search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "VK Pandian"

    • உலகிற்கே நல்வழியையும் பாரம்பரியத்தையும் கற்று கொடுத்த முதல் இனம் தமிழினம்!
    • ஒரு தனி மனிதனை அவமானப்படுத்துவதாக எண்ணி ஒட்டுமொத்த தமிழினத்தையும் பாஜக அவமதித்துள்ளது.

    தமிழர்களை இழிவுபடுத்தும் விதமாக பாஜக வெளியிட்டுள்ள விளம்பரத்திற்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பாஜகவின் விளம்பர வீடியோவை அவர் பகிர்ந்துள்ளார். அதில்,

    "தமிழன் என்றோர் இனமுண்டு,தனியே அவர்க்கொரு குணமுண்டு" என்ற நாமக்கல் கவிஞரின் வரிகளை நாம் உணர்ந்தவர்கள்! அறிந்தவர்கள்!

    ஒரு தமிழன் ஒடிசாவில் முதன்மையான இடத்திற்கு சென்று விடக் கூடாது என்று எத்தனையோ இழிசொற்களை பாஜக ஏவியது!

    தற்போது இன்னும் ஒரு படி மேலே சென்று தமிழ் இனத்தை இழிவுபடுத்திப் பார்க்க வேண்டும் நோக்கத்தில் தமிழர் பாரம்பரியமிக்க வேட்டி-சட்டையுடன் ஒருவர் வாழை இலையில் உணவருந்துவதை போலவும் அதை மற்றொருவர் கேலி செய்வதை போலவும் ஒரு தேர்தல் விளம்பரத்தை பாஜக வெளியிட்டுள்ளது.

    வி.கே.பாண்டியன் அவர்களை போன்ற ஒருவர் வேட்டி-சட்டை அணிந்து இருப்பதாக அனைத்து விளம்பரங்களிலும் பாஜக சித்தரித்துள்ளது.

    உலகிற்கே நல்வழியையும் பாரம்பரியத்தையும் கற்று கொடுத்த முதல் இனம் தமிழினம்!

    இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இலக்கியத்திலும் அறிவியலிலும் அனைவருக்கும் முன்னோடியாக இருந்தவர்கள் தமிழர்கள் என்பது பாஜகவிற்கு தெரிய வாய்ப்பில்லை.

    ஒரு தனி மனிதனை அவமானப்படுத்துவதாக எண்ணி ஒட்டுமொத்த தமிழினத்தையும் பாஜக அவமதித்துள்ளது.

    எல்லாவற்றிலும் ஒரே நாடு என கொக்கரிக்கும் பாஜக..எதற்காக வி.கே.பாண்டியனை கண்டு அஞ்சுகிறது?

    கடந்த ஆண்டு இதே நாளில் இதே வி.கே.பாண்டியன் தான் ஒடிசா ரயில் விபத்தின் போது படுகாயமடைந்து இருந்த தமிழர்களுக்கு தேவையான இரத்தமும் உரிய சிகிச்சையும் உடனடியாக கிடைப்பதற்கு உறுதுணையாக நின்றவர்.

    தான் பிறந்த மண்ணிற்கும் இருக்கும் மண்ணிற்கும் உள்ள மக்கள் என அனைவருக்கும் ஒரே மாதிரியான சிகிச்சை அளிக்குமாறு மருத்துவமனைக்கு நேரில் சென்று அறிவுறுத்தியவர்.

    ஒரு மனிதனை இனத்தாலும் மொழியாலும் மதத்தாலும் பிரித்து, பிரிவினைவாதம் என்ற விழியின் வழியாக தான் பாஜக பார்க்கிறது.

    மதுரை மண்ணின் இந்த மறத்தமிழன் அறத்தின் வழி நின்று வென்று காட்டுவார்" என்று தெரிவித்துள்ளார்.

    • ஏன் இதுபோல ஆதாரமே இல்லாமல் பேசுகிறார்கள்.
    • வி.கே.பாண்டியன் தனது அரசியல் வாரிசு இல்லை.

    புவனேஸ்வரம்:

    ஒடிசா மாநிலத்தில் பாராளுமன்ற தேர்தலுடன், சட்டசபை தேர்தலும் நடக்கிறது. அங்கு பிஜு ஜனதாதளம் இப்போது ஆட்சியில் இருக்கும் நிலையில், அங்கு பா.ஜனதா கட்சி ஆட்சியை பிடிக்க தீவிரமாக முயன்று வருகிறது.

    ஒடிசாவில் ஆளும் பிஜு ஜனதா தளம் கட்சியில் முக்கிய தலைவராக இருப்பவர் வி.கே.பாண்டியன். தமிழகத்தை சேர்ந்த இவர் ஒடிசாவில் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக பணிபுரிந்து வந்தவர். இவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பிஜு ஜனதா தளம் கட்சியில் இணைந்தார்.

    அதன் பிறகு தொடர்ச்சியாக அரசியலில் ஈடுபட்டு வருகிறார். அவரை குறிவைத்தே ஒடிசாவில் பா.ஜ.க. பிரசாரம் செய்தது.

    தமிழகத்தை சேர்ந்த ஒருவர் ஒடிசா மாநிலத்தை ஆள வேண்டுமா என்பதை முடிவு செய்து கொள்ளுங்கள் என்று பா.ஜ.க. அங்கு பிரசாரம் செய்தது. அதாவது நவீன் பட்நாயக்கிற்கு பிறகு பிஜு ஜனதா தளம் கட்சியின் தலைவராக வி.கே.பாண்டியன் தேர்வு செய்யப்படுவார் என்பதே பா.ஜ.க.வின் பிரசாரமாக இருந்தது.

    இதற்கிடையே இந்த விவகாரத்தில் ஒடிசா முதல்-மந்திரி நவீன் பட்நாயக் விளக்கம் அளித்துள்ளார். வி.கே.பாண்டியன் தனது அரசியல் வாரிசு இல்லை என்பதை அவர் அதிரடியாக அறிவித்துள்ளார்.

    இதுகுறித்து நவீன் பட்நாயக் கூறியதாவது:-

    ஒடிசாவில் அனைத்து முடிவுகளையும் வி.கே.பாண்டியன் தான் எடுப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுவது அபத்த

    மானது. ஏற்கனவே இந்த விவகாரத்தில் நான் பல முறை விளக்கமளித்துவிட்டேன். இதில் ஒரு துளி கூட உண்மை இல்லை. வி.கே.பாண்டியனை எனது அரசியல் வாரிசாக சிலர் கூறுகிறார்கள். அது மிகைப்படுத்தப்பட்ட குற்றச்சாட்டு.

    என்ன ஒரு முட்டாள்தனமான பேச்சு. ஏன் இதுபோல ஆதாரமே இல்லாமல் பேசுகிறார்கள் என்பதை என்னால் புரிந்து கொள்ளவே முடியவில்லை. அவர் தேர்தலில் கூட இதுவரை போட்டியிட்டது இல்லை.

    ஒடிசாவிலும் சரி, நாடு முழுவதும் சரி, பா.ஜ.க.வுக்கு எதிராக அதிருப்தி அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக விரக்தியடைந்த பா.ஜ.க.வினர் இதுபோல பேசி வருகிறார்கள் என்றே நான் கருதுகிறேன்.

    எனக்கு ஒரு அரசியல் வாரிசை உருவாக்கும் திட்டம் எதுவும் இல்லை. எனக்கு பிறகு யார் என்பதை ஒடிசாவில் உள்ள மக்கள் தான் முடிவு செய்வார்கள். இதை நான் ஏற்கனவே பலமுறை கூறிவிட்டேன். இவை எல்லாம் இயல்பாகவே நடக்கும். இத்தனை காலம் இந்த கட்சி எப்படி மக்களுக்கு சேவை செய்து வந்ததோ, அதுபோல வரும் காலத்திலும் தொடர்ந்து தானாகவே நடக்கும்.

    இந்த தேர்தலில் எங்கள் கட்சி வெற்றி பெற்றால் அடுத்த 5 ஆண்டுகளுக்கு நிச்சயமாக நான் தான் முதல்-மந்திரியாக இருப்பேன். நான் கடந்த 27 ஆண்டுகளாக அரசியலில் இருக்கிறேன். 27 ஆண்டுகளுக்கு முன்பு இந்த கட்சியின் தலைவர் பதவி எனக்கு வழங்கப்பட்டது. இதுவரை நான் அதை சிறப்பாக நடத்தி வருகிறேன். வரும் காலத்திலும் இதையே நான் தொடர்ந்து செய்வேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஒடிசாவில் 21 மக்களவை தொகுதியில் 17-ல் பா.ஜனதா வெற்றி பெறும்.
    • 147 சட்டமன்ற இடங்களில் 75-ல் வெற்றி பெற்று ஆட்சியை பிடிப்போம்.

    மத்திய உள்துறை மந்திரியும், பா.ஜனதா மூத்த தலைவர்களில் ஒருவருமான அமித் ஷா இன்று ஒடிசா மாநிலத்தில் உள்ள பத்ராக் மக்களவை தொகுதிக்கு உட்பட்ட சந்த்பாலியில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.

    அப்போது அமித் ஷா கூறியதாவது:-

    ஜூன 4-ந்தேதி வரும்போது, நவீன் பாவு நீண்ட காலத்திற்கு முதல்வராக இருக்க முடியாது. அவர் முன்னாள் முதல்வராவார். பா.ஜனதா 21 இடங்களில் 17 மக்களவை தொகுதிகளில் வெற்றிபெறும். 147 சட்டமன்ற இடங்களில் 75-ல் பெற்றி பெற்று ஒடிசாவில் ஆட்சி அமைக்கும்.

    தற்போது ஒடிசா இளைஞர்கள் அடுத்த மாநிலங்களுக்கு வேலை தேடிச் செல்கிறார்கள். பா.ஜனதா ஆட்சி அமைத்த பிறகு, நாங்கள் தொழிற்சாலைகளை உருவாக்குவோம். அதன்பிறகு இளைஞர்கள் வேலைத்தேடி வெளி மாநிலங்களுக்கு செல்ல வேண்டிய நிலைமை ஏற்படாது.

    இவ்வாறு அமித் ஷா தெரிவித்துள்ளார்.

    • ஒடிசாவில் நடைபெற்ற முதல் மூன்று கட்ட தேர்தலில் பா.ஜனதா ஏறக்குறைய மெஜாரிட்டியை பெற்றுள்ளது.
    • பா.ஜனதா அரசு ஜூன் 10-ந்தேதி பதவி ஏற்கும். நவீன் பட்நாயக்கிற்கு வலது கையாக திகழும் 5T சேர்மன் வி.கே. பாண்டியனை தமிழ்நாட்டிற்கு அனுப்புவோம்.

    ஒடிசாவில் சட்டமன்ற தேர்தலும், மக்களவை தேர்தலும் ஒரே நேரத்தில் நடைபெறுகிறது. அங்கு நான்கு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இதுவரை மூன்று கட்ட தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. 4வது மற்றும் கடைசி கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1-ந்தேதி நடைபெற இருக்கிறது.

    இந்த நிலையில் ஒடிசாவில் ஜூன் 10-ந்தேதி பா.ஜனதா பதவி ஏற்கும். ஜூன் 11-ந்தேதி நாங்கள் பி.கே. பாண்டியனை தமிழ்நாட்டிற்கு அனுப்புவோம் என அசாம் மாநில முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அசாம் மாநில முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா கூறியதாவது:-

    என்னுடைய கணிப்பின்படி, ஒடிசாவில் நடைபெற்ற முதல் மூன்று கட்ட தேர்தலில் பா.ஜனதா ஏறக்குறைய மெஜாரிட்டியை பெற்றுள்ளது. ஆட்சியமைக்க இன்னும் ஒருசில இடங்கள்தான் தேவை. ஜூன் 1-ந்தேதி அதுவும் நிரப்பப்படும்.

    பா.ஜனதா அரசு ஜூன் 10-ந்தேதி பதவி ஏற்கும். நவீன் பட்நாயக்கிற்கு வலது கையாக திகழும் 5T சேர்மன் வி.கே. பாண்டியனை தமிழ்நாட்டிற்கு அனுப்புவோம்.

    இன்று, ஒடிசா இளைஞர்கள் வேலைவாய்ப்பு இல்லாத காரணத்தினால் வெளி மாநிலத்திற்கு புலம்பெயர்ந்து செல்கிறார்கள். மற்றொரு பக்கம் ஒரு லட்சம் அரசு வேலைகள் காலியாக உள்ளது. ஒடிசா இளைஞர்கள் உள்ளூர் தொழிற்சாலைகளில் வேலை செய்யவில்லை. பா.ஜனதா ஆட்சிக்கு வந்தால் ஒரு வருடத்திற்குள் காலியாக உள்ள இடங்கள் நிரப்பப்படும்.

    பிஜு ஜனதா தளத்தின் 5T-ல் ஒரு T-ன் அர்த்தம் டீம் ஒர்க். ஒடிசாவில் ஏதாவது டீம் ஒர்க் நடைபெறுகிறதா?. தேர்வான எம்.எல்.ஏ.-க்கள், எம்.பி.க்கள், மந்திரிகள் அவர்களுடைய அதிகாரத்தை செயல்படுத்த முடியவில்லை. அங்கு ஒரே ஒரு டீம்தான் உள்ளது. பாண்டியன் மற்றும் பாண்டியன் மனைவிக்கு இடையிலான ஒரு T. அது தமிழ்நாட்டை குறிக்கும்.

    ஒடிசாவில் கேபினட் அமைச்சர்கள் அல்லது எந்த அதிகாரிகளும் அதிகாரத்தை பெறவில்லை. பாண்டியன் மற்றும் பாண்டியன் மனைவி ஆகிய இரண்டு பேரும் அனைத்து அதிகாரத்தையும் கொண்டுள்ளனர். நவீன் பட்நாயக்கை பாண்டியன் பிணைக்கைதியாக பிடித்து வைத்துள்ளனர். ஒடிசா மக்களின் மரியாதை பெற அவர் அதில் இருந்து வெளியே வர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு ஹிமாந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.

    • ஒடிசாவின் பழமையான அடையாளங்களில் ஒன்றான புகழ் பெற்ற 12 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பூரி ஜகநாதர் ஆலயம் உள்ளது.
    • கட்டாக்கில், தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய அவர் தமிழ்நாடு குறித்த சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றைத் தெரிவித்துள்ளார்.

    ஒடிசாவின் பழமையான அடையாளங்களில் ஒன்றான புகழ் பெற்ற 12 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பூரி ஜகநாதர் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் கருவூல புதையல் அறை என்று அழைக்கப்படும் ரத்ன பண்டர் உள்ளது. ரத்னா பண்டர் பல நூற்றாண்டுகளாகப் பக்தர்கள் மற்றும் முன்னாள் மன்னர்களால் வழங்கப்பட்ட தெய்வங்களின் விலைமதிப்பற்ற ஆபரணங்களை உள்ளன.

     

    இது கடைசியாக ஜூலை 14, 1985 இல் திறக்கப்பட்டது. இதனிடையே கடந்த 2018 ஆம் ஆண்டில், அறையைத் திறக்குமாறு ஒடிசா உயர் நீதிமன்றம் அரசுக்கு உத்தரவிட்டது. ஆனால் அறையின் சாவியைக் கண்டுபிடிக்க முடியவில்லை, கடந்த 6 ஆண்டுகளாக அறையின் சாவி கிடைக்காதது மாநிலம் அளவில் பெரும் சர்ச்சைக்கு வழிவகுத்தது.

     

    இந்நிலையில் தேர்தல் பரப்புரைக்காக நேற்று (மே 20) ஒடிசா சென்ற பிரதமர் நரேந்திர மோடி பூரி ஜெகநாதர் கோவிலில் வழிபாடு செய்தார். பின்னர் கட்டாக்கில், தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய அவர் தமிழ்நாடு குறித்த சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றைத் தெரிவித்துள்ளார்.

     

    அங்கு நடைபெற்ற பேரணியில் மோடி பேசுகையில், "முதல்வர் நவீன் பட்நாயக்கின் பிஜேடி ஆட்சியில் பூரி ஜெகநாதர் கோவில் பாதுகாப்பாக இல்லை. கடந்த 6 ஆண்டுகளாக ரத்ன பண்டர்(கருவூல அறை) சாவிகள் காணாமல் போய்விட்டன. ரத்ன பண்டரின் காணாமல் போன சாவிகள் பற்றி ஒடிசா முழுவதும் அறிய விரும்புகிறது, ஆனால் பிஜேடி அதை மூடி மறைகிறது.

    பிஜேடியின் மௌனம் இந்த விவகாரத்தில் மக்களின் சந்தேகத்தை மேலும் அதிகரித்துள்ளது. ரத்ன பண்டரின் சாவி தமிழகத்துக்கு சென்றுவிட்டதாக மக்கள் கூறுகின்றனர். அதைத் தமிழ்நாட்டுக்கு அனுப்பியது யார்?" என்று கேள்வியெழுப்பியுள்ளார்.

     

    ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கின் நெருங்கிய உதவியாளரும், பிஜேடியின் முக்கிய தேர்தல் வியூகதை வகுப்பவருமான தமிழகத்தைச் சேர்ந்த வி.கே.பாண்டியனை மறைமுகமாக மோடி குறிப்பிட்டுள்ளார் என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். வி.கே.பாண்டியனை விமர்சிக்க பொதுப்படையாக 'தமிழ்நாடு' என குறிப்பிட்டு மோடி மீண்டும் வெறுப்புப் பேச்சில் ஈடுபட்டுள்ளார் என்று கண்டனங்கள் எழுந்து வருகிறது. ஒடிசாவில் பாராளுமன்றத் தேர்தலுடன் சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவும் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

    • ஒடிசாவில் பிஜு ஜனதா தளம் கட்சியின் ஆட்சிக்காலம் ஜூன் 4-ந்தேதியுடன் காலாவதியாகிவிடும்- பிரதமர் மோடி
    • நவீன் பட்நாயக் ஜூன் 9-ந்தேதி 6-வது முறையாக ஒடிசா மாநில முதல்வராக பதவி ஏற்பார்- வி.கே. பாண்டியன்

    ஒடிசாவில் பிஜு ஜனதா தளம் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. அக்கட்சியின் தலைவர் நவீன் பட்நாயக் முதல்வராக இருந்து வருகிறார். ஒடிசாவில் பா.ஜனதாவும், பிஜு ஜனதா தளம் கட்சியும் இணைந்து போட்டியிடுவதாக இருந்தது. தொகுதிகள் ஒதுக்கீடு செய்வதில் இழுபறி நிலவியதால் தனித்து போட்யிடுகின்றன.

    ஒடிசாவில் மக்களவை தேர்தலுடன் சட்டமன்றத்திற்கும் தேர்தல் நடைபெற இருக்கிறது. பிரதமர் மோடி இரண்டு முறை ஒடிசா மாநிலத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டுள்ளார். பெர்ஹாம்பூர் மற்றும் நபரங்பூர் ஆகிய இடங்களில் பிரசாரம் மேற்கொள்ளும்போது, ஒடிசாவில் பிஜு ஜனதா தளம் கட்சியின் ஆட்சிக்காலம் ஜூன் 4-ந்தேதியுடன் காலாவதியாகிவிடும்" என்றார்.

    ஜூன் 4-ந்தேதி மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. அன்றைய தினம்தான் ஒடிசா மாநில சட்டமன்ற தேர்தல் முடிவும் அறிவிக்கப்பட இருக்கின்றன. இதை வைத்துதான் பிரதமர் மோடி அவ்வாறு கூறியிருந்தார்.

    இது தொடர்பாக நவீன் பட்நாயக்கிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் "பா.ஜனதா நீண்ட நாட்களாக பகல் கனவு காண்கிறது" எனத் தெரிவித்துள்ளார்.

    நவீன் பட்நாயக்கின் உதவியாளர் வி.கே. பாண்டியனிடம், இந்த முறை ஒடிசாவில் பா.ஜனதா ஆட்சி அமைக்கும் எனக் கூறுகிறதே? எனக் கேள்வி எழுப்பப்பட்டது.

    அதற்கு வி.கே. பாண்டியன் கூறுகையில் "நவீன் பட்நாயக் ஜூன் 9-ந்தேதி காலை 11.30 மணியில் இருந்து 1.30 மணிக்குள் 6-வது முறையாக ஒடிசா மாநில முதல்வராக பதவி ஏற்பார்" என்றார்.

    • ஒடிசாவில் பாராளுமன்ற தேர்தலுடன் சட்டசபைக்கும் தேர்தல் நடக்கிறது.
    • முதல்-மந்திரி நவீன்பட்நாயக்கின் சிறந்த மதிப்புகளுக்கு நான் இயற்கையான வாரிசு.

    புவனேசுவரம்:

    ஒடிசா மாநிலத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக பணியாற்றியவர் வி,கே.பாண்டியன். தமிழகத்தை சேர்ந்தவரான இவர், முதல்-மந்திரி நவீன்பட்நாயக்கின் சிறப்பு ஆலோசகராக பணியாற்றினார். பின்னர் அவரது அழைப்பின்பேரில், விருப்ப ஓய்வு பெற்று பிஜூ ஜனதா தளத்தில் இணைந்தார். தற்போது நவீன்பட்நாயக்கின் அரசியல் ஆலோசகராக உள்ளார்.

    தற்போது ஒடிசாவில் பாராளுமன்ற தேர்தலுடன் சட்டசபைக்கும் தேர்தல் நடக்கிறது. இதில் வி.கே.பாண்டியன் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். இதனிடையே நேற்று புவனேசுவரத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    முதல்-மந்திரி நவீன்பட்நாயக் எனது குரு. நான் அவருடை சீடன். கட்சியில் நான் எந்த பொறுப்பிலும் இல்லை. சாதாரண வீரன்தான். ஒடிசா மக்களுக்காக நவீன்பட்நாயக் சிறப்பான சேவையாற்றி வருகிறார். அவருக்கு கீழ் பணியாற்றுவதை நான் பெருமையாக கருதுகிறேன். முதல்-மந்திரி நவீன்பட்நாயக்கின் சிறந்த மதிப்புகளுக்கு நான் இயற்கையான வாரிசு. பா.ஜனதாவினர் அரசியல் காரணங்களுக்காக என்னை அந்நியன் என்று கூறுகிறார்கள். ஆனால் ஒடிசா மக்கள் என்னை அப்படி சொல்லவில்லை. நான் ஒடிசாவில் 25 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறேன். ஒடிசா மக்கள் என்னையும் அவர்களில் ஒருவராகப் பார்க்கிறார்கள். மிகவும் நேசிக்கிறார்கள். என்னை பலவீனப்படுத்த பா.ஜனதாவினர் இதுபோன்று கூறுகிறார்கள்.

    இவ்வாறு வி.கே.பாண்டியன் கூறினார்.

    • கடந்த 2011-ம் ஆண்டு, ஒடிசா முதல்-மந்திரி அலுவலக பொறுப்பில் வி.கே.பாண்டியன் நியமிக்கப்பட்டார்.
    • வி.கே.பாண்டியனுக்கு முதல்-மந்திரி நவீன் பட்நாயக்குடன் நெருக்கம் இன்னும் அதிகரித்தது

    புவனேஸ்வர்:

    தமிழ்நாட்டில் மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர் வி.கார்த்திகேய பாண்டியன் என்ற வி.கே.பாண்டியன். இவர், 2000-ம் ஆண்டு பிரிவைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரியான இவர் ஒடிசா மாநிலத்தில் பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்தார். கடந்த 2011-ம் ஆண்டு, ஒடிசா முதல்-மந்திரி அலுவலக பொறுப்பில் நியமிக்கப்பட்டார். அப்போதிருந்து முதல்-மந்திரி நவீன் பட்நாயக்கின் தனிச்செயலாளராக பணியாற்றி வந்தார்.

    கடந்த 2019-ம் ஆண்டு, நவீன் பட்நாயக் 5-வது தடவையாக ஆட்சிக்கு வந்த பிறகு, வி.கே.பாண்டியனுக்கு '5டி செயலாளர்' என்ற கூடுதல் பொறுப்பும் அளிக்கப்பட்டது.

    இதன்மூலம், வி.கே.பாண்டியனுக்கு முதல்-மந்திரி நவீன் பட்நாயக்குடன் நெருக்கம் இன்னும் அதிகரித்தது. அதையொட்டி, வி.கே.பாண்டியனை அரசுப்பணியில் இருந்து விடுவித்து, அரசியலில் ஈடுபடுத்த முதல்-மந்திரி நவீன் பட்நாயக் திட்டமிட்டார்.

    இந்நிலையில், ஒடிசா முதல் மந்திரியின் தனிச்செயலாளர் பொறுப்பில் இருந்து அண்மையில் விருப்ப ஓய்வு பெற்ற வி.கே.பாண்டியனுக்கு, கேபினட் அமைச்சருக்கு இணையான அரசு பொறுப்பு வழங்கப்பட்டது.

    இதையடுத்து ஒடிசா முதல் மந்திரி நவீன் பட்நாயக் முன்னிலையில் பிஜு ஜனதா தளம் கட்சியில் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி வி.கே.பாண்டியன் இன்று இணைந்தார்.

    • நவீன் பட்நாயக் 5-வது தடவையாக ஆட்சிக்கு வந்த பிறகு, வி.கே.பாண்டியனுக்கு ‘5டி செயலாளர்’ என்ற கூடுதல் பொறுப்பும் அளிக்கப்பட்டது.
    • நவீன் பட்நாயக்கின் அரசியல் வாரிசாக வி.கே.பாண்டியன் பேசப்பட்டார்.

    புவனேஸ்வர்:

    தமிழ்நாட்டில் மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர் வி.கார்த்திகேய பாண்டியன் என்ற வி.கே.பாண்டியன். இவர், 2000-ம் ஆண்டு பிரிவைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆவார்.

    ஒடிசா மாநிலத்தில் பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்தார். கடந்த 2011-ம் ஆண்டு, ஒடிசா முதல்-மந்திரி அலுவலக பொறுப்பில் நியமிக்கப்பட்டார். அப்போதிருந்து முதல்-மந்திரி நவீன் பட்நாயக்கின் தனிச்செயலாளராக பணியாற்றி வந்தார்.

    கடந்த 2019-ம் ஆண்டு, நவீன் பட்நாயக் 5-வது தடவையாக ஆட்சிக்கு வந்த பிறகு, வி.கே.பாண்டியனுக்கு '5டி செயலாளர்' என்ற கூடுதல் பொறுப்பும் அளிக்கப்பட்டது. அரசுத்துறைகளில் மாற்றத்துக்கான முயற்சிகளை அமல்படுத்த இப்பதவி உருவாக்கப்பட்டது.

    இதன்மூலம், வி.கே.பாண்டியனுக்கு முதல்-மந்திரி நவீன் பட்நாயக்குடன் நெருக்கம் இன்னும் அதிகரித்தது. அரசு திட்டங்களை ஆய்வு செய்ய வி.கே.பாண்டியன் அரசு ஹெலிகாப்டர்களில் பயணம் செய்ய ஆரம்பித்தார்.

    மாநில அரசை நவீன் பட்நாயக்குக்கு பதிலாக, வி.கே.பாண்டியன்தான் நிர்வகிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. நவீன் பட்நாயக்கின் அரசியல் வாரிசாகவும் வி.கே.பாண்டியன் பேசப்பட்டார்.

    இதற்கிடையே, அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதவாக்கில், பாராளுமன்ற தேர்தலுடன் ஒடிசா மாநில சட்டசபை தேர்தலும் நடக்கிறது.

    அதையொட்டி, வி.கே.பாண்டியனை அரசுப்பணியில் இருந்து விடுவித்து, அரசியலில் ஈடுபடுத்த முதல்-மந்திரி நவீன் பட்நாயக் திட்டமிட்டார்.

    அதன்படி, வி.கே.பாண்டியன், அரசுப்பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற விண்ணப்பித்தார். அவரது கோரிக்கையை மத்திய அரசு நேற்று முன்தினம் ஏற்றுக்கொண்டது.

    இந்நிலையில், விருப்ப ஓய்வு பெற்ற 24 மணி நேரம் முடிவதற்குள் வி.கே.பாண்டியனை ஒடிசா மாநில அரசு புதிய பதவியில் நியமித்துள்ளது. இது, கேபினட் மந்திரி அந்தஸ்து கொண்ட பதவி என்பது குறிப்பிடத்தக்கது.

    இதுதொடர்பாக ஒடிசா மாநில பொது நிர்வாகம் மற்றும் மக்கள் குறைதீர்ப்புத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    மாற்றத்துக்கான முயற்சிகளை மேற்கொள்ளும் 5டி திட்டம் மற்றும் நவீன ஒடிசா திட்டத்துக்கான தலைவராக கேபினட் மந்திரி அந்தஸ்து கொண்ட பதவியில் வி.கே.பாண்டியன் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் முதல்-மந்திரியின் கீழ் நேரடியாக செயல்படுவார்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ஒடிசா மாநில அரசின் 'நமது ஒடிசா, புதிய ஒடிசா' என்ற புதிய திட்டத்தின் பொறுப்பாளராகவும் வி.கே.பாண்டியன் நியமிக்கப்பட உள்ளார். இத்திட்டம், பாண்டியனின் சிந்தனையில் உதித்த திட்டம் ஆகும்.

    வி.கே.பாண்டியன், ஆளும் கட்சியான பிஜு ஜனதாதளத்தில் இணைவார் என்று அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. அதன்மூலம், அவர் நேரடி அரசியலில் ஈடுபடுத்தப்படுவார் என்று தெரிகிறது.

    ×