ரூ. 55 ஆயிரம் பட்ஜெட்டில் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்தியாவில் அறிமுகம்
- யுலு நிறுவனத்தின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் டெலிவரி பணிகளுக்கானதாகும்.
- இந்த ஸ்கூட்டர் ஸ்கார்லெட் ரெட் மற்றும் மூன்லைட் வைட் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது.
யுலு நிறுவனம் தனது முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை அறிமுகம் செய்துள்ளது. புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வின் எனும் பெயரில் கிடைக்கிறது. முன்னதாக வினியோக பணிகளுக்கு பயன்படுத்தக்கூடிய மாடல்களை யுலு உருவாக்கி வந்த நிலையில், புதிய ஸ்கூட்டர் தனித்துவ மொபிலிட்டி பிரிவில் நிலைநிறுத்தப்பட்டு இருக்கிறது.
அறிமுக சலுகையாக புதிய யுலு வின் (Wynn) எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விலை ரூ. 55 ஆயிரத்து 555 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்கூட்டருக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. முன்பதிவு கட்டணம் ரூ. 999 ஆகும். வினியோகம் மே மாத மத்தியில் துவங்க இருக்கிறது. அறிமுக சலுகைகள் நிறைவுற்றதும், இந்த ஸ்கூட்டரின் விலை ரூ. 59 ஆயிரத்து 999 என்று மாறிவிடும்.
புதிய யுலு வின் ஸ்கூட்டர் பேட்டரி பேக் இன்றி விற்பனை செய்யப்படுவதால் இதன் விலை குறைவாக இருக்கிறது. யுலு வின் மாடல் கழற்றி மாற்றக்கூடிய பேட்டரிகளை கொண்டிருக்கிறது. இதில் பயன்படுத்தக்கூடிய பேட்டரிகளை பயனர்கள் சந்தா முறையில் பெற்றுக் கொள்ளலாம். இத்துடன் யுமா எனர்ஜி பேட்டரி மாற்றும் நெட்வொர்க்கில் இணைந்து கொள்ளலாம். இது யுலு மற்றும் மேக்னா நிறுவனங்களின் கூட்டணியில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.
யுலு வின் மாடல் டிசைன் மதன் மற்ற மாடல்களில் உள்ளதை போன்றே வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்கூட்டர் ஸ்கார்லெட் ரெட் மற்றும் மூன்லைட் வைட் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இதுதவிர ஸ்கூட்டரில் ஆப் சார்ந்த சாவி, ஒவர் தி ஏர் கனெக்டிவிட்டி வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டர் மணிக்கு 25 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக இந்த ஸ்கூட்டரை பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை. இந்த ஸ்கூட்டரில் 250 வாட் எலெக்ட்ரிக் மோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 19.3 Ah மாற்றக்கூடிய பேட்டரிகளை பயன்படுத்தலாம். இந்த ஸ்கூட்டர் முழு சார்ஜ் செய்தால் 68 கிலோமீட்டர் வரையிலான ரேஞ்ச் வழங்குகிறது.