என் மலர்
நீங்கள் தேடியது "விசாரணை"
- காங்கிரஸ் தலைவர்களும் பாராளுமன்ற சாலை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
- பாராளுமன்ற வளாகத்தில் ராகுல் மீது தாக்குதல் நடத்த முயற்சி நடந்தது.
புதுடெல்லி:
பாராளுமன்ற வளாகத்தில் நேற்று நடந்த தள்ளு முள்ளுவில் பா.ஜ.க. எம்.பி.க்கள் 2 பேர் காயம் அடைந்தனர். இதையடுத்து பாராளுமன்ற சாலை போலீஸ் நிலையத்தில் பா.ஜ.க. சார்பில் புகார் அளிக்கப்பட்டது.
அந்த புகாரில், ராகுல் காந்தி வேண்டும் என்றே தள்ளிவிட்டதால் பா.ஜ.க. எம்.பி.க்கள் காயம் அடைய நேரிட்டது என்று குறிப்பிடப்பட்டது.
இதையடுத்து பாராளுமன்ற சாலை போலீசார் 5 பிரிவுகளில் ராகுல்காந்தி மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். பிரிவு 117 (படுகாயம் ஏற்படுத்துதல்), 125 (பிறர் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துதல்), 131 (குற்றவியல் பலவந்தப்டுத்துதல்), 351 (வன்முறை), பிரிவு3 (5) (உள்நோக்கத்துடன் செயல்படுத்துதல்) ஆகிய 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பாராளுமன்ற சாலை போலீசாரிடம் பா.ஜ.க. தலைவர்கள் பிரிவு 109 (கொலை முயற்சி) சட்டத்தின்படி ராகுல் மீது வழக்குப்பதிவு செய்ய வலியுறுத்தினார்கள். ஆனால் அதை போலீசார் ஏற்கவில்லை.
என்றாலும் ராகுல் மீது வழக்குப்பதிவு செய்து இருப்பதால் அவரிடம் விசாரணை நடத்துவது பற்றி பாராளுமன்ற சாலை போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள். இது தொடர்பாக அவர்கள் சபாநாயகர் ஓம்பிர்லாவுக்கு கடிதம் எழுதி இருக்கிறார்கள்.
பாராளுமன்ற வளாகத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்ட பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களில் பதிவாகி இருக்கும் காட்சிகளை ஆய்வு செய்ய அனுமதி கோரியுள்ளனர். அதன் அடிப்படையில் ராகுலிடம் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
ராகுலை விசாரணைக்கு ஆஜராக வருமாறு சம்மன் அனுப்பவும் போலீசார் ஆலோசனை நடத்தி வருகிறார்கள். இது காங்கிரஸ் தலைவர்களிடம் அதிர்ச்சியையும், அதிருப்தியையும் ஏற்படுத்தி இருக்கிறது.
இதையடுத்து காங்கிரஸ் தலைவர்களும் பாராளுமன்ற சாலை காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளனர்.
அவர்கள் புகார் மனுவில், "பாராளுமன்ற வளாகத்தில் ராகுல் மீது தாக்குதல் நடத்த முயற்சி நடந்தது. இது தொடர்பாக பா.ஜ.க. தலைவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறியுள்ளனர். ஆனால் இதுவரை காங்கிரசார் கொடுத்த புகார் மனு மீது போலீசார் எந்த வழக்கும் பதிவு செய்யவில்லை.
போலீசார் வழக்குப்பதிவு செய்து இருப்பது அம்பேத்கர் விவகாரத்தில் ராகுலுக்கு அளிக்கப்பட்ட கவுரவம் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணு கோபால் எக்ஸ் வலை தளத்தில் குறிப்பிட்டுள்ளார். அந்த பதிவில் அவர் மேலும் கூறுகையில், "ராகுல் மீது இதுவரை 26 எப்.ஐ.ஆர். போடப்பட்டுள்ளது. பா.ஜ.க.வின் இந்த அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை களுக்கு பயப்பட மாட் டோம்" என்று கூறியுள்ளார்.
மேலும் காங்கிரஸ் பெண் எம்.பி.க்கள் பா.ஜ.க. தலை வர்கள் மீது கொடுத்த புகா ரின் மீது போலீசார் ஏன் வழக்குப்பதிவு செய்ய வில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.
- மோப்பநாய் வரவழைக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது.
- பெண் உள்பட 4 பேரை போலீசார் சந்தேகத்தின் பேரில் விசாரணை.
கோவில்பட்டி:
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி காந்திநகர் பகுதியை சேர்ந்த கார்த்திக் முருகன். தொழிலாளி. இவரது மனைவி பாலசுந்தரி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இளையமகன் கருப்பசாமி. அப்பகுதியில் உள்ள நகராட்சி பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தான்.
இந்நிலையில் நேற்று முன்தினம் பெற்றோர் வேலைக்கும், அவர்களது மூத்த மகன் பள்ளிக்கு சென்று விட்டனர். கருப்பசாமிக்கு உடல்நிலை சரியில்லாததால் அவர் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது வீட்டில் இருந்த மாணவன் திடீரென மாயமானார்.
இது தொடர்பான புகாரின் பேரில் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 தனிப்படைகள் அமைத்து சிறுவனை தேடி வந்த நிலையில் நேற்று காலையில் சிறுவனின் வீட்டின் அருகே இருந்த பக்கத்து வீட்டு மொட்டை மாடியில் சிறுவன் கருப்பசாமி சடலமாக மீட்கப்பட்டார்.
சிறுவன் மாயமான போது அவர் அணிந்திருந்த 1½ பவுன் நகைகள் மாயமாகி இருந்ததால் அவர் நகைக்காக கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.
கருப்பசாமி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனைக்கு பின்னர் சிறுவனின் உடல் நேற்று இரவு நல்லடக்கம் செய்யப்பட்டது.
இந்நிலையில் அதிக அழுத்தம் காரணமாக சிறுவன் கருப்பசாமி மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்திருக்க வாய்ப்பு இருப்பதாகவும், வாய் மற்றும் உதடு பகுதியில் காயங்கள் இருப்பதாகவும் பிரேதபரிசோதனை தகவலில் தெரிய வந்திருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதனால் அவர் கொலை செய்யப்பட்டிருப்பதை போலீசார் உறுதிபடுத்துகின்றனர்.
அதன்படி குற்றவாளிகளை பிடிக்கும் நோக்கில் நேற்று இரவும் சிறுவனின் வீட்டு பகுதியில் உள்ள வீடுகளில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினர். மேலும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது. மோப்பநாய் அந்த வீட்டு பகுதியில் சுற்றி வந்தது.
மேலும் கடந்த 2 நாட்களாக அப்பகுதியில் இருந்த செல்போன் அழைப்பு விவரங்களையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். இதற்கிடையே இந்த வழக்கு தொடர்பாக பெண் உள்பட 4 பேரை போலீசார் சந்தேகத்தின் பேரில் பிடித்து ரகசிய விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பேசுவதால் அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து போலீசார் கூறும்போது, இந்த வழக்கில் குற்றவாளிகளை விரைந்து பிடிக்க போதிய நடவடிக்கை எடுத்து வருவதாகவும், 3 தனிப்படைகள் அமைத்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருவதாகவும் விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என்றும் தெரிவித்தனர்.
- சுரேஷ் கோபியின் குடும்ப வீட்டில் திருட்டு நடந்துள்ளது.
- திருட்டு போன பொருட்கள் குறித்த விவரம் வெளியிடப்படவில்லை.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் கொல்லத்தை சேர்ந்த பிரபல திரைப்பட நடிகர் சுரேஷ் கோபி. இவர் கேரள மாநிலத்தில் கடந்த ஏப்ரல் மாதத்தில் நடந்த மக்களவை தேர்தலில் திருச்சூர் தொகுதியில் பா.ஜ.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இதன் மூலம் கேரளாவின் முதல் பா.ஜ.க. எம்.பி. ஆனார். இதையடுத்து அவருக்கு மத்திய மந்திரி பதவியும் வழங்கப்பட்டது. அவர் மத்திய பெட்ரோலிய-இயற்கை எரிவாயு துறை மற்றும் சுற்றுலாத்துறை மந்திரியாக இருந்து வருகிறார்.
இந்தநிலையில் கொல் லத்தில் உள்ள மத்திய மந்திரி சுரேஷ் கோபியின் குடும்ப வீட்டில் திருட்டு நடந்துள்ளது. அவரது வீட்டில் இருந்து பொருட்களை யாரோ மர்மநபர்கள் திருடிச்சென்றுள்ளனர். இதுகுறித்து கொல்லம் இரவிபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.
அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்பநாய்கள் வரவழைக்கப்பட்டு துப்பு துலக்கப்பட்டது. திருட்டு தொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மத்திய மந்திரி சுரேஷ் கோபி வீட்டில் திருட்டு போன பொருட்கள் குறித்த விவரம் வெளியிடப்படவில்லை.
- முர்ஷிதாபாத் மாவட்டத்தில் உள்ள கயர்தலா பகுதியில் நேற்று இரவு இந்த சம்பவம் நடந்துள்ளது
- சம்பவ இடத்தில் போலீசார் குவிக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
மேற்கு வங்கத்தில் வீட்டில் நாடு வெடிகுண்டு தயாரிக்கும்போது ஏற்பட்ட வெடிவிபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.
மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் உள்ள கயர்தலா பகுதியில் நேற்று இரவு இந்த சம்பவம் நடந்துள்ளது. மாமுன் மொல்லா என்பவரது வீட்டில் நாட்டு வெடிகுண்டுகள் தயாரிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
நேற்றிரவு பெரும் வெடிச்சத்தம் கேட்டதாகவும் ஆனால் அதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை என்றும் அக்கம்பக்கத்தினர் தெரிவித்தனர்.
VIDEO | West Bengal: At least three people have been reportedly killed in an explosion at a house in #Murshidabad. More details are awaited.(Full video available on PTI Videos - https://t.co/n147TvqRQz) pic.twitter.com/lgU9zOSFsa
— Press Trust of India (@PTI_News) December 9, 2024
இந்த சம்பவத்தில் மாமுன் மொல்லா, சகிருல் சர்க்கார் மற்றும் முஸ்தாகின் ஷேக் ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.
இந்த வெடிவிபத்தில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது. சம்பவ இடத்தில் போலீசார் குவிக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
- மாணவ-மாணவிகள் இன்று காலை பள்ளியை புறக்கணித்து தர்ணா.
- மாணவ-மாணவிகளிடம் தனித்தனியாக ரகசியமாக விசாரணை.
சோழவந்தான்:
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகா விக்கிரமங்கலம் பகுதியில் உள்ள அரசு கள்ளர் பள்ளியில் 11-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் நேற்று மதுரை கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்.
அந்த மனுவில், நான் பள்ளி விடுதியில் தங்கி பிளஸ்-1 வகுப்பு படித்து வருகிறேன். இந்த பள்ளிக்கு வந்து சேர்ந்த புதிதில் இங்கு பணியாற்றி வரும் ஆசிரியர் மூர்த்தி என்னை அடிக்கடி அழைத்து பேசுவார். நான் ஆசிரியர் என்ற முறையில் பேசி வந்தேன்.
ஒரு நாள் அவரது அறைக்கு என்னை மட்டும் வரச்சொன்னார். உள்ளே சென்றபோது என்னை சுவற்றில் சாய்த்து உடல் முழுவதும் முகர்ந்து உதட்டில் முத்தம் கொடுத்து தகாத செயலில் ஈடுபட்டார்.
பின்னர் உனக்கு இது பிடித்திருந்தால் தினமும் இதே மாதிரி செய்கிறேன் என்று என்னை வற்புறுத்தினார். ஆசிரியர் மீதான பயத்தால் யாரிடமும் சொல்லாமல் மவுனம் காத்து வந்தேன்.
ஆசிரியர் மூர்த்தி ஒருவர்தான் எங்களுக்கு அனைத்து படங்களையும் எடுத்ததால் என்னால் என் படிப்பிற்கு பிரச்சனை வந்து விடும் என்று பயந்து யாரிடமும் சொல்லவில்லை.
மேலும் அவரிடம் படித்த மாணவர்கள் பல்வேறு அரசு மற்றும் தனியார் துறைகளில் உயர் பொறுப்புகளில் இருந்தததால் இதை வெளியில் சொன்னால் எதுவும் நடக்காது என்று அமைதியாக இருந்துவிட்டேன்.
நாளுக்கு நாள் அத்துமீறல் அதிகமானதால் இதை எனது தோழிகளிடம் சொன்னேன். அவர்கள் உனக்கு மட்டும் இப்படி நடக்கவில்லை, இதேபோல் இந்த பள்ளியில் பலருக்கு நடந்துள்ளது என்றனர்.
இதைக்கேட்டு நான் அதிர்ச்சி அடைந்தேன். அவரின் தொடர்ச்சியான தொந்தரவுகளால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்தேன்.
மேலும் ஆசிரியர் மூர்த்தி ஆசிரியர் என்னிடம் போக போக உனக்கு பழகிவிடும் என்றும், என்னுடைய வாரிசு உன்னுடைய வயிற்றில் வளரும் எனவும் பலமுறை கூறியிருக்கிறார். அவரின் ஆசைக்கு சில சமயம் இணங்க மறுத்ததால் என்னை பயமுறுத்தும் உள்நோக்கத்தோடு உள்ளூர் மாணவர் ஒருவரை அடித்து மண்டையை உடைத்துள்ளார்.
எனக்கு மட்டும் இவ்வாறு நடக்கவில்லை எனவும் பள்ளி விடுதியில் தங்கி இருக்கும் பெரும்பாலான மாணவிகளுக்கு இந்த மாதிரி பாலியல் தொந்தரவு ஆசிரியர் மூர்த்தியால் நடந்துள்ளது.
இவரின் சீண்டல்கள் எல்லை மீறவே இந்த சம்பவம் குறித்து எனது பெற்றோர்களிடம் சொல்லி விட்டு தற்கொலை செய்து கொள்ளலாம் என முடிவெடுத்து பெற்றோரிடம் சொன்னேன். அதற்கு நீ இறந்ததற்கு பிறகு இந்த உலகத்தில் நாங்களும் வாழ விரும்பவில்லை. ஆகவே மூவரும் சேர்ந்து தற்கொலை செய்து கொள்ளலாம் என்று எனது பெற்றோர்கள் சொன்னதன் பேரில் நடந்த சம்பவத்தைச் சொன்னேன். எனக்கும் எனது குடும்பத்தினருக்கும் ஏதாவது விபரீதம் நடந்தால் அதற்கு மூர்த்தி ஆசிரியரே முழு பொறுப்பாகும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.
மேலும் அந்த மனுவில் அதே பள்ளியை சேர்ந்த சில மாணவிகள் தங்கள் கைப்பட எழுதிய மனுவும் இணைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் ஆசிரியர் மூர்த்தி என்பவர் மீது மாணவி அளித்த புகார் குறித்து தகவல் அறிந்த அரசு பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகள் இன்று காலை பள்ளியை புறக்கணித்து பள்ளி நுழைவு வாயில் முன்பு சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சுமார் 1000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆசிரியருக்கு ஆதரவாக கோஷம் எழுப்பி, போலி புகார் மீது நடவடிக்கை எடுக்காதே என்பது உள்ளிட்ட பல்வேறு வாசகங்களை ஏந்தி பங்கேற்றனர்.
இதனால் பள்ளி வளாகம் முழுவதும் பரபரப்பாக காணப்பட்டது. தகவல் அறிந்த செக்கானூரணி போலீஸ் இன்ஸ்பெக்டர் திலகரணி மற்றும் போலீசார் விரைந்து சென்று மாணவ, மாணவிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தினார்.
பள்ளி தலைமை ஆசிரியரும் மாணவர்களுடன் பேசினார். இதில் உடன்பாடு ஏற்பட்டதால் பள்ளி மாணவர்கள் கலைந்து வகுப்புகளுக்கு சென்றனர்.
இதற்கிடையே ஆசிரியர் மூர்த்தியிடம் பயின்ற மாணவர் ஒருவர் தற்போது அதே பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். தன்னிடம் டியூசன் படிக்காமல், பலர் மூர்த்தியிடம் டியூசனுக்கு செல்வது பிடிக்காமல் அவர் சில மாணவிகளை ஆசிரியர் மூர்த்திக்கு எதிராக திசை திருப்பிவிட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்தநிலையில் ஆசிரியர் மூர்த்தி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். முறையாக விசாரணை நடத்தி உண்மை இருக்கும் பட்சத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உசிலம்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் கூறினார்.
தற்போது பள்ளியில் அரையாண்டு தேர்வுகள் நடைபெற உள்ள நிலையில் பள்ளி மாணவ மாணவிகள் ஆசிரியர் ஆதரவாக வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெருப்பில்லாமல் புகையாது என்ற பழமொழிக்கு ஏற்ப ஆசிரியர் மீது மாணவிகள் புகார் அளித்த போதிலும், உண்மைத் தன்மை குறித்து கண்டறிய ஒரு குழு அமைத்து ஒவ்வொரு மாணவ-மாணவிகளிடம் தனித்தனியாக ரகசியமாக கருத்துக்களை கேட்டு அறிந்தால் மட்டுமே குட்டு வெளிப்படும்.
- டியூசன் முடித்து வீடு திரும்பிக்கொண்டிருந்த அந்த 19 வயது இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்தார்
- ரெயிலில் மாற்றுத்திறனாளி பெட்டிகளில் பயணிக்கும் பெண்களையே இவர் குறிவைத்துள்ளார்.
குஜராத்தில் 19 வயது இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நபரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்துள்ளன.
கடந்த நவம்பர் 14 ஆம் தேதி குஜராத் உத்வாடா ரயில் நிலையத்திற்கு அருகே செல்லும் தண்டவாளத்திற்கு அருகில் 19 வயது இளம்பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. தடயவியல் பரிசோதனையில் அந்தப் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
கொலை தொடர்பாக வல்சாத் மாவட்ட காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியது. உத்வாடா ரெயில் நிலைய சிசிடிவிகள் ஆராயப்பட்டன. பெண்ணின் உடல் அருகே மீட்கப்பட்ட அதே மாதிரியான ஆடைகளை அணிந்த நபர் ஒருவர் கொலை நடந்ததற்குப் பின்னர் ரெயில் நிலையத்தில் அமர்ந்து உணவு சாப்பிடுவது சிசிடிவியில் பதிவாகி இருந்தது.
அந்த சந்தேகத்துக்கிட்டமான நபரை தேடுதல் குழுக்கள் அமைக்கப்பட்டன. தேடுதல் வேட்டையின் இறுதியில் கடந்த நவம்பர் 24 ஆம் தேதி குஜராத்தின் வல்சாத்தில் உள்ள வாபி ரயில் நிலையத்திலிருந்து கைது செய்யப்பட்டார். அந்த நபர் ஹரியானா மாநிலம் ரோஹ்தக்கை சேர்ந்த ராகுல் கரம்வீர் ஜாட் என்று கண்டறியப்பட்டது.
கொலை நடந்த அன்றைய தினம் அப்பகுதியில் தான் வேலை செய்த ஓட்டலில் தனது சம்பளத்தை வாங்குவதற்காக வந்திருந்த அவர் டியூசன் முடித்து வீடு திரும்பிக்கொண்டிருந்த அந்த 19 வயது இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றுவிட்டு ரெயில் நிலையத்தில் அமர்ந்து உணவு சாப்பிட்டுள்ளார் . அந்த பெண் தனது செல்போனை பார்த்து சிரித்துக்கொண்டிருந்தது தன்னைப் பார்த்து சிரிப்பது போல் இருந்ததாக கருதி அவரை கொலை செய்ததாக ராகுல் தெரிவித்துள்ளார்.
ராகுல் கரம்வீர் ஜாட் இந்த ஒரு கொலை மட்டுமல்லாது குறைந்தது 5 பேரை கொலை செய்ததைப் போலீசிடம் ஒப்புக்கொண்டுள்ளார். அவர் கைது செய்யப்படும் நவம்பர் 24 ஆம் தேதிக்கு முந்தைய தினம் தெலங்கானா மாநிலம் செகந்திராபாத் ரெயில் நிலையம் அருகே பெண் ஒருவரிடம் கொள்ளையடித்து அவரை கொலை செய்திருக்கிறார்.
கடந்த அக்டோபர் இறுதியில் மகாராஷ்டிராவில் சோலாப்பூர் ரெயில் நிலையம் அருகே பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்துள்ளார். பின்னர் மேற்கு மேற்கு வங்காளம் ஹவுரா ரெயில் நிலையம் அருகே காதிஹார் எக்ஸ்பிரஸ் ரெயிலில் பீடி கேட்டு குடுக்கவில்லை என முதியவர் ஒருவரை கொலை செய்துள்ளார். கர்நாடகா மாநிலம் முல்கி பகுதியில் ரெயில் பயணி ஒருவரை கொலை செய்துள்ளார்.
பெரும்பாலும் ஒரு இடத்தில் இருக்காமல் பயணித்துக் கொண்டே இருப்பதால் அவரை பிடிப்பதில் அந்தந்த மாநில காவல்துறையினருக்குச் சிரமம் ஏற்பட்டுள்ளது. பெரும்பாலான சமயங்களில் ரெயில் நிலைய நடைமேடைகளிலேயே அவர் இரவில் தூங்கியுள்ளார்.
சுமார் 2000 சிசிடிவி கேமராக்களை ஆராய்ந்த பின்னர் அவர் தற்போது போலீசில் சிக்கியுள்ளார். ரெயிலில் மாற்றுத்திறனாளி பெட்டிகளில் பயணிக்கும் பெண்களையே இவர் குறிவைத்துள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. திருட்டு வழக்கில் கைதுசெய்யப்பட்டு ஜோத்பூர் மத்திய சிறையில் இருந்த இவர் இந்த ஆண்டு சமீபத்தில்தான் விடுவிக்கப்பட்டிருக்கிறார்.
ராகுல் கரம்வீர் ஜாட்-டின் தந்தை காலமான பின்னர் குற்ற செயல்களில் ஈடுபட இவரை குடும்பத்தினர் ஏற்க மறுத்துவிட்டதாகவும் ஐந்தாம் வகுப்பில் படிப்பை நிறுத்திவிட்டு, ராஜஸ்தான், ஹரியானா மற்றும் உத்தரப் பிரதேசத்தில் பல்வேறு திருட்டு சம்பவங்களில் இவர் ஈடுபட்டுள்ளார் என்றும் போலீசார் தெரிவிக்கின்றனர். தற்போது இவர் மீது 13 எப்ஐஆர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
- 37 வயதுடைய நபரை காவல்துறை கடந்த திங்கள்கிழமை அன்று காவலில் எடுத்ததாக விசாரித்துள்ளனர்.
- யோசிக்கும்போது என் உள்ளங்கைகள் வியர்த்துவிடும்.
ஜப்பானில் சுமார் 1000 வீடுகள் வரை அத்துமீறி நுழைந்த குற்றவாளி ஒருவர் அதற்காகக் கூறியுள்ள காரணம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜப்பான் நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள Dazaifu என்ற நகரில் மற்றவர் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்ததாகச் சந்தேகத்தின் பேரில் 37 வயதுடைய நபரை காவல்துறை கடந்த திங்கள்கிழமை அன்று காவலில் எடுத்ததாக விசாரித்துள்ளனர்.
விசாரணையில் தான் 1000 வீடுகளுக்குக்கள் இதுவரை அத்துமீறிப் புகுந்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார். அவ்வாறு மற்றவர் வீடுகளுக்குள் அத்துமீறி நுழைவது தனது மன அழுத்தத்தைக் குறைப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
"மற்றவர்களின் வீடுகளுக்குள் அத்துமீறி நுழைவது என்னுடைய ஒரு பொழுதுபோக்காகும், நான் அதை 1,000 தடவைகளுக்கு மேல் செய்துள்ளேன், யாராவது என்னைக் கண்டுபிடிப்பார்களா இல்லையா என்று யோசிக்கும்போது என் உள்ளங்கைகள் வியர்த்துவிடும்.
அந்த உணர்வினால் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன், இது என் மன அழுத்தத்தைக் குறைக்கிறது" என்று அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
அந்நாட்டின் மைனிச்சி ஷிம்பன் [Mainichi Shimbun] செய்தித்தாள் இந்த செய்தியை வெளியிட்டது. இதைத்தொடர்ந்து இணையத்திலும் இது பேசுபொருளாகி வருகிறது.
- குவாத் கிராமத்தை சேர்ந்த 5 பேர் விசாரணைக்காக ராணுவ முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
- காவல்துறையும் விசாரணை நடத்தி வருவதாக மூத்த காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தடுப்பு நடவடிக்கை ஆப்ரேஷனின் போது பொதுமக்களை ராணுவத்தினர் அடித்துத் துன்புறுத்தியதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கடந்த நவம்பர் 20 ஆம் தேதி ஜம்மு காஷ்மீரின் கிஷ்த்வார் [Kishtwar] மாவட்டத்தில் பயங்கரவாதிகளைத் தேடும் பணியில் இந்திய ராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்.
குவாத் கிராமத்தை சேர்ந்த 5 பேரை விசாரணைக்கு ராணுவ முகாமுக்கு அழைத்துச் சென்ற ராஷ்டிரிய ரைபிள்ஸ் படைப்பிரிவு வீரர்கள் முகல் மைதான் என்ற பகுதியில் வைத்து அவர்களை அடித்துத் துன்புறுத்தியது தொடர்பாக வீடியோ ஒன்று வெளியானது.
இது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் கிஷ்த்வார் பகுதியில் நடந்த இந்த சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக ராணுவம் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
Based on specific intelligence of the move of a group of terrorists in the #Kishtwar Sector, an operation was launched by #RashtriyaRifles on 20 November 2024.There are some reports on the alleged ill treatment of civilians during the conduct of the operation. An investigation…
— White Knight Corps (@Whiteknight_IA) November 21, 2024
குற்றச்சாட்டுத் தொடர்பாக காவல்துறையும் விசாரணை நடத்தி வருவதாக கிஷ்த்வார் மாவட்ட மூத்த காவல் கண்காணிப்பாளரும் தெரிவித்துள்ளார்.
- கஸ்தூரிக்கு சம்மன் அனுப்பி நேரில் விசாரிக்க போலீசார் முடிவு.
- கஸ்தூரி தனது கருத்துக்கள் அனைத்தையும் திரும்ப பெறுவதாக கூறியிருக்கிறார்.
சென்னை:
சென்னை எழும்பூரில் இந்து மக்கள் கட்சி சார்பில் பிராமணர்களை பாது காப்பதற்காக வன்கொடுைம தடுப்பு சட்டத்தை போல புதிய சட்டத்தை கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தி அக்கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு பேசிய நடிகை கஸ்தூரி தெலுங்கு பேசும் பெண்கள் பற்றி அவதூறான கருத்துக்களை கூறியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அவர் மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அனைத்து தெலுங்கு சங்கம் சார்பில் எழும்பூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
இதன்படி கஸ்தூரி மீது கலவரத்தை தூண்டுதல், 2 பிரிவினரிடையே மோதலை ஏற்படுத்துதல் உள்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து எழும்பூர் போலீசார் கஸ்தூரியிடம் விசாரணை நடத்த முடிவு செய்திருப்ப தாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அவருக்கு சம்மன் அனுப்புவது தொடர்பாக சட்ட நிபுணர்களுடன் போலீசார் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.
கஸ்தூரிக்கு சம்மன் அனுப்பி குறிப்பிட்ட நாளில் நேரில் வரவழைக்க போலீசார் முடிவு செய்திருப்பதாக தெரிகிறது.
இதற்கிடையே கஸ்தூரி தனது கருத்துக்கள் அனைத்தையும் திரும்ப பெறுவதாகவும், மன்னிப்பு கேட்பதாகவும் கூறியிருக்கிறார். இது பற்றியும் ஆலோசித்து வருவதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
- பிரேத பரிசோதனைக்காக கால்நடை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
- கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர்.
திருப்பதி:
தெலுங்கானா மாநிலம், ராஜ்ண்ணா சிர்சில்லா மாவட்டம், நம்பள்ளி கிராமத்தின் புறநகர் பகுதியில் 30 குரங்குகள் மர்மமான முறையில் இறந்து கிடந்தன. இதுகுறித்து வனத்துறையினருக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர்.
வனத்துறையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். இறந்து கிடந்த குரங்குகளை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கால்நடை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து குரங்குகளை யாராவது விஷம் வைத்து கொன்றார்களா? அல்லது வேறு எதாவது காரணமா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர்.
போலீசார் கூறுகையில், பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகு குரங்குகள் இறந்ததற்கான காரணம் தெரிய வரும் என்றனர்.
- பாபா சித்திக் கொலை தொடர்பாக இதுவரை 4 பேரை மும்பை போலீஸ் கைது செய்துள்ளது.
- அவரின் வீடு மற்றும் அலுவலகத்தை 25 நாட்களாக இவர்கள் நோட்டம் விட்டுள்ளனர்.
கான்டிராக்ட் - பாபா சித்திக்
துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டு கைதானவர்கள், என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. இதையடுத்து, பாபா சித்திக்கை கொல்ல சதி திட்டம் தீட்டியதாக புனேவைச் சேர்ந்த பிரவின் லொங்கார் என்பவரும் மூன்றாவதாக கைது செய்யப்பட்டார்.
மகாராஷ்டிர முன்னாள் அமைச்சரும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவருமான பாபா சித்திக் கடந்த சனிக்கிழமை அன்று மும்பையில் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது கொலையை பிரபல தாதா லாரன்ஸ் பிஸ்னோய் கும்பல் கான்டிராக்ட் கில்லர்கள் மூலம் நடத்தியதாக நம்பப்படுகிறது.
பாலிவுட் நடிகர் சல்மான் கானை குறிவைக்கும் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் அவருக்கு உதவி செய்ததாகப் பாபா சித்திக்கை கொன்றுள்ளது. சல்மானுக்கு உதவும் அனைவருக்கும் இதே கதிதான் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது. பாபா சித்திக் கொலை தொடர்பாக இதுவரை 4 பேரை மும்பை போலீஸ் கைது செய்துள்ளது.
கில்லர்ஸ்
இதில் தொடர்புடைய மேலும் மூவர் தலைமறைவாகியுள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. தற்போது கைது செய்யப்பட்ட நால்வரின் பாபா சித்திக்கை சுட்ட உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த குர்மைல் பல்ஜித் சிங் (23), மற்றும்அரியானாவைச் சேர்ந்த தர்மராஜ் ராஜேஷ் காஷ்யப் (19) ஆகிய இருவர் முக்கிய குற்றவாளிகளாகக் கண்டறியப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். கொலை நடந்த அன்றைய தினம் பாபா சித்திக் , பாந்திரா தொகுதி எம்.எல்.ஏ வான ஜீஸ்கான் உடைய அலுவலகத்தில் வெளியே வந்துகொண்டிருந்தபோது காவலர்களை திசை திருப்ப பட்டாசு வெடித்துள்ளனர்.
யூடியூப் பள்ளி
கொலையாளிகள் 6 ரவுண்டுக்குள் துப்பாக்கியால் சுட்டதில் 3 பாபா சித்திக் மீது பட்டுள்ளது. மற்றொரு குண்டு அருகில் இருந்தவரரின் காலில் பட்டுள்ளது. கொலைக்கு பயன்படுத்தப்பட்ட 7.62 mm துப்பாக்கி போலீசாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. இதற்கிடையே கொலையாளிகளிடம் நடந்து வரும் விசாரணையில் உண்மை ஒவ்வொன்றாக வெளியே வந்த வண்ணம் உள்ளது.
இந்த கொலையை கச்சிதாக செய்துமுடிக்க கொலையாளிகள் குர்மைல் சிங் மற்றும் தர்மராஜ் இருவரும் யூடியூப் வீடியோக்களை பார்த்து துப்பாக்கி சுட கற்றுக்கொண்டதாக விசாரணையில் வந்துள்ளது. மேகசின் இல்லாத துப்பாக்கியை வைத்து பல நாட்களாக பயிற்சி எடுத்துவந்துள்ளனர். கொலையை நிகழ்த்திய கும்பலுக்கு பாபா சித்திக்கை அடையாளம் காட்டுவ தற்காக அவரது புகைப் படத்தை வழங்கி உள்ளனர். வாட்சப் இன்ஸ்டாகிராம் மூலம் தகவல் பரிமாற்றம் நடந்துள்ளது.
டீலர்
பாபா சித்திக் கொலை செய்யும் அந்த நாளுக்கு முன்னதாகவே அவரின் வீடு மற்றும் அலுவலகத்தை 25 நாட்களாக இவர்கள் நோட்டம் விட்டுள்ளனர். இஅவ்ர்களைத் தவிர உ.பி.யை சேர்ந்த ஹரிஷ்குமார் பாலாக்ராம் என்றனவர் இவர்களுக்கு கொலைக்கான பொருளாதார உதவிகளை அளித்து கொலைக்கான மூளையாக செயல்பட்டதாக கைது செய்யவிட்டார். இவர் புனேவில் பழைய இரும்புகளை வாங்கி விற்கும் டீலர் என்றும் தெரியவந்துள்ளது. இதற்கிடையே சல்மான் கான் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் அவருக்கான பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- விமானத்தில் ஹைட்ராலிக் தோல்வி ஏற்பட்டதற்கான காரணத்தை ஆய்வு செய்யுமாறு உத்தரவிடப்பட்டது.
- சென்னையில் இருந்து வந்த அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சியில் இருந்து சார்ஜா புறப்பட்ட விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் தொழில்நுட்ப கோளாறு கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, விமானம் திருச்சிக்கே திரும்பியது.
141 பயணிகளுடன் திருச்சியில் இருந்து புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் தரையிறங்க முடியாமல் கிட்டத்தட்ட 2 மணி நேரத்திற்கும் அதிகமாக வானத்தில் வட்டமடித்த நிலையில், விமானம் பத்திரமாக தரையிறங்கியது.
இதைதொடர்ந்து, விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்ட விவகாரம் குறித்து ஆய்வு செய்ய சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகத்திற்கு மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சகம் உத்தரவிட்டது.
மேலும், விமானத்தில் ஹைட்ராலிக் தோல்வி ஏற்பட்டதற்கான காரணத்தை ஆய்வு செய்யுமாறு உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில், திருச்சி விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு தொடர்பாக வானூர்தி இயக்கக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
எரிபொருளை குறைத்த பின், தரை இறக்கப்பட்டு 140 பயணிகளும் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில், தொழில்நுட்ப கோளாறு தொடர்பாக விசாரிக்கப்படுகிறது.
அதன்படி, விமான பைலட், விமான ஊழியர்களிடம் சென்னையில் இருந்து வந்த அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பைலட் மற்றும் கண்ட்ரோல் ரூம் இடையிலான உரையாடல் குறித்த ஆடியோ பதிவை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
விசாரணையை தொடர்ந்து, டெல்லியில் உள்ள வானூர்தி இயக்கக அதிகாரிகளுக்கு அறிக்கையாக சமர்ப்பிப்பார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.