search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vivekananda"

    • பிரதமர் மோடி நேற்றுமுன்தினம் நாடாளுமன்ற தேர்தலுக்கான இறுதிகட்ட பிரசாரத்தை முடித்துக்கொண்டு கன்னியாகுமரி வந்து சேர்ந்தார்.
    • நெற்றியில் திருநீற்று பட்டையுடன், சந்தனம்-குங்குமம் அணிந்திருந்தார். ருத்ராட்ச மாலையை கையில் வைத்து கண்களை மூடி வேத மந்திரங்களை கூறியபடி தியானம் செய்தார்.

    பிரதமர் மோடி நேற்றுமுன்தினம் நாடாளுமன்ற தேர்தலுக்கான இறுதிகட்ட பிரசாரத்தை முடித்துக்கொண்டு கன்னியாகுமரி வந்து சேர்ந்தார். பகவதி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்த பிறகு மாலையில் விவேகானந்தர் மண்டபத்தில் தியானத்தை தொடங்கிய அவர் அதிகாலை 5.30 மணி வரை மொத்தம் 11 மணி நேரம் தியானத்திலேயே இருந்தார். தியானத்தின்போது காவி வேட்டி, காவி சட்டை, காவி துண்டுக்கு மாறினார். நெற்றியில் திருநீற்று பட்டையுடன், சந்தனம்-குங்குமம் அணிந்திருந்தார். ருத்ராட்ச மாலையை கையில் வைத்து கண்களை மூடி வேத மந்திரங்களை கூறியபடி தியானம் செய்தார். மண்டபத்தில் ஓம் என்ற ஒலி தொடர்ந்து ஒலித்துக் கொண்டே இருந்தது. இது தொடர்பான வீடியோ நேற்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வந்தது.

    பிரதமர் மோடி நேற்று அதிகாலை 5.30 மணிக்கு தியானத்தை முடித்தபடி வெளியே வந்தார். 5.55 மணிக்கு சூரிய உதயத்தை விவேகானந்தர் மண்டபத்தில் இருந்தபடி கண்டுகளித்தார். அப்போது சூரிய வழிபாடு செய்த அவர் மீண்டும் மண்டபத்தை வலம் வந்தார். அந்த சமயத்தில் ஸ்ரீ பாதம் மண்டபத்திலும், சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபத்திலும் சிறிது நேரம் அமர்ந்து கண்களை மூடி தியானம் செய்தார்.

    அதை தொடர்ந்து காலை 7.25 மணிக்கு மீண்டும் தியான மண்டபத்துக்குள் சென்று 2-வது நாள் தியானத்தை தொடர்ந்தார். விவேகானந்தர் மண்டபத்தில் பிரதமர் மோடி தியானத்தில் ஈடுபட்டாலும், சுற்றுலா பயணிகள் படகு மூலம் அங்கு சென்று வர கடும் கட்டுப்பாடுகளுடன் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் பிரதமர் மோடி இருந்த தியான மண்டப பகுதியில் செல்ல யாருக்கும் அனுமதி அளிக்க வில்லை.

    அங்கு பிரதமரின் பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள், கமாண்டோ படையினர், தமிழக போலீசார், துணை ராணுவத்தினர் ஆகியோர் பாதுகாப்பு பணியை மேற்கொண்டு வருகிறார்கள். இந்திய கடற்படையின் ஹெலிகாப்டர் ஒன்று குமரி மாவட்ட கடல் பகுதியை அடிக்கடி சுற்றி வந்து கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகிறது. 3-வது நாளாக இன்று பிரதமர் மோடி தியானம் மேற்கொள்ள இருக்கிறார் . பிற்பகலில் தியானத்தின் நிறைவாக 133 அடி உயர திருவள்ளுவர் சிலைக்கு மரியாதை செலுத்த தனிப்படகில் பிரதமர் மோடி செல்கிறார். அதன்பிறகு திருவனந்தபுரம் வழியாக டெல்லி திரும்புகிறார்.

    விவேகானந்தர் மண்டபத்தில் பிரதமர் மோடி தியானம் மேற்கொண்டு வருவதையொட்டி கடலிலும், கடற்கரையிலும், வானிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த பாதுகாப்பு பணியில் பாதுகாப்பு பிரிவினர், கமாண்டோ படையினர், இந்திய கப்பல் படையினர், இந்திய கடலோர காவல் படையினர், தமிழக கடலோர காவல் படை, தமிழக போலீசார் ஆகியோர் ஈடுபட்டு வருகிறார்கள்.

    • மன்னார்குடியில் சுவாமி விவேகானந்தர் பிறந்தநாளை முன்னிட்டு தேசிய இளைஞர் தினம் கொண்டாடப்பட்டது.
    • பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் சுவாமி விவேகானந்தரை பற்றி சிறப்புரை ஆற்றினார்கள்.

    மன்னார்குடி:

    மன்னார்குடியில் சுவாமி விவேகானந்தர் பிறந்தநாளை முன்னிட்டு தேசிய இளைஞர் தினம் கொண்டாடப்பட்டது.

    இதில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் சுவாமி விவேகானந்தரை பற்றி சிறப்புரை ஆற்றினார்கள்.

    இதில் சிறப்பாக உரையாற்றிய மாணவ- மாணவிகளுக்கு பா.ஜ.க. மாநில செயற்குழு உறுப்பினர் ராகவன், மாவட்டத் தலைவர் பாஸ்கர், மாவட்ட அரசு தொடர்பு பிரிவு தலைவர் மருத்துவர் வி.பாலகிருஷ்ணன், மாவட்ட ஓ.பி.சி. அணி தலைவர் பாஸ்கர், மாவட்ட சிறுபான்மை அணி தலைவர் கமாலுதீன், மாவட்ட வெளிநாடு பிரிவு தலைவர் செந்தில் பாலன், நகர தலைவர் ரகுராமன் ஆகியோர் மாணவர்களுக்கு சான்றிதழும் பரிசுகளும் வழங்கினர்.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாவட்ட மகளிர் அணி செயலாளர் இலக்கியா, நகர செயலாளர் செந்தில் ராஜ்குமார், நகர இளைஞரணி தலைவர் மனோஜ் குமார் ஆகியோர் செய்து இருந்தனர்.

    சுவாமி விவேகானந்தர் தனது சீடர்களிடம் கீழே கொடுக்கப்பட்டுள்ள சம்பவத்தை பல முறைகள் மேற்கோள் காட்டி அன்றாட வாழ்வில் ஆன்மிகத்தை கடைப்பிடிப்பதை உதாரணமாக குறிப்பிடுவது வழக்கம்.
    சுவாமி விவேகானந்தர் பற்றி அனைவருமே அறிந்திருப்போம். இந்திய மண்ணின் ஆன்மிக பாரம்பரியத்தை உலக மக்கள் அனைவரும் அறிந்து கொள்ளும் விதமாக, அமெரிக்காவின் சிகாகோவில் நடந்த சர்வமத மாநாட்டில் பல உரைகளை ஆற்றினார். சிகாகோ நகரில் நடந்த பெரிய கண்காட்சியின் அங்கமாக சர்வ மதங்களின் உலக பிரதிநிதிகள் கலந்து கொள்ளும் விதத்தில் அந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அருமையான உரைகளை அதில் நிகழ்த்தி, உலகத்தின் கவனத்தை ஈர்த்தார் என்பது வரலாறு.

    அதன் பின்னர் பல ஐரோப்பிய நாடுகளுக்கு அவர் விருந்தினராக, சமூகத்தில் புகழ் பெற்றவர்களால் அழைக்கப்பட்டார். அந்தவகையில் 1896-ம் ஆண்டு பாரீஸ் நகரத்திற்குச் சென்று ஆன்மிக சொற்பொழிவுகள் மற்றும் தியான வகுப்புகள் நடத்தினார். ஓய்வு நேரங்களில் நகர்ப்புறத்தை சுற்றிப் பார்ப்பதுடன் பல்வேறு தரப்பு மக்களுடனும் பழகி, அவர்களது வாழ்க்கை முறைகள் பற்றி அறிந்து கொள்வதும் அவரது வழக்கம்.

    ஒரு முறை, வாடகைக்கு எடுக்கப்பட்ட குதிரைகள் இழுக்கும் கோச் வண்டி ஒன்றில், பாரீஸ் நகரத்தை சுற்றி பார்க்கும் விதமாக தன் சீடருடன் சென்று கொண்டிருந்தார். கோச் வண்டியை ஓட்டிச் சென்ற வண்டிக்காரர், பாதி வழியில் வசதியான உடை அணிந்த இரண்டு குழந்தைகளையும், அவர்களை அழைத்து வந்த பெண்ணையும் பார்த்தார். அவர்கள் பணக்கார வீட்டு பிள்ளைகள் போல் இருந்தார்கள்.

    வண்டியை ஓர் ஓரமாக நிறுத்திய அவர், இறங்கி சென்று அந்த பிள்ளைகளை கட்டிக்கொண்டு தட்டிக்கொடுத்தார். அவர்களுடன் சிறிது நேரம் பேசிவிட்டு திரும்பி, மீண்டும் வண்டியை ஓட்டிக்கொண்டு சென்றார். அன்றைய ஐரோப்பிய நாகரிகத்தின்படி வண்டிக்காரர் தன்னிச்சையாக வண்டியை நிறுத்துவது அநாகரிகமாக கருதப்பட்டது. அவற்றை கவனித்துக் கொண்டிருந்த விவேகானந்தரின் சீடர் “அவர்கள் யார்?” என்று கேட்டார்.

    அந்தப் பிள்ளைகள் தன்னுடைய மகன் மற்றும் மகள் என்றும், அழைத்து வந்தது தனது மனைவி என்றும் வண்டிக்காரர் தெரிவித்தார்.

    “அவர்களை பார்த்தால் பெரிய பணக்கார வீட்டு பிள்ளைகள்போல் இருக்கிறதே. நீங்கள் ஒரு சாதாரண கோச் வண்டியை தானே ஓட்டிக்கொண்டிருக்கிறீர்கள்?” என்று சீடர் வியப்புடன் கேட்டார்.

    அவரை கோச் வண்டி ஓட்டுபவர் திரும்பி, கூர்ந்து கவனித்து விட்டு, பாரீஸில் பிரபலமாக இருந்த ஒரு வங்கியின் பெயரை குறிப்பிட்டு “அந்த வங்கி பற்றி ஏதாவது உங்களுக்கு தெரியுமா?” என்று கேட்டார்.

    “ஆமாம். நான் கேள்விப்பட்டிருக்கிறேன். அது பெரிய வங்கியாக இருந்தது. எனக்கும் கூட அதில் ஒரு கணக்கு இருந்தது. ஆனால் இப்போது அந்த வங்கி திவாலாகி விட்டது போல் தெரிகிறதே?” என்றார் சீடர்.

    அதை கேட்டுவிட்டு வண்டியோட்டுபவர் அமைதியாக, “நான்தான் அந்த வங்கிக்கு சொந்தக்காரன். அந்த வங்கி இப்போது கொஞ்சம் சிரமமான நிலையில் இருக்கிறது. அதன் பங்குகளை எல்லாம் வசூல் செய்து கடன்களை எல்லாம் அடைக்க சிறிது காலம் ஆகலாம். அந்த நிலையில் மற்றவர்களுக்கு நான் எந்த விதத்திலும் சுமையாக இருக்க விரும்பவில்லை. அதனால், இந்த கிராமத்தில் உள்ள ஒரு சிறிய வீட்டை வாடகைக்கு எடுத்தேன். என்னிடம் இருந்த சொத்துக்கள் எல்லாவற்றையும் விற்று விட்டு, ஓரளவு பிரச்சினைகளை சமாளித்தேன். தற்போது இந்த கோச் வண்டியை வாடகைக்கு ஓட்டுவதன் மூலம் குடும்ப செலவுகளை சமாளித்து கொண்டிருக்கிறேன்” என்ற வண்டிக்காரர் மேலும் தொடர்ந்தார்.

    “என் மனைவியும் அவளால் இயன்ற அளவு கொஞ்சம் சம்பாதிக்கிறாள். எங்களது இருவரது வருமானத்தில் குழந்தைகளுக்கு ஆகும் செலவுகளை சரி செய்து கொண்டிருக்கிறோம். கடன்களை முற்றிலும் அடைத்தவுடன், மீண்டும் வங்கியை திறந்துவிடுவேன்” என்றார் வண்டிக்காரர்.

    நடந்தவை அனைத்தையும் கவனித்துக் கொண்டிருந்த சுவாமி விவேகானந்தர் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். “ஆகா..! இந்த மனிதர் அல்லவா உண்மையான வேதாந்தி! அன்றாட வாழ்வில் வேதாந்த கருத்தை நடைமுறைப்படுத்தி வரும் இவரது தன்னம்பிக்கை நிச்சயம் போற்றுதலுக்கு உரியது. பெரிய அந்தஸ்தில் இருந்து விழுந்தும்கூட, அவர் சூழ்நிலை கைதியாக மாறிவிடவில்லை. என்ன ஒரு ஆச்சரியம்..! இவரே உண்மையான வேதாந்தி” என்று வாழ்த்தியதுடன் அவரது வீட்டுக்கும் சென்று அவரை பெருமைப்படுத்தினார்.

    சுவாமி விவேகானந்தர் தனது சீடர்களிடம் இந்த சம்பவத்தை பல முறைகள் மேற்கோள் காட்டி அன்றாட வாழ்வில் ஆன்மிகத்தை கடைப்பிடிப்பதை உதாரணமாக குறிப்பிடுவது வழக்கம்.
    ×