விரைவில் இரு 7 சீட்டர் கார்களை அறிமுகம் செய்யும் மாருதி சுசுகி
- மாருதி சுசுகி நிறுவனம் இந்திய சந்தையில் தொடர்ந்து புதிய கார்களை அறிமுகம் செய்ய இருக்கிறது.
- கிராண்ட் விட்டாரா 6 மற்றும் 7 சீட்டர் வேரியண்ட்கள் அறிமுகம் செய்யப்படுவதாக தகவல்.
மாருதி சுசுகி இந்தியா லிமிடெட் நிறுவனம் இரண்டு 7 சீட்டர் மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கிராண்ட் விட்டாரா மாடலின் மூன்று அடுக்கு இருக்கை கொண்ட வெர்ஷன் இந்த தசாப்தத்தின் மத்தியில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. இந்த வேரியண்ட் கிராண்ட் விட்டாரா XL என அழைக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
7 சீட்டர் மட்டுமின்றி மூன்று அடுக்கு இருக்கைகள் கொண்ட கிராண்ட் விட்டாரா 6 சீட்டர் வேரியண்டிலும் கிடைக்கும் என தகவல் வெளியாகி உள்ளது. இரு வேரியண்ட்களும் குளோபல் C பிளாட்ஃபார்மில் உருவாகி இருக்கும் என கூறப்படுகிறது. இவற்றில் 1.5 லிட்டர் நான்கு சிலிண்டர்கள் கொண்ட மைல்டு ஹைப்ரிட் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் மூன்று சிலிண்டர்கள் கொண்ட அட்கின்சன் சைக்கிள் TNGA பெட்ரோல் என்ஜின் வழங்கப்படலாம்.
புதிய எஸ்யுவி தற்போதைய விட்டாரா மாடலை விட தோற்றத்தில் வித்தியாசப்படும் என எதிர்பார்க்கலாம். இதன் ஸ்டிராங் ஹைப்ரிட் பெட்ரோல் என்ஜின் லிட்டருக்கு 25 கிலோமீட்டர்களுக்கும் அதிக மைலேஜ் வழங்கும் என எதிர்பார்க்கலாம். இந்திய சந்தையில் இந்த மாடல் மஹிந்திரா XUV700, ஹூண்டாய் அல்கசார், எம்ஜி ஹெக்டார் பிளஸ் மற்றும் டாடா சஃபாரி போன்ற கார் மாடல்களுக்கு போட்டியாக அமையும்.
பெரிய கிராண்ட் விட்டாரா வெளியீட்டு முன் மாருதி சுசுகி நிறுவனம் டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் கிராஸ்-பேட்ஜ் வெர்ஷனை அறிமுகம் செய்யும் என கூறப்படுகிறது. இந்த பிரீமியம் எம்பிவி மாடல் டொயோட்டா மாருதி சுசுகி நிறுவனத்திற்கு வழங்கும் முதல் பேட்ஜ் என்ஜினியரிங் செய்யப்பட்ட மாடலாக இருக்கும்.
இத்துடன் ADAS சார்ந்த டிரைவர் அசிஸ்டன்ஸ் மற்றும் பாதுகாப்பு தொழில்நுட்ப வசதிகள் அடங்கிய முதல் மாருதி சுசுகி மாடலாகவும் இது இருக்கும். இந்த மமாடல் மாட்யுலர் TNGA-C பிளாட்ஃபார்மில் உருவாக்கப்படுகிறது. இது முன்புற டிரைவ் வசதி கொண்ட எம்பிவி மாடலாக இருக்கும் என கூறப்படுகிறது. ஹைகிராஸ் போன்றே இந்த மாடலும் 7 மற்றும் 8 சீட்டர் வெர்ஷன்களில் கிடைக்கலாம்.
இந்த மாடலில் 2.0 லிட்டர் நான்கு சிலிண்டர் கொண்ட NA பெட்ரோல் என்ஜின் மற்றும் 2.0 லிட்டர் அட்கின்சன் சைக்கிள் TNGA ஸ்டிராங் ஹைப்ரிட் பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த கார் லிட்டருக்கு 21 கிலோமீட்டர்களுக்கும் அதிக மைலேஜ் வழங்கும் திறன் கொண்டுள்ளது.