மற்றவருக்கு மதிப்பு கொடுக்கும் துலாம் ராசி நேயர்களே!
மார்கழி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சுக்ரன் சுக ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். அவர் மீது வக்ர குருவின் பார்வை பதிகிறது. எனவே இந்த மாதம் இனிய மாதமாகவே அமையும்.
பகைக்கிரகம் வலிமையிழந்து பார்க்கும் பொழுது நல்ல காரியங்கள் பலவும் நடைபெறும். திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்கும். திரவிய லாபமும், திடீர் முன்னேற்றமும் உண்டு. வருங்காலத்தைப் பற்றிய பயம் அகலும். நினைத்ததைச் செய்து முடிக்கும் வல்லமை பெற்ற கிரக அமைப்பு உள்ளது.
செவ்வாய் - சுக்ரன் பார்வை
மாதத் தொடக்கத்தில் கடகத்தில் உள்ள செவ்வாய், மகரத்தில் சஞ்சரிக்கும் சுக்ரனைப் பார்க்கிறார். சுக்ரன், கும்பத்திற்கு சென்றபிறகும் கூட செவ்வாயின் பார்வை அவர் மீது விழுகிறது. உங்கள் ராசிக்கு 2, 7 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். தனாதிபதியான அவர், உங்கள் ராசிநாதனைப் பார்ப்பது அற்புதமான நேரமாகும். நினைத்த காரியம் நினைத்தபடியே நிறைவேறும்.
நீடித்த நோய் அகலும். அடுத்தடுத்து நல்ல சம்பவங்கள் நடைபெறுவதோடு ஆதாயம் தரும் தகவல்கள் நிறைய கிடைக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் இணக்கமாக நடந்து கொள்வார்கள். தொழிலில் புதிய பங்குதாரர்கள் வந்திணைவர். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழும் நேரம் இது. புனிதப் பயணம் செல்வீர்கள். பழைய ஆபரணங்களைக் கொடுத்துவிட்டுப் புதிய ஆபரணங்கள் வாங்கும் யோகம் வாய்க்கும்.
குரு வக்ரம்
உங்கள் ராசிக்கு 3, 6 ஆகிய இடங்களுக்கு அதிபதியான குரு வக்ரம் பெறுவது நன்மைதான். 6-க்கு அதிபதி வக்ரம் பெறும்பொழுது எதிர்ப்பு, வியாதி, கடன் ஆகிய மூன்றில் இருந்தும் விடுபடுவீர்கள். உதிரி வருமானங்கள் வந்துசேரும். நீண்ட நாளைய கடன் பாக்கியை செலுத்தி நிம்மதி அடைவீர்கள். நிகழ்காலத் தேவைகள் பூர்த்தியாகும். ஆரோக்கியத் தொல்லை அகலும்.
அகலக் கால் வைத்ததன் விளைவாக ஏற்பட்ட கொடுக்கல்- வாங்கல்களை ஒழுங்கு செய்வீர்கள். சந்தர்ப்பங்கள் சாதகமாக அமையும். நல்லது நடக்க நண்பர்கள் வழிகாட்டுவர். இக்காலத்தில் தேவ குரு (குரு பகவான்), அசுர குரு (சுக்ரன்) இரண்டின் வழிபாடும் தேவை.
கும்ப - சுக்ரன்
மார்கழி 15-ந் தேதி, கும்ப ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு அதிபதியாகவும், 8-ம் இடத்திற்கு அதிபதியாகவும் இருப்பவர் சுக்ரன். அவர் பஞ்சம ஸ்தானத்திற்கு செல்லும்போது, பிள்ளைகள் வழியில் சுபவிரயங்கள் ஏற்படும். பூர்வீக சொத்துத் தகராறுகள் அகலும்.
இல்லத்தில் நல்ல சம்பவங்கள் நடைபெறும். நாடு மாற்றம், வீடு மாற்றம் நிகழலாம். அண்ணன், தம்பிகளுக்குள் இருந்த கருத்து வேறுபாடு மறையும். பணப்புழக்கம் நன்றாக இருக்கும். பாதியில் நின்ற பணிகள் ஒவ்வொன்றாக முடிவடையும். உங்கள் வளர்ச்சிக்கு குறுக்கீடாக இருந்தவர்கள் விலகுவர்.
தனுசு - புதன்
மார்கழி 17-ந் தேதி, தனுசு ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 9, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். பாக்ய ஸ்தானாதிபதியான அவர், சகாய ஸ்தானத்திற்கு வரும்போது நன்மைகள் அதிகம் நடைபெறும். பூர்வீக சொத்துகள் கைக்கு கிடைத்து, அதை விரிவு செய்யும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டு. பயணங்கள் பலன் தருவதாக அமையும். பணப்பொறுப்பு சொல்லி வாங்கிக் கொடுத்த தொகையும் வந்துசேரும்.
பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த மாற்றம் கிடைக்கும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு, நண்பர்கள் பக்க பலமாக இருப்பர். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர் அதிகாரிகள் நுணுக்கங்களைக் கற்றுக் கொடுப்பர். கலைஞர்களுக்கு வாய்ப்புகள் அதிகரிக்கும். மாணவ - மாணவிகளுக்கு போட்டிகளில் வெற்றி கிடைக்கும். பெண்களுக்கு பிள்ளைகள் வழியில் நல்லது நடக்கும். வீடு, இடம் வாங்கும் முயற்சி கைகூடும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
டிசம்பர்: 16, 17, 21, 22, 27, 28, ஜனவரி: 2, 3, 13.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- ஆரஞ்சு.