வேற லெவல் டீசர் வெளியீடு - விரைவில் அறிமுகமாகும் புதிய மெர்சிடிஸ் பென்ஸ் E கிளாஸ்!
- மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் புதிய E கிளாஸ் மாடல் விவரங்கள் விரைவில் அறிவிக்கப்பட இருக்கின்றன.
- புதிய E கிளாஸ் மாடலின் டிசைன், அம்சங்கள் S கிளாஸ் மாடலை தழுவி வழங்கப்பட இருக்கிறது.
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் புதிய E கிளாஸ் மாடல் ஏப்ரல் 25 ஆம் தேதி சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட உள்ளன. இதுவரை அறிமுகம் செய்யப்பட்டதிலேயே தலைசிறந்த, தனிப்பட்ட E கிளாஸ் மாடலாக இது இருக்கும் என மெர்சிடிஸ் பென்ஸ் தெரிவித்துள்ளது. W214 எனும் குறியீட்டு பெயரில் உருவாக்கப்பட்டு வரும் புதிய E கிளாஸ் மாடல், இந்த சீரிசில் ஆறாவது தலைமுறை மாடல் ஆகும்.
இந்தியா மற்றும் சீனாவில் இந்த கார் லாங்-வீல்பேஸ் வடிவில் வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது. எனினும், ஸ்டாண்டர்டு E கிளாஸ் மாடலுடனேயே அதன் லாங்-வீல்பேஸ் வேரியண்டும் அறிமுகம் செய்யப்படுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி புதிய E கிளாஸ் மாடல் தற்போது விற்பனை செய்யப்படும் E கிளாஸ் மாடலை விட சற்று பெரியதாக இருக்கும் என்றே கூறப்படுகிறது.
புதிய E கிளாஸ் மாடலின் டிசைன் மற்றும் ஸ்டைலிங் S கிளாஸ் மாடலை தழுவி மேற்கொள்ளப்பட்டு இருக்கும் என எதிர்பார்க்கலாம். இந்த ஆடம்பர செடான் மாடலின் உள்புறம் MBUX சூப்பர் ஸ்கிரீன் வழங்கப்படுகிறது. இதில் மூன்று ஸ்கிரீன்கள் டேஷ்போர்டில் இண்டகிரேட் செய்யப்பட்டு இருக்கும். இது விரும்புவோர் தேர்வு செய்து கொள்ளும் ஆப்ஷனாக வழங்கப்படும் என தெரிகிறது.
பவர்டிரெயினை பொருத்தவரை புதிய E கிளாஸ் மாடல் அதிகபட்சம் 4 அல்லது 6 சிலிண்டர் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படலாம். இத்துடன் ஹைப்ரிட் எலெக்ட்ரிக் சிஸ்டம் வழங்கப்படுகிறது. இதன் 4 சிலிண்டர் டீசல் என்ஜினுடன் மைல்டு ஹைப்ரிட் சிஸ்டம், 6 சிலிண்டர் யூனிட்களுடன் பிளக்-இன் ஹைப்ரிட் சிஸ்டம் (PHEV) வழங்கப்பட இருக்கிறது. புதிய E கிளாஸ் PHEV மாடல் EV மோடில் அதிகபட்சம் 100 கிலோமீட்டர்கள் வரை செல்லும் என தெரிகிறது.