என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vijayabaskar"

    • ஆசிட் வீசி, கார் கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்தியதோடு, காரில் இருந்த திருவிகவை கடத்தினர்.
    • தேர்தலை முறைப்படி நடத்த வேண்டும் என விஜயபாஸ்கர் வலியுறுத்தி உள்ளார்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் வாகனம் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கரூர் மாவட்ட ஊராட்சி துணைதலைவர்களுக்கான தேர்தல் இன்று ஊராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் 12 மாவட்ட கவுன்சிலர்கள் இருக்கிறார்கள். இவர்களில் 6 மாவட்ட கவுன்சிலர் தி.மு.க. தரப்பினரும், 6 மாவட்ட கவுன்சிலர்கள் அதிமுக தரப்பினரும் இருக்கிறார்கள்.

    இந்நிலையில் அ.தி.மு.க சார்பில் திருவிக என்பவர் போட்டியிடுகிறார். இன்று இவரை முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த எம்.ஆர். விஜயபாஸ்கர் தனது ஆதரவாளர்களுடன் கரூர் அழைத்து சென்றார்.

    திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் கரூர் தேசிய நெடுஞ்சாலையில் நாகம்பட்டி அருகே பாலம் உள்ளது. அந்த பாலம் பகுதியில் சென்று கொண்டிருக்கும் போது திடீரென்று நான்கு கார்களில் வந்த மர்ம நபர்கள் அவர்களது காரை சுற்றி வளைத்து வைத்து முன்பக்க கண்ணாடி மற்றும் பின் கண்ணாடிகள் மீது ஆசிட் வீசி, கார் கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்தியதோடு, காரில் இருந்த திருவிகவை கடத்தி சென்றனர்.

    இந்த கடத்தல் சம்பவம் அந்த பகுதியில் பரப்பரபை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தை கேள்விப்பட்ட வேடசந்தூர் துணை கண்காணிப்பாளர் துர்காதேவி மற்றும் ஆய்வாளர் பாலமுருகன் ஆகியோர் சம்பவ இடத்தில் தற்போது தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.  கரூர் மாவட்ட ஊராட்சி துணை தலைவர் தேர்தல் நடக்கும் தருணத்தில் கடத்தல் சம்பவம் நடைபெற்றிருப்பது பெரும் பரப்பையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

    இது குறித்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கூறுகையில், இது போன்ற தாக்குதல் சம்பவம் நடத்தி எங்களுடைய வேட்பாளரை கடத்தி சென்றவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த தேர்தலை முறைப்படி நடத்த வேண்டும். மேலும் இந்த ஆசிட் வீசிய சம்பவம் மற்றும் கண்ணாடிகளை உடைத்த சம்பவம் மூலம் காரில் பயணம் செய்த இருவருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளன, என்றார்.

    இது தொடர்பாக காவல் துறையினர் அங்குள்ள சிசிடிவி கேமிரா பதிவுகளை வைத்து தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

    • அனல்பறக்கும் வகையில் பிரச்சாரம் செய்தாலும் மக்கள் மனம் இரட்டை இலை பக்கம் உள்ளது.
    • தி.மு.க.வின் 2 ஆண்டுகளில் நகர் மன்ற உறுப்பினர்களின் அராஜகம், மக்களை திரும்பி பார்க்காத செயல்கள் உள்ளது.

    ஈரோடு:

    ஈரோட்டில் இன்று முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    ஈரோடு கிழக்கு தேர்தல் பிரச்சாரம் துரிதமாக நடக்கிறது. அனல்பறக்கும் வகையில் பிரச்சாரம் செய்தாலும் மக்கள் மனம் இரட்டை இலை பக்கம் உள்ளது. இன்றைக்கு கட்ட விழ்த்து விடப்பட்டிருக்கின்ற ஆட்சிக்கு கடிவாளம் போன்று அ.தி.மு.க. வெற்றி இருக்க வேண்டும். கண்முன் தெரியாமல் போகக்கூடிய ஆட்சிக்கு வேகத்தடை வேண்டும் என மக்கள் நினைக்கின்றனர்.

    கடந்த அ.தி.மு.க.வின் 10 ஆண்டுகளில் நலத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. தி.மு.க.வின் 2 ஆண்டுகளில் நகர் மன்ற உறுப்பினர்களின் அராஜகம், மக்களை திரும்பி பார்க்காத செயல்கள் உள்ளது.

    பேரறிஞர் அண்ணா சொன்னது போல் இந்த ஆட்சியின் அவலங்கள் ஈரோடு கிழக்கு தொகுதியின் தெருவோரங்களிலும், டீக்கடைகளிலும் பேசப்பட்டு வாக்குச்சாவடியில் முடிவடைகின்ற போது இரட்டை இலை வெற்றி பெறும்.

    இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளருக்கு தி.மு.க. வரிந்து கட்டிக்கொண்டு ஒட்டுமொத்த அரசு எந்திரத்தையும் இரட்டை இலை சின்னம் வெற்றி பெற்றுவிடும் என்ற தேர்தல் பயத்தை தேர்தல் ஜூரத்தில் இருப்பதையும் காண முடிகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ரூ.80 கோடி மதிப்பில் பேனா சின்னம் வைப்பது தொடர்பாக நிருபர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்த முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், பேனாவை சட்டை பாக்கெட்டில் தான் வைக்க வேண்டும். அதை தாண்டி வேறு எங்கு வைத்தாலும் அதற்கு எதிர்ப்பு கிளம்பும் என்றார்.

    • கடந்த 2-ந்தேதி நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் டாக்டர் விஜயபாஸ்கரின் கருப்பு கொம்பன் காளையும் களமிறங்கியது.
    • இறந்த கருப்பு கொம்பன் காளை இதுவரை 300-க்கும் மேற்பட்ட வாடிவாசலில் களம் கண்டு வெற்றி பெற்றுள்ளது.

    விராலிமலை:

    முன்னாள் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரும், விராலிமலை தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர். விஜயபாஸ்கர், காளைகள் வளர்ப்பில் ஆர்வம் கொண்டவர். ஜல்லிக்கட்டு ஆர்வலரான இவர் பல காளைகளை வளர்த்து வருகிறார். இதில் தனிக்கவனம் செலுத்துவதோடு, அதனை பராமரிக்க பணியாட்களை நியமித்து அவ்வப்போது அந்த காளைகளுடன் பழகியும் வருகிறார்.

    இந்த காளைகள் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் அந்த வகையில் சிறப்பு பயிற்சியும் அளிக்கிறார். அந்த வகையில் புதுக்கோட்டை மாவட் டம் அன்னவாசல் ஒன்றியம் வடசேரிபட்டியில் கடந்த 2-ந்தேதி நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் டாக்டர் விஜயபாஸ்கரின் கருப்பு கொம்பன் காளையும் களமிறங்கியது.

    வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்ட காளை சீறிப்பாய்ந்து வெளியே வந்தது. அப்போது யாரும் எதிர்பாராத வகையில் அங்கிருந்த தடுப்பு கட்டையில் தலைமோதி அந்த இடத்திலேயே காளை சுருண்டு விழுந்தது. தன்னுடைய வளர்ப்பு காளை களத்தில் நின்று விளையாடுவதை நேரில் காண வந்திருந்த டாக்டர் விஜயபாஸ்கர், காளை காயமடைந்து விழுந்ததை பார்த்ததும் பதறிப்போனார். அதன் மீது தண்ணீர் தெளித் தும் பயனில்லை.

    கேலரியில் இருந்து இறங்கி வந்த அவர் அசைவற்று மயங்கிய நிலையில் கிடந்த காளையை தடவிக்கொடுத்தார். எப்படியும் காளை எழுந்துவிடும் என்ற நம்பிக்கையில் இருந்த அவர் உடனடியாக அதற்கு சிகிச்சை அளிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டார். இதையடுத்து அந்த காளை உயர் சிகிச்சைக்காக தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அரசு கால்நடை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    குழந்தையை போல் பார்த்துக்கொண்ட டாக்டர் விஜயபாஸ்கர் சொந்த ஊரில் இருந்து 2 முறை காளையை பார்க்க ஒரத்தநாடு சென்றார். நேற்றும் காளைக்கு அளிக்கப்படும் சிகிச்சையை டாக்டர்களிடம் கேட்டு தெரிந்துகொண்ட பின்னரே அவர் சென்னை புறப்பட்டு சென்றார்.

    இந்த நிலையில் சிகிச்சையில் இருந்த கருப்பு கொம்பன் காளை இன்று அதிகாலையில் பரிதாபமாக உயிரிழந்தது. இறந்த கருப்பு கொம்பன் காளை இதுவரை 300-க்கும் மேற்பட்ட வாடிவாசலில் களம் கண்டு வெற்றி பெற்றுள்ளது.

    ஏற்கனவே முன்னாள் அமைச்சர் டாக்டர். விஜயபாஸ்கரின் புகழ்பெற்ற கொம்பன் காளை 6 ஆண்டுகளுக்கு முன்னர் தென்னலூர் ஜல்லிக்கட்டு போட்டியில் வாடிவாசல் கல்லில் மோதி உயிரிழந்தது குறிப்பிடதக்கது. இரண்டு காளைகளும் வாடிவாசலில் மோதி இறந்ததால் டாக்டர் விஜயபாஸ்கரின் குடும்பத்தினர் மற்றும் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

    இதற்கிடையே இறந்த கருப்பு கொம்பன் காளைக்கு டாக்டர் விஜயபாஸ்கர் குடும்பத்தினர் மற்றும் ஊர் பொதுமக்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இறுதி அஞ்சலி செலுத்தினர். பின்னர் இலுப்பூர் அருகே ஓலைமான்பட்டியில் உள்ள அவரது தோட்டத்தில் காளையின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அமைச்சராக இருந்தபோது 55 சதவீதம் கூடுதலாக சொத்து சேர்த்ததாக விஜயபாஸ்கர், அவரது மனைவி ரம்யா ஆகியோர் மீது தொடரப்பட்ட வழக்கின் அடிப்படையில் சோதனை நடந்தது.
    • சோதனையில் விஜயபாஸ்கர் ரூ.35 கோடியே 79 லட்சத்து 90 ஆயிரத்து 81 சொத்து சேர்த்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    புதுக்கோட்டை:

    தமிழக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர். அ.தி.மு.க.வை சேர்ந்த இவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கடந்த 18.10.2021 அன்று புதுக்கோட்டை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    இதையடுத்து அவருடைய வீடு மற்றும் அலுவலகங்களில் அதிரடியாக சோதனை நடத்தினர். 56 இடங்களில் குறிப்பாக டாக்டர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான வீடு, குவாரிகள் உள்ளிட்ட இடங்களில் இந்த சோதனை நடந்தது.

    அவர் அமைச்சராக இருந்தபோது 55 சதவீதம் கூடுதலாக சொத்து சேர்த்ததாக விஜயபாஸ்கர், அவரது மனைவி ரம்யா ஆகியோர் மீது தொடரப்பட்ட வழக்கின் அடிப்படையில் இந்த சோதனை நடந்தது.

    இதில் அவர் ரூ.35 கோடியே 79 லட்சத்து 90 ஆயிரத்து 81 சொத்து சேர்த்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ரூ.23 லட்சம் பணம், 4.87 கிலோ தங்கம், 136 ஹார்டு டிஸ்க்குகள், கனரக வாகனங்களின் ஆவணங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது.

    தொடர்ந்து நடைபெற்ற வழக்கின் அடுத்த கட்டமாக இன்று புதுக்கோட்டை கோர்ட்டில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. புதுக்கோட்டை நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் ஒன்றில் 216 பக்கங்களை கொண்ட குற்றப்பத்திரிக்கையை லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி. இமயவரம்பம், இன்ஸ்பெக்டர்கள் ஜவகர், பீட்டர் ஆகியோர் நீதிபதி ஜெயந்தியிடம் தாக்கல் செய்தனர்.

    • விஜயபாஸ்கருக்கு சொந்தமான வீடு, அலுவலகம், குவாரிகள் உள்ளிட்ட 56 இடங்களில நடத்தப்பட்ட சோதனையில் பணம், நகை, சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
    • 10 ஆயிரம் பக்கங்களை கொண்ட 800 ஆவணங்கள் இணைக்கப்பட்டுள்ளதாக புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன.

    புதுக்கோட்டை:

    அ.தி.மு.க.வைச் சேர்ந்த தமிழக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தனது பதவி காலத்தில் வருமானத்துக்கு அதிகமாக ரூ.35.79 கோடி அளவுக்கு சொத்து சேர்த்ததாக அவர் மற்றும் அவரது மனைவி ரம்யா ஆகியோர் மீது புதுக்கோட்டை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    இதையடுத்து டாக்டர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான வீடு, அலுவலகம், குவாரிகள் உள்ளிட்ட 56 இடங்களில நடத்தப்பட்ட சோதனையில் பணம், நகை, சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    இதைத்தொடர்ந்து நடைபெற்ற வழக்கின் அடுத்த கட்டமாக நேற்று புதுக்கோட்டை கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. புதுக்கோட்டை நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் ஒன்றில் 216 பக்கங்களை கொண்ட குற்றப்பத்திரிகையை லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி. இமயவரம்பம், இன்ஸ்பெக்டர்கள் ஜவகர், பீட்டர் ஆகியோர் நீதிபதி ஜெயந்தியிடம் தாக்கல் செய்தனர்.

    இதில் 10 ஆயிரம் பக்கங்களை கொண்ட 800 ஆவணங்கள் இணைக்கப்பட்டுள்ளதாக புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த குற்றப்பத்திரிகையை நீதிபதி முழுமையாக படித்து முடித்த பின்னர் டாக்டர் விஜயபாஸ்கருக்கு சம்மன் அனுப்புவது குறித்து முடிவு செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

    • சென்னை ஐகோர்ட்டில், தி.மு.க. வேட்பாளர் பழனியப்பன் தேர்தல் வழக்கு தொடர்ந்தார்.
    • மனு நீதிபதி சி.வி.கார்த்திக்கேயன் முன்பு விசாரணைக்கு வந்தது.

    சென்னை:

    தமிழ்நாடு சட்டசபைக்கு கடந்த 2021-ம் ஆண்டு நடந்த தேர்தலில், புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், தி.மு.க. சார்பில் பழனியப்பன் என்று பலர் போட்டியிட்டனர்.

    இதில், விஜயபாஸ்கர் வெற்றி பெற்றார். இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், தி.மு.க. வேட்பாளர் பழனியப்பன் தேர்தல் வழக்கு தொடர்ந்தார். அதில், வாக்காளர்களுக்கு பரிசுப்பொருட்கள், பணம் ஆகியவற்றை அதிகளவில் வினியோகித்து முறைகேடாக விஜயபாஸ்கர் பெற்ற வெற்றியை செல்லாது என அறிவி்க்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

    இந்த வழக்கை ஐகோர்ட்டில் விசாரணையில் உள்ளது. இந்த நிலையில், தனக்கு எதிராக பழனியப்பன் தாக்கல் செய்த தேர்தல் வழக்கை நிராகரிக்க கோரி ஐகோர்ட்டில் விஜயபாஸ்கர் மனு தாக்கல் செய்தார்.

    இந்த மனு நீதிபதி சி.வி.கார்த்திக்கேயன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, பழனியப்பன் தரப்பில் வக்கீல் ரிச்சர்ட்சன் வில்சன் ஆஜராகி, தேர்தல் வழக்கில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கு போதிய முகாந்திரம் உள்ளதால், வழக்கை நிராகரிக்க கோரிய விஜயபாஸ்கரின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வாதிட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விஜயபாஸ்கர் தரப்பில் வாதிடப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, வழக்கை நிராகரிக்க கோரிய விஜயபாஸ்கரின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். தேர்தல் வழக்கு விசாரணையை வருகிற 23-ந்தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.

    • புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் கடந்த 5-ந் தேதி முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆஜராகி இருந்தார்.
    • முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மனைவி ரம்யாவும் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.

    புதுக்கோட்டை:

    அ.தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் எம்.எல்.ஏ. வருமானத்திற்கு அதிகமாக ரூ.35 கோடியே 79 லட்சத்து 90 ஆயிரத்து 81 மதிப்பில் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 17-ந் தேதி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இதில் அவரது மனைவி ரம்யாவின் பெயரும் இடம்பெற்றுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூரில் உள்ள அவரது வீடு, கல் குவாரிகள், நிறுவனங்கள், சென்னையில் உள்ள அவரது வீடு உள்பட மொத்தம் 56 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் சோதனை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ரம்யா மீது மொத்தம் 210 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை புதுக்கோட்டை கோர்ட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் கடந்த மே மாதம் தாக்கல் செய்தனர்.

    இந்த வழக்கு தொடர்பாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் கடந்த 5-ந் தேதி முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆஜராகி இருந்தார். இந்நிலையில், வருகிற 29-ந் தேதி ஆஜராக கோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது. அப்போது அவரது மனைவி ரம்யாவையும் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.

    • கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 17-ந் தேதி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
    • நீதிமன்றத்தில் இன்று முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் அவரது மனைவியுடன் ஆஜராகி இருந்தார்.

    புதுக்கோட்டை:

    அ.தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் எம்.எல்.ஏ. வருமானத்திற்கு அதிகமாக ரூ.35 கோடியே 79 லட்சத்து 90 ஆயிரத்து 81 மதிப்பில் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 17-ந் தேதி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இதில் அவரது மனைவி ரம்யாவின் பெயரும் இடம் பெற்றுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூரில் உள்ள அவரது வீடு, கல் குவாரிகள், நிறுவனங்கள், சென்னையில் உள்ள அவரது வீடு உள்பட மொத்தம் 56 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் சோதனை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ரம்யா மீது மொத்தம் 210 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை புதுக்கோட்டை கோர்ட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் கடந்த மே மாதம் தாக்கல் செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இன்று முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் அவரது மனைவியுடன் ஆஜராகி இருந்தார்.

    அடுத்த மாதம் 26-ந் தேதி ஆஜராக வேண்டும் என்று அவர்களுக்கு கோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.

    • விஜயபாஸ்கரின் வீடு, அலுவலகம் உள்பட அவருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
    • வழக்கு புதுக்கோட்டை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

    புதுக்கோட்டை:

    தமிழக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரும், புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.வுமான அ.தி.மு.க.வை சேர்ந்தவர் டாக்டர் சி.விஜயபாஸ்கர்.

    இவர் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை லஞ்ச ஒழிப்பு போலீசார் கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் இவர் மனைவி ரம்யா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    விஜயபாஸ்கரின் வீடு, அலுவலகம் உள்பட அவருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இந்த வழக்கு புதுக்கோட்டை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

    இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. விஜயபாஸ்கர் நேரில் ஆஜராகினார். இந்த நிலையில் வழக்கின் விசாரணையை வரும் 30-ந் தேதிக்கு தள்ளி வைத்து நீதிபதி பூரண ஜெய ஆனந்த் உத்தரவிட்டார்.

    • விஜயபாஸ்கரின் வீடு, அலுவலகம் உள்பட அவருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ஏற்கனவே அதிரடி சோதனை நடத்தினர்.
    • வழக்கு விசாரணைக்காக விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ரம்யா ஆகியோர் இன்று கோர்ட்டில் ஆஜராகவில்லை.

    புதுக்கோட்டை:

    அ.தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரும், புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதி எம்.எல்.ஏ.வுமான டாக்டர் சி.விஜயபாஸ்கர் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை லஞ்ச ஒழிப்பு போலீசார் கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் இவரது மனைவி ரம்யா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    ஏற்கனவே விஜயபாஸ்கரின் வீடு, அலுவலகம் உள்பட அவருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இந்த வழக்கு புதுக்கோட்டை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

    வழக்கு விசாரணைக்காக விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ரம்யா ஆகியோர் இன்று கோர்ட்டில் ஆஜராகவில்லை. அவர்களது தரப்பில் வக்கீல்கள் ஆஜராகினர். இதனை தொடர்ந்து வழக்கின் விசாரணையை அடுத்த மாதம் (நவம்பர்) 15-ந் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதி பூரண ஜெய ஆனந்த் உத்தரவிட்டார்.

    • லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 2021ஆம் ஆண்டு அக்டோபர் 17ஆம் தேதி விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ரம்யா மீது புதுக்கோட்டை லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தனர்.
    • புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் 6-வது முறையாக வழக்கு விசாரணைக்கு வந்தது.

    புதுக்கோட்டை:

    அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் சுகாதாரத்துறை அமைச்சராக பணியாற்றியவர் சி.விஜயபாஸ்கர். தற்போது விராலிமலை தொகுதி சட்டமன்ற உறுப்பினராக உள்ள விஜயபாஸ்கர் அதிமுக ஆட்சிக் காலத்தில் அமைச்சராக இருந்த போது வருமானத்திற்கு அதிகமாக 35.79 கோடி ரூபாய் சொத்து சேர்த்தாக புகார் எழுந்தது.

    அதன்படி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 2021ஆம் ஆண்டு அக்டோபர் 17ஆம் தேதி விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ரம்யா மீது புதுக்கோட்டை லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தனர். அதைத் தொடர்ந்து அப்போது விஜயபாஸ்கர் தொடர்புடைய 56 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தினர்.

    இதுதொடர்பான வழக்கு புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் கடந்த மே மாதம் 210 பக்க குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. கடந்த ஆகஸ்ட் 5-ந்தேதி முதல் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.

    இதுவரை 5 முறை இந்த வழக்கு நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு வந்த நிலையில் 3 முறை விஜயபாஸ்கரும் ஒருமுறை அவரது மனைவி ரம்யாவும் 2 முறை அவர்களது வக்கீல்களும் விசாரணைக்கு ஆஜராகினர்.

    6-வது முறையாக இந்த வழக்கு இன்று புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. விஜயபாஸ்கரும் அவரது மனைவி ரம்யாவும் நேரில் ஆஜராகவில்லை. அவர்களது வக்கீல்கள் ஆஜரான நிலையில் இந்த வழக்கை அடுத்த மாதம்(டிசம்பர்) 2-ந் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி பூரண ஜெய ஆனந்த் உத்தரவு பிறப்பித்தார்.

    • கவர்னரின் அனுமதியால் தற்போது விஜய பாஸ்கர், பி.வி.ரமணா ஆகியோர் மீது சி.பி.ஐ. கோர்ட்டில் இனி தடையின்றி விசாரணை நடைபெற வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது.
    • குற்றப்பத்திரிகை நகலை நேரில் ஆஜராகி பெற்றுக் கொள்வதற்காக சம்மன் அனுப்பப்படுகிறது.

    சென்னை:

    சென்னையில் கடந்த 2016-ம் ஆண்டு தடை செய்யப்பட்ட குட்கா போதைப் பொருட்கள் செங்குன்றம் பகுதியில் குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை வருமான வரித்துறை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

    இந்த குடோனை நடத்தி வந்த அண்ணாநகரை சேர்ந்த மாதவராவ், சீனிவாச ராவ், உமாசங்கர் குப்தா ஆகியோர் சட்ட விரோதமாக குட்கா பொருட்களை பதுக்கி விற்பனை செய்வதற்காக அமைச்சர்கள் முதல் அதிகாரிகள் வரையில் லஞ்சம் கொடுத்திருப்பதையும் வருமான வரித்துறை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இது தொடர்பாக குடோனில் கைப்பற்றப்பட்ட டைரியில் அ.தி.மு.க. அமைச்சர்களாக இருந்த விஜயபாஸ்கர், பி.வி.ரமணா ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றிருந்தன. இது தவிர அப்போது டி.ஜி.பி.யாக இருந்த டி.கே.ராஜேந்திரன், கமிஷனராக இருந்த ஜார்ஜ் ஆகியோரது பெயர்கள் உள்பட 40-க்கும் மேற்பட்டோரின் பெயர்களும் டைரியில் இடம்பெற்று இருந்தது.

    இந்த விவகாரம் பெரும் புயலை கிளப்பிய நிலையில் ஐகோர்ட்டு உத்தரவின் பேரில் சி.பி.ஐ. அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக குடோன் உரிமையாளர்களான மாதவராவ், சீனிவாச ராவ், உமாசங்கர் குப்தா மற்றும் சில அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் 2021-ம் ஆண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.


    குட்கா வழக்கில் தொடர்புடையதாக குற்ற சாட்டப்பட்ட முன்னணி அமைச்சர்கள் விஜய பாஸ்கர், பி.வி.ரமணா மற்றும் போலீஸ் அதிகாரிகளின் வீடுகளில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு விசாரணை நடத்தினர். இதில் பல்வேறு ஆவணங்கள் சிக்கின. இதன் அடிப்படையில் டெல்லி சி.பி.ஐ. அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

    இதையடுத்து சி.பி.ஐ. கோர்ட்டில் கூடுதல் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது. இதன் பின்னர் இருவர் மீதும் கோர்ட்டில் மேற்கொள்ளப்பட வேண்டிய சட்ட நடவடிக்கைகளுக்கு கவர்னரின் அனுமதி பெற வேண்டியிருந்தது. இதையடுத்து தமிழக அரசு, விஜயபாஸ்கர், பி.வி.ரமணா ஆகிய இருவர் மீதான விசாரணைக்கு அனுமதி கேட்டு கடந்த செப்டம்பர் மாதம் கவர்னருக்கு கோப்புகளை அனுப்பி இருந்தது.

    இதற்கு கவர்னர் ஆர்.என்.ரவி தற்போது ஒப்புதல் அளித்துள்ளார். இதையடுத்து இருவர் மீதான அடுத்த கட்ட விசாரணைக்கான தடை நீங்கியுள்ளது. கவர்னர் ஒப்புதல் அளித்திருப்பதையடுத்து விஜய பாஸ்கர், பி.வி.ரமணா ஆகியோர் மீதான விசாரணை மீண்டும் சூடுபிடித்துள்ளது.

    சென்னையில் உள்ள சி.பி.ஐ. கோர்ட்டில் இருவர் மீதான தொடர் விசாரணைக்கு அனுமதி கிடைக்காமல் இருந்து வந்ததால் வழக்கு விசாரணை இதுவரை 20 முறை ஒத்திவைக்கப்பட்டு விசாரணையில் தொய்வு ஏற்பட்டிருந்தது.

    கவர்னரின் அனுமதியால் தற்போது விஜய பாஸ்கர், பி.வி.ரமணா ஆகியோர் மீது சி.பி.ஐ. கோர்ட்டில் இனி தடையின்றி விசாரணை நடைபெற வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது.

    சி.பி.ஐ. அதிகாரிகளும் தங்களின் விசாரணையை தீவிரப்படுத்த உள்ளனர். தேவைப்பட்டால் விஜய பாஸ்கர், பி.வி.ரமணா ஆகியோரிடம் மீண்டும் விசாரணை நடத்தவும் அவர்கள் முடிவு செய்து உள்ளனர்.

    விசாரணையின் அடிப்படையில் கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட உள்ளது. இதன் பிறகு சி.பி.ஐ. கோர்ட்டில் அடுத்தடுத்த நடவடிக்கைகளும் வேகமெடுக்க உள்ளன. விஜய பாஸ்கர், பி.வி.ரமணா இருவருக்கும் கோர்ட்டில் இருந்து விரைவில் சம்மன் அனுப்பப்பட உள்ளது.

    குற்றப்பத்திரிகை நகலை நேரில் ஆஜராகி பெற்றுக் கொள்வதற்காக இந்த சம்மன் அனுப்பப்படுகிறது. அப்படி அனுப்பப்படும் சம்மனை ஏற்று இருவரும் கோர்ட்டில் ஆஜராவார்கள்.

    இதன் மூலம் கடந்த சில ஆண்டுகளாக முடங்கி கிடந்த குட்கா வழக்கின் விசாரணை மீண்டும் வேகம் எடுக்க உள்ளது.

    இந்த விசாரணையின் போது முன்னாள் போலீஸ் அதிகாரிகளான டி.கே.ராஜேந்திரன், ஜார்ஜ் ஆகியோரும் கோர்ட்டில் ஆஜராக வாய்ப்பு உள்ளது. வழக்கு விசாரணை தீவிரமாகி இருப்பதையடுத்து முன்னாள் அமைச்சர்களான விஜய பாஸ்கர், பி.வி.ரமணா ஆகியோர் அதனை எதிர்கொள்ள ஆயத்தமாகி வருகிறார்கள். இது தொடர்பாக சட்ட நிபுணர்களுடன் அவர்கள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள். போலீஸ் அதிகாரிகளான டி.கே.ராஜேந்திரன், ஜார்ஜ் ஆகியோரும் வழக்கு விசாரணையை எதிர்கொள்ள தயாராகி வருகிறார்கள்.

    ×