என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாகிஸ்தான்"

    • PBA-வின் முடிவை தேசபக்திக்கான எடுத்துக்காட்டு என்று விவரித்தார்.
    • சோதனையான காலங்களில் தேசிய ஒற்றுமையை மேம்படுத்துகிறது.

    26 பேர் உயிரிழந்த பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தான் - இந்தியா இடையே மோதல் போக்கு அதிகரித்துள்ளது.

    இந்நிலையில் பாகிஸ்தான் ஒளிபரப்பாளர்கள் சங்கம் (PBA) நாடு முழுவதும் உள்ள பாகிஸ்தான் எஃப்எம் வானொலி நிலையங்களில் இந்திய பாடல்களை ஒளிபரப்ப தடை விதித்துள்ளதாக பிபிஏ பொதுச் செயலாளர் ஷகீல் மசூத் அறிவித்தார்.

    பாகிஸ்தானின் தகவல்தொடர்புத் அமைச்சர் அட்டா தரார் இந்த நடவடிக்கையைப் பாராட்டினார். அவர் PBA-வின் முடிவை தேசபக்திக்கான எடுத்துக்காட்டு என்று விவரித்தார்.

    இதுபோன்ற சோதனையான காலங்களில் தேசிய ஒற்றுமையை மேம்படுத்துவதிலும் அடிப்படை மதிப்புகளை ஆதரிப்பதிலும் அனைவரும் ஒற்றுமையாக நிற்கிறார்கள் என்பதற்கு இந்திய பாடல்கள் தடை செய்யப்பட்டுள்ளது சான்றாகும் என்று அவர் கூறினார். 

    • பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனா்.
    • இந்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கருடன் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் தொலைபேசியில் பேசினார்.

    ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் கடந்த செவ்வாய்க்கிழமை தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனா். இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தானில் செயல்படும் லஷ்கா்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பின் நிழல் அமைப் பான 'தி ரெசிஸ்டன்ஸ் பிரண்ட்' பொறுப்பு ஏற்றது.

    இதனையடுத்து, இந்தியா - பாகிஸ்தான் உறவில் பெரும் விரிசல் ஏற்பட்டுள்ளது. இருநாட்டு எல்லையில் போர்ப் பதற்றமும் அதிகரித்துள்ளது.

    இதற்கிடையே மோதல் போக்கை அதிகரிக்க வேண்டாம் என்று இரு நாடுகளையும் அமெரிக்கா கேட்டுக் கொண்டது. இது தொடா்பாக இரு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களிடமும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மாா்கோ ரூபியோ பேச்சுவாா்த்தை மேற்கொள்ளவார் என்றும் அமெரிக்கா தெரிவித்தது.

    இதேபோல 'இந்தப் பதற்றமான சூழலுக்கு இந்தியாவும், பாகிஸ்தானும் பேச்சுவாா்த்தை மூலம் அமைதித் தீா்வைக் காண வேண்டும்' என்று இங்கிலாந்தும் அழைப்பு விடுத்தது.

    இந்த நிலையில் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருடன் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ தொலைபேசியில் பேசினார். சில மணி நேரம் இந்த உரையாடல் நடைபெற்றது.

    இதேபோல பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்புடன் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் பேசினார். இரு நாடுகள் இடையே போர் பதட்டத்தை தணிக்க வேண்டும் என்று இரு நாட்டு தலைவர்களையும் அவர் கேட்டுக் கொண்டார்.

    பஹல்காமில் நடந்த கொடுரமான பயங்கரவாத தாக்குதலில் இறந்தவர்களுக்கு தனது வருத்தத்தை ஜெய்சங்கரிடம் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ தெரிவித்தார்.

    பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியாவுடன் ஒத்துழைப்பதாக அமெரிக்காவின் நிலைப்பாட்டை அவர் மீண்டும் உறுதிப்படுத்தினார்.

    இது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், "பஹல்காம் தாக்குதல் தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரியுடன் நான் விவாதித்தேன். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு காரணமானவர்கள், ஆதரவாளர்கள் மற்றும் திட்டமிடுபவர்கள் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும். எல்லை தாண்டி தாக்குதலில் ஈடுபட்டவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப் படும்" என்று தெரிவித்தார்.

    பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்புடன் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் பேசும்போது காஷ்மீரில் நடந்த தாக்குதலை கண்டித்து விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இந்த நியாயமற்ற தாக்குதலை விசாரிப்பதற்கு பாகிஸ்தான் அதிகாரிகள் ஒத்துழைக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

    தெற்காசியாவில் பதற்றத்தை தணிக்கவும், நேரடி தகவல் தொடர்புகளை மீண்டும் ஏற்படுத்தவும், அமைதி, பாதுகாப்பை பராமரிக்கவும் இந்தியாவுடன் இணைந்து பணியாற்றுமாறு பாகிஸ்தான் பிரதமரிடம் ரூபியோ கேட்டுக் கொண்டார்.

    • வான்வெளி எல்லையை இந்தியா மூடி இருப்பது எல்லையில் போர் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
    • ஜாமர் கருவிகள் மூலமாக கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    காஷ்மீரில் பஹல்காம் சுற்றுலா தலத்தில் கடந்த மாதம் 22-ந்தேதி தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 26 பேர் பலியான சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தீவிரவாதிகள் நடத்திய இந்த கொடூர தாக்குதல் சம்பவத்துக்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ள நிலையில், தீவிரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.

    பாகிஸ்தான் தூண்டுதலின் பேரிலேயே தீவிரவாதிகள் தாக்குதலில் ஈடுபட்டிருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில் அந்த நாட்டுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு செல்லும் சிந்து நதி நீரை தடுத்து நிறுத்தி அது தொடர்பான சிந்து நதி ஒப்பந்தத்தை ரத்து செய்து வெளியிட்ட மத்திய அரசு பாகிஸ்தானுக்கு எதிராக மேலும் பல நடவடிக்கைகளையும் எடுத்தது.

    நாடு முழுவதிலும் உள்ள பாகிஸ்தானியர்கள் அனைவரும் உடனடியாக வெளியேற வேண்டும் என உத்தரவிடப்பட்டு அதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டது. இதன் காரணமாக தமிழகம் உள்பட அனைத்து மாநிலங்களிலும் தங்கி இருந்த பாகிஸ்தானியர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

    இந்தியா-பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் தினமும் கைகுலுக்கி கொள்ளும் நிகழ்வுக்கு தடை விதித்து வாகா எல்லையையும் மத்திய அரசு மூடியது.

    இந்த நிலையில் பாகிஸ்தானுக்கு எதிராக அடுத்த கட்ட நடவடிக்கையை இந்தியா அதிரடியாக மேற்கொண்டுள்ளது. இந்திய வான்வெளி பகுதியில் பாகிஸ்தான் விமானங்கள் பறப்பதற்கு தடை விதித்து நேற்று நள்ளிரவில் அறிவிப்பு வெளியாகி உள்ளது.

    இன்று முதல் வருகிற 23-ந் தேதி வரையில் 3 வாரங்களுக்கு பாகிஸ்தான் விமானங்கள் எதுவும் இந்திய வான்வெளி எல்லையை பயன்படுத்தக் கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானை சேர்ந்த வணிக விமானங்கள், ராணுவ விமானங்கள், பாகிஸ்தானில் பதிவு செய்யப்பட்ட விமானங்கள் என அந்த நாட்டை சேர்ந்த அனைத்து வகையான விமானங்களுக்கும் முழுமையாக தடை விதித்து வான்வெளி எல்லையை இந்தியா மூடி இருப்பது எல்லையில் போர் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

    பாகிஸ்தானுக்கு எதிரான இந்த நடவடிக்கையால் அந்த நாட்டில் இருந்து சிங்கப்பூர், மலேசியா போன்ற கிழக்கு ஆசிய நாடுகளுக்கு செல்லும் விமானங்கள் சீனா, இலங்கை ஆகிய நாடுகளின் வான்வெளியை பயன்படுத்தி நீண்ட தூரம் சுற்றி செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.

    இதன் மூலம் பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் விமானங்கள் உள்பட அந்த நாட்டில் இருந்து புறப்பட்டு இந்திய வான்வெளியை பயன்படுத்தி வந்த விமானங்களுக்கு எரிபொருள் செலவு அதிகமாகி கட்டணம் உயர்வதற்கான சூழலும் ஏற்பட்டு உள்ளது.

    இது பாகிஸ்தானுக்கு பொருளாதார ரீதியாக கடும் சிக்கலை ஏற்படுத்தும் என்றே கணிக்கப்பட்டு உள்ளது. பஹல்காம் தாக்குதல் சம்பவம் நடைபெற்று ஒரு வாரம் ஆகியுள்ள நிலையில், பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் இந்த நடவடிக்கை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவே பார்க்கப்படுகிறது.

    இதனை தொடர்ந்து பாகிஸ்தான் விமானங்கள் தடையை மீறி பறந்தால் அதனை கண்டுபிடிக்கும் வகையிலான துல்லிய கண்காணிப்புகளை கொண்டு உள்ள ஜாமர் கருவிகளையும் நாட்டின் மேற்கு எல்லையில் இந்தியா பயன்படுத்த தொடங்கியுள்ளது.

    சம்யுக்தா, ஹிம்சக்தி, ஸ்பெக்ட்ரா, காளி 5000 ஆகிய ஜாமர் கருவிகள் மூலமாக கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    இவை அமெரிக்காவின் ஜி.பி.எஸ்., ரஷ்யாவின் குளோ ரைய்டு மற்றும் சீனாவின் பீடோ உள்ளிட்ட பல்வேறு செயற்கைகோள்கள் மூலமாக கட்டளையிடப்படும் விமான சிக்னல்களையும் இந்த ஜாமர்கள் கண்டுபிடிக்கும் திறன் கொண்டவையாகும்.

    பாகிஸ்தான் பயன்படுத்தி வரும் ஜி.என்.எஸ்.எஸ். செயற்கைக் கோள் சிக்னலையும் இந்தியா பயன்படுத்தி வரும் ஜாமர்கள் முழுமையாக கண்டுபிடித்து விமானங்கள் வந்தால் அதனை துல்லியமாக தெரிவிக்கும் திறன் கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

    எல்லையில் பாகிஸ்தான் நடத்தி வரும் தாக்குதலுக்கு இந்தியா பதிலடி கொடுத்து வரும் நிலையில் வான்வெளி எல்லை மூடப்பட்டிருப்பது இருநாடுகளுக்கும் இடையேயான போர் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.

    இன்று முதல் வருகிற 23-ந்தேதி வரை இந்திய வான்வெளியை மூடியுள்ள மத்திய அரசு பாகிஸ்தானுக்கு எதிராக இந்த காலக்கட்டத்தில் (அடுத்த 3 வாரங்களில்) அதிரடி தாக்குதலை மேற்கொள்ளலாம் என்கிற தகவல்களும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.

    • பாகிஸ்தானுக்கு எதிராக பல அதிரடி நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது.
    • அசீம் மாலிக் தற்போது பாகிஸ்தானின் உளவுப்பிரிவாக உள்ள ஐஎஸ்ஐ-யின் தலைவராக செயல்பட்டு வருகிறார்.

    ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் கடந்த 22-ந்தேதி 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர்.

    இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தானில் செயல்படும் லஷ்கா்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பின் நிழல் அமைப்பான 'தி ரெசிஸ்டன்ஸ் பிரண்ட்' பொறுப்பு ஏற்றது.

    இதையடுத்து, பாகிஸ்தானுக்கு எதிராக பல அதிரடி நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது.

    பாகிஸ்தான் விமானங்கள் இந்திய வான்வெளியை பயன்படுத்த தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டது.

    புதிய நடவடிக்கையாக பாகிஸ்தான் விமான நிறுவனங்களின் விமானங்களுக்கு இந்தியா தனது வான்வழியை மூடியது.

    காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல் எதிரொலியாக பாகிஸ்தானுடனான உறவில் பெரும் விரிசல் ஏற்பட்டுள்ளது. இருநாட்டு எல்லையில் போர் பதற்றமும் அதிகரித்துள்ளது.

    இந்த நிலையில் பாகிஸ்தானின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக அசீம் மாலிக் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தற்போது பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ தலைவராக இருக்கும் நிலையில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பதவி என்பது கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.

    இவர் தற்போது பாகிஸ்தானின் உளவுப்பிரிவாக உள்ள ஐஎஸ்ஐ-யின் தலைவராக செயல்பட்டு வருகிறார். இந்த பொறுப்புடன் அசீம் மாலிக்கிற்கு அந்த நாட்டின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் என்ற பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

    • பாகிஸ்தானுக்கு எதிராக பல அதிரடி நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது.
    • பாகிஸ்தான் விமான நிறுவனங்களின் விமானங்களுக்கு இந்தியா தனது வான்வெளியை மூடியது.

    புதுடெல்லி:

    ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 28 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, பாகிஸ்தானுக்கு எதிராக பல அதிரடி நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது.

    இந்நிலையில், பாகிஸ்தான் விமானங்கள் இந்திய வான்வெளியை பயன்படுத்த தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டது. புதிய நடவடிக்கையாக பாகிஸ்தான் விமான நிறுவனங்களின் விமானங்களுக்கு இந்தியா தனது வான்வழியை மூடியது.

    பாகிஸ்தானில் பதிவுசெய்யப்பட்ட விமானங்களுக்கும், பாகிஸ்தான் விமான நிறுவனங்கள் மற்றும் நிறுவனங்களால் இயக்கப்படும், சொந்தமான அல்லது குத்தகைக்கு விடப்பட்ட விமானங்களுக்கும் இந்திய வான்வெளி கிடைக்காது. இந்தத் தடை பாகிஸ்தான் ராணுவ விமானங்களுக்கும் பொருந்தும்.

    இந்தியா, பாகிஸ்தான் இடையே நேரடி விமானங்கள் இல்லை. சிங்கப்பூர், மலேசியா மற்றும் பிற கிழக்கு ஆசிய நாடுகளுக்கான விமானங்களுக்கு பாகிஸ்தான் விமான நிறுவனங்கள் இந்திய வான்வெளியைப் பயன்படுத்தி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

    • இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் போர் பதட்டம் அதிகரித்து வருகிறது.
    • பாகிஸ்தான் படையினர் காஷ்மீர் எல்லையில் தொடர்ந்து அத்துமீறலில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் போர் பதட்டம் அதிகரித்து வருகிறது.

    பாகிஸ்தான் படையினர் காஷ்மீர் எல்லையில் தொடர்ந்து அத்துமீறலில் ஈடுபட்டு வருகிறார்கள். இதற்கு இந்திய ராணுவம் தகுந்த பதிலடி கொடுத்து வருகிறது.

    இந்நிலையில், இந்திய எல்லை பகுதியில் தாக்குதலை நிறுத்துமாறு பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • சட்டப்பிரிவு 370வது பிரிவு நீக்கப்பட்ட பிறகு, காஷ்மீரில் இந்திய ஒடுக்குமுறை இன்னும் அதிகரித்துள்ளது.
    • மோடியின் போர் வெறியையும், பிராந்திய அமைதிக்கு அச்சுறுத்தலாக இருக்கும் அவரது ஆபத்தான லட்சியங்களையும் பாகிஸ்தான் கண்டிக்கிறது.

    பஹல்காம் தாக்குதல் குறித்து மோடி அரசை பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் விமர்சித்துள்ளார்.

    ஊழல் வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் இம்ரான் கான் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், பஹல்காம் சம்பவத்தில் ஏற்பட்ட உயிர் இழப்பு மிகவும் கவலையளிக்கிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    புல்வாமா சம்பவம் நடந்தபோது, நாங்கள் இந்தியாவிற்கு சாத்தியமான அனைத்து ஆதரவையும் வழங்கினோம், ஆனால் இந்தியா எந்த உறுதியான ஆதாரத்தையும் வழங்கத் தவறிவிட்டது.

    2019 இல் நான் கணித்தது போல, பஹல்காம் சம்பவத்திற்குப் பிறகும் அதேதான் நடக்கிறது. சுயபரிசோதனை மற்றும் விசாரணைக்கு பதிலாக, மோடி அரசாங்கம் மீண்டும் பாகிஸ்தானைக் குறை கூறுகிறது.

    நவாஸ் ஷெரீப் மற்றும் ஆசிப் சர்தாரி போன்ற சுயநலவாதிகளிடமிருந்து எந்தவிதமான கடுமையான நிலைப்பாட்டையும் எதிர்பார்ப்பது முட்டாள்தனம். அவர்களின் சட்டவிரோத சொத்து மற்றும் வணிக நலன்கள் வெளிநாட்டில் இருப்பதால் அவர்கள் ஒருபோதும் இந்தியாவுக்கு எதிராகப் பேச மாட்டார்கள்.

    1.5 பில்லியன் மக்கள் வசிக்கும் நாடாக இந்தியா இருப்பதால், குழப்பமடைவதற்குப் பதிலாக பொறுப்புடன் செயல்பட வேண்டும். அமைதியே எங்கள் முன்னுரிமை, ஆனால் அதை கோழைத்தனம் என்று தவறாகக் கருதக்கூடாது.

    2019 ஆம் ஆண்டில், முழு நாட்டின் ஆதரவுடன் எனது அரசாங்கம் செய்தது போல், எந்தவொரு இந்திய ஆக்கிரமிப்புக்கும் தகுந்த பதிலடி கொடுக்கும் முழு திறனையும் பாகிஸ்தான் கொண்டுள்ளது. ஐ.நா. தீர்மானங்களால் உத்தரவாதம் அளிக்கப்பட்டபடி, காஷ்மீரிகளின் சுயநிர்ணய உரிமையின் முக்கியத்துவத்தை நான் எப்போதும் வலியுறுத்தி வருகிறேன்.

    ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தால் இந்தியா இந்த பிராந்தியத்திற்கு மட்டுமல்ல, அதற்கு அப்பாலும் கடுமையான அச்சுறுத்தலாக உள்ளது. சட்டப்பிரிவு 370வது பிரிவு நீக்கப்பட்ட பிறகு, காஷ்மீரில் இந்திய ஒடுக்குமுறை இன்னும் அதிகரித்துள்ளது. இது காஷ்மீர் மக்களின் சுதந்திரத்திற்கான விருப்பத்தை மேலும் அதிகரித்துள்ளது.

    மோடியின் போர் வெறியையும், பிராந்திய அமைதிக்கு அச்சுறுத்தலாக இருக்கும் அவரது ஆபத்தான லட்சியங்களையும் பாகிஸ்தான் ஒரு நாடாக வன்மையாக கண்டிக்கிறது" என்று தெரிவித்துள்ளார்.

    • இந்தியா நடத்தப்போகும் தாக்குதலுக்கு உலகின் பெரும்பாலான நாடுகள் ஆதரவு தெரிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
    • சீனா மட்டும் பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்பட்டு கொண்டு இருக்கிறது.

    புதுடெல்லி:

    ஜம்மு-காஷ்மீரில் பஹல்காம் சுற்றுலா தலத்தில் கடந்த 22-ந்தேதி சுற்றுலாப் பயணிகள் மீது பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினார்கள்.

    சுற்றுலா பயணிகளை பிணைக் கைதிகள் போல பிடித்துக் கொண்டு அவர்களது மாநிலம், மதம் ஆகியவற்றை கேட்டறிந்து மிக கொடூரமாக 26 பேரை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றனர்.

    பஹல்காமில் நடந்த தாக்குதலின் பின்னணியில் பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் இருப்பது தெரிய வந்துள்ளது. அந்த தீவிரவாதிகள் அனைவரும் பாகிஸ்தான் ராணுவத்தில் பயிற்சி பெற்றவர்கள் என்பதும் கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது. தீவிரவாதிகளில் ஒருவர் பாகிஸ்தான் ராணுவத்தில் பணியாற்றியவர் என்பதும் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.

    இந்த தகவல்கள் மூலம் பஹல்காம் தாக்குதலுக்கு பாகிஸ்தான் ராணுவம் நேரடியாக சம்பந்தப்பட்டு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. இதையடுத்து பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பிரதமர் மோடி அடுத்தடுத்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

    இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்களை அதிரடியாக வெளியேற்ற மத்திய அரசு உத்தரவு வெளியிட்டது. அதன்படி இந்தியாவில் இருந்து பாகிஸ்தானியர்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

    அடுத்தக்கட்டமாக கடந்த 60 ஆண்டுகளாக நடைமுறையில் உள்ள சிந்து நதிநீர் பகிர்வு ஒப்பந்தத்தை ரத்து செய்து இந்தியா நடவடிக்கை எடுத்துள்ளது. பாகிஸ்தானுக்கு செல்லும் சிந்துநதி நீரை நிறுத்துவதன் மூலம் பாகிஸ்தானுக்கு அழுத்தம் தரும் செயல்பாடுகளில் இந்தியா ஈடுபட்டு வருகிறது.

    இந்த நடவடிக்கைகள் மட்டுமின்றி தூதரக அளவிலும் இந்தியா நடவடிக்கை மேற்கொண்டு உள்ளது. இவற்றின் தொடர்ச்சியாக அடுத்த கட்டமாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாத முகாம்களை அழிக்க இந்தியா குறி வைத்துள்ளது.

    அப்போது நடத்தப்படும் தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதல் கற்பனையிலும் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு இருக்கும் என்று பிரதமர் மோடி சூளுரைத்துள்ளார். இதனால் பாகிஸ்தான் தரப்பில் கடும் பதட்டமும், பீதியும் நிலவுகிறது.

    இந்த நிலையில் பாதுகாப்பு துறை மந்திரி ராஜ் நாத்சிங், முப்படைகளின் தலைமை தளபதி அனில் சவுகான், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித்தோவல், ராணுவ தலைமை தளபதி உபேந்திர துவிவேதி, கடற்படை தலைமை தளபதி தினேஷ் திரிபாதி, விமானப் படை தலைமை தளபதி அமர் பிரீத்சிங் ஆகியோர் பங்கேற்ற உயர்நிலை ஆலோசனைக் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நேற்று மாலை நடைபெற்றது.

    கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, "பஹல்காம் தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு பதிலடி தருவது தொடர்பான முடிவுகளை மேற்கொள்ள பாதுகாப்புப் படைகளுக்கு முழு சுதந்திரம் உள்ளது. தாக்குதல் இலக்குகள், நேரம் மற்றும் தாக்குதல் நடத்தும் முறை குறித்து பாதுகாப்புப் படையினரே முடிவுகளை எடுக்கலாம். நம் நாட்டு பாதுகாப்பு படைகள் மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது" என்றார்.

    பிரதமர் மோடியின் அறிவுறுத்தலைத் தொடர்ந்து பஹல்காம் தாக்குதலுக்கு எந்த நேரத்திலும் இந்தியா கடுமையான பதிலடி தர வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. அதை உறுதிப்படுத்தும் வகையில் நேற்று இரவே இந்திய போர் விமானங்கள் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் உஷார்படுத்தப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன.

    எந்த எதிர்ப்பு எந்த திசையில் இருந்து வந்தாலும் அவற்றை சமாளிக்க தயாராக இருக்க வேண்டும் என்று முப்படைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக வடமண்டலத்தில் இந்திய போர் விமானங்கள் இன்று காலை முழு வீச்சில் தயார்ப்படுத்தப்பட்டன.

    இன்று பிரதமர் மோடி 4-வது முறையாக அவசர ஆலோசனையில் ஈடுபட்டார். மத்திய மந்திரி சபை கூட்டம், பாதுகாப்பு தொடர்பான அமைச்சரவை குழு கூட்டம் மற்றும் அரசியல் விவகார அமைச்சரவை குழு கூட்டம் ஆகியவை அடுத்தடுத்து நடந்தன.

    இந்த கூட்டங்களில் பங்கேற்ற பிரதமர் மோடி விரிவான விவாதம் நடத்தி உள்ளார். இதில் தீவிரவாதிகளுக்கு பதிலடி கொடுப்பது தொடர்பாக இறுதிக்கட்ட முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக தெரிய வந்து உள்ளது.

    மத்திய அமைச்சரவையின் கூட்டத்தை தொடர்ந்து இன்று இரவு எந்த நேரத்திலும் பாகிஸ்தான் தீவிரவாதிகள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்தியா தரப்பில் தீவிரவாதிகள் மீது பலமுனை தாக்குதலுக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

    இந்தியா நடத்தப்போகும் தாக்குதலுக்கு உலகின் பெரும்பாலான நாடுகள் ஆதரவு தெரிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது. சீனா மட்டும் பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்பட்டு கொண்டு இருக்கிறது. என்றாலும் இந்தியாவின் தாக்குதல் மிக கடுமையாக இருக்கும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

    இந்திய ராணுவம் கொஞ்சம் கொஞ்சமாக தங்கள் அருகே நெருங்கி வருவதால் பாகிஸ்தான் மந்திரிகள் அலற தொடங்கி இருக்கிறார்கள். ஏற்கனவே பாகிஸ்தான் ராணுவ மந்திரி கவஜா சமீபத்தில் பேசுகையில், "இந்தியா தாக்குதல் நடத்தினால் மிகப்பெரிய போர் வெடிக்கும்" என்றார்.

    இந்த நிலையில் பாகிஸ்தான் செய்தித் துறை மந்திரி அதுல்லா சமூக வலைதளத்தில் ஒரு தகவலை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    இந்தியா அடுத்த 24 மணி முதல் 36 மணி நேரத்துக்குள் பாகிஸ்தானை தாக்க வாய்ப்பு இருக்கிறது. அதற்காக அவர்கள் தயாராகி விட்டதை உணர முடிகிறது. இந்த போரால் ஏற்படும் அனைத்து விளைவுகளுக்கும் இந்தியாதான் பொறுப்பு ஏற்க வேண்டும்.

    தீவிரவாதத்தை நாங்கள் தூண்டி விடவில்லை. உண்மையில் தீவிரவாதத்தால் நாங்கள்தான் பாதிக்கப்பட்டு இருக்கிறோம். எங்கள் வேதனையை புரிந்து கொள்ளுங்கள்.

    இவ்வாறு பாகிஸ்தான் மந்திரி அதுல்லா சமூக வலைதளத்தில் புலம்பி உள்ளார். இதற்கிடையே பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் மிகப்பெரிய பதட்டம் நீடித்து வருகிறது.

    • தபயா ராமின் குடும்பத்தில் 34 பேர் உள்ளனர். கடந்த 25 ஆண்டுகளாக இந்தியக் குடியுரிமை பெற தபயா ராம் போராடுகிறார்.
    • பாக்ஹர் மாவட்டத்தின் லோஹியா தொகுதியில் போட்டியின்றி எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டார்.

    பஹல்காமில் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியாவிலுள்ள பாகிஸ்தானியர்கள் வெளியேற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து இதுவரை 537 பாகிஸ்தானியர்கள் எல்லை வழியாக வெளியேறி உள்ளனர்.

    இந்நிலையில் அரியானாவில் ஐஸ்கிரீம் விற்று பிழைப்பு நடத்தும் பாகிஸ்தான் முன்னாள் எம்.பியின் கதை வெளிச்சத்துக்கு வந்துள்ளது. தபயா ராம் என்ற அந்த நபர் தற்போது அரியானாவின் ரத்தன்கார் பகுதியில் தனது குடும்பத்தினர் 34 பேரோடு வசித்து வருகிறார்.

    இந்தியா - பாகிஸ்தான் பிரிவினைக்கு 2 ஆண்டுகளுக்கு முன்பு பாகிஸ்தானைச் சேர்ந்த பஞ்சாபில் பிறந்தவர் தபயா ராம். அழுத்தம் காரணமாக அவரின் குடும்பம் அங்கேயே தங்கியது.

    1988ஆம் ஆண்டு பாக்ஹர் மாவட்டத்தின் லோஹியா தொகுதியில் போட்டியின்றி எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டார். அவரின் பதவிக்காலம் மிகவும் நெருக்கடி மிகுந்ததாகவே இருந்தது. மதமாற்றம் உள்ளிட்ட அழுத்தமும் தபயாவின் குடும்பத்துக்கு இருந்து வந்தது.

    ஏமாற்றம் மற்றும் அச்சத்தின் காரணமாக தபாயாவின் குடும்பம் 2000 இல் பாகிஸ்தானிலிருந்து வெளியேறினர். உறவினர்களின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக ஒரு மாத விசாவில் அரியானா வந்த தபயா ராம் குடும்பம் பின்னர் நிரந்தரமாகவே இங்கு வசிக்கத் தொடங்கினர்.

    குடும்பமும் பெரிதாகிவிட்டதால், அதனை கவனித்துக்கொள்ள குல்ஃபி, ஐஸ்கிரீம் விற்கும் பணியில் தபயா ஈடுபட்டுள்ளார். இவரின் 7 வாரிசுகளும் உறவினர்களையே திருமணம் செய்துகொண்டு குழந்தைகள் பெற்று வாழ்ந்து வருகின்றனர்.

    தற்போது தபயா ராமின் குடும்பத்தில் 34 பேர் உள்ளனர். கடந்த 25 ஆண்டுகளாக இவர்களுக்கு இந்தியக் குடியுரிமை பெற தபயா ராம் போராடுகிறார். அவரின் இரு பெண்கள் உள்பட 6 பேருக்கு இந்தியக் குடியுரிமை கிடைத்துள்ளது. எஞ்சிய 28 பேரின் விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளன.

    இந்நிலையில் தபயா ராம் பாகிஸ்தானுக்கு அனுப்பப்படுவாரா? என்ற கேள்வி எழுந்தது.  உள்ளூர் காவல் துறையினரின் விசாரணைக்குப் பிறகு தபயா ராம் தனது குடும்பத்துடன் நாட்டில் இருக்க அனுமதிக்கப்பட்டுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 

    • பாகிஸ்தானின் தகவல் அமைச்சர் அட்டாவுல்லா தரார் தெரிவித்துள்ளார்.
    • இந்தியா ஜோடிக்கப்பட்ட மற்றும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறது.

    ஏப்ரல் 22 அன்று பஹல்காமில் பயங்கரவாதிகளால் 26 பேர் கொடூரமாக கொல்லப்பட்டதிலிருந்து இந்தியா- பாகிஸ்தான் இடையே பதட்டங்கள் அதிகரித்து வருகின்றன. நேற்று ராணுவ தளபதிகளுடம் ஆலோசனை நடத்திய பிரதமர் மோடி, பதிலடி கொடுக்க ராணுவத்துக்கு முழு சுதந்திரம் அளித்தார் என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    இந்நிலையில் அடுத்த 24 முதல் 36 மணி நேரத்திற்குள் இந்தியா இராணுவத் தாக்குதலைத் திட்டமிடுவதாக தங்கள் உளவுத்துறை எச்சரித்துள்ளதாக பாகிஸ்தானின் தகவல்தொடர்புத்துறை அமைச்சர் அட்டாவுல்லா தரார் தெரிவித்துள்ளார்.

    பஹல்காம் சம்பவத்தில் பாகிஸ்தானின் தொடர்பு குறித்து இந்தியா ஜோடிக்கப்பட்ட மற்றும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைப்பதாகவும், ராணுவ ஆக்கிரமிப்பை நியாயப்படுத்த இந்தக் கூற்றுக்களை முன்வைப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

    பாகிஸ்தானும் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட நாடுதான் என்றும், இந்தியாவின் குற்றச்சாட்டுகளை தான் மறுப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

    பஹல்காம் தாக்குதல் குறித்து நடுநிலையான நிபுணர் ஆணையம் மூலம் நம்பகமான மற்றும் வெளிப்படையான விசாரணைக்கு பாகிஸ்தான் ஒத்துழைப்பதாக கூறியபோதிலும், இந்தியா மோதல் பாதையைத் தேர்வு செய்கிறது என்று அவர் கூறினார். 

    • கேரளாவை சேர்ந்த இளைஞன், பாகிஸ்தான் ஜிந்தாபாத் என கோஷம் எழுப்பியுள்ளார்.
    • உடலின் உட்புறத்தில் ரத்தப்போக்கு ஏற்பட்டு அந்த இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    கிரிக்கெட் போட்டியின்போது பாகிஸ்தான் ஆதரவு கோஷம் எழுப்பிய இளைஞன் கும்பல் ஒன்று அடித்துக் கொலை செய்தது.

    கர்நாடகாவின் மங்களூரில் உள்ள பத்ரா கல்லூர்த்தி கோயில் அருகே கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்ற உள்ளூர் கிரிக்கெட் போட்டியின் போது இந்த சம்பவம் நடந்தது.

    பத்து அணிகள் கலந்து கொண்ட கிரிக்கெட் போட்டிக்கான மைதானத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் இருந்தனர். இதில் கேரளாவை சேர்ந்த இளைஞன், 'பாகிஸ்தான் ஜிந்தாபாத்' என கோஷம் எழுப்பியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கும்பல் ஒன்று அவரிடம் வாக்குவாதம் செய்தது.

    இது மோதலாக மாறி அவர்கள் அந்த இளைஞனை உதைத்தும், தடியால் தாக்கியும் உள்ளனர். இதனால் உடலின் உட்புறத்தில் ரத்தப்போக்கு ஏற்பட்டு அந்த இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    இதைத்தொடர்ந்து அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது. இளைஞன் உடலை கைப்பற்றிய கர்நாடக போலீசார் இந்த சம்பவத்தில் 15 பேரை கைது செய்துள்ளனர்.

    • 'சி -130 ஹெர்குலிஸ்' போர் விமானமானது நேற்று முன்தினம் கராச்சியில் உள்ள விமானப்படைத் தளத்துக்கு சென்றுள்ளது.
    • ராணுவத் தளவாடங்கள் எடுத்துச் செல்லப்பட்டதற்கான விவரங்கள் வெளியாகவில்லை.

    பஹல்காம் பயங்கரவாத தாக்குதலையடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவுகிறது.

    இந்திய எல்லையை ஒட்டிய பகுதியில் உள்ள ராணுவ தளங்களில் பாகிஸ்தான் படைகளை குவித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இந்த சூழலில் துருக்கியும் பாகிஸ்தானுக்கு ராணுவ உதவியை வழங்கியதாகத் தகவல் வெளியானது.

    துருக்கி விமானப்படைக்குச் சொந்தமான 'சி -130 ஹெர்குலிஸ்' போர் விமானமானது நேற்று முன்தினம் கராச்சியில் உள்ள விமானப்படைத் தளத்துக்கு சென்றுள்ளது என்றும் இதில் ஏராளமான போர் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டதாகவும் கூறப்பட்டது.

    விமானங்கள் வருகையை இரு நாடுகளும் உறுதி செய்தன. ஆனால் அவற்றில் ராணுவத் தளவாடங்கள் எடுத்துச் செல்லப்பட்டதற்கான விவரங்கள் வெளியாகவில்லை.

    இந்த நிலையில், போர் விமானங்களைப் பாகிஸ்தானுக்கு அனுப்பவில்லை என்று துருக்கி தெரிவித்துள்ளது. சரக்கு விமானம் மட்டுமே பாகிஸ்தானுக்குச் சென்றதாகவும் துருக்கி விளக்கமளித்துள்ளது. 

    ×