என் மலர்tooltip icon
    • இப்போட்டி தொடங்கும் முன்னரே மழை பெய்த காரணத்தால் ஆட்டம் 42 ஓவர்களாக குறைக்கப்பட்டது.
    • 43 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை நியூசிலாந்து வீழ்த்தியது.

    நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பாகிஸ்தான் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரண்டு ஒருநாள் போட்டியிலும் நியூசிலாந்து அணியானது வெற்றிபெற்றதுடன், 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.

    இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. இப்போட்டி தொடங்கும் முன்னரே மழை பெய்த காரணத்தால் ஆட்டம் 42 ஓவர்களாக குறைக்கப்பட்டது.

    இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி கள்மிறங்கிய நியூசிலாந்து 42 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 264 ரன்களைச் சேர்த்தது. அதிகபட்சமாக பிரேஸ்வெல் 59, ரைஸ் மாரியூ 58 ரன்கள் எடுத்தனர். பாகிஸ்தான் அணி தரப்பில் அகிஃப் ஜாவெத் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

    இதனையடுத்து பாகிஸ்தான் அணி களமிறங்கியது. பாகிஸ்தானுக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. தொடக்க வீரர் இமாம் காயமடைந்தார். ஒரு ரன் எடுக்க ஓடும் போது பீல்டர் கீப்பரிடம் வீசிய பந்து அவரது ஹெட்மெட்டுக்குள் புகுந்ததில் அவர் காயமடைந்தார். இதனால் அவர் பாதியிலேயே வெளியேறினார்.

    இதனை தொடர்ந்து அப்துல்லா ஷஃபீக்- பாபர் அசாம் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 72 ரன்கள் எடுத்தது. அப்துல்லா ஷஃபீக் 33 ரன்னில் அவுட் ஆனார். அடுத்து வந்த உஸ்மான் 12 ரன்னில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பாபர் அரை சதம் அடித்த (50) கையொடு பெவிலியன் திரும்பினார்.

    அடுத்து வந்த வீரர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிக்கொடுத்தனர். இதனால் பாகிஸ்தான் அணி 40 ஓவர்களில் 221 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் நியூசிலாந்து ஒயிட் வாஷ் செய்தது.

    முன்னதாக 5 போட்டிகள் கொண்ட தொடரை 4-1 என்ற கணக்கில் நியூசிலாந்து கைப்பற்றியது.

    • கோபாலகிருஷ்ணன் கேரளாவை பூர்வீகமாக கொண்டவர்.
    • கேரளாவில் இருந்து வந்திருந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்னை அமலாக்கத்துறை அதிகாரிகளுடன் இணைந்து இந்த சோதனையில் ஈடுபட்டனர்.

    மலையாள திரையுலகின் முன்னணி நடிகர் மோகன்லால் நடிப்பில் வெளியான 'எம்புரான்' திரைப்படம் திரையரங்குகளில் ஓடி கொண்டிருக்கிறது. இந்த திரைப்படத்தில் முல்லைப்பெரியாறு அணையின் உறுதித்தன்மை குறித்து சர்ச்சை வசனம் இடம் பெற்றதால் இந்த படத்துக்கு தமிழ்நாட்டை சேர்ந்த அரசியல் கட்சிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது.

    2002-ம் ஆண்டு நடைபெற்ற குஜராத் கலவரத்தை நினைவு கூரும் வகையிலும், இந்துக்கள் குறித்தும் இந்த திரைப்படத்தில் காட்சிகள் இடம்பெற்றதற்கு இந்து அமைப்புகளிடம் இருந்து கண்டன குரல்கள் எழுந்துள்ளன.

    இந்த திரைப்படத்தை 4 தயாரிப்பாளர்கள் இணைந்து தயாரித்துள்ளனர். இதில் கோகுலம் நிதி நிறுவன அதிபர் கோகுலம் கோபாலகிருஷ்ணனும் ஒரு தயாரிப்பாளர் ஆவார். இவருடைய கோகுலம் நிதி நிறுவனத்தின் கிளைகள் தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களிலும் இயங்கி வருகிறது. இந்த நிறுவனம் கடந்த 2017-ம் ஆண்டு வரி ஏய்ப்பு புகாரில் சிக்கியது.

    அதன்பேரில் அப்போது இந்த நிறுவனத்துக்கு தொடர்புடைய 80 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் 4 நாட்கள் அதிரடி சோதனை நடத்தினார்கள். இந்த சோதனையில் ரூ.1,100 கோடி வரி ஏய்ப்பு கண்டறியப்பட்டதாக வருமான வரித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த சோதனையில் சிக்கிய ஆவணங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் அலசி ஆராய்ந்தனர். இதில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடைபெற்றதாக முகாந்திரம் இருப்பதாக அமலாக்கத்துறைக்கு வருமான வரித்துறை சார்பில் தகவல் பரிமாறப்பட்டதாக தெரிகிறது.

    கோபாலகிருஷ்ணன் கேரளாவை பூர்வீகமாக கொண்டவர். இந்த புகாரின் அடிப்படையில் அவருடைய கொச்சி வீடு மற்றும் அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

    சென்னை கோடம்பாக்கத்தில் இயங்கி வரும் கோகுலம் நிதி நிறுவனத்தின் தலைமை அலுவலகம், நீலாங்கரையில் உள்ள கோபாலகிருஷ்ணனின் இல்லமும் அமலாக்கத்துறை சோதனை வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டது.

    கேரளாவில் இருந்து வந்திருந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்னை அமலாக்கத்துறை அதிகாரிகளுடன் இணைந்து இந்த சோதனை வேட்டையில் ஈடுபட்டனர். நேற்று காலை தொடங்கிய சோதனை இரவு வரை நீடித்தது.

    இந்த நிலையில் கோகுலம் நிதி நிறுவனத்துடன் தொடர்புடைய இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.1.5 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

    • தொற்று பரவல் அதிகரித்து, உடல் சோர்வை உண்டாக்கும்.
    • பாதிக்கப்பட்டவர்களுடன் நேரடி தொடர்பு வைத்துக் கொள்ளக்கூடாது.

    சென்னை:

    தமிழகத்தில் தக்காளி காய்ச்சல் பரவி வருகிறது. இதுகுறித்து பொது சுகாதாரத்துறை நிபுணர் குழந்தைசாமி கூறியதாவது:-

    தக்காளி காய்ச்சல், சுகாதாரமின்மையால் பரவுகிறது. எப்போதும் அனைவரும் சுகாதாரத்துடன் இருப்பது அவசியம். பள்ளி செல்லும் குழந்தைகள், ஒவ்வொரு முறை நண்பர்களுடன் விளையாடி விட்டு வீட்டிற்கு வரும்போதும், கை, கால், முகம் கழுவுவது அவசியம். தக்காளிக் காய்ச்சலை பொறுத்தவரையில் ஒரு வாரத்திற்குள் தானாகவே சரியாகி விடும். அதே நேரம் பாதிப்புக்கு ஏற்ப சிகிச்சை பெறுவது அவசியம்.

    இந்த காய்ச்சல் தீவிர பாதிப்பை ஏற்படுத்தாது. ஆனால் தொற்று பரவல் அதிகரித்து, உடல் சோர்வை உண்டாக்கும். எனவே அறிகுறிகள் தெரிந்தால் உடனடியாக சிகிச்சை பெற வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுடன் நேரடி தொடர்பு வைத்துக் கொள்ளக்கூடாது.

    இவ்வாறு அவர் கூறி னார்.

    • வக்பு மசோதா பாராளுமன்றத்தின் 2 அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது.
    • இந்த மசோதாவிற்கு பா.ஜ.க.வின் கூட்டணி கட்சிகள் ஆதரவு அளித்தன.

    பாராளுமன்றத்தின் மக்களவையில் வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. நீண்ட விவாதத்திற்கு பிறகு, இம்மசோதா கடந்த புதன்கிழமை நள்ளிரவில் நிறைவேறியது.

    இதையடுத்து, நேற்று முன்தினம் மாநிலங்களவையில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவிற்கு பா.ஜ.க.வின் கூட்டணி கட்சியான தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரிய லோக் தளம் கட்சிகள் ஆதரவு அளித்தன.

    வக்பு சட்டத்திருத்த மசோதாவுக்கு நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி ஆதரவாக வாக்களித்தற்காக அக்கட்சியில் இருந்து 5 மூத்த தலைவர்கள் விலகியுள்ளனர்.

    இந்நிலையில், மூத்த பாஜக தலைவரும் பீகார் துணை முதல்வருமான விஜய் குமார் சின்ஹா, வக்பு மசோதாவுக்கு எதிராக பேசுபவர்களை தேச துரோகிகள் என்று பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இது தொடர்பாக பேசிய அவர், "வக்பு மசோதாவை ஏற்கமாட்டோம் என்று பேசுபவர்கள் சிறைக்கு செல்வார்கள். இது பாகிஸ்தான் கிடையாது. இந்துஸ்தான். இது நரேந்திர மோடியின் அரசு. வக்பு மசோதா பாராளுமன்றத்தின் 2 அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது. வக்பு மசோதாவிற்கு எதிராக பேசுபவர்கள் துரோகிகள், அவர்களை உடனடியாக கைது செய்யவேண்டும்" என்று தெரிவித்தார்.

    • அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்த 2-ந்தேதி இந்தியா உள்பட பல்வேறு நாடுகள் மீது கூடுதல் வரிகளை விதித்தார்.
    • இந்தியா மீது 26 சதவீத வரி விதிக்கப்படுவதாக அறிவித்தார்.

    வாஷிங்டன்:

    அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்த 2-ந்தேதி இந்தியா உள்பட பல்வேறு நாடுகள் மீது கூடுதல் வரிகளை விதித்தார்.

    அமெரிக்கா மீது மற்ற நாடுகள் அதிக வரிகளை விதிப்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். இந்தியா மீது 26 சதவீத வரி விதிக்கப்படுவதாக அறிவித்தார்.

    இதற்கிடையே வரி விதிப்பு நடவடிக்கையில் சலுகை அளித்தால் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக டிரம்ப் தெரிவித்தார்.

    இந்த நிலையில் டிரம்ப் அறிவித்துள்ள வரி விதிப்பு வருகிற 9-ந்தேதி அமலுக்கு வர உள்ள நிலையில் இந்தியா-அமெரிக்க அதிகாரிகள் வர்த்தக ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதால் இவ்விவகாரத்தில் தீர்வு ஏற்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இந்திய அதிகாரிகள் டிரம்ப் நிர்வாகத்துடன் தொடர்பில் உள்ளனர் என்றும் அவர்களின் பேச்சுவார்த்தைகள் வர்த்தகம், முதலீடுகள் மற்றும் தொழில்நுட்ப பரிமாற்றங்களை அதிகரிப்பதில் கவனம் செலுத்துகின்றன என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

    மேலும் அதிபர் டிரம்பின் மூத்த ஆலோசகர் ஒருவர் கூறும்போது, இந்தியா, வியட்நாம், இஸ்ரேலுடன் வர்த்தக ஒப்பந்தங்கள் தொடர்பாக டிரம்ப் தீவிரமாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் என்று தெரிவித்தார்.

    இந்த நிலையில் டிரம்ப் தனது சமூக வலைதள பக்கத்தில் கூறும்போது, வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் டோலாமுடன் மிகவும் பயனுள்ள ஒரு தொலைபேசி உரையாடலை நடத்தினேன்.

    அமெரிக்காவுடன் ஒரு ஒப்பந்தம் செய்ய முடிந்தால், வியட்நாம் தங்கள் வரிகளை பூஜ்ஜியமாகக் குறைக்க விரும்புகிறது என்று அவர் என்னிடம் கூறினார் என்று தெரிவித்துள்ளார். வியட்நாம் மீது 46 சதவீத வரியை அமெரிக்கா விதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    இதற்கிடையே அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சீனா ஏப்ரல் 10-ந்தேதி முதல் அமெரிக்க இறக்குமதிகளுக்கு 34 சதவீத வரியை விதித்துள்ளது.

    இதுதொடர்பாக டிரம்ப் கூறும்போது, சீனா தவறாக விளையாடியது. அவர்கள் பீதியடைந்தார்கள் என்றார்.

    • கோகுலம் நிதி நிறுவனத்தின் அதிபர் கோபாலகிருஷ்ணன் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.
    • எம்புரான் படத்தில் பிரித்விராஜ் ரூ.40 கோடி பெற்றதாக தகவல் வெளியாகி உள்ளது.

    பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான திரைப்படம் `லூசிஃபர்'. இப்படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகியிருக்கும் `எல் 2: எம்புரான்' கடந்த 27-ந்தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படத்தை கோகுலம் மூவிஸ், லைகா புரொடக்சன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.

    எம்புரான் படத்தில் குஜராத் கலவரம் தொடர்பான காட்சிகள் இடம்பெற்றதாக பா.ஜ.க.வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து சில காட்சிகள் நீக்கப்பட்டு படம் மீண்டும் வெளியானது.

    'எம்புரான்' திரைப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான கோகுலம் நிதி நிறுவனத்தின் அதிபர் கோபாலகிருஷ்ணன் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை நடத்தினார்கள்.

    இந்த நிலையில், நடிகரும் எம்புரான் திரைப்பட இயக்குநருமான பிரித்விராஜுக்கு வருமான வரித்துறையினர் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். எம்புரான் திரைப்படத்தை இயக்கிய பிரித்விராஜ் அப்படத்தின் இணை தயாரிப்பாளராகவும் இருந்தார்.

    எம்புரான் படத்தில் பணியாற்றியதற்காக பிரித்விராஜ் ரூ.40 கோடி பெற்றதாக தகவல் வெளியாகி உள்ளது.

    கட்டுமான நிறுவனத்தின் பெயரில் பணம் பெறப்பட்டது பற்றியும் கடுவா, ஜன கண மன மற்றும் கோல்ட் படங்களின் ஊதியம் குறித்தும் அவரிடம் வருமான வரித்துறை விளக்கம் கேட்டுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • திலக் வர்மா சூர்யகுமாருடன் பார்ட்னர்ஷிப் அமைத்து நன்றாக விளையாடினார்.
    • போட்டியை அவரே முடிக்க வேண்டும் என்றே நினைத்தார்.

    ஐ.பி.எல். தொடரின் நேற்று நடைபெற்ற 16-வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

    இப்போட்டியில் 7 பந்துகளில் 24 ரன்கள் தேவைப்பட்டபோது, 23 பந்துகளில் 25ரன்கள் அடித்திருந்த திலக் வர்மா ரிட்டயர்டு அவுட் முறையில் வெளியேறினார்.

    இதன்மூலம் ஐபிஎல் வரலாற்றில் மும்பை அணிக்காக ரிட்டயர்டு அவுட் முறையில் வெளியேறிய முதல் வீரரானார் திலக் வர்மா.

    இந்நிலையில் திலக் வர்மா சிரமத்திற்குள்ளாகும் போது, வேறு ஒருவர் புதிதாக விளையாட வேண்டும் என எனக்கு தோன்றியது என அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் ஜெயவர்தனே தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    திலக் வர்மா சூர்யகுமாருடன் பார்ட்னர்ஷிப் அமைத்து நன்றாக விளையாடினார். போட்டியை அவரே முடிக்க வேண்டும் என்றே நினைத்தார். அதற்காக இறுதி ஓவர் வரை விளையாட முற்பட்டார். ஆனால் அவர் சிரமத்திற்குள்ளாகும் போது, வேறு ஒருவர் புதிதாக விளையாட வேண்டும் என எனக்கு தோன்றியது.

    கிரிக்கெட்டில் இது எப்போதும் நிகழ்வதுதான். அவரை வெளியேற்றுவது சரியானதல்ல. ஆனால் அதை நாங்கள் செய்ய வேண்டி இருந்தது. அப்போது அது சமயோஜிதமாக தோன்றியது.

    இவ்வாறு திலக் கூறினார்.

    • கழுத்து வலியால் அவதிப்படுவதாக கண்டக்டர் பயணிகளிடம் புழம்பி வருகிறார்.
    • பஸ் பயணிகள் அவருக்கு போக்குவரத்து கழக பணிமனையில் வேறு பணி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

    தெலுங்கானா மாநிலம், சந்திரயாங் பேட்டையை சேர்ந்தவர் அமீன் அகமது அன்சாரி. இவரது தந்தை கச்சேகுடா போக்குவரத்து பணிமனையில் காவலாளியாக வேலை செய்து வந்தார்.

    கடந்த 2021-ம் ஆண்டு உடல்நிலை குறைவு காரணமாக இறந்தார். கருணை அடிப்படையில் அமீன் அகமது அன்சாரிக்கு கண்டக்டர் வேலை வழங்கப்பட்டது.

    அமீன் அகமது அன்சாரி 7 அடி உயரம் உள்ளார். 6 அடி உயரம் கொண்ட பஸ்சில் அமீன் அகமது அன்சாரிக்கு கண்டக்டர் வேலை வழங்கப்பட்டதால் தினமும் சுமார் 10 மணி நேரம் தலை குனிந்த படி வேலை செய்து வருகிறார். இதனை பார்க்கும் பஸ் பயணிகள் அவர் மீது பரிதாபம் கொண்டனர்.

    இதனால் அவருக்கு கழுத்து, முதுகு வலி மற்றும் தூக்கமின்மை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டது.

    இதனால் அடிக்கடி டாக்டரிடம் சென்று சிகிச்சை பெற்று வருகிறார். கழுத்து வலியால் அவதிப்படுவதாக கண்டக்டர் பயணிகளிடம் புழம்பி வருகிறார்.

    இதுகுறித்து பஸ் பயணிகள் அவருக்கு போக்குவரத்து கழக பணிமனையில் வேறு பணி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

    அதன் பேரில் அவருக்கு போக்குவரத்து பணிமனையில் வேறு வேலை வழங்க அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். 

    • பழனி முருகப்பெருமான் சிலை நவபாஷாணத்தால் ஆனது.
    • ஓதுவார்கள் திருமுறை பாடியதை அடுத்து கொடிமரம், முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானைக்கு தீபாராதனை நடைபெற்றது.

    பழனி:

    தமிழ்க்கடவுள் முருகப்பெருமானின் 3-ம் படைவீடான பழனியில் தைப்பூசம், பங்குனி உத்திரம் உள்ளிட்ட திருவிழாக்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. தைப்பூச திருவிழாவில் பாதயாத்திரையாகவும், பங்குனி உத்திர திருவிழாவில் தீர்த்தக்காவடி எடுத்தும் பக்தர்கள் பழனிக்கு வருவது சிறப்பு அம்சமாகும்.

    பழனி முருகப்பெருமான் சிலை நவபாஷாணத்தால் ஆனது. எனவே கோடைகாலமான பங்குனி, சித்திரை மாதங்களில் முருகப்பெருமானை குளிர்விக்கும் பொருட்டு, காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தக்காவடி எடுத்து பக்தர்கள் பழனியாண்டவருக்கு அபிஷேகம் செய்து வழிபடுவார்கள்.

    இந்த ஆண்டுக்கான பங்குனி உத்திர திருவிழா, பழனி உபகோவிலான திருஆவினன்குடியில் கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது. இதையொட்டி நேற்று இரவு கிராம சாந்தி, வாஸ்து சாந்தி பூஜை, அஸ்திரதேவர் உலா ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இன்று காலை திருஆவினன்குடி கோவிலில் விநாயகர் பூஜை, புண்ணியாக வாஜனம் நடந்தது.

    பின்னர் சேவல், மயில் படங்கள் பொறிக்கப்பட்ட கொடிப்படம் கொடிமரம் முன்பு வைக்கப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. மேலும் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானைக்கு பால், பழம், பன்னீர், சந்தனம், பஞ்சாமிர்தம் என 16 வகை பொருட்களால் அபிஷேகம், சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. தொடர்ந்து முத்துக்கு மாரசுவாமி, வள்ளி-தெய்வானையுடன் சப்பரத்தில் எழுந்தருளினார்.

    அதையடுத்து அஸ்திரதேவர், விநாயகர் சிலை முன்பு மயூர யாகம், வாத்திய பூஜைகள் நடைபெற்றது. பின்னர் காலை 11 மணிக்கு வேதமந்திரங்கள் முழங்க கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. அப்போது அங்கு திரண்டிருந்த பக்தர்கள் "வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா... வீரவேல் முருகனுக்கு அரோகரா என சரண கோஷம் எழுப்பினர்.

    பின்னர் ஓதுவார்கள் திருமுறை பாடியதை அடுத்து கொடிமரம், முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானைக்கு தீபாராதனை நடைபெற்றது.

    திருவிழாவை முன்னிட்டு பழனி முருகன் கோவிலில் உச்சிக்கால பூஜையில் மூலவருக்கு 16 வகை அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. பின்னர் மூலவர் சன்னதியில் உள்ள விநாயகருக்கு காப்புக்கட்டு நடந்தது. அதைத்தொடர்ந்து சண்முகர், உற்சவர், துவார பாலகர்கள், மயில்வாகனம் மற்றும் பெரியநாயகி அம்மன் கோவிலில் சோமாஸ்கந்தர், சிவன், பெரியநாயகிஅம்மன், நடராஜர், சிவகாமி அம்மன் ஆகியோருக்கு காப்புக்கட்டு நடைபெற்றது.

    பழனி பங்குனி உத்திர திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம் வருகிற 10-ம் தேதி இரவு 5.30 மணிக்கு மேல் நடைபெறுகிறது. அடுத்த நாள் 11-ம் தேதி பங்குனி உத்திரம் அன்று பழனி கிரிவீதியில் தேரோட்டம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகத்துடன் கோவில் தேவஸ்தானம் இணைந்து செய்து வருகின்றனர்.

    பழனி முருகன் கோவிலில் நடைபெறும் முக்கிய விழாக்களின் போது தங்கத்தேர் புறப்பாடு நிறுத்தப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு பங்குனி உத்திர விழாவையொட்டி வருகிற 9-ந்தேதி முதல் 13-ந்தேதி வரை 5 நாட்கள் தங்கத்தேர் புறப்பாடு நிறுத்தப்படுகிறது என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    கொடியேற்ற நிகழ்ச்சியில் பழனி கோவில் இணை ஆணையர் மாரிமுத்து, சித்தனாதன் சன்ஸ் உரிமையாளர்கள் சிவனேசன், பழனிவேலு, ராகவன், கந்தவிலாஸ் உரிமையாளர்கள் செல்வக்குமார், நவீன், நரேஷ், சரவணப்பொய்கை கந்தவிலாஸ் உரிமையாளர் பாஸ்கரன், கண்பத் கிராண்ட் உரிமையாளர் ஹரிஹரமுத்து, முன்னாள் எம்.எல்.ஏ. வேணுகோபாலு, ஸ்ரீபெரியநாயகி அம்மன் கல்வி அறக்கட்டளை தலைவர் சுந்தரம் மற்றும் நகர் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

    • வக்பு மசோதாவிற்கு பா.ஜ.க.வின் கூட்டணி கட்சியான ஐக்கிய ஜனதா தளம் ஆதரவு அளித்தன.
    • பீகார் முதல்வர் நிதிஷ் குமாருக்கு தப்ரேஸ் ஹசன் ராஜினாமா கடிதத்தை அனுப்பியுள்ளார்.

    பாராளுமன்றத்தின் மக்களவையில் வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. நீண்ட விவாதத்திற்கு பிறகு, இம்மசோதா கடந்த புதன்கிழமை நள்ளிரவில் நிறைவேறியது.

    இதையடுத்து, நேற்று முன்தினம் மாநிலங்களவையில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவிற்கு பா.ஜ.க.வின் கூட்டணி கட்சியான தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரிய லோக் தளம் கட்சிகள் ஆதரவு அளித்தன.

    வக்பு சட்டத்திருத்த மசோதாவுக்கு நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி ஆதரவாக வாக்களித்தற்காக அக்கட்சியில் இருந்து 5 மூத்த தலைவர்கள் விலகியுள்ளனர்.

    ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் இளைஞர் பிரிவு துணைத் தலைவர் தப்ரேஸ் ஹசன். சிறுபான்மை பிரிவு மாநில செயலாளர் முகமது ஷாநவாஸ் மாலிக், அலிகாரைச் சேர்ந்த மாநில பொதுச் செயலாளர் முகமது தப்ரேஸ் சித்திக் , போஜ்பூரைச் சேர்ந்த கட்சி உறுப்பினர் முகமது தில்ஷான் ரெய்ன் மற்றும் முகமது காசிம் அன்சாரி ஆகியோர் ராஜினாமா செய்தனர்.

    பீகார் முதல்வர் நிதிஷ் குமாருக்கு தப்ரேஸ் ஹசன் ராஜினாமா கடிதத்தை அனுப்பியுள்ளார். அந்த ராஜினாமா கடிதத்தில், "வக்பு சட்டத்திருத்த மசோதாவுக்கு அளித்த ஆதரவு, மதச்சார்பற்ற விழுமியங்களை ஐக்கிய ஜனதா தளம் கட்சி ஆதரிக்கும் என்று நம்பும் முஸ்லிம்களின் நம்பிக்கையை உடைத்துவிட்டது தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கத்தின் வக்பு மசோதா, பிரிவு 370 ரத்து, முத்தலாக் சட்டம் மற்றும் குடியுரிமை திருத்தச் சட்டம் போன்ற முந்தைய நடவடிக்கைகளைத் தொடர்ந்து வந்துள்ளது. இது முஸ்லிம் நலன்களுக்கு தீங்கு விளைவிப்பதாகவும்" என்று கூறியுள்ளார்.

    இது பீகாரில் பாஜக - ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ×