என் மலர்
நீங்கள் தேடியது "அமமுக"
- வட மாவட்டங்களில் உள்ள பல கிராமங்களை சூழ்ந்து பொதுமக்களின் வாழ்வாதாரத்தை கடுமையாக பாதிப்படையச் செய்துள்ளது.
- முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவதே கனமழை பாதிப்பிலிருந்து பொதுமக்களை பாதுகாக்க ஒரே வழியாக அமையும்.
சென்னை:
அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதளப் பதிவில் கூறி இருப்பதாவது:-
தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் தொடரும் கனமழையால் முறையான முன்னறிவிப்புக்கு பின்னரே அணைகள் திறக்கப்படுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.
தென்கிழக்கு வங்கக் கடலில் உருவாகியிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியின் காரணமாக நேற்று இரவு முதல் தற்போது வரை தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் சூறைக்காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ஏற்கனவே, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், திருவண்ணாமலை என பல மாவட்டங்களில் ஃபெஞ்ஜல் புயல் ஏற்படுத்திய தாக்கத்தில் இருந்து மீண்டு வராத நிலையில், கனமழை நீடிக்கும் என்ற தற்போதைய வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கை அம்மாவட்ட மக்கள் மத்தியில் அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், எந்தவித முன்னறிவிப்பின்றி கடந்த சில நாட்களுக்கு முன்பாக சாத்தனூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட ஒரு லட்சத்திற்கும் அதிகமான கன அடி நீரால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, வட மாவட்டங்களில் உள்ள பல கிராமங்களை சூழ்ந்து பொதுமக்களின் வாழ்வாதாரத்தை கடுமையாக பாதிப்படையச் செய்துள்ளது.
மழை பாதிப்புக்கு பின்பு, வரலாறு காணாத மழை, கணித்ததை விட அதிகளவிலான மழைப்பொழிவு என காரணத்தை தேடாமல், வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையை பின்பற்றி முறையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவதே கனமழை பாதிப்பிலிருந்து பொதுமக்களை பாதுகாக்க ஒரே வழியாக அமையும்.
எனவே, ஆற்றங்கரையோரம், தாழ்வான பகுதிகள் மற்றும் மலைப்பகுதிகளில் வசிக்கும் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதோடு, முறையான எச்சரிக்கைக்கு பின்னரே அணைகளில் இருந்து நீர் திறக்கப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- கொண்டாட்ட மனநிலையில் இருக்கும் தங்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் என தேர்வர்களும், தேர்வர்களின் பெற்றோர்களும் கருதுகின்றனர்.
- இரு தேர்வுகளையும் வேறு ஒரு தேதிக்கு மாற்றியமைக்க வேண்டும் என மத்திய அரசையும், இந்திய பட்டயக் கணக்காளர்கள் நிறுவனத்தையும் (ICAI) வலியுறுத்துகிறேன்.
சென்னை :
அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 14 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரையிலான மூன்று நாட்களும் தமிழகம் முழுவதும் தைத் திருநாள் பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படும் நிலையில், ஜனவரி 14 மற்றும் 16 ஆகிய தேதிகளில் இந்திய பட்டயக் கணக்காளர்களின் நிறுவனத்தின் (ICAI) சிஏ பவுண்டேசன் தேர்வுகள் நடைபெற இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
நாட்டின் முக்கியமான தேர்வுகளில் ஒன்றாக கருதப்படும் சிஏ தேர்வுகள் தமிழகத்தில் 28 மையங்களில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், அத்தேர்வுகளுக்கு இடைவிடாது தயாராகிக் கொண்டிருக்கும் தேர்வர்களுக்கு, தேர்வுகள் நடைபெறும் தேதி அட்டவணை அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
ஒட்டுமொத்த தமிழக மக்களின் தனிப்பெரும் திருவிழாவான பொங்கல் பண்டிகை நாட்களில் தேர்வுகள் நடைபெறுவது, கொண்டாட்ட மனநிலையில் இருக்கும் தங்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் என தேர்வர்களும், தேர்வர்களின் பெற்றோர்களும் கருதுகின்றனர்.
எனவே, தமிழர்களின் திருநாளான பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட ஏதுவாக, தேர்வர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரின் கோரிக்கையை ஏற்று 2025 ஆம் ஆண்டு ஜனவரி 14 மற்றும் 16 ஆகிய தேதிகளில் நடைபெறும் இரு தேர்வுகளையும் வேறு ஒரு தேதிக்கு மாற்றியமைக்க வேண்டும் என மத்திய அரசையும், இந்திய பட்டயக் கணக்காளர்கள் நிறுவனத்தையும் (ICAI) வலியுறுத்துகிறேன்.
- டி.டி.வி. தினகரன் தலைமையிலான அ.ம.மு.க.வும் தேர்தலை எதிர்கொள்ள ஆயத்தமாகி வருகிறது.
- சென்னை அடையாறில் உள்ள அலுவலகத்தில் அ.ம.மு.க. நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
சென்னை:
தமிழகத்தில் 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை சந்திக்க அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன.
டி.டி.வி. தினகரன் தலைமையிலான அ.ம.மு.க.வும் தேர்தலை எதிர்கொள்ள ஆயத்தமாகி வருகிறது. இதை தொடர்ந்து சென்னை அடையாறில் உள்ள அலுவலகத்தில் அ.ம.மு.க. நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத் தில் துணை பொதுச் செயலாளர்களான முன்னாள் அமைச்சர்கள் செந்தமிழன், சண்முகவேல் மற்றும் ரங்கசாமி, கோமுகி மணியன் உள்பட தலைமை கழக நிர்வாகிகள், மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் பேசிய டி.டி.வி. தினகரன் உள்ளாட்சி தேர்தல் மற்றும் சட்டமன்ற தேர்தலை எதிர் கொள்ள கட்சியினர் தயாராக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். பாராளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணியில் இடம்பெற்றிருந்த டி.டி.வி. தினகரன் வருகிற சட்டமன்ற தேர்தலிலும் பா.ஜ.க. கூட்டணியிலேயே இணைந்து தேர்தலை சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- உலகெங்கிலும் பரந்து விரிந்திருக்கும் மீனவ சமுதாய மக்களின் வாழ்க்கையைப் போற்றும் விதமாக கொண்டாடப்படும் உலக மீனவர்கள் தினம் இன்று.
- மீனவர்களின் மீன்பிடி உரிமைகளை மீட்டிடவும், அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திடவும் இந்நாளில் அனைவரும் உறுதியேற்போம்.
சென்னை:
அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் எக்ஸ் வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
உலகெங்கிலும் பரந்து விரிந்திருக்கும் மீனவ சமுதாய மக்களின் வாழ்க்கையைப் போற்றும் விதமாக கொண்டாடப்படும் உலக மீனவர்கள் தினம் இன்று.
மழை, புயல் போன்ற இயற்கை பேரிடர்களாலும், இலங்கை கடற்படையினரின் அத்துமீறல்களாலும் மிகுந்த இன்னல்களுக்குள்ளாகி வரும் தமிழக மீனவர்களின் மீன்பிடி உரிமைகளை மீட்டிடவும், அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திடவும் இந்நாளில் அனைவரும் உறுதியேற்போம்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
- சட்டம்-ஒழுங்கு சீர்கேடுகளை களைய தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
- பொதுமக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் ரவுடிகள் கலாச்சாரத்தை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்.
சென்னை:
அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது:-
சென்னை திருவொற்றியூர் சன்னதி தெருவில் பெண் பழ வியாபாரியை மாமூல் தர மறுத்ததாக கூறி கொடூரமாக கொலை செய்த ரவுடி, அதனை தடுக்க முயன்ற பெண்ணின் கணவரை தாக்கியதில் அவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
காவல்துறையை சுதந்திரமாக செயல்பட அனுமதித்து சந்திசிரிக்கும் சட்டம்-ஒழுங்கு சீர்கேடுகளை களைய தேவையான நடவடிக்கைகளை எடுப்பதோடு, பொதுமக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் ரவுடிகள் கலாச்சாரத்தை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- எந்தவித நடவடிக்கையும் எடுக்காத சுகாதாரத்துறையின் அலட்சியப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது.
- 24 மணி நேரமும் சுழற்சி முறையில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் இருப்பதை சுகாதாரத்துறை உறுதி செய்ய வேண்டும்.
சென்னை:
அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் இதுவரை 8 பேர் உயிரிழந்திருப்பாக நாளிதழ்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன.
தமிழகத்தில் டெங்கு காய்ச்சலுடன் பருவகால தொற்றுநோய்களும் தீவிரமடைந்து பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில், அதனை தடுக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்காத சுகாதாரத்துறையின் அலட்சியப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது.
காய்ச்சல், சளி, தலைவலி, உடல் சோர்வு, வாந்தி, மயக்கம் போன்ற டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறிகளோடு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் தொடங்கி அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் இருப்பதை சுகாதாரத்துறை உறுதி செய்ய வேண்டும்.
அடுத்த சில மாதங்களுக்கு டெங்கு காய்ச்சலின் தாக்கம் அதிகரிக்கும் என கூறப்படும் நிலையில், தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறிகள் குறித்தும், அதற்காக மேற்கொள்ள வேண்டிய சிகிச்சை முறைகள் குறித்தும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய அவசியமும் தற்போது ஏற்பட்டுள்ளது.
எனவே, இனியாவது விளம்பர அரசியலை தவிர்த்து, மக்களை பெருமளவு பாதிக்கும் டெங்கு காய்ச்சலை தடுக்கும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உயிரிழப்புகளை தடுப்பதோடு, பொதுமக்களுக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு தொடர்பான விழிப்புணர்வுகளை ஏற்படுத்த முன்வர வேண்டும் என சுகாதாரத்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- மதுக்கடையை மீண்டும் மூடுவது குறித்து மாவட்ட கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.
- போலீசாருக்கும் அ.ம.மு.க.வினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
திருச்சி:
திருச்சி உறையூர் லிங்கநகர் பகுதியில் கடந்த 2012-ம் ஆண்டு டாஸ்மாக் மதுக்கடை செயல்பட்டு வந்தது. இந்த கடையை மூடக்கோரி அப்போது மக்கள் போராட்டம் நடத்தினர். இதன்காரணமாக அந்த கடை மூடப்பட்டது. இந்த நிலையில் சமீபத்தில் அந்த மது கடை மீண்டும் திறக்கப்பட்டதாக தெரிகிறது.
இதையடுத்து மதுக்கடையை மீண்டும் மூடுவது குறித்து மாவட்ட கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது. அதற்கு நடவடிக்கை எடுக்கப்படாததால் திருச்சி மாநகர் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழக உறையூர் பகுதி செயலாளர் கல்நாயக் சதீஸ்குமார் தலைமையில் லிங்கநகர் மதுபான கடை அருகே ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடத்த முயன்றனர்.
மாநகர் மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். இந்த போராட்டத்துக்கு போலீசார் அனுமதிக்காததால் மக்களை கலைந்து போகும்படி தெரிவித்தனர். இதனால் போலீசாருக்கும் அ.ம.மு.க.வினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
பின்பு மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் உள்பட 100-க்கும் மேற்பட்ட அனைவரையும் போலீசார் கைது செய்து உறையூர் கைத்தறி திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். அங்கும் சிறிது நேரம் கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இந்த உண்ணாவிரத ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட நிர்வாகிகள் அவைத்தலைவர் சாத்தனூர் ராமலிங்கம், தன்சிங், ராமமூர்த்தி, வண்ணை லதா, ஹேமலதா, பகுதி செயலாளர்கள் கல்நாயக் சதீஷ்குமார், கமுருதீன், முன்னாள் கவுன்சிலர் கதிரவன், மதியழகன், கருப்பையா, உமாபதி, ஒன்றிய செயலாளர்கள் இளங்கோவன்,
குப்புசாமி, சங்கர் பாலன், அணி செயலாளர்கள் பெஸ்ட் பாபு, நாகநாதர் சிவகுமார், தண்டபாணி, வக்கீல் பிரகாஷ், ஜான் கென்னடி, என்.எஸ். தருண், சாந்தா, நாகூர் மீரான், நல்லம்மாள், கல்லணை குணா, மலைக்கோட்டை சங்கர், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள், மற்றும் கழக மாவட்ட, பகுதி, ஒன்றிய, வட்ட, கிளை கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால் விழி பிதுங்கி நிற்கும் ஏழை, எளிய மக்களுக்கு மீளவே முடியாத அளவிற்கு பேரிடியாக அமைந்துள்ளது.
- பல நிறுவனங்கள் மூடப்படும் சூழலுக்கு தள்ளப்பட்டிருப்பதாக தொழில் கூட்டமைப்பினர் வேதனை தெரிவிக்கின்றனர்.
சென்னை:
அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள பதிவில்,
திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பின்பு பொதுமக்களின் கடும் எதிர்ப்புகளை மீறி, கடந்த 2022 ஆம் ஆண்டு 30 சதவிகிதமும், 2023 ஆம் ஆண்டு 2.18 சதவிகிதமும் மின் கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில், தற்போது நடப்பாண்டில் மீண்டும் 4.83 சதவிகிதம் அளவிற்கு மின்கட்டணத்தை உயர்த்தியிருக்கிறது.
அண்மையில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலின் போதே மின்கட்டணம் உயர்த்தப்படுவதாக வெளியான செய்திகளை மறுத்த திமுக அரசு, தேர்தலுக்கு பின்பு மின் கட்டணத்தை உயர்த்தி பொதுமக்களின் மீது கூடுதல் நிதிச் சுமையை ஏற்றியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக வழங்கிய தேர்தல் அறிக்கையில் 221-வதாக இடம்பெற்றிருக்கும் மாதம் தோறும் மின் கணக்கீடு என்ற வாக்குறுதியை நிறைவேற்ற எவ்வித நடவடிக்கையும் எடுக்காத திமுக அரசின் இந்த மின் கட்டண உயர்வு அறிவிப்பு, ஏற்கனவே அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால் விழி பிதுங்கி நிற்கும் ஏழை, எளிய மக்களுக்கு மீளவே முடியாத அளவிற்கு பேரிடியாக அமைந்துள்ளது.
மின்சார நிலைக்கட்டணம் மற்றும் உச்ச நேர மின் கட்டண உயர்வால் பல்வேறு சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் ஏற்கனவே மூடப்பட்ட நிலையில், தொடர்ந்து அதிகரிக்கப்பட்டுள்ள மின்கட்டணத்தால் மேலும் பல நிறுவனங்கள் மூடப்படும் சூழலுக்கு தள்ளப்பட்டிருப்பதாக தொழில் கூட்டமைப்பினர் வேதனை தெரிவிக்கின்றனர்.
எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது, மின் கட்டணத்தை கடுமையாக உயர்த்தி ஏழை, எளிய மக்களின் வாழ்வை இருளில் மூழ்கச் செய்ததாக பழனிசாமி அரசாங்கத்தை விமர்சனம் செய்த மு.க.ஸ்டாலின், முதலமைச்சரான பின் அதே தவறை வருடந்தோறும் இழைத்து வருவது தமிழக மக்களுக்கு செய்யும் மிகப்பெரிய துரோகம் ஆகும்.
எனவே, மின் நுகர்வோர்களுக்கு கடுமையான நிதிச்சுமையை ஏற்படுத்தும் மின்கட்டண உயர்வு தொடர்பான அறிவிப்பை உடனடியாக திரும்பப் பெறுவதோடு, மின்வாரியம் மூலம் மின் உற்பத்தியை பெருக்குவதற்கு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
- இந்திய அரசியலை வழிநடத்திய கிங்மேக்கர், கல்விக்கண் திறந்த மேதை, பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்த நாள் இன்று.
- தன் வாழ்நாள் முழுவதையும் நாட்டு மக்களுக்காகவே அர்ப்பணித்த பெருந்தலைவர் காமராஜர்.
சென்னை:
பெருந்தலைவர் காமராஜரின் 122-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
தமிழகத்திற்கென தனிப்பெருமையை தேடித் தந்த பெருந்தலைவர், இந்திய அரசியலை வழிநடத்திய கிங்மேக்கர், கல்விக்கண் திறந்த மேதை, பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்த நாள் இன்று.
எளிமை, தூய்மை, நேர்மை எனும் தாரக மந்திரத்தை அடிப்படையாக கொண்டு தன் வாழ்நாள் முழுவதையும் நாட்டு மக்களுக்காகவே அர்ப்பணித்த பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பெருமையையும் புகழையும் அவர் பிறந்த இந்நன்னாளில் போற்றிக் கொண்டாடுவோம் என்று கூறியுள்ளார்.
- அடுத்தடுத்து நடைபெறும் இதுபோன்ற துயரச் சம்பவங்கள் திமுக அரசின் மக்கள் மீதான அக்கறையின்மையையும், காவல்துறையின் பொறுப்பற்றத் தன்மையையுமே வெளிப்படுத்துகின்றன.
- உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்கிடுமாறு தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
சென்னை:
அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள பூரிகுடிசை எனும் கிராமத்தில் புதுச்சேரியில் இருந்து கடத்திவரப்பட்ட சாராயத்தை அருந்தியவர்களில் 7 பேர் உடல்நலக்குறைவு காரணமாக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
தமிழகத்தையே உலுக்கிய கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்களின் சுவடு மறைவதற்குள்ளாகவே, புதுச்சேரி மலிவு விலை சாராயத்தை அருந்தியவர்கள் பாதிக்கப்பட்டிருப்பதன் மூலம் சாராய விற்பனையை தடுக்கவோ, கட்டுப்படுத்தவோ தமிழக அரசு எந்தவித நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்பது தெள்ளத் தெளிவாகிறது.
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூரை அடுத்த டி.குமாரமங்கலத்தைச் சேர்ந்த ஒருவர் கடந்த சில தினங்களுக்கு முன்பாக இதே புதுச்சேரி சாராயத்தை அருந்தி உயிரிழந்ததாக வந்த செய்தியை மூடி மறைக்க முயன்ற திமுக அரசு, அதனை தடுக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்காததன் விளைவே இன்று மேலும் பலர் பாதிக்கப்பட்டிருப்பதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு வரும் நிலையில், அடுத்தடுத்து நடைபெறும் இதுபோன்ற துயரச் சம்பவங்கள் திமுக அரசின் மக்கள் மீதான அக்கறையின்மையையும், காவல்துறையின் பொறுப்பற்றத் தன்மையையுமே வெளிப்படுத்துகின்றன.
எனவே, இனியும் இது போன்று அலட்சியப் போக்குடன் செயல்படாமல் புதுச்சேரியில் இருந்து கடத்தி வரப்படும் சாராயத்தை தடுக்க எல்லைக் கண்காணிப்பை தீவிரப்படுத்துவதோடு, உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்கிடுமாறு தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- தமிழகத்தில் இதுபோன்று அடிக்கடி நடைபெறும் கொலைச் சம்பவங்கள் மக்கள் மத்தியில் பதற்றமான சூழலை ஏற்படுத்தியுள்ளது.
- தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பின் கொலை, கொள்ளை போன்ற சம்பவங்கள் நடைபெறாத நாட்களே இல்லை.
சென்னை:
அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழகத்தில் நாள்தோறும் அரங்கேறும் சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளை வேடிக்கை பார்க்கும் திமுக அரசின் அலட்சியப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது.
ஒடுக்கப்பட்ட மக்களின் கல்வி மற்றும் பொருளாதார வளர்ச்சிக்காக தொடர்ந்து பாடுபட்டு வந்த பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங், பெரம்பூரில் உள்ள அவரது இல்லம் முன்பாக கூலிப்படை கும்பலால் சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டிருக்கும் செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.
ஆம்ஸ்ட்ராங்கை இழந்துவாடும் குடும்பத்தினருக்கும், பகுஜன் சமாஜ் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
தேசிய அளவில் அங்கீகரிக்கப்பட்ட கட்சியின் மாநில தலைவரின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதை கண்காணிக்கத் தவறிய உளவுத்துறை முற்றிலுமாக செயலிழந்திருப்பதோடு, தமிழகத்தில் இதுபோன்று அடிக்கடி நடைபெறும் கொலைச் சம்பவங்கள் மக்கள் மத்தியில் பதற்றமான சூழலை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பின் கொலை, கொள்ளை போன்ற சம்பவங்கள் நடைபெறாத நாட்களே இல்லை என சொல்லும் அளவிற்கு அடுத்தடுத்து தொடர்ச்சியாக நடைபெறும் கொலைச் சம்பவங்கள் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு சீர்கேடுகள் உச்சமடைந்திருப்பதை வெளிச்சம்போட்டு காட்டுகின்றன.
எனவே, காவல்துறையை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இனியாவது தன் கும்பகர்ண தூக்கத்தில் இருந்து விழித்து தமிழகத்தில் அரங்கேறும் சட்டம் ஒழுங்கு பிரச்னைகளுக்கு கூடுதல் கவனம் செலுத்தி பொதுமக்களுக்கு பாதுகாப்பான சூழலை ஏற்படுத்தி தரவேண்டும் என வலியுறுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
- அ.ம.மு.க தொடங்கப்பட்டு 7 ஆண்டுகள் கடந்துள்ளது. நாங்கள் எங்களது பாதையில் சரியான திசையில் சென்று கொண்டிருக்கிறோம்.
- தமிழகத்தில் கடந்த 2019-ல் பா.ஜ.க.வுக்கு லேசான எதிர்ப்பு இருந்தது. ஆனால் தற்போது பா.ஜ.க.வுக்கு எதிர்ப்பே கிடையாது.
தஞ்சாவூா்:
தஞ்சாவூரில் இன்று அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது :-
காவிரி நீர் விவாகரத்தில் கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா, துணை முதல்-மந்திரி சிவகுமார் ஆகியோரிடம் சோனியா காந்தி மூலம் தமிழக முதலமைச்சர் பேசி தமிழகத்திற்கு உரிய, நடுவர் மன்ற தீர்ப்பின்படி தண்ணீர் பெற்று தர வேண்டும். ஏனென்றால் கர்நாடகாவில் ஆளுவது காங்கிரஸ் கட்சி தான். தொடர்ந்து கர்நாடகாவிற்கு அழுத்தம் கொடுத்து தண்ணீர் பெற்று தர வேண்டும். மாறாக டெல்லியில் போய் பேசுவதால் எந்த பயனும் இல்லை.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் குறித்து கூட்டணியில் உள்ள கட்சித் தலைவர்கள் கலந்து ஆலோசித்து முடிவு செய்வோம்.
நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினர் ஒற்றுமையாக செயல்பட்டோம். பல தொகுதிகளில் அதிகமான வாக்குகள் கிடைத்துள்ளன. பணத்தை நம்பாமல் மக்களை நம்பி போட்டியிட்டோம்.
இதேபோல் வருகின்ற 2026 தமிழக சட்டமன்ற தேர்தலிலும் தேசிய ஜனநாயக கூட்டணி ஒற்றுமையாக செயல்பட்டு வெற்றி பெற்று ஆட்சி அமைப்போம்.
பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க பல தொகுதிகளில் டெபாசிட் இழந்துள்ளது. 13 சதவீதத்திற்கும் மேல் வாக்கு சதவீதம் சரிந்துள்ளது.
இரட்டை இலை சின்னம் இருந்தும் பல தொகுதிகளில் 3-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இதற்கு தலைமை சரியில்லாததே காரணமாகும். தாங்கள் தான் எல்லாம் என்ற நினைப்போடு அ.தி.மு.க.வில் சிலர் செயல்பட்டு வருகின்றனர். அ.தி.மு.க.வின் கோட்டையாக விளங்கிய தொகுதியில் கூட அவர்களால் டெபாசிட் பெற முடியவில்லை.
எடப்பாடி பழனிசாமி தலைமை பொறுப்பேற்ற பிறகு தொடர்ந்து 10 தேர்தலில் அ.தி.மு.க தோல்வியை கண்டுள்ளது. சிலர் தங்களது தவறை உணர்ந்து திருந்தினால் தான் அ.தி.மு.க பலப்படும்.
உண்மையான ஜெயலலிதாவின் தொண்டர்கள் ஒன்றிணைந்து அ.தி.மு.கவின் தலைமையை தேர்ந்தெடுக்க வேண்டும்.எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா கட்டிக்காத்த அ.தி.மு.க என்ற மாபெரும் இயக்கம் சரியான தலைமை இல்லாததால் பலவீனம் அடைந்துள்ளது.
அ.ம.மு.க தொடங்கப்பட்டு 7 ஆண்டுகள் கடந்துள்ளது. நாங்கள் எங்களது பாதையில் சரியான திசையில் சென்று கொண்டிருக்கிறோம். அ.தி.மு.க.வுடன் இணையும் எண்ணம் எனக்கு ஒருபோதும் இருந்ததில்லை.
தமிழகத்தில் கடந்த 2019-ல் பா.ஜ.க.வுக்கு லேசான எதிர்ப்பு இருந்தது. ஆனால் தற்போது பா.ஜ.க.வுக்கு எதிர்ப்பே கிடையாது. பெட்ரோலியத்தை ஜி.எஸ்.டி-க்குள் கொண்டுவர பரிசீலித்து நடவடிக்கை எடுப்போம் என மத்திய பெட்ரோலியத் துறை மந்திரி கூறி உள்ளதை பொறுத்திருந்து பார்ப்போம். மக்களுக்கு, நாட்டுக்கு எது நல்லதோ அதனை செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.