என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Umbilical Cord"

    • இதயம்தான் உணர்வுகளின் இருப்பிடம் என்பது தவறான தகவல்.
    • இதயம், மூளையின் உதவியின்றி செயல்படமுடியும்.

    உடலில் ஓய்வு எடுக்காமல் வேலை செய்வது இதயம். அது இடைவிடாமல் துடித்துக்கொண்டிருப்பதால் நம் ஓட்டம் தடைபடாமல் இருக்கிறது. தாயின் கருவறையில் கருவானது 5 வார வளர்ச்சி பெற்றவுடன் இதயமாக உருவாகப்போகும் திசுக்கள் துடிக்கத்தொடங்கும்.

    கடைசி வரை இந்தத்துடிப்பு நிற்காது. இந்த திசுக்கள் குழாய் வடிவம் அடைந்து மடிக்கப்பட்ட நிலையில் இதயமானது உருவம் பெறுகிறது. கருவுக்கு உணவும் பிராண வாயுவும் அளித்து கழிவுப் பொருட்களை நீக்குவது தொப்புள்கொடியில் உள்ள ரத்தக் குழாய்களும் நஞ்சும்தான்.

    பிறந்த பிறகுதான் நாம் நுரையீரல் மூலம் சுவாசிக்கிறோம், பிராண வாயுவைப் பெறுகிறோம். அதுவரை ரத்தம் இதயத்தில் இருந்து கருவின் நுரையீரலுக்கு செல்லாமல் மாற்றுப் பாதையான டக்டஸ் ஆர்டீரியோஸிஸ் என்பதன் மூலம் சென்று தொப்புள்கொடி வழியாகச் சுத்திகரிக்கப்படுகிறது.

     ஆனால் குழந்தை பிறந்து முதல் மூச்சு எடுக்கும போதுதான் அந்த ஆச்சரியம் நிகழ்கிறது. நுரையீரல் முதன் முறையாக விரியும்போது அந்த சின்ன இதயம் லேசாக திரும்புகிறது. அப்போது அந்த மாற்றுவழிப் பாதையான டக்டஸ் முறுக்கிக் கொண்டு மூடிவிடுகிறது. எத்தனை அழகான திறமையான வடிவமைப்பு இயற்கையால் அமைக்கப்பட்டு இருக்கிறது.

    இதயம் ஒரு பம்ப். நமது ஜீவ நதிகளான ரத்த நாளங்கள் மூலம் நம் உறுப்புகளுக்கும் திசுக்களுக்கும் உயிர் வாழத் தேவையானவற்றை அளிக்கிறது. இந்த பம்ப்பின் விசை இதயத் துடிப்புதான். இதை அளிப்பவை வேகஸ், சிம்பதடிக் என்கிற இரண்டு வகை நரம்புகள்தான். வேகஸ் துடிப்பைக் குறைக்கும், சிம்பதெடிக் அதிகரிக்கும். துடிப்பைத் தீர்மானிப்பவை மூன்று நோட்ஸ்.

    வீடுகளில் மின்தடை ஏற்படும்போது அவசரத் தேவைக்காக ஜெனரேட்டர், இன்வெர்ட்டர் போன்றவற்றை வைத்திருக்கிறோம் அல்லவா? அதேபோல் ஒரு நோட் தடைபட்டால், அடுத்தது செயல்படத் தொடங்கும். ஆனால், அதே அளவில் இருக்காது. இவை மூன்றும் செயல் இழந்தாலும் இதயத் தசை தானாக நரம்புகளின் உதவியின்றிச் செயல்பட முடியும்.

    ஆனால், அப்போது இதயம் துடிப்பது நிமிடத்துக்கு 40 முறை மட்டுமே. தேவை அதிகரித்தாலும் துடிப்பு அதிகமாகாது. இதயம்தான் உணர்வுகளின் இருப்பிடம் என்பது தவறான தகவல்.

    மூளைதான் உணர்வுகளை ஏற்படுத்தி அவற்றின் தேவைக்குரிய மாற்றங்களை உடலில் ஏற்படுத்துகிறது. மன அழுத்தம், பயம், அதிர்ச்சி, ஆனந்தம் போன்ற பல உணர்வுகளுக்குத் தக்கவாறு இதயத்தை செயல்படச் செய்கிறது. இதயம், மூளையின் உதவியின்றி செயல்படமுடியும். மூளை செயலிழந்த நிலையை அடைந்தாலும் இதயத்தையும் மற்ற உறுப்புகளையும் தானம் செய்ய முடியும்.

    • உணவகங்களில் உள்ள உணவுகளை ரிவ்யூ செய்வதன் மூலம் பிரபலமானவர் இர்பான்.
    • மனைவியின் தொப்புள் கொடியை வெட்டும் வீடியோவை வெளியிட்டு இர்பான் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

    பிரபல யூடியூபரான இர்பான் 'இர்பான் வியூஸ்' எனும் யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். உணவகங்களில் உள்ள உணவுகளை ரிவ்யூ செய்வதன் மூலம் பிரபலமான இவர் திரைப்பிரபலங்களுடன் உணவருந்தியவாரே நேர்காணல்களும் எடுத்து வருகிறார்.

    யூடியூபர் இர்பானுக்கு கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு தன்னுடைய மனைவி மற்றும் குடும்பத்தோடு சேர்ந்து சமையல் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

    இர்பான் மனைவி கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கர்ப்பமாக இருக்கும்போது, துபாயில் ஸ்கேன் எடுத்து பார்த்தார். இர்பான், தனக்கு பெண் குழந்தை பிறக்கப் போவதாக அறிவித்தார்.

    பாலினத்தை அறிவித்தது இந்திய சட்டப்படி குற்றம் என்பதால், அவர் மீது வழக்கு பதிவு செய்ய இருந்த நிலையில், மன்னிப்பு கேட்டதால் அவர் மீதான நடவடிக்கை நிறுத்தப்பட்டது.

    இந்நிலையில் குழந்தை பிறக்கும்போது அறுவை சிகிச்சை அறையில் மனைவியின் தொப்புள் கொடியை வெட்டும் வீடியோவை யூடியூபர் இர்பான் வெளியிட்டு மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளார்.

    தொப்புள் கொடியை இர்பான் வெட்டுவது தவறு. இந்த விவகாரம் தொடர்பாக விளக்கம் கேட்டு இர்பானுக்கு நோட்டீஸ் அனுப்பப்படும். அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு ஊரக நலப்பணிகள் இயக்குநர் ராஜமூர்த்தி தெரிவித்துள்ளார்.

    தமிழ்நாடு மருத்துவச் சட்டத்தின்படி தவறு என இந்த விவகாரம் தொடர்பாக மருத்துவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    இதனையடுத்து மருத்துவத்துறை அதிகாரிகள் இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்திய நிலையில், தொப்புள் கொடி வீடியோவை தனது யூட்யூபில் இருந்து இர்பான் நீக்கியுள்ளார்.

    இந்த வீடியோ நீக்கப்படுவதற்கு முன்பு வரை சுமார் 16 லட்சம் பேர் அதனை பார்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • குழந்தையை உயிருடன் வைத்திருக்க தொப்புள் கொடியே காரணம்.
    • பிறப்பு நிலை கோளாறுகளை கண்டுபிடிக்க உதவுகிறது.

    கருவில் இருக்கும் குழந்தை பாதுகாப்பாக இருக்க உணவு, உடற்பயிற்சி, சுவாசப் பயிற்சி மட்டும் காரணம் கிடையாது. குழந்தையை உயிருடன் வைத்திருக்க தொப்புள் கொடியே காரணம்.

    ஒரு குழந்தை உருவாகும் போதே அதனுடன் சேர்ந்து தொப்புள் கொடியையும் சேர்த்து உருவாக்குகின்றன. அதன் பிறகு கருமுட்டை தானாகவே கருப்பை சுவற்றில் பதித்துக்கொள்ளும்.


    உட்புற அணுக்கள் வளர்ச்சி அடைந்து சிசுவாக மாறுகிறது. அதேபோல் வெளிப்புற அணுக்கள் சுவர்களுக்குள் ஆழமாக புதைந்து தொப்புள் கொடியாக உருவாகும்.

    இன்னும் சொல்லப்போனால் பிரசவத்திற்கு முன்பே பிறப்பு நிலை கோளாறுகளை கண்டுபிடிக்க இந்த தொப்புள் கொடி அணுக்கள் உதவுகின்றன.

    ஒரு குழந்தைக்கும், தாய்க்கும் இடையேயான உயிர்பாதை என்று கூறலாம்.

    கர்ப்ப காலத்தில் ஒவ்வொரு நிமிடமும் கருப்பை வழியாக ரத்தம் அனுப்பப்படுகிறது. அப்போது ஊட்டச்சத்துக்களும் பரிமாறப்படுகின்றன. சிசுவின் கழிவை ரத்த ஓட்டத்தின் வாயிலாக வெளியேற்றவும் இந்த தொப்புள் கொடிகள் உதவுகின்றன.

    தாயின் வயிற்றில் வளரும் குழந்தைகள் ஊட்டச்சத்தையும், ஆரோக்கியத்தையும் தாயின் கர்ப்பப்பையுடன் இணைந்திருக்கும் நஞ்சுக்கொடி மூலமாக பெறுவார்கள்.

    மேலும் தொப்புள் கொடி என்பது வளரும் சிசுவிற்கும் தொப்புள் கொடிக்கும் இடையே உள்ள குழாய் ஆகும்.


    குழந்தை பிறந்த பிறகு ஊட்டச்சத்திற்கு தொப்புள் கொடி தேவை இல்லை. குழந்தை பிறந்தவுடன் தொப்புள் கொடி இடுக்கிறப்பட்டு குழந்தையின் உடம்பில் இருந்து எவ்வளவு தூரம் வெட்ட முடியுமோ அவ்வளவு தூரம் வலியே இல்லாமல் வெட்டி விடலாம்.

    தொப்புள் கொடியில் நரம்புகள் இல்லாததால் அது வலியில்லாத ஒன்றாக இருக்கும்.

    தொப்புள் கொடியை வெட்டுவதற்கு முன், குழந்தையின் இதயத்துடிப்பில் வித்தியாசமான சத்தம் ஏதும் கேட்கிறதா, அதாவது இதயத்துடிப்புக்கு இடையில் வரக்கூடிய சின்னச்சின்ன சத்தங்கள் கேட்டால், குழந்தைக்கு இதயம் தொடர்பான பிரச்னை ஏதும் இருக்கிறதா என்பதை மருத்துவர்கள் உறுதிசெய்வார்கள். அதன் பிறகே அதனை வெட்டி எடுப்பார்கள். இல்லை என்றால் நோய்தொற்று ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.

    • மாடியில் உள்ள ஒரு அறையில் பிரசவித்து, பின்னர் தனது குழந்தையை துணி சுற்றி கீழே வீசினார்.
    • ஐரோப்பாவுக்கு பயணம் மேற்கொண்ட மாணவர் குழுவில் அப்பெண் இடம்பெற்றிருந்தார்.

    18 வயது அமெரிக்கப் பெண் ஒருவர், தனது பிறந்த குழந்தையை ஹோட்டல் ஜன்னலுக்கு வெளியே "தொப்புள் கொடியுடன்" தூக்கி எறிந்த கொடூரம் நிகழ்ந்துள்ளது.

    கிழக்கு பாரிஸில் உள்ள போர்ட் டி மாண்ட்ரூயிலில் அமைந்துள்ள ஐபிஸ் ஸ்டைல்ஸ் ஹோட்டலில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

    அமெரிக்காவை சேர்ந்த 18 வயது மாணவியான அப்பெண் ஹோட்டலின் இரண்டாவது மாடியில் உள்ள ஒரு அறையில் பிரசவித்து, பின்னர் தனது குழந்தையை துணி சுற்றி ஜன்னலுக்கு வெளியே தொப்புள் கொடியுடன் நேற்று (திங்கட்கிழமை) காலை 6 மணியளவில் வீசியதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

     

    ஹோட்டல் முன் தொப்புள் கொடியுடன் துணியால் சுற்றப்பட்ட ஒரு குழந்தை கிடந்ததை அங்குள்ளவர்கள் பார்த்து போலீசுக்கு தெரிவித்தனர்.

    உடனே குழந்தை மீட்கப்பட்டு ம்ருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும், குழந்தை கடுமையான காயங்களால் காலை 7:45 மணியளவில் இறந்தது.

    அறையிலேயே பிரசவித்த பெண்ணின் நிலையும் மோசமான நிலையில் அறுவை சிகிச்சைக்காக அவர் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார்.

    அங்கு சிகிச்சை பெற்றுவரும் அப்பெண்ணை போலீசார் காவலில் வைத்துள்ளனர். அமெரிக்காவிலிருந்து ஐரோப்பாவுக்கு பயணம் மேற்கொண்ட மாணவர் குழுவில் அப்பெண் இடம்பெற்றிருந்ததாக கூறப்படுகிறது. 

     

    தேனி அருகே மனைவிக்கு வீட்டிலேயே பிரசவம் பார்த்த கணவன், தொப்புள் கொடியை அறுக்க எதிர்ப்பு தெரிவித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    மேலசொக்கநாதபுரம்:

    தேனி அருகே உள்ள கோடாங்கிப்பட்டி தென்றல் நகரைச் சேர்ந்தவர் கண்ணன் (வயது 27). இவர் ஜவுளி வியாபாரம் பார்த்து வருகிறார். இவருக்கும் மகாலெட்சுமி (21) என்பவருக்கும் கடந்த 1 வருடத்துக்கு முன்பு திருமணம் நடந்தது. கண்ணன் தனது பெற்றோர் மற்றும் சகோதரர்களுடன் கூட்டுக்குடும்பமாக வசித்து வருகிறார்.

    மகாலெட்சுமி நிறைமாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் இன்று காலை அவருக்கு வீட்டிலேயே குழந்தை பிறந்தது அக்கம் பக்கத்தில் இருந்தவர்ளுக்கு தெரிய வந்தது. நேற்று இரவு தனது மனைவிக்கு கண்ணன் பிரசவம் பார்த்து ஆண் குழந்தையை எடுத்ததாக அவர்களிடம் தெரிவித்துள்ளார்.

    மனைவி மகாலெட்சுமியுடன் கணவர் கண்ணன்.

    அந்த குழந்தை ஆரோக்கியமாக உள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் காட்டுத் தீ போல பரவியதால் அவரது வீட்டுக்கு போலீசாரும், அரசு மருத்துவர்களும் வந்தனர். வீட்டிலேயே பிரசவம் பார்த்தது குறித்து கண்ணனிடம் கேட்டபோது, இது எனது மனைவி மற்றும் என்னுடைய சம்மதத்தின் பேரிலேயே நடந்தது.

    ஆஸ்பத்திரியில் பிரசவம் பார்க்க எனக்கு விருப்பம் இல்லை. என் குடும்பத்தில் பெரும்பாலானோர் வீட்டிலேயே பிறந்தவர்கள் தான். தற்போது வரை நாங்கள் அனைவரும் நலமுடன் இருக்கிறோம். ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் பார்க்கும் பிரசவத்தில் கூட தவறு நடக்கலாம். ஆனால் எங்கள் வீட்டில் நடந்த எந்த பிரசவத்திலும் தவறு நடக்கவில்லை. யாரும் இறந்து போகவும் இல்லை. குழந்தை பெற்றெடுத்த பிறகு என் மனைவி எவ்வித சோர்வும் இல்லாமல் வீட்டு வேலைகளை சுறுசுறுப்பாக செய்து வருகிறார். நான் அவருக்கு சிறிய உதவிகள் மட்டுமே செய்தேன் என்று தெரிவித்தார்.

    கண்ணன் மற்றும் அவரது மனைவியிடம் டாக்டர்கள் ஆஸ்பத்திரிக்கு வந்து ஊசி போட்டுக் கொள்ளுமாறு கூறினர். அதற்கு அவர்கள் மறுத்து விட்டனர். மேலும் குழந்தையின் தொப்புள் கொடியையும் அறுக்க எதிர்ப்பு தெரிவித்தனர். தொப்புள் கொடி தானாக விழ வேண்டும். அப்போதுதான் அதில் இருந்து நச்சுப் பொருட்கள் உடலில் சேர்ந்து நோய் எதிர்ப்பு சக்தியை தரும் என்று கண்ணனின் பெற்றோர்கள் தெரிவித்தனர்.

    வீட்டில் பிரசவம் பார்த்து ஏதேனும் விபரீதம் நடந்திருந்தால் பெரியவர்கள்தான் பொறுப்பு என போலீசார் தெரிவித்த போது கண்ணனின் தந்தை அவர்களை தரக்குறைவாக பேசினார். இதனால் போலீசாருக்கும் கண்ணன் குடும்பத்தினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து போலீசார் கண்ணனின் தந்தையை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

    அவரது வீட்டுக்கு 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு குழந்தைக்கு மட்டுமாவது சிகிச்சை அளிக்க அனுமதிக்குமாறு டாக்டர்கள் கேட்டனர். அதற்கு கதவை பூட்டிக் கொண்டு உள்ளே யாரும் வரக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பான சூழல் உருவானது. போலீசார் மற்றும் டாக்டர்கள் அவர்களிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

    ×