மூன்று மாதங்களில் 2.78 லட்சம் யூனிட்கள் - எலெக்ட்ரிக் வாகன பதிவில் அசத்தும் இந்தியா!
- இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக எலெக்ட்ரிக் வாகன பயன்பாடு அதிகரித்து வருகிறது.
- எலெக்ட்ரிக் வாகன விற்பனை குறித்த கேள்விக்கு மத்திய மந்திரி நிதின் கட்கரி பதில் அளித்துள்ளார்.
இந்தியாவில் இந்த ஆண்டு ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையிலான காலக்கட்டத்தில் மட்டும் சுமார் 2 லட்சத்து 78 ஆயிரத்திற்கும் அதிக எலெக்ட்ரிக் வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை மந்திரி நிதின் கட்கரி தெரிவித்து இருக்கிறார்.
ஆந்திர பிரதேசம் மற்றும் மத்திய பிரதேச மாநிலங்கள் வாகன போர்டலில் இணையும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. இதே போன்று தெலுங்கானா மற்றும் லக்ஷதீப் பகுதிகளுக்கான விவரங்கள் மத்திய அரசு முனையத்தில் இடம்பெறவில்லை. இதன் காரணமாக இந்த பகுதிகளில் பதிவு செய்யப்பட்ட எலெக்ட்ரிக் வாகன விவரங்கள் இதில் சேர்க்கப்படவில்லை.
மத்திய அரசின் வாகன பதிவு முனையத்தில் உள்ள விவரங்களின் படி 2021 ஆம் ஆண்டு 3 லட்சத்து 29 ஆயிரத்து 808 யூனிட்கள் பதிவாகி இருந்தது. கடந்த ஆண்டு 10 லட்சத்து 20 ஆயிரத்து 679 யூனிட்கள் பதிவானது. இந்த வரிசையில், இந்த ஆண்டு துவங்கிய முதல் மூன்று மாதங்களிலேயே சுமார் 2.78 லட்சம் யூனிட்கள் பதிவாகி இருக்கின்றன.
நாட்டில் எலெக்ட்ரிக் வாகன பயன்பாடு குறித்த கேள்விக்கு மத்திய மந்திரி நிதின் கட்கரி மக்களைவில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.