என் மலர்
நீங்கள் தேடியது "trees broken"
- பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
- மண், பாறைகளும் சாலையில் சரிந்துள்ளது.
கொடைக்கானல்:
தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் பெஞ்சல் புயல் காரணமாக கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. சென்னை, புதுச்சேரி, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பெரும்பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த புயல் காணரமாக திண்டுக்கல் மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் மழை நீர் தேங்கி வாகன ஓட்டிகள் பாதிப்படைந்து வருகின்றனர்.
சர்வதேச சுற்றுலா தலமான கொடைக்கானலுக்கு செல்ல பழனி, வத்தலக்குண்டுவில் இருந்து மலைச்சாலை உள்ளது. தேனி மாவட்டத்தில் இருந்து பெரியகுளம், அடுக்கம் வழியாக கொடைக்கானலுக்கு செல்லும் பாதையை சீரமைத்து கடந்த சில வருடங்களுக்கு முன்பு சுற்றுலா வாகனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து மலைச்சாலையில் அடிக்கடி நிலச்சரிவு ஏற்பட்டதால் கனரக வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டு இலகுரக வாகனங்கள், பைக்குகள் செல்ல அனுமதிக்கப்பட்டது.
தற்போது பெய்து வரும் தொடர் மழை காரணமாக அடுக்கம் சாலையில் ஆங்காங்கே மரங்கள் முறிந்து விழுந்தன. மேலும் மண், பாறைகளும் சாலையில் சரிந்துள்ளது.
இதனை ஜே.சி.பி. எந்திரம் மூலம் அப்புறப்படுத்தும் பணியில் நெடுஞ்சாலைத்துறையினர் ஈடுபட்டனர். தற்காலிக சீரமைப்பிற்கு பின்னர் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டது.
இருப்பினும் தடுப்பு சுவர்களை பலப்படுத்த வேண்டும் என பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை தொடர்ந்து பெய்து வருகிறது.
திண்டுக்கல் 2, காமாட்சிபுரம் 3.8, நிலக்கோ ட்டை 2.2, வேடசந்தூர் தாலுகா அலுவலகம் 2.2, புகையிலை ஆராய்ச்சி மையம் 2.2, பழனி 3, ரோஸ்கார்டன் 2.5, பிரையண்ட் பூங்கா 1.5 என மாவட்டம் முழுவதும் 19.40 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.

இந்த நிலையில் நாங்குநேரி, மூலைக்கரைப்பட்டி வட்டார பகுதிகளில் நேற்று மாலை பலத்த இடி மின்னலுடன் மழை பெய்தது. அப்போது பலத்த சூறைக்காற்றும் வீசியது. மூலக்கரைபட்டியில் 16 மில்லி மீட்டர் மழையும், நாங்குநேரியில் 10 மில்லி மீட்டர் மழையும், களக்காட்டில் 2.2 மில்லி மீட்டர் மழையும் பெய்தது.
இதில் கூந்தன்குளம் ஊருக்குள்ளும், சரணாலயம் பகுதியிலும் ஏராளமான சீமைக்கருவேல மரங்கள், வேப்ப மரங்கள் உள்ளிட்ட பல்வேறு மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன. இதனால் மரக்கிளை கூடுகளில் இருந்த 100-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு பறவை குஞ்சுகள் கீழே விழுந்து பரிதாபமாக செத்தன. மேலும் ஏராளமான தாய் பறவைகளும், மரக்கிளை இடிபாடுகளுக்குள் சிக்கி காயம் அடைந்தன. சில பறவைகள் கீழே விழுந்து மயக்கம் அடைந்தன. மேலும் சில பறவைகள் இறந்து போனது.
இதுபற்றிய தகவல் அறிந்ததும் மாவட்ட வன அலுவலர் திருமால், வனச்சரக அலுவலர் கருப்பையா மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்தனர். அவர்களுடன் பொதுமக்களும் இணைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். மரக்கிளைகளுக்கு இடையே சிக்கி காயம் அடைந்த பறவைகளை மீட்டனர்.
பின்னர் வனத்துறையினர் அந்த பறவைகளை சிகிச்சைக்காக கால்நடை ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் சென்றனர். பலத்த சூறைக்காற்றில் ஏராளமான பறவை குஞ்சுகள் கீழே விழுந்து இறந்து போனது சோகத்தை ஏற்படுத்தியது.
பலத்த மழையால் கூந்தன் குளம் ஊருக்குள் தெருக்களில் மழைநீர் தேங்கியது. மேலும் பலத்த சூறைக்காற்று வீசியதில் மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள இளையார்குளத்தை சேர்ந்த விவசாயி ஆறுமுகம் (வயது 65) என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் 800 வாழைகள் சாய்ந்து நாசமாயின.
இதுபோல நாங்குநேரி பகுதியிலும் ஏராளமான விவசாயிகளின் வாழை மரங்கள் சாய்ந்து சேதமடைந்தன.
நெல்லை மாவட்டம் சிவகிரி பகுதியிலும் நேற்று 8 மில்லி மீட்டர் மழை பெய்தது. தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலையில் 8 மில்லி மீட்டர், ஸ்ரீவைகுண்டத்தில் 6 மில்லி மீட்டர், ஓட்டப்பிடாரத்தில் 5 மில்லி மீட்டரும் மழைபெய்துள்ளது. குமரி மாவட்டத்திலும் பெரும்பாலான இடங்களில் நேற்று மழை பெய்தது. #Rain #KoonthankulamSanctuary