என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரங்கசாமி"

    • பாரம்பரிய அழகிய பிரெஞ்சு துணை தூதரக கட்டிடம் பல வண்ண லேசர் ஒளி வீச்சுக்களால் மின்னியது.
    • கட்டிடத்தின் மேற்புறத்தில் இருந்து வானை நோக்கி லேசர் விளக்கு ஒளித்தது.

    புதுச்சேரி:

    பிரான்ஸ்- மேற்கு ஜெர்மனி இடையே போர் நிறுத்த எலிசி உடன்படிக்கை ஒப்பந்தம் இரு நாட்டு ஜனாதிபதிகளிடையே பாரீசில் உள்ள எலிசி அரண்மனையில் கடந்த 1963 ஜனவரி 22-ந் தேதி மேற்கொள்ளப்பட்டது.

    இந்த எலிசி உடன்படிக்கை ஒப்பந்த தினத்தையொட்டி புதுவையில் உள்ள பிரெஞ்சு துணை தூதரகத்தில் லேசர் லைட் ஷோவுடன் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.

    பாரம்பரிய அழகிய பிரெஞ்சு துணை தூதரக கட்டிடம் பல வண்ண லேசர் ஒளி வீச்சுக்களால் மின்னியது. மேலும் கடட்டிடத்தின் மேற்புறத்தில் இருந்து வானை நோக்கி லேசர் விளக்கு ஒளித்தது. துணை தூதரகத்தினுள் கண் கவரும் பிராங்கோ-ஜெர்மன் எலக்ட்ரோ கச்சேரி நடைபெற்றது.

    நிகழ்ச்சியை பிரெஞ்சு துணை தூதர் லிசே டால் போட் பாரே தொடங்கி வைத்தார். இதில் முதல்-அமைச்சர் ரங்கசாமி, பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன், பாஸ்கர் எம்.எல்.ஏ., புதுவை பல்கலைக்கழக துணை வேந்தர் குர்மீத் சிங் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    மேலும் பிரெஞ்சு நாட்டை சேர்ந்தவர்கள், புதுவையில் வசிக்கும் பிரெஞ்சு குடியுரிமை மக்கள் பலரும் கலந்து கொண்டு உற்சாகமாக நடனமாடி மகிழ்ந்தனர்.

    • புதுவை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.170 கோடியே 11 லட்சத்தில் ஒருங்கிணைந்த கட்டுப்பாடு மையம் அமைக்கப்பட உள்ளது.
    • புதுவை நகர பகுதி முழுவதும் 130 ஸ்மார்ட் தூண்கள் அமைக்கப்படும்.

    புதுச்சேரி:

    புதுவை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.170 கோடியே 11 லட்சத்தில் ஒருங்கிணைந்த கட்டுப்பாடு மையம் அமைக்கப்பட உள்ளது.

    இதற்காக புதுவை அரசின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் ரெயில்டெல் இந்தியா மேலாண்மை நிறுவனம் ஆகியவை இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது.

    சட்டமன்றத்தில் உள்ள முதலமைச்சர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் ரங்கசாமி, அமைச்சர் லட்சுமிநாராயணன், தலைமை செயலர் ராஜீவ்வர்மா ஆகியோர் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது.

    புதுவை அரசு சார்பில் கலெக்டர் வல்லவன், ரெயில்டெல் நிறுவன பொது மேலாளர் பிரதீபாதேவேந்திரயாதவ் ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

    நிகழ்ச்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்ட தலைமை செயல் அதிகாரி அருண், இணை அதிகாரி சுதாகர், சப்-கலெக்டர் வினயராஜ், ரெயில்டெல் செயல் இயக்குனர் மனோகர் ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.

    புதுவை நகர பகுதி முழுவதும் 130 ஸ்மார்ட் தூண்கள் அமைக்கப்படும். இந்த தூணில் சக்தி வாய்ந்த கேமராக்கள் பொருத்தப்படும். காற்று மாசு, வெப்பநிலையும் கண்காணிக்கப்படும். ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து புதுவை பிரதான சாலைகளில் போக்குவரத்து வாகன நெரிசல், வாகன நிறுத்தங்கள், கண்காணிப்பு கேமராக்கள், கண்ணாடி ஒளியிழை புதைவடங்கள், சுற்றுலா வழிகாட்டு செயலிகள் கண்காணிக்கப்பட்டு, கட்டுப்படுத்தப்படும்.

    இதன் மூலம் நகர பகுதியில் நெரிசல் கட்டுக்குள் கொண்டுவரப்படும். கண்காணிப்பு கேமராக்கள் வழியாக கண்காணிப்பதால் குற்ற நடவடிக்கைகளை குறைக்க முடியும்.

    இதனால் சுற்றுலா மேம்பாடு அடைந்து நகர பகுதி மக்களின் வாழ்க்கைத்தரம் உயரும். இந்த திட்டத்தை 6 மாதத்தில் பயன்பாட்டுக்கு கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது.

    கட்டுப்பாட்டு மையம் அமைக்க கிழக்கு கடற்கரை சாலை நவீன மீன்அங்காடி, ரோடியர் மில் திடல், பழைய உள்ளாட்சித்துறை அலுவலகம் உள்ளிட்ட இடங்களை ஆய்வு செய்து உரிய இடம் தேர்வு செய்யப்பட உள்ளது.

    வருகிற ஞாயிற்றுக்கிழமை முதலமைச்சர் ரங்கசாமி தலைமையிலான குழுவினர் இந்த இடத்தை தேர்வு செய்கின்றனர்.

    கட்டுப்பாட்டு மையத்தை அமைக்கும் மத்திய அரசு நிறுவனம் இந்த மையத்தை 5 ஆண்டு பராமரிக்கும். அதன்பின் புதுவை அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும்.

    • எங்கள் கூட்டணி முறிந்துவிடும் என நாராயணசாமி சொல்ல, சொல்ல பா.ஜனதாவுடன் கூட்டணி உறுதியாகிக் கொண்டே செல்கிறது.
    • நாராயணசாமியின் குற்றச்சாட்டுகளுக்கு சட்டசபை பட்ஜெட் கூட்டத்தில் பதில் தரப்படும்.

    புதுச்சேரி:

    முதல்-அமைச்சர் ரங்கசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    புதுவைக்கு கப்பல்கள் வந்து செல்வது மிகவும் நல்லது, வியாபாரம் பெருகும். புதுவை மாநிலத்திற்கு வருவாய் கிடைக்கும். பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கவும் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

    ஏற்கனவே நாங்கள் கூறியது போல, இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். பா.ஜனதா-அ.தி.மு.க. கட்சிகளுடன் என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்து வெற்றி பெற்று கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இந்த கூட்டணி பாராளுமன்ற தேர்தலிலும் தொடரும். அறிவித்த திட்டங்கள் அனைத்தையும் எங்கள் அரசு செய்து வருகிறது. புதிதாக அறிவித்த திட்டங்களையும் செயல்படுத்துகிறோம். உள்கட்டமைப்பு மேம்படுத்தும் பணி, சாலை மேம்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது.

    மாநில அந்தஸ்து கிடைத்தால் ஆட்சியாளர்கள் சிறப்பாக ஆட்சி செய்ய முடியும். எங்கள் ஆட்சியில் மாநில அந்தஸ்து பெற முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. நம்பிக்கைதான் எல்லாம். கருப்பு சட்டையெல்லாம் அணிந்து போராடிய நாராயணசாமி மாநில அந்தஸ்து பெற்றிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

    எங்கள் ஆட்சியில் மாநில அந்தஸ்தை பெறுவோம். எங்கள் கூட்டணி முறிந்துவிடும் என நாராயணசாமி சொல்ல, சொல்ல பா.ஜனதாவுடன் கூட்டணி உறுதியாகிக் கொண்டே செல்கிறது. நாராயணசாமியின் குற்றச்சாட்டுகளுக்கு சட்டசபை பட்ஜெட் கூட்டத்தில் பதில் தரப்படும்.

    இவ்வாறு ரங்கசாமி தெரிவித்தார்.

    • பட்ஜெட்டில் புதிய திட்டங்கள் குறித்தும், நிர்வாக ரீதியான நடவடிக்கைகள் குறித்தும் இருவரும் ஆலோசித்தனர்.
    • முக்கிய கோப்புகளுக்கு ஒப்புதல் அளிப்பது சம்பந்தமாக முதல்-அமைச்சர் ரங்கசாமி கவர்னர் தமிழிசையிடம் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.

    புதுச்சேரி:

    புதுவை கவர்னராக தமிழிசை பதவியேற்று 2 ஆண்டினை நேற்றுடன் நிறைவு செய்தார்.

    அதனையொட்டி முதல்-அமைச்சர் ரங்கசாமி ராஜ் நிவாசில் கவர்னர் தமிழிசையை சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

    பதிலுக்கு கவர்னர் தமிழிசை தனது 2 ஆண்டு சாதனைகள் அடங்கிய யுனைடடு பார் புராகிரஸ் என்ற ஆங்கில நூலை பரிசாக முதல்-அமைச்சருக்கு வழங்கினார்.

    பின்னர் இருவரும் நிர்வாகம் தொடர்பாக ஆலோசனை நடத்தினர். பட்ஜெட்டில் புதிய திட்டங்கள் குறித்தும், நிர்வாக ரீதியான நடவடிக்கைகள் குறித்தும் இருவரும் ஆலோசித்தனர். மேலும் முக்கிய கோப்புகளுக்கு ஒப்புதல் அளிப்பது சம்பந்தமாக முதல்-அமைச்சர் ரங்கசாமி கவர்னர் தமிழிசையிடம் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.

    முன்னதாக புதுவை கவர்னராக பதவியேற்று 2 ஆண்டை நிறைவு செய்ததையொட்டி கவர்னர் தமிழிசை மணக்குள விநாயாகர் கோவிலில் வழிபட்டார்.

    • ஸ்மார்ட் என்ற வார்த்தையை கேட்டதும் முதலமைச்சர் ரங்கசாமி டென்சன் ஆனார்? அதென்ன ஸ்மார்ட் பணி? என அங்கிருந்த அதிகாரிகளை துளைத்தெடுத்தார்.
    • நிலத்தை சமப்படுத்துற வேலை கம்ப சூத்திரமா? முடிவெடுக்கிற நிலையில் நாம் இல்லை. இதற்கு டெல்லிக்கு போய் ஒரு நிறுவனத்தை அழைத்து வர வேண்டியுள்ளது.

    புதுச்சேரி:

    புதுவையில் முதலமைச்சர் ரங்கசாமி தலைமையிலான என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா கூட்டணி ஆட்சி 2 ஆண்டுகளை நிறைவு செய்ய உள்ளது.

    ஆட்சி அதிகாரத்தில் இருந்தாலும், அரசின் முடிவுகளை செயல்படுத்துவதில் பெரும் முட்டுக்கட்டைகள் இருப்பதாகவும், மாநில அந்தஸ்து கிடைத்தால்தான் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் முடிவுகளை துரிதமாக செயல்படுத்த முடியும் என்றும் முதலமைச்சர் ரங்கசாமி விழாக்களில் தெரிவித்து வருகிறார்.

    சுயேச்சை எம்.எல்.ஏ. நேரு தலைமையில் மாநில அந்தஸ்து போராட்ட ஒருங்கிணைப்பு குழு முதலமைச்சர் ரங்கசாமியை சந்தித்தபோது, மாநில அந்தஸ்து இல்லாததால் மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்த முடியவில்லை என அவர் அங்கலாய்த்தார்.

    வருகிற பட்ஜெட் கூட்டத்தொடரில் புதுவைக்கு மாநில அந்தஸ்து கேட்டு மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்ற உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

    இந்நிலையில் புதுவை கிழக்கு கடற்கரை சாலையில் மீன் அங்காடி வளாகத்தில் ஸ்மார் சிட்டி நகர கட்டுப்பாட்டு மையம் அமைப்பது குறித்து முதலமைச்சர் ரங்கசாமி ஆய்வு செய்தார்.

    அப்போது ஸ்மார்ட் சிட்டி பணிகள் குறித்த விபரங்களை ரங்கசாமி அதிகாரிகளிடம் கேட்டார். அதற்கு அதிகாரிகள், சி.சி.டி.வி., நவீன சிக்னல் அனைத்தும் ஸ்மார்ட் பணிகளாக இருக்கப்போவதாக பெருமையுடன் கூறினர்.

    ஸ்மார்ட் என்ற வார்த்தையை கேட்டதும் முதலமைச்சர் ரங்கசாமி டென்சன் ஆனார்? அதென்ன ஸ்மார்ட் பணி? என அங்கிருந்த அதிகாரிகளை துளைத்தெடுத்தார்.

    அதிகாரிகளை கடிந்து முதலமைச்சர் ரங்கசாமி பேசியதாவது:

    நகர் பகுதியில் சாக்கடை கால்வாய்கள் மேலே சிலாப் போட வேண்டும் என 1½ ஆண்டாக கூறுகிறேன்.

    அதை செய்ய முன்வரவில்லை. மக்கள் என்ன நினைப்பார்கள்? அரசைத்தான் குறை கூறுவார்கள்.

    அப்புறம் என்ன ஸ்மார்ட் பணி? அப்படி, இப்படியென சாலை அமைத்துள்ளோம். அரசு நினைக்கிற மாதிரி எதுவும் வரலை, வரும் ஆண்டிலாவது ஏதாவது செய்ய முடியுமா? என யோசிக்கிறேன். அதற்குள் எந்தெந்த செயலர் மாறுகிறார்களோ? வரும் செயலர்கள் எதை பார்த்து பயப்படுவார்களோ? என தெரியாது.

    பொதுப்பணித்துறை உதவாக்கரையாக உள்ளது. கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள 3 ஏக்கர் நிலத்தில் பஸ்ஸ்டாண்டு அமைக்க எதுவும் செய்யவில்லை. நிலத்தை சமப்படுத்தி மண் அடித்தால் போதும். பஸ்கள் நிற்கும். இதனால் நகரில் போக்குவரத்து நெரிசல் குறையும்.

    இங்கு 4 பில்லர் அமைத்து ஷெட் போட்டு பஸ்ஸ்டாண்டு ஆரம்பிக்க பொதுப்பணித்துறைக்கு தெரியலை. இதுக்கு டெல்லி போய் என்.ஓ.சி., அது, இதுன்னு சொல்லி விடிய, விடிய டிஸ்கஷன் செய்யுறாங்க.

    நிலத்தை சமப்படுத்துற வேலை கம்ப சூத்திரமா? முடிவெடுக்கிற நிலையில் நாம் இல்லை. இதற்கு டெல்லிக்கு போய் ஒரு நிறுவனத்தை அழைத்து வர வேண்டியுள்ளது. அவர்கள் திட்டமதிப்பீட்டிற்கும், நம் திட்ட மதிப்புக்கும் சம்பந்தம் இல்லை.

    இதை சரிசெய்யும் வரை நாம் உட்கார்ந்திருக்க வேண்டும். சாதாரண வேலையை செய்ய முடியாம ஜவ்வா இழுக்கின்றனர். எரிச்சலாக உள்ளது. ஒரு முடிவு கூட பண்ண முடியவில்லை. எம்.எல்.ஏ.க்கள் சட்டசபையில் லபோ திபோன்னு பேச போறாங்க.

    இவ்வாறு ரங்கசாமி கூறினார்.

    இதை அங்கிருந்த அதிகாரிகள் எந்தவித கருத்தையும் கூறாமல் கப்சிப் என அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தனர்.

    • மகளிர் மேம்பாட்டுக்கு ரூ. ஆயிரத்து 330 கோடி ஒதுக்கப்படும். புதுவையில் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு நடத்தப்படும்.
    • காரைக்கால் அக்கரை வட்டத்தில் நவீன சிறைச்சாலை, அரசு பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-1 வரை சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் கொண்டுவரப்படும்.

    புதுச்சேரி:

    புதுவை சட்டசபையில் ஆண்டு தோறும் மார்ச் மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.

    கடந்த 2011-ம் ஆண்டு முதல் இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப்பட்டு வந்தது. அடுத்த சில மாதங்களில் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.

    இந்த நிலையில் கடந்த 12 ஆண்டுகளுக்கு பிறகு முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்ய முதல்-அமைச்சர் ரங்கசாமி முடிவு செய்தார்.

    இதற்காக மாநில திட்டக்குழு கூட்டத்தை கூட்டி புதுவை மாநிலத்தின் பட்ஜெட் தொகையாக ரூ.11 ஆயிரத்து 600 கோடியை ஒதுக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கு மத்திய அரசும் ஒப்புதல் அளித்தது.

    இதையடுத்து புதுவை சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 9-ந் தேதி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் உரையுடன் தொடங்கியது. தொடர்ந்து 10-ந் தேதி கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது எம்.எல்.ஏ.க்கள் பேசினர்.

    இதைத்தொடர்ந்து இன்று காலை மீண்டும் சட்டசபை கூடியது. நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதல்-அமைச்சர் ரங்கசாமி சரியாக 10.15 மணிக்கு பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசினார். பட்ஜெட்டில் கூறப்பட்ட சிறப்பு அம்சங்கள் வருமாறு:-

    இந்த ஆண்டில் அரசு பள்ளியில் படிக்கும் பிளஸ்-1 மாணவர்களுக்கு இலவச லேப்-டாப் வழங்கப்படும். 70 வயது முதல் 79 வயது வரை உள்ள மீனவ பெண்களுக்கு உதவித்தொகை ரூ.3 ஆயிரத்து 500 ஆக உயர்த்தப்படும்.

    மகளிர் மேம்பாட்டுக்கு ரூ. ஆயிரத்து 330 கோடி ஒதுக்கப்படும். புதுவையில் உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாடு நடத்தப்படும்.

    புதுவையில் வான்கோழிகள் வளர்க்க ஊக்குவிக்க 50 சதவீதம் மானியம், ஆட்டு பண்ணை வைக்க 50 சதவீதம் மானியம், ஆதி திராவிடர்களுக்கு ரூ.9 லட்சம் வரை 100 சதவீதம் மானியம், பிற வகுப்பினருக்கு ரூ.5 லட்சம் வரை 50சதவீதம் மானியம் வழங்கப்படும்.

    காரைக்கால் அக்கரை வட்டத்தில் நவீன சிறைச்சாலை, அரசு பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-1 வரை சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் கொண்டுவரப்படும்.

    எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.2 கோடி ஒதுக்கீடு, புதுவையில் உள்ள கோவில்களில் ஆவணங்கள், சொத்துக்கள் மற்றும் நகைகள் ஆகியவற்றை மின்னனு மையமாக்கப்படும். அதனை பொதுமக்கள் பார்வையிடும் அளவிற்கு ஏற்பாடு செய்யப்படும்.

    புதுவையில் ரேசன் அட்டைதாரர்களுக்கு ரூ.300 கியாஸ் சிலிண்டர் மானியம் வழங்கப்படும்.

    புதுவையில் பிறக்கும் குழந்தைகளுக்கு ரூ.50 ஆயிரம் வைப்புத்தொகை தேசிய வங்கியில் செலுத்தப்படும்.

    தொற்று நோயை கண்டறிய ஆய்வகம் அமைக்கப்படும்.

    50 புதிய மின்சார பஸ்கள் இயக்கப்படும்.

    மணப்பட்டு கிராமத்தில் 100 ஏக்கரில் சுற்றுலா நகரம் ஏற்படுத்தப்படும்.

    அட்டவணை இனத்து பெண்கள் பஸ்களில் இலவசமாக பயணிக்கலாம்.

    இவ்வாறு முதல்-அமைச்சர் ரங்கசாமி பட்ஜெட்டில் அறிவித்தார்.

    • தற்போது நான் முதலமைச்சராக வந்து 2 வருடங்கள்தான் ஆகின்றது. உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறுவது என்ன நியாயம்?
    • ரேஷன் கடை ஊழியர்கள் தங்களுக்கு முடிவு தெரியும் வரை அங்கிருந்து கலைந்து செல்லமாட்டோம் என கூறினர்.

    புதுச்சேரி:

    புதுவை மாநிலத்தில் 326 ரேஷன் கடைகள் உள்ளது. இதில் 600-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை செய்து வருகின்றனர்.

    கடந்த காலங்களில் பொதுமக்களுக்கு இலவச அரிசி வழங்கியதில் கிடைத்த கமிஷன் அடிப்படையில் ரேஷன் ஊழியர்களுக்கு சம்பளம் போடப்பட்டு வந்தது. அப்போதைய கவர்னர் கிரண்பேடி, அரிசிக்கு பதில் பணம் வழங்க உத்தரவிட்டார்.

    இதனால் ரேஷன் கடை ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாமல் போனது. இதனிடையே, கொரோனா காலங்களில் மத்திய அரசு வழங்கிய அரிசியை கமிஷன் அடிப்படையில் விநியோகிக்கும் நடவடிக்கையில் ரேஷன் கடை ஊழியர்கள் ஈடுபட்டனர்.

    ஆனால் அந்த ஊதியமும் இதுவரை வழங்கப்படவில்லை. இதுவரை 55 மாதங்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை.

    இவர்கள் தங்களுக்கு சம்பளம் வழங்க கோரி பலகட்ட போராட்டங்கள் நடத்தியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. நடைபெற்று வரும் சட்டமன்ற கூட்டத் தொடரில் இந்த விவகாரம் எதிரொலித்தது.

    இதுபற்றி எம்.எல்.ஏ.க்கள் பேசுகையில், ரேஷன் கடைகளை மறுபடியும் திறந்து பொருட்களை விநியோகிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

    ஆனால் முதலமைச்சர் ரங்கசாமி எந்த பதிலும் அளிக்கவில்லை. இந்நிலையில் இன்று காலை 8 மணிக்கு ரேஷன் கடை ஊழியர்கள் தங்களது குடும்பத்தினருடன் கோரி மேடு அப்பா பைத்தியசாமி கோவில் பின்புறம் உள்ள முதலமைச்சர் ரங்கசாமியின் இல்லத்தை 100-க்கனக்கானோர் முற்றுகையிட்டனர்.

    ரேஷன் கடைகளை திறந்து நிலுவை சம்பளத்தை வழங்க வேண்டும் என வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். அப்போது முதலமைச்சர் ரங்கசாமி டென்னீஸ் விளையாடிக் கொண்டிருந்தார். இதனால் ஊழியர்கள் தொடர்ந்து கோஷம் எழுப்பியபடி அமர்ந்து இருந்தனர்.

    இதனிடையே விளையாட்டை முடித்து வீடு திரும்பிய முதலமைச்சரிடம் ஊழியர்கள், 15 ஆண்டுகளாக வேலை செய்து வருகிறோம். தற்போது எங்களுக்கு நிரந்தர வேலையும் இல்லை சம்பளமும் வழங்கவில்லை. மருத்துவமனை ஊழியர்களை நிரந்தரம் செய்தது போல் தங்களையும் பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தினர்.

    அப்பொழுது முதலமைச்சர் ரங்கசாமி 7 வருடங்களாக என்ன செய்தீர்கள்.? தற்போது நான் முதலமைச்சராக வந்து 2 வருடங்கள்தான் ஆகின்றது. உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறுவது என்ன நியாயம்? என ஊழியரிடம் பேசிவிட்டு வீட்டிற்குள் சென்றுவிட்டார்.

    இதனையடுத்து அவர்களை கலைந்து செல்லும்படி போலீசார் கூறினர். ஆனால் ரேஷன் கடை ஊழியர்கள் தங்களுக்கு முடிவு தெரியும் வரை அங்கிருந்து கலைந்து செல்லமாட்டோம் என கூறினர். அப்போது போலீசாருக்கும், ரேஷன் கடை ஊழியர்களுக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போலீசார் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

    இதன் பிறகு ரேஷன் கடை ஊழியர்கள் கோரிமேடு போலீஸ் நிலையம் எதிரில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அவர்களை போலீசார் அங்கிருந்தும் கலைந்து போகும்படி எச்சரிக்கை விடுத்தனர். ஆனால் ஊழியர்கள் சாலை மறியலை கைவிடாமல் தொடர்ந்தனர்.

    இதனையடுத்து சாலை மறியலில் ஈடுபட்ட ரேஷன் கடை ஊழியர்களையும் அவர்களது குடும்பத்தினரையும் போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்தனர்.

    ஏற்கனவே இந்திரா காந்தி அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரியில் பணிபுரியும் 700-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி மருத்துவமனை மேலே ஏறி நின்று தற்கொலை முயற்சி போராட்டம் நடத்தினர். அன்று மாலை அனைவருக்கும் பணி நிரந்தரம் செய்து அதற்கான உத்தரவை முதலமைச்சர் ரங்கசாமி வழங்கினார்.

    இதனால் பல்வேறு துறைகளில் பணி நிரந்தரம் செய்யப்படாமல் இருக்கும் ஊழியர்கள் இதுபோன்ற போராட்டங்கள் மூலம் பணி நிரந்தரம் பெற்று விடலாம் என்று எண்ணத்தால் புதுவை முழுவதுமே போராட்டக் களமாக மாறி வருவது குறிப்பிடத்தக்கது.

    • புதுச்சேரியில் மூடப்பட்டுள்ள ரேஷன் கடைகள் மீண்டும் திறக்கப்படும்
    • அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று ரங்கசாமி தெரிவித்தார்.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் பொதுப்பணித் துறையில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களுக்கான ஊதியம் 18 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும் என சட்டசபையில் முதல்வர் ரங்கசாமி அறிவித்தார். அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்றும் தெரிவித்தார்.

    புதுச்சேரியில் மூடப்பட்டுள்ள ரேஷன் கடைகள் மீண்டும் திறக்கப்படும், நியாய விலைக்கடைகளில் 2 கிலோ சர்க்கரை, கோதுமை, சிறுதானியங்களை மானிய விலையில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ரங்கசாமி கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கர்நாடகத்தில் முத்தான திட்டங்களை அறிவித்ததின் மூலம் காங்கிரஸ் வெற்றி பெற்றது.
    • கள்ளக்சாராயம் தயாரிக்க மெத்தனால் புதுச்சேரியில் இருந்துதான் கொண்டு வரப்படுகிறது.

    பழனி:

    புதுச்சேரி மாநில முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி பழனிக்கு சாமி தரிசனம் செய்ய வந்தார். மலைக்கோவிலுக்கு ரோப்கார் மூலம் சென்று சாயரட்சையின்போது தண்டாயுதபாணி சுவாமியை தரிசனம் செய்தார். பின்னர் அடிவாரத்தில் அவர் ஓய்வு எடுத்தார். அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    கர்நாடகத்தில் முத்தான திட்டங்களை அறிவித்ததின் மூலம் காங்கிரஸ் வெற்றி பெற்றது. பா.ஜனதாவை மக்கள் நம்ப தயாராக இல்லை. இனி நடைபெற உள்ள அனைத்து தேர்தல்களிலும் பா.ஜ.க. தோல்வியையே சந்திக்கும்.

    விழுப்புரம் பகுதியில் விஷ சாராயத்தால் பாதிக்கப்பட்டவர்களை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக சென்று பார்த்தது பாராட்டுக்குறியது. வழக்கில் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கள்ளக்சாராயம் தயாரிக்க மெத்தனால் புதுச்சேரியில் இருந்துதான் கொண்டு வரப்படுகிறது. புதுச்சேரியில் கடந்த 1½ ஆண்டுகளாக கள்ளச்சாராயம் அதிகரித்துள்ளது. இதற்கு காரணம் கலால்துறையில் ஊழல் அதிகரித்துள்ளது. இதில் அம்மாநில முதல்வர் நடவடிக்கை எடுக்க வில்லை. கள்ளச்சாரயம், சட்ட ஒழுங்கு பிரச்சினைக்காக போராட்டம் நடத்த உள்ளோம்.

    கவர்னர் தமிழிசை முதலமைச்சர் அதிகாரத்தை கையில் எடுத்துள்ளார். அவரின் கைப்பொம்மையாக புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி செயல்படுகிறார். மாநிலத்தில் தொழில் வளம் முதல் எந்த வளமும் மேம்படுத்தப்படவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பள்ளி மற்றும் கல்லூரி தேர்வில் தோல்வியுற்ற மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளக்கூடாது.
    • முதலமைச்சர், கல்வி அமைச்சர் ஆகியோருடன் கலந்து ஆலோசனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.

    புதுச்சேரி:

    புதுவையில் தனியார் கல்லூரி ஆண்டு விழாவில் பங்கேற்ற கவர்னர் தமிழிசை நிருபர்களிடம் கூறியதாவது:-

    பள்ளி மற்றும் கல்லூரி தேர்வில் தோல்வியுற்ற மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளக்கூடாது. தேர்வு என்பது வாழ்க்கையில் ஒரு பகுதிதான். வாழ்க்கை இன்னும் நிறைய இருக்கிறது. தேர்வு எழுதாதவர் பல பேர் வாழ்க்கையில் முன்னுக்கு வந்துள்ளனர். மாணவர்கள் எந்த ஒரு தவறான முடிவு எடுக்க வேண்டாம்.

    தேர்வுக்கு செல்லும் மாணவர்களுக்கு கவுன்சிலிங் வைக்க வேண்டும், தன்னம்பிக்கை வைக்க மாரல் கிளாசஸ் நடத்த வேண்டும், தற்காப்பு கலைக்கான வகுப்புகள் வைக்க வேண்டும். இது குறித்து முதலமைச்சர், கல்வி அமைச்சர் ஆகியோருடன் கலந்து ஆலோசனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.

    கவர்னருக்கு அதிகாரம் என்பதில் புதுவையில் கவர்னருக்கும், முதலமைச்சருக்கும் எந்த வகையிலாவது கருத்து வேறுபாடு வருமா? என முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி காத்துக்கொண்டிருக்கிறார். எங்களுக்குள் கருத்து வேறுபாடு வராது. டெல்லி நிலை வேறு, புதுவை நிலை வேறு, மற்ற யூனியன் பிரதேசங்களுக்கான நிலை வேறு.

    மக்கள் சார்ந்த விஷயங்கள் புதுவையில் சிறப்பாக நடைபெறுவதுதான் நாராயணசாமிக்கு கவலையாக இருக்கிறது என தெரிவித்தார்.

    அப்போது அவரிடம், மத்திய அரசின் ரூ.2 ஆயிரம் நோட்டு தடை குறித்து கேள்வி எழுப்பியபோது, இந்த தடை பற்றி எனக்கு கவலை இல்லை. நான் போட்டு இருக்கும் கோட்டும் ஒயிட், நோட்டும் ஒயிட். ரூ.2 ஆயிரம் நோட்டு தடை பற்றி இன்னும் அறியவில்லை. விபரங்களை அறிந்து பதிலளிக்கிறேன் என்றார்.

    கவர்னர் தமிழிசை டாக்டர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • மக்களோடு மக்களாக சிக்னலில் நின்று காத்திருந்து பயணம் செய்ய விரும்புகிறேன்.
    • கோடை வெயிலில் மக்கள் சிரமத்தை தவிர்க்க வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுவையில் முதல்-அமைச்சர், அமைச்சர்கள், போலீஸ் டி.ஜி.பி, தலைமை செயலர் ஆகியோர் வாகனங்களில் செல்லும் போது, போக்குவரத்து சிக்னல்கள் நிறுத்தப்பட்டு வி.ஐ.பிக்கள் சென்ற பின்பு சிக்கனல்கள் இயக்கப்படுவது வழக்கம்.

    இதற்கிடையே கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் சிக்னலில் நிற்க மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் பகல் நேரத்தில் முதல்-அமைச்சர் ரங்கசாமியின் வாகனம் சென்றபோது அவருக்காக போக்குவரத்து சிக்னல் நிறுத்தப்பட்டு அவரது வாகனம் சென்ற பின்பு சிக்னல் இயக்கப்பட்டது.

    தனது வாகனத்தால் பொதுமக்கள் வெயிலில் அவதிப்படுவதை கண்ட முதல்-அமைச்சர் ரங்கசாமி போலீசாருக்கு திடீர் உத்தரவு பிறப்பித்தார்.

    எனது வாகனம் செல்லும் போது சிக்னல்களை நிறுத்தி யாரையும் காத்திருக்க வைக்க வேண்டாம். மக்களோடு மக்களாக சிக்னலில் நின்று காத்திருந்து பயணம் செய்ய விரும்புகிறேன்.

    கோடை வெயிலில் மக்கள் சிரமத்தை தவிர்க்க வேண்டும் என தெரிவித்துள்ளார். முதல்-அமைச்சர் ரங்கசாமியின் இந்த உத்தரவை முன் உதாரணமாக கொண்டு அமைச்சர்கள், அதிகாரிகளும் சிக்னலில் காத்திருந்து செல்வார்களா? என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ளது.

    • பல்லுயிர் பேரவையும், வனம் மற்றும் வனவிலங்கு துறையும் இணைந்து நடத்திய சர்வதேச பல்லுயிர் தின விழாவில் ரங்கசாமி கலந்து கொண்டார்.
    • புதுவை வனத்துறை சின்னம் அறிமுகப்படுத்தப்பட்டது.

    புதுச்சேரி:

    கடந்த 13-ந் தேதி காரைக்கால் துறைமுகப்பகுதியில் 45 அடி நீளமுள்ள 15 டன் எடை உள்ள திமிங்கலம் கரை ஒதுங்கியது. அது உயிருடன் இருந்ததால் பட்டினச்சேரி மீனவர்கள் 13 பேரும், துறைமுக ஊழியர்கள் 7 பேரும் கப்பல் படை உதவியுடன் காலை 11 முதல் இரவு 7 வரை மீட்பு பணியில் ஈடுபட்டு மீண்டும் ஆழ்கடலில் சேர்த்தனர்.

    உயிரை பணயம் வைத்து திமிங்கலத்தை கடலுக்குள் கொண்டு செல்ல உதவிய மீனவர்கள், துறைமுக ஊழியர்கள் 20 பேருக்கு தலா ரூ.10 ஆயிரம் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

    புதுவை பல்லுயிர் பேரவையும், வனம் மற்றும் வனவிலங்கு துறையும் இணைந்து நடத்திய சர்வதேச பல்லுயிர் தின விழாவில் முதலமைச்சர் ரங்கசாமி கலந்து கொண்டு இதனை வழங்கினார்.

    மேலும் பல்லுயிர் மேலாண்மைக் குழுக்கள் தொடங்கப்பட்ட 14 கிராம பஞ்சாயத்துகளுக்கு தலா ரூ.60 ஆயிரமும், உழவர்கரை நகராட்சிக்கு ரூ.1 லட்சமும் முதலமைச்சர் ரங்கசாமி வழங்கினார். அத்துடன் புதுவை வனத்துறை சின்னம் அறிமுகப்படுத்தப்பட்டது.

    நிகழ்ச்சியில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர் தேனீ. ஜெயக்குமார், தலைமை வனஉயிரினக் காப்பாளர் வஞ்சுளவள்ளி ஆகியோர் பங்கேற்றனர்.

    ×