டிசம்பரில் 9 ஆயிரம் - விற்பனையில் அசத்திய ஏத்தர் எனர்ஜி!
- ஏத்தர் நிறுவனம் டிசம்பர் மாத விற்பனை விவரங்களை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு உள்ளது.
- 2022 நவம்பர் மாதத்துடன் டிசம்பர் மாத விற்பனையில் ஏத்தர் எனர்ஜி 26 சதவீதம் வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.
பெங்களூரை சேர்ந்த எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியாளர், ஏத்தர் எனர்ஜி 2022 டிசம்பர் மாதத்திற்கான வாகன விற்பனை விவரங்களை வெளியிட்டு உள்ளது. டிசம்பர் 2022 மாதத்தில் மட்டும் ஏத்தர் நிறுவனம் 9 ஆயிரத்து 187 யூனிட்களை விற்பனை செய்து இருக்கிறது. இதன் மூலம் வருடாந்திர விற்பனையில் ஏத்தர் எனர்ஜி நிறுவனம் 389 சதவீதம் வளர்ச்சி பெற்றுள்ளது.
வாடிக்கையாளர்களுக்கு ஏராள பலன்களை வழங்கும் வகையில் ஏத்தர் எனர்ஜி நிறுவனம் ஏத்தர் டிசம்பர் திட்டத்தை அறிவித்து இருந்தது. மேலும் நாட்டில் தனது சில்லறை விற்பனை மையங்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் வகையில், 14 புதிய எக்ஸ்பீரியன்ஸ் மையங்களை ஏத்தர் எனர்ஜி திறந்தது. இவை நெல்லூர், கரிம்நகர், உடுப்பி, நொய்டா, கோட்டயம் மற்றும் ஷிமோகா உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட துவங்கி உள்ளன.
"இருசக்கர வாகனங்கள் சந்தையில் விற்பனை சரிவடைந்த நிலையிலும், கடந்த ஆண்டை மிகச் சிறந்த விற்பனையுடன் நிறைவு செய்து இருக்கிறோம். நவம்பர் மாதத்துடன் ஒப்பிடும் போது டிசம்பர் மாத விற்பனை 26 சதவீதம் வரை அதிகரித்து இருக்கிறது. மேலும் சில்லறை விற்பனை மையங்கள் எண்ணிக்கையை தொடர்ந்து அதிகப்படுத்தி இருக்கிறோம். தற்போது நாட்டின் 70 நகரங்களில் 89 எக்ஸ்பீரியன்ஸ் மையங்கள் உள்ளன," என்று ஏத்தர் எனர்ஜி நிறுவன மூத்த வியாபார பிரிவு அதிகாரி ரன்வீத் சிங் பொகேலா தெரிவித்து இருக்கிறார்.
விற்பனை தவிர ஏத்தர் எனர்ஜி நிறுவனம் ஜனவரி 7 ஆம் தேதி இந்தியாவில் ஏத்தர் கம்யுனிட்டி டே நிகழ்வை நடத்த இருக்கிறது. இது பற்றிய அதிக தகவல்களை ஏத்தர் எனர்ஜி வெளியிடவில்லை. எனினும், 450X மாடலின் புது நிறம் இந்த நிகழ்வில் அறிமுகம் செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன.