துலாம் - தமிழ் மாத ஜோதிடம்

2024 ஐப்பசி மாத ராசிபலன்

Published On 2024-10-17 02:37 GMT   |   Update On 2024-10-17 02:38 GMT

எதையும் ஆராய்ந்து அறிந்து செயல்படும் துலாம் ராசி நேயர்களே!

ஐப்பசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது உங்கள் ராசிநாதன் சுக்ரன், மாதத் தொடக்கத்தில் தன ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். அவரை வக்ர இயக்கத்தில் இருக்கும் குரு பகவான் பார்க்கிறார். எனவே வருமானம் திருப்திகரமாக இருக்கும்.

வளர்ச்சியில் ஏற்பட்ட தளர்ச்சி அகலும். திருமண முயற்சி கை கூடும். திடீர் திடீரென நல்ல திருப்பங்கள் ஏற்படும். குடும்பத்தில் குதூகலம் தரும் சம்பவங்கள் நிறைய நடைபெறும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து இணைவர்.

செவ்வாய் நீச்சம்

ஐப்பசி 6-ந் தேதி, கடக ராசிக்கு செவ்வாய் செல்கிறார். கடக ராசியானது, செவ்வாய்க்கு நீச்ச வீடாகும். உங்கள் ராசிக்கு 2, 7 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். அவர் நீச்சம் பெறுவது அவ்வளவு நல்லதல்ல. குடும்பப் பிரச்சினைகள் அதிகரிக்கும். கொடுக்கல் - வாங்கல்களில் ஏமாற்றத்தை சந்திக்க நேரிடும்.

உத்தியோகத்தில் உங்கள் திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்காது. மூத்த அதிகாரிகள் பகையாக மாறலாம். எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது. எதிர்மறை சிந்தனைகள் அதிகரிக்கும். குடும்பத்தில் கருத்து வேறுபாடு மீண்டும் தலைதூக்கும். பொறுமை அதிகம் தேவைப்படும் நேரம் இது.

விருச்சிகம் - புதன்

ஐப்பசி 8-ந் தேதி, விருச்சிக ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 9, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் தன ஸ்தானத்திற்கு வருவது நல்ல நேரம்தான். பாக்கியாதிபதியான புதன், தன ஸ்தானத்திற்கு வரும்பொழுது தனவரவு தாராளமாக கிடைக்கும்.

பொருளாதாரத்தில் இருந்த நெருக்கடி அகலும். எதை, எந்த நேரம் செய்ய நினைத்தீர்களோ, அதை அந்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். 'புத சுக்ர யோகம்' செயல்படும் இந்த நேரத்தில் பொருளாதாரம் உச்ச நிலையை அடையும். வியாபாரம் வெற்றி நடைபோடும்.

சனி வக்ர நிவர்த்தி

கும்ப ராசியில் சஞ்சரிக்கும் சனி பகவான், ஐப்பசி 18-ந் தேதி வக்ர நிவர்த்தியாகிறார். உங்கள் ராசிக்கு 4, 5 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சனி. பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு அதிபதியான அவர் பலம் பெறும் நேரம், பொன்னான நேரமாகும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.

பிள்ளைகள் வழியில் நல்ல செய்திகள் வந்துசேரும். பிரச்சினைகளில் இருந்து விடுபடுவீர்கள். இடம், பூமி வாங்கும் யோகம் உண்டு. தாய்வழி ஆதரவு திருப்தி தரும். வாடகை கட்டிடத்தில் நடைபெற்ற தொழிலை, சொந்த கட்டிடத்திற்கு மாற்றும் முயற்சி கைகூடும்.

தனுசு - சுக்ரன்

ஐப்பசி 22-ந் தேதி, தனுசு ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு அதிபதியாகவும், அஷ்டமாதிபதியாகவும் விளங்குபவர் சுக்ரன். அவர் சகாய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும்போது, பொருளாதார நிலை உயரும். புனிதப் பயணங்கள் அதிகரிக்கும். அதிகார வர்க்கத்தினரின் ஆதரவு கிடைக்கும்.

வெளிநாட்டு முயற்சி கைகூடும். எதிர்காலத்தைப் பற்றிய பயம் அகலும். எதையும் திட்டமிட்டு செய்து வெற்றி காண்பீர்கள். பெண்வழிப் பிரச்சினைகள் அகலும். பிறருக்கு பொறுப்பு சொல்லி வாங்கிக் கொடுத்த தொகையும் வந்துசேரும். உடன்பிறப்புகள் உங்களுக்கு உதவியாக இருப்பர்.

பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு, புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கப்பெறும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர் அதிகாரிகள் முக்கியத்துவம் கொடுப்பர்.

கலைஞர்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். மாணவ - மாணவிகளுக்கு வெற்றிக்கான வாசல் திறக்கும். பெண்களுக்கு குடும்ப முன்னேற்றம் கூடும். கொடுக்கல் - வாங்கல் ஒழுங்காகும்.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

அக்டோபர்: 23, 24, 26, 27, 28, நவம்பர்: 2, 4, 9, 10.

மகிழ்ச்சி தரும் வண்ணம்:- வைலட்.

Similar News