என் மலர்
நீங்கள் தேடியது "vandalur zoo"
- வண்டலூரில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் 2,832 விலங்குகள் மற்றும் பறவைகள் பராமரிக்கப்படுகிறது.
- வெள்ளைப்புலி மீது தண்ணீர் பாட்டில் வீசிய நபருக்கு ரூ.500 அபராதம் விதித்து கடும் எச்சரிக்கை செய்து பூங்காவில் இருந்து அந்த நபரை வெளியே அனுப்பினர்.
வண்டலூர்:
சென்னை அடுத்த வண்டலூரில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் 2,832 விலங்குகள் மற்றும் பறவைகள் பராமரிக்கப்படுகிறது. இதனை தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து பார்த்து செல்கின்றனர்.
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வண்டலூர் உயிரியல் பூங்காவை சுற்றி பார்க்க வந்த ஒரு ஆண் பார்வையாளர் திடீரென தனது கையில் வைத்திருந்த தண்ணீர் பாட்டிலை கூண்டுக்குள் இருந்த வெள்ளைப்புலி மீது வீசினார். இதை பார்த்த பூங்கா ஊழியர் உடனடியாக புலி மீது தண்ணீர் பாட்டில் வீசிய நபரை கையால் தாக்கி மடக்கி பிடித்து வனத்துறை அதிகாரியிடம் ஒப்படைத்தார்.
இதனையடுத்து வெள்ளைப்புலி மீது தண்ணீர் பாட்டில் வீசிய நபருக்கு ரூ.500 அபராதம் விதித்து கடும் எச்சரிக்கை செய்து பூங்காவில் இருந்து அந்த நபரை வெளியே அனுப்பினர். வண்டலூர் உயிரியல் பூங்காவில் வெள்ளைப்புலி மீது பார்வையாளர் ஒருவர் தண்ணீர் பாட்டிலை வீசும் காட்சி மற்றும் தண்ணீர் பாட்டில் வீசிய நபரை பூங்கா ஊழியர் தாக்கிய காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
- மனித குரங்கு வசிக்கும் பகுதியில் திறந்தவெளி தண்ணீர் குளியலுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
- பறவைகளுக்கு கோடை ஷவர் குளியல் வழங்கி வெயில் பாதிக்காமல் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
வண்டலூர்:
இந்தியாவில் மிகப்பெரிய பழமையான உயிரியல் பூங்கா வண்டலூர் உயிரியல் பூங்காவாகும். உலகின் பல்வேறு பகுதியில் இருந்து இந்த பூங்காவை சுற்றிப் பார்க்க வருகின்றனர்.
தற்போது பள்ளிகளுக்கு கோடைவிடுமுறை விடப்பட்டுள்ளதால் உயிரியல் பூங்காவிற்கு வரும் பார்வையாளர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
மேலும் கோடை காலத்தையொட்டி வெயிலின் தாக்கத்தில் இருந்து விலங்குகளை பாதுகாக்க வண்டலூர் உயிரியல் பூங்காவில் தேவையான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றது.
மனித குரங்கு வசிக்கும் பகுதியில் திறந்தவெளி தண்ணீர் குளியலுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவைகள் தண்ணீர் குடிப்பதற்கு ஏதுவாக குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் உடல் சூட்டைத் தணிக்க கூடிய பழங்கள் தர்பூசணி, கிர்ணிப்பழம் மற்றும் இளநீர் அனைத்தும் சேர்க்கப்பட்டு அந்த பழங்களை குளிர்சாதன பெட்டியில் வைத்து பழங்கள் உறைந்த நிலையில் அல்வா போன்று விலங்குகளுக்கு கொடுக்கிறார்கள் பறவைகளுக்கு அவைகள் இருப்பிடத்தை சுற்றி ஜன்னல் கோணி கட்டப்பட்டு அவைகளுக்கும் கோடை ஷவர் குளியல் வழங்கி வெயில் பாதிக்காமல் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
அதேபோன்று சிங்கம், புலிகளுக்கு நீந்தி குளிக்கும் தொட்டி வைக்கப்பட்டுள்ளது. காண்டாமிருகத்திற்கு ஷவர் குளியலுடன் இருக்கும் இடத்தை சுற்றி சேற்று குளியல் அமைத்துள்ளனர்.
அதேபோல் நீர்யானை இருக்கும் இடத்தையும் தண்ணீரால் நிரப்பி சேற்றுத் தன்மை மாறாதபடிக்கு ஈரப்பதத்தை கொடுத்து அந்த விலங்குகளின் சூட்டை தணிக்கின்றனர்.
அதேபோல் யானைக்கு ஷவர் குளியல் மற்றும் சேற்று குளியல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நெருப்புக்கோழி, ஒட்டகச்சிவிங்கி, வரிக்குதிரை போன்றவைகளுக்கு ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை தண்ணீரை சுழற்றி அடிக்கும் வகையில் குழாய்கள் அமைக்கப்பட்டு இருக்கிறது.
மேலும் பார்வையாளர்களின் வசதிக்காக ஆங்காங்கே தண்ணீர் குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் புதுப் பொலிவுடன் திறக்கப்பட்ட உணவகங்கள், நிழற்குடைகள் என்று பார்வையாளர்களுக்கும் கோடை காலத்தில் சிறப்பான ஏற்பாடுகளை உயிரியல் பூங்கா நிர்வாகம் செய்துள்ளது.
- வண்ணத்துப்பூச்சி பூங்கா, மீன் கண்காட்சியகம், குழந்தைகள் பூங்கா, இரவு நேர விலங்குகள் பூங்கா, பாம்புகள் இருப்பிடம் என தனித்தனியாக அமைக்கப்பட்டுள்ளது.
- கோடை வெயிலை சமாளிக்க பூங்காவில் உள்ள விலங்குகளுக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
வண்டலூர்:
வண்டலூர் பூங்காவில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விலங்குகள் மற்றும் பறவைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
வண்ணத்துப்பூச்சி பூங்கா, மீன் கண்காட்சியகம், குழந்தைகள் பூங்கா, இரவு நேர விலங்குகள் பூங்கா, பாம்புகள் இருப்பிடம் என தனித்தனியாக அமைக்கப்பட்டுள்ளது. தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை என்பதால் பூங்காவுக்கு வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளில் 25 ஆயிரம் பேர் பூங்காவை கண்டு ரசித்தனர்.
கோடை விடுமுறையையொட்டி பார்வையாளர்களின் வசதிக்காக வண்டலூர் உயிரியல் பூங்கா இந்த மாதம் (மே) முழுவதும் செவ்வாய்கிழமை விடுமுறை நாட்கள் உள்பட அனைத்து நாட்களிலும் திறந்திருக்கும் என்று பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கோடை வெயிலை சமாளிக்க பூங்காவில் உள்ள விலங்குகளுக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. நீர்சத்து அதிகம் உள்ள பழங்கள் உள்ளிட்டவை அதிகம் வழங்கப்படுகிறது.
யானைகளுக்கு ஷவர் குளியில் ஏற்பாடும் செய்யப்பட்டு உள்ளன. யானைகள் ஷவரில் ஆனந்த குளியல் போடுவது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
- கோடைகாலம் என்பதால் 2 கரடிகளுக்கும் நீர்ச்சத்து குறையாமல் இருக்க இரவில் பயணம் செய்து கொண்டு வரப்பட்டன.
- பூங்கா ஊழியர்கள் 2 கரடி குட்டிகளுக்கு காய்கறி, பழங்கள், தேன், ரொட்டி, வேகவைத்த முட்டை, பால் உள்ளிட்டவை வழங்கி உபசரித்து வருகிறார்கள்.
கூடுவாஞ்சேரி:
விலங்குகள் பரிமாற்ற திட்டத்தின் கீழ், மைசூரில் இருந்து வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு ஒரு ஆண் மற்றும் பெண் என இரண்டு கரடிகள் கொண்டு வரப்பட்டு உள்ளது.
ஆண் கரடியின் பெயர் அப்பு ஆகும். இதற்கு 2 வயது ஆகிறது. பெண்கரடியின் பெயர் புஷ்பா. இதற்கு ஒன்றரை வயது ஆகிறது. தற்போது கோடைகாலம் என்பதால் 2 கரடிகளுக்கும் நீர்ச்சத்து குறையாமல் இருக்க இரவில் பயணம் செய்து கொண்டு வரப்பட்டன. பூங்கா ஊழியர்கள் 2 கரடி குட்டிகளுக்கு காய்கறி, பழங்கள், தேன், ரொட்டி, வேகவைத்த முட்டை, பால் உள்ளிட்டவை வழங்கி உபசரித்து வருகிறார்கள்.
இதுகுறித்து பூங்கா அதிகாரி ஒருவர் கூறும்போது, விலங்குகள் பரிமாற்ற திட்டத்தில் மைசூரில் இருந்து 2 கரடிகள் வண்டலூர் பூங்காவுக்கு கொண்டு வரப்பட்டு உள்ளன. பகல் நேர பயணத்தை தவிர்க்க இரவு நேரத்தில் வாகனம் மூலம் கொண்டு வரப்பட்டது. பயணத்தின் போது 2 மணி நேரத்திற்கு ஒரு முறை வாகனம் நிறுத்தப்பட்டது. அதற்கு பழங்கள், தேன் வழங்கப்பட்டன. இது கரடிகளின் மன அழுத்தத்தை தவிர்க்க உதவியது. தற்போது இந்த கரடிகள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளன. விரைவில் சுற்றுலா பயணிகளின் பார்வைக்கு விடப்படும். இவற்றிற்கு காலை 11 மணிக்கு பழங்கள், காய்கறிகள், மதியம் 1.30 மணிக்கு ரொட்டி, வேகவைத்த முட்டை, மாலையில் கஞ்சியும் பாலும் வழங்கப்படுகிறது என்றார்.
இதில் ஒரு கரடியின் வயது ஒன்றரை மற்றொரு கரடியின் வயது இரண்டு. இவ்விரண்டு கரடிகளையும் 21 நாள் தனி கூண்டில் வைத்து பராமரித்து பின்னர் மற்ற கரடிகளுடன் பழகிய பிறகு பார்வையாளர்கள் கண்டுகளிக்கும் வகையில், ஏற்பாடுகள் செய்து தரப்படும் என்று பூங்கா நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
- உயிரியல் பூங்காவில் தற்போது 10 சிங்கங்கள் உள்ளன.
- சிங்கம் சபாரி மீண்டும் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட உள்ளது.
வண்டலூர் உயிரியல் பூங்காவில் தற்போது 10 சிங்கங்கள் உள்ளன. இந்நிலையில் இங்கு சிங்கம் சபாரியை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான பணிகள் தற்போது தீவிரமாக நடந்து வருகின்றன.
சிங்கம் சபாரிக்கான வாகனங்களை புதுப்பித்தல், சிங்கங்கள் உலவும் பகுதியை சுற்றி போடப்பட்டுள்ள கம்பி வேலி மற்றும் இரும்பு கதவுகளை புனரமைத்தல் உள்ளிட்ட பணிகள் முடிந்துவிட்டன. இதையடுத்து இன்னும் 2 நாட்களில் வண்டலூர் உயிரியல் பூங்காவில் சிங்கம் சபாரி மீண்டும் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட உள்ளது.
- வண்டலூர் பூங்காவில் சிங்கம், புலி உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள், பறவைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
- வண்டலூர் பூங்காவில் 5 ஆண் சிங்கம், 4 பெண் சிங்கங்கள் என மொத்தம் 9 சிங்கங்கள் உள்ளன.
வண்டலூர்:
வண்டலூரில் உள்ள பூங்காவில் சிங்கம், புலி உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள், பறவைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இவற்றை கண்டு ரசிக்க தினந்தோறும் ஏராளமான பார்வையாளர்கள் வந்து செல்கிறார்கள்.
வண்டலூர் பூங்காவில் 5 ஆண் சிங்கம், 4 பெண் சிங்கங்கள் என மொத்தம் 9 சிங்கங்கள் உள்ளன. கொரோனா கட்டுப்பாடுகளுக்கு முன்பு கடந்த 2020-ம் ஆண்டு வண்டலூர் பூங்காவில் லயன்சபாரி நிறுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து தற்போது லயன்சபாரியை மீண்டும் தொடங்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்கான பணிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டு நடந்து வருகின்றன.
இந்த நிலையில் ஏற்கனவே பெங்களூருவில் உள்ள உயிரியல் பூங்காவில் இருந்து சேரு என்ற ஆண் சிங்கம் வண்டலூர் பூங்காவுக்கு கொண்டு வரப்பட்டது. இதற்கு இணையாக விலங்குகள் பரிமாற்ற திட்டத்தில் 3 ஜோடி நெருப்புக்கோழிகளுக்கு பதிலாக லக்னோவில் உள்ள பூங்காவில் இருந்து உமா என்ற பெண் சிங்கம் வரவழைக்கப்பட்டது. 45 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு பின்னர் அவை ஒன்றாக சேர விடுவிக்கப்பட்டன.
ஆனால் இந்த சிங்கங்கள் ஒன்று சேர்வதில் சிக்கல் நீடித்து வந்ததாக தெரிகிறது. இதனால் இயற்கையான சூழலுக்காக சிங்கங்களை லயன்சபாரி உள்ள இடத்தில் பூங்கா ஊழியர்கள் விடுவித்து உள்ளனர். அவை அங்குள்ள அடைப்புக்குள் விடுவிக்கப்பட்டு இருப்பதாக தெரிகிறது.
- வண்டலூர் உயிரியல் பூங்காவில் கடந்த 2019-ம் ஆண்டு சிங்கம் சபாரி நிறுத்தப்பட்டது.
- வண்டலூர் பூங்காவில் சிங்கம் சபாரியை மீண்டும் தொடங்க அதிகாரிகள் முடிவு செய்தனர்.
வண்டலூர்:
வண்டலூரில் உள்ள உயிரியல் பூங்காவில் வெள்ளைப் புலிகள் வங்க புலிகள், சிங்கங்கள், சிறுத்தைகள் உள்ளிட்ட விலங்குகள் மற்றும் ஏராளமான பறவைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது.
வண்ணத்துப்பூச்சி பூங்கா, மீன் கண்காட்சியகம், குழந்தைகள் பூங்கா, பாம்புகள் இருப்பிடம் என தனித்தனியாக அமைக்கப்பட்டுள்ளது.
வண்டலூர் உயிரியல் பூங்காவில் கடந்த 2019-ம் ஆண்டு சிங்கம் சபாரி நிறுத்தப்பட்டது. இதன் பின்னர் கொரோனா கட்டுப்பாடுகள் உள்ளிட்டவற்றால் சிங்கம் சபாரி திறப்பதில் தாமதம் ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து பூங்காவில் சிங்கம் சபாரி, மான் சபாரியை விரைவில் தொடங்க வேண்டும் என்று பார்வையாளர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதைத்தொடர்ந்து வண்டலூர் பூங்காவில் சிங்கம் சபாரியை மீண்டும் தொடங்க அதிகாரிகள் முடிவு செய்தனர். இதற்கான பணிகள் வேகமாக நடந்து வருகின்றன.
இதற்கிடையே சிங்கம், மான் சபாரி விரைவில் திறக்கப்படும் நடவடிக்கைக்காக இதற்காக 2 ஏ.சி. சொகுசு பஸ்கள் வாங்கப்பட்டுள்ளது. இவை இந்த மாத இறுதியில் பூங்காவுக்கு வர உள்ளது.
எனவே விரைவில் வண்டலூர் பூங்காவில் சிங்கம், மான் சபாரியில் பார்வையாளர்கள் செல்லலாம். மேலும் பூங்காவுக்கு கூடுதலாக 10 பேட்டரி வாகனங்களும் வாங்கப்பட்டு உள்ளன.
இதுகுறித்து பூங்கா அதிகாரி ஒருவர் கூறும்போது, 'வண்டலூர் பூங்காவில் சிங்கம் சபாரியை விரைவில் தொடங்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் எதிர்பார்ப்பில் உள்ளனர். இதற்கான பணிகள் இறுதி கட்டத்தில் உள்ளது. சபாரி செல்வதற்காக 2 ஏ.சி. சொகுசு பஸ்கள் வாங்கப்பட்டு உள்ளன. விரைவில் பூங்காவில் சிங்கம் சபாரி தொடங்கப்படும்' என்றார்.
- வண்டலூர் பூங்காவை சுற்றிப்பார்க்க டிக்கெட் கட்டணமாக ரூ.100 வசூலிக்கப்படுகிறது.
- விலங்குகள் பரிமாற்றத்தின் கீழ் சிங்கங்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளது.
சென்னை:
வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு பார்வையாளர்கள் வருகை அதிகரித்து வருகிறது. பூங்காவை சுற்றி பார்த்து அங்குள்ள அரிய வகை மிருகங்கள் மற்றும் பறவைகளை கண்டு ரசிக்கவும் சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டுகிறார்கள்.
சராசரியாக தினமும் 2500 முதல் 3000 பேர் வரை செல்கிறார்கள். வார இறுதி நாட்களில் சுமார் 10 ஆயிரம் பேர் செல்கிறார்கள்.
602 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த பூங்காவில் 2 ஆயிரத்து 400 மிருகங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் 42 வகை மிருகங்கள் மாமிச உண்ணிகள் ஆகும்.
இந்தியாவில் இருக்கும் உயிரியல் பூங்காக்களில் சிறந்த பூங்கா என்ற விருதையும் வண்டலூர் உயிரியல் பூங்கா பெற்றுள்ளது.
பூங்காவை சுற்றிபார்க்க டிக்கெட் கட்டணமாக ரூ.100 வசூலிக்கப்படுகிறது. இனி இந்த கட்டணம் ரூ.200 ஆக உயர்த்த அரசு திட்டமிட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு விரைவில் அமலுக்கு வர உள்ளது. 4 ஆண்டுகளுக்கு பிறகு கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதுதவிர பூங்காவுக்குள் குடும்பத்துடன் பேட்டரி காரில் சுற்றிவர கட்டணம் ரூ.1550. இந்த கட்டண உயர்வின் மூலம் பூங்காவை மேலும் சிறப்பாக பராமரிக்க முடியும் என்கிறார்கள் அதிகாரிகள்.
இந்த பூங்காவில் ஆண்டுக்கு ரூ.6 கோடிக்கு மேல் விலங்குகளின் உணவுக்காக செலவிடப்படுகிறது. பராமரிப்பு மற்றும் ஊழியர்களின் சம்பளத்துக்கு ரூ.7 கோடி வரை செலவாகிறது.
விலங்குகள் பரிமாற்றத்தின் கீழ் சிங்கங்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளது. மேலும் காட்டு கழுதைகள், ஒட்டகசிவிங்கி, வரிக்கு திரைகள் ஆகியவையும் அதிகமாக இடம் பெறும்.
புதுடெல்லி உயிரியல் பூங்காவில் கட்டணம் ரூ.110 ஆகவும், மைசூரு உயிரியல் பூங்காவில் கட்டணம் ரூ.60 ஆகவும் உள்ளது.
வண்டலூரில் கட்டணம் ரூ.200ஆக உயர்த்தி இருப்பது மிகவும் அதிகம் என்கிறார்கள். இந்த கட்டண உயர்வால் 5 பேர் கொண்ட ஒரு குடும்பம் பூங்காவுக்கு பொழுதுபோக்க சென்றால் குறைந்தபட்சம் ரூ.3 ஆயிரம் வரை செலவாகும் என்கிறார்கள்.
- ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வந்த புலியை பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டனர்.
- தற்போது புலி நலமாக உள்ளது. அதை வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஒப்படைத்துள்ளோம்.
நாகர்கோவில்:
குமரி மாவட்டம் பேச்சி பாறை அருகே சிற்றார் ரப்பர் கழக தொழிலாளர் குடியிருப்பு பகுதியில் கடந்த ஜூலை மாதம் 3-ந்தேதி ஆடு ஒன்றை புலி கடித்துக் கொன்றது. அடுத்தடுத்து 6 ஆடுகள் மற்றும் 2 மாடுகளை புலி கொன்றதால் பொது மக்கள் அச்சமடைந்தனர். அட்டகாசம் செய்யும் புலியை பிடிக்க வனத்துறையினர் அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வந்த புலியை பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டனர். புலி நடமாட்டம் உள்ள பகுதியாக கருதப்பட்ட இடங்களில் கூண்டு மற்றும் கண்காணிப்பு கேமிராக்கள் அமைத்து தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. ஆனால் புலி சிக்கவில்லை.
ட்ரோன் கேமரா, எலைட்படையினர் மூலமாகவும் தேடுதல் வேட்டை நடத்தினர். 10 நாட்களுக்கு மேலாக தேடியும் புலியை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்த எலைட் படையினரும், மருத்துவ குழுவினரும் திரும்பி சென்றனர்.
இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பத்துகாணி அருகே ஒரு நூறாம் வயல் பகுதியில் குடியிருப்புக்குள் புகுந்து 4 ஆடுகளை புலி கடித்துக் கொன்றது. இதுபற்றிய தகவல் வனத்துறைக்கு தெரிவிக்கப்பட்டது.
மாவட்ட வன அலுவலர் இளையராஜா தலைமையிலான குழுவினர் அந்த பகுதிக்கு விரைந்து சென்றனர். அங்கேயே முகாமிட்டு புலியை பிடிக்க நடவடிக்கை மேற்கொண்டனர். முதுமலை புலிகள் சரணாலயத்தில் இருந்து வனத்துறையை சேர்ந்த பழங்குடியினர் வரவழைக்கப்பட்டு தேடும் பணி நடந்தது.
இந்நிலையில் நேற்று மதியம் 12 மணியளவில் கல்லறைவயல் பகுதியில் புலி நடமாட்டத்தை வனத்துறையினர் பார்த்தனர்.
இதைத்தொடர்ந்து புலியை தொடர்ந்து கண்காணித்தனர். அப்போது புலி அந்த பகுதியில் உள்ள குகைக்குள் சென்றது. புலியை பொருத்தமட்டில் பகல் நேரங்களில் ஓய்வு எடுக்கும். இரவு நேரங்களில் மட்டுமே வெளியே சுற்றி தெரியும்.
பகல் நேரத்தில் புலி குகைக்குள் சென்றதால், அது வெளியே வருவதற்கு நீண்ட நேரமாகும், அங்கேயே ஓய்வெடுக்கும் என்று வனத்துறையினர் கருதினார்கள். இதைத்தொடர்ந்து அந்த குகையின் வெளியே வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
இரண்டு மணி நேரமாக புலியை பிடிக்க வியூகங்கள் வகுக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து மயக்க ஊசி மூலமாக புலியை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. புலி இருந்த குகைக்குள் மயக்க ஊசி செலுத்தினார்கள். அதில் புலி மயக்கமடைந்தது. பின்னர் சிறிது நேரத்துக்கு பிறகு வனத்துறையினர் குகைக்குள் சென்று புலியை பிடித்தனர்.
பிடிபட்ட புலியை வனத்துறையினர் பொதுமக்கள் உதவியுடன் சாலை பகுதிக்கு தூக்கி வந்தனர். தொடர்ந்து புலியை கூண்டுக்குள் அடைத்து டெம்போவின் ஏற்றி பேச்சிப்பாறை சோதனை சாவடிக்கு கொண்டு வந்தனர். அங்கு மருத்துவ குழுவினர் மீண்டும் புலியை பரிசோதனை செய்தனர். புலி பிடிபட்டது குறித்து அந்த பகுதியில் உள்ள பழங்குடி மக்களுக்கு தெரியவந்தது. இதைக் கேட்டு அவர்கள் நிம்மதி அடைந்தனர்.
பிடிபட்ட புலி கடந்த 37 நாட்களாக வனத்துறையினருக்கு சவால் விடும் வகையில் சுற்றி திரிந்தது. சிற்றாறு சிலோன் காலனி பகுதியில் வனத்துறையினர் தேடுதல் வேட்டை நடத்தியதையடுத்து அதன் எதிர்புறம் உள்ள பத்துகாணி பகுதிக்கு புலி வந்துள்ளது. சுமார் 7 கிலோ மீட்டர் சுற்றளவிலேயே புலி சுற்றி திரிந்தபடி இருந்துள்ளது.
பிடிபட்ட புலியை வனத்துறையினர் வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஒப்படைக்க முடிவு செய்தனர். இதையடுத்து இரவோடு இரவாக வன அதிகாரி இளையராஜா தலைமையில் புலியை ஒரு வாகனத்தில் ஏற்றி வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு கொண்டு சென்றனர்.
பலத்த பாதுகாப்புடன் புலி கொண்டு செல்லப்பட் டது. புலியை கொண்டு சென்ற வாகனம் மிகவும் மெதுவாகவே சென்றது. நேற்று மாலை 6 மணிக்கு பேச்சிபாறையிலிருந்து புலியை ஏற்றி புறப்பட்ட வாகனமானது, இன்று காலை 11 மணியளவில் வண்டலூர் உயிரியல் பூங்கா விற்கு சென்றடைந்தது. அங்கு புலியை முறைப்படி ஒப்படைத்தனர்.
இதுகுறித்து வன அதிகாரி இளையராஜா கூறியதாவது:-
குமரி மாவட்டத்தின் மலையோர பகுதியில் புலி நடமாட்டம் இருப்பதாக கிடைத்த தகவல் அடிப்படையில் சிற்றாறு சிலோன் காலனி பகுதியில் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. இரண்டு இடங்களில் கூண்டு மற்றும் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்பு கேமரா அமைக்கப்பட்டு தேடும் பணியில் ஈடுபட்டோம். ஆனால் புலி சிக்கவில்லை.
அதே வேளையில் புலியின் கால் தடங்கள் ஒரு சில இடங்களில் கிடைத் தது. அதை வைத்து பார்த்த போது வயதான புலி என்பது தெரிய வந்தது. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பத்துகாணி பகுதியிலும் புலி அட்டகாசம் செய்தது. இதனால் தேடும் பணி முடுக்கி விடப்பட்டது. நேற்று மதியம் புலி நடமாட்டம் உறுதி செய்யப்பட்டது. புலியும் கண்ணில் தென்பட்டது.
உடனே அதை பின்தொடர்ந்து சென்று கண்காணித்தோம். அப்போது புலி அந்த பகுதியில் உள்ள குகைக்குள் சென்றது. குகைக்குள் சென்ற புலியை மயக்க ஊசி செலுத்தி பிடித்துள்ளோம். பிடிபட்ட புலிக்கு 13 வயது இருக்கும். தற்போது புலி நலமாக உள்ளது. அதை வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஒப்படைத்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- சோர்வாக காணப்பட்ட புலிக்கு கால்நடை மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்து தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.
- வண்டலூர் உயிரியல் பூங்காவில் பணிபுரியும் பணியாளர்கள் பயிற்சி கொடுப்பார்கள்.
வண்டலூர்:
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 20 நாட்களுக்கு முன்பு சிற்றாறு சிலோன் காலனியில் புலி ஒன்று ஆடுகள், நாய்களை வேட்டையாடி பொதுமக்களை அச்சுறுத்தியது. கடந்த 4 நாட்களுக்கு முன்னர் அந்த புலியை பேச்சிப்பாறை கல்லறை வயல் பகுதியில் வனத்துறை அதிகாரிகள் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். சுமார் 13 வயதுடைய அந்த ஆண் புலி மிகவும் பலவீனமாக காணப்பட்டது. இதைத்தொடர்ந்து புலி வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு கடந்த 10-ந்தேதி கொண்டுவரப்பட்டது.
சோர்வாக காணப்பட்ட புலிக்கு கால்நடை மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்து தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள். தற்போது அந்த புலி நல்ல உடல் நலத்துடன் இருப்பதாக வண்டலூர் பூங்கா அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். புலிக்கு உணவாக இறைச்சிகள் வழங்கப்படுகின்றன.
இதுகுறித்து பூங்கா அதிகாரிகள் கூறும்போது, கன்னியாகுமரியில் இருந்து கொண்டுவரப்பட்ட புலிக்கு மருத்துவர்கள் குழுவினர் சிகிச்சை அளித்து முழு கண்காணிப்பில் உள்ளது. மேலும் அதற்கான உணவுகளும் வழங்கப்பட்டு வருகிறது. விரைவில் இந்த ஆண் புலி பூரண குணமடைந்து விடும். அதற்கு வண்டலூர் உயிரியல் பூங்காவில் பணிபுரியும் பணியாளர்கள் பயிற்சி கொடுப்பார்கள். பின்னர் அந்த புலி பார்வையாளர்கள் காண்பதற்காக விடப்படும் என்றார்.
- நெருப்புகோழிகள் குஞ்சு பொரிப்பதற்காக அடைகாத்து வருகின்றன.
- இயற்கையாக இனப்பெருக்கம் செய்ய தனித்துவமான சூழல் மற்றும் குறிப்பிட்ட பராமரிப்பு நடைமுறைகள் தேவை.
வண்டலூர்:
வண்டலூர் பூங்காவில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விலங்குகள் மற்றும் பறவைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இதனால் அதிகமான பார்வையாளர்கள் வந்து செல்லும் முக்கியமான சுற்றுலா தளமாக விளங்கி வருகிறது.
பூங்காவில் மொத்தம் 17 நெருப்புக்கோழிகள் உள்ளன. இதில் 2 ஆண், 5 பெண் நெருப்புக்கோழிகள் ஆகும். மேலும் 10 நெருப்புக்கோழிகள் இன்னும் வளரவேண்டி உள்ளதால் அவற்றின் இனம் இன்னும் அறியப்படாமல் உள்ளது.
இந்தநிலையில் தற்போது பூங்காவில் உள்ள நெருப்புக்கோழிகள் மொத்தம் 33 முட்டையிட்டுள்ளது. அதனை நெருப்புகோழிகள் குஞ்சு பொரிப்பதற்காக அடைகாத்து வருகின்றன.
பொதுவாக நெருப்புக்கோழிகளின் முட்டையில் இருந்து குஞ்சு வெளியே வர சுமார் 42 நாட்கள் ஆகும். அதிக அளவில் முட்டைகள் இருந்தாலும் அதில் 6 அல்லது 8 முட்டைகளில் இருந்து மட்டுமே நெருப்புக்கோழி குஞ்சு பொரிக்கும் என்று கூறப்படுகிறது. மீதமுள்ளவை வீணாகிவிடும் என்று பூங்கா ஊழியர்கள் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து நெருப்புகோழியின் முட்டை மற்றும் நெருப்புகோழிகளின் செயல்பாடுகளை பூங்கா ஊழியர்கள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.
இதுகுறித்து வண்டலூர் பூங்கா உதவி இயக்குனர் மணிகண்டபிரபு கூறும்போது, நெருப்புகோழிகளின் இனப்பெருக்கத்திற்கு சென்னையில் உள்ள தட்பவெப்ப நிலையே முக்கிய காரணம். சென்னையில் ஆண்டின் பெரும்பகுதி நிலவும் வறண்ட தட்பவெப்ப நிலைகள் இவற்றிற்கு மிகவும் ஏற்றது. நெருப்புக்கோழி பராமரிப்புகள் அதிகம் உள்ள ஒரு பறவை. இவை ஈரப்பதத்தை விரும்பாது. இதற்கு நல்ல காய்ந்த மணல் பரப்பைக் கொண்டு இருக்க வேண்டும்.
இயற்கையாக இனப்பெருக்கம் செய்ய தனித்துவமான சூழல் மற்றும் குறிப்பிட்ட பராமரிப்பு நடைமுறைகள் தேவை. நெருப்புகோழிகள் பறக்க முடியாத பறவை என்பதால் அவை சுதந்திரமாக ஓடுவதற்கு போதுமான இடம் தேவை.
தற்போது மழையும் குளிருமாய் இருப்பதால் அதன் முட்டைகள் பொரிக்க தாமதம் ஆகிறது. எனவே அதற்கான வெப்பம் குறையாத வகையில் முட்டைகளை பாதுகாத்து வருகிறோம் என்றார்.
- ஏ.சி. பஸ்சில் பார்வையாளர்கள் சென்று சிங்கம், மான்களை பார்வையிடலாம்.
- ஒரு பஸ்சில் ஒரே நேரத்தில் 28 பேர் பயணிக்க முடியும்.
வண்டலூர்:
வண்டலூர் உயிரியல் பூங்காவில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விலங்குகள், பறவைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. ஆண்டுக்கு சுமார் 10 லட்சம் பேர் பூங்காவுக்கு வந்து இதனை பார்த்து ரசித்து செல்கிறார்கள்.
கொரோனா ஊரடங்கின்போது கடந்த 3 ஆண்டுக்கு முன்பு பூங்காவில் சிங்கங்களை வாகனத்தில் சென்று பார்வையிடும் "லயன்சபாரி" நிறுத்தப்பட்டது. பின்னர் பூங்கா வழக்கமாக திறந்த பின்னரும் சிங்கங்களை வாகனத்தில் சென்று பார்வையிடும் வசதி ஏற்படுத்தப்படவில்லை.
இதனால் சிங்கங்களை பார்வையிடும் "லயன் சபாரி"யை மீண்டும் தொடங்க வேண்டும் என்று பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இதைத் தொடர்ந்து லயன் சபாரியை தொடங்க பூங்கா அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். இதற்காக தனியார் நிறுவனங்களின் பங்களிப்புடன் ஏ.சி. பஸ்கள் வாங்கப்பட்டது. மேலும் சிங்கங்கள் உலாவும் பகுதியில் நவீனப்படுத்தப்பட்டது.
இந்த நிலையில் சிங்கங்களை வாகனத்தில் சென்று பார்க்கும் வசதி 3 ஆண்டுகளுக்கு பிறகு இன்று வண்டலூர் பூங்காவில் தொடங்கப்பட்டது. இதனை வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் பூங்காவில் நடைபெற்ற வனவிலங்கு வார கொண்டாட்டங்கள் நிகழ்ச்சியின்போது தொடங்கி வைத்தார். இதேபோல் மான்களை வாகனத்தில் சென்று பார்வையிடும் வசதியும் தொடங்கி வைக்கப்பட்டது. ஏ.சி. பஸ்சில் பார்வையாளர்கள் சென்று சிங்கம், மான்களை பார்வையிடலாம். ஒரு பஸ்சில் ஒரே நேரத்தில் 28 பேர் பயணிக்க முடியும்.
இதேபோல் நுழைவுச் சீட்டில் கியூஆர் கோடு ஸ்கேனர் வசதி, நுழைவுச் சீட்டு வழங்க 2 கவுண்டர்கள், உலக தரம் வாய்ந்த உணவகம், முதுமலை வனத்துறை என்ற இணையதளம், வண்டலூர் உயிரியல் பூங்காவில் புதிதாக கட்டப்பட்ட வன உயிரினங்களுக்கு சிகிச்சை அளிக்க பல்வேறு வசதிகளுடன் கூடிய ஆஸ்பத்திரி ஆகியவையும் தொடங்கி வைக்கப்பட்டது.
வண்டலூர் பூங்காவில் 3 ஆண்டுக்கு பிறகு சிங்கங்களை வாகனத்தில் சென்று பார்வையிடும் வசதி செய்யப்பட்டு உள்ளதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்து இருக்கிறார்கள். பூங்கா நிர்வாகத்தினரின் ஏற்பாடுகளுக்கு பாராட்டு தெரிவித்து உள்ளனர்.