என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Wayanad Landslide"

    • நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர்களது குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
    • பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான நிவாரண பொருட்களும் அனுப்பி வைக்கப்படும்.

    அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கேரள மாநிலம் வயநாடு பகுதியில் ஏற்பட்டுள்ள கடும் மழைப் பொழிவு மற்றும் நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்குத் தேவையான உதவிகளை செய்வதற்காக அதிமுக சார்பில் நிவாரனா நிதியாக 1 கோடி ரூபாய் வழங்கி, நிவாரண பொருட்களும் அனுப்பி வைக்கப்படும்.

    கேரள மாநிலம், வயநாடு பகுதியில் கடுமையான மழைப் பொழிவின் காரணமாக ஏற்பட்டுள்ள நிலச் சரிவில் தற்போதுவரை 246 பேர் உயிரிழந்துள்ளதாகவும், மேலும் நிலச்சரிவில் சிக்கி உள்ளவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், அதேபோல், பொதுச் சொத்துகளுக்கு பலமான சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

    இந்த இயற்கைச் சிற்றத்தின் காரணமாக வரலாறு காணாத பேரிழப்பை அப்பகுதி மக்கள் சந்தித்திருப்பது மிகுந்த மனவேதனையை அளிக்கின்றது. நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர்களது குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

    கடும் மழைப் பொழிவின் காரணமாக பேரிழப்பை சந்தித்துள்ள கேரள மாநிலத்திற்கு தேவையான நிதியுதவி மற்றும் நிவாரண உதவிகளை உடனடியாக வழங்கிடுமாறும்; மேலும் போர்க்கால அடிப்படையில் மீட்புப் பணிகளை துரிதமாக மேற்கொள்ளுமாறும் மத்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

    அதிமுக ஆட்சியில் இருந்தாலும் எதிர்க்கட்சியாக இருந்தாலும் ஏழை, எளிய மக்களுக்கு தாயுள்ளத்தோடு உதவுவதிலும், அண்டை மாநிலங்களில் இயற்கைச் சீற்றங்கள் ஏற்படும் நேரங்களில் உதவி செய்வதிலும் முன்னிலை வகித்து வருவதை அனைவரும் நன்கு அறிவர்.

    அந்த வகையில், கேரள மாநிலம் வயநாடு பகுதியில் ஏற்பட்டுள்ள கடும் மழைப் பொழிவு மற்றும் நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்குத் தேவையான உதவிகளை செய்வதற்காக அதிமுக சார்பில் நிவாரண நிதியாக 1 கோடி ரூபாய் வழங்கப்படும். மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான நிவாரண பொருட்களும் அனுப்பி வைக்கப்படும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

    இவ்வாறு அறிக்கையில் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

    • இதுவரை நிலச்சரிவில் சிக்கி 280-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
    • நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களால் முடிந்தவரை உதவிகளை செய்து வருகின்றனர்.

    கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் கடந்த 29-ம் தேதி இரவில் கனமழை கொட்டியது.

    அதனால் வயநாட்டில் உள்ள முண்டகை, சூரல்மலை, மேப்பாடி ஆகிய மலைக்கிராமங்களில் அடுத்தடுத்து பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. அத்துடன் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இந்த வெள்ளத்தில் சாலைகள், பாலங்கள், வீடுகள், தங்கும் விடுதிகள், கடைகள், வாகனங்கள் என அனைத்தும் அடித்து செல்லப்பட்டன.

    அதிகாலை நேரம் என்பதால் அங்கு வசித்து வந்தவர்கள் அயர்ந்து தூங்கி கொண்டு இருந்தனர். அவர்கள் நடக்க போகும் விபரீதத்தை உணராத நிலையில், காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர். பலர், மண்ணோடு மண்ணாக புதைந்தும் போயினர். இதுவரை நிலச்சரிவில் சிக்கி 280-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இன்று 3-வது நாளாக மீட்பு பணி நடைபெற்று வருகிறது. இடையிடையே பெய்து வரும் மழையையும் பொருட்படுத்தாமல் மீட்பு பணி நடைபெற்று வருகிறது.

    இதனிடையே, நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களால் முடிந்தவரை உதவிகளை செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில், நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாட்டில் உள்ள எர்டெல் வாடிக்கையாளர்களுக்கு சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.

    அதாவது, வேலிடிட்டி நிறைவடைந்து ரீசார்ஜ் செய்ய முடியாதவர்களுக்கு 3 நாட்களுக்கு 1ஜிபி மொபைல் டேட்டா, அன்லிமிடெட் கால்ஸ், 100 எஸ்எம்எஸ் இலவசமாக வழங்கப்படும் என ஏர்டெல் நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும், போஸ்ட்பெயிட் வாடிக்கையாளர்கள் தங்கள் கட்டணத்தை செலுத்துவதற்கான கால அவகாசம் 30 நாட்களுக்கு நீட்டிப்பு எனவும் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

    • மாநில அமைச்சர்கள் பலரை சம்பவ இடத்திற்கு முதலமைச்சர் பினராய் விஜயன் அனுப்பி வைத்துள்ளார்.
    • ஆய்வு செய்வதற்காக முதலமைச்சர் பினராய் விஜயன் இன்று வயநாட்டிற்கு சென்றார்.

    கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு நாடு முழுவதும் கவலையை ஏற்படுத்தி உள்ளது. அங்கு தோண்ட தோண்ட மனித உடல்கள் கிடைத்து வருகின்றன. கேரள மாநிலத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய பேரழிவாக தற்போதயை நிலச்சரிவு மாறி வருகிறது.

    நிலச்சரிவால் கடுமையாக பாதிக்கப்பட்ட வயநாடு பகுதியைச் சேர்ந்த மக்களுக்கு உதவும் வகையில் நிவாரண நிதி வழங்குமாறு கேரள மாநில முதல்வர் பினராய் விஜயன் கேட்டுக் கொண்டுள்ளார்.

    மேலும் அம்மாநில கவர்னர் ஆரிப் முகம்மதுகானும் அனைத்து மாநில மக்களும் இணைந்து நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ வேண்டுமென கேட்டுக் கொண்டுள்ளார்.

    நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் நிலையை உடனடியாக அறிந்து மீட்புப் பணிகளை மேற்கொள்ள வசதியாக மாநில அமைச்சர்கள் பலரை சம்பவ இடத்திற்கு முதலமைச்சர் பினராய் விஜயன் அனுப்பி வைத்துள்ளார்.

    மேலும், நிலச்சரிவு பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக அமைச்சர்கள் கூட்டத்தையும் நேற்று நடத்தினார்.

    அதுமட்டுமின்றி இன்று அனைத்து கட்சி கூட்டத்தையும் நடைபெறுகிறது. அனைத்து கட்சியினரும் அதில் பங்கேற்றுள்ளனர். 

    இந்நிலையில் நிலச்சரிவு பாதிப்புகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்வதற்காக முதலமைச்சர் பினராய் விஜயன் இன்று வயநாட்டிற்கு சென்றார்.

    அங்கு நிலச்சரிவு பாதித்த பகுதிகளை பார்வையிட்டார். அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்புப்பணிகள் குறித்து முகாமிட்டுள்ள அமைச்சர்களிடம் கேட்டறிந்தார்.

    மேலும், மீட்புப்பணிகளை துரிதப்படுத்தவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை செய்யவும், அனைத்து துறை அதிகாரிகள் மற்றும் மீட்புப் படையினருக்கு ஆணை பிறப்பித்தார். அது மட்டுமின்றி நிலச்சரிவில் குடும்பத்தினரை இழந்து தவிப்பவர்களையும், காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களையும் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

    வயநாட்டில் நிலச்சரிவால் ஏற்பட்ட பாதிப்புகளை பார்வையிட்டு பாதித்தவர்களுக்கு ஆறுதல் கூறுவதற்காக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி எம்.பி., காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோர் நேற்று கேரள வருவதாக இருந்தது.

    ஆனால் வயநாட்டில் நிலவிய மோசமான வானிலை காரணமாக அவர்கள் வர முடியாத நிலை ஏற்பட்டது.

    இந்நிலையில் அவர்கள் இருவரும் இன்று கேரள வந்தனர். கண்ணூர் விமான நிலையத்திற்கு வந்திறங்கிய அவர்கள், ஒரே காரில் வயநாட்டிற்கு புறப்பட்டுச் சென்றனர்.

    அவர்கள் நிலச்சரிவு பாதித்த பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்டனர். மேலும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுடன் ராகுல் காந்தி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.

    • வயநாடு நிலச்சரிவில் சிக்கி 280-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
    • வயநாட்டில் இன்று 3-வது நாளாக மீட்பு பணி நடைபெற்று வருகிறது.

    கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் கடந்த 29-ம் தேதி இரவில் கனமழை கொட்டியது.

    அதனால் வயநாட்டில் உள்ள முண்டகை, சூரல்மலை, மேப்பாடி ஆகிய மலைக்கிராமங்களில் அடுத்தடுத்து பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. அத்துடன் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இந்த வெள்ளத்தில் சாலைகள், பாலங்கள், வீடுகள், தங்கும் விடுதிகள், கடைகள், வாகனங்கள் என அனைத்தும் அடித்து செல்லப்பட்டன.

    அதிகாலை நேரம் என்பதால் அங்கு வசித்து வந்தவர்கள் அயர்ந்து தூங்கி கொண்டு இருந்தனர். அவர்கள் நடக்க போகும் விபரீதத்தை உணராத நிலையில், காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர். பலர், மண்ணோடு மண்ணாக புதைந்தும் போயினர்.

    இதுவரை நிலச்சரிவில் சிக்கி 280-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இன்று 3-வது நாளாக மீட்பு பணி நடைபெற்று வருகிறது. இடையிடையே பெய்து வரும் மழையையும் பொருட்படுத்தாமல் மீட்பு பணி நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் வயநாட்டில் கரைபுரண்டு ஓடும் வெள்ளத்திற்கு நடுவே, தண்ணீரில் மூழ்கிய பாலத்தில் நிறைமாத கர்ப்பிணியான தனது மனைவியை கணவர் துணிச்சலாக காரில் ஏற்றி மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் பதைபதைக்க வைக்கும் வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.

    • நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட முதல் கிராமத்த நாங்கள் இன்னும் சென்றடையவில்லை.
    • சாலியார் ஆறு தனது போக்கை மாற்றியதால் கிராமங்கள் நாசமாக்கப்பட்டன.

    கேரள மாநிலம் வயநாட்டில் 29-ந்தேதி கனமழை பெய்தது. மேக வெடிப்பு காரணமாக கனமழை கொட்டித் தீர்த்ததால் நிலச்சரிவு ஏற்பட்டது. முண்டகை, சூரல்மலை, மேப்பாடி ஆகிய மலைக்கிராமங்கள் இதில் பெரிதும் பாதிக்கப்பட்டன. இந்த நிலச்சரிவில் சிக்கி 270-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மீட்புப்பணி இன்னும் துரிதமாக நடைபெற்று வருகிறது. இதனால் பலி எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த நிலையில் கேரள மாநில ஆளுநர் ஆரிஃப் முகமது கான், நிலச்சரிவு மீட்புப்பணி, பாதிக்கப்பட்ட கிராமங்கள் குறித்து கூறியதாவது:-

    உயிரிழந்தவர்களின் பெரும்பாலான உடல்கள் கிராமத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளன. கிராமங்கள் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டதற்கு காரணம் சாலியார் ஆறுதான். இந்த ஆறு நிலச்சரிவு காரணமாக தனது போக்கை மாற்றியது. இதனால் கிராமத்திற்குள் வெள்ளம் புகுந்து சூறையாடிவிட்டன. இருந்தபோதிலும் நிலச்சரிவால் நாசமான முதல் கிராமத்தை இன்னும் நாங்கள் சென்றடையவில்லை.

    ஏனென்றால் நிலச்சரிவால் பாலம் அடித்துச் செல்லப்பட்டது. ராணுவ பொறியாளர்கள் குழு பெய்லி பிரிட்ஜ் (குறுகிய பாலம்) கட்டிக்கொண்டு வருகிறார்கள். இன்னும் சில மணி நேரங்களில் இந்த பாலம் கட்டும் பணி முடிவடையும். பாலம் கட்டப்படும் வரை சேத அளவை சரியாக மதிப்பிட முடியாது. ஏனென்றால், நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட முதல் இடத்தை நாங்கள் இன்னும் சென்றடையவில்லை.

    முதலில் பாதிக்கப்பட்ட கிராமம் ரிமோட் (நகரத்தில் இருந்து மிகத் தொலையில் எளிதாக தொடர்பு கொள்ள முடியாத தூரத்தில்) கிராமம் கிடையாது. அது மலைப்பகுதி. இருந்தபோதிலும் ரிமோட் கிடையாது. நகரப் பகுதியின் ஒருபகுதி. 100 வருட பழமையாக குடியிருப்புகள் கொண்டது.

    தற்போது மீட்புப்பணி மற்றும் நிவாரணம் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. எல்லோரும் அங்கே அழைத்துச் செல்லப்படுகிறார்கள். ஆறு தன்னுடைய போக்கை மாற்றியுள்ளது. மீண்டும் பழைய இடத்திற்கு போக்கை மாற்றலாம். அதனால் பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமல்ல. ஆற்றங்கரையோரம் உள்ளவர்களும் முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

    இவ்வாறு தெரிவித்தார்.

    மேலும், அமித் ஷா ஏற்கனவே நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுத்ததாக தெரிவித்துள்ளார். ஆனால், கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன், 30-ந்தேதி காலையில்தான் எச்சரிக்கை விடுக்கப்பட்டது எனத் தெரிவித்துள்ளார். இந்த விசயத்தில் ஒருவர் மீது ஒருவர் பழி சுமத்துபோல் தெரிகிறதே? என்ற கேள்விக்கு "இந்த விஷயங்களைக் கணக்கிடுவதற்கு நேற்று நேரம் இல்லை. எனவே அந்தப் பிரச்சினைக்குள் நான் செல்லக்கூடிய நிலையில் இல்லை. நோயாளிகள், அவர்களது உறவினர்களை சந்திக்க, மக்களின் துக்கத்தை பகிர்ந்து கொள்ள வேண்டிய நேரம் இது..

    உள்துறை மந்திரி அமித் ஷா எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக சொல்லிக்கொண்டிருக்கிறார். அதில் சந்தேகம் அடைய எனக்கு எந்த காரணமும் இல்லை" என்றார்.

    • மேப்பாடியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி சிவண்ணன், சபிதா, ஸ்ரேயா ஆகிய 3 பேரும் உயிரிழந்தனர்.
    • மரம் விழுந்ததில் ஜிகிஷ், சுஜிதா, சூரஜ் ஆகிய 3 பேருக்கும் காயம் ஏற்பட்டது.

    வயநாடு:

    வயநாடு நிலச்சரிவு ஏராளமானோரின் உயிரை பலிவாங்கியதோடு மட்டுமல்லாமல், பலரது வாழ்க்கையையும் கேள்விக்குறியாக்கியுள்ளது. இதில் மணப்பெண்ணின் சோகம் சொல்லி மாளாது. அது பற்றிய விவரம் வருமாறு:-

    மேப்பாடியை சேர்ந்தவர் சிவண்ணன். இவருடைய மனைவி சபிதா. இவர்களுக்கு சுருதி, ஸ்ரேயா என 2 மகள்கள். சுருதி கோழிக்கோட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் பணிபுரிந்து வருகிறார். ஸ்ரேயா கட்டப்பனாவில் உள்ள அரசு கல்லூரியில் பட்டப்படிப்பு படித்து வந்தார். மேப்பாடியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி சிவண்ணன், சபிதா, ஸ்ரேயா ஆகிய 3 பேரும் உயிரிழந்தனர். சுருதி தனது உறவினர் வீட்டில் தங்கி இருந்ததால் உயிர் தப்பினார். இதனால் அவர் குடும்பத்தை இழந்து தவித்து வருகிறார்.

    இதுகுறித்து சுருதி கண்ணீர் மல்க கூறும்போது, எனக்கு டிசம்பரில் திருமணம் நடத்த பெற்றோர் திட்டமிட்டு இருந்தனர். இதற்காக ரூ.4½ லட்சம், 15 பவுன் நகைகளை பெற்றோர் சேமித்து வைத்திருந்தனர். இவை அனைத்தும் நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. கடந்த 6 வாரங்களுக்கு முன்பு நாங்கள் புதிய வீட்டில் குடியேறினோம். நிலச்சரிவால் அந்த வீடு இடிந்து விழும் நிலையில் உள்ளது. பெற்றோர், தங்கை இறந்து விட்டதால் எனது வாழ்க்கையே இருண்டு விட்டது என்றார்.

    மற்றொரு சம்பவம்...

    இதேபோல் சூரல்மலையை சேர்ந்தவர் சுஜாதா. இவருடைய மகன் ஜிகிஷ். மருமகள் சுஜிதா. பேரன் சூரஜ், பேத்தி மிருதுளா. இவர்கள் 5 பேரும் வீட்டுக்குள் இருந்தபோது, 30-ம் தேதி அதிகாலை வீட்டு முன்பு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. நிலைமையை உணர்ந்த ஜிகிஷ் தனது குடும்பத்தினரை ஒவ்வொருவராக வீட்டில் இருந்து கயிறு கட்டி வெள்ளத்தை கடந்து சென்றார்.

    அப்போது மரம் விழுந்ததில் ஜிகிஷ், சுஜிதா, சூரஜ் ஆகிய 3 பேருக்கும் காயம் ஏற்பட்டது. இருப்பினும், ஜிகிஷ் மன உறுதியுடன் தனது குடும்பத்தினரை டார்ச் லைட் வெளிச்சத்தில் மேடான பகுதிக்கு அழைத்து சென்று கொண்டிருந்தார்.

    அவர்கள் சென்ற வழியில், எதிரே சற்று தூரத்தில் காட்டு யானைகள் நின்று கொண்டு இருந்தன. இதை பார்த்த ஜிகிஷ் தனது குடும்பத்தினரை அமைதியாக இருக்கும்படி கூறினார். ஒரு புறம் யானைக்கூட்டம், மறுபுறம் காட்டாற்று வெள்ளம். எங்கு சென்றாலும் ஆபத்து காத்திருந்த சூழ்நிலையில், அவர்கள் 5 பேரும் மெதுவாக நகர்ந்து சென்று அங்குள்ள காபி தோட்டத்தில் தஞ்சம் அடைந்தனர். 2 மணி நேரத்துக்கு பின்னர் காட்டு யானைகள் அங்கிருந்து சென்றன.

    இதனால் வெள்ளம் மற்றும் காட்டு யானைகளிடம் இருந்து அந்த குடும்பம் உயிர் தப்பியது குறிப்பிடத்தக்கது.

    • நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் ஆங்காங்கே மான்கள் செத்து கிடந்தன.
    • தொடர் மழையால் ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகமாக உள்ளது.

    வயநாடு:

    கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் முண்டகை, சூரல்மலை, மேப்பாடி ஆகிய கிராமங்களில் கடந்த 30-ம் தேதி அடுத்தடுத்து நிலச்சரிவு ஏற்பட்டது. அத்துடன் காட்டாற்று வெள்ளமும் கரைபுரண்டு ஓடியது. இந்த காட்டாற்று வெள்ளம் வனப்பகுதியையும் விட்டு வைக்கவில்லை. அங்கு காட்டுயானைகள், மான்கள் உள்ளிட்ட வனவிலங்குகளும் அடித்து செல்லப்பட்டன. அவை அருகில் உள்ள சாலியாற்றில் தத்தளித்து சென்றதை உள்ளூர்வாசிகள் பார்த்து உள்ளனர். குறிப்பாக போத்துக்கல் பகுதியில் உள்ள சாலியாற்றில் மான்கள் கூட்டம் அடித்து செல்லப்பட்டது.

    மேலும் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் ஆங்காங்கே மான்கள் செத்து கிடந்தன. அத்துடன் நிலம்பூர் பகுதியில் 3 காட்டுயானைகள் சாலியாற்றில் தத்தளித்து சென்றன.அதில் ஒரு யானை பாறை மீது ஏறி நின்றது. மீதமுள்ள 2 யானைகள் நீந்தி சென்று கரையேறின. இதனால் அவை உயிர் தப்பின.

    இது தவிர திருச்சூர் மாவட்டம் அதிரப்பள்ளி அருகே காலடி தோட்ட பகுதியில் உள்ள சாலக்குடி ஆற்றில் காட்டுயானை ஒன்று செத்து ஒதுங்கி இருப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் வனச்சரகர் மேத்யூ தலைமையிலான வனத்துறையினர் விரைந்து சென்று பார்வையிட்டனர். அப்போது வாழைச்சால் பகுதியில் இரும்பு பாலத்தின் அடியில் காட்டுயானையின் உடல் ஒதுங்கி கிடப்பது தெரியவந்தது.

    இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, தொடர் மழையால் ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகமாக உள்ளது. ஆற்றை கடக்க முயன்ற போதோ அல்லது வெள்ளத்தில் அடித்து வரப்பட்டோ காட்டுயானை இறந்து இருக்கலாம். இறந்த யானைக்கு 15 வயது இருக்கும் என்றனர்.

    • பெய்லி பாலம் அமைப்பதற்காக, டெல்லி, பெங்களூருவில் இருந்து ராணுவத்தின் பொறியியல் பிரிவினர் வரவழைக்கப்பட்டனர்.
    • இந்த பாலம் 24 டன் வரை எடையை தாங்கும் வகையில் அமைக்கப்பட்டது.

    வயநாட்டில் சூரல்மலை, முண்டகை கிராமங்களை இணைக்கும் வகையில், சூரல்மலையில் உள்ள ஆற்றின் குறுக்கே இருந்த பாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. இதனால் கிராமங்கள் துண்டிக்கப்பட்டன. மேலும் நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தொய்வு ஏற்பட்டது. இருப்பினும், கொட்டும் மழைக்கு மத்தியில் ராணுவம், தேசிய பேரிடர் மீட்பு படையினர் கயிறு கட்டி ஆற்றை கடந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

    சூழல்மலை-முண்டகை இடையே போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால், பொக்லைன் உள்ளிட்ட கனரக வாகனங்கள் ஆற்றை கடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து மீட்பு பணியை துரிதப்படுத்தும் வகையில் ஆற்றின் குறுக்கே பெய்லி பாலம் அமைப்பதற்காக, டெல்லி, பெங்களூருவில் இருந்து ராணுவத்தின் பொறியியல் பிரிவினர் வரவழைக்கப்பட்டனர்.

    பெய்லி பாலத்திற்கு தேவையான உபகரணங்கள் டெல்லியில் இருந்து விமானம் மூலம் கண்ணூர் விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது. அங்கிருந்து ராணுவ வாகனங்கள் மூலம் சூரல்மலை பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது. பின்னர் இரவு, பகலாக மழையை பொருட்படுத்தாமல் ஆற்றுக்குள் இறங்கி தற்காலிக இரும்பு பாலத்தை அமைக்கும் பணியில் ராணுவத்தினர் ஈடுபட்டனர்.

    ராணுவத்தின் முயற்சிக்கு பலன் கிடைத்தது. நேற்று மாலை 5.50 மணிக்கு தற்காலிக பெய்லி பாலம் அமைக்கும் பணி நிறைவடைந்தது. இதையடுத்து பெய்லி பாலத்தில் முதல் வாகனமாக ராணுவ மேஜர் ஜெனரல் மேத்யூஸ் தனது வாகனத்தில் சென்றார். தொடர்ந்து ராணுவ வாகனம், பொக்லைன் எந்திரங்கள் பாலத்தில் சென்றன.

    20 மணி நேரத்திற்குள் தற்காலிக பாலத்தை ராணுவத்தினர் வெற்றிகரமாக அமைத்து உள்ளனர். இதன் நீளம் 190 அடியாகும். இந்த பாலம் 24 டன் வரை எடையை தாங்கும் வகையில் அமைக்கப்பட்டது. இதன் மூலம் சூரல்மலை-முண்டகை இடையே மீட்பு பணிக்காக வாகனங்கள் சென்று வருகின்றன.

    • நிலம்பூர் பகுதியில் சாலியாற்றில் மிதந்து வரும் உடல்கள் மீட்கப்பட்டு வருகிறது.
    • 200-க்கும் மேற்பட்டோரை காணவில்லை.

    வயநாடு:

    வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய மீட்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்த அனைத்துக்கட்சி கூட்டம் முதல்-மந்திரி பினராயி விஜயன் தலைமையில் வயநாடு கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு பின்னர் முதல்-மந்திரி பினராயி விஜயன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    வயநாட்டில் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. வயநாடு நிலச்சரிவில் சிக்கி காப்பாற்றப்பட வேண்டிய நபர்கள் அனைவரும் காப்பாற்றப்பட்டு உள்ளதாகவும், இனி அங்கிருந்து மீட்கப்பட வேண்டியவர்கள் இல்லை என்றும் ராணுவத்தினர் தெரிவித்தனர்.

    நிலம்பூர் பகுதியில் சாலியாற்றில் மிதந்து வரும் உடல்கள் மீட்கப்பட்டு வருகிறது. இந்திய ராணுவம் மேற்கொண்ட மீட்பு பணி அளவிட முடியாதது.

    200-க்கும் மேற்பட்டோரை காணவில்லை. முண்டகை, சூரல்மலை பகுதிகளுக்கு தேவையான பொக்லைன் எந்திரங்கள் செல்ல முடியாததால், மண்ணுக்குள் சிக்கிய உடல்களை மீட்க முடியவில்லை.

    இப்போது நாம் மிகவும் கவனிக்க வேண்டிய விஷயம், பாதிக்கப்பட்ட மக்களின் எதிர்கால வாழ்க்கை குறித்து செய்ய வேண்டிய செயல்களே ஆகும். அதனை அரசு பொறுப்புடன் மேற்கொள்ளும்.

    இந்த பகுதியில் சூழ்நிலை சரியில்லாத காரணத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ முன்வருபவர்கள் நேரடியாக வயநாடு வர வேண்டாம். இந்த பேரழிவை தேசிய பேரிடராக மத்திய அரசு அறிவிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக முதல்-மந்திரி பினராயி விஜயன் கோழிக்கோட்டில் இருந்து விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் வயநாட்டிற்கு வந்தார். அப்போது ஹெலிகாப்டரில் இருந்தபடி வயநாட்டில் நிலச்சரிவு, வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட்டார். மேலும் அவர் மேப்பாடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.

    இதையடுத்து முதல்-மந்திரி பினராயி விஜயன் மேப்பாடி, சூரல்மலை பகுதிகளுக்கு சென்று மீட்பு பணிகளை பார்வையிட்டார். அங்கு பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து பேசினார். பின்னா் சூரல்மலையில் அமைக்கப்பட்ட பெய்லி பாலத்தை பார்வையிட்டார். மேலும் நடந்து வரும் மீட்பு பணிகள் குறித்து ராணுவ அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

    • வயநாட்டில் பாதிக்கப்பட்ட மக்களின் துயர் துடைக்கும் வகையில் பல்வேறு தரப்பினரும் உதவிக்கரம் நீட்டி வருகிறார்கள்.
    • நடிகை ஜோதிகா, நடிகர் கார்த்தி மற்றும் நடிகர் சூர்யா ஆகியோர் ரூ. 50 லட்சம் கேரள முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கி உள்ளார்கள்.

    சென்னை:

    கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஏராளமானோர் உயிரிழந்து உள்ளனர். வயநாட்டில் பாதிக்கப்பட்ட மக்களின் துயர் துடைக்கும் வகையில் பல்வேறு தரப்பினரும் உதவிக்கரம் நீட்டி வருகிறார்கள்.

    இந்தநிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் ரூ.25 லட்சம் நிதியை, கேரள முதல்-மந்திரி பேரிடர் நிவாரண நிதிக்கு வழங்கி இருக்கிறார்.

    முன்னதாக, பெருந்துயரில் பங்கேற்கும் வகையில் கேரளா நிலச்சரிவு நிவாரண பணிகளுக்காக, நடிகை ஜோதிகா, நடிகர் கார்த்தி மற்றும் நடிகர் சூர்யா ஆகியோர் ரூ. 50 லட்சம் கேரள முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கி உள்ளார்கள். நடிகர் விக்ரம் ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்கி உள்ளார்.

    தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக இருக்கும் ராஷ்மிகா மந்தனா, கேரள முதலமைச்சரின் பேரிடர் நிவாரண நிதிக்கு ரூ. 10 லட்சம் வழங்கி உள்ளார்.

    • இந்த குக்கிராமத்தில் 118 குடும்பத்தினர் வசித்து வந்ததாக கூறப்படுகிறது.
    • நிலச்சரிவுடன் ஆர்ப்பரித்து வந்த காட்டாற்று வெள்ளம் அந்த குக்கிராமத்தை மண்ணோடு மண்ணாக மூடியது.

    வயநாடு:

    கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் முண்டகை, சூரல்மலை மற்றும் மேப்பாடி ஆகிய கிராமங்களில் கடந்த 30-ம் தேதி பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கி நூற்றுக்கணக்கானோர் பலியாகினர். இன்னும் பலர் காணாமல் போயினர். அவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது.

    இதற்கிடையில் அந்த கிராமங்கள் தவிர அதை சுற்றி இருந்த ஒரு சில குக்கிராமங்களும் நிலச்சரிவில் சிக்கி இருந்த இடம் தெரியாத அளவிற்கு சிதைந்து போயுள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

    அதில் ஒன்றுதான், பூஞ்சிரித்தோடு குக்கிராமம். இது முண்டகை கிராமத்தில் இருந்து சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவில் மலைபாங்கான இடத்தில் அமைந்து இருந்தது. இந்த குக்கிராமத்தில் 118 குடும்பத்தினர் வசித்து வந்ததாக கூறப்படுகிறது. ஒரே நாள் இரவில் அந்த குக்கிராமம் காணாமல் போனது. நிலச்சரிவுடன் ஆர்ப்பரித்து வந்த காட்டாற்று வெள்ளம் அந்த குக்கிராமத்தை மண்ணோடு மண்ணாக மூடியது.

    அங்கு வசித்து வந்த மக்களின் நிலை என்ன? என்பது தெரியவில்லை. தமிழ் சினிமாவில் அஜித்குமார் நடித்த சிட்டிசன் திரைப்படத்தில் அத்திப்பட்டி என்ற கிராமம் காணாமல் போனது போல காட்சி அமைக்கப்பட்டு இருக்கும். அந்த அத்திப்பட்டியை நினைவூட்டுவது போல பூஞ்சிரித்தோடு கிராமமும் அழிந்து போயிருக்கலாம் என்று அக்கம்பக்கத்து ஊரை சேர்ந்தவர்கள் தெரிவித்தனர்.

    • மீட்பு பணிகள் நான்காம் நாளை எட்டியது.
    • தேசிய பேரிடராக அறிவிக்க கோரிக்கை விடுக்கப்படுகிறது.

    கேரளா மாநிலம் வயநாட்டில் கடந்த 29 ஆம் தேதி கொட்டித்தீர்ந்த கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டது. நள்ளரிவு வேளையில் அனைவரும் உறங்கிக் கொண்டிருந்த போது அடுத்தத்தடுத்து நிலச்சரிவு ஏற்பட்டதில் பலநூறு குடும்ங்களை சேர்ந்தவர்கள் மண்ணில் புதைந்து போயினர்.

    வீடுகள் இடிந்து விழுந்தும், மரங்கள் வேறோடு சாய்ந்தும், தொடர் கனமழை போன்ற காரணங்களால் மீட்பு பணிகள் இன்னமும் முடிவுக்கு வராத சூழல் நிலவுகிறது. இன்று நான்காம் நாளை எட்டிய மீட்பு பணிகளில் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 316-ஐ கடந்துள்ளது.

     


    மேலும், நிலச்சரிவில் புதைந்தவர்களை தேடுவதற்கு தெர்மல் ஸ்கேனர் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தெர்மல் ஸ்கேனர் கொண்டு தேடும் போது சேறு, சகதிகளில் யாரேனும் சிக்கி இருந்தால் அதனை ஸ்கேனர் காட்டிக் கொடுக்கும்.

    நிலச்சரிவில் உயிரிழந்தவர்கள் உடல் பாகங்கள் சிதைந்து இருப்பது, மண்ணோடு மண்ணாக பலர் புதைந்து உயிரை பறிக் கொடுத்தது, உறக்கத்தில் பலர் உயிரைவிட்டது என வயநாடு முழுக்க மரண ஓலம் ஓங்கி ஒலிக்கிறது. இந்த நிலையில், இந்த இயற்கை அசம்பாவிதத்தை தேசிய பேரிடராக அறிவிக்கவும் கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

    ×