நல்ல காரியங்களை செய்ய நினைக்கும் துலாம் ராசி நேயர்களே!
ஆடி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சுக்ரன், தொழில் ஸ்தானத்தில் லாபாதிபதி சூரியனுடனும், பாக்கியாதிபதி புதனுடனும் இணைந்து சஞ்சரிக்கிறார். எனவே புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பஞ்சம ஸ்தானத்தில் சனி வக்ரம் பெறுவதால் பிள்ளைகள் வழியில் விரயங்கள் உண்டு. பூர்வீக சொத்து சம்பந்தமாக பாகப் பிரிவினைகளில் தடைகள் உருவாகலாம். சுப விரயங்களை மேற்கொள்வதன் மூலம் வீண் விரயங்களில் இருந்து தப்பிக்க இயலும்.
குரு - செவ்வாய் சேர்க்கை
மாதத் தொடக்கத்திலேயே குருவும், செவ்வாயும் இணைந்து உங்கள் ராசிக்கு 8-ம் இடத்தில் சஞ்சரிக்கின்றனர். இது அவ்வளவு நல்லதல்ல. அஷ்டம ஸ்தானம் வலுவடைவதால் ஆரோக்கியத் தொல்லை அதிகரிக்கும். வைத்தியச் செலவு கூடும். முன்னேற்றத்தில் முட்டுக்கட்டைகள் உருவாகும். முக்கியப் புள்ளிகளை பகைத்துக் கொள்வதன் மூலம், வாழ்க்கையில் சறுக்கல் களைச் சந்திக்க நேரிடும். அதே நேரத்தில் 6-க்கு அதிபதியான குரு, 8-ல் வரும் பொழுது 'விபரீத ராஜயோகம்' அடிப்படையில் ஒருசில நன்மைகளும் கிடைக்கும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவால் நல்ல பொறுப்புகள் கிடைக்கும். வழக்குகள் சாதகமாகும்.
புதன் வக்ரம்
கடக ராசியில் சஞ்சரிக்கும் புதன், ஆடி 5-ந் தேதி வக்ரம் பெறுகிறார். ஆடி 28-ந் தேதி வரை அங்கேயே வக்ர நிலையில் இருக்கிறார். உங்கள் ராசிக்கு 9, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். பாக்கிய ஸ்தானத்திற்கு அதிபதியான அவர் வக்ரம் பெறுவது நல்லதல்ல. எதையும் துணிந்து செய்ய இயலாது. திட்டமிட்ட காரியங்கள் திசைமாறிச் செல்லும். தந்தை வழி உறவில் விரிசல்கள் ஏற்படும். வாகனப் பழுதுகளால் மன வாட்டம் ஏற்படும்.
சிம்ம - சுக்ரன்
ஆடி மாதம் 16-ந் தேதி, சிம்ம ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் வரும் சுக்ரன், பொருளாதார விருத்தியை மேம்படுத்துவார். ராசிநாதனாகவும் சுக்ரன் விளங்குவதால் இக்காலத்தில் நிறைய நற்பலன்கள் நடைபெறும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டு. அதிகார வர்க்கத்தினரின் ஆதரவோடு, ஒரு சிலருக்கு புதிய பொறுப்புகள் வந்துசேரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வும், ஊதிய உயர்வும் உண்டு. அடகு வைத்த நகைகளை மீட்டு வந்து, அணிந்து அழகு பார்ப்பீர்கள்.
பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு எதிர்காலம் பற்றிய பயம் அகலும். வியாபாரம், தொழில் செய்பவர்களுக்கு நிதி நிறுவனங்களின் ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு திருப்தி தரும். கலைஞர்களுக்கு வருமானம் உயரும். மாணவ - மாணவிகளுக்கு கல்வியில் கவனம் தேவை. பெண்களுக்கு குடும்ப முன்னேற்றம் திருப்தி தரும். வருமானம் போதுமானதாக இருக்கும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
ஜூலை: 17, 18, 22, 23, ஆகஸ்டு: 1, 2, 3, 6, 7, 13, 14.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- வைலட்.