search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "work intensity"

    • தமிழக - கேரள எல்லையில் உள்ள கிராமங்களில், கால்நடைத்துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • கால்நடை வளர்ப்போரிடம் நோய் பாதிப்பின் தன்மை, சிகிச்சை முறை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

    உடுமலை:

    கேரளாவில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் பரவி வருகிறது. இதனைத் தடுக்க கேரள அரசு நோய் தடுப்பு மருந்துகளைப் பயன்படுத்தி வருகிறது. இந்த நோயின் தாக்கம் தமிழகத்தில் பரவ வாய்ப்புள்ளது.

    இதனால் திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே தமிழக - கேரள எல்லையில் உள்ள கிராமங்களில், கால்நடைத்துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கால்நடை டாக்டர், ஆய்வாளர் மற்றும் உதவியாளர் அடங்கிய குழுவினர் கல்லாபுரம், மானுப்பட்டி, கோடந்தூர், தளிஞ்சி, ஜல்லிப்பட்டி, செல்லப்பம்பாளையம், வாளவாடி உள்ளிட்ட பகுதிகளுக்கு நேரடியாகச் சென்று கால்நடைகளைக் கண்காணிக்கின்றனர்.

    மேலும் இனிவரும் நாட்களில் ஏதேனும் நோய் பாதிப்பு கண்டறியப்பட்டால் உடனே அருகில் உள்ள கால்நடை டாக்டரை அணுகி சிகிச்சை பெற கால்நடை வளர்ப்போரிடம் அறிவுறுத்தி வருகின்றனர்.

    இதுகுறித்து கால்நடைத்துறை உதவி இயக்குனர் ஜெயராம் கூறியதாவது:-

    மாநில எல்லை கிராமங்களில் உள்ள கால்நடைகளுக்கு கோமாரி நோய் பாதிப்பு கிடையாது. இருப்பினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிராமங்களில் உள்ள கால்நடைகள் கண்காணிக்கப்படுகிறது.

    கால்நடை வளர்ப்போரிடம் நோய் பாதிப்பின் தன்மை, சிகிச்சை முறை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. தமிழகத்தில் இருந்தே கேரளாவுக்கு கால்நடைகள் கொண்டு செல்லப்படுகின்றன. கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு கால்நடைகள் பெருமளவு கொண்டு வரப்படுவதில்லை. இருப்பினும் ஒன்பதாறு சோதனைச்சாவடியில் கேரளாவில் இருந்து வரும் வாகனங்கள் கண்காணிக்கப்பட்டு சுகாதார நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

    • இளம்பிள்ளை பஸ் நிலையம் வெளிப்பகுதியில் உள்ள சாலையின் இரு புறமும் 100-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன.
    • கடை உரிமையாளர்கள் கடைகள் முன்புறம் உள்ள சாலையை ஆக்கிரமிப்பு செய்து சிமெண்ட் அட்டைகள் அமைத்தும், சிமெண்ட் தளங்கள் அமைத்தும் ஆக்கிர மிப்பு செய்து இருந்தனர்.

    காகாபாளையம்:

    சேலம் அருகே உள்ள இடங்கணசாலை நகராட் சிக்கு உட்பட்ட இளம்பிள்ளை பஸ் நிலையம் வெளிப்பகுதியில் உள்ள சாலையின் இரு புறமும் 100-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன.

    இந்த நிலையில் கடை உரிமையாளர்கள் கடைகள் முன்புறம் உள்ள சாலையை ஆக்கிரமிப்பு செய்து சிமெண்ட் அட்டைகள் அமைத்தும், சிமெண்ட் தளங்கள் அமைத்தும் ஆக்கிர மிப்பு செய்து இருந்தனர். இதனால் தினமும் இளம்பிள்ளையில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. இந்த விஷயம் சேலம் நெடுஞ்சாலை துறை அதிகாரிகளின் கவனத்துக்கு வந்தது.

    இதையடுத்து அதிகாரிகள், அங்கு நேற்று ஆக்கிரமிப்பு களை அகற்றும் நடவ டிக்கையை தொடங்கினர். ஜே.சி.பி எந்திரம் கொண்டு ஆக்கிரமிப்புகளை அகற்றி வருகிறார்கள். தொடர்ந்து இன்று 2-வது நாளாக ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகள் அங்கு தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    இதனால் இளம்பிள்ளை பஸ் நிலைய பகுதி பரபரப்பாக காணப்படுகிறது. இதையொட்டி மகுடஞ்சாவடி போலீசார் பாதுகாப்பு பணி யில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • சித்திரை திருவிழா 23-ந்தேதி தொடங்குவதால் மதுரை வைகை ஆற்றில் முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
    • தடுப்பணைகளால் விபத்து அபாயம் ஏற்படும்.

    மதுரை

    மதுரை மீனாட்சி -சுந்தரேசுவரர் கோவிலில் ஆண்டு முழுவதும் திருவிழாக்கள் நடப்பது வழக்கம். இதில் குறிப்பிடக்தக்கது சித்திரை பெருவிழா. 12 நாட்கள் நடக்கும். விழாவின்போது மதுரை நகரமே விழாக்கோலம் பூண்டிருக்கும்.

    இந்த ஆண்டு வருகிற 23-ந்தேதி கொடியேற்றத்து டன் விழா தொடங்குகிறது. மே 5-ந்தேதி முத்திரை பதிக்கும் கள்ளழகர் வைகையாற்றில் இறங்கும் வைபவம் நடக்க உள்ளது.

    அழகர் கோவிலில் இருந்து தங்க குதிரையில் புறப்பட்டு வரும் கள்ளழகர், வைகை ஆற்றில் இறங்கு வார். இந்த நிகழ்வை கண்டு களிப்பதற்காக மதுரை மட்டுமின்றி அண்டை மாவட்டங்களில் இருந்தும் லட்சக்கணக்கானோர் வைகையாற்று பகுதியில் திரளுவார்கள்

    இதனை முன்னிட்டு கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்க உள்ள ஆழ்வார்புரம் உள்ளிட்ட பகுதிகளில் தூய்மை பணிகள் முழு வீச்சில் முடுக்கி விடப்பட்டு உள்ளன. அங்கு குப்பை குளங்களை அகற்றும்பணி நடந்து வருகிறது.

    சித்திரை திருவிழா நெருங்குவதை முன்னிட்டு மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சி நிர்வாகமும் ஒருங்கிணைந்து முன்னேற்பாடு பணிகளை தீவிரமாக செய்து வருகிறது.

    வைகை ஆற்றில் சமீபத்தில் தடுப்பணைகள் கட்டப்பட்டு உள்ளன. ஆனால் இது இன்னமும் தூர்வாரப்படவில்லை. கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வை காண பக்தர்கள் வைகையின் இருபுறமும் திரண்டு வருவது வழக்கம். அப்போது மக்கள் வெள்ளம் 6 அடி உயர தடுப்பணை அருகே சென்றால், தண்ணீருக்குள் சிக்கிக்கொள்ளும் அபாயம் உள்ளது. அதுவும் தவிர வைகை ஆற்றின் படித்துறைகள் முற்றிலும் சேதமடைந்து உள்ளது.

    எனவே அங்கு பிளாஸ்டிக் குப்பைகள் மலை போல தேங்கி கிடக்கிறது. வைகை ஆற்றில் கள்ளழகரை காண வரும் பக்தர்கள், மொட்டையடித்து ஆற்றில் நீராடுவார்கள். அப்போது ஆற்றின் படிகள் சிதிலமடைந்து இருப்பதன் காரணமாக அதனை அறியாமல் பக்தர்கள் ஆபத்தை சந்திக்க நேரிடும். எனவே வைகை ஆற்றில் தண்ணீர் திறக்கும் முன்பாக ஆற்றை சுத்தம் செய்து தூர்வார வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

    • விழுப்புரம் அருகே மேல்பாதி கிராம கோவிலில் 60 ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் திருவிழாவிற்கு பந்தல் அமைக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
    • பொய்கால் குதிரை, செண்டி மேளம், உறுமி மேளம் மற்றும் இன்னிசைக் கச்சேரி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கிறது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் அருகே மேல்பாதி கிராமத்தில், வருகிற 2-ந் தேதி, 60 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் கோவில் திருவிழா நடைபெறுகிறது. விழுப்புரம் அடுத்த மேல்பாதி கிராமத்தில், பழமைவாய்ந்த ஸ்ரீதர்ம ராஜா ஸ்ரீதிரவுபதியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், ஆண்டு தோறும் பங்குனி உத்திர திருவிழா நடைபெறுவது வழக்கம். அத்துடன் 60 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் பாரம்பரியம் மிகுந்த தர்மராஜா பட்டாபிஷேக வீதியுலா வருகிற 2-ந் தேதி நடைபெற உள்ளது. விழாவையொட்டி, கடந்த 23-ந் தேதி துவங்கி, அரிசிகவுண்டன் பாளையம் நாகரத்தினம், பாரத சொற்பொழிவு ஆற்றி வருகிறார். தொடர்ந்து வரும் 1-ந் தேதி காலை அக்னி பூஜை, கலச ஸ்தாபனம், பூர்ணாஹூதி, மாலை கும்ப பூஜை, காப்பு கட்டுதல் நடக்கிறது. மறுநாள் (2-ந் தேதி) காலை 6 மணிக்கு தர்மராஜா பட்டாபிஷேக பூஜையும், 7 மணிக்கு பட்டாபிஷேக மங்கள ஆரத்தி தச தானம் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

    இதையொட்டி, கிராமத் தில் வீதியுலா நடைபெறும் முக்கிய வீதிகள் தோறும் பச்சைகீற்று (தென்னை ஓலை) பந்தல் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும், அலங்கரிக் கப்பட்ட யானைகள், குதிரைகள் ஊர்வலம், கரகாட்டம், மயிலாட்டம், புலி ஆட்டம், பொய்கால் குதிரை, செண்டி மேளம், உறுமி மேளம் மற்றும் இன்னிசைக் கச்சேரி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை ஊராட்சி மன்ற தலைவர் மணிவேல், விழா குழுவினர்கள் சீதாராமன், சுப்பிரமணியன், சக்திவேல், தனபால், ராமகிருஷ்ணன், இளையரசன், தயாநிதி கோவில் நிர்வாகத்தினர், தாளாளர் மகாதேவன் அம்மன் கருணாநிதி பிரஸ் குமரன் அரவிந்த் செராமிக்ஸ் சரவணன் கிராம இளைஞர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

    ×