தார். நேற்று இரவு பெய்த பலத்த மழையின் போது இவர் தனது வீட்டின் முன் உள்ள ஷெட்டில் நாயை கட்ட சென்றார்.

    அப்போது அங்கிருந்த மின் கம்பம் மீது இடி தாக்கியது. இதனால் மின் கம்பி அறுந்து ஷெட் மீது விழுந்தது. இதில் மின்சாரம் தாக்கி ஈஸ்வரன் பலியானார்.

    திருப்பூர் மற்றும் தாராபுரம், உடுமலை பகுதியிலும் நேற்று இரவு பலத்த மழை பெய்தது. திருப்பூர் அருகே உள்ள சீராணம்பாளையத்தை சேர்ந்தவர் தெய்வாத்தாள் (68). இவர் வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தார்.

    அப்போது பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதில் தெய்வாத்தாள் வீட்டின் அருகே உள்ள மரம் முறிந்து வீட்டின் மீது விழுந்தது. ஓடுகள் உடைந்து தெய்வாத்தாள் மீது விழுந்து அவர் பலியானார்.

    திருப்பூர் வீரபாண்டி பகுதியில் ஆவின் பாலகத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்த சவுந்தர சீலன் என்ற முதியவர் மின்சாரம் தாக்கி பலியானார்.

    திருப்பூர் மங்கலம் சாலை குள்ளே கவுண்டன் புதூரில் சாலை அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. அங்கு தோண்டப்பட்டு இருந்த குழியில் தனியார் நிறுவன உரிமையாளர் சிவராமன் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    இதனால் 1 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதே பகுதியில் பல்வேறு இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தது. இதனால் பனியன் கம்பெனிக்கு வேலைக்கு சென்றவர்கள் கம்பெனி வாகனத்தில் இருந்து இறங்கி வீடுகளுக்கு நடந்தே சென்றனர்.

    பல்லடம் லிட்டில் பிளவர் பள்ளி முன் மிகப்பெரிய மரம் சாலையின் நடுவே சாய்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    கோவையிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்று இரவு பலத்த இடியுடன் பெய்த மழைக்கு பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தது.

    கோவை பால சுந்தரம் ரோட்டில் இடி தாக்கியதில் மின்சார டிரான்ஸ்பார்மர் வெடித்தது. இதனால் மின் தடை ஏற்பட்டது. மின் ஊழியர்கள் விரைந்து வந்து சரி செய்தனர்.

    ×