என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "usilampatti"

    • காதலுக்கு இரு வீட்டாரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
    • காரில் ஏறிய காதல் ஜோடியை இரு வீட்டாரும் சரமாரியாக தாக்கினர்.

    உசிலம்பட்டி:

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள மானுத்து கிராமத்தைச் சேர்ந்தவர்கள் அய்யர்சாமி. இவரும் பக்கத்து வீட்டை சேர்ந்த கவினாஸ்ரீ என்பவரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். 2 பேரும் இளங்கலை பட்டதாரிகள்.

    இருவரது குடும்பத்தினருக்கும் இடப்பிரச்சனை தொடர்பாக 15 ஆண்டுகளாக முன்விரோதம் இருந்து வருகிறது. இதுதொடர்பாக அடிக்கடி அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதனால் இருவரது அய்யர்சாமி-கவினாஸ்ரீ காதலுக்கு இரு வீட்டாரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இதையடுத்து காதல் ஜோடிகள் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். அதன்படி இன்று காலை இருவரும் வீட்டை விட்டு வெளியேறி காதல் திருமணம் செய்து கொண்டனர்.

    தொடர்ந்து உசிலம்பட்டி அனைத்து மகளீர் காவல் நிலையத்தில் காதல் ஜோடி பாதுகாப்பு தஞ்சமடைந்தனர்.

    இதுகுறித்து தகவலறிந்த இருவீட்டாரும் போலீஸ் நிலையத்திற்கு வந்தனர். அவர்களிடம் போலீசார் சமரசம் பேசினர். தொடர்ந்து காதலர்கள் இருவரும் மேஜர் என்பதால் அய்யர்சாமியுடன், கவினாஸ்ரீயை போலீசார் அனுப்பி வைத்தனர்.

    காவல் நிலையத்திலிருந்து வெளியே வந்து காரில் ஏறிய காதல் ஜோடியை இரு வீட்டாரும் காரிலிருந்து இழுத்து கீழே போட்டு சரமாரியாக தாக்கினர்.

    உடனே அங்கிருந்து பொது மக்கள் மற்றும் போலீசார் அவர்களிடமிருந்து காதல் ஜோடியை காப்பற்றினர். இதனால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து 2 குடும்பத்தினரிடம் போலீசார் அறிவுறுத்தல்களை வழங்கினர்.

    • காவலர் முத்துக்குமாரை கல்லால் அடித்து கொன்ற வழக்கு.
    • தேனி மாவட்டம் கம்பம் அருகே தலைமறைவாக இருந்த ரவுடி பொன்வண்ணனை சுட்ட போலீசார்.

    மதுரை உசிலம்பட்டியில் காவலரை கல்லால் அடித்து கொல்லப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த நபர் மீது போலீசார் என்கவுண்ட்டர் நடத்தினர்.

    காவலர் முத்துக்குமாரை கல்லால் அடித்து கொன்ற வழக்கில் தேடப்பட்டு வந்த கஞ்சா வியாராரி பொன்வண்ணன் மீது போலீசார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர்.

    இதில், படுகாயமடைந்த பொன்வண்ணனை மீட்டு போலீசார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு, பொன்வண்ணனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில்,  பொன்வண்ணன் உயிருக்கு போராடி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.



    • உசிலம்பட்டியில் 16-ந் தேதி மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
    • பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.

    மதுரை

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டி, தும்மக்குண்டு, இடையப்பட்டி, மொண்டிக்குண்டு ஆகிய துணைமின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதன் காரணமாக வருகிற 16-ந் தேதி (செவ்வாய்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின்தடை ஏற்படும். உசிலம்பட்டி நகர், கவண்டன்பட்டி, பூதிப்புரம், கள்ளபட்டி, வலையபட்டி, மு.போத்தம்பட்டி, அயன்மேட்டுப்பட்டி, மலைப்பட்டி, கரையாம்பட்டி, நல்லுத்தேவன்பட்டி, சீமானூத்து, கொங்கபட்டி, மேக்கிலார்பட்டி, கீரிபட்டி, ஒத்தப்பட்டி, பண்ணைப்பட்டி, சடையாள், கன்னியம்பட்டி.சிந்துபட்டி, தும்மக்குண்டு, பெருமாள்பட்டி, காளப்பன்பட்டி பூசலப்புரம், திடியன், ஈச்சம்பட்டி, பாறைப்பட்டி, அம்பட்டையன்பட்டி, வலங்காகுளம், உச்சப்பட்டி, காங்கேயநத்தம், தங்களாச்சேரி, பொக்கம்பட்டி. மாதரை, தொட்டப்பநாயக்கனூர், இடையபட்டி, நக்கலப்பட்டி, பூச்சிபட்டி, செட்டியபட்டி, வில்லாணி.

    உத்தப்பநாயக்கனூர், உ.வாடிப்பட்டி, குளத்துப்பட்டி, கல்யாணிபட்டி, கல்லூத்து, எரவார்பட்டி, மொண்டிக்குண்டு, பாப்பாபட்டி, கொப்பிலிபட்டி, வெள்ளைமலைப்பட்டி, வையம்பட்டி, லிங்கப்பநாயக்கனூர், புதுக்கோட்டை, சீமானூத்து, துரைசாமிபுரம்புதூர் மற்றும் அதனைச் சார்ந்த பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

    மேற்கண்ட தகவலை உசிலம்பட்டி மின்பகிர்மான செயற்பொறியாளர் (பொறுப்பு) ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

    • உசிலம்பட்டி ஆர்.சி. பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆண்டு விழா நடந்தது.
    • உசிலம்பட்டி எம்.எல்.ஏ. பங்கேற்று பரிசு வழங்கினார்.

    உசிலம்பட்டி

    மதுரை மாவட்டம் உசி–லம்பட்டி ஆர்.சி. சிறுமலர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி 37-வது ஆண்டு விழா பள்ளி தலைமை ஆசிரியர் மெர்ஸி தலைமை–யில் நடைபெற்றது. தொடக் கமாக பள்ளியின் ஆண்ட–றிக்கை வாசிக்கப்பட்டது. உதவி தலைமை ஆசிரியர் மலர், பள்ளி தாளாளர் பானு ஆர்.சி. தொடக்கப் பள்ளி தலைமையாசிரியர் அமுதா ஆகியோர் முன் னிலை வகித்தனர்.

    விழாவில் உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் பி.அய்யப்பன் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு பள்ளியில் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு முதல் மூன்று இடங் கள் பிடித்த மாணவி–களுக்கு பரிசுகளை வழங்கினார்.

    முன்னாள் எம்.எல்.ஏ. பாண்டியம்மாள், மம்மி டாடி நிறுவனர் நிஜாமுதீன், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் சந்திரசேகர், கட்சி நிர்வாகிகள் பிரபு ஜான்சன், சசிகுமார், அய்யனார்குளம் ஜெயக்குமார், அழகு மாரி, வில்லானி பாண்டி ஆகி–யோர் கலந்து கொண்டனர். விழாவையொட்டி மாணவி–களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    • உசிலம்பட்டியில் சிறுதானிய விழிப்புணர்வு பேரணி நடந்தது.
    • இதற்கான ஏற்பாட்டை உசிலம்பட்டி வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் லிங்கம் செய்திருந்தார்.

    உசிலம்பட்டி

    உசிலம்பட்டி நாடார் சரஸ்வதி மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களின் பாரம்பரிய உணவு சிறு தானிய விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் ஜெயராமபாண்டியன் கலந்து கொண்டு பழங்கால சிறுதாணியம் கம்பு கேப்பை, குதிரைவலி, தினை போன்றவற்றை பயன்பாடு பற்றி மாணவர்களுக்கு விளக்கி பேசினார். சிறுதானிய பாரம்பரிய உணவு பேரணியை நகர் மன்ற தலைவி சகுந்தலா கட்டபொம்மன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதற்கான ஏற்பாட்டை உசிலம்பட்டி வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் லிங்கம் செய்திருந்தார். முன்னதாக பள்ளியின் தலைமையாசிரியர் பரமசிவம் வரவேற்று பேசினார். இதில் வர்த்தகசங்க நிர்வாகிகள் மாரியப்பன், பொன்ஆதிசேடன், கார்த்திகைசாமி, வேலுச்சாமி, சுரேஷ்பாபு மற்றும் பொதுமக்களும் பேரணியில் கலந்துகொண்டனர்.

    • உசிலம்பட்டியில் நுகர்வோர் பாதுகாப்பு பேரமைப்பு கூட்டம் நடந்தது.
    • இதில் முக்கிய 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    உசிலம்பட்டி

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு பேரமைப்பு மாதாந்திர கூட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் பொன் ஆதிசேடன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ரமேஷ் முன்னிலை வகித்தார். இதில் முக்கிய 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இதில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் தமிழ்செல்வி, மாவட்ட செயலாளர் திருலோகநாதன், உசிலம்பட்டி நகர தலைவர் பெரியமாயதேவர், நகர செயலாளர் சுருளி, ஏழுமலை ரத்தினம், சேடப்பட்டி ஒன்றியம் மகளிரணி முத்துலட்சுமி, கல்லுப்பட்டி ஒன்றியம் முருகேசன், மாநில செயற்குழு உறுப்பினர் மதிவாணன், மாயன், மலைச்சாமி, அன்பு, ரவி, முத்துமணி, சுருளிவேல், வினோத், பிரதாப், சித்தன், பாலமுருகன், கலைசெல்வன், தங்கபாண்டியன் மற்றும் பல நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • மாணவ-மாணவிகள் மட்டுமல்லாது கிராமத்தில் உள்ள பொது மக்களின் அன்பையும் பெற்றார்.
    • உசிலம்பட்டியில் நடந்த இந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    உசிலம்பட்டி:

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சின்னக்குறவடி கிராமத்தில் அமைந்துள்ளது அரசு தொடக்கப்பள்ளி. இந்த பள்ளியில் கடந்த 2001-ம் ஆண்டு முதல் தலைமை ஆசிரியையாக வடுகப் பட்டியைச் சேர்ந்த செல்வ சிரோன்மணி என்பவர் பணியாற்றி வந்தார். அரசு தொடக்கப்பள்ளியில் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த ஏழை மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.

    5-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை உள்ள இந்த பள்ளியில் மாணவ-மாணவிகளின் கல்வி தரத்தை மேம்படுத்த தலைமை ஆசிரியை செல்வ சிரோன்மணி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தார். மேலும் மாணவர்களை பல்வேறு போட்டிகளில் பங்கேற்க வைத்து அவர் களின் தனித்திறமைகளையும் ஊக்குவித்தார். ஒவ்வொரு மாணவ-மாணவிகளின் கல்வித்திறன் செயல்பாடுகளை கண்காணித்து தகுந்த முறையில் அவர்கள் கல்வி கற்க தலைமை ஆசிரியை நடவடிக்கை எடுத்தார். இதனால் அப்பகுதி மக்களின் நன்மதிப்பையும் செல்வ சிரோன்மணி பெற்றார்.

    இந்த அரசு பள்ளியில் பயின்ற மாணவ-மாணவிகள் இன்று மருத்துவர்களாகவும், பொறியாளர்கள், அரசு பணிகள் உள்ளிட்ட பல்வேறு உயர் பணிகளில் உள்ளனர். மேலும் இங்கு படித்துவிட்டு உயர்கல்விக்கு செல்லும் மாணவ-மாணவிகளுக்கும் பல்வேறு வழிகாட்டுதல்களை தலைமை ஆசிரியை வழங்கி வந்தார்.

    இதனால் மாணவ-மாணவிகள் மட்டுமல்லாது கிராமத்தில் உள்ள பொது மக்களின் அன்பையும் பெற்றார். பள்ளிக் கட்டிட வளர்ச்சி, பள்ளிக்கான உபகரணங்களின் வளர்ச்சிகள் என பலவற்றையும் தன் முயற்சியால் பெற்று கொடுத்துள்ளார்.

    இந்நிலையில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிய தலைமையாசிரியை செல்வ சிரோன்மணி பணி நிறைவு பெற்றார். இதை அறிந்த கிராம மக்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் அவருக்கு மரியாதை செலுத்தும் வண்ணம் மாலை, கிரீடம் அணிவித்தும், தாய்வீட்டு சீதனமாக சீர் செய்வதை போன்று பல்வேறு பரிசுகளை கிராமத்தின் சார்பாக ஊர்வலமாக எடுத்து வந்து வழங்கினர்.

    தொடர்ந்து மேள தாளத்துடன் கிராமத்தில் உள்ள முக்கிய கோவில்களுக்கு அழைத்து சென்று சிறப்பு பூஜைகள் செய்து, அவரது நினைவாக மரக் கன்றுகளையும் நடவைத்து தலைமை ஆசிரியைக்கு பிரியாவிடை கொடுத்து அனுப்பினர்.

    உசிலம்பட்டியில் நடந்த இந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • மாணவ-மாணவிகள் இன்று காலை பள்ளியை புறக்கணித்து தர்ணா.
    • மாணவ-மாணவிகளிடம் தனித்தனியாக ரகசியமாக விசாரணை.

    சோழவந்தான்:

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகா விக்கிரமங்கலம் பகுதியில் உள்ள அரசு கள்ளர் பள்ளியில் 11-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் நேற்று மதுரை கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்.

    அந்த மனுவில், நான் பள்ளி விடுதியில் தங்கி பிளஸ்-1 வகுப்பு படித்து வருகிறேன். இந்த பள்ளிக்கு வந்து சேர்ந்த புதிதில் இங்கு பணியாற்றி வரும் ஆசிரியர் மூர்த்தி என்னை அடிக்கடி அழைத்து பேசுவார். நான் ஆசிரியர் என்ற முறையில் பேசி வந்தேன்.

    ஒரு நாள் அவரது அறைக்கு என்னை மட்டும் வரச்சொன்னார். உள்ளே சென்றபோது என்னை சுவற்றில் சாய்த்து உடல் முழுவதும் முகர்ந்து உதட்டில் முத்தம் கொடுத்து தகாத செயலில் ஈடுபட்டார்.

    பின்னர் உனக்கு இது பிடித்திருந்தால் தினமும் இதே மாதிரி செய்கிறேன் என்று என்னை வற்புறுத்தினார். ஆசிரியர் மீதான பயத்தால் யாரிடமும் சொல்லாமல் மவுனம் காத்து வந்தேன்.

    ஆசிரியர் மூர்த்தி ஒருவர்தான் எங்களுக்கு அனைத்து படங்களையும் எடுத்ததால் என்னால் என் படிப்பிற்கு பிரச்சனை வந்து விடும் என்று பயந்து யாரிடமும் சொல்லவில்லை.

    மேலும் அவரிடம் படித்த மாணவர்கள் பல்வேறு அரசு மற்றும் தனியார் துறைகளில் உயர் பொறுப்புகளில் இருந்தததால் இதை வெளியில் சொன்னால் எதுவும் நடக்காது என்று அமைதியாக இருந்துவிட்டேன்.

    நாளுக்கு நாள் அத்துமீறல் அதிகமானதால் இதை எனது தோழிகளிடம் சொன்னேன். அவர்கள் உனக்கு மட்டும் இப்படி நடக்கவில்லை, இதேபோல் இந்த பள்ளியில் பலருக்கு நடந்துள்ளது என்றனர்.

    இதைக்கேட்டு நான் அதிர்ச்சி அடைந்தேன். அவரின் தொடர்ச்சியான தொந்தரவுகளால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்தேன்.

    மேலும் ஆசிரியர் மூர்த்தி ஆசிரியர் என்னிடம் போக போக உனக்கு பழகிவிடும் என்றும், என்னுடைய வாரிசு உன்னுடைய வயிற்றில் வளரும் எனவும் பலமுறை கூறியிருக்கிறார். அவரின் ஆசைக்கு சில சமயம் இணங்க மறுத்ததால் என்னை பயமுறுத்தும் உள்நோக்கத்தோடு உள்ளூர் மாணவர் ஒருவரை அடித்து மண்டையை உடைத்துள்ளார்.

    எனக்கு மட்டும் இவ்வாறு நடக்கவில்லை எனவும் பள்ளி விடுதியில் தங்கி இருக்கும் பெரும்பாலான மாணவிகளுக்கு இந்த மாதிரி பாலியல் தொந்தரவு ஆசிரியர் மூர்த்தியால் நடந்துள்ளது.

    இவரின் சீண்டல்கள் எல்லை மீறவே இந்த சம்பவம் குறித்து எனது பெற்றோர்களிடம் சொல்லி விட்டு தற்கொலை செய்து கொள்ளலாம் என முடிவெடுத்து பெற்றோரிடம் சொன்னேன். அதற்கு நீ இறந்ததற்கு பிறகு இந்த உலகத்தில் நாங்களும் வாழ விரும்பவில்லை. ஆகவே மூவரும் சேர்ந்து தற்கொலை செய்து கொள்ளலாம் என்று எனது பெற்றோர்கள் சொன்னதன் பேரில் நடந்த சம்பவத்தைச் சொன்னேன். எனக்கும் எனது குடும்பத்தினருக்கும் ஏதாவது விபரீதம் நடந்தால் அதற்கு மூர்த்தி ஆசிரியரே முழு பொறுப்பாகும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.

    மேலும் அந்த மனுவில் அதே பள்ளியை சேர்ந்த சில மாணவிகள் தங்கள் கைப்பட எழுதிய மனுவும் இணைக்கப்பட்டிருந்தது.

    இந்த நிலையில் ஆசிரியர் மூர்த்தி என்பவர் மீது மாணவி அளித்த புகார் குறித்து தகவல் அறிந்த அரசு பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகள் இன்று காலை பள்ளியை புறக்கணித்து பள்ளி நுழைவு வாயில் முன்பு சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    சுமார் 1000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆசிரியருக்கு ஆதரவாக கோஷம் எழுப்பி, போலி புகார் மீது நடவடிக்கை எடுக்காதே என்பது உள்ளிட்ட பல்வேறு வாசகங்களை ஏந்தி பங்கேற்றனர்.

    இதனால் பள்ளி வளாகம் முழுவதும் பரபரப்பாக காணப்பட்டது. தகவல் அறிந்த செக்கானூரணி போலீஸ் இன்ஸ்பெக்டர் திலகரணி மற்றும் போலீசார் விரைந்து சென்று மாணவ, மாணவிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தினார்.

    பள்ளி தலைமை ஆசிரியரும் மாணவர்களுடன் பேசினார். இதில் உடன்பாடு ஏற்பட்டதால் பள்ளி மாணவர்கள் கலைந்து வகுப்புகளுக்கு சென்றனர்.

    இதற்கிடையே ஆசிரியர் மூர்த்தியிடம் பயின்ற மாணவர் ஒருவர் தற்போது அதே பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். தன்னிடம் டியூசன் படிக்காமல், பலர் மூர்த்தியிடம் டியூசனுக்கு செல்வது பிடிக்காமல் அவர் சில மாணவிகளை ஆசிரியர் மூர்த்திக்கு எதிராக திசை திருப்பிவிட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

    இந்தநிலையில் ஆசிரியர் மூர்த்தி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். முறையாக விசாரணை நடத்தி உண்மை இருக்கும் பட்சத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உசிலம்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் கூறினார்.

    தற்போது பள்ளியில் அரையாண்டு தேர்வுகள் நடைபெற உள்ள நிலையில் பள்ளி மாணவ மாணவிகள் ஆசிரியர் ஆதரவாக வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    நெருப்பில்லாமல் புகையாது என்ற பழமொழிக்கு ஏற்ப ஆசிரியர் மீது மாணவிகள் புகார் அளித்த போதிலும், உண்மைத் தன்மை குறித்து கண்டறிய ஒரு குழு அமைத்து ஒவ்வொரு மாணவ-மாணவிகளிடம் தனித்தனியாக ரகசியமாக கருத்துக்களை கேட்டு அறிந்தால் மட்டுமே குட்டு வெளிப்படும்.

    • ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள்-முக்கிய நிர்வாகிகள் பங்கேற்க ஏற்பாடு.
    • நல உதவிகளையும் நலிந்த தொண்டர்களுக்கு சசிகலா வழங்குகிறார்.

    மதுரை:

    ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க. பொதுச் செயலாளராக பதவியேற்ற சசிகலா சொத்து குவிப்பு வழக்கில் சிறை சென்ற நிலையில் அவரது தலைமையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூடி முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமியை தேர்வு செய்தனர்.

    2016-21 வரை முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க.வினரின் ஏகோபித்த ஆதரவை பெற்றார். இதையடுத்து சசிகலா மற்றும் தினகரனின் ஆதிக்கத்தையும் முடிவுக்கு எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்தார்.

    இந்தநிலையில் பிரதமர் மோடியின் ஆதரவுடன் எடப்பாடி பழனிசாமியுடன் கைகோர்த்த ஓ.பன்னீர் செல்வம் தனி அணியாக செயல்பட்டு வந்தார். அ.தி.மு.க.வில் இணைந்ததும் கட்சியின் ஒருங்கிணைப்பாளர், துணை முதலமைச்சர் பொறுப்பையும் பெற்றார்.

    எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க.வின் இணை ஒருங்கிணைப்பாளராக இருந்தார். இரட்டை தலைமையில் 2021 சட்டமன்ற தேர்தலை அ.தி.மு.க. சந்தித்தது.

    ஆனால் கடந்த சட்டமன்ற தேர்தல் தோல்விக்கு பிறகு அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை கோஷம் வலுப்பெற்றது. ஓ.பன்னீர்செல்வம் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டார். அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்களும், நிர்வாகிகளும் கட்சி கட்டுப்பாட்டை மீறியதாக நீக்கம் செய்யப்பட்டனர்.

    அ.தி.மு.க. பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டதாக அ.தி.மு.க. செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.

    தற்போது அ.தி.மு.க. எதிர்க்கட்சி அந்தஸ்தில் உள்ள நிலையில் எதிர்க்கட்சித் தலைவராகவும் அ.தி.மு.க. பொதுச் செயலாளராகவும் எடப்பாடி பழனிசாமி இருந்து வருகிறார்.

    எடப்பாடி பழனிசாமி தலைமையில் சந்தித்த பாராளுமன்ற, சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தோல்வி அடைந்தது. இதனை சுட்டிக்காட்டும் முன்னாள் நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள் அவ்வப்போது சில விமர்சனங்களை எடப்பாடிக்கு எதிராக முன்னெடுத்து வைக்கிறார்கள்.

    அவர்களின் கருத்துக்களை ஆமோதிக்கும் வகையில் டி.டி.வி.தினகரன், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவர்களது ஆதரவாளர்களும் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக பேசி வருகின்றனர்.

    இந்தநிலையில் தான் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்த கருத்தும் அ.தி.மு.க. தொண்டர்களின் மத்தியில் சலசலப்பையும் விமர்சனத்தையும் ஏற்படுத்திய நிலையில் தற்போது செங்கோட்டையன் விவகாரம் சற்று ஓய்ந்துள்ளது.

    இந்த நிலையில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா வருகிற 24-ந்தேதி கொண்டாடப்படுகிறது. அ.தி.மு.க.வினர், அ.ம.மு.க.வினர் மற்றும் சசிகலா ஆதரவாளர்கள் ஜெயலலிதா பிறந்தநாளை ஒவ்வொரு ஆண்டும் தனித்தனியாக கொண்டாடி வருகிறார்கள்.

    சமீபத்தில் பேசிய சசிகலா, அ.தி.மு.க. என் கைக்கு விரைவில் வரும். நாங்கள் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட்டு தி.மு.க. ஆட்சியை வீட்டிற்கு அனுப்புவோம் என்று கர்ஜனை செய்தார்.

    இவரது கருத்து அ.தி.மு.க. தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பல தரப்பட்ட விமர்சனங்களை ஏற்படுத்தினாலும் அ.தி.மு.க.வில் உள்ள முன்னாள் அமைச்சர்கள், முக்கிய நிர்வாகிகள் ஒரு தரப்பு தொண்டர்கள் என்று சசிகலாவின் கருத்தை ஆமோதிக்கும் ஒரு கூட்டமும் அ.தி.மு.க.வில் இருக்கத்தான் செய்கிறது.

    அனைவரும் ஒன்று சேர்ந்தால் தான் 2026 சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வை வீழ்த்த முடியும் என்று சசிகலா, ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்களை காட்டிலும் அ.தி.மு.க. முக்கிய நிர்வாகிகளும் இதே கருத்தை மறைமுகமாக சொல்கிறார்கள்.

    இந்த நிலையில் வருகிற 24-ந்தேதி சசிகலா பங்கேற்கும் வகையில் ஜெயலலிதா பிறந்தநாள் பொதுக்கூட்டத்தை உசிலம்பட்டியில் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த பொதுக்கூட்ட ஏற்பாடுகளை தென் மாவட்டம் முழுவதும் உள்ள அவரது ஆதரவாளர்கள் ஒருங்கிணைந்து செய்துள்ளனர்.

    இந்த பொதுக்கூட்டத்தில் மதுரை மற்றும் தென் மாவட்டத்தில் உள்ள ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் மற்றும் எடப்பாடி பழனிசாமி தலைமைக்கு எதிராக அதிருப்தியில் உள்ள அ.தி.மு.க. முக்கிய பிரமுகர்களை அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன.

    குறிப்பாக ஓ.பி.எஸ். ஆதரவு எம்.எல்.ஏ. அய்யப்பன் மற்றும் ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் திரளாக இந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்க திட்டமிடப்பட்டுள்ளது.

    ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன் ஆகியோர் இந்த பொதுக்கூட்டத்தில் நேரடியாக கலந்து கொள்ளாவிட்டாலும் மறைமுகமாக இந்த பொதுக்கூட்டத்தை வெற்றி பெறச் செய்யும் வகையில் அதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் திரை மறைவில் இருந்து செய்ய திட்டமிட்டுள்ளனர்.

    எனவே எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அ.தி.மு.க. தொண்டர்களை திசை திருப்பும் வியூகமாக உசி லம்பட்டி பொதுக்கூட் டத்தை சசிகலா பயன்படுத்துவார் என்று அவரது ஆதரவாளர்கள் தெரி வித்துள்ளனர்.

    பல்வேறு நல உதவிகளையும் நலிந்த தொண்டர்களுக்கு கூட்டத்தில் சசிகலா வழங்குகிறார். இந்த பொதுக் கூட்டம் அ.தி.மு.க. ஒற்று மைக்கு இது தொடக்க புள்ளியாக அமையும் என்று ஓ.பி.எஸ். ஆதரவாளர்களும் மகிழ்ச்சியுடன் வரவேற்கி றார்கள்.

    ஆனால் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் கூறுகையில், சசிகலாவின் நடவடிக்கைகள் அ.தி.மு.க.வுக்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது. அ.தி.மு.க. தொண்டர்கள் எடப்பாடி பழனிசாமி பக்கம் உறுதியாக இருக்கிறார்கள்.

    வருகிற சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் வெற்றி கூட்டணி அமையும், அ.தி.மு.க. அமோக வெற்றி பெற்று எடப்பாடியார் தலைமையில் தமிழகத்தின் நல்லாட்சி மீண்டும் அமையும்.

    அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்ற சிலர் அவ்வப்போது எழுப்பும் சலசலப்பு மற்றும் பரபரப்பு காரணமாக எடப்பாடியார் தலைமையில் செயல்படும் அ.தி.மு.க.விற்கு சிறிதளவு சேதாரமும் ஏற்படாது. எனவே உசிலம்பட்டி பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க.வில் இருந்து யாரும் பங்கேற்க மாட்டார்கள்.

    சசிகலாவின் ஆசைக்கு பெரும் ஏமாற்றமாகவே உசிலம்பட்டி பொதுக்கூட்டம் முடியும் என்று முக்கிய பிரமுகர் ஒருவர் தெரிவித்தார்.

    எப்படி இருந்தாலும் சசிகலாவின் உசிலம்பட்டி பொதுக்கூட்டம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பையும் மிகுந்த எதிர்பார்ப்பையும் அவரது ஆதரவாளர்கள் மத்தியில் ஏற்படுத்தி உள்ளது.

    • ஜெயலலிதாவின் திட்டங்கள் இந்தியாவிற்கே முன்னணி திட்டமாக இருந்தது.
    • ஏழை, எளியோருக்காக பல்வேறு திட்டங்களை கொண்டு வந்து செயல்படுத்தியவர் ஜெயலலிதா.

    உசிலம்பட்டி:

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 77-வது பிறந்தநாளையொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் ஜெயலலிதாவின் தோழி சசிகலா கலந்துகொண்டு பேசியதாவது:-

    உசிலம்பட்டி பகுதி மக்கள் எப்போதும் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா மீது அளவற்ற அன்பு செலுத்தி வருகிறார்கள். எம்.ஜி.ஆரின் கட்சிக்கு முதல் அங்கீகாரம் கொடுத்து வெற்றி பெறச் செய்தவர்கள் உசிலம்பட்டி மக்கள் தான். ஏழை, எளியோருக்காக பல்வேறு திட்டங்களை கொண்டு வந்து செயல்படுத்தியவர் ஜெயலலிதா.

    ஆனால் தி.மு.க. இன்று மக்களை கசக்கி பிழிகிறது. ஆட்சிக்கு வந்த இந்த 46 மாதத்தில் எதையும் செய்ய வில்லை. ஜெயலலிதாவின் திட்டங்கள் இந்தியாவிற்கே முன்னணி திட்டமாக இருந்தது.

    காவிரி, முல்லைப் பெரியாறு நதிகளுக்கு மிகப் பெரிய தீர்வை பெற்றுத்தந்து மத்திய அரசிடமிருந்து நிதியை முறையாக பெற்று சிறப்பு திட்டங்களையும் தமிழகத்தின் உரிமைகளை யும் நிலைநாட்டினார்.

    தி.மு.க. மும்மொழிக் கொள்கையை முன்னிறுத்தி மத்திய அரசுடன் மோதல் போக்கை கடைபிடித்து வருகிறது. இதனால் தமிழக மக்கள் பாதிப்படைகின்றனர்.

    தினந்தோறும் ஜாதி அடிப்படையிலும், மொழி ரீதியிலும் வன்முறைகள் தான் தொடர்கிறது. பாலி யல் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. புதுப்புது பிரச்சனைகளை உருவாக்கி காலத்தை நகர்த்தி அடுத்த ஆண்டு ஆட்சிக்கு வந்துவிடலாம் என தி.மு.க.வினர் பகல் கனவு காண்கின்றனர். அதை முறியடிக்க வேண்டும். தமிழகத்தை அ.தி.மு.க.வால் மட்டும்தான் காப்பாற்ற முடியும் என மக்கள் நம்புகி றார்கள்.

    ஜெயலலிதாவின் மறை விற்கு பிறகு அ.தி.மு.க. பல நெருக்கடி சவால்களை சந்தித்தது. இன்னும் நூறாண்டு ஆனாலும் இந்த இயக்கம் மக்களுக்காகவே இயங்கும் என்ற ஜெயலலி தாவின் கனவை கோடிக்கணக்கான தொண்டர்கள் மனதில் தாங்கி நிற்கிறார்கள்.

    அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட்டால் 2026 சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வின் வெற்றி உறுதியா கும். விருப்பு, வெறுப்புகளை மறந்து பொதுநலத்துடன் செயல்பட வேண்டும்.

    ஜெயலலிதா என்னும் நான் என்று, நம் தமிழ் மண்ணில் எப்போதெல்லாம் உச்சரிக்கப்பட்டதோ இந்த காலகட்டங்களில் எல்லாம் தமிழ்நாடு தலை நிமிர்ந்தது. ஒருங்கிணைந்த அ.தி.மு.க. வாக வருகிற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு மகத்தான வெற்றியை பெறுவோம்.

    தமிழக மக்களின் நம்பிக்கையும் இது தான். அனைவரும் ஒன்றிணை வோம், வென்று காட்டு வோம் என இந்நாளில் உறுதி ஏற்போம். வருகிற காலம் பொற்காலமாக அமையும் என்பதை உறுதியோடு தெரிவித்துக் கொள்கிறேன். இந்த இயக்கத்தை மீண்டும் ஒருங்கிணைக்கச் செய்து வெற்றி பெற வைப்பதே எனது லட்சியம்.

    இவ்வாறு அவர் பேசினார். 

    • உசிலம்பட்டி: காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
    • பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் சிலை அருகில் காமராஜரின் 120-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அவரது படத்திற்கு உசிலம்பட்டி எம்.எல்.ஏ. அய்யப்பன் மலர் தூவி மரியாதை செலுத்தினார்

    உசிலம்பட்டி

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் சிலை அருகில் காமராஜரின் 120-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அவரது படத்திற்கு உசிலம்பட்டி எம்.எல்.ஏ. அய்யப்பன் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    அதனைதொடர்ந்து உசிலம்பட்டி-தேனி ரோட்டில் நாடார் உறவின்முறை சார்பாக நடைபெற்ற காமராஜர் பிறந்தநாள் விழாவில் அய்யப்பன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு காமராஜரின் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் உசிலம்பட்டி அ.தி.மு.க. நகர செயலாளர் பூமாராஜா, மாநில பேரவை மாநில துணைச்செயலாளர் துரை தனராஜன், வழக்கறிஞர் பிரிவு லட்சுமணன், கோ.ராமநாதன், அடைக்கலம், அ.தி.மு.க நிர்வாகிகள் உள்ளிட்ட அ.தி.மு.க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • இளைஞர் பேரவை ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • மாநிலத் தலைவர் ராஜபாண்டியன் தலைமை தாங்கினார்.

    உசிலம்பட்டி

    மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டத்தில் இயங்கி வரும் அரசு கள்ளர் மாணவ-மாணவிகள் விடுதிகளை மிகவும் சிறுபான்மை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்ப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசின் அரசு ஆணை எண் 40-யை ரத்து செய்யக்கோரி தமிழ் மாநில பிரமலைக்கள்ளர் முற்போக்கு இளைஞர் பேரவையினர் உசிலம்பட்டியில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாநிலத் தலைவர் ராஜபாண்டியன் தலைமை தாங்கினார்.

    மாநில இணைச் செயலாளர் சவுந்தரபாண்டியன், மாவட்ட தலைவர் பாண்டி, மாவட்ட செயலாளர் அசோக், செல்லம்பட்டி ஒன்றிய தலைவர் மலைச்சாமி, மாணவரணி தினேஷ், நிர்வாகிகள் ஆண்டித்தேவர், சோலை ராஜ், பழனி, கண்ணன் முன்னிலை வகித்தனர்.

    ×