விலை உயர்விலும் வாடிக்கையாளர்களுக்கு ஷாக் கொடுத்த மெர்சிடிஸ் பென்ஸ்
- மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் தனது கார்களின் விலையை உயர்த்தியது.
- விலை உயர்வு பற்றிய தகவலை மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் கடந்த மாதம் அறிவித்து இருந்தது.
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் விற்பனை செய்து வரும் கார்களில் தேர்வு செய்யப்பட்ட சில மாடல்களின் விலையை ரூ. 20 லட்சம் வரை உயர்த்தி இருக்கிறது. விலை உயர்வு ஏற்கனவே அமலுக்கு வந்துவிட்டது. கார் மாடல்கள் விலை உர்த்தப்படும் என மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் கடந்த மாதமே அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஃபிளாக்ஷிப் செடான் மாடலான மெர்சிடிஸ் மேபேக் S கிளாஸ் விலை ரூ. 20 லட்சம் வரை உயர்த்தப்பட்டு இருக்கிறது. இதைத் தொடர்ந்து GLE கூப் மாடல் விலை ரூ. 7 லட்சத்து 70 ஆயிரம் வரை அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. இதே போன்றே S கிளாஸ் மாடல்களின் விலை ரூ. 6 லட்சத்து 50 ஆயிரம் உயர்த்தப்பட்டுள்ளது.
மெர்சிடிஸ் பென்ஸ் E கிளாஸ் மாடலின் விலையும் உயர்த்தப்பட்டு இருக்கிறது. இதன் விலை அதிகபட்சம் ரூ. 5 லட்சம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. C கிளாஸ் மற்றும் GLE எஸ்யுவி மாடல்கள் விலை ரூ. 3 லட்சம் வரை உயர்ந்து இருக்கிறது. GLA மற்றும் A கிளாஸ் மாடல்களை வாங்குவோர் பழைய விலையை விட கூடுதலாக ரூ. 2 லட்சம் வரை கொடுக்க வேண்டும்.
இதேபோன்று மெர்சிடிஸ் பென்ஸ் EQS எலெக்ட்ரிக் செடான் விலை முன்பை விட ரூ. 4 லட்சம் அதிகரித்து இருக்கிறது. இந்த வரிசையில் GLA 35 AMG விலையும் ரூ. 2 லட்சத்து 50 ஆயிரம் அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.